சமூகவியலாளர்கள்

இந்தியாவின் சிறந்த அறிஞர்களில் முன்னணியிலுள்ள அறிஞரும்,ஏராளமான விஷயங்களைக் கற்றுத் தேர்ந்த கலாநிதியுமான அம்பேத்கர் அவர்கள் முடிவெய்திவிட்டார் என்ற செய்தி கேட்டவுடன் திடுக்கிட்டுப் பதறிவிட்டேன்!!

உலகத்தரால் மதிக்கப்படும் மாபெரும் தலைவரான காந்தியாரை,வெகு சாதாரணமாக மதித்ததோடு,அவருடைய பல கருத்துக்களை சின்னாபின்னமாகும்படி மக்களிடம் விளக்கம் மேதாவியாக இருந்தார்.இந்துமதம் என்பதான ஆரிய-ஆத்திக மதக்கோட்பாடுகளை வெகு அலட்சியமாகவும்,ஆபாசமாகவும்.அர்த்தமற்றதாகவும் மக்கள் கருதும்படியாக பேசியும் எழுதியும் வந்தார்.உதாராணம் சொல்ல வேண்டும்மானால்,காந்தியாரையே ஒரு பத்தாம் பசிலி பிற்போக்கு வாதி என்றும் அவரால் பிரமாதமாகப் படிக்கப்பட்டு வந்த கீதையே முட்டாளின் உளறல்கள் என்றும் சொன்னதோடு,காந்தியாரின் கடவுளான இராமனை மகாக் கொடியவன் என்றும் இராமணக் காவியம் எரிக்கத் தகுந்தது என்றும் சொல்லி பல்லாயிரக்கணக்கான மக்களிடையில் இராமாயணத்தை சுட்டு எரித்தும்ச் சாம்பலாக்கினார்!

இந்துமதம் உள்ளவரையில் தீண்டாமையும் சாதிப் பிரிவும் அவற்றால் ஏற்பட்ட கொடுமையும் ஒழியவே ஒழியாது என்றும் ஓங்கி அறைந்தார்! மேற்கண்ட இந்தக் கருத்துக்கள் தழுவும்படியாக ஏராளமான புத்தகங்களை எழுதி வெளியிட்டார்,இப்படியாக அநேக அரிய காரியங்களை செய்த ஒரு மாபெரும் பகுத்தறிவாதியும்,ஆராய்ச்சி நிருபுணரும்,சீர்திருத்தப் புரட்சி வீரருமான டாக்டர் அம்பேதகர் முடிவு எய்தியது இந்தியாவுக்கும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் ,பகுத்தறிவு வளச்சிக்கும் எளிதில் பரிகரிக்க முடியாத பெரியதொரு குறைவேயாகும்.

அம்பேத்கரின் மறைவு எனும் செய்தி திடிரென்று மொட்டையாக வெளியானதிலிருந்து,அவரது மரணத்துக்குப் பின்னர் சில இரகசியங்கள் இருக்கலாம்மென்று கருதுகிறேன்.அதாவது காந்தியார் மரணத்திற்க்கு உண்டான காரணங்களும் அதற்க்கு ஆதாரமான பல சங்கதிகளும் ,டாக்டர் அம்பேதகர் மரணத்திற்க்கும் இருக்கக் கூடும் என்பதேஆகும்.

பெரியார் இப்படி குறிப்பிட்டது விடுதலை 8-12-1956 யில்

 

http://ambedkarr.wordpress.com/2008/10/02/அம்பேத்கர்-பார்வையில்-கா/

Ambedkar இந்தியாவில் உள்ள பட்டியல் சாதியினர் போல் கடும் வேதனைக்கு ஆட்படும் மக்கள் உலகில் வேறு எங்கேனும் உள்ளனரா என்று நான் ஆச்சரியத்துடன் நோக்கினேன். வேறு எவரையும் நான் காண முடியவில்லை. இருந்தும் கூட பட்டியல் சாதியினருக்கு உதவிகள் எதுவும் ஏன் வழங்கப்படவில்லை? முஸ்லிம்களைப் பாதுகாப்பது குறித்து அரசு காட்டிவரும் அக்கறையை இதனுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். பிரதமரின் முழு நேரமும் கவனமும் முஸ்லிம்களின் பாதுகாப்புக்காகவே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எங்கெல்லாம் எவ்வெப்போதெல்லாம் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ, அப்போதெல்லாம் அதனை அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற விருப்பத்தில் நான் யாருக்கும், பிரதமருக்கும் கூடப் பின்தங்கியவனில்லை.

 

ஆனால் நான் அறிந்து கொள்ள விரும்புவது என்னவெனில், பாதுகாப்பு தேவைப்படும் ஒரே பிரிவு மக்கள் முஸ்லிம்கள் மட்டும் தானா? பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் இந்தியக் கிறித்துவர்கள் ஆகியோருக்கு பாதுகாப்பு தேவை இல்லையா? இந்த சமூகங்களைக் காக்க பிரதமர் எத்தகைய அக்கறையைக் காட்டினார்? இதுவரை நான் எதையும் காணவில்லை. உண்மையில் முஸ்லிம்களைவிடக் கூடுதல் அக்கறையும் கவனமும் தேவைப்படும் மக்கள் இவர்களேயாவர்.

 

அரசாங்கத்தினால் பட்டியல் சாதியினர் புறக்கணிக்கப்படுவது குறித்து எனது கடுஞ்சினத்தை, உள்ளக் கொதிப்பை என் மனதிற்குள்ளேயே அடக்கி வைக்க என்னால் முடியவில்லை. பட்டியல் சாதியினரின் பொதுக்கூட்டம் ஒன்றில் எனது உணர்வுகளை வெளிப்படையாகக் கூறினேன். அவர்களுக்கு 12.5 சதவிகிதப் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த சட்டத்தினால், பட்டியல் சாதியினர் பலனடையவில்லை என்ற எனது குற்றச்சாட்டு உண்மையா என மாண்புமிகு உள்துறை அமைச்சர் கேட்டார். அக்கேள்விக்கான பதிலில் மாண்புமிகு உள்துறை அமைச்சர் எனது குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்றும் கூறினார். அதைத் தொடர்ந்து, அரசுப் பணிகளில் அண்மையில் பட்டியல் சாதியினரின் பிரதிநிதிகள் எத்தனை பேர் தேர்வு செய்யப்பட்டனர் என்று, இந்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பினார். அதற்கு பல துறைகள் ‘இல்லை’ என்ற பதிலை அனுப்பியது என்று என்னிடம் கூறப்பட்டது.

 

எனக்குக் கிடைத்த தகவல் சரியாக இருக்குமேயானால், மாண்புமிகு உள்துறை அமைச்சர் கொடுத்த பதில் குறித்து நான் எந்தவிதக் கருத்தையும் கூறத் தேவையில்லை. எந்த மக்களிடையே நான் பிறந்தேனோ அந்த பட்டியல் சாதியினரின் மேம்பட்ட நிலைக்காக, சிறுவயது முதலே நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். என் மனதில் வேறு எந்த உணர்வுகளும் இல்லை என்பதல்ல; எனது சொந்த நலன்களை மட்டும் நான் கருத்தில் கொண்டிருந்திருப்பேனேயானால், நான் விரும்பியதைப் பெற்றிருப்பேன்; காங்கிரசில் நான் சேர்ந்திருந்தால், அந்த அமைப்பின் மிக உயர்ந்த பதவியையும் பெற்றிருப்பேன். ஆனால் நான் கூறியதுபோல, பட்டியல் சாதியினர் மேம்பாட்டிற்காக நான் என்னை அர்ப்பணித்துக் கொண்டேன். எந்த நோக்கத்தை அடைய வேண்டுமென்று நீங்கள் விரும்புகிறீர்களோ, அதில் குறுகிய மனச் சிந்தனையுடன் இருப்பது நல்லது என்ற முதுமொழியை நான் பின்பற்றியிருக்கிறேன். ஆகவே, பட்டியல் சாதி மக்களின் லட்சியம் எவ்வளவு கீழ் நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது என்பதைக் காணும்போது, என் மனம் எவ்வளவு வேதனைப்பட்டிருக்கும் என்பதை நீங்கள் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

 

எனது உணர்வைத் தூண்டிய மூன்றாவது விஷயம் எனக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது மட்டுமல்ல; உண்மையில் பெரும் துன்பத்தையும் கவலையையும் கூட அது ஏற்படுத்தியது. நமது நாட்டின் வெளியுறவுக் கொள்கையையும் அத்துடன் இந்தியாவின் பால் பிற நாடுகள் கொண்டிருக்கும் அணுகுமுறையையும் தொடர்ந்து கவனித்து வருபவர்கள், நம்மால் அவர்கள் கொண்டுள்ள போக்கில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை உணராதிருக்க முடியாது. 1947 ஆகஸ்டு 15 அன்று ஒரு சுதந்திர நாடாக நாம் வாழ்வைத் தொடங்கிய போது, எந்நாடும் நமக்குத் தீங்கு செய்ய வேண்டும் என்று எண்ணவில்லை. உலகின் ஒவ்வொரு நாடும் நமது நண்பனாகத் தான் இருந்தது. நான்காண்டுகளுக்குப் பின்னர் இன்றோ நமது நண்பர்கள் அனைவரும் நம்மை கைவிட்டுவிட்டனர். நமக்கென நண்பர்கள் யாரும் இல்லை. நாமும் நம்மைத் தனிமைப்படுத்திக் கொண்டோம்; தன்னந்தனியாகப் போய்க் கொண்டிருக்கிறோம். அய்க்கிய நாடுகள் அவையில் நமது தீர்மானங்களை ஆதரிக்க எவரும் இல்லை.

 

நமது வெளியுறவுத் துறை கொள்கையை நினைக்கும் போது பிஸ்மார்க்கும் பெர்னார்ட் ஷாவும் கூறியதை நான் நினைத்துப் பார்க்கிறேன். “அரசியல் என்பது லட்சியத்தை அடைவதற்கான பந்தய ஆட்டமல்ல; மாறாக அரசியல் என்பது சாத்தியக் கூறுகளை எய்தும் பந்தய ஆட்டமாகும்” என்று பிஸ்மார்க் கூறியுள்ளார். “நல்ல குறிக்கோள்கள் சிறந்தவைதான். ஆனால் அவை மிகவும் நல்லவையாக இருப்பது, பல நேரங்களில் ஆபத்தானவையாக இருக்கும் என்பதை எவரும் மறந்துவிடக்கூடாது’ என்று அண்மையில் பெர்னார்ட் ஷா கூறினார். உலகின் இரு பெரும் மேதைகள் கூறிய இந்த விவேகமிக்க கருத்துகளுக்கு முற்றிலும் எதிரானவையாக நமதுவெளியுறவுக் கொள்கை உள்ளது.

- தொடரும்

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 14(2), பக்கம்: 1320

http://ambedkarr.wordpress.com/category/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88/

பொது உண்மைகளை அலசும்போது, பொருளாதார வல்லுநர்கள் ஓர் எச்சரிக்கையை மேற்கொள்ளுவர். நாம் ஒரு பொருளாதார மனிதனை அடிப்படை உண்மையாக வைத்துக் கொண்டால், பிற புறச் சூழல்களும் சரிசமமாக அமைந்திருக்கின்றன என்னும் கருத்து நிலையிலேயே - அப்படி ஒரு பொருளாதார மனிதனைக் கற்பனை செய்து கொள்கிறோம் என்றுதான் - அவர்கள் எச்சரிக்கை வரையறையுடன் தமது ஆய்வுகளையும், முடிவுகளையும் வெளியிடுவர். ஆனால், தொழிலாளர் தலைவர்கள், பொருளாதார வல்லுநர்கள் பயன்படுத்தும் பிற புறச்சூழல்களின் சாதக நிலையை அறவே மறந்து விடுகின்றனர். அய்ரோப்பாவில்கூட, மார்க்ஸ் சொன்னது சரியாக இருந்தது என்று சொல்வதற்கில்லை.

 

“ஜெர்மனியில் ஓர் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதன் இருக்கிறான். அதே போல் பிரான்சில் சுரண்டப்பட்டு, அழிக்கப்பட்ட ஒரு கைவினைஞன் இருக்கிறான். இரு நாட்டு ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மனிதர்களும் - ஓர் இனம், ஒரு கொள்கை, ஒரு கடந்த காலம், ஒரு நிகழ்காலம், ஓர் எதிர்காலம் என்பதற்குச் சொந்தக்காரர்கள்தான்; அவர்கள் ஒன்று சேர வேண்டும்” என்று மார்க்ஸ் காலத்தில் அறைகூவல் விடப்பட்டது. ஆனால், உண்மையில் ஜெர்மனியில் உள்ள ஏழை - ஒடுக்கப்பட்ட மனிதனும், பிரான்சில் சுரண்டப்பட்டு வாழ்வே சிதைந்து போன கைவினைஞனும் இணைந்து நிற்கிறார்களா? நூறு ஆண்டுகள் கடந்த பிறகும் அவர்கள் ஒன்றுபடக் கற்றுக் கொள்ளவில்லை. கடந்த உலகப் போரில் கூட, அவர்கள் எதிரெதிர் அணியில் நின்று மூர்க்கத்துடன் போரிட்டனர். இந்தியாவுக்கும் அது பொருந்தும். இந்தியாவிலும் அத்தகைய ஒற்றுமை ஏற்படவேயில்லை.

 

பணக்கார வர்க்கம், பாட்டாளி வர்க்கம் என்ற தெளிவான பிரிவினை - இந்தியாவில் ஏற்படவே இல்லை. எல்லா தொழிலாளர்களும் ஒரே வர்க்கம் என்பது ஒரு லட்சியம். அது அடையப்பட வேண்டிய லட்சியமே ஒழிய, அதுவே இன்றைய உண்மையான சூழல் என்று முடிவு செய்து கொள்வது தவறு. இந்நிலையில் தொழிலாளர் அணிகளை எப்படி திரட்ட முடியும்? தொழிலாளர்களிடையே எப்படி ஒற்றுமையைக் கொண்டு வர முடியும்? ஒரு பிரிவுத் தொழிலாளர்கள், இன்னொரு பிரிவுத் தொழிலாளர்களை நசுக்குவதைத் தடுப்பதன் மூலம்தான் - அவர்களிடையே ஒற்றுமையை உருவாக்க இயலும். ஒடுக்கப்பட்ட பிரிவுகள் அமைப்பு ரீதியாகத் திரள்வதைத் தடுப்பதன் மூலம் அது முடியாது. தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்யும் பிரிவினரைத் தடுப்பதன் மூலம் அத்தகைய ஒற்றுமையை ஏற்படுத்த முடியாது.

 

இனம், மதம் ஆகிய பின்னணியில் பகைமை கொள்ளுவதற்கான அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து களைவதுதான் ஒற்றுமையைக் கொண்டு வருவதற்கான ஒரே வழி. ஒரு தொழிலாளி மற்ற தொழிலாளர்களுக்குத் தர விரும்பாத உரிமைகளை, அவன் மட்டும் பெற வேண்டும் என்பது தவறான சிந்தனை என்பது, அவனுக்கு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். தொழிலாளர் களிடையே ஒற்றுமையைக் கொண்டு வர சிறந்த வழி - தங்களுக்கிடையே சமூக வேறுபாடுகளைக் கடைப்பிடிக்கும் போக்கு, தொழிலாளர் மத்தியில் ஒற்றுமையைச் சிதைத்து விடும் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பதுதான். வேறு வார்த்தைகளில் சொன்னால், சமத்துவமின்மை என்னும் குணாம்சத்தை அதாவது பார்ப்பனியத்தைத் தொழிலாளர் மத்தியிலிருந்து வேரோடு களைந்தெறிய வேண்டும். இத்தகைய முயற்சியில் இறங்கிய தொழிலாளர் தலைவர்கள் யார்? முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளர் தலைவர்கள் ஆவேசமாகப் பேசுவதை நான் கேட்டிருக்கிறேன். ஆனால், பார்ப்பனியத்திற்கு எதிராக தொழிலாளர்களிடையே எவருமே பேசியதாகத் தெரியவில்லை. இந்த விஷயத்தில் அவர்கள் சாதிக்கும் மவுனம் வெளிப்படையாகத் தெரிகிறது.

 

ஒரு வேளை தொழிலாளர் அமைப்பு மற்றும் ஒற்றுமை ஆகியவற்றுக்கும் - பார்ப்பனியத்துக்கும் தொடர்பே இல்லையென்று அவர்கள் நினைக்கிறார்களா? அல்லது தொழிலாளர்கள் சிதறிக் கிடப்பதற்கு பார்ப்பனியம் பெருமளவு காரணமாக இருக்கிறது என்பது, இன்னும் அவர்களுக்குத் தெரியவே இல்லையா? ஒருவேளை இந்த அப்பட்டமான சந்தர்ப்பவாதத்தால் தொழிலாளர் உணர்வுகளைப் புண்படுத்தி விடக் கூடாது; அப்போதுதான் நாம் தலைமைப் பொறுப்பில் நீடிக்க முடியும் என்று நம்புகிறார்களா? இப்படித் தொழிலாளர் வர்க்கம் சிதறுண்டு கிடப்பதற்கு அடிப்படைக் காரணம் பார்ப்பனியமே என்பதை ஏற்றுக் கொண்டால், அந்தப் பார்ப்பனியப் போக்கு தொழிலாளர்களிடையே நிலவுவதையும் விளக்கியே ஆக வேண்டும். இந்தத் தொற்று நோயை அலட்சியம் செய்வதாலோ, அதைப் பற்றி மவுனம் சாதிப்பதாலோ - அதை ஒழித்துவிட முடியாது. இந்தப் பார்ப்பனியப் போக்கைத் தேடிக் கண்டறிந்து, தோண்டித் துருவி ஆராய்ந்து அடியோடு கில்லி எறிய வேண்டும். அப்போதுதான் தொழிலாளர் ஒற்றுமை சாத்தியப்படும்.

 

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்: 179)

நன்றி:தலித்முரசு

பொதுப் பள்ளிகள், பொதுக் கிணறுகள், பொதுக் கழிப்பிடங்கள், பொது மருந்தகங்கள் ஆகியவை சிவில் உரிமைகள் தொடர்புடையவை. பொதுமக்களுக்காக, பொது மக்கள் நிதியின் மூலம் நிர்வகிக்கப்படும் எல்லாமே ஒவ்வொரு குடிமகனுக்கும் உரியவை. ஆனால், இத்தகைய சிவில் உரிமைகள், லட்சக்கணக்கான மக்களுக்கு மறுக்கப்படுகின்றன. இது, பார்ப்பனியத்தின் விளைவு அல்ல என்று யாராவது சொல்ல முடியுமா? பார்ப்பனியத்தால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அவிழ்த்து விடப்பட்டுள்ள இந்த அடக்குமுறை, இன்றும் உயிரோட்ட முள்ள ஒரு மின்கம்பியாக ஓடிக்கொண்டிருக்கவில்லையா? பொருளாதார வாய்ப்புகளைக் கூட பாதிக்கும் அளவுக்கு, அத்தனை சர்வ வல்லமை கொண்டதாக பார்ப்பனியம் விளங்குகிறது.

 

ஒரு தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்பு வசதிகளை, பிற தொழிலாளியின் வாய்ப்பு வசதிகளோடு ஒப்பிட்டுப் பாருங்கள். பணிப் பாதுகாப்பு, பணி முன்னேற்றம் ஆகியவற்றில் தாழ்த்தப்பட்ட தொழிலாளிக்குள்ள வாய்ப்புகள் என்ன? தீண்டத்தகாதவன் என்பதால், அவனுக்கு எத்தனையோ வேலைவாய்ப்புகள் மூடப்பட்டு விடுகின்றன. இதற்கு பருத்தித் தொழில் மிகச் சிறந்த எடுத்துக்காட்டு. இந்தியாவில் பிற பகுதிகளில் உள்ள நிலவரம் எனக்குத் தெரியாது. ஆனால், பம்பாயிலும் சரி, அகமதாபாத்திலும் சரி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் நூற்புத் துறையில் மட்டுமே பணிபுரிய முடியும். நூற்புத் துறையில் ஊதியம் மிக மிகக் குறைவு. நெசவுத் துறையில் அவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதற்குக் காரணம், அவர்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதுதான். ஒரு சாதி இந்து, முஸ்லிம்களோடு பணிபுரிவதில் எந்தச் சுணக்கமும் காட்டுவதில்லை. இருப்பினும் தீண்டத்தகாதோர் என்றால், அவன் எதிர்ப்புத் தெரிவிக்கிறான்.

 

ரயில்வேயை எடுத்துக் கொள்ளுங்கள். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட மக்களின் நிலை என்ன? தாழ்த்தப்பட்டவன் ஒரு ‘கேங்க் மேனா’கத்தான் பணிபுரிய வேண்டும் என்று விதிக்கப்பட்டுள்ளது. பதவிக் காலம் முழுவதும் எந்தவித உயர்வும் இல்லாமல் ‘கேங்க் மேனா’கவே பணிபுரியும் நிலை உள்ளது. அவனுக்கு வேறு பதவி உயர்வும் தரப்படு வதில்லை. போர்ட்டராகக்கூட அவன் வர முடியாது. போர்ட்டராக வர வேண்டுமானால், ஸ்டேஷன் மாஸ்டரின் வீட்டு வேலைகளையும் அவன் செய்தாக வேண்டும். ஸ்டேஷன் மாஸ்டர் ஒரு சாதி இந்துவாக இருப்பார். ஆகவே, தாழ்த்தப்பட்ட தொழிலாளி போர்ட்டராக அவர் வீட்டுக்குள் நுழைவதை அவர் விரும்பமாட்டார். எனவே, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் போர்ட்டராக நியமிக்கப்படுவதில்லை.

 

ரயில்வே எழுத்தர் பணிக்குத் தேர்வு நடத்துவதில்லை. மெட்ரிக் தேர்ச்சி அடையாதவர்களே பெரும்பாலும் இந்த இடங்களுக்கு அமர்த்தப்படுகிறார்கள். இந்திய கிறித்துவர்கள், ஆங்கிலோ இந்தியர்கள், சாதி இந்துக்கள் ஆகிய சமூகத்தினர் மெட்ரிக் தேறாத பட்சத்திலும் நூற்றுக்கணக்கில் ரயில்வேயில் எழுத்தர்களாக இருக்கிறார்கள். தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் நூற்றுக்கணக்கில் மெட்ரிக் தேறியவர்களாக இருந்தாலும், அவர்களுக்கு எழுத்தர் பணி வாய்ப்பு வேண்டுமென்றே மறுக்கப்படுகிறது. ரயில்வே பணிமனைகளிலும் இதே நிலைதான். தாழ்த்தப்பட்டோர் மெக்கானிக் துறையில் நுழையவே முடியாது. அவன் மேஸ்திரி ஆகவும் முடியாது. பணிமனையில் போர்மென், சார்ஜ்மென் ஆகிய பணிகளில் அமர அவனுக்குத் தகுதியில்லை. அவன் வெறும் கூலிதான். இறுதிவரை அவன் கூலியாகவே இருந்துவிடுகிறான். ரயில்வேயில் தாழ்த்தப்பட்ட தொழிலாளியின் நிலை இதுதான்…

 

எனக்கும் உங்களுக்கும் தீய நோக்கத்தைக் கற்பிப்பவர்களிடம் இரண்டு கேள்விகளைக் கேட்கிறேன். இந்தக் கேள்விகள் நேரடியான கேள்விகள். மேலே சொன்னவையெல்லாம் உண்மையான குறைபாடுகள்தானே? உண்மையான குறைபாடுகள் என்றால், அவற்றை நீக்க முனைவதும் அதற்காகத் திரள்வதும் சரிதானே? இந்தக் கேள்விகளுக்கு நேர்மையான எந்த மனிதனும், எதிர்மறையாக பதிலளிக்க முடியாது. எனவே, நமது முயற்சிகள் நியாயமானவை. நம்மீது குற்றம் சாட்டும் தொழிலாளர் தலைவர்கள், ஏதோ ஒரு வித மாயையில் இருக்கிறார்கள். அவர்கள் கார்ல் மார்க்சைப் படித்தவர்கள்; உடைமை வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என இரண்டு வர்க்கங்கள் மட்டுமே உள்ளன என்பவர்கள். எனவே இந்தியாவிலும் இரண்டே வர்க்கங்கள்தான் உள்ளன; ஆகவே நமது கடமை முதலாளித்துவத்தை ஒழிப்பதே என்று கருதுபவர்கள், இதே விஷயத்தில் இரண்டு தவறுகளைச் செய்கிறார்கள்.

 

மார்க்ஸ் சொன்னதை ஒரு கருத்து நிலையாகக் கொள்ளாமல், மெய்ம்மை என்று நினைப்பது அவர்கள் செய்யும் முதல் தவறு. சமுதாயத்தில் இரண்டு வர்க்கங்களே உள்ளன என்பது கருத்துநிலை. அதை வறட்டுத் தத்துவமாகத் தொழிலாளர் தலைவர்கள் பிடித்துக் கொண்டு விட்டார்கள். இரு வர்க்கங்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் நடத்தினால், வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை. எல்லா வகுப்பிலும் ஒரு பொருளாதார மனிதன், ஒரு பகுத்தறிவுள்ள மனிதன், ஒரு தர்க்க நியாயத்திற்கு உட்பட்ட மனிதன் இருப்பதாக நம்புவது எத்தனை பொய்மையானதோ, அத்தனை பொய்மையானது இவர்கள் சிந்தனையும் செயலும்.

 

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:177)

நன்றி:தலித்முரசு

Ambedkar தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிப்பதற்குச் செய்யப்பட்டிருக்கும் ஏற்பாடுகளால் ஏற்படக்கூடிய விளைவுகள் குறித்து, திரு. காந்தி தெரிவித்துள்ள அச்சம் முற்றிலும் கற்பனையானது என்பது என் கருத்து. முஸ்லிம்களுக்கும், சீக்கியர்களுக்கும் தனி வாக்காளர் தொகுதிகள் அளிப்பதால், நாடு பிளவுபடப் போவதில்லை என்ற நிலையில் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களுக்குத் தனிவாக்காளர் தொகுதிகள் வழங்குவதால், இந்து சமுதாயம் பிளவுபட்டு விடும் என்று கூற முடியாது…

 

பெரும்பான்மையினரின் கொடுங்கோன்மையிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு, சுயாட்சி அரசியலமைப்பின்படி சிறப்பு அரசியல் உரிமைகள் பெறுவதற்குத் தகுதிபெற்ற ஒரு வகுப்பினர் எவரேனும் இருப்பார்களேயானால், அவர்கள் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்தான் என்பதைப் பலரும் உணர்ந்திருக்கிறார்கள் என்பது உறுதி. இவர்கள் உயிர் வாழும் போராட்டத்தில், தாக்குப்பிடித்து நிற்க முடியாத நிலையில் உள்ளனர். அவர்கள் பிணைக்கப்பட்டுள்ள மதம் அவர்களுக்கு ஒரு கவுரவமான இடத்தை அளிப்பதற்குப் பதில், அவர்களைத் தொழுநோயாளிகள் போல் நடத்துகிறது; இயல்பான சமூகத் தொடர்புக்கு அருகதையற்றவர்கள் என்று அவர்களுக்கு முத்திரை குத்துகிறது. பொருளாதார ரீதியில் பார்த்தால், தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு, சாதி இந்துக்களை முழுவதுமாக சார்ந்திருக்க வேண்டிய ஒரு வகுப்பாக அது இருந்து வருகிறது. சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவதற்கு, அதற்கு எந்த வழியும் இல்லை.

 

இந்துக்களின் எதிர்ச்சார்பான மனோபாவத்தால், அவர்களுக்குப் பல்வேறு வழிகளும் அடைக்கப்பட்டு விட்டன. அது மட்டுமல்ல, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் வாழ்க்கையில் முன்னேறி விடாதபடி தடுப்பதற்கு, இந்து மதத்தின் எல்லா கதவுகளையும் அவர்களுக்கு மூடிவிடுவதற்குத் திட்டமிட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிராமங்களில் சாதாரண இந்தியக் குடிமக்களாக சிதறுண்டு, ஒரு சிறு அமைப்பாக இருந்துவரும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மேற்கொள்ளும் எந்த முயற்சியையும் ஈவு இரக்கமின்றி ஒடுக்குவதற்கு சாதி இந்துக்கள், அவர்கள் என்னதான் தங்களுக்குள் பிளவுபட்டிருந்தாலும், எப்போதும் சதி செய்தே வருகின்றனர்.

 

இத்தகைய சூழ்நிலையில், திட்டமிட்ட கொடுங்கோன்மையை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் வாழ்க்கைப் போராட்டத்தில், வெற்றிபெறும் பாதையில் எத்தனை எத்தனையோ இடர்ப்பாடுகளை சந்தித்து வரும் ஒரு வகுப்பினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குள்ள ஒரே வழி, அரசியல் அதிகாரத்தில் ஓரளவு பங்குபெறுவதுதான் என்பதை நியாய உள்ளம் கொண்ட எல்லோருமே ஏற்றுக் கொள்வர்…

 

தாழ்த்தப்பட்ட மக்களின் நலன் விரும்பும் ஒருவர், புதிய அரசியலமைப்பில் அவர்களுக்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு அதிகாரத்தைப் பெற்றுத் தருவதற்கு திரு. காந்தி சற்றும் விட்டுக் கொடுக்காமல் போராடுவார் என்றுதான் நினைத்தேன். ஆனால், மகாத்மாவின் சிந்தனைப் போக்குகள் விந்தையாக இருக்கின்றன; புரிந்து கொள்வதற்கு முடியாதவையாக இருக்கின்றன. வகுப்புத் தீர்ப்பின்படி, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் பெறும் அற்பமான அரசியல் அதிகாரத்தை அதிகப்படுத்துவதற்கு அவர் முயற்சி மேற்கொள்ளவில்லை. அது மட்டுமன்றி, அவர்கள் பெறக்கூடிய சிறிதளவு அதிகாரத்தையும் அவர்களிடமிருந்து தட்டிப்பறிப்பதற்கு, தமது உயிரையே பலியிட முன்வந்திருக்கிறார். அரசியல் வாழ்விலிருந்து தாழ்த்தப்பட்ட மக்களை அறவே துடைத்தெறிவதற்கு, மகாத்மா செய்யும் முதல் முயற்சி அல்ல இது…

 

மகத்திலும் நாசிக்கிலும் நடைபெற்ற சச்சரவுகளில், இந்து சீர்திருத்தவாதிகள் எனப்படுவோர் எந்த லட்சணத்தில் நடந்து கொண்டனர் என்ற அனுபவம் எனக்கு உண்டு. தாழ்த்தப்பட்டோரின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட எவரும், தாழ்த்தப்பட்ட மக்களை கைதூக்கிவிடும் பொறுப்பை, மேம்பாடடையச் செய்யும் சீரிய பணியை இத்தகைய நம்பிக்கை துரோகிகளிடம் ஒப்படைக்க ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள் என்பதை இந்த அனுபவத்தைக் கொண்டு துணிந்து கூறுவேன். நெருக்கடி வேளையில், தங்கள் இனத்தவரின் உணர்ச்சிகளைப் புண்படுத்துவதைவிட, தங்கள் கோட்பாடுகளை உதறித் தள்ளிவிடத் தயாராக இருக்கும் சீர்திருத்தவாதிகளால் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு எந்தப் பயனும் இல்லை…

 

இந்து அரவணைப்பிலிருந்து விடுபடுவதற்கு, தாழ்த்தப்பட்ட வகுப்பினர் தீர்மானித்துவிட்டால் இவ்வகையான எத்தகைய நிர்பந்தம் கொண்டு அவர்களை அந்த அரவணைப்பில் நீடிக்கச் செய்ய முடியாது. இந்து மதம் அல்லது அரசியல் அதிகாரம் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும்படி தீண்டத்தகாதவர்களை மகாத்மா கேட்டுக் கொண்டால், அவர்கள் அரசியல் அதிகாரத்தைதான் தேர்ந்தெடுப்பார்கள். இதன் மூலம் மரணத்தின் பிடியிலிருந்து மகாத்மாவை காப்பாற்றுவார்கள்… ஆனால், மகாத்மாவின் உயிரா அல்லது என் மக்களின் உரிமைகளா? இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்கு அவர் என்னைத் தள்ளமாட்டார் என்று நம்புகிறேன். ஏனென்றால் என் மக்களைக் குண்டுகட்டாகக் கட்டி, தலைமுறை காலத்துக்கு சாதி இந்துக்களிடம் ஒப்படைக்க, நான் ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன்.

 

.இத்தகைய சூழ்நிலையில், திட்டமிட்ட கொடுங்கோன்மையை எதிர்த்து நடத்தப்பட்டு வரும் வாழ்க்கைப் போராட்டத்தில், வெற்றிபெறும் பாதையில் எத்தனை எத்தனையோ இடர்ப்பாடுகளை சந்தித்து வரும் ஒரு வகுப்பினர் தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்குள்ள ஒரே வழி, அரசியல் அதிகாரத்தில் ஓரளவு பங்குபெறுவதுதான் என்பதை நியாய உள்ளம் படைத்த எல்லோருமே ஏற்றுக் கொள்வர்.

 

பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு 9, பக்கங்கள் : 311 - 317

நன்றி:தலித்முரசு

மற்ற கட்டுரைகள் …

Load More