சமூகவியலாளர்கள்

தமிழ் இசையை நாம் ஏன் வேண்டுகிறோம்? எதற்காக நமக்குத் தமிழில் இசை வேண்டுமென்கிறோம்? தமிழ் மொழியை ஏன் வேண்டுகிறோம்? ஸ்காந்தத்தை ‘கந்த புராணம்' என்றும், கிருஷ்ணனை ‘கிருட்டிணன்' என்றும், ‘ஹோம் நமஹா என்பதை ‘ஓம் நமோ' என்றும், நரசிம்ஹமூர்த்தி என்பதை ‘சிங்கமுகக் கடவுள்' என்றும், தசகண்ட ராவணன் என்பதை ‘பத்துத்தலை இருட்டுத் தன்மையன்' என்றும் மொழி பெயர்த்துக் கொண்டு வணங்கி, நம்பி, திருப்தி அடையவா என்று கேட்கிறேன்.

தமிழிசைக்கு நாம் கிளர்ச்சி செய்ததானது வீணாகவில்லை. தமிழிசைத் தொழிலாளர்கள் தமிழில் இசை கற்று வருகிறார்கள்; பெரும்பாலும் தமிழில் பாடுகிறார்கள். இசையை நுகர்வோரும் தமிழில் இசை வேண்டுமென்று விரும்புகிறார்கள். இனி இந்த உணர்ச்சி குன்றிவிடாது. இசை விருந்தளிக்கும் செல்வவான்களும், நுகர்வோர்களும் தமிழுணர்ச்சி உள்ளவர்களாக இருக்கும் வரை, இந்த உணர்ச்சி வலுத்துக் கொண்டே போகும். இசை, நடிப்பு ஆகியவை எதற்குப் பயன்படுகின்றன? ஏதாவது ஒரு கருத்தை ஒரு சேதியைக் காட்டுவதற்கும், அதை மனதில் பதிய வைப்பதற்கும் அது வெறும் வாக்கியத்தில் இருப்பதை இசை இன்பத்தோடும், நடிப்பு இன்பத்தோடும் மனதிற்குள் புகுத்துவதற்கும் ஆகவே முக்கியமாய் இருந்து வருகின்றன.

இரண்டாவதாகத்தான் அவற்றில் இன்ப நுகர்ச்சி வருகின்றது. ஆகவே, இசைக்கும் நடிப்புக்கும் கருத்தும் செய்திகளும் பிரதானமாகும்; அடுத்ததாகவே சுவை பிரதானமாகும். அதன் உண்மையான அனுபவமும் அப்படியேதான் இருந்து வருகிறது. ஆனால், நுகர்வோரும், இசைத்து நடிப்போரும் செய்தியையும், சுவையையும் பற்றிக் கவலையில்லாமல் நுகர்வோர்கள் நேரப் போக்குக்கும், வேறு பல காட்சி இன்பத்திற்கும் அதைச் சாக்காக வைத்து நுகர்வதாலும், இசைத்து நடிப்போர்கள் பொருளுக்கும், வேறு சுயநலத்துக்கும் பயன்படுத்துவதாலும் அதற்கு உண்டான பயன் ஏற்படாமல் போய்விடுகிறது.

சாதாரணமாக பொருள் நஷ்டமோ, கால நஷ்டமோ, ஊக்க நஷ்டமோ இல்லாமல் நடைபெறும் காரியங்கள்கூட, நம் நலத்துக்கு ஏற்றதாகவும், தீமை ஒழியத் தக்கதாகவும் இருக்க வேண்டுமென்று விரும்புவது, அறிவுடைய மக்களின் தலையாயப் பண்பாகும். அவற்றில் நமக்குப் போதிய கவலை இல்லாததாலேயே நம் நலத்துக்கு மாறான சேதிகளும், உணர்ச்சிகளும் கொண்ட காரியங்கள் வளர்ந்துவர ஏற்பட்டு விட்டதுடன், அவைகளையே பொருள் கொடுத்தும், காலத்தையும் ஊக்கத்தையும் செலவழித்தும் நுகர்ந்து, அறிவும் மானமும் கெட்டு, முற்போக்கும் தடையுற்றுக் கீழ் நிலைக்கு வர வேண்டியவர்களானோம்.

சென்ற மாதம் சென்னையில் நடந்த தமிழ் இசை மாநாட்டை எடுத்துக் கொள்ளுங்கள். 10 நாட்கள் ஒரு பெரிய திருநாள்போல் நடந்தது; பல பதினாயிரம் ரூபாய் செலவிடப்பட்டுப் பல ஆயிரக்கணக்கான மக்கள் தினம் 4, 5 மணி நேரம் செலவழித்து வந்து அமர்ந்து இருந்துவிட்டுப் போனார்கள். வள்ளல் அண்ணாமலையார் உணர்ச்சியும் ஊக்கமும் ஆழ்ந்த சிந்தனையும், அவர்களது பந்துமித்திரக் குழாங்களும், அறிஞர் சண்முகம் அவர்களது அறிவுரைகளும் ஆற்றல்களும் எல்லையின்றிப் பயன்படுத்தப்பட்டன. எதிரிகளுக்கு ஆணித்தரமான விடை அளித்து அவர்களது வாய்க்கு ஆவிகூட வெளிப்படமுடியாதவாறு ஆப்புகள் சம்மட்டியால் அறையப்பட்டன. வெற்றிக் கொடி ஆகாயத்தை அளாவிப் பறந்தது.

ஆனால், விளைந்த பயன் என்ன? ஏற்பட்ட படிப்பினை என்ன? இம்மாநாடு, பண்டிதர்களைத் தமிழில் பஜனைப் பாட்டுகளைத் தொடுக்க வைத்தது; இசைவாணர்களை (பாட்டுத் தொழில்காரர்களை) வீட்டில் தனிமையில் உட்கார்ந்து பாட்டுகளைப் பாடிப்பாடிப் பழக்கம் செய்து கொள்ளச் செய்தது; இந்தப்படியான தமிழ் பஜனைப் பாட்டுப் பாடத் தெரிந்தவனையே இசை விருந்துக்கு அழைக்க வேண்டும் என்கின்ற உணர்ச்சியை நமது செல்வவான்கள் பலருக்கு ஊட்டியது; இசை நுகரச் செல்லும் மக்கள் பலருக்கும் (இந்த இசைவாணர்) தமிழில் இசை இசைக்கிறாரா அல்லது வேறு மொழியில் இசைக்கிறாரா - வேறு மொழியில் இசைத்தால் கலவரம் செய்யலாமா என்கின்ற சிந்தனையைச் சிலருக்கு ஊட்டிற்று என்பனவாகிய இவை ஏற்பட்டன என்றே வைத்துக் கொள்ளலாம்.

இவற்றால் சகல உயர்வும், தகுதியும் இருந்து ஒரு சிறு கீழ் மக்கள் குழுவால் இழி மக்களாய்க் கருதப்பட்டு, சுரண்டப்பட்டு, மானமற்று நடைப்பிணங்களாய்க் கிடக்கும் தமிழ் மக்களுக்கு, இந்த நிலை மாற, ஏதாவது ஒரு ஊசி முனை அளவு பயன் ஏற்பட்டதா என்று வணக்கத்தோடு கேட்கிறேன். நலம் பெறுவதற்கு வழி சிறிதும் இல்லாவிட்டாலும், கேட்டிற்காவது சரிவு வழி ஏற்படாமல் போயிற்றா என்று கேட்கிறேன்.

இவ்வளவு பொருளும், ஆற்றலும், மதியும், மற்றதும் செலவழித்ததற்கு நாம் கண்ட பயன் என்ன? நாட்டில் உள்ள நல்ல, உயர்தர இசைவாணர்களுக்குப் பொருள் தந்து வரவழைத்து ஒரு காலைத் தூக்கி ஆடிக்கொண்டிருக்கும் நடராஜ உருவத்தின் முன் தீப தூப நைவேத்தியத்துடன் உட்கார வைத்து, பல ஆயிரக்கணக்கான மக்களை வரவழைத்துப் பஜனைப் பாட்டுகள் பாடச் செய்வதும், அதன் மூலம் மக்களுக்குப் பக்தி புகட்டுவதுந்தானா? இது யார் செய்யவேண்டிய காரியம்? எதற்கு ஆகச் செய்ய வேண்டிய காரியம்? இதனால் ஏற்படும் பலன் யாருக்கு நலனைத் தரும்?

(சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 7.2.1944 அன்று ஆற்றிய சொற்பொழிவு.)

http://www.keetru.com/rebel/periyar/53.php

தற்கால ஆசிரியர்கள், தாங்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியர் தொழிலை ஒரு புனிதமான கடமையென்பதாகக் கருதி பெருமைப்பட்டுக் கொண்டிருந்தாலும், அத்தொழிலுக்குரிய கடமைகளைச் சரியானபடி உணர்ந்து நடப்பதற்கில்லாத நிலையில் இருந்து கொண்டு, அத்தொழிலைத் தங்கள் வயிற்றுப்பாட்டிற்கு நடத்தி வருவதே வழக்கமாய் இருக்கிறது. ஆசிரியர்கள் இம்மாதிரி மகாநாடுகள் கூடிப் போசுவதும், தீர்மானிப்பதும், தங்களுக்குச் சில சவுகரியத்தை உண்டாக்கிக் கொள்ளவும், தங்கள் சம்பளத்தை அதிகப்படுத்திக் கொள்ளவுமேயல்லாமல் தங்களால் மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளவோ, தேச முன்னேற்றத்திற்கு அனுகூலமான கல்வியைப் போதிக்கும் சக்தியை அடையவோ ஒரு பிரயத்தனமும் செய்ததாக நான் அறியவே இல்லை.

முதலாவது, நீங்கள் படித்த கல்வியும் நீங்கள் கற்றுக் கொடுக்கப்போகும் கல்வியும் வயிற்றுப் பிழைப்புக்கு ஓர் ஆதாரமாகக் கருதிக் கற்கவும், கற்பிக்கப்படவும் ஏற்பட்டிருக்கிறதேயல்லாமல், மக்கள் அறிவுத் தத்துவத்திற்கோ, தேசத்திற்கோ, ஒழுக்கத்திற்கோ ஒரு பலனையும் அளிக்க முடியாததாய் இருக்கிறது என்பது நீங்கள் அறிந்த விஷயமேதான். ஆரம்பக் கல்வி முதல் உயர்தரக் கல்வி, சகலகலா கல்வி என்பது வரையிலும் கவனித்தால், தற்காலம் அடிமைத் தன்மையையும், சுயமரியாதையற்ற தன்மையையும் உண்டாக்கிக் கொடுமையான ஆட்சிமுறை கொண்ட ஒரு அரசாங்கத்திற்கு உதவிசெய்து, வயிறு வளர்க்கும் தேசத் துரோகிகளை உற்பத்தி செய்யும் எந்திரங்களாகத்தானே இருக்கிறதேயல்லாமல் வேறென்ன இருக்கிறது?

நமது குழந்தைகளுக்கு ஆரம்ப ஆசிரியர்கள், அவர்களுடைய தாய்மார்களாகிய நமது பெண்களேயாவார்கள். அக்குழந்தைகளுக்கு 6, 7 வயது வரையிலும் தாய்மார்களேதான் உபாத்தியாயர்களாக இருக்கிறார்கள். எனவே, இரண்டாவதாகத்தான் நீங்கள் ஆசிரியர்கள் ஆவீர்கள். தேசம் மக்களாலும், மக்கள் ஆசிரியர்களாலும் உருப்பட வேண்டி இருக்கிறது. ஆனால், அப்போர்ப்பட்ட ஆரம்ப ஆசிரியர்களாகிய பெண்களோ நமது நாட்டில் பிள்ளை பெறும் எந்திரங்களாக இருக்கின்றார்கள். அவர்களுக்கு ஏதாவது அறிவுண்டாக நாம் இடங்கொடுத்தாலல்லவா, பிள்ளைகளுக்கு அறிவுண்டாக்க அவர்களால் முடியும்?

நீங்கள் முதலில் மக்களுக்குச் சுயமரியாதை இன்னதென்பதைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; சமத்துவத்தைக் கற்றுக் கொடுக்க வேண்டும்; மக்களிடத்தில் அன்பு இருக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். இவைகளில் ஏதாவது உங்களால் கற்பித்துக் கொடுக்கப்படுகிறதா? என்பதை உங்கள் மனதையே கையை வைத்துக் கேட்டுப் பாருங்கள். நீங்கள் மாத்திரமல்ல, உங்களைவிடப் பெரிய சகலகலா வல்லபர்களிடத்தில் படித்து, எம்.ஏ., டாக்டர் முதலிய பட்டங்கள் பெற்ற பையன்களும், தான் மோட்சத்திற்குப் போவதற்கு மற்றொருவன் கையில் பணத்தைக் கொடுத்து அவன் காலில் விழுந்து கும்பிடுகிறான்; தன் தேசத்தையும், மக்களையும் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பதில் போட்டிப் போடுகிறான்.

வண்ணான், அம்பட்டன், தச்சன், கொல்லன், சக்கிலி முதலியோர் எப்படித் தங்கள் தங்கள் தொழிலைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார்களோ, அப்படியே தற்காலம் பி.ஏ., எம்.ஏ., என்ற படித்தவர்கள் என்போர்களும் அந்தப் பாடத்தைக் கற்றவர்களாவார்கள். வண்ணானுக்கு எப்படி சரித்திர பாடம் தெரியாதோ, அப்படியே பி.ஏ. படித்தவர்களுக்கு வெளுக்குந் தொழில் தெரியாது. அம்பட்டனுக்கு எப்படிப் பூகோளப் பாடம் தெரியாதோ, அப்படியே எம்.ஏ. படித்தவனுக்குப் பிறருக்குச் சவரம் செய்யத் தெரியாது. சக்கிலிக்கு எப்படி இலக்கண இலக்கியங்களும் வேத வியாக்கியானங்களும் தெரியாதோ, அப்படியே வித்வான்களுக்கும் சாஸ்திரிகளுக்கும் செருப்புத் தைக்கத் தெரியாது.

ஆகவே வண்ணான், அம்பட்டன், சக்கிலி முதலியோர்களைவிட பி.ஏ., எம்.ஏ., வித்வான், சாஸ்திரி முதலிய பட்டம் பெற்றவர்கள் ஒரு விதத்திலும் உயர்ந்தவர்களுமல்லர்; அறிவாளிகளுமல்லர்; உலகத்திற்கு அனுகூலமானவர்களுமல்லர். இவைகளெல்லாம் ஒரு வித்தை அல்லது தொழில்தானே தவிர, அறிவாகாது. இவ்வளவும் படித்தவர்கள் முட்டாள்களாகவும், சுயநலக்காரர்களாகவும், சுயமரியாதையற்றவர்களாகவும் இருக்கலாம். இவ்வளவும் படிக்காதவர்கள் பரோபகாரிகளாகவும், அறிவாளிகளாகவும், சுயமரியாதையுள்ளவர்களாகவும் இருக்கலாம். நமது நாட்டின் கேட்டிற்கும் நிலைமைக்கும் முதல் காரணம், தற்காலக் கல்வி முறை என்பதே எனது அபிப்ராயம்.

எனவே, இவை ஒவ்வொன்றையும் இன்னமும் கிளற, கிளற மிகவும் மோசமாகவேதான் வந்து கொண்டிருக்கும். இம் மகாநாட்டைப் பொறுத்த வரையிலும், இதிலேற்பட்டிருக்கிற சில தீர்மானங்களைப் பொறுத்த வரையிலும் உங்களுக்கிருக்கும் கஷ்டங்களையும், குறைகளையும் அறிந்து நான் மிகவும் அனுதாபப் படுகிறேன். உங்களுக்கு இன்னும் சம்பளம், மரியாதை முதலியன உயர வேண்டுமென்பதை நான் ஒப்புக் கொள்ளுகிறேன். அதற்காக நீங்கள் செய்யும் கிளர்ச்சிகளில் கலந்து கொள்ள எனக்கும் ஆசையிருக்கிறது. ஆனால், அந்நோக்கங்களையும் கிளர்ச்சிகளையும் உங்கள் சுய நன்மைக்கு மாத்திரமென்றில்லாமல், நமது மக்களின் உண்மையான ஆரம்ப ஆசிரியராய் இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளுகிறேன்.


(24.4.1927இல் போளூரில் நடைபெற்ற ஆரம்ப ஆசிரியர்கள் மாநாட்டில் ஆற்றிய உரை.)

http://www.keetru.com/rebel/periyar/54.php

தோழர்களே!

“மகாமகம் என்றால் என்ன? என்பதைச் சற்று விசாரித்துப் பாருங்கள். இதை அறிவதற்காக நாம் ஆவல்பட்டு தேடினோம், கும்பகோண ஸ்தலபுராணம் என்பதில் இருப்பதாக அறிந்தோம், அதை வரவழைத்துப் பார்த்தோம். அதில் உள்ளதை வெளியிடுகின்றோம்.

“கங்கை, யமுனை, சரஸ்வதி, நர்மதை, காவேரி, சிந்து, கோதாவரி, சரயு, தாமிரபரணி ஆகிய ஒன்பது நதிகளும் ஒன்பது கன்னிகைகளாக வெளிவந்து வெள்ளியங்கிரிக்குச் சென்று பரம சிவனை அடைந்து, “உலகத்தில் உள்ள மக்கள் எல்லோரும் எவ்வளவோ கொடியதாகிய பாவங்களைச் செய்துவிட்டு எங்களிடத்தில் வந்து ஸ்நானம் செய்து அவர்களது பாவங்களை எங்களுக்குக் கொடுத்துத் தீர்த்துக் கொண்டு போய்விடுகிறார்கள். அந்தப் பாவங்களையெல்லாம் பெற்றுக் கொண்ட நாங்கள் எப்படி அவற்றைப் போக்கிக் கொள்ளுவது” என்று கேட்டார்கள். அதற்குப் பரமசிவனார், “கும்பகோணத்திலே, தென் கிழக்கிலே ஒரு தீர்த்தம் உண்டு. 12 வருஷத்துக்கு ஒருமுறை மாசிமாதம் மகாமகம் நாளன்று அதில் குளிப்பீர்களானால், உங்கள் பாவங்கள் தொலைந்து போகும்” என்று சொன்னார். அதற்கு 9 கன்னிகைகளும் “கும்பகோணம் எங்கே இருக்கின்றது” என்று கேட்டார்கள். அதற்குப் பரமசிவனார் அந்த 9 கன்னிகைகளையும் பார்த்து, “நீங்கள் காசிக்குப் போயிருங்கள், அங்கிருந்து நான் விஸ்வேஸ்வரன் என்னும் பெயருடன் உங்களைக் கும்பகோணத்திற்கு அழைத்துப் போகிறேன்” என்று சொன்னார். அந்தப்படியே கன்னிகைகள் காசிக்குப் போயிருந்தார்கள்.

பரமசிவனார் அவர்களைக் காசியிலிருந்து கும்பகோணத்துக்கு அழைத்துச் சென்று, மகாமக குளத்தைக் காட்டிக் குளிக்க வைத்தார். பிறகு சிவபெருமானும் அந்தக் கன்னிகைகளும் கும்பகோணத்திலேயே கோவில் கொண்டுவிட்டனர்.” ஆதலால் இதில் அந்தக் காலத்தில் குளித்தவர்களுக்குச் சர்வ பாவமும் தொலைந்து சர்வ மங்களமும் உண்டாகும்” என்று கண்டிருக்கின்றது.

தோழர்களே!

இதுதான் கும்பகோண ஸ்தல மகத்துவமும், தீர்த்த மகத்துவமும், கோயில் மகத்துவமும் ஆகும். இதற்கு அப்புறம் அந்தக் குளத்தில் எப்படிக் குளிப்பது, அதற்காகப் பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனப் பெண்களுக்கும் எப்படி, எவ்வளவு பணம் கொடுக்க வேண்டியது என்கின்ற விஷயங்களும், எந்தெந்த இடத்தில் குளிப்பது, எந்தெந்தச் சாமியை எப்படி எப்படிக் கும்பிடுவது என்கின்ற விஷயமும் இருக்கின்றது.

இந்தக் கதையை ஆதாரமாக வைத்த இந்த மகாமக உற்சவத்திற்காக எவ்வளவு ஆர்ப்பாட்டங்கள், எவ்வளவு விளம்பரங்கள், எவ்வளவு பணச் செலவுகள், எவ்வளவு கஷ்டங்கள் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்துக்கள் மடையர்கள், அஞ்ஞானிகள், மூடர்கள் என்று ஒருவன் சொன்னால், உடனே கோபப்பட்டுக் கொள்ளத்தான் கற்றுக் கொடுக்கப்பட்டு இருக்கின்றோமே அல்லாமல் அறிவைக் கொண்டு பார்க்கின்றோமா?

இந்தக் கும்பகோணத்துக்கும், அங்குள்ள மாமாங்கக் குளத்திற்கும் உள்ள அநேக சாக்கடைகளிலும், பட்டிக்காடுகளிலும், குப்பை மேடுகளிலும் உள்ள குழவிக் கற்களுக்கும், நீரோடைகளுக்கும், குளங்களுக்கும் குட்டைகளுக்குமெல்லாம் புராணங்களும் கதை ஆதாரங்களும் அய்தீகங்களும் இருந்து வருகின்றன. பொதுவாக இது போன்ற எந்தக் காரியங்களுக்கும் விசேஷம் என்பதெல்லாம் இரண்டே இரண்டு வாக்கியங்களில்தான் அடங்கி இருக்கின்றன. அதாவது,

1. சர்வ பாபங்களும் நிவர்த்தியாகிவிடும்.

2. வேண்டியதெல்லாம் அடையலாம் என்கின்றவையேயாகும்.

இந்த இரண்டு காரியங்களும் யோக்கியமான காரியங்களாயிருக்குமா? என்பதை யோசித்துப் பாருங்கள். மனிதன் செய்த பாவம் போகுமா?

மனிதன் செய்கின்ற பாவமெல்லாம் இந்த மாதிரியான காரியங்களால் தீர்ந்து போவதாயிருந்தால், உலகத்தில் எந்த மனிதனாவது பாவகாரியங்களைச் செய்யத் தவறுவானா? தயங்குவானா? என்று யோசித்துப் பாருங்கள்.

மனிதனுக்கு வேண்டிய, அவன் ஆசைப்படும்படியான காரியங்கள் எல்லாம் இந்த மாதிரியான சிறு காரியங்களால் கைகூடிவிடுவதாய் இருந்தால், மனிதனுடைய முயற்சி, நடத்தை, ஒழுக்கம் என்பவற்றுக்கெல்லாம் அவசியமும், நிபந்தனையும், வரையறையும் எதற்காக வேண்டும் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

நிற்க, பாவமுள்ள மனிதர்கள் நதிகளில் ஸ்நானம் செய்ததால் நதிகளுக்கு அந்தப் பாவங்கள் ஒட்டிக் கொண்டது என்பதில் ஏதாவது அறிவோ, உண்மையோ இருக்க முடியுமா? அந்த நதிகள் அந்தப் பாவத்தைத் தொலைக்க மற்றொரு தீர்த்தத்தில் போய்க் குளிப்பது என்று மகாமக தீர்த்தத்துக்கு வந்து குளிப்பதனால், இதில் ஏதாவது புத்தி இருக்கின்றதா? நாணயம் இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள். இத்தனை பாவங்களையும் ஏற்றுக் கொண்ட மகாமகத் தெப்பக்குளம் அதன் பாவத்தைத் தீர்க்க எந்த உருவெடுத்து எந்தக் குளத்தில் போய்க் குளிப்பது என்பதையும், பிறகு அந்தக் குளம் வேறு எந்தக் குளத்துக்குப் போய்ப் பாவத்தைத் தீர்த்துக் கொள்ளும் என்பதையும் யோசித்தால், கடுகளவு அறிவுள்ளவனாவது இதை ஏற்க முடியுமா என்று பாருங்கள். இதையெல்லாம் கவனித்தால் மதத்தின் பேரால், பாவபுண்ணியத்தின் பேரால், கடவுள் பேரால், தீர்த்தம், தலம், மூர்த்தி என்னும் பெயர்களால், மக்கள் எவ்வளவு தூரம் ஏய்க்கப்பட்டுக், கடையர்கள், மடையர்கள் ஆக்கப்படுகின்றார்கள் என்பதையும் சிந்தித்துப் பாருங்கள்.

மற்றும், அந்தப் புராணத்திலேயே இந்த மகாமகக் குளத்துக்குள் வடக்குப் பாகத்தில் 7 தீர்த்தங்கள் இருப்பதாகவும், கிழக்குப் பாகத்தில் 4 தீர்த்தங்கள் இருப்பதாகவும், நடுமத்தியில் (66,00,00,000) அறுபத்தாறு கோடி தீர்த்தம் இருப்பதாகவும் இந்த மகாமக குளத்தில் முழுகினால் இத்தனை தீர்த்தத்திலும் ஸ்நானம் செய்த புண்ணியம் கிடைக்குமென்றும் எழுதி, அந்தப்படி ஒரு சித்திரமும் வரையப்பட்டிருக்கின்றது. இது எவ்வளவு பரிகசிக்கத்தக்க விஷயம் என்று பாருங்கள். இதை எழுதினவன் எவ்வளவு அயோக்கியன் அல்லது எவ்வளவு மூடன் என்பதன்று இப்போதைய நமது கேள்வி. மற்றென்னவென்றால், இதைப் படித்துப் பார்த்து இதன்படி நடப்பார்கள் என்று நம்பிய மக்களை இவன் எவ்வளவு முட்டாளாகவும், அடிவண்டலாகவும் கருதி இருக்க வேண்டும் என்பதுதான் நமது கேள்வியாகும்.

தீர்த்தம் என்றாலும், நதி என்றாலும், குளம் என்றாலும் என்ன என்பதைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். நதி என்றால் மழை பெய்வதால் ஏற்படும் வெள்ளங்கள் எல்லாம் ஒன்றாய்ச் சேர்ந்து, மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி ஓடும் ஓடை அல்லது நீர்ப்போக்காகும். குளம் என்றால் இந்த மாதிரி ஓடையில் இருந்து வழிவைத்துத் தண்ணீர் நிரப்புவதோ, மழை வெள்ளத்தால் ஊரில் உள்ள அசுத்தங்களையும், கசுமாலங்களையும் அடித்துக் கொண்டு வந்து குளத்தில் விழுந்து தேங்கியிருப்பதோதான். மற்ற இட்டித் தீர்த்தங்கள் என்பதும் கிணற்றுக்குள் நீர் ஊற்றம்போன்ற ஊற்றேயாகும். இந்தத் தண்ணீர்களுக்கு எல்லாம் அந்தந்த இடத்தை அனுசரித்த குணங்களேதாம் உண்டு. மற்றபடி அவற்றில் ஒரு மனிதன் செய்யும் பாவம் என்பதைப் போக்கவோ, அவன் ஆசைப்பட்டதைக் கொடுக்கவோ ஆன சக்திகள் எப்படி இருக்கக்கூடும் என்பது ஒரு மனிதனுக்குத் தெரியாதா என்றுதான் கேட்கின்றோம்.

மாமாங்கக் குளம் என்றால் என்ன?

மாமாங்கக் குளம் என்பது மேல்கண்ட மாதிரியான ஒரு சாதாரண தெப்பக்குளம். மகாமகச் சமயத்தில் அதில் உள்ள தண்ணீர் அவ்வளவையும் இறைத்துவிட்டு வெறும் அடி வண்டலையும், சேற்றையும் மாத்திரம் மீதி வைத்து அதிலும் கந்தகப் பொடியைக் கலக்கி விடுவார்கள். அந்தச் சேறானது கறுப்புக் களிமண்போல் இருக்கும். அந்தக் குளத்தின் விஸ்தீரணமோ சுமார் 500 அடி சதுரம் இருக்கலாம். அடி மட்டம் சுமார் 200 அடி சதுரம் இருக்கலாம். இதில் இலட்சம் பேர்கள் குளிப்பது என்றால் எப்படிச் சாத்தியமாகும்? அந்தக் குளத்தில் இறங்கி அந்தச் சேற்றில் கொஞ்சம் எடுத்துச் சரீரத்தில் பூசிக்கொள்ள வேண்டியதுதான். பிறகு இந்த அசிங்கம் போவதற்கு வேறு குளத்தில் குளிக்க வேண்டியதுதான். இதுதான் வழக்கமாம். ஒரு கிறிஸ்தவரோ, ஒரு மகமதியரோ இந்தப் படிச் செய்தால், அதை நாம் பார்க்க நேர்ந்தால் அப்போது நாம் என்ன என்று சொல்லுவோம்.


(1935-இல் ‘குடிஅரசு’ இதழில் எழுதியது)
http://www.keetru.com/rebel/periyar/55.php

ஜீவப் பிராணிகளில் மனிதனையும் மிருகம் பறவை முதலிய மற்ற பிராணிகளையும் பிரித்துக் காட்டுவதற்கு அறிகுறியாய் உள்ள குணங்கள் இரண்டே இரண்டு குணங்கள் தாம். அவை, பகுத்தறிவு - தன்மானம் என்பனவாகிய இரண்டுமேயாம். அதாவது, ‘அறிவும் மானமுமே மக்கள் தன்மை’ என்பதற்கு ஒப்ப அவை இரண்டும் இல்லாதார் மக்களல்லாதாரேயாவர். இன்றைய மனித வாழ்வில் அவ்விரண்டிற்கும் இடமில்லாமலே போய்விட்டது.

மனிதன் பிறக்கும் போது அப்பிறப்பு இயற்கை அமைப்பில் அறிவு பெறும் சக்தி தான் அமையப் பெற்று இருக்கிறான். அனால், அறிவு பெற்று இருக்கவில்லை என்றாலும் வளர்ச்சியில் அறிவு பெற வேண்டியவனாகிறான்.

அப்படிப் பெறவேண்டிய அறிவில் தலையாயதும் வாழ்க்கைக்குப் பயன்படத்தக்கதும் ஆனது இயற்கையின் இயல்பை, தன்மையை உணர்வதேயாகும்.

ஆனால், மனிதப் பிறவியில் மனிதன் இயற்கையை உணர்ந்து கொள்ள முடியாதபடி மதத்தையும் கடவுளையும் கொண்டு தடுக்கப்பட்டுவிட்டான். கடவுளும் மதமும் தான் இயற்கையை அறியும் தன்மையைக் கெடுத்துவிட்டன. அவை மக்கள் அறிவு வளர்ச்சிக்கே முட்டுக் கட்டையாகிவிட்டன.

கடவுளும் மதமும் இயற்கையை அறியுந் தன்மையைக் கெடுத்து விட்டன என்பது மாத்திரமே அல்லாமல், நமது கல்வி என்பதும் ‘புண்ணில், புழுவும் ஏற்பட்டுவிட்டது’ என்று சொல்வதற்கு ஒப்ப, கடவுளையும் மதத்தையும் தாண்டித் தானாக வளர வாய்ப்பிருக்கும் துறையையும் அடைத்துவிட்டது. மதத்தால் ஏற்படும் முட்டாள் தனத்தைவிட, ‘கல்வி’யால் ஏற்படும் முட்டாள்தனம் மிகவும் கேடானது என்று சொல்லும்படியாகக் கல்வி ஏற்பட்டுவிட்டது.

எப்படி எனில், மதத்தால் அறிவு வளர்ச்சி குன்றுகிறது என்று ஏற்பட்டு விட்டால், ‘கல்வியால்’ அயோக்கியத் தன்மை - அதாவது மனிதனை மனிதன் மோசடி செய்து வாழும் தன்மை ஏற்பட்டு, பொய் பித்தலாட்டங்களாலேயே மனிதன் வாழ்வு நடத்தும்படியான - நடத்தித் தீர வேண்டியதான தன்மை ஏற்பட்டு வருகிறது.

இதற்குக் காரணம், கல்வியை மதக் கல்வியாக - மதத்தை அனுசரித்த கல்வியாக ஆக்கியதும், ஆசிரியர்கள் உண்மையான ஆசிரியர்களாய் இல்லாமல் வயிறு வளர்க்க ஆசிரியர் வேலை கற்ற ஆசிரியர்களைக் கொண்டும் - அந்த ஆசிரியர்களும் அடிமைக் கல்வி கற்ற அடிமை ஆசிரியர்களாக இருந்ததும், இருப்பது மேயாகும்.

ஆசிரியன் என்பவன் இயற்கை அறிவு பெற்றவனாக - அதில் மேம்பட்டவனாக - உலக அனுபவம் பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன்தான் ஆசிரியர் தன்மைக்கு அருகதை உடையவனாவான். நம் ஆசிரியர்களுக்கு - அதாவது, ‘வைஸ்சான்ஸ்லர்’, ‘டைரக்டன் ஆஃப் எஜுகேஷன்’, ‘பிரின்ஸ் பால்கள்’ முதற்கொண்டு ‘செகண்டரி கிரேட் டீச்சர்’, ‘எஜுகேஷன் மினிஸ்டர்’ என்பவர்கள் வரை யாருக்காவது அத்தன்மை உண்டா? சிலருக்குக் கொஞ்சம் உண்டு என்றாலும் - அதை அவர்கள் கல்வித் துறையில் பயன்படுத்த உரிமை உண்டு என்றாவது, யாராலாவது சொல்ல முடியுமா?

ஆகவேதான், மக்கள் அறிவு வளர்ச்சியைக் கடவுள், மதம் ஆகியவை கெடுத்ததானது ஒரு பகுதி என்றும், ‘கல்வி’ கெடுத்தது மற்ற மீதிப் பகுதி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று.

அறிவின் தன்மை இத்தகையது என்றால், இனி மானத்தின் தன்மை எத்தகையது என்று பார்த்தால், அடியோடு மானம் கெட்டவனே சிறந்த மனிதனாகப் பாவிக்கும் படியான அளவுக்கு மானமற்ற தன்மை மதிப்புப் பெற்று விட்டது.

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும் ஒழுக்கக்கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது. மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதினாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு - காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக மனிதன் நிலைமை ஆகிவிட்டது. நம் நாட்டில் மக்களிடத்தில் மான உணர்ச்சியைத் தூண்ட சாதனமே இல்லாமல் போய்விட்டது. இதற்கு நம் சமுதாய வாழ்வு அமைப்பும், பொருளாதார அமைப்பும் பெரும் காரணமாக இருந்தாலும், இன்றைய அரசியலமைப்பு எல்லாவற்றையும் விட மேம்பட்ட காரணமாக இருந்துவருகிறது.

சமுதாயத் துறையில், மேல்பிறப்பு - கீழ்ப்பிறப்பு என மக்களைப் பிரித்து அமைத்த பிறகு, கீழ்ப்பிறப்பில் பட்ட மக்களுக்குமான உணர்ச்சி என்பது செயற்கையால் போலியாகத் தோன்றி மறையுமே அல்லாது இயற்கையான உணர்ச்சி அச்சமுதாயதுக்கு எப்படி இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் அதோடு கூடவே ‘குச்சிக்கார தாசி பிழைப்பு’ - அதற்கொரு சமுதாயம்; துரோக எண்ணமே கை முதலாக உடைய வியாபாரத்துறை - அதற்கொடு கூட்டம்; பொய்யும் பித்தலாட்டமும் மனதறிந்து பயன்படுத்தித் தொழில் செய்து வாழும் வக்கீல் துறை - அதற்குப் பெரும் ஸ்தாபனம் ஆகிய இவைகளுக்கு சமுதாயத்தில் மரியாதையும் உயர் வாழ்வும் ஆகிய தன்மைகளும் இருந்து வருமானால், மக்களுக்கு மானத்தைப் பற்றிய, ஒழுக்கத்தைப் பற்றிய கவலை எதற்காக வரவேண்டும்?

ஒழுக்ககேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான். அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது.

அறிவுள்ளவன், இயற்கைவாதியாய் இருப்பான்; இயற்கைவாதி, அறிவாளியாய் இருப்பான். ஒழுக்கம் என்றால் மானம் என்றும் -ஒழுக்கமுடையவன் என்றால் மானி என்றும் கொள்ளலாம். அதுபோல், அறிவு என்றால் இயற்கை என்றும் அறிவாளி என்றால் இயற்கையை அறிந்தவன் என்றும் கொள்ளலாம்.

ஆகவே, மனித சமுதாயத்துக்கு அல்லது தனி மனிதனுக்கு கூட்டு வாழ்க்கைக்கும் மனிதன் ஓர் உயர்ந்த பிறவி என்பதற்கும் அத்தியாவசியமானவை அறிவும் மானம் ஆம் என்பதும், இவை இரண்டும் இன்று மக்களிடையில் இல்லாமல் போய்விட்டன என்பதும், அதற்கு முக்கியக் காரணம் கடவுளும் மதமும் கல்வியும் சமுதாய - பொருளாதார அரசியல் அமைப்பும் ஆம் என்பதும் எனது அபிப்பிராயமாகும்.

(‘விடுதலை’ - தலையங்கம், 2.1.1950)

http://www.keetru.com/rebel/periyar/56.php

‘பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும். இது தமிழனுக்கே உரியதாகும்.

நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப் படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது.

இதைப் பார்ப்பனர்கள், தங்கள் ஜாதி நலத்துக்கு ஏற்ற வண்ணம் திருத்தி கற்பனை செய்து இதை ‘சங்கராந்திப் பண்டிகை’ என்று ஆக்கி இதில் பல மூடநம்பிக்கைகளைப் புகுத்திவிட்டார்கள்.

இந்தப் பொங்கல் நாளைக் கெட்ட நாளாக ஆக்க, அந்த நாளில் ‘துஷ்ட தேவதை’யின் மூதேவி மக்களைப் பற்றுவதாகவும், அதற்குப் பரிகாரம் செய்வதுதான் பொங்கல் முதலிய காரியங்கள் என்றும், அன்று மூதேவி நமது வீட்டிற்குள் புகாமல் இருப்பதற்கு நமது வீட்டுக் கூரைகளில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சொருகி வைத்தால், மூதேவி வராது, உள்ளே நுழையாது என்றும் மற்றும் பல முட்டாள்தனமான கருத்துக்களைக் கற்பனை செய்து மக்களை அறிவிலிகளாக ஆக்கிவிட்டார்கள்.

மற்றும் இப்பண்டிகைக்குப் போகிப் பண்டிகை என்று சொல்லப்படுகின்றது. இந்த ‘போகி’ என்னும் சொல்லுக்குப் போகப் போக்கியங்களை அனுபவித்தல் என்பது பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம். இந்தக் கருத்துக் கொண்டே போகிப் பண்டிகை என்பதையும் பார்ப்பனர் தங்கள் ஜாதி நலனுக்கு ஏற்பக் கற்பனைக் கதைகளை உண்டாக்கி இந்திரனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பொறாமை விரோத சம்பவம் ஒன்று செய்து, அதற்குப் பரிகாரமாகக் கொண்டாடுவது என்றும் ஆக்கி விட்டார்கள்.

இவையெல்லாம் மகா மகாப் புரட்டுகளாகும். எப்படியெனில், கிருஷ்ணனையும், இந்திரனையும் இவர்கள் யார், எப்போது இருந்தார்கள், இவர்களுக்கு ஏன் சண்டை வந்தது, இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்றெல்லாம் பகுத்தறிவுப் பார்வையில் பார்த்தால், இதன் புரட்டு வெளியாகும், எனவே, பொங்கல் என்பது தமிழர்க்கே உரியதல்லாமல், பார்ப்பனர்க்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை.

இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்ற ஒரு நிகழ்ச்சியும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது, யாவரும் அறிந்ததே. இந்தக் கன்னிப் பொங்கல் என்பது, சிறு பெண் அதாவது பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்கு ஆக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள், அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையை சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆகவே இந்த நிகழ்ச்சிகளுக் குத்தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல் விழா என்பதாகும். இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய தமிழ(பார்ப்பன ரல்லாதார் பண்டிகையாகும். எப்படியெனில், பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல் வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம் முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நட்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.

பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், மனைவி மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.

மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும், பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து தங்களை மானமும், அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

மானமும் அறிவுமே மனிதர்க் கழகு!
(‘விடுதலை’ - 14-1-1972)
http://www.keetru.com/rebel/periyar/57.php

மற்ற கட்டுரைகள் …

Load More