சமூகவியலாளர்கள்

வகுப்புவாதம் எல்லா வகுப்புக்கும் சம சந்தர்ப்பமும், சம சுதந்திரமும் வேண்டும் என்கின்றது. சமூக வாதம் தங்கள் சமூகம் மாத்திரம் எப்போதும் உயர்வாகவே இருக்க வேண்டும் என்கின்றது. நமது ‘குடி அரசு’ தோன்றியபின் இதன் இரகசியங்கள் வெளியாகி, இவைகள் எல்லாம் மறைந்து, இப்போது வகுப்புவாதிகளை ஒழிப்பது என்பது தவிர, வேறு எவ்விதக் கொள்கையும் திட்டமும் இல்லாமல் போய்விட்டது. வகுப்புவாதிகள் யார், அல்லாதவர்கள் யார் என்று பார்த்தாலோ அது இவைகளை எல்லாம்விட மிக யோக்கியமானதாக இருக்கும். அதாவது, வகுப்பு வித்தியாசம், சாதி உயர்வு - தாழ்வு, ஒரு வகுப்புக்கு ஒரு நீதி ஆகியவைகள் அடியோடு கூடாது என்றும், எல்லா வகுப்புக்கும் சம உரிமையும் சம சந்தர்ப்பமும் இருக்க வேண்டும் என்றும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்பவர்கள் தாம் இக்கூட்டத்தாருக்கு வகுப்புவாதிகளாகத் தென்படுகின்றார்கள்.

உயர்ந்த வகுப்பு என்பதாக ஒன்று உயர்ந்திருக்க வேண்டும். தாழ்ந்த வகுப்பு என்பதாக ஒன்று தாழ்ந்திருக்கவேண்டும்; பார்ப்பனர்கள் உயர்ந்த வகுப்பு மற்றவர்கள் அவர்களைவிடத் தாழ்ந்த வகுப்பு; சூத்திரர், பஞ்சமர் என்கின்ற வித்தியாசம் இருக்க வேண்டும். இந்த வித்தியாசங்களை ஒழிக்க யாரும் முயற்சிக்கக் கூடாது; எவ்வித சட்டமும் செய்யக்கூடாது - என்பவர்கள் இவர்களுக்கு வகுப்புவாதிகள் அல்லாதவர்கள். சுருங்கச் சொன்னால், அவர்கள் கொள்கைப்படி பார்ப்பனர்களும் அவர்களை நத்திப் பிழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளவர்களும் அவர்களது கூலிகளும் தவிர மற்றவர்கள் எல்லோரும், அதாவது பார்ப்பனரல்லாதவர்கள் எல்லோரும் வகுப்புவாதிகள் ஆவார்கள்.

எப்படியென்றால், நாமும் இதைத்தான் சொல்லுகின்றோம். அதாவது, சர்க்காரையும், தேசத்தையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம். சமூகவாதிகளை முதலில் அழிக்க வேண்டும் என்பதேயாகும். இந்தத் தேசம் பாழாய்ப் போவதற்கும், இந்த சர்க்கார் இங்கு இவ்வளவு அநீதியான ஆட்சி புரிவதற்கும், சமத்துவக் கொள்கை பரவாதிருப்பதற்கும் எந்த சமூகத்தார் தங்கள் சமூக நன்மையை உத்தேசித்து எதிரிகளாய் இருக்கின்றார்களோ அந்தச் சமூகத்தார் முதலில் அழிக்கப்பட வேண்டுமென்பதேயாகும்.

- ‘குடிஅரசு’, தலையங்கம், 19-5-1929

வகுப்புவாரி உரிமை வேண்டாதவன் தன் வகுப்பை உணரமுடியாதவனோ, தன் வகுப்பைப் பற்றிச் சந்தேகப்படத்தக்கவனோ ஆவான். ஒரு வகுப்பான், தன் வகுப்புரிமை கேட்கும் தேசத் துரோகம் என்று சொல்லப்படுமானால் அப்படிச் சொல்லுகிறவன் ஒரு தேசத்தையும் சேர்ந்திராத நாடோடி, லம்பாடி வகுப்பைச் சேர்ந்தவனாகத்தான் இருக்க முடியும். நம்மவர்களுக்கு உண்மையான வகுப்புணர்ச்சி இல்லாததாலேயே, நாம் நாடற்ற நாடோடிகளால் அடக்கி ஆளப்பட்டு வருகிறோம்.

இங்கிலீஷ்காரன் இன்று, அவன் நாட்டின் மீது இத்தனை ஆயிரக்கணக்கான ஆகாயக் கப்பல்கள் பறந்து, பதினாயிரக்கணக்கான வெடிகுண்டுகள் வீழ்ந்து, குழந்தைகளும், குட்டிகளும், மாடங்களும், மாளிகைகளும் நாசமானாலும் கூட, ‘ஓர் உயிர் உள்ளவரை போராடியே தீருவேன்’ என்று சொல்லுவதன் கருத்து, அவன் வகுப்பு உணர்ச்சியின் - வகுப்புவாதத் தன்மையின் உச்சநிலையேயாகும். நம் நாட்டுக்கு வெளிநாட்டிலிருந்து பிழைக்க வந்தவர்களுக்கு வகுப்பு உணர்ச்சியோ, நாட்டு உணர்ச்சியோ ஏற்படுவதற்கு நியாயமில்லை. ஆகவேதான், ‘ஏன் சண்டை போட வேண்டும்? விட்டுவிட்டுப் போகலாமே’ என்கின்ற ஞானமும், ‘யார் ஜெயித்தால்தான் என்ன?’ என்கின்ற ஞானமும் உதயமாகின்றன. அப்படிப்பட்ட ஆட்களுக்கு ஆதிக்கம் வந்ததாலேயே நம் நாட்டிற்கு இப்படி அடிக்கடி படையெடுப்புகளும், ஆபத்துகளும் நேருவது மாத்திரமல்லாமல், இந்நாட்டு மக்களாகிய நாம் - நாடோடிகளால், சூத்திரர்களாகக் கருதப்படுகிறோம்.

மூன்று தலைமுறையோ அல்லது ஒரு நூற்றாண்டோ ஒரே ஊரில் இருந்ததாக ஏதாவது ஓர் ஆரியக் குடும்பத்தை நீங்கள் காட்ட முடியுமா? பிழைப்பு கிடைத்த இடத்தில் வாழ்க்கையும், சவுகரியம் கிடைத்த இடத்தில் ஓய்வும் என்பதில்லாமல் - ஊர் பாத்தியமோ, குலமுறை பாத்தியமோ சொல்லிக் கொள்ள அவர்களுக்கு வசதி உண்டா? அப்படிப்பட்டவர்கள் - நம்மை, நாம் நமது வகுப்புரிமை கேட்பதால் ‘வகுப்புவாதி’ என்றும் - ‘தேசத் துரோகி’ என்றும் - ‘உத்தியோக வேட்டைக்காரர்கள்’ என்றும் சொல்வார்களானால், அது நமது கோழைத்தன்மையும், வாழ்க்கையின் மானமற்ற ஈனத்தன்மையின் பயனுமே ஆகும்.

நாம் உத்தியோக வேட்டைக்காரர்களாம்! ‘ஆம்’ என்றே வைத்துக்கொள்வோம். நாம் உத்தியோக வேட்டை ஆடுவதில் தப்பு என்னவென்று கேட்கிறேன்? திராவிட நாட்டில் ஒரு பார்ப்பானோ - ஓர் ஆரியனோ உத்தியோக வேட்டையாடுவதும், ஒரு திராவிடன் உத்தியோக வேட்டையாடுவதும் என்றால், யாருக்கு உத்தியோக வேட்டை ஆட உரிமை இருக்கிறது என்று கேட்கிறேன். உத்தியோக வேட்டையாடாத வகுப்பானுக்கு அவன் நாட்டினிடமும், அவன் வகுப்பினிடமும் பொறுப்பில்லை என்பதோடு, அவனை வகுப்புத் துரோகி என்றுகூடச் சொல்லத் துணிவேன். ஒவ்வொரு வகுப்புக்கும் அவனது வகுப்பு எண்ணிக்கை அளவுக்கு உத்தியோகம் கொடுக்க ஆட்சேபித்தால் - ஆட்சேபிக்கப்பட்ட வகுப்பை இழிவுபடுத்தியதாகவும், கோழைத்தனமுள்ள, மானமற்ற, யோக்கியதையற்ற வகுப்பாகக் கருதியதாகவும், அர்த்தமாகும். எந்த வகுப்பான் தன்னுடைய வகுப்பு எண்ணிக்கை அளவுக்குத் தனது நாட்டில் உத்தியோக வேட்டையாடிப் பெறவில்லையோ, அந்த வகுப்பான் மானமற்ற கோழை வகுப்பானே ஆவான். நான் ஏன் இப்படிச் சொல்லுகிறேன்?

உத்தியோகம் யார் அப்பன்வீட்டுச் சொத்து? உத்தியோகத்துக்குத் தரப்படும் சம்பளம் யார் தாய் - தந்தையார் பாடுபட்ட சொத்து? உத்தியோகம் யாருக்காக, எந்த வகுப்புக்காக நிர்வாகம் செய்யப்படுவது என்பதை ஒரு நாட்டானோ, வகுப்பானோ தெரிந்து கொள்வானேயானால் - மற்ற நாட்டானோ, மற்ற வர்க்கத்தானோ, மற்ற வகுப்பானோ நம் நாட் டில் வந்து உத்தியோகம் பார்ப்பதைப் பிராணனை விட்டாவது தடுக்கமாட்டானா என்று கேட்கிறேன்.
- சென்னையில், 8-9-1940இல் சொற்பொழிவு(‘விடுதலை’,29-8-1950)

http://www.keetru.com/rebel/periyar/38.php

ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது.

காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி(த்தான்) ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது! சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காயத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் ந்திவிட்டார்கள்.

‘புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன' மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக்கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆகவேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

எந்த மனிதனும் ‘அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத' நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் ராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்தியாகவும் மற்றும் மந்திகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்' என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால் : 1. காந்தியார் கொல்லப்பட்டார் 2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன 3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர் 4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன 5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காயங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காயங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காயங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள்.

அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக' இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை' என்கிறார்கள். மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள்.

அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.
- கீழ்வெண்மணியில் 42 தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை ‘விடுதலை' 28.12.1968

ஜீவப் பிராணிகளில் மனிதனையும் மிருகம் பறவை முதலிய மற்ற பிராணிகளையும் பிரித்துக் காட்டுவதற்கு அறிகுறியாய் உள்ள குணங்கள் இரண்டே இரண்டு குணங்கள் தாம். அவை, பகுத்தறிவு - தன்மானம் என்பனவாகிய இரண்டுமேயாம். அதாவது, ‘அறிவும் மானமுமே மக்கள் தன்மை’ என்பதற்கு ஒப்ப அவை இரண்டும் இல்லாதார் மக்களல்லாதாரேயாவர். இன்றைய மனித வாழ்வில் அவ்விரண்டிற்கும் இடமில்லாமலே போய்விட்டது. மனிதன் பிறக்கும்போது அப் பிறப்பு இயற்கை அமைப்பில் அறிவு பெறும் சக்தி தான் அமையப் பெற்று இருக்கிறான். அனால், அறிவு பெற்று இருக்கவில்லை என்றாலும் வளர்ச்சியில் அறிவு பெற வேண்டியவனாகிறான்.

அப்படிப் பெறவேண்டிய அறிவில் தலையாயதும் வாழ்க்கைக்குப் பயன்படத்தக்கதும் ஆனது இயற்கையின் இயல்பை, தன்மையை உணர்வதேயாகும். ஆனால், மனிதப் பிறவியில் மனிதன் இயற்கையை உணர்ந்து கொள்ள முடியாதபடி மதத்தையும் கடவுளையும் கொண்டு தடுக்கப் பட்டுவிட்டான். கடவுளும் மதமும் தான் இயற்கையை அறியும் தன்மையைக் கெடுத்துவிட்டன. அவை மக்கள் அறிவு வளர்ச்சிக்கே முட்டுக்கட்டையாகிவிட்டன.

கடவுளும் மதமும் இயற்கையை அறியுந் தன்மையைக் கெடுத்து விட்டன என்பது மாத்திரமே அல்லாமல், நமது கல்வி என்பதும் ‘புண்ணில், புழுவும் ஏற்பட்டுவிட்டது’ என்று சொல்வதற்கு ஒப்ப, கடவுளையும் மதத்தையும் தாண்டித் தானாக வளர வாய்ப்பிருக்கும் துறையையும் அடைத்துவிட்டது. மதத்தால் ஏற்படும் முட்டாள் தனத்தைவிட, ‘கல்வி’யால் ஏற்படும் முட்டாள்தனம் மிகவும் கேடானது என்று சொல்லும்படியாகக் கல்வி ஏற்பட்டுவிட்டது. எப்படி எனில், மதத்தால் அறிவு வளர்ச்சி குன்றுகிறது என்று ஏற்பட்டு விட்டால், ‘கல்வியால்’ அயோக்கியத் தன்மை - அதாவது மனிதனை மனிதன் மோசடி செய்து வாழும் தன்மை ஏற்பட்டு, பொய் பித்தலாட்டங்களாலேயே மனிதன் வாழ்வு நடத்தும்படியான - நடத்தித் தீரவேண்டியதான தன்மை ஏற்பட்டு வருகிறது.

இதற்குக் காரணம், கல்வியை மதக் கல்வியாக - மதத்தை அனுசரித்த கல்வியாக ஆக்கியதும், ஆசிரியர்கள் உண்மையான ஆசிரியர்களாய் இல்லாமல் வயிறு வளர்க்க ஆசிரியர் வேலை கற்ற ஆசிரியர்களைக் கொண்டும் - அந்த ஆசிரியர்களும் அடிமைக் கல்வி கற்ற அடிமை ஆசிரியர்களாக இருந்ததும், இருப்பதுமேயாகும். ஆசிரியன் என்பவன் இயற்கை அறிவு பெற்றவனாக - அதில் மேம்பட்டவனாக - உலக அனுபவம் பெற்றவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்டவன்தான் ஆசிரியர் தன்மைக்கு அருகதை உடையவனாவான். நம் ஆசிரியர்களுக்கு - அதாவது, ‘வைஸ்சான்ஸ்லர்’, ‘டைரக்டர் ஆஃப் எஜுகேஷன்’, ‘பிரின்ஸ்பால்கள்’ முதற்கொண்டு ‘செகண்டரி கிரேட் டீச்சர்’, ‘எஜுகேஷன் மினிஸ்டர்’ என்பவர்கள் வரை யாருக்காவது அத்தன்மை உண்டா? சிலருக்குக் கொஞ்சம் உண்டு என்றாலும் - அதை அவர்கள் கல்வித் துறையில் பயன்படுத்த உரிமை உண்டு என்றாவது, யாராலாவது சொல்ல முடியுமா?

ஆகவேதான், மக்கள் அறிவு வளர்ச்சியைக் கடவுள், மதம் ஆகியவை கெடுத்ததானது ஒரு பகுதி என்றும், ‘கல்வி’ கெடுத்தது மற்ற மீதிப் பகுதி என்றும் சொல்ல வேண்டியதாயிற்று. அறிவின் தன்மை இத்தகையது என்றால், இனி மானத்தின் தன்மை எத்தகையது என்று பார்த்தால், அடியோடு மானம் கெட்டவனே சிறந்த மனிதனாகப் பாவிக்கும்படியான அளவுக்கு மானமற்ற தன்மை மதிப்புப் பெற்று விட்டது.

மனிதனுக்கு மானம் எவ்வளவு முக்கியமானது என்பதை மக்கள் உணர்ந்து அதற்கு மதிப்புக் கொடுத்தால், மனித வாழ்வில் கடுகளவுகூட குறையும் ஒழுக்கக்கேடும், அசவுகரியமும் ஏற்பட இடமிருக்காது. மனிதன் மானத்தில் இலட்சியமற்றவனாக ஆகிவிட்டதினாலேயே பகுத்தறிவுள்ள மனித ஜீவனின் கூட்டு வாழ்வு - காட்டில் கெட்ட மிருகங்களிடையில் வாழும் தற்காப்பற்ற சாது ஜீவன்கள் தன்மையாக மனிதன் நிலைமை ஆகிவிட்டது. நம் நாட்டில் மக்களிடத்தில் மான உணர்ச்சியைத் தூண்ட சாதனமே இல்லாமல் போய்விட்டது. இதற்கு நம் சமுதாய வாழ்வு அமைப்பும், பொருளாதார அமைப்பும் பெரும் காரணமாக இருந்தாலும், இன்றைய அரசியலமைப்பு எல்லாவற்றையும் விட மேம்பட்ட காரணமாக இருந்துவருகிறது.

சமுதாயத் துறையில், மேல்பிறப்பு - கீழ்ப்பிறப்பு என மக்களைப் பிரித்து அமைத்த பிறகு, கீழ்ப்பிறப்பில் பட்ட மக்களுக்கு மான உணர்ச்சி என்பது செயற்கையால் போலியாகத் தோன்றி மறையுமே அல்லாது இயற்கையான உணர்ச்சி அச்சமுதாயதுக்கு எப்படி இருக்க முடியும்? மனித சமுதாயத்தில் அதோடு கூடவே ‘குச்சிக்கார தாசி பிழைப்பு’ - அதற்கொரு சமுதாயம்; துரோக எண்ணமே கை முதலாக உடைய வியாபாரத்துறை - அதற்கொடு கூட்டம்; பொய்யும் பித்தலாட்டமும் மனதறிந்து பயன்படுத்தித் தொழில் செய்து வாழும் வக்கீல் துறை - அதற்குப் பெரும் ஸ்தாபனம் ஆகிய இவைகளுக்கு சமுதாயத்தில் மரியாதையும் உயர் வாழ்வும் ஆகிய தன்மைகளும் இருந்து வருமானால், மக்களுக்கு மானத்தைப் பற்றிய, ஒழுக்கத்தைப் பற்றிய கவலை எதற்காக வரவேண்டும்?

ஒழுக்ககேடு என்பது மானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஒழுக்கமுள்ளவன் மானியாய் இருப்பான்; மானி, ஒழுக்கமுள்ளவனாக இருப்பான்.அறிவு என்பது இயற்கையைப் பற்றிய தெளிவை அடிப்படையாகக் கொண்டது. அறிவுள்ளவன், இயற்கைவாதியாய் இருப்பான்; இயற்கை வாதி, அறிவாளியாய் இருப்பான். ஒழுக்கம் என்றால் மானம் என்றும் - ஒழுக்கமுடையவன் என்றால் மானி என்றும் கொள்ளலாம். அதுபோல், அறிவு என்றால் இயற்கை என்றும் அறிவாளி என்றால் இயற்கையை அறிந்தவன் என்றும் கொள்ளலாம். ஆகவே, மனித சமுதாயத்துக்கு அல்லது தனி மனிதனுக்கு கூட்டு வாழ்க்கைக்கும் மனிதன் ஓர் உயர்ந்த பிறவி என்பதற்கும் அத்தியாவசியமானவை அறிவும் மானமும் என்பதும், இவை இரண்டும் இன்று மக்களிடையில் இல்லாமல் போய்விட்டன என்பதும், அதற்கு முக்கியக் காரணம் கடவுளும் மதமும் கல்வியும் சமுதாய - பொருளாதார அரசியல் அமைப்பும் ஆகும் என்பதும் எனது அபிப்பிராயமாகும்.
- ‘விடுதலை’ - தலையங்கம், 2.1.1950

பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அதுபோல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக் கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது. ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர, வேறு யாரும் பதவிக்கு வரடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் ‘ஜனநாயக ஆட்சி தர்மம்' இருந்து வருகிறது.

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், ‘ஜனநாயகம்' ஒழிக்கப்பட்டு, "அரச நாயகம்' ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும். இந்தியாவானது ‘இந்தியர்கள்' ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநு தர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனிததர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும்.

அதுவும் ரஷ்ய ஆட்சி அதாவது ரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும்; அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையரின் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்றுபோலத்தான் இருக்கும், இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது குறைந்தது

1. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத்தன்மைகள் இல்லையென்று உறுதிமொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஒரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய - பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும். பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும்.

முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக்கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையென்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில், இந்த நிலையில் எப்படி இருந்தாலும் ‘நம் நாட்டை நாம்தான் ஆள வேண்டும்' என்பது, அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

"Patriotism is the last refuge of a scoundrel'' -
"தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம்'' - ஜான்சன்
- கீழ்வெண்மணியில் 42 தலித் மக்கள் கொல்லப்பட்டதையொட்டி, பெரியார் விடுத்த அறிக்கை, ‘விடுதலை' 28.12.1968

நாம் மாறுதலுக்குக் கட்டுப்பட்டவர்களும், ஆசைப்பட்டவர்களும் ஆவோம். ஆதலால், அந்த மாறுதலேதான் - அதுவும் அறிவு, ஆராய்ச்சி ஆகிய காரணங்களைக் கொண்டு இந்தத் திருமண முறையில் காணப்படுகிற மாறுதல்கள் ஏற்பட்டவைகளாகும்.


பகுத்தறிவு என்று சொல்வதும் மாறி மாறி வருவதாகும். இன்று நாம் எவை எவைகளை அறிவுக்குப் பொருத்தமானவை என்று எண்ணுகிறோமோ அவை நாளைக்கு மூடப் பழக்க வழக்கங்கள் எனத் தள்ளப்படலாம். நாம்கூட பல பொருள்களை, ஏன் - மகான்கள் என்று புகழப்படுபவர்கள் சொன்னவற்றையே ஒதுக்கிவிடுவோம். அது போலத்தான், நமது பின்னோர்கள் என்னைக் குறித்துக்கூட, ஒரு காலத்தில், ‘இராமசாமி என்ற மூடக் கொள்கைக்காரன் இருந்தான்’ என்று கூறலாம். அது இயற்கை; மாற்றத்தின் அறிகுறி; காலத்தின் சின்னம். பழைய காலத்தைச் சேர்ந்தவை என்பதற்காக நாம் குறை கூறவில்லை. அவர்கள் காலத்திற்கு அவர்கள் செய்தது சரி என்பதானாலும், அப்பொழுது அவ்வளவுதான் முடிந்தது என்பதானாலும் இன்று மாறித்தான் ஆகவேண்டும். சிக்கிமுக்கிக் கல்லால் முதலில் நெருப்பை உண்டாக்கியவன் அந்தக் காலத்து ‘எடிசன்’. அப்புறம் படிப்படியாக முன்னேற்றமாகி இப்பொழுது மின்சாரத்தில் நெருப்பைக் காண்கிறோம்! எனவே, மாற்றம் இயற்கையானது. அதைத் தடுக்க யாராலும் முடியாது. எத்தகைய வைதிகமும் மாற்றத்திற்குள்ளாகித்தான் தீரவேண்டும். இப்பொழுது நாம் எவ்வளவு மாறி இருக்கிறோம்? 50 வருடங்களுக்கு முன்பு இருந்ததைவிட கடவுளைப்பற்றிய எண்ணம் - வீடு, வாசல், உடை, உணவு, தெருக்கள், வண்டி, குடுமி வைத்தல் ஆகிய எண்ணங்களில், பொருள்களில் பெரிய மாற்றத்தைக் காண்கிறோம். பெண்களின் புடவை, இரவிக்கை, நகைகள், புருஷன் - பெண்சாதி முறை ஆகியவற்றில் ஏற்பட்ட மாறுதல்களைப் பாருங்கள்! அடுத்தபடியாக பொருள் செலவும் அதிகமில்லை; நேரமும் பாழாவதில்லை!

மனிதனுடைய அறிவுப் பெருக்கமும் அனுபவ முயற்சியும் இந்த அதிசயங்களுக்குக் காரணம் என்றும், அதனாலேயே அக்கால மனிதர்களைவிட இக்கால மனிதர்கள் அறிவு, அனுபவம் பெற்றவர்கள் என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் உள்ள இந்தக் காலத்தில் நாம் மற்ற காரியங்களில் ஏற்பட்ட அறிவுத் திறனையும், அதிசய சக்திகளையும் அனுபவித்துக் கொண்டு, இந்தக் கேடுகெட்ட - மானம் கெட்ட இழிநிலைக்குக் காரணமான அர்த்தமற்ற, சூழ்ச்சிகரமான, காட்டுமிராண்டிக் காலத்தில் ஏற்பட்ட மதம், கடவுள்கள், சாத்திரம், சடங்கு, சாதி, மதக்குறி, உயர்வு - தாழ்வு பேதம், அறிவுக்குப் பொருந்தாத அர்த்தமற்ற கொள்கைகள் ஆகியவற்றைக் கடைப்பிடித்துக் கொண்டு ஈன வாழ்வு வாழ்வது, எப்படி அறிவுடையவர் ஒப்புக் கொள்ளக்கூடிய காரியமாகும்?

அறிவுதான் கடவுள் என்பான் பண்டிதன். ஆனால், அவன் கற்பிக்கிற - வணங்குகிற கடவுள், உலகில் உள்ள எல்லா அயோக்கியத்தனங்களும் கொண்டதாக இருக்கும். அழகுதான் கடவுள் என்பான். ஆனால், அவலட்சணமான தோற்றங்கள் எல்லாம் அவன் கற்பித்துள்ள கடவுள்களில் பிரதிபலிக்கும். உயர்ந்த மக்கட்கு வழிகாட்டும் நல்ல நடத்தைகளும் உபதேசங்களும் நிறைந்தனவே புராணங்கள், சாத்திரங்கள் என்று கூறுவான். ஆனால், அவைகளில் கூடா ஒழுக்கங்களும் இழி தன்மைகளும் ஏராளமாக இருக்கும். அவைகளுக்குக் காரணம், அவைகள் ஏற்பட்ட காலத்தைச் சிந்திக்காமல் - ஏற்படுத்தியவர்களின் தன்மைகளை அறியாமல், தங்களின் பெருமைகளைக் காட்டிக் கொள்ளவும், தங்கள் பிழைப்புக்கு வழி தேடவும் அவைகளைப் பயன்படுத்த வேண்டியதாகி விட்டதால் அவர்களின் நிலைமை பரிதவிக்கத் தக்கதாகி விட்டது.

பகுத்தறிவுக்குத் தடைகள்

பகுத்தறிவு என்பது மனிதனுக்கு ஜீவநாடி உயிர்நாடி ஆகும். ஜீவராசிகளில் மனிதனுக்குத்தான் பகுத்தறிவு உண்டு. இதில் மனிதன் எவ்வளவுக் கெவ்வளவு தாழ்ந்த நிலையில் இருக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு காட்டுமிராண்டி என்பது பொருள்.

பகுத்தறிவு பெறும்படியான சாதனம் நமக்கு நீண்டநாட்களாகவே தடைப் படுத்தப்பட்டு வந்துள்ளது. நம்மை அடிமைப்படுத்தி ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்கள் நாம் பகுத்தறிவு அடைய முடியாமல் தடை செய்துகொண்டு வந்தார்கள். மக்களிடையே பகுத்தறிவைத் தடைப்படுத்த கடவுள், மதம், சாஸ்திரம் முதலியவைகளைப் புகுத்தி, அவைகளை மக்கள் நம்பும்படி செய்து விட்டார்கள். கடவுள் என்றால் ஒத்துக் கொள்ளவேண்டும். எங்கே? ஏன்? எப்படி? என்று கேட்கக்கூடாது என்று கூறிவிட்டார்கள். இதைப்போலவே மதத்திற்கும் - என்ன? எப்படி? என்று சிந்திக்கக் கூடாது என்று கூறி விட்டார்கள். இதைப் போலத்தான் சாஸ்திரமும்.

இதில் நாம் பகுத்தறிவு என்றால் என்ன என்பதற்கு விளக்கம் காண்கிறோம். பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது; மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது என்பது பொருள். நமது இழிநிலை, நமது முட்டாள்தனம் மாறவேண்டுமானால் நாம் ஒன்றும் பெரிய கஷ்டப்பட்டு முயற்சி செய்யவேண்டியதில்லை. பகுத்தறிவு கொண்டு தாராளமாகச் சிந்தித்தால் போதும்.

நமது கொள்கை பகுத்தறிவு; பகுத்தறிவு என்றால் நாத்திகம் என்பது பொருள். அறிவுகொண்டு சிந்திப்பதுதான் நாத்திகம் ஆகும். கடவுள் மனதுக்கும், வாக்குக்கும் எட்டாதது என்று கூறப்பட்டாலும் அதுதான் உலகத்தை உண்டாக்கி நம்மை எல்லாம் நடத்துகின்றது; எல்லாவிதமான சர்வசக்திகளும் உடையது என்று கூறப்படுகிறது.

அப்படிப்பட்ட கடவுள் நம்மைத் தவிர்த்து மற்ற உலகுக்கு ஒன்றுதான். ஆனால் நமக்குத்தான் ஆயிரக்கணக்கில் கடவுள்கள்!

நம்மைத் தவிர்த்த மற்ற உலகிற்கு - கடவுளுக்கு உருவம் இல்லை; நமது கடவுள்களுக்கோ பல்லாயிரக்கணக்கான உருவங்கள். மற்ற நாட்டுக் கடவுள்களுக்கு ஒன்றும் வேண்டியதில்லை; நமது நாட்டுக் கடவுள்களுக்கோ மனிதனுக்கு வேண்டியது எல்லாமுமே வேண்டும். மற்ற நாட்டுக்காரர்கள் கடவுள் - யோக்கியம், நாணயம், ஒழுக்கம் உடையது என்று உண்டாக்கி இருக்கிறார்கள். நமது நாட்டுக் கடவுள்களுக்கோ இந்த ஒழுக்கம், நாணயம் எதுவும் கிடையாது. மனிதனில் கீழ்த்தரமானவனுக்கு என்னென்ன குணங்கள் இருக்குமோ அவைகள் அத்தனையும் கடவுளுக்கு ஏற்றிவிட்டிருக்கிறார்கள். இப்படி ஏராளமான பேதங்களையும் நடப்புக்கு ஒவ்வாத காரியங்களையும், காரியத்திற்குக் கேடான குணங்களையும் கடவுளுக்குக் கற்பித்திருக்கிறார்கள்.

இவைகளை எல்லாம் நம்புவதுதான் மூடநம்பிக்கை, நல்லவண்ணம் சிந்தித்து ஆராய்ந்து, ஏற்கவேண்டியதை ஏற்றுக்கொண்டு, மற்றதைத் தள்ளிவிடுவதுதான் பகுத்தறிவு. நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்த்தால், பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுள் இருக்கிறதா என்று சிந்தித்துப்பார்த்தால், இல்லவே இல்லை; உண்மையில் ஒரு கடவுள் இருக்குமானால் நமக்குத் தெரியாமல் இருக்கவேண்டிய அவசியம் என்ன? அந்தக் கடவுள் தாம் இருப்பதாக நமக்காவது ஏன் தெரியப்படுத்தக்கூடாது?

ஆகவே, மக்கள் இவற்றை எல்லாம் அறிவுகொண்டு சிந்தித்தல் வேண்டும். அறிவு கொண்டு சிந்திப்பதுதான் பகுத்தறிவு. பகுத்தறிவுக்குத் தடையாக இருப்பதும், சிந்திக்க வொட்டாத நிலையை ஏற்படுத்தி வைப்பதும் கடவுள் பற்றிய மூடநம்பிக்கைதான் என்பதையும் இவற்றிற்கெல்லாம் முன்னோடிகளான பார்ப்பனர்களின் சதியையும் மக்கள் உணரவேண்டும்; சிந்திக்க வேண்டும்.

சிந்தனைதான் அறிவை வளர்க்கும்; அறிவுதான் மனித வாழ்வை உயர்த்தும்.
- ‘விடுதலை’ தலையங்கம் 20-6-1973

மற்ற கட்டுரைகள் …

Load More