Language Selection

புதிய ஜனநாயகம் 2012

ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கிவரும் குளோபல் பார்மாடெக் எனும் ஊசி மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், பயிற்சியாளர்கள் என சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாகத் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது, இந்நிறுவனம். பல்வேறு சங்கங்களில் திரண்டு நீண்டகாலமாகப் போராடியும் பலனில்லாத நிலையில், ஆறு மாதங்களுக்கு முன்பு குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம் என்ற பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கத்தில் சங்கத்தில் பெரும்பான்மை தொழிலாளர்கள் அணிதிரண்டு, ஊதிய உயர்வு கோரியும் நிர்வாகத்தின் அடக்குமுறை  பழிவாங்கலுக்கு எதிராகவும் போர்க்குணத்துடன் போராடி வருகின்றனர்.

முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால், ‘முதலில் வருபவர்க்கு முதலில்’ என்ற அடிப்படையில் 2008 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 2 ஜி அலைக்கற்றை உரிமங்கள், தன்னிச்சையாகவும் நேர்மையற்ற முறையிலும் பொதுநலனுக்கு விரோதமாகவும் வழங்கப்பட்டிருப்பதால், அவற்றை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. இந்த உரிமங்களைக் காட்டித் தமது நிறுவனங்களின் பங்குகளை விற்றுப் பல நூறு கோடி ரூபாய் ஆதாயமடைந்த எடிசாலட் டிபி, டெலினார், டாடா டோகோமோ ஆகிய நிறுவனங்களுக்கு தலா 5 கோடி ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.

ஜெயலலிதாவை அ.தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளராக எம்.ஜி.ஆர். நியமித்த போது கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், பொன்னையன் ஆகியோர், ஜெயலலிதா பார்ப்பனர் என்பதைச் சுட்டிக்காட்டி, அதனை ஆட்சேபித்தார்களாம். “மாட்டுக்கறி சாப்பிடுகிற அம்முவை எப்படி பிராமின்னு நினைக்கிறீங்க?”என்று எம்.ஜி.ஆர் அவர்களுக்குப் பதிலளித்தாராம். இப்படி ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்து தனக்கு நெருங்கியவர்களிடம் சமீபத்தில் ஜெ. பேசிக்கொண்டிருந்ததாக ஒரு செய்தியை நக்கீரன் வெளியிட்டது.

வேரோடு சரிந்து கிடக்கும் மரங்கள், கற்குவியலாகச் சிதிலமடைந்து கிடக்கும் வீடுகள், நொறுங்கிக் கிடக்கும் படகுகள், பெயர்ந்து கிடக்கும் சாலைகள், உப்புநீரில் பாழ்பட்டுக் கிடக்கும் விளைநிலங்கள், விழுந்து கிடக்கும் மின்கம்பங்கள் எனப் போர் நடந்த பூமியைப் போல் காட்சியளிக்கின்றன தமிழகத்தின் கடலூர், நாகை, திருவாரூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகள். கடந்த டிசம்பர் இறுதியில் 136 கி.மீ. வேகத்தில் தாக்கிய “தானே” புயலால் உணவு, உடை, குடிநீர், சாலை வசதி, மின்சாரம், படகுகள், மரங்கள்,  விளைநிலங்கள் என எல்லாவற்றையும் பறிகொடுத்துவிட்டு, எதற்கும் வழியின்றி ஏறத்தாழ 15 இலட்சம் மக்கள் பரிதவிக்கின்றனர். உயிருக்கு மோசமான பாதிப்பை சுனாமி ஏற்படுத்தியது என்றால், வாழ்வைப் பல தலைமுறைகளுக்குப் பின்னுக்குத் தள்ளி, அதைவிட மோசமான பேரழிவை தானே புயல் ஏற்படுத்தியுள்ளது.

“கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி கோரி வருகிறது.

இந்தோனேஷிய போலீசின் ஆணவத்திற்கும், நீதித்துறையின் திமிருக்கும் எதிராகத்  தேய்ந்துபோன ரப்பர் செருப்புகளை ஆயுதமாக உயர்த்தியிருக்கிறார்கள், அந்நாட்டு மக்கள். குப்பைத் தொட்டிக்குப் போகவேண்டிய தேய்ந்துபோன ரப்பர் செருப்புகள், போலீசு  நீதிமன்றங்களின் மீதான ஏழை மக்களின் வெறுப்பைக் காட்டும் சின்னமாக இந்தோனேஷியாவில் மாறிப் போயிருப்பதன் பின்னே, ஒரு பதினைந்து வயது சிறுவனின் வலியும் வேதனையும் அடங்கியிருக்கிறது.

கடந்த ஆண்டு டிசம்பரில் தனது உடன்பிறவா சகோதரியும் அ.தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது கணவர் நடராசன் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும், இவர்களுடன் கட்சியினர் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அ.தி.மு.க. தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து சசிகலாவின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் அதிகாரிகளைக் களையெடுக்கும் அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.

தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த அனைத்துலக நாடுகளின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாடு, ஏகாதிபத்திய வல்லரசுகளின் நோக்கங்களுக்கு ஏற்ப ஒத்தூதிவிட்டு, வெற்று ஆரவாரத்துடன் முடிந்துள்ளது.

அதிகரித்துவரும் புவியின் வெப்பம் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றினால் விளையும் இயற்கைச் சேதங்களைத் தடுக்க வளி மண்டத்தில் பசுமைக்குடில் வாயுக்கள் எனப்படும் கரியமில வாயு, மீத்தேன் போன்றவற்றின் அளவைக் குறைக்க வேண்டும். இதற்காக உலக நாடுகள் 1992ஆம் ஆண்டில் பிரேசில் நாட்டின் தலைநகரான ரியோ டி ஜெனிரோவில் ஐ.நா.மன்றத்தின் சுற்றுச்சூழல் மாநாட்டில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கின. அதன் பிறகு,  ஜப்பானில் உள்ள கியோட்டோ நகரில்  நடந்த மாநாட்டுக்குப் பின்னர், இந்த ஒப்பந்தம் கியோட்டோ ஒப்பந்தம் என்ற பெயரில் நடைமுறைக்கு வந்தது.

2007ஆம் ஆண்டில் சப்பிரைம் அடமானக் கடன் நெருக்கடியாக முதலில் அமெரிக்காவில் தொடங்கிய நெருக்கடி, பின்னர் உலகப் பொருளாதாரத்தைக் கடுமையாகத் தாக்கிய பெரும் பின்னடைவாக வளர்ந்தது. பின்னர் இதுவே உலகு தழுவிய பொருளாதார நெருக்கடியாகப் பரிணமித்து, முதலாளித்துவ கட்டமைப்புக்கே ஏற்பட்ட நெருக்கடியாகத் தீவிரமடைந்துள்ளது.

2011, ஆகஸ்ட் 7ஆம் தேதியிட்ட “கார்டியன்” இதழில், அவ்விதழின் பொருளாதார ஆசிரியரான லேரி எலியட் எழுதிய கட்டுரை, கடந்த 2007ஆம் ஆண்டிலிருந்து ஐந்து கட்டங்களில் இந்நெருக்கடி முற்றி வந்துள்ளதைப் பற்றிய சித்திரத்தைத் தொகுப்பாக வழங்குகிறது. இக்கட்டுரையின் மொழியாக்கம், நெருக்கடியின் பரிமாணத்தை வாசகர்கள் புரிந்து கொள்ள உதவும்.

லிபியா மீதான ஆக்கிரமிப்புப் போரை முடித்த கையோடு, இரானைக் குறிவைக்கத் தொடங்கிவிட்டன, அமெரிக்கா தலைமையிலான மேற்குலக ஏகாதிபத்திய நாடுகள். அமெரிக்கா, ஆப்கான் மற்றும் இராக்கின் மீது ஆக்கிரமிப்புப் போரைத் தொடுத்த சமயத்திலேயே, “இரான், சிரியா, வட கொரியா ஆகிய மூன்று நாடுகளையும் ரவுடி அரசுகள்” எனப் பழித்துப் பேசி வந்தார், அந்நாட்டின் அதிபராக இருந்த ஜார்ஜ் புஷ். குறிப்பாக, இரானின் இசுலாமியக் குடியரசைக் கவிழ்த்துவிட்டு, அங்கு தனது அடிவருடிகளின் ஆட்சியைத் திணிக்க, அமெரிக்கா கடந்த பத்தாண்டுகளாக வெளிப்படையாகவே முயன்று வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம்  மும்பய் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹான், அவரது நண்பர் ஜாவேத் ஷேக் என்ற பிரானேஷ் பிள்ளை மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று குஜராத் போலீசாலும், மைய உளவுத்துறையாலும் குற்றம் சாட்டப்படும் அம்ஜத் அலி, ஜிஷன் ஜோஹர் அப்துல் கனி ஆகிய நால்வரும் கடந்த ஜூன் 15, 2004 அன்று குஜராத் மாநிலத் தலைநகர் அகமதாபாத் நகரின் புறநகர்ப் பகுதியில் துப்பாக்கி குண்டுகள் துளைக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தனர். "இந்நால்வரும் பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் இ  தொய்பா அமைப்பினைச் சேர்ந்தவர்கள்; அவர்கள் குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொல்லும் பயங்கரவாத நோக்கத்தோடு குஜராத்துக்கு வந்துகொண்டிருந்த பொழுது அகமதாபாத் நகரக் குற்றப்பிரிவு போலீசாரால் வழிமறிக்கப்பட்டனர்.  அப்பொழுது நடந்த மோதலில் தான் அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக' குஜராத் மாநில அரசு அறிவித்தது. அச்சம்பவம் நடந்து ஏழாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், அது ஒரு போலி மோதல் கொலைதான் என்பதனை குஜராத் உயர்நீதி மன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு கடந்த நவம்பர் மாதம் அறிவித்திருக்கிறது.

புதுவை மாநிலம் வடமங்கலத்தில் இயங்கிவரும் பன்னாட்டு ஏகபோக நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தில் பு.ஜ.தொ.மு. தலைமையின் கீழ் கடந்த 2008 முதல் இந்துஸ்தான் யுனிலீவர் ஒர்க்கர்ஸ் யூனியன் இயங்கிவருகிறது. இச்சங்கத்தை அங்கீகரிக்காமல் இருந்த நிர்வாகம், தொடர் போராட்டங்களாலும் பெருமளவில் தொழிலாளர்கள் இச்சங்கத்தில் இணைந்துள்ளதாலும் வேறுவழியின்றி இச்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. மற்றொரு சங்கமான இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனுடன் இணைத்து, கடந்த 30.7.2011இல் 2011ஆம் ஆண்டுக்கான ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை நிர்வாகம் தொடங்கியது.

ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே தொழிலாளர்களில் 4 பேருக்கு எச்சரிக்கைக் கடிதம் கொடுத்ததோடு, ஒர்க்கர்ஸ் யூனியனின் முன்னணியாளர்கள் 5 பேரையும், இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் சங்கத்தின் 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்தது. தொழிலாளர் சட்டம் 12(3)இன் படி, ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போது சங்க முன்னணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. ஆனால் இந்நிறுவனமோ சட்டத்தை மயிரளவுக்கும் மதிக்கவில்லை. இதை எதிர்த்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தம் செய்தால், அதைச் சாக்கிட்டு பழிவாங்கலை நியாயப்படுத்தி துரோக ஒப்பந்தத்தைத் திணிக்கலாம் என்று நிர்வாகம் எத்தணித்தது.

இச்சதியை முன்னரே உணர்ந்திருந்த பு.ஜ.தொ.மு; இப்பழிவாங்கலை உழைக்கும் மக்களிடம் அம்பலப்படுத்தி நியாயம் கேட்கும் வகையில், செஞ்சட்டையுடன் செங்கொடிகள் எங்கும் மிளிர 23.12.2011 அன்று தொழிலாளர்துறை ஆணையரிடம் மனு கொடுத்து, விண்ணதிரும் முழக்கங்களுடன் தோழர் அய்யனார் தலைமையில் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கங்கள் உள்ள கோத்ரெஜ்,மெடிமிக்ஸ், பவர்சோப், லியோ முதலான நிறுவனங்களின் நிரந்தர மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, யுகால், எல்அண்டுடி, எம்.ஆர்.எப், சுஸ்லான் ஆகியவற்றின் தொழிலாளர்களுமாக ஏறத்தாழ 600 பேருக்கு மேல் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். வர்க்க ஒற்றுமையைப் பறைசாற்றிய இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்துஸ்தான் லீவர் வெல்ஸ் யூனியனின் முன்னணியாளர்களும் பு.ஜ.தொ.மு. முன்னணியாளர்களும் சிறப்புரையாற்றினர். ஒரு நிறுவனத்தின் பழிவாங்கலை எதிர்த்து பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் அணிதிரண்டு போராடியிருப்பது புதுவையில் இதுவரை கண்டிராததாகும். மாருதி சுசுகி தொழிலாளர் போராட்ட அனுபவத்தைக் கற்றுணர்ந்துள்ள புதுவை தொழிலாளர்கள் வர்க்க ஒற்றுமையுடன் அடுத்த கட்டப்போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகின்றனர்.

பு.ஜ. செய்தியாளர், புதுவை

புழுத்த அரிசி, அழுகிய காய்கறிகள், வேகாத சோறு, நீர்மோர், பருப்பே இல்லாத சாம்பார், துர்நாற்றமடிக்கும் உணவுக்கூடம் இவைதான் தாழ்த்தப்பட்ட  பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் தங்கிப் பயிலும் அரசு விடுதிகளின் அவலம். தமிழகத்தில் உள்ள 1238 விடுதிகளில் தங்கிப் பயிலும் 74,302 மாணவர்கள் சுகாதாரமற்ற  தரமற்ற இந்த உணவைத்தான் உட்கொள்ள வேண்டியிருக்கிறது. இதனால் மாணவர்கள் அடிக்கடி வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் பிற தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகின்றனர்.

திருச்சி  அண்ணா விளையாட்டு அரங்கத்தின் அருகிலுள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு மாணவர் விடுதியில் தங்கிப் படித்து வரும் 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் தரமற்ற உணவும் சுகாதாரமற்ற விடுதியும் பற்றி பலமுறை விடுதிக் காப்பாளரிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. குமுறிக் கொண்டிருந்த மாணவர்கள், கடந்த 13.12.2011 அன்று  ஜெகதீசன், சங்கத்தமிழன் உள்ளிட்ட பு.மா.இ.மு.தோழர்களின் தலைமையில், விடுதியின் அருகேயுள்ள ரேஸ்கோர்ஸ் சாலையில் சாப்பாடு தட்டு மற்றும் பாத்திரங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒருமணிநேரத்துக்கு போக்குவரத்து பாதிப்புக்குள்ளாகி, மாவட்ட உதவி ஆட்சியர் உள்ளிட்ட அதிகார வர்க்கமும் போலீசாரும் ஓடோடிவந்து பேச்சு வார்த்தை நடத்தினர். விடுதிக் காப்பாளர் தொடங்கி மேலதிகாரிகள் வரை ஊழலில் ஊறித்திளைப்பதை பேச்சு வார்த்தைக்கு வந்த அதிகாரவர்க்கத்திடம் தலைமையேற்ற தோழர்கள் சாடினர். அரண்டுபோன அதிகாரிகள் இந்நிலைமைகளை சீரமைப்பதாகவும், மாணவர்களின் 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை 15 நாட்களுக்குள் நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்த பிறகே போராட்டம் கைவிடப்பட்டது.

விடுதிகளில் தங்கிப் பயிலும் பிற்படுத்தப்பட்ட  தாழ்த்தப்பட்ட கல்லூரி மாணவ மாணவியருக்கான மாதாந்திர உணவுக் கட்டணத்தை ரூ.750ஆக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ள பாசிச ஜெயா அரசின் அறிவிப்பு வெறும் பித்தலாட்டம் என்பதையும், அரசின் சலுகைகள் அதிகரிப்பதற்கேற்ப அதிகார வர்க்கத்தின் ஊழலும் கொள்ளையும் மேலும் அதிகரிக்கவே செய்யும் என்பதையும் இப்போராட்டம் அம்பலப்படுத்திக் காட்டியது.  தமிழகமெங்கும் மாணவர்களிடமும் உழைக்கும் மக்களிடமும் இந்நியாயமான போராட்டத்துக்கு ஆதரவைத் திரட்டிவரும் பு.மா.இ.மு., அடுத்தகட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.

பு.ஜ.செய்தியாளர், திருச்சி.

ஓசூர் சிப்காட்1 பகுதியில் இயங்கிவரும் குளோபல் ஃபார்மாடெக் எனும் ஊசி மற்றும் மருந்து தயாரிக்கும் நிறுவனத்தில் நிரந்தரத் தொழிலாளர்கள் 196 பேர் உள்ளிட்டு, ஒப்பந்தத் தொழிலாளர்கள், தொழில் பழகுனர், பயிற்சியாளர்கள் என சுமார் 600 பேர் வரை பணிபுரிகின்றனர். கடந்த 16 வருடங்களாகப் பணியாற்றிவரும் தொழிலாளர்களுக்குச் சட்டப்படி நியாயமான ஊதியமோ, சீருடையோ, போனசோ தரமறுத்துக் கொத்தடிமைகளாக நடத்தி வருகிறது, இந்நிறுவனம்.

நிர்வாகத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியால் இதுநாள்வரை பல்வேறு சங்கங்களாகப் பிரிந்திருந்த தொழிலாளர்கள், அண்மையில் குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கம் என்ற பெயரில் ஓரணியில் ஒரே சங்கமாகத் திரண்டு, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியுடன் தங்களை இணைத்துக் கொண்டனர். இதைக் கண்டு அரண்டுபோன நிர்வாகம் ஆலை நட்டத்தில் இயங்குவதால் மூடப்போவதாக பீதியூட்டிக் கொண்டே, ஏற்கெனவே தொழிலாளர்களுக்குக் கொடுத்துவந்த தேநீரை நிறுத்தியது. தாகத்துக்குத் தண்ணீர் குடிக்கவோ, கழிவறை சென்று வரவோ தடைவிதித்துக் கெடுபிடி செய்தது. மேலும், சங்கத்தின் முன்னணியாளர்களான 36 தொழிலாளிகளுக்கு எச்சரிக்கைக் கடிதம், 8 தொழிலாளிக்கு விசாரணை அறிவிப்பு, சங்கச் செயலர் தோழர் சீதாராமன் தற்காலிகப் பணிநீக்கம்  எனப் பழிவாங்கியுள்ளது.

பு.ஜ.தொ.மு. என்பது நக்சல்பாரி தீவிரவாத இயக்கம் என்று பீதியூட்டி நிர்வாகத்தின் துணை பொது மேலாளரான ஏகாம்பரம் தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதோடு,  இத்தீவிரவாத இயக்கத்தில் இணைந்தால் தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பும் வெளியிட்டு எச்சரித்துள்ளார்.

இப்பழிவாங்கலையும் அடக்குமுறைகளையும் எதிர்த்தும் தொழிலாளர்களின் உரிமைகளை வலியுறுத்தியும் 9.12.2011 அன்று ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகில் பு.ஜ.தொ.மு.வில் இணைந்துள்ள குளோபல் ஃபார்மாடெக் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் "பயங்கரவாத ஓநாய் ஏகாம்பரத்தின் கொட்டத்தை அடக்குவோம்! தொழிலாளர்களின் உரிமைகளை நிலைநாட்டப் போராடுவோம்!' என்ற முழக்கத்துடன் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் தோழர் தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், செயலாளர் சீதாராமன், பெண் தொழிலாளி தோழர் கலா ஆகியோர் சட்டவிரோததொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் இறங்கியுள்ள குளோபல் ஃபார்மாடெக் நிர்வாகத்தின் துணைப் பொது மேலாளரான பயங்கரவாதி ஏகாம்பரத்தைக் கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டிய அவசியத்தை விளக்கிக் கண்டன உரையாற்றினர். வர்க்க உணர்வோடும் சங்க ஒற்றுமையோடும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் ஓசூர் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்ட உணர்வுக்குப் புது ரத்தம் பாய்ச்சுவதாக அமைந்தது.

 

பு.ஜ.செய்தியாளர், ஓசூர்.

 

லிபியாவை மறுகாலனியாக்கி, புதிய உத்தியுடன் ஆப்பிரிக்க கண்டத்தில் தனது காலனியாதிக்க ஆக்கிரமிப்பையும் மேலாதிக்கத்தையும் நிறுவியுள்ள அமெரிக்க வல்லரசு, இப்போது தெற்கு மற்றும் தென்கிழக்காசியாவின் மீது தனது மேலாதிக்க இரும்புப் பிடியை உறுதிப்படுத்தக் கிளம்பியுள்ளது. குறிப்பாக, இப்பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைத் தகர்த்து, அமெரிக்காவின் மேலாதிக்கத்தை நிறுவும் நோக்கத்துடன் இப்போது போர்த் தாக்குதலுக்கான ஏற்பாடுகளை வேகமாகச் செய்து வருகிறது. மேற்காசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகியவற்றிலிருந்து சீனா மூலப்பொருட்களைப் பெறுவதை முடக்குவது, இதற்காக கடற்பாதைகளில் முற்றுகையிடுவது  என சீனாவுடன் மோதல் போக்கை மேற்கொள்வதே அமெரிக்காவின் உடனடித் திட்டமாக உள்ளது. அமெரிக்காவின் இம்மேலாதிக்கத் தாக்குதலுக்கு விசுவாசமாக அடியாள் வேலை செய்ய இந்திய ஆளும் வர்க்கம்  கிளம்பியுள்ளது.

உலகமயமாக்கலின் கீழ் தொழிலாளி வர்க்கம் எவ்வாறு எந்தத் திசையில் போராட வேண்டுமென்பதை உணர்த்தும் வகையில், "மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டமும் வால் ஸ்ட்ரீட் முற்றுகைப் போராட்டமும் கற்றுத்தரும் பாடம்: புரட்சிகர அரசியலே தீர்வு!' என்ற தலைப்பில் திருச்சி பு.ஜ.தொ.மு. அரங்கக் கூட்டத்தை 18.12.2011 அன்று நடத்தியது.

பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்புச் சங்கம், அனைத்துத் தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புசங்கம் ஆகிய பு.ஜ.தொ.மு.வின் இணைப்புச் சங்கங்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த அரங்கக் கூட்டத்தை அ.த.வி.பா.சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர் சேகர் தலைமையேற்று நடத்தினார். மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டத்திலிருந்து கற்றறிய வேண்டிய படிப்பினைகளை விளக்கியும், முதலாளித்துவப் பயங்கரவாதத்துக்கு எதிரான வால் ஸ்டிரீட் போராட்டம் ஒரு கட்டத்துக்கு மேல் முன்னேற முடியாமல் தேங்கிவிட்ட நிலையில், பாட்டாளி வர்க்க அரசியல் தலைமையை நிறுவ வேண்டிய அவசியத்தை உணர்த்தியும் சிறப்புரையாற்றிய பு.ஜ.தொ.மு. மாநிலப் பொதுச் செயலர் தோழர் சுப. தங்கராசு, முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறிக்க கம்யூனிசக் கொடியின் கீழ் உலக மக்கள் ஒன்றிணைந்து போராட அறைகூவினார். வர்க்கப் போராட்ட உணர்வூட்டிய ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சியுடன் நிறைவடைந்த இந்த அரங்கக் கூட்டம், தொழிலாளர்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைந்தது.

25.12.2011 அன்று ஓசூர் ஆந்திரசமிதி அரங்கில் "மாருதி கார் தொழிலாளர்களிடம் பணிந்தது நிர்வாகம்!  அனுபவம் கற்போம்! முதலாளித்துவத்துக்குச் சவக்குழி வெட்டுவோம்!' என்ற தலைப்பில் பு.ஜ.தொ.மு. கருத்தரங்கத்தை நடத்தியது. தோழர் பரசுராமன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில், பல்வேறு ஆலைகளைச் சேர்ந்த தொழிலாளர்களும் தொழிற்சங்க முன்னோடிகளும் உரையாற்ற,  மாருதி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டக் காட்சிகள் திரையிடப்பட்ட பின்னர், பு.ஜ.தொ.மு. மாநிலப் பொருளாளர் தோழர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். இரண்டாவது அமர்வில் வால்ஸ்டிரீட் முற்றுகைப் போராட்டக் காட்சிகள் திரையிடப்பட்ட பின்னர், முதலாளித்துவத்தின் முதுகெலும்பை முறிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையில் தொழிலாளர்களும் உழைக்கும் மக்களும் ஓரணியில் திரண்டு போராட வேண்டிய அவசியத்தை விளக்கி "வால்ஸ்டிரீட் முற்றுகை: திணறும் முதலாளித்துவத் தலைமைப் பீடம்!' என்ற தலைப்பில் தோழர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். பார்வையாளர்களாக வந்திருந்த தொழிலாளர்களிடம் போராட்டப் பாதையை விளக்கி, புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இக்கருத்தரங்கம் அமைந்தது.

பு.ஜ.செய்தியாளர், திருச்சி.

 

ஒரே வகை வணிகமுத்திரை கொண்ட சில்லறை வர்த்தக நிறுவனங்களில் 100 சதவீதமும், பல்வேறு வணிக முத்திரைகள் கொண்ட பொருட்களை விற்கும் சில்லறை வர்த்தகத்தில் 51 சதவீதமும் அந்நிய நேரடி மூலதனத்தை அனுமதிப்பது எனக் கடந்த மாதம் மைய அமைச்சரவை முடிவெடுத்தது. இந்த முடிவை பா.ஜ.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, திருணாமுல் காங்கிரசும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கவே ஓரடி பின்வாங்கியிருக்கிறது, ஐ.மு.கூ. அரசு.

பொய்க்குற்றம் சாட்டி மரண தண்டனை விதிக்கப்பட்டுச் சிறையிடப்பட்டிருந்த புரட்சிகரக் கலைஞரான தோழர் ஜிதேன் மராண்டி, மரணத்தின் பிடியிலிருந்து விடுதலை பெற்றுள்ளார்.

2012 ஆம் ஆண்டு ஜூலைஆகஸ்டு மாதங்களில் இலண்டனில் நடைபெற உள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் புரவலராகக் கொலைகார டௌ கெமிக்கல்ஸ்  நிறுவனம் சேர்ந்துள்ளது. விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் மைதானத்தை அலங்கரிக்க டௌ கெமிக்கல்ஸிடமிருந்து 370 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற இலண்டன் ஒலிம்பிக் அமைப்புக் கமிட்டி முடிவு செய்துள்ளது.

புதிய தாராளவாதக் கொள்கைகளைத் திணித்துவரும் ஏகாதிபத்திய வல்லரசுகளாலும் சர்வதேச நிதிநிறுவனங்களாலும் முன்தள்ளப்படும் "ஊழல் ஒழிப்பு', "சிறந்த அரசாளுமை' போன்ற முழக்கங்களை வைத்துக் கொண்டு ஊழல் எதிர்ப்பு நாடகமாடும் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிதான் அன்னா ஹசாரே. பல இலட்சம் கோடிகளாக  ஊழல் பெருத்துப் போனதற்கு தனியார்மயக் கொள்கைதான் காரணம் என்ற உண்மையை மறைத்து, பெருமுதலாளிகளின் நன்கொடையில் ஊழல் எதிர்ப்பு சவடால் அடிக்கும் அயோக்கிய சிகாமணிதான் அன்னா. இட ஒதுக்கீட்டை எதிர்க்கும் பார்ப்பனக் கைக்கூலியான இவர், டெல்லியில் நடத்தப் போகும் ஊழல் எதிர்ப்பு உண்ணாவிரதத்துக்கு ஆதரவு திரட்டுவதற்காக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்ற வந்தார்.

சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் இந்தியக் கோடீசுவரர்கள் பதுக்கியுள்ள கறுப்புப் பணம் எவ்வளவு? 25 இலட்சம் கோடி ரூபாசூ முதல் 70 இலட்சம் கோடி ரூபாய்கள் வரை இருக்கலாம் என்று பல மதிப்பீடுகள் கூறப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகிலுள்ள மண்டபம் கிராமத்தைச் சேர்ந்த நான்கு இருளர் பழங்குடியினப் பெண்கள் மீது பாலியல் வன்முறை ஏவிய கிரிமினல் போலீசாரைக் கைது செய்து தண்டிக்கக் கோரி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக 5.12.2011 அன்று மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் கடலூர்  திருவண்ணாமலை மாவட்டக் கிளைகள் இணைந்து ஆர்ப்பாட்டத்தை நடத்தின. திருவண்ணாமலை மாவட்ட ம.உ.பா.மையத்தின் செயலரான வழக்குரைஞர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட பெண்களை உடனடியாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விசாரணை என்ற பெயரில் இரு நாட்கள் இழுத்தடித்ததை அம்பலப்படுத்தியும், குற்றம் சாட்டப்பட்ட போலீசாரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தி தண்டிக்காமல், தற்காலிகப் பணிநீக்கம் மட்டும் செய்துள்ளதை எதிர்த்தும் ம.உ.பா. மையத்தின் முன்னணியாளர்களும், ம.உ.பா. மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்குரைஞர் ராஜு, விழுப்புரம் பு.மா.இ.மு. தோழர் செல்வகுமார், வி.வி.மு. தோழர் தங்கராசு ஆகியோரும் கண்டன உரையாற்றினர்.

தற்பொழுது நடைபெற்றுவரும் குளிர்கால நாடாளுமன்றக் கூட்டத் தொடரின்பொழுது, இரண்டு முக்கியமான துறைகளை அந்நிய மூலதனத்திற்குத் திறந்துவிட எத்தணித்தது, காங்கிரசு கூட்டணி அரசு.  அதிலொன்று, நாடெங்கும் பரவலான எதிர்ப்பைச் சந்தித்த சில்லறை வணிகத் துறை; மற்றொன்று, அரசு, பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த ஊழியர்கள்  தொழிலாளர்களின் ஓய்வூதிய நிதியைக் கையாளுவதில் அந்நிய நிறுவனங்களை அனுமதிப்பது.  காங்கிரசு கூட்டணி அரசு தனது இந்த இரண்டு முடிவுகளையும் நடைமுறைப்படுத்துவதைச் சற்று தள்ளி வைத்திருக்கிறது.  இவை போன்ற சீர்திருத்தங்களைக்  கால தாமதமின்றி நடைமுறைப் படுத்துவதற்கு இந்திய ஜனநாயகம் தடையாக இருப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி புலம்பியிருக்கிறார். தனியார்மயம் பெயரளவிலான ஜனநாயகத்தைக்கூடச் சகித்துக் கொள்வதில்லை என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமாக பிரணாப் முகர்ஜியின் புலம்பலை எடுத்துக் கொள்ளலாம்.

சிங்கள இனவெறி பிடித்த இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு வரும் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரி, ஸ்டாலின் என்ற வழக்குரைஞர் மதுரை உயர்நீதி மன்றக் கிளையில் தொடுத்த வழக்கில், "தமிழக மீனவர்கள் இந்தியக் கடல் பரப்பிலும், அதைத் தாண்டிய சர்வதேசக் கடல் பரப்பிலும் அச்சமின்றி பாதுகாப்புடன் மீன் பிடிப்பதற்குக் கடலோரக் காவல் படையினர் உரிய பாதுகாப்பு கொடுக்க வேண்டும்.  அதை இந்தியக் கடற்படை கண்காணிக்க வேண்டும்.  இந்த உத்தரவைப் பத்து நாட்களுக்குள் அமல்படுத்த வேண்டும்.' என அந்நீதிமன்றம் அக்டோபர் 14 அன்று இடைக்காலத் தீர்ப்பளித்தது.  இந்தத் தீர்ப்பு வெளிவந்த அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தமிழக மீனவர்கள் மீது 13  தாக்குதல் சம்பவங்கள் நடந்தன.  இதனால், நீதிமன்றத் தீர்ப்பின் படி உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிய கடலோரக் காவல்படை மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்குரைஞர் ஸ்டாலின் மனு தாக்கல் செய்தார்.

இந்திய தேசியம் என்ற பொய்மைத் தோற்றம் உருப்பெறத் தொடங்கிய காலத்தில்தான் முல்லைப் பெரியாறு அணையும் கட்டப்பட்டது. பலவீனமடைந்துவிட்டதாகவும், உடையப்போகிறதென்றும் பொய்ப்பிரச்சாரமும் பீதியும் கிளப்பப்பட்ட போதிலும் அணை அசையாமல் நிற்கிறது; இந்திய தேசியமோ ஆடிக் கொண்டிருக்கிறது. முல்லைப் பெரியாறு அணையைத் தகர்ப்பதற்கு முன்நிற்கிறார்கள் இந்திய தேசியவாதிகள்.

கடந்த டிசம்பர் 19 ஆம் தேதியன்று தனது நெருங்கிய தோழியும் அ.தி.மு.க.வின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சசிகலா மற்றும் அவரது உறவினர்களைக் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாகவும், இவர்களுடன் கட்சிக்காரர்கள் எவ்விதத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்றும் அறிவித்துள்ள தமிழக முதல்வரும் அ.தி.மு.க. தலைவியுமான ஜெயலலிதா, சசிகலாவை போயஸ் தோட்டத்திலிருந்தும் வெளியேற்றியுள்ளார். மன்னார்குடி மாஃபியா என்று அழைக்கப்பட்ட சசிகலா கும்பலின் விசுவாச அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைப் பெரியாறு நீரின் நியாயவுரிமைக்காக தமிழக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடிவரும் நிலையில், இப்போராட்டங்களுக்கு வலுசேர்த்து புரட்சிகர அரசியல் திசை வழியைக் காட்டி, தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் ம.க.இ.க, வி.வி.மு, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு, ம.உ.பா.மையம்ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து, "முல்லைப் பெரியாறு அணையை இடித்து, சட்டவிரோதமாக புதிய அணையைக் கட்டத் துடிக்கும்கேரள அரசின் சதியை முறியடிப்போம்! உழைக்கும் மக்களே, கேரள அரசின் அடாவடித்தனத்துக்குத் துணை நிற்கும் மத்திய அரசை எதிர்த்துப் போராடுவோம்! இரட்டை வேடம் போடும் தேசியக் கட்சிகளைத் தோலுரிப்போம்! தமிழகத்தின் நியா யவுரிமையை நிலைநாட்ட ஓர ணியில் திரள்வோம்!' என்ற முழக்கத்துடன் விரிவான பிரச்சாரத்தையும் ஆர்ப்பாட்டங்களையும் மறியல் போராட்டங்களையும் நடத்தி வருகின்றன.