சமூகவியலாளர்கள்

அமெரிக்காவில் இரண்டாயிரம் பவுத்த நிறுவனங்கள் இருக்கின்றன. இங்கிலாந்தில் மூன்று லட்ச ரூபாய் செலவில் பவுத்த விகார் ஒன்று கட்டப்பட்டுள்ளது. ஜெர்மனியிலும்கூட மூன்றாயிரத்திலிருந்து நான்காயிரம் பவுத்த நிறுவனங்கள் உள்ளன. புத்தரின் கொள்கைகள் காலத்தால் அழிக்க முடியாதவை. இது கடவுளின் மதம் என்று புத்தர் ஒருபோதும் சொன்னதில்லை. புத்தர் தனது தந்தையை சாதாரண மனிதர் என்றும், தாயை சாதாரண பெண்மணி என்றும் கூறியுள்ளார். நீங்கள் இதை உணர்ந்தால் இம்மதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்; உங்களுடைய பகுத்தறிவுக்கு ஏற்புடையதாக இருந்தால், நீங்கள் இதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்றார். இத்தகைய பெருந்தன்மை எந்த மதத்திலும் இல்லை.

 

பவுத்தத்தின் உண்மையான அடித்தளம் என்ன? புத்தரின் மதத்திற்கும் பிற மதத்திற்கும் எண்ணற்ற வேறுபாடுகள் உள்ளன. பிற மதங்களில் எந்த மாற்றங்களும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில், அம்மதங்கள் எல்லாம் மனிதனுக்கும் கடவுளுக்குமான உறவை சொல்லுகின்றன. இயற்கையை உருவாக்கியது கடவுள்தான் என்று பிற மதங்கள் கூறுகின்றன. வானம், காற்று, நிலவு, சூரியன் என அனைத்தையும் கடவுளே உருவாக்கியதாக அவை கூறுகின்றன. நாம் எதையும் செய்யத் தேவையில்லாத வகையில் கடவுளே எல்லாவற்றையும் செய்துவிட்டார். எனவே, நாம் கடவுளை வணங்க வேண்டும்.

 

கிறித்துவ மதத்தின்படி, இறந்த பிறகு தீர்ப்பு சொல்லும் நாள் வரும். அந்தத் தீர்ப்பைப் பொறுத்து தான் எல்லாம் அமையும். பவுத்த மதத்தில் கடவுளுக்கும், ஆத்மாவுக்கும் இடமில்லை. புத்தர் சொன்னார் : உலகம் முழுவதும் துன்பம் நிறைந்துள்ளது. 90 சதவிகித மக்கள் துன்புறுகின்றனர். ஒடுக்கப்பட்ட ஏழை மக்களை துன்பத்திலிருந்து விடுதலை செய்வதற்கு முக்கிய காரணியாக பவுத்த மதம் இருக்கிறது. புத்தர் சொன்னதைவிட காரல் மார்க்ஸ் வேறு என்ன சொல்லியிருக்கிறார்? புத்தர் எதையும் சுற்றி வளைத்துச் சொல்லவில்லை. சகோதரர்களே! நான் சொல்ல விரும்பியவற்றை எல்லாம் சொல்லிவிட்டேன். அனைத்து வகையிலும் பவுத்த மதமே முழுமையானது. இந்து மதத் தத்துவத்தின்படி நீங்கள் புத்துணர்வை உருவாக்க முடியாது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இன்றுவரை ஒரு பட்டதாரியையோ, படித்தவரையோகூட இந்த சமூகம் உருவாக்கவில்லை.

 

மாரத்தா என்ற ஒரு பெண்மணி எங்களுடைய பள்ளியில் பெருக்குவார். அவர் என்னைத் தொட்டதில்லை. என்னுடைய தாய் மூத்தவர்களை மாமா என்று அழைக்கும்படி சொன்னார். நான் அஞ்சல்காரரை மாமா என்று அழைத்தேன். நான் குழந்தையாக இருந்தபோது பள்ளியில் தாகத்தால் தவித்தபோது என்னுடைய ஆசிரியரிடம் கூறினேன். அந்த ஆசிரியர் கடைநிலை ஊழியரை அழைத்து என்னைப் பாதுகாப்பாக குழாயின் அருகில் அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார். நாங்கள் குழாய் அருகில் சென்றோம். அந்த உதவியாளர் குழாயைத் திறந்தார். நான் தண்ணீர் குடித்தேன்.

 

பள்ளிக்கூடங்களில் பொதுவாக எனக்கு தண்ணீர் கிடைப்பதில்லை. பிற்காலத்தில் மாவட்ட நீதிபதியாக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், நான் அந்தப் பணியில் சேர விரும்பவில்லை. நான் அந்த வேலையில் இருந்தால், என்னுடைய சகோதரர்களை இந்த மாபெரும் பணிக்கு அழைத்துவர முடியாமல் போய்விடும்.

 

ஒரு தனி மனிதனாகப் பார்த்தால், இந்த நாட்டில் என்னால் முடியாதது என்று எதுவும் இல்லை. ஆனால், உங்கள் தலைமேல் உள்ள வைசியர், சத்ரியர் மற்றும் பார்ப்பனரை எப்படி கீழே வீழ்த்துவது என்பதுதான் என் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி. எனவே, இம்மதத்தின் கொள்கைகளை உங்களுக்குச் சொல்லுவது என்னுடைய கடமை. நான் எழுதக் கூடிய புத்தகங்கள் மூலம் உங்களுடைய அனைத்து வகை சந்தேகங்களையும் தயக்கங்களையும் போக்கி விடுவேன்.

 

எனவே, அது வரையிலாவது என் மீது நம்பிக்கை வையுங்கள். உங்களுடைய நடவடிக்கை, மற்ற மக்கள் உங்கள் மீது மரியாதை வைக்கும்படி இருக்க வேண்டும். நம் கழுத்தில் ஏதோ கடிவாளம் போட்டதாக நீங்கள் இம்மதத்தை நினைக்க வேண்டாம். பவுத்த மதத்தை சிறப்பான முறையில் பின்பற்ற முடிவெடுப்போம். மகர் மக்கள் புத்த மதத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்று பெயர் எடுக்காத வண்ணம் நாம் உறுதியுடன் செயல்படுவோம். இதை நாம் நிறைவேற்றிவிட்டால், இந்த நாட்டை, ஏன் இந்த உலகையே நாம் ஆட்கொள்வோம். ஏனெனில், பவுத்த மதமே உலகைக் காப்பாற்றும். நீதியற்ற உலகில் அமைதி நிலவ முடியாது.

 

நாம் தேர்ந்தெடுத்துள்ள இந்தப் புதிய பாதை முழுக்க முழுக்க பொறுப்புகளையுடையது. இளைஞர்கள் நாம் மேற்கொண்ட சில தீர்மானங்களை மனதில் வைத்து செயல்பட வேண்டும். அவர்கள் சுயநலவாதிகளாக மாறிவிடக் கூடாது. நம்முடைய வருமானத்தில் இருபதில் ஒரு பகுதியையாவது நாம் அளிக்க முன் வர வேண்டும். நான் உங்கள் அனைவரையும் என்னுடன் அழைத்துச் செல்ல விரும்புகிறேன். இந்த மதத்தைப் (பவுத்தம்) பரப்புங்கள்.

 

(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)

நன்றி:தலித்முரசு

சாதி அமைப்பு முறையில் வேறு சில தனித்த தன்மைகள் உள்ளன. இவை ஜனநாயகத்திற்கு எதிராக மோசமான விளைவுகளைக் கொண்டுள்ளன. சாதி அமைப்பின் இத்தகைய தனித்த தன்மைகளில் ஒன்று, அதனுடைய ‘படிநிலைப்படுத்தப்பட்ட சமத்துவமின்மை.’ சாதிகள் சமமாக இல்லை. அவை ஒன்றுக்கு மேல் ஒன்றாக இருக்கின்றன. அவை ஒன்றோடொன்று பொறாமை கொள்கின்றன. சாதி, தனக்கு மேலிருப்பவர் மீது வெறுப்பையும், தனக்குக் கீழ் இருப்பவர் மீது இழிவையும் சுமத்துகிறது. சாதி அமைப்பின் இந்தத் தன்மைதான் மிக மோசமான பின்விளைவுகளைக் கொண்டதாக உள்ளது. அது, மனமுவந்து உதவும் இணக்கமான சூழலை அழித்து விடுகிறது.

Ambedkar சாதியும் வர்க்கமும் எந்த இடத்தில் வேறுபடுகின்றன என்பதைப் பார்க்க வேண்டும். சாதி அமைப்பில் இருப்பது போன்ற முழுமையான தனிமைப்படுத்துதல் வர்க்க அமைப்பில் இல்லை. சாதி அமைப்பில் சமமின்மையுடன் இணைந்த இரண்டாவது தீய விளைவு இது. இதன் மூலம் உள்ளார்ந்த உணர்வும், ஆதரவும் இரு சாதிகளுக்கிடையில் ஒருசார்புடையதாகத்தான் இருக்கிறது என்ற உண்மை விளங்குகிறது. மேலிருக்கும் சாதி, அங்கீகரிக்கப்பட்ட ஒரு வழியிலும், கீழிருக்கும் சாதி ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட வழியிலும் செயல்பட்டாக வேண்டும். ஒவ்வொரு சாதிக்கும் சமமான வாய்ப்புகள் இல்லாததன் விளைவு சிலர் தலைவர்களாகவும், மற்றவர்கள் அடிமைகளாகவும் இருக்க அது கட்டாயப்படுத்துகிறது. இதன் மூலம் ஒவ்வொருவரும் தமது வாழ்க்கை அனுபவங்களை சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ளும் வாழ்வியல் முறை தடுக்கப்படுகிறது.

 

இது, சமூகத்தை வாய்ப்புகள் பெற்ற வர்க்கமாகவும், வாய்ப்புகள் மறுக்கப்பட்ட வர்க்கமாகவும் பிரிப்பதில் முடிவடைகிறது. இத்தகைய பிரிவினை, சமூக ஒருங்கிணைப்பைத் தடுக்கிறது. மூன்றாவதாக ஒரு தனித்தன்மை சாதி அமைப்பிற்கு இருக்கிறது. இது, ஜனநாயகத்தின் வேர்களையே நிர்மூலமாக்கும் தீய தன்மைகளைக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு சாதியினரும் குறிப்பிட்ட ஒரு தொழிலையே செய்ய வேண்டும் என்றும் அது நிர்பந்திக்கிறது.

 

சாதி அமைப்பு முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி? முதல் தடை, சாதி அமைப்பின் உயிர்நிலையான படிநிலைப்படுத்தப்பட்ட சமமின்மையில்தான் இருக்கிறது. மக்கள் இரண்டு வர்க்கங்களாக மேல் என்றும் கீழ் என்றும் மட்டும் பிளவுபட்டிருந்தால், கீழ்த் தளத்தில் உள்ளவர்கள் ஒன்றிணைந்து, மேலே இருப்பவர்களை எதிர்க்க முடியும். ஆனால், இங்கு ஒரேயொரு கீழ் வகுப்பு இல்லை. வர்க்கம் என்பது, கீழ் வர்க்கம் என்றும், அதற்கும் கீழான வர்க்கம் என்றும் படிநிலைப்படுத்தப்பட்டு பிரிக்கப்பட்டுள்ளன. கீழே இருக்கும் வர்க்கம், அதற்குக் கீழ் இருக்கும் வர்க்கத்துடன் இணைவதில்லை. கீழே இருக்கும் வர்க்கம், தனக்குக் கீழே இருக்கும் வர்க்கத்தை உயர்த்தினால், தனக்கு இருக்கும் உயர் நிலையும், தனது சாதிக்கு அளிக்கப்பட்டிருக்கும் உயர் நிலையும் (அவர்களை மேலே உயர்த்துவதன் மூலம்) பறிபோய் விடும் என்றும் நினைக்கிறது…

 

கல்வி சாதியை ஒழித்து விடுமா? இதற்குரிய பதில் ‘ஆம்’; அதே நேரத்தில் ‘இல்லை’! இன்று வழங்கப்படும் கல்வியால், சாதியை ஒன்றும் செய்து விட முடியாது. அது எப்போதும் போலவே நிலைப் பெற்றிருக்கும். இதற்கு பார்ப்பன சாதியே மிகச் சரியான எடுத்துக்காட்டு. பார்ப்பனர்களில் நூறு சதவிகிதம்பேர் படித்திருக்கிறார்கள்; இல்லை, அவர்களுள் பெரும்பான்மையினர் மெத்தப் படித்திருக்கிறார்கள். இருப்பினும், ஒரேயொரு பார்ப்பனர்கூட, தான் சாதிக்கு எதிராக இருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. உண்மையில், மேல் சாதியில் இருக்கும் படித்த நபர், கல்வி கற்காமல் இருப்பதைவிட, அவர் கல்வி கற்ற பிறகு சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ளவே அதிகம் விரும்புகிறார். ஏனெனில், சாதி அமைப்பைத் தக்கவைத்துக் கொள்ள, கல்வி கூடுதல் நலனை அவருக்கு அளிக்கிறது. இதன் மூலம் அவர் பெரிய பதவிகளைப் பெறும் வாய்ப்பையும் வழங்குகிறது. இந்தக் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, கல்வி சாதியை ஒழிக்க உதவிகரமாக இல்லை.

 

கல்வியின் இன்னொரு எதிர்மறையான விளைவு இது. ஆனால், இதே கல்வி இந்திய சமூகத்தில் உள்ள அடித்தட்டு மக்களுக்கு அளிக்கப்பட்டால், அது சாதியை ஒழிப்பதில் உதவிகரமாக இருக்கும்; அம்மக்களின் போராட்ட உணர்வை அதிகரிப்பதாகவும் இருக்கும். அறியாமையால், அவர்கள்தான் சாதி அமைப்பின் ஆதரவாளர்களாக இருக்கிறார்கள். ஒரேயொருமுறை அவர்களின் கண்கள் திறக்கப்பட்டுவிட்டால், அவர்கள் சாதி அமைப்புக்கு எதிராகப் போரிடத் தயாராகி விடுவார்கள்.

 

தற்பொழுதுள்ள கொள்கையின் குறைபாடு என்னவெனில், கல்வி பரவலாக அளிக்கப்படுகிறது; ஆனால், இந்திய சமூகத்தில் எந்தப் பிரிவினருக்கு கல்வி அளிக்கப்பட வேண்டுமோ அவர்களுக்கு கல்வி வழங்கப்படவில்லை. சாதி அமைப்பு முறையை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ள விரும்பும் இந்திய சமூகத்தின் சுயநலவாதிகளுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு பலப்படுத்தப்படும். இதற்கு மாறாக, இந்திய சமூகத்தின் சாதி அமைப்பு முறையை நிர்மூலமாக்க நினைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கல்வி அளிக்கப்பட்டால், சாதி அமைப்பு கண்டிப்பாக ஒழிந்துவிடும்.

 

‘வாய்ஸ் ஆப் அமெரிக்கா’ 20.5.1956 ‘டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு’ : 17 பக் : 520

நாங்கள் மனித மாண்பு காக்கவும், சுயமரியாதைக்காகவுமே போராடுகிறோம். மனிதனை ஒரு முழு மனிதனாக மாற்றுவதற்காக, நாங்கள் எந்தத் தியாகத்தையும் செய்யத் தயாராக இருக்கிறோம். இந்தப் பத்திரிகையாளர்கள், கடந்த நாற்பதாண்டுகளாக என்னை வதைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இன்றுவரை என்னை எவ்வளவு மோசமாக சித்தரிக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் இனியாவது இந்த முட்டாள்தனத்தைக் கைவிட்டு, நேர்மையுடன் சிந்திக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

Ambedkar பவுத்தம் தழுவிய பிறகும் நான் அனைத்து அரசியல் உரிமைகளையும் உங்களுக்குப் பெற்றுத் தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். என்னுடைய மறைவுக்குப் பிறகு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது. இந்த இயக்கத்திற்காக நாம் கூடுதலாகப் போராட வேண்டும். பவுத்தத்தை தழுவிய பிறகு ஏற்படும் இன்னல்களை, எப்படித் தீர்ப்பது என்பது குறித்து நான் உங்களுக்குச் சொல்கிறேன். இதை எதிர்கொள்வதற்கு என்ன விதமான முயற்சிகளை செய்ய வேண்டும் என்பது குறித்தும் நான் முழுமையாக சிந்தித்து விட்டேன். என்னிடம் ஏராளமான தீர்வுகள் உள்ளன. நான் எம் மக்களுக்கான உரிமைகளைப் பெற்றுத் தருவேன். என்னிடம் நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள். எனக்கு எதிரானப் பிரச்சாரத்தில் எந்த உண்மையும் இல்லை.

 

ஒரு விஷயத்தைக் கண்டு நான் வியப்படைகிறேன். எங்கு பார்த்தாலும் விவாதங்கள் நடைபெறுகின்றன. ஆனால், நான் ஏன் பவுத்தத்தைத் தழுவினேன் என்று ஒருவர்கூட கேட்கவில்லை. நான் ஏன் இந்த மதத்தைத் தவிர வேறு மதத்தைத் தழுவவில்லை என்று எவரும் கேட்கவில்லை. இந்த முக்கிய அடிப்படைக் கேள்விதான் மதமாற்ற இயக்கத்திற்கு அடிப்படையான கேள்வியாகும். மதம் மாறும்போது, அது பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். எந்த மதம், ஏன் அது தழுவப்பட வேண்டும்? 1935 ஆம் ஆண்டு இயோலாவில் இந்து மதத்தை விட்டொழிப்பதற்காக ஓர் இயக்கத்தைத் தொடங்குவதாகத் தீர்மானிக்கப்பட்டது. நீண்ட நாட்களுக்கு முன்பே நான் கூறினேன் : ‘‘நான் இந்துவாகப் பிறந்தாலும் ஒருபோதும் இந்துவாக சாக மாட்டேன்” நேற்று அதை நிரூபித்தும் காட்டினேன். நான் தற்பொழுது மிகுந்த மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறேன். நான் ஒரு கொடூரத்திலிருந்து விடுதலை பெற்றிருக்கிறேன். எனக்கு கண்மூடித்தனமான தொண்டர்கள் தேவை இல்லை. பவுத்தத்தை தழுவ விரும்புகிறவர்கள், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களின் உள்ளுணர்வு அந்த மதத்தை ஒப்புக் கொள்ள வேண்டும்.

 

மனித இனத்தின் முன்னேற்றத்திற்கு மதம் இன்றியமையாததாகிறது. எனக்குத் தெரியும், ஒரு பிரிவினர் காரல் மார்க்சை படித்த பிறகு, மதம் தேவையற்றது என்று கருதுகிறார்கள். அவர்களுக்கு மதத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை. அவர்கள் காலையில் எழுந்து காலை உணவை ரொட்டி, வெண்ணெய், கோழிக்கறி போன்றவைகளை சாப்பிட்டு நன்றாகத் தூங்கி, திரைப்படங்களைப் பார்த்து அத்துடன் அவர்களுடைய அந்த நாள் முடிவடைகிறது. இதுதான் அவர்களுடைய கொள்கை. என்னுடைய கொள்கை அதுவல்ல. என்னுடைய தந்தை ஏழை. எனக்கு அத்தகைய வசதிகள் கிடையாது. நான் என்னுடைய வாழ்க்கையில் துன்புற்றதைப் போல யாரும் துன்புற்றிருக்க முடியாது. எனவே, ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் வசதிகள் இல்லையென்றால், அவன் எவ்வளவு துன்பப்படுவான் என்பதை என்னால் உணர முடியும். பொருளாதார மேம்பாட்டிற்கான ஓர் இயக்கம் தேவை என்பதை நான் அறிவேன். நான் அந்த இயக்கத்திற்கு எதிரானவன் அல்ல. மனிதன் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும்.

 

ஆனால், இவ்விஷயத்தில் நான் ஒரு முக்கிய வேறுபாட்டைக் காண்கிறேன். எருமை மாட்டிற்கும் மனிதனுக்கும் வேறுபாடு உண்டு. எருமை மாட்டுக்கு தினமும் புண்ணாக்கு தேவை. மனிதனுக்கும் உணவு தேவை. ஆனால், இவை இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், எருமைக்கு அறிவு இல்லை. மனிதனுக்கு உடலும் அறிவும் இருக்கிறது. எனவே, இவை இரண்டு குறித்தும் அவன் சிந்திக்க வேண்டும். அவனுடைய அறிவு பண்படுத்தப்பட வேண்டும். மனிதனுக்கும் பண்பட்ட மனிதனுக்கும், உணவைத் தவிர வேறு எந்த உறவும் இல்லை என்று நினைக்கும் மக்களுடனும் நாட்டுடனும் உறவு வைத்துக் கொள்வதில் எனக்கு விருப்பம் இல்லை. மக்களோடு உறவு வைத்துக் கொள்ள மனிதனுக்கு நல்ல உடலும், அந்த உடலைப் பேணுவதற்கு அறிவையும் பண்படுத்த வேண்டும். இல்லையெனில் மனித இனம் முன்னேறியதாகச் சொல்ல முடியாது.

 

ஒரு மனிதனின் உடல் அல்லது மனம் ஏன் பாதிக்கப்படுகிறது? ஒன்று அவன் நோய்வாய்ப்பட்டிருக்க வேண்டும் அல்லது அவன் மனது புத்துணர்ச்சியின்றி இருக்க வேண்டும். மனதில் புத்துணர்ச்சி இல்லையெனில், அங்கு முன்னேற்றம் இருக்க முடியாது. அவனுக்கு ஏன் புத்துணர்ச்சி இல்லை. இதற்கான முதல் காரணம், மனிதன் எந்த வாய்ப்புகளும் வழங்கப்படாமல் வைக்கப்பட்டிருக்கிறான் அல்லது அவன் முன்னேற எந்தவித நம்பிக்கையுமின்றி வைக்கப்பட்டிருக்கிறான். இத்தகு சூழலில், அவன் எப்படிப் புத்துணர்வோடு இயங்க முடியும்? அவன் நோயுற்றே கிடக்கிறான். தன்னுடைய உழைப்புக்குரிய பயன் கிட்டும்போதுதான் அவன் புத்துணர்வு பெறுகிறான்.

 

15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை

நன்றி:தலித்முரசு

காங்கிரஸ், பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பாக இருக்கலாம். ஆனால், இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டம், பட்டியலின வகுப்பினருக்குப் பாதுகாப்புகளைக் கொண்டதாக இருக்க வேண்டுமா, வேண்டாமா என்ற பிரச்சினையைத் தீர்மானிப்பதற்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இப்பிரச்சினையைத் தீர்மானிக்கும் விஷயம், காங்கிரசின் பிரதிநிதித்துவத் தன்மைக்கு முற்றிலும் அப்பாற்பட்டது. இந்த முடிவு, தேவைகளை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்க முடியும். இங்கு எழும் கேள்வி இதுதான்: பட்டியலின வகுப்பினர் கோரும் பாதுகாப்புகள் அவர்களுக்குத் தேவைதானா, அவசியம்தானா? காங்கிரஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு என்ற காரணத்துக்காக, பட்டியலின வகுப்பினருக்கு எதிராக காங்கிரசை வெளிநாட்டினர் ஆதரிப்பது நியாயமல்ல. பாதுகாப்புகள் தங்களுக்குத் தேவை என்பதை நிரூபிக்குமாறு வெளிநாட்டினர், பட்டியலின வகுப்பினரைக் கேட்டால் அதில் நியாயமிருக்கிறது.

Ambedkar இந்தியாவில் ஆதிக்க வகுப்பு இருந்து வருவதாகக் கூறுவது மட்டும் போதாது. மாறாக, வயதுவந்தோர் வாக்குரிமை சக்திகளுக்குக்கூட அடிபணிந்து போகாத அளவுக்கு தம்மை வலுப்படுத்திக் கொண்டுவிட்ட இழிந்த, வெறுக்கத்தக்க, பழிபாவத்துக்கு அஞ்சாததாக இந்த ஆதிக்க வகுப்பு ஓங்கி வளர்ந்துள்ளது என்பதை மெய்ப்பித்துக் காட்ட வேண்டும் என்று அவர்கள் கோருவதிலும் கூடத் தவறில்லை. இத்தகைய நிலையை அயல் நாட்டவர் மேற்கொள்வது முறையானதே. பட்டியலின வகுப்பு மக்கள் இதனை எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறார்கள்.

 

உண்மையில், உலகின் பிற நாடுகளில் ஆதிக்க வகுப்பினர் வகிக்கும் நிலைக்கு மாறுபட்டதொரு நிலையை, இந்தியாவிலுள்ள ஆதிக்க வகுப்பினர் வகித்து வருகிறார்கள். இதில் எள்ளளவும் அய்யமில்லை. பிற நாடுகளில் ஆதிக்க வகுப்பினருக்கும், மற்றவர்களுக்கும் இடையே நிலவுவது அதிகப் பட்சம் பிரிவினை; இரு சொற்களைப் பிரித்துக் காட்டுவதற்கு “ஹைபன்’ என்னும் கோடு போடுகிறோமே அது போன்றது இது. ஆனால், இந்தியாவிலோ, இவ்விரு தரப்பினருக்குமிடையே வானெட்டும் ஒரு தடைச்சுவரே எழுந்து நிற்கிறது. “ஹைபன்’ என்பது பிரிவினை மட்டும்தான்; ஆனால், தடுப்பு என்பதோ நலன்களும், உணர்ச்சி ஒருமைப்பாடும் முற்றிலும் துண்டிக்கப்பட்ட ஒன்று.

 

மற்ற நாடுகளில் ஆதிக்க வர்க்கம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டே வருகிறது. அவர்கள் அந்த வர்க்கத்தில் ஏற்கெனவே இடம் பெறாதவர்கள். ஆனால், அதற்கு இணையாக உச்ச நிலையை அடைந்திருப்பவர்கள்; இப்போது இதில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். ஆனால், இந்தியாவில் உள்ள ஆதிக்க வகுப்பினர், மற்றவர்களுக்கு கதவை ழுவதுமாக மூடிவிட்ட அமைப்பினராவர். அந்த வகுப்புக்குள் பிறக்காத எவரும் அதில் அனுமதிக்கப்படுவதில்லை. இந்த வேறுபாடு மிகவும் முக்கியமானது. ஆதிக்க வகுப்பு எங்கு ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு மட்டுமே உரித்தானதாக இருக்கிறதோ, அங்கு பாரம்பரியம், சமூக சித்தாந்தம், சமூகக் கண்ணோட்டம் உடைபடாதவையாகவே இருக்கும். முதலாளிகளுக்கும் அடிமைகளுக்கும், சலுகை பெற்றவர்களுக்கும் சலுகை பெறாதவர்களுக்கும் இடையேயான வேறுபாடு வடிவத்தில் மாறாததாகவும், சாரம்சத்தில் வலிமைமிக்கதாகவும் இருந்து வரும்.

 

ஆனால், அதேநேரம் ஆதிக்க வகுப்பினர், ஒரு மூடப்பட்ட காப்பிடம் போல் இல்லாமல், அவர்களுக்கும் மற்றவர்களுக்கும் இடையே சமூக ஒத்துணர்வு எங்கு நிலவுகிறதோ, அங்கு ஆதிக்க வகுப்பினர் பெரிதும் வளைந்து கொடுக்கக் கூடியவர்களாகவும், அவர்களது சித்தாந்தம், குறைந்த அளவு சமூக விரோதப் போக்குடையதாகவும் இருக்கும். இந்த வேறுபாடுகள் பற்றிய உண்மையை உணர்ந்து கொண்ட வெளிநாட்டினர், பிற நாடுகளில் ஆதிக்க வர்க்கத்தினரை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதற்கு, வெறும் வயதுவந்தோர் வாக்குரிமையே போதுமானதாக இருப்பதையும் இந்தியாவில் வயதுவந்தோர் வாக்குரிமையால் அத்தகைய பலனை ஏற்படுத்த முடியாமல் போவதையும் காண்பார்கள்.

 

இதனால் சுதந்திர இந்தியாவை ஜனநாயகத்துக்குப் பெரிதும் பாதுகாப்பானதாக ஆக்கும் ஆர்வத்தில், அரசியலமைப்புச் சட்டத்தில் கூடுதல் பாதுகாப்புகளைக் கோரிவரும் தீண்டத்தகாத மக்களும், இந்தப் பாதுகாப்பை எதிர்த்து வருபவர்களும், சுதந்திர இந்தியாவை ஆதிக்க வகுப்பினர் கைகளில் தாரை வார்த்திட நினைக்கும் காங்கிரசை விடவும் அதிக ஆதரவு பெற வெகுவாகத் தகுதி உடையவர்களாகின்றனர்…

 

ரத்தினச் சுருக்கமாகக் கூறினால், வகுப்பு சித்தாந்தம், வகுப்பு நலன்கள், வகுப்புப் பிரச்சினைகள், வகுப்பு மோதல்கள் இவற்றை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் இயக்கம் தனக்கு சாவுமணி அடிக்கும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு உணர்ந்துள்ளது. அடிமை வகுப்புகளை திசைதிருப்புவதற்கும், அவற்றை ஏமாற்றுவதற்கும் மிகச் சிறந்த வழி தேசிய உணர்வையும், தேச ஒற்றுமையையும் நன்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை ஆதிக்க வகுப்பு நன்கு அறியும். ஆதிக்க வகுப்பினருடைய நலன்களைப் பெரிதும் பயனுள்ள முறையில் பாதுகாப்பதற்கு ஒரே மேடை, காங்கிரஸ் மேடைதான் என்பதையும் அது தெரிந்து வைத்துள்ளது…

 

“டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல்
தொகுப்பு’ : 9 பக்கம் : 232

ஒரு பள்ளியின் ஆசிரியர், ஒரு ‘மகர்’ மாணவனைப் பார்த்து, ‘ஏய் யார் நீ? இந்த ஜாதியைச் சார்ந்தவன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற முடியுமா? உனக்கு எதற்கு முதல் வகுப்பு? நீ மூன்றாம் வகுப்பிலேயே இரு. முதல் வகுப்பெடுப்பது பார்ப்பனருடைய வேலையல்லவா?’ என்று கேட்டால், அந்த மாணவன் என்ன விதமான புத்துணர்வை பெற முடியும்? அவன் எப்படி முன்னேற முடியும்? புத்துணர்வை உருவாக்குவதற்கான அடிப்படை அவனுடைய மனதில் உருவாக்கப்பட வேண்டும். உடலாலும் மனதாலும் ஆரோக்கியமாக இருந்து அதன் மூலம் துணிவாகவும் தன்னம்பிக்கையுடனும் வெற்றி பெறும்போதுதான் அவன் புத்துணர்வு பெற முடியும். ஆனால், தாழ்வு மனப்பான்மையை இந்து மதம் அவனுள் புகுத்தியிருக்கிறது. அது ஒருபோதும் புத்துணர்வை வளர்க்காது. இத்தகைய தாழ்வு மனப்பான்மையும், புத்துணர்வின்மையும் பல ஆயிரம் ஆண்டுகளாக அவன் மீது திணிக்கக் கூடிய அளவுக்கு சூழல்கள் அமைந்திருக்கின்றன. இத்தகைய மனிதர்கள் ‘கிளார்க்’ வேலைகள் மூலம் தங்கள் வயிற்றைத்தான் நிரப்பிக் கொள்ள முடியும். வேறு என்ன நடக்கும்?

 

மனிதனின் புத்துணர்வுக்குப் பின்னால் இருப்பது அவனுடைய உள்ளம். ஆலைகளின் உரிமையாளர்களை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அவர்கள் தங்களுடைய ஆலைகளுக்கு மேலாளர்களை நியமித்து, தங்கள் ஆலைகளை நடத்துகிறார்கள். இந்த ஆலை உரிமையாளர்கள் பல்வேறு தீய பழக்கங்களுக்கு ஆட்பட்டு, அவர்கள் பண்படாதவர்களாகவே இருந்து வருகிறார்கள். நாம் தொடங்கியிருக்கும் இந்த இயக்கம், உங்கள் மனதில் புத்துணர்வை ஏற்படுத்தக்கூடிய பணியை செய்கிறது. அதன் பிறகு கல்வி அளிக்கப்பட வேண்டும். நான் கல்வி கற்கத் தொடங்கியபோது கிழிந்த துணிகளையே உடுத்தியிருந்தேன். பள்ளியில் எனக்கு குடிப்பதற்கு தண்ணீர்கூட கிடைக்காது. பல நாட்கள் தண்ணீர் இன்றி நான் பள்ளியில் இருந்திருக்கிறேன். பம்பாயில் உள்ள எல்பின்ஸ்டன் கல்லூரியிலும் இதே சூழல்தான் நிலவியது. இத்தகைய சூழலில் வேறு எந்த மாதிரியான நிலைமைகளை உருவாக்க முடியும்? வெறும் கிளார்க்குகளைத்தான் உருவாக்க முடியும்.

 

நான் டெல்லி வைசிராய் குழுவில் இருந்தபோது லின்லித்கோதான் வைசிராயாக இருந்தார். ‘முஸ்லிம்களுக்கு கல்வி அளிக்க அலிகார் பல்கலைக்கு வழக்கமான செலவுகளோடு கூடுதலாக மூன்று லட்சம் ரூபாய் செலவழியுங்கள். அதேபோல, மூன்று லட்ச ரூபாயை இந்து பனாரஸ் பல்கலைக்கு வழங்குங்கள். ஆனால், நாங்கள் இந்துக்களோ முஸ்லிம்களோ அல்ல. நீங்கள் எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தால், அவர்களுக்கு செய்ததைப் போல ஆயிரம் மடங்கு அதிகமாக செய்ய வேண்டும். முஸ்லிம்களுக்கு செய்கின்ற அளவுக்காவது எங்களுக்கு செய்யுங்கள்’ என்று சொன்னேன். அதற்கு லின்லித்கோ, நீ என்ன சொல்வதாக இருந்தாலும் அதை எழுதிக் கொடு என்று சொல்லிவிட்டார். எனவே, அதை அப்படியே நான் ஒரு கோரிக்கை மனுவாகத் தயாரித்தேன். அந்த நகல் என்னிடம் அப்படியே இருக்கிறது. அய்ரோப்பியர்கள் மிகவும் கருணை உள்ளவர்கள். அவர்கள் என்னுடைய வரைவுத் திட்டத்தை ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால், எந்த வேலைக்காக அந்தப் பணம் செலவழிக்கப்பட வேண்டும் என்பதுதான் பிரச்சினை. நமது பெண்கள் கல்வி கற்கவில்லை என்பதால், அவர்களுக்கு கல்வி வழங்க வேண்டும் என்று அவர்கள் எண்ணினார்கள். அவர்களுக்கென்று விடுதிகள் தொடங்கப்பட்டன. அதற்காக பணம் செலவழிக்கப்பட்டது. நம்முடைய பெண்களுக்கு கல்வி வழங்கப்பட்டு அதன் மூலம் அவர்கள் படித்த பிறகு, வீட்டில் பல்வேறு வகையான உணவுகளை தயாரிப்பது யார்? அவர்களுடைய கல்வியின் ஒட்டு மொத்த விளைவு என்ன? அரசு பல்வேறு பிரிவுகளின் கீழ் பணத்தை செலவழித்தது. ஆனால், கல்விக்காக பணத்தை அவர்கள் செலவழிக்கவில்லை.

 

எனவே, நான் ஒரு நாள் லார்ட் லின்லித்கோவிடம் சென்று கல்விக்காக ஒதுக்கப்பட்ட தொகை என்னவாயிற்று என்று கேட்டேன். மேலும் நீங்கள் கோபப்படவில்லையென்றால், நான் உங்களிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகிறேன். ‘நான் மட்டுமே அய்ம்பது பட்டதாரிகளுக்கு சமமானவன் இல்லையா?’ என்றேன். அவர் அதை ஏற்றுக் கொள்ள வேண்டியிருந்தது. மீண்டும் நான் அவரிடம் கேட்டேன். இதற்கு என்ன காரணம்? ‘எனக்கு அதற்கான காரணம் தெரியவில்லை’ என்றார். என்னுடைய படிப்பு அவ்வளவு மகத்தானது. என்னால் அரண்மனையின் உச்சியில் அமர முடியும். என்னைப் போன்ற மக்களைத்தான் நான் உருவாக்க நினைக்கிறேன். நம்முடைய மக்கள் பாதுகாக்கப்பட வேண்டிய வகையில் அறிவார்ந்த மாணவர்கள் உருவாக்கப்பட வேண்டும். வெறும் எழுத்தரால் என்ன செய்ய முடியும்? நான் சொன்ன அந்த நிமிடமே லார்ட் லின்லித்கோ ஒப்புக் கொண்டு, பதினாறு மாணவர்களை உயர் படிப்புக்காக இங்கிலாந்துக்கு அனுப்பினார். இந்தப் பதினாறு பேரில் சிலர் அரைவேக்காடுகளாகவும் சிலர் முழு அறிவாளிகளாகவும் இருக்கக் கூடும். அது வேறு பிரச்சினை. ஆனால், அதன் பிறகு சி. ராஜகோபாலாச்சாரி, இத்தகு உயர் கல்வித் திட்டத்தையே ரத்து செய்து விட்டார்.

 

(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)

நன்றி:தலித்முரசு

மற்ற கட்டுரைகள் …

Load More