Language Selection

புதிய ஜனநாயகம் 2008

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தோடு, இதுவரை கண்டிராத வகையில் பெட்ரோல்டீசலின் விலைகளும் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. எரி எண்ணெய் மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் வர்த்தகத்தில் தலைவிரித்தாடும் ஆன்லைன் சூதாட்டமே இந்த கிடுகிடு விலையேற்றத்துக்குக் காரணம். பகற்கொள்ளையடிக்கும் பன்னாட்டு நிதி நிறுவனங்களை விரட்டியடிக்கவும், விலையேற்றத்துக்குக் காரணமான தனியார்மயம் தாராளமயம் உலகமயத்தை வீழ்த்தவும் அறைகூவி ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் தமிழகமெங்கும் தாங்கள் செயல்படும் பகுதிகளில் வீச்சான பிரச்சாரத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றன.

பட்டுப் போன நச்சு மரமானாலும், அதிகாரத்திலுள்ள காங்கிரசு கட்சியில் கோஷ்டிச் சண்டைகளுக்கு அளவில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தைத் திசைதிருப்பவும், பிழைப்புவாதத்தில் மூழ்கடிக்கவும் சிறுபான்மையினர் பிரிவு, தாழ்த்தப்பட்டோர் பிரிவு என்று சாதிமத அடிப்படையில் கட்சிக்குள்ளேயே தனி அணிகளை உருவாக்கி ஓட்டுப் பொறுக்குகிறது, அக்கட்சி.

முதலாளிய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மிகப் பெரிய பலம் வாக்காளப் பெருமக்களின் ஞாபக மறதி. வரலாற்று அனுபவங்களைத் தொகுத்து நினைவில் வைத்துக் கொள்வதுதான் அதற்கு மிகப் பெரிய ஆபத்து. அதனால்தான் அப்படி மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் பெருங்கதையாடலுக்கு எதிராகப் ''பின் நவீனத்துவம்'' என்ற அரசியல் தத்துவத்தையே முதலாளிய ஏகாதிபத்திய அறிவுஜீவிகள் உருவாக்கியிருக்கிறார்கள். 1980களின் இறுதியில் ஒருநாள் கூடியிருந்த நாடாளுமன்றமே திகைத்துப் போகும் வகையில் தமிழகத்தின் பெரம்பலூர் தொகுதி உறுப்பினர் தங்கராசு ஒரு காரியம் செய்தார். திடீரென்று ஒரு பெட்டியைத் திறந்து நான்கு கோடி மதிப்புடைய ரூபாய் நோட்டுக்களைக் கத்தை கத்தையாகக் கொட்டினார். எம்.ஜி.ஆர். சாவுக்குப் பிறகு பிளவுபட்டுப் போன அ.இ.அ.தி.மு.க.வின் ஜானகி அணியிலிருந்து ஜெயலலிதா அணிக்குத் தாவுவதற்காக முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசு மூலமாக ஜெயலலிதா தனக்குக் கொடுத்த இலஞ்சமென்று புகைப்பட ஆதாரத்தையும் வெளியிட்டார்.

 தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும்; பல்வேறுவிதமான பொருளாதாரப் பின்னணி கொண்ட உழைக்கும் மக்களைத் தற்பொழுது அச்சுறுத்தி வரும் பிரச்சினை, விலைவாசி உயர்வு. நாட்டை அச்சுறுத்துவதாகச் சொல்லப்படும் முசுலீம் தீவிரவாதம், நக்சல் பயங்கரவாதம் போன்ற ""பூதங்களை''விட, விலைவாசி உயர்வைத்தான், பொதுமக்கள் அபாயகரமானதாகப் பார்க்கிறார்கள்.

 

 மக்கள் போராட்டங்கள் மீது மிருகத்தனமான அடக்குமுறையை ஏவுவதும், முன்னணியாளர்களைப் பழிவாங்குவதும் மக்கள் விரோத ஆட்சியாளர்களின் வாடிக்கை. அதிலும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு எதிராகப் போராடும் மக்கள் மீதான அடக்குமுறையைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. ஒரிசா, சட்டிஸ்கர் மாநிலங்களே இதற்கு இரத்த சாட்சியங்களாக உள்ளன. உழைக்கும் மக்களின் போராட்ட நிர்பந்தத்தால், தற்காலிகமாக சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு நிலங்களைக் கையகப்படுத்துவதை ஆட்சியாளர்கள் நிறுத்தி வைக்க வேண்டிய நிலை ஏற்படும்போது, போராடிய மக்களை எப்படியெல்லாம் பழிவாங்கி ஒடுக்குவார்கள், போராட்ட ஒற்றுமையை எப்படியெல்லாம் சீர்குலைப்பார்கள் என்பதற்கு தமிழகம் புதிய சாட்சியமாக விளங்குகிறது. கடந்த மே மாதத்தில், மதுரை மாவட்டம் வலையங்குளம்  எலியார் பத்தி முதலான கிராமங்களில் போலீசும் அதிகார வர்க்கமும் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலே இதை நிரூபித்துக் காட்டுகிறது.

 மதுரை மாவட்டம் பேரையூரை அடுத்துள்ள உத்தப்புரத்தில் கொடிக்கால் பிள்ளை எனும் சிறுபான்மை ஆதிக்க சாதியினர், ஊருக்குள் தாழ்த்தப்பட்ட சாதியினர் நுழைந்து விடக் கூடாது என்பதற்காகக் கட்டி இருந்த சுவர், கடந்த 18 ஆண்டுகளாக ஆதிக்க சாதித் திமிரின் அடையாளமாய் இருந்து வந்தது. 

 ஒரே மாதத்தில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலைஇழப்பு! குபேரபுரியாகச் சித்தரிக்கப்படும் உலக மேலாதிக்க வல்லரசான அமெரிக்காவில், கடந்த பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் தொழிலாளர்கள் வேலையிழந்து வீதியில் வீசியெறியப்பட்டுள்ளனர். உற்பத்தித் தேக்கம், ஆலை மூடல், ஆட்குறைப்பு ஆகியவற்றால் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் மேலும் 50,000 பேர் வேலையிழந்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக பல ஆலைகளில் லேஆஃப் காரணமாக பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றிப் பரிதவிக்கின்றனர்.

 கடந்த 13 ஆண்டுகளில் இல்லாதவாறு இந்த ஆண்டு ஜூன் இரண்டாவது வாரம் நாட்டின் பணவீக்கம் 11.05 சதவிகிதத்தை எட்டிவிட்டது. உணவு தானியம் உட்பட விவசாய விளைப்பொருட்கள், இடு பொருட்கள், இரும்பு, சிமெண்ட் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் கிடுகிடுவென ஏறிக் கொண்டே போகின்றன.  இவ்வாறு பணப்புழக்கம் அதிகமாகி அதாவது, பொருட்களின் தேவைகேட்பு மிகமிக அதிகமாகி, அத்தேவைக்கேற்ப உற்பத்தியும், பொருட்களின் வரத்தும் இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டு நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்து விடவில்லை. அதாவது, இப்போது மக்களின் அடிப்படைத் தேவைகளான உணவு தானியங்கள், பருப்பு வகைகள், உணவு எண்ணெய், காய்கறிகள் மற்றும் சர்க்கரை, சிமெண்ட், கட்டுமான இரும்புக் கம்பிகள் போன்றவற்றின் உற்பத்தி குறைந்து, சந்தையில் தட்டுப்பாடும் பற்றாக்குறையும் ஏற்பட்டு அவற்றின் விலைவாசி தாறுமாறாக எகிறிப் போய் விடவில்லை.

 அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தோடு இதுவரை காணாத வகையில் பெட்ரோல்டீசல் விலைகள் கடுமையாக உயர்த்தப்பட்டிருக்கின்றன. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டே போவதால், இந்த விலையேற்றம் தவிர்க்கவியலாதது என்று கூறி நியாயப்படுத்துகிறது அரசு. தேவையைக் காட்டிலும் 10% உற்பத்தி குறைந்துள்ளது; இப்பற்றாக்குறையின் காரணமாகவே பெட்ரோல்டீசலின் விலை 4 மடங்கு உயர்ந்துவிட்டது என்று கூறுவது கடைந்தெடுத்த பொய். எண்ணெய் வர்த்தகத்தில் தலைவிரித்தாடும் ஆன்லைன் சூதாட்டமே எண்ணெய் விலை உயர்வுக்குக் காரணம்.

 அமெரிக்காவின் அதிபர் பதவிக்கு எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தல், உலகெங்கிலும் மிகுந்த எதிர்பார்ப்புக்கு உள்ளாகி இருக்கிறது. தற்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ் நடத்திவரும் ஈராக் போருக்கு எதிரான அமெரிக்க மக்களின் கருத்தை இத்தேர்தல் பிரதிபலிக்கும் என எதிர்பார்க்கப்படுவதோடு, அமெரிக்காவின் வரலாற்றில் முதன் முறையாக அமெரிக்கக் கருப்பினத்தைச் சேர்ந்த பாரக் ஒபாமா என்பவர், ஜனநாயகக் கட்சியின் சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்படவிருப்பதும், அதிபர் தேர்தலின் முக்கியத்துவத்தை அதிகரித்திருக்கிறது. 

 மனித குல விரோதி இட்லரையே விஞ்சும் வகையில், இரண்டாம் உலகப் போர் முடிந்த அடுத்த சில ஆண்டுகளிலேயே இலட்சக்கணக்கான மக்களைப் படுகொலை செய்த மிகக் கொடிய பயங்கரவாத மிருகம் தான் அமெரிக்க ஏகாதிபத்தியம். முதலாளித்துவ வரலாற்றாளர்களால் மூடி மறைக்கப்பட்ட இந்த உண்மையை, தென்கொரியாவில் தோண்டத் தோண்ட வெளிவரும் படுகொலைக் குழிகளின் எலும்புக் கூடுகளே நிரூபித்துக் காட்டுகின்றன. 

 "கிடப்பதெல்லாம் கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணமேடையில் வை'' என்பதைப் போல நடந்து கொள்கிறது, அமெரிக்க மேலாதிக்க ஏகாதிபத்தியத்தின் அடிமையான மன்மோகன் சிங் தலைமையிலான மைய அரசு. நாடு மீளமுடியாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாதவாறு ஜூன் மூன்றாம் வாரம் பணவீக்கம் பதினொரு சதவீதத்துக்கும் மேலே எகிறி விட்டது. இதனால் அடிப்படைத் தேவைகளான உணவு தானியங்கள், விவசாய இடுபொருட்கள் முதல் இரும்பு, சிமெண்ட் மற்றும் பெட்ரோலிய எரிசக்திப் பொருட்கள் வரை அனைத்தின் விலையும் நாளும் எகிறிக் கொண்டே போகிறது.

 மைய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை உயர்த்துவதற்காக நியமிக்கப்பட்ட ஆறாவது ஊதியக் குழு, தனது பரிந்துரைகளை மைய அரசிடம் அளித்திருக்கிறது. அரசு ஊழியர் சங்கங்கள் ஊதியக் குழுவின் அறிக்கையை, ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்குச் சாதகமான, ஒருதலைப்பட்சமான அறிக்கை எனக் குற்றஞ்சுமத்தியுள்ளன. 

 சி.பி.எம். கட்சியின் திருப்பூர் எம்.எல்.ஏ.வான கோவிந்தசாமி, பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தின் முதலாளி. திருப்பூரில் முதலாளிகள் வசிக்கும் அமர்ஜோதி கார்டன் பகுதியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டைக் கட்டியுள்ள கோடீசுவரர். ""பாட்டாளிகளின் தோழர்'' என்று இவரை சி.பி.எம். கட்சியினர் சித்தரித்தாலும், கோடீசுவர கோவிந்தசாமியின் வர்க்கப் பாசம் எப்போதுமே முதலாளிகள் பக்கம்தான். 

 மறுகாலனியாக்கச் சூழலில், தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் எவ்வாறு நசுக்கப்பட்டு வருகின்றன என்பதை ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் தொடரும் கொத்தடிமைத்தனமே நிரூபித்துக் காட்டுகிறது. ஓசூரிலுள்ள அசோக் லேலண்டு ஆலையில் நிரந்தரத் தொழிலாளர்கள் 460 பேரும், தற்காலிக  ஒப்பந்த  பயிற்சித் தொழிலாளர்கள் என ஏறத்தாழ 3000 பேரும் வேலை செய்கின்றனர். 240 நாட்கள் வேலை செய்தால் அத்தொழிலாளியை நிரந்தரம் செய்யவேண்டும் என்று சட்டம் இருந்தாலும், ஆலை நிர்வாகம் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. எந்த உரிமையும் சலுகையுமின்றி மூன்றாண்டுகள் கொத்தடிமையாக வேலை செய்து நிர்வாகம் நற்சான்றிதழ் கொடுத்தால் மட்டுமே தற்காலிக  பயிற்சித் தொழிலாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவார்கள். ஒப்பந்தத் தொழிலாளர்களோ, எவ்விதப் பாதுகாப்புச் சாதனங்களுமின்றி வேலை செய்ய நிர்பந்திக்கப்படுவதோடு, காண்டிராக்டர்களின் கொடிய சுரண்டலுக்கும் ஆளாகி நிற்கிறார்கள். 

 அண்டை நாடான நேபாளத்தில் மாவோயிஸ்டுகளின் தலைமையில் மன்னராட்சி வீழ்த்தப்பட்டு, அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் முடிந்து, புதிய இடைக்கால அரசை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஜனநாயகக் குடியரசை நிறுவுவதற்கான திசையில் அந்நாடு அமைதியான முறையில் பயணிப்பதாகத் தோன்றினாலும், அந்நாட்டில் கொந்தளிப்பான அரசியல் போராட்டங்கள் தொடர்கின்றன.

 கடந்த ஜூன் 4ஆம் தேதி பள்ளி கல்வித் துறையின் மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தமிழக அரசு ஆணை வெளியிட்டது. இருப்பினும், கட்டடம் கட்ட, நாற்காலி வாங்க, புதிய ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்க, துப்புரவுப் பணிக்காக, 11ஆம் வகுப்பு மாணவர்களின் கல்வி குரூப் மாற்றித்தர  எனப் பெற்றோர்ஆசிரியர் கழகத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் 2 ஆயிரம், 3 ஆயிரம் என்று ஏழை எளிய மாணவர்களிடம் கட்டாயக் கட்டணக் கொள்ளை தொடர்கின்றது. 

 ஒரிசாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த தின்கியா பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஒரு சிறிய கிராமம் பட்னா. இரும்பு உற்பத்தி நிறுவனங்களிலேயே உலகில் மூன்றாவது மிகப்பெரிய நிறுவனமான போஸ்கோ, 48 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் அங்கு ஓர் இரும்புத் தொழிற்சாலையையும், ஒரு துறைமுகத்தையும் கட்டத் திட்டமிட்டுள்ளது. இதற்காக அங்குள்ள மிகவும் வளமான கடற்கரைப் பகுதி நிலங்களை ஆக்கிரமிக்க அந்த நிறுவனம் முயற்சித்து வருகிறது.


 தலைமுறை தலைமுறையாக பட்னாவில் வாழ்ந்து வரும் மக்கள்,  தங்களது சொந்த நிலத்தை விட்டே விரட்டியடித்து, தங்களது வாழ்க்கையையே கேள்விக்குள்ளாக்கும் இந்தத் திட்டத்தை  எதிர்த்து, தொடர்ந்து போராடி வருகின்றனர். கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் மாதம், ஒரிசா மாநில அரசுடன் ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிறகு, மையமாநில அரசுகளின் உதவியுடன் அப்பகுதியில் நிலங்களை அபகரிக்க போஸ்கோ நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளாகப் பல தகிடுதத்தங்களைச் செய்த போதும், அக்கிராம மக்களின் உறுதியான போராட்டத்தின் காரணமாக, அவர்களால் எதுவும் செய்ய முடியவில்லை.

 சட்டீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளரும், ஆவணப் படத் தயாரிப்பாளரும், குடியுரிமைகளுக்கான மக்கள் சங்கத்தின் மாநில நிர்வாகிகளுள் ஒருவருமான அஜய் தாச்சப்புள்ளி கங்காதரன் என்பவர், மே மாதம் 5ஆம் தேதி, சட்டீஸ்கர் மாநில சிறப்புப் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது அரசுத் துரோகக் குற்றச்சாட்டும்; தடை செய்யப்பட்டுள்ள இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மாவோயிஸ்டு)  உடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்திய ஆளும் வர்க்கம் மனித உரிமைகளை மயிரளவிற்குக் கூட மதிப்பதில்லை என்பதற்கு இந்தக் கைது இன்னுமொரு எடுத்துக்காட்டு.

பொதுவாக இடுகாடுகளில் எந்தவொரு கல்லறையுமே, புதைக்கப்பட்டவர்களின் பெயர், பிறந்த தேதி, இறந்த தேதியுடன்தான் காணப்படும்; அல்லது அந்தக் கல்லறையில் புதைக்கப்பட்டிருப்பது யார் என்ற விவரமாவது உறவினர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால், ஆயிரக்கணக்கான பிணங்கள் வெறுமனே எண்களை மட்டும் அடையாளமாகக் கொண்டு புதைக்கப்பட்டு வரும் கொடுமை காஷ்மீரில் நடந்து வருகிறது.


 காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தின் ரெகிபோரா கிராமத்தின் இடுகாட்டில்தான் இவ்வாறு எண்கள் மட்டுமே கல்லறைகளின் அடையாளமாக உள்ளன. கல்லறைகளில் புதைக்கப்பட்டிருப்பது யார் யார் என்பது அந்தக் கிராமத்தில் இருப்பவர்களுக்கோ தெரியாது. "தியாகிகளின் கல்லறை' என்று அழைக்கப்படும் இந்த இடுகாட்டில் ஜூன் 26, 1995 அன்று நான்கு ""எல்லை தாண்டிய பயங்கரவாதிகளின்'' பிணங்களைப் போலீசார் புதைக்கக் கொண்டு வந்ததிலிருந்து இது நடைமுறையில் உள்ளது. இன்று வரை ஆயிரக்கணக்கான காஷ்மீரிகள் "பாகிஸ்தான் பயங்கரவாதிகள்' என்ற பெயரில் இந்திய இராணுவத்தால் கொல்லப்பட்டு,  இங்கு புதைக்கப்பட்டிருக்கின்றனர்.