சமூகவியலாளர்கள்

ரொக்க சொத்துக்களும் பூமி சொத்துக்களும் அநேகமாய் பார்ப்பனர் முதலாகிய உயர்ந்த சாதிக்காரர்களிடமும் லேவா தேவிக்காரர்களிடமுமே போய்ச் சேரக் கூடியதாய் இருப்பதால், உயர்ந்த சாதிக்காரர்கள் என்பவர்களையும் கண் வைத்துக் கொள்ளை அடிக்கப் பட்டிருப்பதாகத் தென்படுகிறது.

ஆகவே, இவற்றிலிருந்து இந்த முறையை உயர்ந்த சாதித் தத்துவத்தையும், பணக்காரத் தத்துவத்தையும் அழிப்பதற்கே கையாளப்பட்டதாக, நன்றாய்த் தெரியவருகின்றது. உலகத்தில் பொதுவாக யாவருக்கும் ஒரு சமாதானமும் சாந்தி நிலையும் ஏற்பட வேண்டுமானால், இந்த முறையைத்தான் கடைசி முயற்சியாக ஏதாவதொரு காலத்தில் கையாளப்பட்டே தீரும் என்பதில் நமக்குச் சிறிதும் சந்தேகமில்லை. அன்றியும், இன்று இந்தியாவிற்கு வெளியில் உள்ள வேறு பல நேரங்களில் இம்முறைகள் தாராளமாகக் கையாளப்பட்டும் வருகின்ற விஷயமும் யாவரும் அறிந்ததேயாகும். மற்றும் பல நாடுகளில் விடுதலைக்கு இம்முறைகளையே கையாள முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றன.

இங்கிலாந்து முதலிய நமக்கு முக்கியமான நாடுகளில்கூட இம்முறைகளைப் புகுத்த ஒரு பக்கம் பிரச்சாரமும், மற்றொரு பக்கம் அதைத் தடுக்க முயற்சிகளும் நடந்து வருகின்றன. இவற்றின் உண்மைகள் எப்படி இருந்தாலும் கொஞ்ச காலத்திற்கு முன் இம்முறைகளைப் பாவம் என்றும், நரகம் கிடைக்கும் என்றும் மிரட்டி ஏய்த்துக் கொண்டிருந்ததெல்லாம் போய், இப்போது இது நாட்டுக்கு நல்லதா? தீமை விளைவிக்காதா? என்கின்றவை போன்ற தர்மஞானம் பேசுவதன் மூலம்தான் இம்முயற்சிகளை அடக்கப் பார்க்கிறார்களே ஒழிய, இது சட்ட விரோதம், பாவம், கடவுள் செயலுக்கு மாறுபட்டது என்கின்ற புரட்டுக்கள் எல்லாம் ஒருபக்கம் அடங்கிவிட்டன.

ஆனாலும் இந்தத் தர்ம சாஸ்திர ஞானமும் யாரால் பேசப்படுகின்றது என்று பார்ப்போமேயானல், பார்ப்பனராலும், பணக்காரராலும், அதிக நிலம் வைத்துக் கொண்டிருக்கும் பெரிய நிலச்சுவான்தார்களாலும் இவர்கள் தயவால் அரசாட்சி நடத்தும் அரசாங்கத்தாலுந்தானே தவிர, உண்மையில் சாதி ஆணவக் கொடுமையால் தாழ்த்தப்பட்டும், முதலாளிகள், லேவாதேவிக்காரர்கள் கொள்ளையால் கஷ்டப்படுத்தப்பட்டும், நிலச் சுவான்தாரர்கள் கொடுமையால் துன்பப்படுத்தப்பட்டும் பட்டினி கிடக்கும் ஏழை மக்களுக்கு இம்முறையைத் தவிர வேறு முறையில் தங்களுக்கு விடுதலை இல்லை என்கிற உணர்ச்சி பெருகிக் கொண்டேதான் இருக்கின்றதே தவிர, சிறிதும் குறைந்ததாக இல்லை.

அன்றியும், இம்முறையை நாமும் - அதாவது நம் நாட்டு மக்களும், அநேகமாய் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் இன்னும் கையாடிக் கொண்டுதான் வருகின்றோம். உதாரணமாக, இன்றையச் சமுதாயச் சீர்திருத்தக் கொள்கையோ, சாதி ஒழிப்புக் கொள்கையோ, சுயமரியாதைக் கொள்கையோ, சுயராஜ்யம் கேட்கும் கொள்கையோ, பூர்ண சுயேச்சைக் கொள்கையோ ஆகியவைகள் எல்லாம் இந்தச் சமதர்ம பொதுவுடைமைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டதேயாகும். அதாவது, இவையெல்லாம் பலத்தையும் கிளர்ச்சியையும் சண்டித்தனத்தையும் அடிப்படையாகக் கொண்டு கொடுக்க இஷ்டமில்லாதவனிடத்தில், இணங்க இஷ்டமில்லாதவனிடத்தில் தட்டிப்பிடுங்குவதோ, வலுகட்டாயமாகப் பறிப்பதோ ஆகிய குறியைக் கொண்டதேயாகும். அதிலும் சுயராஜ்யமோ, பூரண ரவிடுதலையோ கேட்பதைவிட - அடையக் கைக் கொண்டிருக்கும் இன்றைய முயற்சியைவிட, சாதியை ஒழிப்பதென்பது மிகுதியும் சமதர்மமும் பொதுவுடைமைத் தன்மையும் கொண்டதாகும்.

(`குடி அரசு தலையங்கம் 4-1-1931)

உலகத்தில் தோன்றியிருக்கும் ஒரு பூதத்தைக் கண்டு எல்லோருமே பயப்படுகிறார்கள். அது எப்படிப்பட்ட பூதம் என்றால் அதுதான் `சமதர்மம் என்றும் புதுமையாகும். அய்ரோப்பாவிலுள்ள சகல சக்திகளுமே அதாவது, அரசாங்கச் சக்திகள், மதங்களின் சக்திகள் முதலியவைகள் எல்லாமும் ஒன்று சேர்ந்து அந்தப் பூதத்தை விரட்டி ஓட்டப் பார்க்கின்றன.

போப்பைப் போன்ற மத அதிகாரிகளும், ஜாரைப்போன்ற அரசர்களும், பிரபல இராஜ தந்திரிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும், இரகசிய வேவுகாரர்களும் ஆகிய எல்லோருமே ஒன்று சேர்ந்து இந்தப் பூதத்தை ஒழிக்கப் பகீரதப்பாடு படுகின்றார்கள். எந்த அரசியல் சபையிலும், கவர்மென்டார் தங்கள் எதிரிகளைச் சமதர்மவாதிகள் என்று வைவதும், எதிர்க்கட்சியார்கள் தங்கள் கட்சியிலிருக்கும் தீவிரவாதிகளையும், பிற்போக்காளர்களையும் சமதர்மவாதிகள் என்று வைவதும், அந்தப் பேச்சையே சொல்லி எந்த எதிரியையும் வைது வாயடக்கப் பார்ப்பதும் சாதாரண வாடிக்கையாகிவிட்டது.

இவைகளில் இருந்து இரண்டு விஷயங்கள் வெளியாகின்றன. அதென்னவென்றால், ஒன்றும்: சம தர்மமம் என்பதானது ஒரு பெரிய வலிமையும் ஆதிக்கமும் கொண்டதான ஒரு பெரிய சக்தி என்பதாகச் சகலரும் ஒப்புக் கொண்டு வெளிப்படையாகவே பயப்படுகின்றார்கள் என்பது.

இரண்டு: உலகத்தில் உள்ள எல்லா சமதர்மவாதிகளும் ஒன்றாகச் சேர்ந்து, தங்களுடைய உண்மை எண்ணங்களையும் பொதுவான இலட்சியங்களையும் வேலைத் திட்டங்களையும் உலகத்தாருக்கு முன்னால் நன்றாய் விளங்கும்படி வெளிப்படையாய் ஓர் அறிக்கை மூலம் வெளியிட்டு, அதில் உள்ள பயத்தையும் தப்பிதத்தையும் ஒழிக்க வேண்டியது அவசியம் என்பதாகும்.

(`குடி அரசு - தலையங்கம் 4-10-1931)

இன்றைய இலட்சியம், முயற்சியை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். சாதி ஒழியவேண்டும் என்பது ஒரு சாதாரண சங்கதி. ஆனால் அது பிரமாதமான செயலாகக் காணப்படுகிறது. பிறவியில் யாவரும் தாழ்ந்தவர்கள் அல்ல; எங்களுக்கு மேல் எவனும் இல்லை; எல்லோரும் சமம் என்ற நிலை நமக்குத்தான் அவசியமாகத் தோன்றுகிறது.

ஒருவன் மேல்சாதி; ஒருவன் கீழ்சாதி; ஒருவன் பாடுபட்டே சாப்பிட வேண்டும்; ஒருவன் பாடுபடாமல் உட்கார்ந்து கொண்டு சாப்பிடவேண்டும் என்கிற பிரிவுகள் அப்படியே இருக்க வேண்டுமா?

இதைக் காப்பாற்றிக் கொடுப்பதுதான் அரசாங்கம். இதை ஒழிக்க வேண்டும். எல்லாச் சாதியும் ஒரு சாதிதான் என்கிறோம். நாம் இந்த ஒரு காரியம்தான் இவ்வளவு பெரிய கிளர்ச்சியை உண்டாக்கி விட்டது.

இது கிளர்ச்சிக்கு உரிய காரியமா? மற்ற நாட்டில் இதுபோல் சொன்னாலே சிரிப்பான். ஏன்? பிறவியில் என்ன பிரிவு இருக்கிறது என்பான்.

நான் ஏன் சூத்திரன்? நான் ஏன் வைப்பாட்டி மகன்? நான் ஏன் கீழ்சாதி? இதற்குப் பரிகாரம் வேண்டும் என்றால் குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்றால் குத்தாமல் வெட்டாமல் இருக்கிறதுதான் தப்பு என்றுதானே எண்ண வேண்டியுள்ளது? குத்தினால் என்ன செய்வாய்?

முதுகுளத்தூரில் நூறுபேரைக் கொன்று இரண்டாயிரம் வீட்டைக் கொளுத்தினானே என்ன செய்தாய்? என்ன செய்ய முடிந்தது? யாரோ நாலுபேர் மீது வழக்குப் போட்டால் தீர்ந்துவிடுமா? எரிந்த வீடு வந்துவிடுமா? செத்தவனும் வந்து விடுவானா? குத்துவேன் வெட்டுவேன் என்று சொன்னான் என்றால் எப்போது சொன்னான்? எந்த மாதிரி சொன்னான்? அந்த யோக்கியப் பொறுப்பே கிடையாது. நான் சொல்வதைவிட மந்திரி பக்தவத்சலம் அவர்களே நல்லபடி சொல்லியிருக்கிறார். ராமசாமி; குத்துகிறேன் என்றான்; வெட்டுகிறேன் என்றான் என்று சிலர் சொன்னபோது, எப்போது சொன்னான்? எங்கு சொன்னான்? கடுதாசியைக் காட்டு, என்றதும் ஒருவனையும் காணோம். ஓடிவிட்டார்கள். பேப்பரில் வந்திருக்கிறது என்றார்கள்.

சி.அய்.டி.ரிப்போர்ட்டில் (உளவுத் துறை அறிக்கையில்) அது போலக் காணவில்லையே என்றார்; ஒருவருமில்லை ஓடிவிட்டார்கள். குத்தினால், வெட்டினாலொழிய சாதி போகாது என்ற நிலைவந்தால் எந்த மடையன் தான் சும்மா இருப்பான்?

ஆண்மையாக ஜாதி இருக்க வேண்டியது தான் எடுக்க முடியாது என்றாவது சொல்லேன்!

ஆறு மாதமாகக் கிளர்ச்சி நடக்கிறது. 750 பேரைக்கைது செய்து தண்டித்தாகி விட்டது ஒன்றும் சொல்லாமல்.குத்துகிறேன் வெட்டுகிறேன் என்றான் என்று சொல்லி மிரட்டி நம்மை அடக்கி விடலாம் என்றால் என்ன அர்த்தம்? இந்த மிரட்டலுக்குப் பயந்து விட்டு விடக்கூடிய முயற்சி அல்ல நம்முயற்சி. விட்டுவிட்டால் நாம் தற்கொலை செய்து கொண்டவர்கள் ஆவோம்! மானமற்ற கோழை என்பதைத் தவிர வேறு இல்லை.

சாதி ஒழிக்க வேண்டும் என்றால் அதுபற்றி அக்கறையில்லை.

குத்துகிறேன் என்கிறானே அதற்கு என்ன பண்ணுகிறாய் என்றால் என்ன அர்த்தம்?

இரண்டில் ஒன்று கேட்கிறேன்; சாதி ஒழிய வேண்டுமா? வேண்டாமா? (ஒழிந்தே தீர வேண்டும்! என்ற இலட்சக்கணக்கான மக்களின் முழக்கம்) ஒழிய வேண்டும் என்றால் சட்டத்தையும், வெங்காயத்தையும் நம்பினால் போதுமா? எதைச் செய்தால் தீருமோ அதைச் செய்தால் தானே முடியும்? (சொல்லுங்கள் செய்கிறோம்! என்று இலட்சக்கணக்கானவர்கள் உறுதிமொழி) சட்டத்தின் மூலம் தீராது. பார்லிமெண்டின் மூலம் தீராது என்றால் வீட்டில் போய் படுத்துக்கொள்ள வேண்டியது தானா?

அரசாங்கம் யாருக்கு? பார்ப்பானுக்கும் வடநாட்டானுக்கும் தானா? தந்திரமாகப் பித்தலாட்டமாக அரசியலை அமைத்துக் கொண்டு யோக்கியன் அங்குப் போகமுடியாதபடி சட்டம் செய்து கொண்டு தொட்டதற்கெல்லாம் சட்டம் இருக்கிறது; தண்டனை இருக்கிறது; ஜெயில் (சிறை) இருக்கிறது என்றால், மானங்கெட்டு வாழ்ந்தால் போதும் என்று எத்தனைபேர் இருப்பார்கள்? வயிற்றுப் பிழைப்புக்கு வேறு வழியில்லை யென்பவன் இருப்பான்; இரண்டில் ஒன்று பார்க்கிறோம்; இல்லாவிட்டால் சாகிறோம்; சாகிற உயிர் சும்மா போகாமல் உடன் இரண்டை அழைத்துக் கொண்டு போகட்டும் என்கிறோம்.

சாதி ஒழிய வேண்டும் என்பதற்கு எவனும் பரிகாரம் சொல்வதில்லை; நம்மை அடக்கப் பார்க்கிறார்கள். பார்ப்பனப் பத்திரிகைகளின் போக்கிரித்தனம் அது.

ஏண்டா அடிக்கிறாய் என்றாலே கொல்கிறான், கொல்கிறான் என்று சப்தம் போட்டு மிரட்டுவதா? அடக்கி ஒழிக்க முயற்சி செய்வதா? இன்றுவரை யாரை, எப்படி, எந்த ஊரில் செய்வது என்று முடிவு செய்யவில்லை. ஆனால் அப்படிப்பட்ட அவசியம் வந்தால் தயாரா? என்றுதான் கேட்கிறேன் (தயார்! தயார்! என்ற லட்சகணக்கான குரல்) நாலு பேர் சாவது, ஜெயிலுக்ககுப் (சிறைக்குப்) போவதென்றால் போகிறது. என்ன திருடி விட்டா போகிறோம்? இல்லை ஒரு குடும்பம் பிழைத்தால் போதும் என்று போகிறோமா? நீ கீழ்சாதி, அதுதான் சாஸ்திரம், அதுதான் வேதம், அதைத்தான் ஒத்துக்கொண்டிருக்க வேண்டும் என்றால் 100 க்கு 97 பேராக உள்ள திராவிடர் ஆகிய நாம் எதற்கு இழிமக்களாக இருக்க வேண்டும்? ஆகவே நடப்பது நடக்கட்டும்; பயமில்லை! பயந்து கொண்டு முயற்சியைக் கைவிட்டு விடப் போவதில்லை. அந்த மாதிரி அவசியம் வந்தால் செய்து தீர வேண்டும்.

இந்த இரண்டு வருடத்தில் இருபது இடங்களில் எனக்குக் கத்தி கொடுத்துள்ளார்-கள். எதற்குக் கொடுத்தார்கள்? என் கழுத்தை அறுத்துக் கொள்ளவா? இல்லை... முத்தம் கொடுக்கவா? இல்லை, விற்றுத் தின்னவா? உன்னால் ஆகும்வரை பார்; முடியாவிட்டால் எடுத்துக் கொள்! மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதன் அறிகுறியாகத்தானே? காந்தி சிலை உடைக்க வேண்டும் என்றேன்.

உடனே சம்மட்டி கொடுத்தார்கள்! இப்படி மக்கள் ஏராளமாக ஆதரவு தருகிறார்கள். இவ்வளவு மக்கள் ஆதரவு நம்பிக்கை, அன்பு, செல்வாக்கு உள்ளது. இதை என்ன செய்வது? இதை உணர்ந்து அவனவன் திருந்துவதா; இல்லை கடைசி நிமிடம் வரட்டும் என்று ரகளைக்குக் (கலகத்துக்கு) காத்திருப்பதா? செல்வாக்கைத் தப்பாக உபயோகிக்க மாட்டேன்.

நானும் அவசரக்காரனல்ல! நம் பேச்சைக் கேட்க ஆள் இருக்கிறது என்பதற்காக வெட்டு குத்து என்று சொல்ல மாட்டேன். வேறு மார்க்கம் இல்லை என்றால் என்ன செய்வது? கொலை அதிசயமா? பத்திரிகையில் தினம் பார்க்கிறீர்களே! மாமியாரை மருமகன் கொன்றான்: மனைவியைப் புருஷன் கொன்றான்; அப்பன் மகனைக் கொன்றான் என்று. அவசியம் என்று தோன்றுகிறபோது நடக்கிறது! செய்து விட்டுத் தப்பித்துக் கொள்ளலாம் என்று செய்கிறவன் 100க்கு 10 பேர்தான் இருக்கும். 100க்கு 90 பேர் செய்துவிட்டு வருவதை அனுபவிப்பது என்று செய்கிறவர்கள் தான். தபான காரியத்திற்கு என் தொண்டர்களை உபயோகப்படுத்த மாட்டேன். அந்த அளவு உணர்ச்சி வந்துவிட்டது என்பதை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்; பொதுவேஷம் போடுகிறவன் தெரிந்து கொள்ள வேண்டும்.

3-11-1957 அன்று தஞ்சையில் எடைக்குஎடைவெள்ளி நாணயம் வழங்கிய மாநாட்டில் பெரியார் ஈ.வெ.ரா. சொற்பொழிவு : (விடுதலை 8-11-1957)

http://www.keetru.com/rebel/periyar/89.php


வகுப்புவாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும், சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூகவாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது. நமது குடிஅரசு தோன்றியபின் இதன் இரகசியங்கள் வெளியாகி, இவைகள் எல்லாம் மறைந்து, இப்போது வகுப்புவாதிகளை ஒழிப்பது என்பது தவிர, வேறு எவ்விதக் கொள்கையும் திட்டமும் இல்லாமல் போய்விட்டது. வகுப்புவாதிகள் யார், அல்லாதவர்கள் யார் என்று பார்த்தாலோ அது இவைகளை எல்லாம்விட மிக யோக்கியமானதாக இருக்கும். அதாவது, வகுப்பு வித்தியாசம், சாதி உயர்வு-தாழ்வு, ஒரு வகுப்புக்கு ஒரு நீதி ஆகியவைகள் அடியோடு கூடாது என்றும், எல்லா வகுப்புக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இக்கவேண்டும் என்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவர்கள்தாம் இக்கூட்டத்தாருக்கு வகுப்புவாதிகளாகத் தென்படுகின்றார்கள்.

உயர்ந்த வகுப்பு என்பதாக ஒன்று உயர்ந்திருக்க வேண்டும், தாழ்ந்த வகுப்பு என்பதாக ஒன்று தாழ்ந்திருக்க வேண்டும்; பார்ப்பனர்கள் உயர்ந்த வகுப்பு, மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த வகுப்பு; சூத்திரர், பஞ்சமர் என்கின்ற வித்தியாசம் இருக்க வேண்டும்; இந்த வித்தியாசங்களை ஒழிக்க யாரும் முயற்சிக்கக்கூடாது; எவ்விதச் சட்டமும் செய்யக் கூடாது - என்பவர்கள் இவர்களுக்கு வகுப்புவாதிகள் அல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால், அவர்கள் கொள்கைப்படி பார்ப்பனர்களும் அவர்களை நத்திப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும், அவர்களது கூலிகளும் தவிர மற்றவர்கள் எல்லோரும், அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் வகுப்புவாதிகள் ஆவார்கள்.

எப்படியென்றால், நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். அதாவது, சர்க்காரையும், தேசத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சமூகவாதிகளை முதலில் அழிக்க வேண்டும் என்பதேயாகும். இந்தத் தேசம் பாழாய்ப் போவதற்கும் இந்த சர்க்கார் இங்கு இவ்வளவு அநீதியான ஆட்சி புரிவதற்கும், சமத்துவக் கொள்கை பரவாதிருப்பதற்கும் எந்தச் சமூகத்தார் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து எதிரிகளாய் இருக்கின்றார்களோ அந்தச் சமூகத்தார் முதலில் அழிக்கப்பட வேண்டுமென்பதாகும்.

(குடிஅரசு, தலையங்கம் - 19.5.1929)

வகுப்புவாரி உரிமை வேண்டாதவன் தன் வகுப்பை உணர முடியாதவனோ, தன் வகுப்பைப் பற்றி சந்தேகப்படத் தக்கவனோ ஆவான். ஒரு வகுப்பான், தன் வகுப்புரிமை கேட்பது தேசத் துரோகம் என்று சொல்லப்படுமானால், அப்படிச் சொல்லுகிறவன் ஒரு தேசத்தையும் சேர்ந்திராத நாடோடி, லம்பாடி வகுப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும். நம்மவர்களுக்கு உண்மையான வகுப்புணர்ச்சி இல்லாததாலேயே, நாம் நாடற்ற நாடோடிகளால் அடக்கி ஆளப்பட்டு வருகிறோம்.
இங்கிலீஷ்காரன் இன்று, அவன் நாட்டின்மீது இத்தனை ஆயிரக்கணக்கான ஆகாயக் கப்பல்கள் பறந்து, பதினாயிரக்கணக்கான வெடிகுண்டுகள் வீழ்ந்து, குழந்தைகளும், குட்டிகளும் மாடங்களும் மாளிகைகளும் நாசமானாலும் கூட, ஓர் உயிர் உள்ள வரை போராடியே தீருவேன் என்று சொல்லுவதன் கருத்து, அவன் வகுப்பு உணர்ச்சியின் - வகுப்புவாதத் தன்மையின் உச்சநிலையேயாகும்.

நம் நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்களுக்கு வகுப்பு உணர்ச்சியோ, நாட்டு உணர்ச்சியோ ஏற்படுவதற்கு நியாயமில்லை. ஆகவேதான், ஏன் சண்டை போடவேண்டும்? விட்டுவிட்டுப் போகலாமே என்கின்ற ஞானமும், யார் ஜெயித்தால்தான் என்ன? என்கின்ற ஞானமும் உதயமாகின்றன. அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆதிக்கம் வந்ததாலேயே நம் நாட்டிற்கு இப்படி அடிக்கடி படையெடுப்புகளும், ஆபத்துகளும் நேருவது மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்களாகிய நாம் நாடோடிகளால், சூத்திரர்களாகக் கருதப்படுகிறோம்.

மூன்று தலைமுறையோ அல்லது ஒரு நூற்றாண்டோ ஒரே ஊரில் இருந்ததாக ஏதாவது ஓர் ஆரியக் குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா? பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சவுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல் - ஊர் பாத்தியமோ, குலமுறை பாத்தியமோ சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா? அப்படிப்பட்டவர்கள் - நம்மை, நாம் நமது வகுப்புரிமை கேட்பதால் வகுப்புவாதி என்றும் - தேசத் துரோகி என்றும் - உத்தியோக வேடடைக்காரர்கள் என்றும் சொல்வார்களானால், அது நமது கோழைத்தன்மையும், வாழ்க்கையின் மானமற்ற ஈனத்தன்மையின் பயனுமே ஆகும்.

நாம் உத்தியோக வேட்டைக்காரர்களாம்! ஆம் என்றே வைத்துக் கொள்வோம். நாம் உத்தியோக வேட்டை ஆடுவதில் தப்பு என்னவென்று கேட்கிறேன்? திராவிட நாட்டில் ஒரு பார்ப்பானோ - ஓர் ஆரியனோ உத்தியோக வேட்டையாடுவதும், ஒரு திராவிடன் உத்தியோக வேட்டையாடுவதும் என்றால் யாருக்கு உத்தியோக வேட்டை ஆட உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன். உத்தியோக வேட்டையாடாத வகுப்பானுக்கு அவன் நாட்டினிடமும், அவன் வகுப்பினிடமும் பொறுப்பில்லை என்பதோடு, அவனை வகுப்புத் துரோகி என்று கூடச் சொல்லத் துணிவேன். ஒவ்வொரு வகுப்புக்கும் அவனது வகுப்பு எண்ணிக்கை அளவுக்கு உத்தியோகம் கொடுக்க ஆட்சேபித்தால் - ஆட்சேபிக்கப்பட்ட வகுப்பை இழிவுபடுத்தியதாகவும், கோழைத்தனமுள்ள, மானமற்ற, யோக்கியதையற்ற வகுப்பாகக் கருதியதாகவும் அர்த்தமாகும். எந்த வகுப்பான் தன்னுடைய வகுப்பு எண்ணிக்கை அளவுக்குத் தனது நாட்டில் உத்தியோக வேட்டையாடிப் பெறவில்லையோ, அந்த வகுப்பான் மானமற்ற கோழை வகுப்பானே வான். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன்?

உத்தியோகம் யார் அப்பன்வீட்டுச் சொத்து? உத்தியோகத்துக்குத் தரப்படும் சம்பளம் யார் தாய்-தந்தையார் பாடுபட்ட சொத்து? உத்தியோகம் யாருக்காக, எந்த வகுப்புக்காக நிர்வாகம் செய்யப்படுவது என்பதை ஒரு நாட்டானோ, வகுப்பானோ தெரிந்து கொள்வானேயானால் - மற்ற நாட்டானோ, மற்ற வர்த்தகத்தானோ, மற்ற வகுப்பானோ நம் நாட்டில் வந்து உத்தியோகம் பார்ப்பதைப் பிராணனை விட்டாவது தடுக்க மாட்டானா என்று கேட்கிறேன்.

- (சென்னையில், 8.9.1940இல் சொற்பொழிவு - விடுதலை, 29.8.1950)

எனது குடும்பம் ஒரு வைதீகக் குடும்பமாகும். குடும்பத்தில் எவ்வளவோ கோயில் கட்டுதல், சத்திரம் கட்டுதல், அன்னதானம் செய்தல் முதலிய பல காரியங்கள் செய்திருப்பதோடு, இந்தத் தர்மங்களுக்குச் சொத்துக்களும் எழுதி வைத்திருக்கிறார்கள் என்றபோதிலும், அப்படிப்பட்ட குடும்பத்தில் பிறந்த நான் இன்று பல மக்களால் ஒரு புரட்சிக்காரனென்றும், தீவிரக் கிளர்ச்சி செய்கிறவன் என்றும் சொல்லப்படுகிறேன்.

காரணம் என்னவென்றால், நம்முடைய கீழ்மை நிலைமைக்குக் காரணமாய் இருக்கும் அடிப்படையில் நான் கை வைப்பதால்தான். அது என்னவெனில், எவ்வளவு காலத்திற்கு நாம் இந்து மதத்தையும், இந்துக் கடவுள்களையும், இந்து சாஸ்திரம், புராணம் வேதம், இதிகாசம் முதலியவகைளயும் நம்பிப் பின்பற்றிக் கொண்டு இருக்கிறோமோ, அதுவரையில் நாம் தாழ்த்தப்பட்டவர்களாகவும், பிற்படுத்தப்பட்டர்களாகவும், சம உரிமைக்கு அருகதை அற்றவர்களாகவும் இருப்பதிலிருந்து தப்பித்துக் கொள்ள முடியவே முடியாது.

அம்மாதிரி, அவைகளில் இருந்து வெளியேறாமல், அவைகளை நம்பிப் பின்பற்றி நடந்து வந்தவர்களில் ஒருவராவது அவர்கள் வேறு வழிகளில் எவ்வளவு முயற்சித்தவர்களாய் இருந்தாலும், எவ்வளவு பெரியவர்களாகி இருந்தாலும் - அவர்களுக்கு ஏற்பட்ட இழிவிலிருந்து தப்பித்துக் கொண்டவர்கள் எவருமே இலர் என்பதை ஒவ்வொரு சீர்திருத்தவாதி என்பவனும் நன்றாக உணரவேண்டும் என்று சொல்லி வருகிறேன்.

(கான்பூரில் 29, 30, 31.12.1944 இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.1.1945)

நான் எப்படி?

நான் ஒரு சுதந்திர மனிதன். எனக்குச் சுதந்திர நினைப்பு, சுதந்திர அனுபவம், சுதந்திர உணர்ச்சி உண்டு. அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நீங்கள் என்னைப் போலவே உங்களது சுதந்திர நினைப்பு, அனுபவம் உணர்ச்சி ஆகியவைகளால் பரிசீலனை செய்து, ஒப்புக்கூடியவைகளை ஒப்பி, தள்ளக் கூடியவைகளைத் தள்ளிவிடுங்கள் என்கின்ற நிபந்தனையின் பேரிலேதான் எதையும் தெரிவிக்கிறேன். எப்படிப்பட்ட பழமை விரும்பிகளாலும் இதற்கு இடம் கொடுக்க வில்லையானால் அது நியாயமும் ஒழுங்குமாகாது.

(திருப்பூரில் சொற்பொழிவு, புரட்சி, 17.12.1933)

நான் சொல்வது கட்டளையா?

நான் சொல்வன எல்லாம் எனது சொந்த அபிப்பிராயங்கள்தாம் என்று சொல்வதோடு, நான் ஒரு சாதாரண மனிதன்தான். நான் எவ்விதத் தன்மையும் பொருந்திய ஒரு தீர்க்கதரிசியல்லன். ஆகையால், தனி மனிதன் என்கின்ற முறையில்தான் என்னுடைய அபிப்பிராயங்களையும் நான் பார்த்தும் ஆராய்ச்சி செய்தும் அனுபவத்தில் அறிந்ததுமானவைகளைத்தான் அதிலும் எனக்குச் சரி என்று பட்டதைத்தான் உரைக்கின்றேன்.

ஒரு பெரியார் உரைத்துவிட்டார் என நீங்கள் கருதி அப்படியே அவைகளைக் கேட்டு நம்பிவிடுவீர்களானால், அப்பொழுது நீங்கள் யாவரும் அடிமைகளே! நான் உரைப்பதை நீங்கள் நம்பாவிட்டால், பாவம் என்றாவது, தோஷம் என்றாவது அல்லது நரகத்துக்குத்தான் போவீர்கள் என்றாவது சொல்லிப் பயமுறுத்தவில்லை. யார் உரைப்பதையும் நாம் கேட்டு, வேத வாக்கு என அப்படியே நம்பிவிட்டதனால்தான் நாம் இன்று அடிமைகளாக இருக்கின்றோம்.

ஆகவே, நான் உரைப்பவைகளை ஆராய்ந்து பாருங்கள்! உங்களுக்கு அவைகள் உண்மையென்று தோன்றினால் அவைகளை ஒப்புக் கொள்ளுங்கள்; இல்லாவிட்டால் தள்ளி விடுங்கள். உண்மையெனப் புலப்படுமாகில், அவைகளை உண்மையென ஒப்புக் கொள்வ-தில் மட்டும் பிரயோசனம் இல்லை; அவைகளை அனுஷ்டானத்தில் கொண்டு வந்து அதன்படி நடக்க முயற்சியுங்கள். எனது சொநத் அனுபவங்களை நானறிந்து உங்களுக்கு உரைப்பதுதான் என்னுடைய விடுதலை. அவைகளை ஆராய்ந்து அறிவது, அதன்படி நடப்பதுதான் உங்கள் விடுதலை.

(விடுதலை, கட்டுரை 8.10.1951)

என் துணிவு

நான் ஒரு அதிசயமான மனிதன்; மகான்! அப்படி, இப்படி! என்றெல்லாம் கூறுபவன் அல்லன்; ஆனால், துணிவு உடையவன்; கண்டதை ஆராய்ந்து, அறிந்ததைத் துணிந்து அப்படியே கூறுபவன். மற்றவர்கள் - சுயநலத்துக்காக, சுயநலத்துடன் பாடுபடுகின்றார்கள்; அந்தச் சுயநல உணர்ச்சியுள்ள-வர்கள் மக்கள் வெறுப்புக்கு ஆளாக மாட்டார்கள்; அப்படிப் பக்குவமாக நடந்து கொள்வார்கள்.

நான் கண்டதை, அறிந்ததை மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறுபவன்; மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சாது கூறினால் வெறுப்புத்தான் கிடைக்கும்; சுயநலம் கெட்டுப்போகும்.

(சாமிமலையில், 24.1.1960இல் சொற்பொழிவு, விடுதலை, 31.1.1960)

நான் ஒரு தொண்டன்

நான் ஒரு பிறவித் தொண்டன்; தொண்டிலேயே தான் எனது உற்சாகமும் ஆசையும் இருந்து வருகிறது. தலைமைத் தன்மை எனக்குத் தெரியாது. தலைவனாக இருப்பது என்பது, எனக்கு இஷ்டமில்லாததும் எனக்குத் தொல்லையானதுமான காரியம். ஏதோ சில நெருக்கடியை உத்தேசித்தும், எனது உண்மைத் தோழரும் கூட்டுப் பொறுப்பாளருமான சிலரின் அபிப்பிராயத்தையும் வேண்டுகோளையும் மறுக்க முடியாமலும் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டிருக்கிறேனேயொழிய, இதில் எனக்கு மனச் சாந்தியோ, உற்சாகமோ இல்லை. இருந்தாலும் என் இயற்கைக்கும், சக்திக்கும் தக்கபடி நான் நடந்து வருகிறேன் என்றாலும் அதன் மூலம் எல்லோரையும் திருப்தி செய்ய முடியவில்லை.

(சென்னை கன்னிமரா ஓட்டலில், 6.10.1940இல் சொற்பொழிவு, குடிஅரசு, 13.10.1940)

இலண்டன் மாநகராகிய வைகுண்டத்திலே ஜார்ஜ் மன்னராகிய மகா விஷ்ணுவானவர் பார்லிமெண்டு என்னும் ஆதிசேஷன்மீது பள்ளி கொண்டிருக்கின்றார். ஸ்ரீஸ்ரீஸ்ரீ கே.நடராஜன், சி.இராஜ கோபாலாச்சாரி, வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி, எஸ். சீனிவாசய்யங்கார், சிவசாமி அய்யர், வெங்கட்டரமண சாஸ்திரி, சி.பி. இராமசாமி அய்யர், டி. ரெங்காச்சாரி, டி.ஆர். ராமச்சந்திரய்யர், எம்.கே.ஆச்சாரி, சத்தியமூர்த்தி முதலாகிய அனேக பூ தேவர்கள் போய், கால் மாட்டில் நின்றுகொண்டு தவம் செய்கின்றார்கள்.

மகாவிஷ்ணு:- (தேவர்கள் தவத்திற்கிரங்கி) ஹே, பூதேவர்களே! எங்கு வந்தீர்கள்?

பூதேவர்கள்:- ஆபத்பாந்தவா, அநாத ரட்சகா தங்களிடம் தான் வந்தோம்.

ம.வி:- என்ன விசேஷம்?

பூ.தே:- தேவர்களுக்கு ஏதாவது இடுக்கண் வந்தால் அதைத் தடுக்க, தங்களையன்றி இந்த உலகத்தில் யார் இருக்கின்றார்கள்? எனவே தங்களிடம் வந்தோம்.

ம.வி:- என்ன விசேஷம்?

பூ.தே:- மகாப் பிரபூ! பழையபடி ராட்சதர்களுடைய ஆதிக்கம் வலுத்துவிட்டது. பூதேவர்களாகிய எங்கள் நிலை இருப்பதா, இறப்பதா என ஊஞ்சலாடிக் கொண்டிருக்கின்றது. இந்தச் சமயம் தாங்கள் அருள்புரியவில்லையானால் பூலோகமே சாம்பலாய்ப் போய்விடும். பூலோகமே இல்லையானால் மகா விஷ்ணுவாகிய தங்கள் பாடுகூட திண்டாட்டமாய் போய்விடும். தங்களை வணங்கவோ, தங்களுக்குப் பூஜை ஆராதனைகள் உற்சவம் முதலியவைகள் செய்யவோகூட, யாரும் இருக்கமாட்டார்கள். வணங்காததும் பூஜிக்காததுமான பகவான் இருந்தென்ன? ஒழிந்தென்ன? எனவே இந்த சமயம் தாங்கள் கிருபை கூர்ந்து எங்களைக் கடாட்சித் தருளவேண்டும்.

ம.வி:-என்ன, என்ன? உங்களுக்கு அப்பேர்ப்பட்ட கஷ்டம் என்ன வந்தது? சங்கதியைச் சொல்லுங்கள்.

பூ.தே:- பிரபுவே! முன் யுகங்களில் தேவர் களுக்கு ஏற்பட்ட கொடுமைகள்போல இப்போது பெரிய ஆபத்துகள் வந்திருக்கின்றன.

ம.வி:- எப்படி வந்திருக்கிறது? சீக்கிரம் விவரமாய்ச் சொல்லுங்கள்.

பூ.தே:- எப்படியோ வந்துவிட்டது. பெரிய உபத்திர வமாய் இருக்கின்றது. ஒவ்வொரு யுகங்களிலும் தேவர்களுக்கு இடர்கள் செய்ய அசுரர்களாக வும், அரக்கர்களாகவும் ராட்சதர்களாகவும் வந்து எங்களை இடர்கள் செய்யும்போது, பகவானாகிய தாங்கள்தான் பல அவதாரங் களாக வெளிக்கிளம்பி ராட்சதர்களை எல்லாம் அழித்து, எங்களையும் எங்கள் உயர்வாகிய வேதங்களையும், உத்தியோகங்களாகிய யாகத் தையும் காத்தருளி வருகிறீர்கள்.

ம.வி:-ஆம். அது உண்மைதான்.

பூ.தே:- பிரபுவே! இந்த யுகத்திலும் அதுபோலவே ஒரு ராட்சதன் தோன்றி விட்டான். அவன் எங்களுடைய பெரிய பெரிய உத்தியோகமாகிய யாகத்திலும், வேதத்திலும் கையை வைத்து, அவை களையெல்லாம் அடியோடு ஒழிக்கப் பார்க்கின்றான்.

ம.வி:- அப்படிப்பட்ட ராட்சதன் யார்?

பூ.தே:- பிரபுவே! அவன்தான் `சுயமரியாதை’ என்று சொல்லப்பட்ட ராட்சதன். அவன் இப்போது தேவர்களாகிய எங்களுக்கு மாத்திரம் துன்பம் விளைவிக்கின்றான் என்றோ, எங்களுடைய உத்தியோகங்களாகிய யாகத்தை மாத்திரம் அழிக்கின்றான் என்றோ கவலையீனமாய் இருந்து விடாதீர்கள்! நாங்கள் ஒழிந்தால் பகவானாகிய தாங்களும் ஒழிந்துபோவது நிச்சயம். ஏனென்றால், எங்களை ஒழித்தால் தான் தங்களை ஒழிக்க முடியுமென்று நினைத்து முடிவுசெய்து, தங்களை ஒழிப்பதற் காகவே முதலில் எங்களை ஒழிக்கின்றானாம்.

ம.வி:-அப்படியா! அப்பேர்ப்பட்ட ராட்சதனா அவன்? அவனுக்கு இவ்வளவு சக்தி எப்படி வந்தது?

பூ.தே:- அவன் மகா தவசிரேஷ்டன்; பெரிய பெரிய தவங்கள் செய்து அதன் மூலம் பெரிய பெரிய வரங்களைப் பெற்றுவிட்டான். அன்றியும் தக்க ஆயுதங்கள் அவனிடமிருக்கின்றன. அவ்வாயு தங்களுக்குப் பயந்துகொண்டு சில்லரைத் தேவதைகளும், தங்கள் பரிவாரங்களுங் கூட அவனது பரிவாரங்களாக இருக்கின்றன. அவனைக் கண்டால் நடுங்காத முனிகள் இல்லை; ரிஷிகள் இல்லை.

ம.வி:-அப்படியா! அவன் செய்யும் கொடுமை என்ன?

பூ.தே:- மதம் பொய் என்கின்றான்; வேதம் பொய் என்கின்றான்; புராணம் பொய் என்கின்றான்; பராசர °மிருதி பொய்யாம்; மனுதர்ம சாஸ்திரம் பொய்யாம்; எல்லாம் பொய் என்கின்றான். இராமாயணம் பொய்யாம்; பாரதம் பொய்யாம்; திருவிளையாடல் புராணம் பொய்யாம்; பெரிய புராணம் கூடப் பொய்யாம். தேவர்களைக் கண்டது யார்? விஷ்ணுவைக் கண்டது யார்? சிவனைக் கண்டது யார்? எல்லோரும் பொய் என்கின்றான். இருக்கின்றதாக அகச் சான்று, புறச் சான்று காட்டினாலோ, காட்டுகின்றவர்கள் எல்லோரையும் அயோக்கியர்கள், அன்னக் காவடிகள் என்கின்றான். அவனுடைய உபவத்திரவத்தினால் புராணங்களே விற் பனை ஆவதில்லை; காலட்சேபங்களே நடைபெறுவதில்லை. இவைகள் போனாலும் போகட்டும். எங்கள் யாகங்களே நடைபெறுவதில்லை. அவனால் எங்களுக்கு வெகு சிரமமாக இருக்கின்றது.

ம.வி:- அப்படியா சொல்லுகின்றான்?

பூ.தே:- ஆமாம், பகவானே?

ம.வி:- இன்னும் என்ன செய்கின்றான்?

பூ.தே:- நாள் பொய் என்கின்றான்; திதி பொய் என்கின்றான்; சடங்கு பொய் என்கின்றான்; தேர் பொய், திருவிழா பொய் என்கின்றான்.

ம.வி:- சரி, இவ்வளவையும் பொய் என்கின்றானா?

பூ.தே:- ஆம், பிரபூ! மற்றும் இவனுடைய உபத்திரவத்தினாலே பு°தகக் கடைக்காரன் பட்டினி; புராணக் கடைக்காரன் பட்டினி; புராணப் பிரசங்கப் பண்டிதன் பட்டினி; புரோகிதன் பட்டினி; அர்ச்சகன் பட்டினி; குருமார் பட்டினி; சமயப் பிரச்சாரகன் பட்டினி; நல்ல ஆங்கிலம் படித்த சாஸ்திரிகள், சாதுக்கள் எல்லாம் பட்டினி கிடக்கும்படியாகிவிட்டது. இதைப்பற்றிக் கேட்டால் மூட்டை தூக்கி, மண்வெட்டி வயிறு வளர்க்கச் சொல்லுகிறான். கொடுமை! கொடுமை! சகிக்க முடியவில்லை.

ம.வி:- நமது கடவுள் தன்மையைப்பற்றி என்ன சொல்லுகின்றான்? அதையாவது ஒப்புக்கொள்ளுகிறானா, இல்லையா?

பூ.தே:- கடவுளைப் பற்றிச் சொன்னால், எனக்கு அவ சியமில்லை என்கின்றான். கடவுள் உண்டா இல்லையா என்றால், நான் அதைப்பற்றிக் கவலைப்படுவதே கிடையாது என்கின்றான். `கடவுள் இருந்தாலும் சரி’ இல்லாவிட்டாலும் சரி, அதைப் பற்றி உனக்கென்ன கவலை?’ என்கின்றான்.

ம.வி:-பின்ன, அவன் எதைத்தான் ஒப்புக்கொள்ளுகின்றான்?

பூ.தே:- அவன், `மனிதனுக்கு மனிதன் அன்பு, இரக் கம், உதவி, ஒழுக்கம் இவற்றைத் தவிர மற்றொன்றையும் மதிப்பதில்லை’ என்கின்றான்.

ம.வி:- அப்படியானால், இவற்றை எல்லாம் உலகம் ஒப்புக்கொள்ளுகிறதா?

பூ.தே:- ஒப்புக்கொள்ளுகிறதே! இதுதானே ஆச்சரியமாய் இருக்கின்றது. ஒப்புக் கொள்ளுவது மாத்திரமா? இந்தச் சமயம் நாங்கள் தெருவில் ஒண்டியாய்ப் போகிறதே ஆபத்தாய் இருக்கிறது.

ம.வி:- நீங்கள் என்ன செய்கின்றீர்கள்? நீங்களும் எதிர்த்துப் போர் செய்வதுதானே?

பூ.தே:- நாங்களும் எங்களால் கூடியவரை பார்த்தோம். எங்கள் ஆயுதங்களாக அந்த ராட்சதக் கூட்டத்திலிருந்தே சில ஆள்களைக் கைப்பற்றி, அதன் மூலமாகவும் போரிட்டுப் பார்த்தோம். அவர்கள் ஆயுதங்களும் எங்கள் ஆயுதங்களும் நாங்கள் கூலிக்குப் பிடித்த ஆயுதங்களும் எல்லாம் அவன் ஆயுதங்களுக்கு முன்னால் முனை மழுங்கிப் போய்விட்டன.

ம.வி:- அப்பேர்ப்பட்ட அந்த ராட்சதனுடைய ஆயுதந்தான் என்ன?

பூ.தே:- `குடி அரசு’, `திராவிடன்’, `குமரன்’, `நாடார் குல மித்திரன்’, `தமிழன்’, `விஸ்வநேசன்’, `சிங்கப்பூர் முன்னேற்றம்’, `சுயமரியாதைத் தொண்டன்’ முதலிய அனேக ஆயுதங்களின் வலிமை, எங்கள் ஆயுதங்களின் முனைகளை எல்லாம் மழுங்க வைத்துவிட்டன. எங்கள் கூலி ஆயுதங்களும் உறை இல்லாமல் வெளியே தலை நீட்ட முடியவில்லை. இப்போது நாங்கள் செத்த பாம்பை ஆட்டுவதுபோல், பொய்வேஷம் போட்டுக்கொண்டு திரிந்து பார்த்தும் வேறு மார்க்கமில்லாததால் தங்கள் பாதத்தில் வந்து விழுந்துவிட்டோம். தாங்கள்தான் எங்களைக் காப்பாற்றவேண்டும். தங்கள் பரிவாரங்களான `சைமன் கமிஷன்’ என்னும் உபதேவர்களை நாங்கள் அறியாமல் பகிஷ்காரம் செய்துவிட்டோம். அதைத் தயவு செய்து மன்னிக்க வேண்டும்.

ம.வி:- இதற்காக என்னை என்ன செய்யச் சொல்லுகின்றீர்கள்?

பூ.தே:- தங்களிடமுள்ள சில பாணங் களைக் கேட்க வந்திருக்கின்றோம்.

ம.வி:- என்ன பாணம்?

பூ.தே:- 124 ஏ; 153 ஏ ஆகிய பாணங்கள் வேண்டும்.

ம.வி:- ஏன், 144 பாணம் வேண்டாமா?

பூ.தே:- 144 அவனிடம் செல்லாது. அது சரமாரியாய் அவன்மேல் விடப்பட்டும், அது அவனிடம்போய் அவன் பாதத்தில் விழுந்து நமஸ்காரம் செய்து விட்டு வந்துவிட்டதோடு மாத்திரமல் லாமல், திரும்பிவந்து எய்தவர்கள் மீதுங்கூட சில சமயங்களில் பாய்ந்து விடுகின்றது.

ம.வி:- சரி; நமது தூதர்களை முதலில் உங்கள் லோகத்திற்கு அனுப்புகிறோம்; அவர்களைக் கொண்டு பூலோக நிலை அறிந்து பிறகு வேண்டியதுபோல் செய்வோம்.

பூ.தே:- பிரபுவே! தங்கள் தூதர்கள் யார்? தயவு செய்து அதைக் கொஞ்சம் தெரிவித்துவிட் டால் நாங்கள் ஜாக்கிரதையாக இருக்க அனுகூலமாயிருக்கும்.

ம.வி:- நமது தூதர்கள் ‘சைமன் கமிஷனர்கள்’; அவர்களிடம் முறைகளை மெய்ப்பியுங்கள்.

பூ.தே:- நாங்கள் அறியாத புத்தியினால் தங்கள் தூதர்களை ஆதியில் அலட்சியமாய்க் கருதி விட்டோம்; அதனால் வந்த வினைப்பகுதி என்றுகூடச் சொல்லலாம். ஆனாலும், இப்போது அவர்களிடம் சொல்லிக் கொள்ளுவது எங்களுக்குக் கொஞ்சம் அவமானமாயிருக்கின்றதே!

ம.வி:- நேரில் தெரிவிக்காவிட்டால் பாதகமில்லை; மறைமுகமாக வேறு ஏதாவது வழிகளில் தெரிவித்துவிடுங்கள்.

பூ.தே:- அப்படியே ஆகட்டும், பிரபுவே! எப்படியாவது இந்தச் சமயம் எங்களைக் காப்பாற்றுங்கள். இல்லாவிட்டால் தங்களுக்கும் எங்களுக்கும் இரண்டுபேருக்குமே ஆபத்துவந்துவிடும். இதை நன்றாய் மனதில் வையுங்கள்.

ம.வி:- நம்மைப்பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். உங்கள் காரியத்தை நீங்கள் ஜாக்கிரதையாய்ப் பார்த்துக் கொள்ளுங்கள். சரி, போய்வாருங்கள்!


(சித்திரபுத்திரன் கட்டுரை- `குடிஅரசு’, 10.3.1929)

மற்ற கட்டுரைகள் …

Load More