சமூகவியலாளர்கள்

உலகில் நானறிந்த வரையில், நம் நாட்டு மக்களிடம் (இந்துக்கள் என்பவர்களிடம்) தயக்கம், நாணயம் என்பது சற்றேறக்குறைய 100-க்கு 90 பேர்களிடம் இருப்பதில்லை. காரணம் என்ன?

நமக்கு ‘கடவுள்’ இல்லையா? நாம் ‘கடவுள் பக்தி’ இல்லாதவர்களா? நாம் ‘மதம்’ அற்றவர்களா? நமக்குக் ‘கடவுள் பயம்’ இல்லையா? ‘கடவுள் நெறி’ இல்லையா? ‘நன்மை செய்தால் நற்பயன் கிடைக்கும், தீமை செய்தால் தீய பயன் கிடைக்கும்’ என்கின்றதான எச்சரிக்கை சாதனங்கள் இல்லையா? நம்மில் பெரியவர்கள் - ‘தெய்வீகத் தன்மை’ கொண்ட மக்கள் - என்பவர்கள் ஏற்பட்டு, நமக்கு அறிவுரை கூறியவர்கள், கூறுபவர்கள், கூறும்படியான நீதி நூல்கள் இல்லையா? அரசாங்கக் கட்டுத் திட்டம், தண்டனை முதலியவைகள் இல்லையா? நமக்கு ‘நற்கதி’ அளிக்கும்படியான கோயில்கள் இல்லையா? நமக்குக் குருமார்கள் - மடாதிபதிகள் இல்லையா? இவைகளும் மற்றும் இவை போன்ற பலவும் ஏராளமாக இருக்கும்போது நமக்கு - நம் மக்களுக்கு - ஏன் ஒழுக்கம், நாணயம், இன உணர்ச்சி, பொதுநல உணர்ச்சி, யோக்கியத் தன்மை முதலிய நற்குணங்கள் இல்லை? இப்படிப்பட்ட நிலை நமக்கு ஏற்படக் காரணம் என்ன? என்பதை மனிதன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனக்குப் பல ஆண்டுகளாகவே இந்தக் கவலை உண்டு என்பதோடு, எனது தொண்டில் இதை - அதாவது மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு, இன உணர்ச்சி ஏற்பட வேண்டுமென்பதை - முக்கிய இலட்சியமாகக் கொண்டு தொண்டாற்றி வந்திருக்கிறேன். அதை முதன்மையாகக் கொண்டு பிரச்சாரமும் செய்து வருகிறேன்.

எனது இத்தனை ஆண்டு வாழ்வில் - 80 ஆண்டு உலக அனுபவத்தில் நாளுக்கு நாள் மக்களிடம் ஒழுக்கம், நாணயம், யோக்கியப் பொறுப்பு ஆகிய தன்மைகள் குறைந்துகொண்டே வந்திருப்பதுடன், இன்று அக்குறைவு நிலை உச்ச நிலையடையும் வழியில் மனித சமூதாயமானது சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் எனது கருத்து.

இதுபற்றி நான் மிகவும் கவலையடைகிறேன். இவ்விஷயங்களில் இன்றைய நிலை மாறுமா என்பதில் நான் மிகுதியும் கவலைப்படுகிறேன். மேற்சொன்னபடி எனது பல நாள் - 30, 40 ஆண்டுகள் - இதற்காகவே நான் செய்து வந்த தொண்டின் காரணமாய் ஏதாவது பயன் ஏற்பட்டிருக்கிறதா என்று பார்த்தால், அடியோடு இல்லையென்றுதான் சொல்ல வேண்டும். ஆகவேதான் மேலும் மேலும் கவலையோடு, இந்த நிலை ஏன் ஏற்பட்டது? இதற்கு என்ன பரிகாரம்? என்பதில் நான் மிகுதியும் சிந்திக்க முயற்சித்து, சதா சிந்திக்கிற வண்ணமாகவே இருக்கின்றேன்.

நமக்கு சுயராஜ்யம் வந்து என்ன பயன்? சுதந்திரம் - பூரண சுயேச்சை வந்து என்ன பயன்? நம்மை நாமே ஆண்டு கொள்வதில் (ஜனநாயகத்தில்) என்ன பயன்? இந்த நிலையில் வாழும் மக்களுக்கு அந்நிய ஆட்சி ஏற்படுவதில் தீமை என்ன? என்றெல்லாம் என் மனம் சிந்தனையில் - கவலையில் மூழ்கிக் கிடக்கின்றது. ஏனெனில் இந்த நாட்டில், பொது வாழ்வில், எல்லா மக்களையும் பொறுத்த பொதுத் தொண்டில் - சிறிதும் சுயநலமில்லாமல் - எனக்குள்ள சகலத்தையும் பொதுவுக்கு ஈடுபடுத்திய தொண்டின் பயனாய், தொண்டின் பெயரால் எவ்வித சுயநல நன்மையும் அடையாமல், உண்மையாகவே என்னை ஒரு தொண்டன் - தொண்டுக்காகவே வாழ்பவன், வாழவேண்டியவன் என்று கருதிக் கொண்டு, உண்மைத் தொண்டு செய்து வந்ததில் - வருவதில் எனக்கு மேற்பட்ட தொண்டன் யாருமில்லை யென்னும் தன்மையில் தொண்டாற்றி வருபவன் நான் எனக் கருதிக்கொண்டு தொண்டாற்றி வருவதால், எனக்கு இந்தக் கவலை - அதாவது நம் மக்களில் யோக்கியமானவன், நாணயமானவன், எந்தத் தரத்திலும், எந்த நிலையிலும் ஏன் ஒருவனைக்கூட காண முடியலில்லை? இருப்பதாகக் கருதக்கூட முடியவில்லை? - என்பனவற்றைக் கருதக்கூடியவனாக, கவலைப்படக் கூடியவனாக இருந்து வருகிறேன்.

இந்த நீண்ட நாள் கவலையின் - சிந்தனையின் பயனாக இதற்கு - அதாவது இந்த நாட்டில் இன்று, இந்தக் காலத்திலும் ஒரு யோக்கியன், நாணயமானவன், ஒழுக்கமானவன், யோக்கியப் பொறுப்புக்கு ஆளானவன் எந்தத் தரத்திலும் எவனும் இல்லாமல் போனதற்குக் - காரணம்: நமது நாட்டிலுள்ள சூழ்நிலை, சுற்றுச்சார்பு, நமது கடவுள்கள், நமது நீதி நெறி, சாத்திரங்கள், தர்மங்கள் இவைபற்றிய புராணங்கள், இதிகாசங்கள், பிரசாரங்கள், பெரியவர்கள், மகான்கள், மகாத்மாக்கள், இன்று இருந்துவரும் அரசாங்க முறை, அரசியலில் ஈடுபடும் மக்கள் தன்மை, அரசியலில் ஒழுக்கம், மத ஒழுக்கம், சமுதாய அமைப்பு முதலியவைகள்தாம் என்கிற முடிவுக்கு வர வேண்டியவனாகி விட்டேன். அது மாத்திரமல்லாமல், மேற்கண்ட காரண காரியங்களில் நல்ல அளவுக்கு மாறுதல் ஏற்படாதவரை - மாறுதல் செய்யப்படாதவரை - நமக்கு மேற்கண்ட தீய குணங்களில் எவ்வித மாற்றமும் ஏற்பட முடியாது என்பதுடன், ஏற்படுத்த எவராலும் ஆகாது என்கிற முடிவுக்கு வரவேண்டியனாகி விட்டேன்.

நமது கடவுள்களில் ஒன்றுகூட ஒழுக்கமாய், யோக்கியமாய், நாணயமாய் யோக்கியப் பொறுப்புடன் இருந்ததாகக் கடவுள் சம்பந்தப்பட்ட எந்த ஆதாரங்களிலுமே காணமுடியவில்லை. அது மாத்திரமல்லாமல், இன்றுள்ள மக்களில் எந்த இழி மக்களிடமிருந்தும் எப்படிப்பட்ட ஒழுக்க மற்றும் வேத சாஸ்திர, தர்ம புராண - இதிகாசங்கள் எதிலாவது இன்று நாம் கூறும், விரும்பும் ஒழுக்கம், நாணயம், யோக்கியம், நேர்மை, யோக்கியமாகக் கருதும், நடக்கும் தன்மை மிகுந்திருப்பதாக எந்தப் பக்தன், குரு, பண்டிதன், புலவன் ஒருவனாலாவது காட்ட முடியுமா என்று கேட்கிறேன். அல்லது நமது பெரியோர்கள், முன்னோர்கள், தெய்வீகத் தன்மை பெற்ற ரிஷிகள், மகான்கள், மகாத்மாக்கள் என்பவர்களில் யாரிடமாவது மேற்கண்ட குணங்களோ, அல்லது அறிவோ, பண்போ இருந்ததாக யாராவது காட்டமுடியுமா என்று கேட்கிறேன். பந்தயம் கட்டிக் கேட்கிறேன்.

(‘விடுதலை’- தலையங்கம் - 31-7-1942)

http://www.keetru.com/rebel/periyar/48.php

எங்கள் தொண்டு யாவும் தொழிலாளர்களுக்காகவேதான். நாங்களுமம் தொழிலாளிகள் தாம். ஆகவே, வாய்ப்பினால் மாத்திரம் தொழிலாளிகளல்லாமல் பிறவியினால், சட்டத்தினால், சா°திரங்களால், கடவுள்க ளால், கடவுள் சிருஷ்டியினால் நாங்கள் தொழிலாளிகளாக ஆக்கப்பட்டவர்கள். அப்படிப்பட்ட தொழிலாளிகள்தாம் திராவிடர்கள். இப்போது தொழிலாளர் இயக்கத்தைச் சேர்ந்த தொழிலாளிகள் உண்மைத் தொழிலாளிகளில் 1000த்தில் ஒரு பாகமாகத்தான் இருப்பார்கள்.

தொழிலாளி என்கின்ற பதத்துக்கு அர்த்தம் என்ன? வேலை செய்கிறவன் என்று அர்த்தமாகும். யாவருந்தான் வேலை செய்கிறார்கள். அப்படி இருக்க, ஒரு கூட்டத்திற்கு மாத்திரம் ‘தொழிலாளி’என்று பெயர் கொடுக்கப் பட்டிருப்பானேன் என்றால், பிறருக்காக தொண்டு செய்து-மனுதர்ம சாஸ்திரப்படி, தொழிலாளியாகவே வாழ்பவர்கள் ‘தொழிலாளி’ என்று அழைக்கப்படுகிறார்கள். அந்தக் கருத்தில் பார்த்தால் திராவிடர்களாகிய யாவரும் தொழிலாளிகள் அல்லவா?

இயந்திரங்களின் முன்னால் நிற்பவர்கள் மாத்திரந்தானா தொழிலாளர்கள்? வண்டி ஓட்டுகிறவர்கள், வீதி கூட்டுகிறவன், கக் கூசுக்காரன், வண்ணார், நாவிதர், குயவன், உழுபவன், விதைப்பவன், தச்சன், கொல்லன், சக்கிலி, பறையன், செக்கு ஓட்டுகிறவன், சம்பாதித்து - அன்றாட வாழ்க் கைக்கு அன்றாடம் வரும்படி எதிர்பார்த்து நிற்கும் யாவரும் தொழிலாளிகள் அல்லவா?

இன்று இம்மாதிரித் தொழிலாளிகள் யார்? பிராமணர்களா? க்ஷத்திரியர்களா? அல்லவே! சூத்திரர்கள்தாமே இந்த மாதிரியான தொழிலாளிகளாக இருக்கிறார்கள்! இந்தச் சூத்திரர்கள் யார்? திராவிடர்களாகிய நாம்தானே -சூத்திரர் என்கின்ற பட்டியலில் சட்டப்படியும், சாஸ்திரப்படியும், கடவுள் சிருஷ்டிப்படியும், காரியத்தில் நடப்புப்படியும் இருந்து வருகிறோம்? இதை எந்தத் தொழிலாளியாவது மறுக்கமுடியுமா? நான் மேலே சொன்ன தொழில்களில் ஒரு பிராமணன் இருக்கிறானா? ஆகவே, சரீரத்தினால் பாடுபடும் வேலை அவ்வளவும் சூத்திரர்கள் என்று அழைக்கப்படும், ஆக்கப்பட்டிருக்கும் திராவிடர்களாகிய நம் கையிலேயே இருப்பதால், ‘திராவிடரியக்கம் தொழிலாளிகள் இயக்கம்’ என்று சொல்லுகிறேன்.

எதற்காக திராவிடர் இயக்கம் வேலை செய்கிறது என்றால், திராவிடர் 4-வது சாதியாக இருக்கக் கூடாது - தொழிலாளர் சாதியாக இருக்கக்கூடாது என்பதற்கே ஆகும்.

தொழிலாளர் இயக்கம் - திராவிடர் இயக்கம் என்பதற்குப் பதிலாக மற்றவர்கள் இயக்கத்திற்கு இருப்பது போன்ற ஒரு பெயர் இருக்க வேண்டுமானால் நாம் என்ன பெயர் வைத்துக்கொண்டிருக்க வேண்டும், உங்களுக்குத் தெரியுமா? பிராமணர்கள் தங்கள் இயக்கத்துக்கு, ‘பிராமணர்கள் சங்கம்’ என்றும், வைசியர் தங்கள் சங்கத்திற்கு ‘வைசியர் சங்கம்’ என்றும், க்ஷத்திரியர்கள் தங்கள் சங்கத்திற்கு ‘க்ஷத்திரியர் சங்கம்’ என்றும் பெயர் வைத்துக் கொண்டிருக்கிறார்களல்லவா? அந்தப் படிப் பார்த்தால், நாம் நம் சங்கத்திற்கு ‘சூத்திரர் சங்கம்’ என்று பெயர் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், சூத்திரன் என்பதை நாம் இழிவாகக் கருதுகிறபடியால் சூத்திரனின் மறுபெயர் கொண்ட - அதே கருத்துக் கொண்ட ‘வேலையாள் - தொழிலாளி சங்கம்’என்று வைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அந்தப் பெயரை - ஒருசிறு கூட்டத்தார் பரித்துவைத்துக் கொண்டதால், தொழில் செய்யும் சாதி யாராகிய நாலாவது வருணத்தார்களாக்கப் பட்ட நாம் நம்முடைய இனத்தின்பேரால், ‘திராவிடர் கழகம்’ என்பது வேண்டாம் என்றால், மற்றபடி அதற்குச் சரியான பெயர் ‘சூத்திரர் சங்கம்’ என்பதேயாகும்.

ஆகவே, ‘திராவிடர் கழகம்’என்பது, 4-வது வருணத்தாராக ஆக்கப்பட்டு - சமுதாயத்தில் இழிவுபடுத்தப்பட்டு - சரீரப் பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தப்பட்டு வைத்திருக்கும் ஒரு 4 கோடி மக்கள் கொண்ட சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்லவேண்டும்.

செல்வம் கடவுள் கொடுத்தார்; தொழிலாளிகளைக் கடவுள் சிருஷ்டித்தார்; கடவுள் செயலால் இவை இரண்டும் சிருஷ்டிக்கப் பட்டுக் காப்பாற்றப்பட்டு வருகின்றன; பிச்சை எடுப்பது அவனவன் ‘தலைவிதி’ - என்று நினைப்பவர் தொழிலாளர் இயக் கத்தில் அங்கத்தினராய் இருக்கவோ, தொழிலாளர் இயக்கத்தை நடத்தவோ சிறிதும் தகுதி அற்றவர் என்றே சொல்லுவேன். அவர் எவ்வளவு பண்டிதராய் இருந்தாலும், பக்தனாய் இருந்தாலும், தொழிலாளி இயக்கத்திற்குப் பதரே - எதிரியேயாவார். இப்படிச் சொல்வது நாத்திகமானால் - அதற்காக நீங்கள் எங்களிடம் சேரக்கூடாது என்றால், உங்கள் சம்பந்தம் இல்லாமல் எங்களால் ஆனதை எங்களுக்கும், உங்களுக்குமாக இருந்துவரும் திராவிடர் கழகத்தின் மூலம் நாங்கள் தொண்டாற்றி வருகிறோம்.

(‘குடிஅரசு - 6-7-1946)’

http://www.keetru.com/rebel/periyar/49.php

தொழிலாளி என்கிற பதத்துக்கு அர்த்தம் என்ன? வேலை செய்கிறவன் என்று அர்த்தமாகும். ‘யாவருந்தான் வேலை செய்கிறார்கள். அப்படி இருக்க ஒரு கூட்டத்திற்கு மாத்திரம் தொழிலாளி என்று பெயர் கொடுக்கப்பட்டிருப்பானேன்?' என்றால், பிறருக்கு ஆக தொண்டு செய்து மநுதர்ம சாஸ்திரப்படி, தொழிலாளியாகவே வாழ்பவர்கள், தொழிலாளி என்று அழைக்கப்படுகிறார்கள். அந்தக் கருத்தில் பார்த்தால், திராவிடர்களாகிய நாம் யாவரும் தொழிலாளிகள் அல்லவா என்று கேட்கிறேன்.

எந்திரங்களின் முன்னால் நிற்பவர்கள் மாத்திரம் தானா தொழிலாளர்கள்? வண்டி ஓட்டுகிறவர்கள், வண்டி இழுக்கிறவர்கள், வீதி கூட்டுகிறவன், கக்கூசுக்காரன், வண்ணார், நாவிதர், குயவன், உழுபவன், விதைப்பவன், தச்சன், கொல்லன், சக்கிலி, பறையன், செக்கு ஓட்டுகிறவன், நெசவு நெய்பவன் முதலிய சரீரத்தால் உழைத்து வயிற்றுக்கு, வாழ்வுக்கு மாத்திரம் சம்பாதித்து அன்றாட வாழ்க்கைக்கு, அன்றாடம் வரும்படி எதிர்பார்த்து நிற்கும் யாவரும் தொழிலாளி அல்லவா?

இன்று இந்த மாதிரி தொழிலாளிகள் யார்? பார்ப்பனர்களா? சத்தியர்களா? அல்லவே! சூத்திரர்கள்தானே இந்த மாதிரியான தொழிலாளிகளாய் இருக்கிறார்கள். அந்தச் ‘சூத்திரர்' என்கின்ற பட்டியலில் சட்டப்படியும், சாஸ்திரப்படியும், கடவுள் சிருஷ்டிப்புபடியும், காரியத்தில் நடப்புப்படியும் இருந்து வருகிறோம்! இதை எந்தத் தொழிலாளியாவது மறுக்க முடியுமா? நான் மேலே சொன்ன தொழில்களில் ஒரு ‘பிராமணன்' இருக்கிறானா? ஆகவே, சரீரத்தினால் பாடுபடும் வேலை அவ்வளவும் சூத்திரர்கள் என்று அழைக்கப்படும் ஆக்கப்பட்டிருக்கும் திராவிடர்களாகிய நம் கையிலேயே இருப்பதால், திராவிடர் இயக்கம் தொழிலாளிகள் இயக்கம் என்று சொல்லுகிறேன்.

ஆகவே திராவிடர் கழகம் என்பது, 4 ஆவது வர்ணத்தாராக ஆக்கப்பட்டு, சமுதாயத்தில் இழிவுபடுத்தி, சரீரப்பாடுபட வேண்டியதாகக் கட்டாயப்படுத்தித் தாழ்த்தி வைத்திருக்கும் ஒரு 4 கோடி மக்கள் கொண்ட சமுதாயத்தின் விடுதலைக் கழகம் என்றுதான் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட விடுதலைக் கழகத்தைத் தொழிலாள மக்கள் உணர்ந்து கொள்ளாமல், திராவிடர்களின் எதிரிகளின் ஆதிக்கத்திற்காக ஏற்பட்டிருக்கும் காங்கிரசிலும், திராவிட எதிரிகள் தலைமை வகித்து நடத்தும் கம்யூனிஸ்ட் கட்சியிலும் சார்ந்திருப்பதோடு, திராவிடர்களின் எதிரிகளுக்கு அடிமைகளாகவும் ஒற்றர்களாகவும் இருக்கும் புராணப் பிரசங்க, புராண வாழ்வுக்காரர்களுக்குச் சிஷ்யர்களாகவும் இருப்பது எவ்வளவு அறியாமை, மானக்கேடு என்று பாருங்கள்.

கவலையுள்ள எங்களைப் போன்றவர்களையும் திராவிடப் பிள்ளைகள் பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு அடிக்கிறார்கள், உதைக்கிறார்கள், காலித்தனம், காலடித்தனம் செய்கிறார்கள் என்பதல்லாமல் வேறு என்ன? இப்படிப்பட்ட மானம் கெட்ட மானத்தில், ஈனத்தில் கவலையில்லாத ஜாதி எந்தக் காலத்திலும் முன்வர முடியாது. ஆகவே நம் திராவிடர்களுக்கு, தொழிலாளர்களுக்கு, சூத்திரர்களுக்கு விடுதலை, மாறுதல் வேண்டுமானால் முதலில் மானம் வரவேண்டும். எதிரிக்கு விபீஷணனாய், அனுமாராய் இருப்பதைப் பற்றி வெட்கப்பட்டு எதிரியை, எதிரி ஆயுதத்தை வெறுக்க வேண்டும். தனது இழிவுக்கு அடிப்படை எது என்று பார்த்து அதைப் பெயர்த்து தகர்த்தெறிய வேண்டும்.

சில தொழிலாளர் தலைவர்கள் என்பவர்கள் என்மீது குரோதம் கொண்டிருக்கிறார்கள். என்னைப்பற்றி விஷமப் பிரச்சாரம் செய்கிறார்கள். ‘ராமசாமி நாயக்கர் மதத்தில், கடவுளில் பிரவேசிக்காவிட்டால் நான் அவருடன் நேசமாக இருப்பேன். ஆனால், அவர் நாத்திகம் மதத்துவேஷம் பேசுகிறார். ஆகையால் ஜாக்கிரதையாக இருங்கள்' என்று உங்கள் தலைவர்களில் சிலர் சொல்லி, உங்களை என்னிடம் அணுகவிடாமல் செய்கிறார்கள். அதைப் பற்றி எனக்கு கவலையில்லை.

எது மதம், எது கடவுள் என்பது இந்த அன்னக் காவடிகளுக்குத் தெரியுமா? நான் எந்த மதத்தை, எந்தக் கடவுளை ஒழிக்கவேண்டும் என்று சொல்லுகிறேன் என்பது, இந்தத் தற்குறிகளுக்குத் தெரியுமா என்று கேட்கிறேன். எந்த ஒரு மதம் ஒரு மனிதனை, ‘பிராமணனாக'வும் ஒரு மனிதனைச் சூத்திரனாகவும் அதாவது தொழிலாளியாகவும் பாட்டாளியாகவும், பறையனாகவும் உண்டு பண்ணிற்றோ, அந்த மதம் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். ஒழிய வேண்டுமா வேண்டாமா? (ஆம், ஒழிய வேண்டும் என்னும் பேரொலி).

எந்தக் கடவுள் ஒருவனுக்கு நிறையப் பொருள் கொடுத்தும், ஒருவனுக்குப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழ உரிமை கொடுத்தும் மற்றொருவனை உழைத்து உழைத்து ஊரானுக்குப் போட்டுவிட்டுச் சோற்றுக்குத் திண்டாடும்படியும், ரத்தத்தை வேர்வையாய்ச் சிந்தி உடலால் உழைத்தவண்ணம் இருந்து கீழ் மகனாய் வாழும்படியும் செய்கிறதோ, அந்தக் கடவுள் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறேன். அந்தக் கடவுள் ஒழிய வேண்டுமா, வேண்டாமா? ஆகவே தோழர்களே! இது சொன்னால் நான் நாத்திகனும், மதத் துவேஷியுமா? ‘ஆம் ஒழிய வேண்டும்' என்று சொன்ன நீங்கள் மதத் துவேஷியா, நாத்திகர்களா?

(சென்னை ‘பி அண்ட் சி மில்' தொழிலாளர்கள் கூட்டத்தில் 30.6.1946 அன்று ஆற்றிய உரை)

http://www.keetru.com/rebel/periyar/50.php

சமுதாயத்தில் மாற்றம் செய்ய விரும்பும்போது உலகத்தில் எதிர்ப்பு வருவது இயற்கையே. ஆனால், எந்த நாட்டுச் சரித்திரத்தைப் புரட்டினாலும் மாறுதல் இருந்தே தீரும். மாறுதல் செய்ய விரும்புபவன் கீழே விழுந்து பல கஷ்டங்களை அனுபவித்துத்தான் ஆகவேண்டும்.

கட்டை வண்டி ஏறுகிறவன் இரயிலை வெறுப்பான். பின், இரயிலின் அவசியத்தை உணர்ந்து இரயிலில் ஏறிப் பிரயாணம் செய்வான். நெய் விளக்கைத் தவிர வேறு எந்த விளக்கும் கூடாது, மண்ணெண்ணெய் கூடாது என்று கூறியவர்கள் கூட இன்று மின்சார விளக்குகளைப் பொருத்தி இருக்கிறார்கள். பறவைகளுக்கும் எருமை, புலி, எலி போன்றவைகளுக்கும் பகுத்தறிவு கிடையாது. ஆனால், மனிதன் அய்ந்து அறிவைத் தாண்டி, ஆறாவது அறிவை - பகுத்தறிவைப் பெற்றிருக்கிறான். அனுபவத்தைப் பெறுவதும், மற்றவர்கள் செய்வதை, சொல்வதை யோசிக்க சக்தி பெற்றிருப்பதும் மனித இனம். எனவே, மனித இனம் வாழ்வில் வளர்ச்சியடைந்து வருகிறது.

அறிஞர்களின் ஏற்பாட்டால் 1910-ல் வெளிவந்த வாகனத்துக்கும் 1951-ல் வெளி வந்திருக்கிற வாகனத்துக்கும் எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது. உலகம் நாளுக்கு நாள், மணிக்கு மணி முன்னேறிக் கொண்டு போகும்போது, நமது தமிழர் சமூகம் மட்டிலும் சூத்திரப் பட்டத்துடன் பின்னேறிக் கொண்டு போகிறது. நாம் செய்யும் மாறுதல் சுகபோகிகளுக்குப் பாதகமாக இருந்தால் - அவர்களின் இன்ப வாழ்வு பாதிக்கப்படும் என்று நினைத்தால், அவர்கள் மாறுதலை மறுப்பார்கள்; எதிர்ப்பார்கள்.

1928 என்று நினைக்கிறேன்; எங்கள் சுயமரியாதை இயக்கத்தில் பல செட்டியார்கள் சேர்ந்தார்கள். அந்தக் காலத்தில் பார்ப்பனர்கள் கப்பல் ஏறி வெளிநாடுகளுக்குப் போகக் கூடாது. அப்படிப் போனால் சாதிக்குப் பாதகம் விளையும் என்ற நிலையில் இருந்தார்கள். ஆனால், இன்று சாதி ஆசாரத்தையும் மறந்து, வெளிநாடுகளுக்காகக் கடல் கடந்து பிழைப்புக்காகவும், பதவிகள் வகிக்கவும் செல்லுகிறார்கள். இதுவும் மாறுதல்தானே! முப்பது ஆண்டுகளுக்கு முன்பு ரோமத்தைக் கத்தரித்து ‘கிராப்பு’ வைத்திருந்தால் பள்ளிக்கூடத்தில் படிக்க இடம் தரமாட்டார்கள். ஆனால், இப்பொழுது அவர்களே கிராப்பு வைத்துக் கொள்ளுகிறார்கள். நெற்றியில் எதுவுமில்லை என்றால் பள்ளியில் மாணவர்களை நுழைய விடமாட்டார்கள்; ஆனால், இன்று 100க்கு 90 விகிதம் தமிழர்கள் நெற்றியில் எதுவும் வைத்துக் கொள்ளுவதில்லை. 150 ஆண்டுகட்கு முன்பு பெண்கள் ரவிக்கை போட்டுக் கொண்டதில்லை; மலையாளத்தில் மார்பில் துணிகூடப் போடக்கூடாது; இன்று பாட்டியம்மாள்கூட ரவிக்கை போட ஆசைப்படுகிறார்கள். நான் ஈரோடு சேர்மனாக இருந்த பொழுது குழாய்த் தண்ணீருக்கு ஏற்பாடு செய்தேன். மக்களெல்லாம் போற்றினார்கள். ஆனால், என் தாயார் மட்டிலும், குழாய்த் தண்ணீர் கூடாது என்றார்கள். காரணம் என்ன? குழாய்த் தண்ணீரை யார் யார் பிடித்துவிடுகிறார்களோ - அதில் தீட்டு ஒட்டியிருக்குமே என்பதற்காக! பிறகு திருந்தினார்கள். மாறுதல் வேண்டும் போது பிடிவாதம் இருக்கத்தான் செய்யும். அக்கம் பக்கத்தைப் பார்த்து மாறுதல் ஏற்பட்டுவிடும். உலகம் போகிற போக்கைப் பார்த்தால் மனித சமுதாய வளர்ச்சி எந்த அளவில் கொண்டு போய் விடுமோ! என்ன ஆகுமோ! யார் கண்டது?

நம் நாட்டு இராஜாக்களெல்லாம் கடவுளாக மதிக்கப்பட்டார் கள்; கடவுள் அவதாரமென எண்ணப்பட்டார்கள். கடவுளுக்குச் செய்வதெல்லாம் இராஜாவுக்கும் செய்தார்கள். ஆனால், அந்த இராஜாக்களெல்லாம் இன்று என்ன ஆனார்கள்? அரசாங்கத்திடம் சம்பளம் வாங்கும் இராஜாவாக ஆக்கப்பட்டார்கள். ஜமீன்தார்களும் இப்படியே ஒழிக்கப்பட்டார்கள். ‘கடவுள் ஒருவனை உயர்ந்தவனாகவும், ஒருவனைத் தாழ்ந்தவனாகவும் படைத்தார்’ என்ற வருணாசிரம வேதாந்தம் எங்கே போயிற்று? இப்படியே சுதந்திர ஜனநாயக எண்ணத்துடன் ஆராய்ந்தால் மாறுதல் கண்டிப்பாய்க் கிடைக்கும்.

2000 ஆண்டுகளாக சூத்திரர்கள் இருக்கிறார்கள்; ஏன் அப்படி இருக்க வேண்டும்? ஒரு பாவமும் அறியாத குழந்தை பிறந்ததும், நடமாட ஆரம்பித்ததும் ஏன் சூத்திரனாக இருக்க வேண்டும்? இந்த இருபதாம் நூற்றாண்டிலும், ஏன் புராணத்திலும், சாஸ்திர சம்பிரதாயத்திலும் சூத்திரப் பட்டம் இருக்கவேண்டும் என்று கேட்பது தப்பா? உள்ளதைச் சொல்லி மாறுதல் விரும்பும் எங்களைக் குறைகூறுபவர்கள், தொந்தரவு கொடுப்பவர்கள் ஒரு காலத்தில் அதே மாறுதலுக்காக உழைப்பார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

அடிமை முத்திரை குத்தப்பட்டவர்களாக, விலை கொடுத்து வாங்கும் அடிமைகளாக நீக்ரோக்கள் நடத்தப்பட்டார்கள். லிங்கன் தோன்றினார்; மாறுதலைச் செய்தார். இன்று அந்தச் சமூகம், பிற இனத்தவர்களுடன் சரிசமமாக வாழும் ஒரு நிலையை ஏற்படுத்திக் கொண்டது.

சீனாவில் சன்யாட்சன் தோன்றினார்; மாறுதலை உண்டு பண்ணினார். ‘அய்ரோப்பாவின் நோயாளி’ என்று கூறப்பட்ட துருக்கி நாட்டிலே கமால் பாட்சா தோன்றி மாறுதலை உண்டு பண்ணினார். ஆனால், தமிழ் நாட்டில் சித்தர்களும் வள்ளுவரும் புத்தரும் தோன்றி - சாதி ஒழிய வேண்டும், மாறுதல் வேண்டும் என்று கூறியும் மாறுதல் காண முடியவில்லையே! உழைப்பதெல்லாம் நம்மவர்களாக இருந்தும், கீழ்சாதியாகத்தானே வாழ்கிறோம்! மலையாள நாட்டில் ஈழவர்கள் வீதியில் நடக்கக்கூடாது என்ற சம்பிரதாயமெல்லாம் மாறி, மாறுதல் ஏற்பட்டு, இன்று வீதியில் நடக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இன்னும் தீண்டப்படாதவன் இருக்கத் தானே செய்கிறான்! அது போகட்டும். நம் தாய்நாட்டுக்குத் தமிழ்நாடு என்று பெயர்; ஆனால் தமிழுக்கு இடமில்லை. கோயிலில் வடமொழியில் மந்திரம் ஓதப்படுகிறது; இந்தி படித்தால்தான் பதவி கிடைக்கும்; தமிழில் சங்கீதம் வராது; தெலுங்கில்தான் சங்கீதம் வரும். சாஸ்திரம், புராணம் எல்லாம் வடமொழியில்!

காந்தியார் நம் நாட்டில் என்ன ஆனார்! மகாத்மாவாகி, மகானான அவரே மூன்று குண்டுகளுக்கு இரையானாரே! ‘சூத்திரன் படிக்கக் கூடாது’ என்கிறது மனுதர்மம்; ‘எல்லோரும் படிக்க வேண்டும்’ என்றார் காந்தியார் - உடனே பாய்ந்தன மூன்று குண்டுகள்! ’முஸ்லிம் மதமா, இந்து மதமா! எல்லாம் ஒன்றுதான்’ என்றார் காந்தியார் - பாயந்தன மூன்று குண்டுகள்! எனவே, மாறுதலுக்கு எதிர்ப்பு இருந்துதான் தீரும்; அதைப்பற்றிக் கவலையில்லை.

நீங்கள் ஒவ்வொருவரும் சமத்துவம் காண, மாறுதல் கொள்ளப் பாடுபடுங்கள்! உயர்ந்தவன் - தாழ்ந்தவன் என்ற பேதமொழிய உழையுங்கள்! இந்நாட்டில் தமிழர்களாகிய நீங்கள் ஒற்றுமையாக இருங்கள். அதற்காகப் பாடுபடுபவர்களுக்கு உதவியாக இருங்கள். என் தொண்டின் அடிப்படை நோக்கமெல்லாம் சாதி ஒழிப்பேயாகும்.


(மலாயாவில், கோலப்பிறை செயின்ட் மார்க் ஸ்கூல் திடலில் 16-12-1954-ல் சொற்பொழிவு - ஆதாரம் : பினாங்கு, ‘சேவிகா’ 18-12-1954 - ‘விடுதலை’, 23-12-1954)

http://www.keetru.com/rebel/periyar/51.php

எத்தனையோ பேர் சாகிறார்கள். ஏதோ இரண்டொருவர்கட்குத்தான் நாம் நினைவு நாள் கொண்டாடுகிறோம். செத்துப் போனவர்களின் பணத்தை உத்தேசித்தோ, படிப்பை உத்தேசித்தோ, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, சாமர்த்தியம் முதவியவைகளைப் பற்றியோ நாம் எவருக்கும் நினைவு நாள் கொண்டாடுவதில்லை. இவைகள் காரணமாக நாம் எவரையும் போற்றுவதுமில்லை; துதிப்பதுமில்லை.

பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத் தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் ‘என்சைக்ளோபீடியா’ ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும். இப்படி அனேகவற்றை - உயிரில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல.

மற்றெதற்காக என்றால், மனிதர்களாக - மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது மனிதத் தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆக்குங்கள் என்பதற்காகவேயாகும்.

அப்படியானால், செத்துப் போன மற்றவர்களும், இப்போது இருக்கும் மக்கள் எல்லோரும் மனிதர்கள் அல்லவா என்று கேட்பீர்கள். அவர்களையெல்லாம் மனிதர்கள் என்று சொல்லுகின்றோமே ஒழிய, மற்ற ஜீவபிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் பேதம் காணக்கூடிய தன்மையுடைய மனிதர்கள் என்று சொல்லுவதற்குரியவர்களாக மாட்டார்கள். பேதம் என்றால் உருவ பேதம் அல்ல. நடப்பிலும்! நடப்பால் ஏற்படும் பயனிலும் உள்ள பேதமேயாகும்.

உலகிலுள்ள எல்லா ஜீவ பிராணிகளுக்கும் - மனிதர்கள் என்பவர்கள் உட்பட, உருவத்தில் பேதம் இருந்தாலும், குணத்தில் பேதம் இருந்தாலும் நடப்பும் பயனும் அனேகமாய் ஒன்றுதான்.

அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கிறோமா? அல்லது தெய்வங்கள் என்பவர்களையாவது மதிக்கிறோமா? மடாதிபதிகள் அல்லது மகான்கள் அல்லது ஆச்சாரியார்களை மதிக்கிறோமா? இவர்களை எல்லாம் அவரவர்களிடத்தில் சம்பந்தமும், தனிப்பட்ட நலமும் பெறுகிறவர்கள் தான் மதிப்பார்கள்; மற்றவர்கள் ஏன் மதிப்பார்கள்?

ஏன் என்றால், வியாபாரம் செய்து இலாபம் சம்பாதிப்பவனை யார், எதற்காக மதிப்பார்கள்? ஓட்டல்காரன், ‘அன்னதான பிரபு’ ஆவானா? சம்பள உபாத்தியாயர், ‘குருநாதன்’ ஆவானா? தாசி, ‘காதலி’ யாவாளா? என்பது போல்தான் தன் தன் நலத்துக்கு - தன் தன் பொறுப்புக்காகக் காரியம் செய்யும் எவனுடைய காரியமும் - எப்படிப்பட்டதாயினும், அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக்கூடியதாகாது. அப்படியல்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் -அதாவது தன்னைப் பற்றிய கவலை இல்லாமல் பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துத் தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத் தொண்டால் பாதகமடையும் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட வகுப்புக்கள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம்; அது பொதுவாய் மதிக்காததாகாது.

ஆகவே, நாம் நினைவு நாள் கொண்டாடும் மக்களை, உண்மையான மனிதர்களாய்க் கருதி, அவர்களது மனிதத் தன்மையை மதித்து, மற்றவர்களும் அந்தத் தன்மைக்கு வரவேண்டுமென்கிற ஆசைக்காக, எடுத்துக்காட்டுக்காக, பிரச்சாரத்திற்காகக் கொண்டாடுகிறோம்.

(‘குடிஅரசு’ 14-4-1945)

நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூசை செய்யவோ, தேங்காய், பழம் ஆராதனை செய்து, விழுந்து கும்பிட்டுப் பக்தி செய்து, நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த - செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாகக் கருதிக்கூட நாம் எந்தப் படத்திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும், எப்படிப்பட்ட படத்திற்கும் பூசை செய்யும்படியோ, கோவில்களிலோ தேர், இரதம், விமானம், சப்பரம் ஆகியவைகளிலோ வைத்து ஊர்வலம் ஆராதனை செய்யும்படி காலித்தனம் செய்வதற்கோ அல்ல.

ஆனால் மற்றெதற்கு என்றால், மனித சமூக நலனுக்கு - சுயநலமில்லாமலும், மற்றவர்களிடமும் எவ்விதக் கூலியோ, புகழோ, பிரயோஜனமோ பெறாமலும், தன் முயற்சியால், தன் பொருளால், தன் பொறுப்பென்று கருதித் தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதிசயங்களையும் தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம், மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா என்பதற்காகவேதான். மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம், கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாகவேதான் இக்காரியத்தைச் செய்கிறோம்.

உதாரணமாக, கிரீஸ் தேசத்துச் சாக்ரடீஸ் என்பவர் - எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். கவுதம் புத்தர் என்பவர் - ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார். இயேசு கிறித்து விக்கிரக ஆராதனை, கோவில் பூசை முதலியவைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற்காகச் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார் முகமது நபி அனேக மூடப்பழக்க வழக்கங்களையும் பல தெய்வ உணர்ச்சியையும் பெண் கொடுமையையும் எதிர்த்துப் பல நல்ல கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததற்காகப் பல முறை சங்கடப்படுத்தப்பட்டார். அப்படிப்பட்டவர்களும் மற்றும் அது போன்ற பல புதிய அபிப்பிராயம் சொன்னவர்களும் அவர்களது ஆயுள் காலத்தில் இதுபோல் எவ்வளவு துன்பப்படுத்தப்பட்டு, எவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டு, எவ்வளவு தொல்லைப்படுத்தப் பட்டு இருந்தாலும் இன்று அவர்கள் கோடானுகோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப்படுகிறார்கள்; கோடிக்கணக்கான பேர்களால் பின்பற்றப்படுகிறார்கள்.

அது போலவே தான், நாங்களும் இன்று எங்கள் அபிப்பிராயங்கள் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும், பாமர மக்களாலும், சுயநலச் சூழ்ச்சிக்காரர்களாலும் எவ்வளவுதான் வெறுக்கப்பட்டுத் தொல்லைகள் விளைவிக்கப்பட்டு அல்லல்பட்டாலும், பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன் தரக்கூடியதாயும் பாராட்டக்கூடியதாயும், மக்களை ஞானவழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கை யுடையவர்களாகவே இருக்கிறோம். இல்லாவிட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத்திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டைப் பெரும்பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற்கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம்.

நாங்கள் பாமர மக்களால் வெறுக்கப்படுவதினாலேயே எங்கள் தொண்டின் மேன்மையை உணருகிறோம். பாமர மக்கள் மதித்துப் பக்தி செலுத்திப் புகழும்படியாக நடந்து கொண்டவர்களுடைய எப்படிப்பட்ட தொண்டும், அபிப்பிராயமும் அவர்களது வாழ்நாளுக்குப்பின் பயன்பட்டதாக எங்களுக்கு ஆதாரமே கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவர்களால் மனித சமூகம் திருத்தப்பாடு அடைந்ததாக எவ்வித ருசுவும் இதுவரை கிடைத்ததில்லை.

நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார்; பெசண்ட் அம்மையார் புகழப்பட்டார்; காந்தியும் புகழ்ப்படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் ‘தெய்வீகம்’ கற்பிக்கப்பட்டார்கள்; பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காணப்படுகின்றதா? இவர்கள் எல்லாம் புராணங்களுக்குப் புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள் போல் தோன்றி, பாமரர்களுடைய பக்திக்கும் பூசைக்கும் ஆளாகி, முட்டாள் தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய்ப் புகழ் பெற்று வருகிறோம் என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் - சாகின்றார்கள் - சாகப்போகின்றார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறதே தவிர, கண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள்!

இன்று உண்மையில் மனித சமூகத்திற்கு ஏதாவது புதிய மாறுதல் உணர்ச்சி அல்லது புரட்சிகரமான சுதந்திரம், விடுதலை, சமத்துவம், சுயமரியாதை என்பதான உணர்ச்சி தோன்றி இருக்குமானால் - அவை அனைத்தும் ஒரு காலத்திலோ நேற்றோ இன்றோ -கல்லடிபட்டு, கொல்லப்பட்டு, கையடிபட்டு, தொல்லைப்பட்டு உயிர் துறந்த, உயிர் வாழ்கின்ற - வெறுக்கப்பட்ட மக்களாலே தான் என்பது ஆராய்ந்து பார்க்கின்ற எவருக்கும் சுலபத்தில் புலப்படும்.

அப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் தன்மை உயர வேண்டுமென்று கருதித் தொண்டாற்றியவர்களே ஒழிய, மக்கள் தங்களைப் போற்றிப் புகழ்ந்து பூசிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்லர். ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி - அவர்களின் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்து, அம்மாதிரியான உள்ளம் பெற்று சமூகத்துக்குத் தொண்டாற்ற முற்படவேண்டும் என்பதற்காகவே அவர்களது உருவப் படத் திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து இவற்றை எடுத்துக் கொள்கிறோம்.

(‘குடிஅரசு’ 10-1-1948)
http://www.keetru.com/rebel/periyar/52.php

மற்ற கட்டுரைகள் …

Load More