சமூகவியலாளர்கள்

ஓர் அமைப்பைத் தோற்றுவிப்பதற்காக பம்பாயிலுள்ள சில பார்சிகள் ஓர் இயக்கத்தைத் தொடங்கியிருப்பதாக, பெல்காமிலிருக்கும்போது நான் கேள்விப்பட்டேன். ஒரு சாதி என்ற வகையில் புரோகித முறையை ரத்து செய்வதே அதனுடைய முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும். பார்சி பிரமுகர்களின் வழிமுறைகளைப் பற்றி விவாதிப்பது அவசியமென்று நான் கருதவில்லை. ஆனால், இந்து புரோகித வர்க்கங்கள் எவ்வகையிலும் சராசரி பார்சி புரோகிதர்களுக்கு அறநெறி ரீதியிலோ, கல்வி ரீதியிலோ அல்லது வேறு வகையிலோ மேலானவர்கள் அல்ல என்பதை நான் பார்சி நண்பர்களுக்கு உறுதியாகக் கூற விரும்புகிறேன்.

 

பரம்பரையான இந்து புரோகிதர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் எண்ணற்றவை; அவை திகைப்பூட்டுவதாயிருக்கின்றன. நமது நாகரிகத்தின் காலச் சக்கரத்தில் அவர் (புரோகிதர்) ஒரு முட்டுக்கட்டை. மனிதன் பிறக்கிறான், அவன் திருமணம் செய்து கொள்கிறான், ஒரு குடும்பத்தின் தந்தையாகிறான், பின்னர் காலப்போக்கில் மரணமடைகிறான். இந்த வாழ்க்கை நெடுகிலும் புரோகிதர், ஒரு தீய நுண்ணறிவாளன் போன்று மனிதனை நிழல் போல் தொடர்கிறார். சாஸ்திரங்கள் மற்றும் ஸ்மிருதிகளுக்கு ஏற்ப அவர் கூறும் கொடூரமான விதிகளிலிருந்து விலகிச் செல்வதானது, பயங்கர தண்டனைக் குள்ளாக்கப்படுகிறது. 99 சதவிகித மக்கள் இதைத் தாக்குப்பிடிக்க முடியாதவர்களாக உள்ளனர்.

 

மனிதனை சமுதாயத்திலிருந்து விலக்கி வைப்பது அல்லது வெளியேற்றுவது என்பது, புரோகிதரே சாத்தானாக இருந்து உருவாக்கிய ஆயுதமேயாகும். இதைப் புரோகிதர் ஈவிரக்கமின்றி, இடைவிடாது, மூர்க்கமான உறுதியுடன் கையாள்கிறார். அதிகாரத் தோரணையில் செயல்படும் பார்ப்பனர், மனித சமுதாயத்தின் ஒரு பரிதாபமான தனி நபராக காட்சியளிக்கிறார் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். அவருக்கும் இது தெரியும். காணப்பட முடியாத சக்திகளுக்கும், திக்கற்ற மனிதனுக்கும் இடையில் ஒரு தரகராக இருக்கும் அவமானத்தை அவர் கடைப்பிடித்து, அதன் மூலம் தன் வாழ்க்கையை நடத்துகிறார். இவர்கள் மனதறிந்து தான் இந்த இழிசெயலை செய்கிறார்களா என்று ஒருவேளை தத்துவ ஞானிகள் கேட்கக்கூடும்!

 

ஆனால், இந்தக் கேள்விக்கு விடை எதுவாக இருந்தபோதிலும், சமுதாயத்தின் வாழ்வாதாரங்களைத் தனது சுயநலத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு, அவற்றை அரித்துவரும் புல்லுருவிகளை, எவ்விதத் தடையும் கட்டுப்பாடும் இன்றி செயல்படுவதற்கு, இனி ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இந்தியாவிலுள்ள நாம் ஆங்கிலேய மறுமலர்ச்சியிலிருந்து ஒரு படிப்பினையைக் கற்றுக் கொண்டு, மதத்தையும் புரோகிதரையும் முறையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, அதனுடைய பிற்போக்கான மற்றும் கட்டுப்பாடற்ற வளர்ச்சியைத் தடுத்தாக வேண்டும்.

 

வெகுமக்களிடையில் கடைப்பிடிக்கப்படும் மூடநம்பிக்கை நடைமுறைகளுக்கு எதிராக, கடுமையான சட்டமியற்றுவதற்கு ஒரு பெரும் தேவை இருக்கிறது. புரோகிதர் மூடநம்பிக்கைகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறார். கடவுள்களுக்கும் பெண் தெய்வங்களுக்கும் வீணானபடையல்கள், மரணத்தின்போது நீண்டகால துக்கச் சடங்குகளைக் கடைப்பிடிப்பது, பிறப்பு மற்றும் திருமணங்களின் போதும் அதிகளவிலான சடங்குகள், அறிவற்ற சாதி ரீதியிலான விருந்துகள் போன்ற சில நடைமுறைகள் புரோகிதர் மகிழ்ச்சியுடன் கடைப்பிடிக்கும் உணர்வற்ற, அர்த்தமற்ற நடைமுறைகளாகும். திருமணத்தைப் போன்ற மகிழ்ச்சியான நிகழ்வாகட்டும், அல்லது மரணம் போன்ற துன்பகரமான நிகழ்ச்சியாகட்டும், புரோகிதர்கள் அவற்றை சமநோக்கில்தான் எதிர்கொள்கிறார்கள். அவர்களில் பலர், பார்சி நிருபர்களில் ஒருவர் சிறப்பாக எடுத்துக்காட்டியதுபோல், தங்களுக்கு இரையாகின்றவர்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். புரோகிதத்துவத்தின் தீமைகளின் பட்டியல் உண்மையில் நம்மைத் திகைக்க வைக்கின்றன. இறுதியாக, அதனை ஒழித்துக்கட்டுவதை ஒரு லட்சியமாகத்தான் நமது பார்வையில் வைத்துக் கொள்ள முடியும். ஆனால், நமது நேர்மையான இயக்கத்தைத் தொடங்குவதை நாம் தள்ளிப்போட முடியாது.

 

உயிருடன் வாழ்ந்து கொண்டிருந்தபொழுது ஓர் அலுமினிய டம்ளர்கூட வாங்க முடியாத அளவுக்கு ஏழையாயிருந்த ஒருவர் இறந்தபோது, அவருடைய இறுதிச் சடங்குகளில் ஒரு வெள்ளிக் கிண்ணம் பயன்படுத்தப்பட வேண்டுமென்று புரோகிதர் வற்புறுத்தினார் என்று பார்சி பத்திரிகை அண்மையில் எடுத்துக்காட்டாக ஒரு செய்தியை குறிப்பிட்டிருந்தது. ஆனால், தங்களுடைய கூர்மையான நடைமுறை விவேகத்தின் பயனாக, பார்சிகள் இந்தியாவில் புரோகிதத்துவம் என்னும் தீமையை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு, மிகவும் பொருத்தமாகவே முன்முயற்சி மேற்கொண்டிருப்பதைக் காட்டுவதற்காகவே நான் இதை மேற்கோள் காட்டுகிறேன்.

 

மேலும், புரோகிதத்துவத்தைத் துடைத்தெறியும் இந்த வீரமான மற்றும் உன்னதமான பணியில் அறிவொளி படைத்த அனைத்து இந்துக்களும், முஸ்லிம்களும், கிறித்துவர்களும் இணைந்து நிற்பார்கள் என்பதில் எனக்கு அய்யமில்லை. ஏனெனில், புரோகிதத் தத்துவத்தின் சுமையைத் தாங்குவதற்குத் தமது பார்சி சகோதரர்களைக் காட்டிலும் அவர்கள் கண்டிப்பாக மிக மிக இயலாத நிலையில் இருக்கின்றனர்.

 

நன்றி:தலித்முரசு

கிறித்துவ மதம் அய்ரோப்பாவில் நுழைந்தபோது ரோம் மற்றும் அதைச் சுற்றியுள்ள நாடுகள் பெரும் துன்பத்தில் இருந்தன. மக்களுக்குப் போதிய உணவு கிடைக்கவில்லை. அந்நேரத்தில் ஏழை மக்களுக்கு “கிச்சடி’ உணவு வழங்கப்பட்டது. கிறித்துவை யார் பின்பற்றினார்கள்? ஏழை களும் ஒடுக்கப்பட்ட மக்களும்தான் பின்பற்றினார்கள். ஏழைகளும் அடித்தள வகுப்பினருமே கிறித்துவர்களாக மாறினார்கள். “பிச்சைக்காரர்களின் மதமே கிறித்துவம்’ என்று கிப்பன் கூறுகிறார். கிப்பன் தற்போது உயிருடன் இருந்தால், அய்ரோப்பாவில் உள்ள அனைவருடைய மதமாக கிறித்துவம் எப்படி மாறியது என்றும் கூறியிருப்பார்.


Ambedkar பவுத்தம் ‘மகர்’ மற்றும் ‘மாங்கு’களின் மதம் என்று சிலர் சொல்லலாம். பார்ப்பனர்கள் கவுதமரை ‘போ கவுதம்’ ‘அரே கவுதம்’ என்று அழைத்து புத்தரை கேலி செய்தனர். அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ராமன், கிருஷ்ணன், சங்கரன் போன்ற சிலைகள் எல்லாம் வெளிநாடுகளில் விற்கப்பட்டால், எந்தளவுக்கு விற்கப்படும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு மாறாக, புத்தருடைய சிலை விற்பனைக்கு வைக்கப்பட்டால், அங்கு ஒரு சிலைகூட எஞ்சியிருக்காது. இந்தியாவில் எவ்வளவோ விஷயங்கள் இருந்தாலும், உலகில் உள்ளவர்களுக்கு புத்தரை மட்டும்தான் தெரியும்!

 

நாங்கள் எங்கள் பாதையைப் பின்பற்றுகிறோம். நீங்கள் உங்கள் பாதையை பின்பற்றிக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு புது வழியை கண்டறிந்திருக்கிறோம். இன்றைய நாள் நம்பிக்கைக்குரிய நாள். இந்த வழி - மேம்பாட்டிற்கான, முன்னேற்றத்திற்கான வழி. இது ஒன்றும் புதிய பாதையும் அல்ல. இந்தப் பாதையை நாங்கள் எங்கிருந்தும் கடனாகப் பெறவில்லை. இந்தப் பாதை இங்குள்ள பாதைதான். அது முழுக்க முழுக்க இந்தியாவின் பாதைதான். இந்தியாவில் பவுத்த மதம் இரண்டாயிரமாண்டுகளாக நீடித்திருந்தது. உண்மையில் சொல்லப் போனால், நாம் முன்பே பவுத்தத்தை ஏன் தழுவவில்லை என்பதற்காக வருந்துகிறோம். புத்தர் வலியுறுத்திய கொள்கைகள் காலத்தால் அழியாதவை. ஆனால், புத்தர் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. காலம் மாற மாற, கொள்கையிலும் மாற்றம் காண வழியிருக்கிறது என்றார் அவர். இத்தகையதொரு பெருந்தன்மையை வேறு மதத்தில் காண முடியாது.

 

பவுத்த மதம் அழிவதற்கான முக்கியக் காரணமாக முஸ்லிம்களின் படையெடுப்பைக் குறிப்பிடலாம். முஸ்லிம்கள் தங்கள் படையெடுப்பின்போது புத்தருடைய சிலைகளை அழித்தார்கள். பவுத்த மதத்தின் மீதான முதல் தாக்குதல் இது. அவர்களின் படையெடுப்பைக் கண்டு அஞ்சி பவுத்த பிக்குகள் வெளியேறினர். சிலர் திபெத்துக்கும் சிலர் சீனாவிற்கும் சிலர் பிற இடங்களுக்கும் தப்பிச் சென்றனர். மதத்தைப் பாதுகாக்க பொதுமக்கள் தேவை. வடமேற்குப் பகுதியில் “மிலிந்தா’ என்ற மாபெரும் அரசன் இருந்தான். இந்த அரசன் எப்பொழுதும் விவாதங்களையே நடத்திக் கொண்டிருப்பான். அவன் இந்துக்களிடம் தன்னுடன் விவாதிப்பதற்கு யாராவது இருந்தால், அவர்களை தன்னுடன் வந்து விவாதிக்கச் சொல்லி வலியுறுத்துவான். அவன் எழுப்பிய பல்வேறு விவாதங்களுக்கு பதில் சொல்ல முடியாமல் போய்விட்டது. ஒரு முறை அந்த அரசன் பவுத்த மக்களோடு விவாதம் புரிய எண்ணினான். யாராவது ஒரு பவுத்தரை விவாதத்திற்கு அழைத்து வருமாறு கூறினான். பவுத்தர்கள் நாகசேனனை அழைத்து, தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இந்த விவாதத்தில் பங்கேற்கும்படி அழைத்தனர்.

 

நாகசேனன் படித்தவர். முதலில் அவர் ஒரு பார்ப்பனராக இருந்தவர். நாகசேனனுக்கும் மிலிந்தனுக்கும் இடையில் என்ன விவாதம் நடைபெற்றது என்பதை நூலின் மூலம் அனைவரும் அறிவோம். அந்த நூலின் பெயர் “மிலிந்தா பான்கா’. மிலிந்தா ஒரு கேள்வியை எழுப்பினான். இந்த மதம் ஏன் அழிந்தது? இதற்கு பதிலளித்த நாகசேனன் மூன்று காரணங்களைக் கூறினார். முதல் காரணம், குறிப்பிட்ட அந்த மதம் முதிர்ச்சியற்றது. அந்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகள் ஆழமற்று இருந்தன. அது ஒரு தற்காலிக மதமாக இருந்ததால், அது குறுகிய காலமே வாழ்ந்தது. இரண்டாவது காரணம், படித்த மதப் பிரச்சாரகர்கள் இல்லையெனில் இந்த மதம் அழிந்துவிடும். படித்த நபர்கள் மதத்தின் கொள்கையைப் பரப்ப வேண்டும். அந்த மதத்தின் பிரச்சாரகர்கள் எதிரியுடன் விவாதத்திற்கு தயாராக இல்லாதபொழுது, அந்த மதம் அழிந்துவிடும். மூன்றாவது காரணம், அந்த மதமும் கொள்கைகளும் படித்த மக்களுக்காக மட்டுமே இருந்தது. சாதாரண மக்களுக்கு கோயில்களும், வழிபடும் இடங்களும் உள்ளன. அவர்கள் அங்கு சென்று இயற்கையை மீறிய சக்தியை வணங்குகின்றனர்.

 

பவுத்தத்தை தழுவும்பொழுது, இந்த காரணங்களை நாம் மனதில் கொள்ள வேண்டும். பவுத்த மதக் கொள்கைகள் தற்காலிகமானவை என்று யாரும் சொல்லிவிட முடியாது. இன்று 2500 ஆண்டுகளுக்குப் பிறகும் ஒட்டுமொத்த உலகமும் அனைத்து பவுத்த கொள்கைகளையும் மதிக்கிறது.

 

(15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை)

நன்றி:தலித்முரசு

அடுத்ததொரு பிரிவு தொழிற்சங்கங்களைக் கட்டுவதே - தம்மைச் செயலாளர்கள், தலைவர்கள் என்று முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்; சொந்தப் பதவிகளுக்காகத் தங்களை முன்னிறுத்திக் கொள்வதற்காகவும்தான். சொந்தப் பதவிகளுக்காகத் தங்களுக்கென்று தனித்தனி சங்கங்கள் வைத்துக் கொண்டு, போட்டி அரசியல் நடத்துபவர்கள் அவர்கள். இத்தகைய விந்தையான, வெட்கப்படத்தக்க நிகழ்வுகள் இந்தியாவில் புகழ் பெற்றுள்ளன. தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் இடையே நடைபெறும் போராட்டத்தைவிட, கடுமையான போராட்டம் -போட்டிச் சங்கங்களிடையே நடைபெறுவது விந்தையிலும் விந்தை!

 

 இத்தனையும் எதற்காக? தமது தலைமைப் பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக! இதில் கம்யூனிஸ்டுகள் இன்னொரு வகை. அவர்கள் அர்த்தமுள்ளவர்கள்தான். ஆனால், தவறான வழிகாட்டுதலில் இயங்குபவர்கள். அவர்களைவிட தொழிலாளி வர்க்கத்திற்குப் பேரழிவைக் கொண்டு வந்தவர்கள் வேறு எவரும் இல்லை. இன்று தொழிலாளி வர்க்கத்தின் முதுகெலும்பு உடைக்கப்படுகிறது; முதலாளிகளின் கை மேலோங்கியிருக்கிறது; பொது மக்களுக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கும் நெருங்கிய நட்பும் இல்லை. இவற்றுக்கெல்லாம் காரணம், இந்தக் கம்யூனிஸ்ட் தலைவர்கள்தான். தாங்கள் ஒரு காலத்தில் வென்றெடுத்த அதிகாரத்தை, இவர்கள் தவறாகப் பயன்படுத்தி வருகிறார்கள்.

 

இவர்களுடைய வேலையே தொழிலாளர்களிடையே அதிருப்தியை வளர்ப்பதுதான். அதிருப்திதான் புரட்சியைத் தூண்டும் என்றும், புரட்சியின் மூலம் பாட்டாளிகளின் ஆட்சியை நிறுவ முடியும் என்றெல்லாம் இவர்கள் நம்புகிறார்கள். இதற்காகவே இந்த அதிருப்தி பிரச்சாரத்தை முடுக்கிவிட்டு, பிளவு -சிதறல் இவற்றையே ஓர் அமைப்பு அலையாக தொடர்ந்து விளைவித்து வருகிறார்கள். இவர்கள் தொழிலாளர்கள் மீது திணிக்கும் தொடர் வேலை நிறுத்தங்களுக்கு என்ன அர்த்தம்? இது, சிதறுதலைத் திட்டமிட்டு செயல்படுத்தும் ஒரு முயற்சிதானே? வெற்றிகரமான புரட்சிக்கு அதிருப்தி மட்டுமே போதாது. அரசியல், சமூக உரிமைகளுக்கான நியாயம், தேவை, முக்கியத்துவம் ஆகியவை பற்றிய உண்மையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே வெற்றிகரமான புரட்சி சாத்தியமாகும்.

 

ஒரு புரட்சிகர மார்க்சிஸ்ட், வேலை நிறுத்தம் செய்வதையே ஒரு வேலை என்று அலைய மாட்டான். புரட்சிகர சிண்டிகலிஸ்டுகளின் காலங்களில் அப்படித்தான் நடந்தது. வேலை நிறுத்தத்தை மார்க்சிஸ்டுகள் ஒரு புரட்சிகர நடவடிக்கையாக எப்போதுமே தீர்மானித்துக் கொண்டதில்லை. எல்லா வழிகளுமே அடைக்கப்பட்ட பிறகுதான் இறுதிப் புகலிடமாக வேலை நிறுத்தம் கையாளப்பட வேண்டும் என்பதே மார்க்சியம். இந்த உண்மைகளை கம்யூனிஸ்டுகள் காற்றில் பறக்க விட்டு விட்டார்கள். தொழிலாளர்களிடையே அதிருப்தியை உருவாக்கத் தங்களுக்கு கிடைத்த வேலை நிறுத்தங்களை, ஒவ்வொரு கட்டத்திலும் அவர்கள் திணித்தார்கள்.

இதனால் அதிருப்தி வளர்ந்ததோ இல்லையோ, அவர்களுக்கு ஆற்றலும் அதிகாரமும் தந்த தொழிற்சங்க இயக்கமே உருத்தெரியாமல் சிதைந்து வருகிறது. இன்றைய தினம் அவர்கள் தெருவுக்கு வந்து விட்டார்கள். முதலாளித்துவ அமைப்புகளில் புகலிடம் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பொருளற்ற செயல்கள் அப்படித்தானே முடிய வேண்டும்? இன்றைய கம்யூனிஸ்டு எப்படி இருக்கிறான்? சுற்றுவட்டாரத்தில் மாபெரும் தீ விபத்தை உண்டாக்குவதற்கான வெடிகுண்டை எறிந்த ஒருவன், தன் சொந்த வீட்டையும்கூட காப்பாற்ற இயலாத நிலையில் இருக்கிறான்.

 

விளைவு, இன்று தொழிலாளிகள் குறை தீர்க்கும் சங்கங்களே இல்லை. பம்பாய் நூற்பாலைத் தொழிலாளர் மத்தியில் நிலவும் அவலங்களைப் பற்றி நான் பேசப் போவதில்லை. அவற்றைப் பற்றிப் பேசாமல் இருப்பதே நல்லது. ஜி.அய்.பி. ரயில்வே தொழிலாளர் நிலையை எடுத்துக் கொள்வோம். அவர்களுடைய தொழிற்சங்கம் 1920 இல் தொடங்கப்பட்டது. அதன் பெயர் ஜி.அய்.பி. ரயில்வே ஸ்டாப் யூனியன். 1922-24 கட்டத்தில் அது முடங்கிப் போனது. 1925 இல் அது மீண்டும் புதுப்பிக்கப்பட்டது. 1927இல் ஒரு போட்டிச் சங்கம் உருவானது. அதன் பெயர் ஜி.அய்.பி. மேன்ஸ் ரயில்வே யூனியன், 1931 இல் இரண்டும் இணைந்தன.

 

ரயில்வே ஒர்க்கர்ஸ் யூனியன் என்று பெயர் மாற்றம் ஏற்பட்டது. 1932 இல் மீண்டும் பிளவு. புதிய சங்கத்திற்கு ரயில்வே லேபர் யூனியன் என்று பெயர். 1935இல் பழைய ஜி.அய்.பி. ஸ்டாப் யூனியன் புத்துயிர் பெற்று செயல்படத் தொடங்கியது. இன்று மோதல்கள். இத்தனைக்கும் எல்லாமே ரயில்வே தொழிலாளர்களின் நலன் காப்பதற்காக நிறுவப்பட்டவைதாம். இந்த முரண்பாடு -மோதல்களுக்கு காரணம், கம்யூனிஸ்ட் மற்றும் கம்யூனிஸ்ட் அல்லாத குழுக்களுக்கிடையிலான போட்டி. இப்பகைமை மத்திய அமைப்பிலும் பிளவைக் கொண்டு வந்தது.

 

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:182)

http://ambedkarr.wordpress.com/category/%e0%ae%aa%e0%af%81%e0%ae%95%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%87%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/

ஆட்சி செய்யும் வகுப்பாரின் மனப்பாங்கு என்ன? அதனுடைய மரபு என்ன? அதனுடைய சமுதாயச் சிந்தனை என்ன?

 

பார்ப்பனர்களை முதலில் எடுத்துக்கொள்ளுங்கள், சரித்திர அடிப்படையில் பார்த்தால் அவர்கள் அடிமைப்படுத்தப்பட்ட மக்களின் (சூத்திரர்கள்,தீண்டப்படாதவர்கள்) ஜென்ம விரோதிகளாக இருந்து வருபவர்கள். இந்து சமுதாய மக்கள் தொகையில் இந்த இருவரும் 80 சதவிகிதத்தில் உள்ளனர் . இன்று இந்தியாவிலேயே, அடிமைப் படுத்தப்பட்ட வகுப்பைச்சார்ந்த சாதாரண மனிதன் ஒருவன் இவ்வளவு தாழ்த்தப்பட்டு, இழிவுபடுத்தப்பட்டு எதிர்காலத்தைப்பற்றிய நம்பிக்கை யோ, அபிலாஷையோ இல்லாது. இருப்பதற்கு முழுமையான காரணம், பார்ப்பனர்களும் அவர்களுடைய சித்தாந்தமுமேயாகும்.

 

பார்ப்பனியத்தின் தலையாய கொள்கைகள் அய்ந்து

(1) பலதரப்பட்ட வகுப்புகளுக்குள்ளே படிப்படியான சமத்துவமில்லாத உயர்வு தாழ்வு நிலைகள்

 

(2) சூத்திரர்கள் , தீண்டத்தகாதார்களுடைய மோசமான வலிவற்ற தன்மை

 

(3) சூத்திரர்களும், தீண்டத்தகாதவர்களும் என்றைக்கும் படிக்கக் கூடாது என்று தடை

 

(4) சூத்திரர்களும் , தீண்டப் படாதவர்களும் உயர்நிலையோ , ஆற்றலோ பெறுவதற்குத் தடை

 

(5) சூத்திரர்களும் தீண்டப்படாதவர்களும் பொரும் சேர்ப்பதற்குத் தடை பெண்களை அடக்கி ஒடுக்கி அடிமைப்படுத்துவது .

 

பார்ப்பனியத்தின் அங்கீகரிக்கப் பட்ட சித்தாந்தம் உயர்வு-தாழ்வு நிலை, கீழ்த் தளத்தில் உள்ள வகுப்புகள் சமத்துவத் தன்மை அடைய விரும்புவதை ஈவு இரக்கமின்றி அழித்து வைப்பதே பார்ப்பனியத்தின் இன்றியமையாத கடமையாகும்.

ஒரு சிலர் மட்டும் படித்துள்ள நாடுகள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் மட்டும் படித்த வகுப்பார் அதாவது பார்ப்பனர்கள் கல்வியைத் தங்களது ஏக போகமாக்கியுள்ளார்கள் . அது மட்டும் அல்லாது அடித்தளத்தில் உள்ள வகுப்புகள் கல்வியறிவு பெறுவது ஒரு பெரிய குற்றமாக வைத்துள்ளார்கள். அந்தக் குற்றத்திற்குத் தண்டனை நாக்கை வெட்டுவது அல்லது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது. மக்களை நிர்க்கதியாக்கிப் பிரிட்டிஷார் இந்தியாவை ஆளுகிறார்கள் என்ற காங்கிரஸ் அரசியல்வாதிகள் புகார் கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் ஒன்றை மட்டும் மறந்து விடுகிறார்கள். சூத்திரர் களையும் , தீண்டத்தகாதவர்களையும் பராரிகளாக கதியற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் பிரகடனப்படுத்தப்பட்ட சட்டத்தின் அடிப்படையில் ஆண்ட ஒரு ஆட்சியை மறந்து விடுகிறார்கள். உண்மையிலேயே சூத்திரர்களும், தீண்டப்படாத வர்களும் வலிமையற்ற நிலையில் இருக்கவேண்டும் என்பதில் பார்ப்பனர்கள் மிகவும் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்தார்கள். ஏனென்றால் தாங்கள் வலிமையுற்றவர்களாக ஆக வேண்டும் என்றும், தாங்கள் அனுபவிக்கும் சலுகைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் எண்ணிச் சட்டத்தை மாற்றும் பொழுது ஒன்றை மாத்திரம் அவர்கள் மாற்றாது விட்டு விட்டார்கள் . எதை அவர்கள் நிலை குலையாமல் காப்பாற்றினார்கள்? சூத்திரர்கள் , தீண்டப்பாடதவர்களாக, வலிமை யற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்ற தடையை அவர்கள் நீக்காமல் விட்டு விட்டார்கள். இன்றைக்கு இந்தியாவிலேயே பெரும்பான்மை மக்கள் முற்றிலும் கோழையாக, உணர்ச்சியற்றும் , ஆண்மையற்றும் இருப்பதற்குக் காரணம் என்ன? அவர்கள் வலிமையற்று இருக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் நீண்ட நெடுங்காலமாகக் கடைப்பிடித்து வந்த தந்திரக் கொள்கையின் பலனேயாகும்.

 

பார்ப்பனர்கள் ஆதரவு பெறாத சமுதாயக் கெடுதியோ அல்லது சமுதாயக் குற்றமோ இல்லை. ஒரு மனிதனைக் கண்டால் அவனிடத்தில் மனிதத் தன்மையே காட்டக்கூடாது என்பதுதான் பார்ப்பனர்களின் மதம். அதாவது சாதி உணர்ச்சியுடன் பார்க்கக் கூடாது என்பது பார்ப்பனர்களின் மதமாகும். மனிதன் செய்யக்கூடிய தவறுகள் தான் அவனுக்கு மதமாகிறது என்று ஊகிப்பது தவறான அடிப் படையில் அமைந்த எண்ணமாகும். ஏனென்றால் உலகத்தில் எந்த பாகத்திலாவது பெண்கள் மோசமாகக் கொடுமைப்படுத்தப்பட்டு அதனால் அவதியுறுகிறார்கள் என்றால் அந்தக் கொடுமைகளுக்குப் பார்ப்பான் தன்னுடைய ஆதரவைத் தந்திருக்கிறான். விதவைகள் `உடன்கட்டை ஏறுதல்’ என்ற பழக்கத்தினால் உயிருடன் கொளுத்தப் பட்டார்கள். `உடன்கட்டை ஏறுதல்’ என்ற தீய பழக்கத்திற்குப் பிராமணர்கள் தங்களுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறார்கள். விதவைகள் மறுமணம் செய்து கொள்ள அனுமதிக் கப்படவில்லை . இந்தக் கோட்பாட்டிற்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவைத் தந்திருக்கிறான். பெண் 8 வயது அடைவதற்கு முன்னேயே திருமணம் செய்து கொடுத்தாக வேண்டும். கணவன் அந்தப் பெண்ணுடன் அதற்குப் பிறகு பாலுறவு செய்கின்ற உரிமையே பெற்றுள்ளான். அந்தப் பெண் பருவ பக்குவம் அடைந்தாளா இல்லையா என்பது பற்றிப் பொருட்படுத்தவில்லை. அந்தக் கோட்பாட்டுக்கும் பார்ப்பான் தன்னுடைய முழு ஆதரவையும் தந்திருக்கிறான். பார்ப்பனர்கள் , சூத்திரர்களுக்கும், தீண்டப்படாதவர்களுக்கும் சட்டம் இயற்றும் கர்த்தாக்களாக இருந்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் சட்டம் இயற்றிய தன்மையையும், உலகத்தில் மற்றப் பாகங்களில் உள்ள படித்த வகுப்பைச் சேர்ந்த மக்கள் சட்டம் இயற்றிய தன்மையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் பார்ப்பனர்களுடைய தன்மை மிகமிகக் கொடியதாகும். ஒரு படித்த வகுப்பார், தம்முடைய அறிவுத் திறனை, தம்முடைய நாட்டில் உள்ள கல்வி அறிவு இல்லாத மக்களை எப்பொழுதுமே அறியாமையிலும், வறுமையிலும்,ஆழ்த்தி வைக்க வேண்டும் என்ற கோட்பாடு அமைந்த தத்துவத்தைக் கண்டுபிடிக்கும் முறையில் அறிவை இழிசெயலுக்குப் பயன்படுத்தவில்லை. யாரைப்போல? இந்தியாவில்உள்ள பார்ப்பனர்கள் செய்தது போல் .

 

தம்முடைய மூதாதைகள் உருவாக்கிய இந்தப் பார்ப்பனீயத் தத்துவத்தை இன்று ஒவ்வொரு பார்ப்பனனும் நம்புகிறான். இந்தச் சமுதாயத்திலேயே அவன் ஒரு அந்நியனாக இருக்கிறான். பார்ப்பானை ஒரு பக்கம் நிறுத்தி மற்றொரு பக்கம் சூத்திரர்கள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதுபவர்களையும் நிறுத்தி ஒப்பிட்டுப் பார்த்தால் இந்த இரண்டு பிரிவினரும் அயல் நாட்டினரைப்போல் தான் தோன்றும். ஒரு ஜெர்மானியனுக்கு ஒரு பிரஞ்சுக்காரன் எப்படி அன்னியனோ ஒரு யூதனுக்கு யூதன் அல்லாதவன் எப்படி அன்னியனோ, ஒரு வெள்ளைக் காரனுக்கு ஒரு நீக்ரோ எப்படி அன்னியனோ அதுபோலவே பார்ப்பான் சூத்திரர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும் அன்னியனாவான்.

தாழ்ந்த வகுப்பில் சூத்திர்களுக்கும் தீண்டப்படாதவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமிடையே உண்மையிலேயே ஒரு பெருத்த பிளவு இருக்கத்தான் செய்கிறது. பார்ப்பான், சூத்திரர்களுக்கும் தீண்டப் படாதவர்களுக்கும் அன்னியனாக மட்டும் இல்லை. அவர்களுக்கு விரோதியாகவும் இருக்கிறான். இவர்களுடைய தொடர்பை நினைக்கும் பொழுது மனச்சாட்சிக்கோ, நியாயத்திற்குகோ சிறிதும் இடமில்லை.

————— டாக்டர் அம்பேத்கர் அவர்களால் எழுதப்பட்ட “காந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?” என்ற நூலிலிருந்து - பக்கம் 215-216

http://ambedkarr.wordpress.com/category/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

அன்பார்ந்த சகோதரர்களே, சகோதரிகளே! நான், பஞ்சாப் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று முன்பே எண்ணியிருந்தேன். ஆனால், அதற்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது… நான் இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் செய்து அனைவரிடம் பேச வேண்டும் என்று, இந்தியா முழுவதும் உள்ள தீண்டத்தகாத மக்கள் விரும்புகிறார்கள். இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய துணைக் கண்டத்தில் ஒரு தனி மனிதரால் இரண்டு ஆண்டுகளில் கூட, நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள். எனவே, மக்களின் விருப்பங்களை நிறைவு செய்ய அவர்கள் அழைக்கும் போது என்னால் வர இயலவில்லை. எனவே, நீங்கள் உங்கள் சொந்தக்காலில் நிற்கப் பழகுங்கள். என்னுடைய உதவியின்றி, என்னை அதிகம் சார்ந்து நிற்காமல், நீங்கள் சந்திக்கும் நெருக்கடிகளைச் சமாளிக்க, ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.

Ambedkar ஒரு மனிதன் 52 ஆவது வயதில் அரசியலைவிட்டு விலகிவிட வேண்டும். ஆனால், தற்காலத்தில் உள்ள அரசியல்வாதிகள், 55 வயதுக்குப் பிறகுதான் தங்களுடைய அரசியல் பணியைத் தொடங்குகிறார்கள்; அதற்குப் பிறகு அரசியல் மூலம் தங்கள் வாழ்க்கையை நடத்தலாம் என்று நினைக்கின்றனர். அவர்களுடைய ஒரே நோக்கம், தங்களின் சுயநலன்களுக்காக அரசியலில் இருந்து எதையாவது பெற முடியுமா என்பதுதான். எனக்கு எவ்வித சுயநல எண்ணங்களும் இல்லை. நான் என்னுடைய சமூகத்தின் நலன்களுக்காகவே அரசியலில் இருக்கிறேன். நான் 1920 இல் அரசியல் வாழ்க்கையில் நுழைந்து, இன்றுவரை அதில் என்னை ஈடுபடுத்தி வருகிறேன். என்னுடைய வாழ்க்கையில் என் சமூகத்திற்காக 30 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறேன். அரசியலிலிருந்து விடுபட விரும்பினாலும், என்னுடைய சமூகத்தை ஒன்றிணைப்பதற்கானத் தேவை என்னை அரசியலில் இருக்க கட்டாயப்படுத்துகிறது.

 

இந்த முப்பது ஆண்டுகளில், எட்டு ஆண்டுகள் நான் அரசாங்கத்தில் உறுப்பினராக இருந்தேன். இவ்வளவு நீண்ட நாட்கள் தொடர்ச்சியாக யாரும் அரசியலில் இருந்திருப்பார்களா என்று எனக்குத் தெயவில்லை. நான் விரும்பியிருந்தால், கடைசிவரை அரசாங்கத்தின் பொறுப்பில் நீடித்திருக்க முடியும். நான் இதைப் பெருமைக்காகச் சொல்லவில்லை. எனக்கு இருந்த தகுதிகளுக்கு, நான் அங்கேயே இருக்க வேண்டும் என்று எண்ணியிருந்தால் என்னை நீக்கும் அதிகாரம் யாருக்கும் இருந்திருக்கவில்லை. என்னுடைய சமூகத்தின் நலன்களுக்காகவே நான் காங்கிரஸ் அரசில் இருந்து விலகும் தேவை ஏற்பட்டது. நான் எங்கு சென்றாலும், என்னுடைய சமூகத்தின் நலன்களுக்காகப் பணியாற்றும் எண்ணத்தில் உறுதியாக இருப்பேன் என்று உங்களுக்கு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

 

நான் தத்துவ இயலில் முனைவர் பட்டம் பெற்று, இங்கிலாந்திலிருந்து திரும்பினேன். அப்போது இந்தியாவில் யாருமே அந்த கல்வித் தகுதியைப் பெற்றிருக்கவில்லை. நான் பம்பாய் சென்று ஒரு குக்கிராமத்தில் தங்கியிருந்த போது, யாருக்குமே நான் இருக்கும் இடம் தெரிந்திருக்கவில்லை. இருப்பினும், பம்பாய் அரசு கடும் முயற்சிக்குப் பிறகு என்னுடைய இடத்தைக் கண்டுபிடித்து, அரசியல் பொருளாதாரத் துறையின் பேராசியர் பதவியை நான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என என்னை அணுகியது. நான் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்துவிட்டேன். நான் அந்த வேலையை ஏற்றிருந்தால், குறைந்தது இயக்குநராகவாவது ஆகியிருப்பேன். ஒரு மாதத்திற்குக் குறைந்தது மூன்று அல்லது நான்கு ஆயிரம் ரூபாய்களாவது எனக்கு ஊதியம் கிடைத்திருக்கும்.

 

என்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்ற வேண்டும் என்ற மாபெரும் உணர்வுதான் நான் அந்தப் பணியை ஏற்காததற்குக் காரணம். நான் இந்தப் பணியில் இருந்திருந்தால், சமூகப் பணியாற்றியிருக்க முடியாது. ஓர் அரசுப் பணியாளர், அரசாங்கத்தின் விருப்பத்திற்கேற்ப நடந்து அதன் கொள்கைகளைப் பின்பற்ற முடியுமே தவிர, தன்னுடைய சமூகத்திற்காகப் பணியாற்றிவிட முடியாது.

 

இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் சிறிது பணத்தை சம்பாதித்துவிட்டு, நான் மீண்டும் மேற்படிப்பிற்காக இங்கிலாந்து சென்று “பாஸ்டர்’ ஆகத் திரும்பினேன். நான் பம்பாய்க்குத் திரும்பியதும், மீண்டும் பம்பாய் அரசு மாவட்ட நீதிபதி பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தது. எனக்கு மாத ஊதியமாக 2,000 ரூபாய் அளித்து, சில காலங்கள் கழித்து என்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக்குவதாகவும் உறுதியளித்தது. ஆனால், நான் அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை. பிற வருமானங்கள் மூலம் என்னுடைய வருவாய் அப்போது 200 ரூபாயாக இருப்பினும், நான் இப்பணியை ஏற்கவில்லை.

 

1942 இல் என் முன்பு இரண்டு கேள்விகள் எழுந்தன. ஒன்று, நான் உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றுவது; மற்றொன்று, இந்திய அரசின் “வைசிராய் நிர்வாகக் குழு’வில் உறுப்பினராக இணைந்து பணியாற்றுவது. நான் உயர் நீதிமன்றத்தில் சேர்ந்திருந்தால், ஒரு மாதத்திற்கு 5000 ரூபாய் ஊதியமாகவும், ஓய்வு பெற்ற பிறகு 1000 ரூபாய் ஓய்வூதியமாகவும் பெற்றிருப்பேன். ஆனால், நான் அதைச் செய்யவில்லை. அதற்கு பதில் அரசியலில் நுழைந்தேன். நான் தீண்டத்தகாத சமூகத்தில் பிறந்தேன். அந்தச் சமூகத்திற்காகவே சாவேன். என்னுடைய சமூகத்தின் நலனே வேறு எதைக் காட்டிலும் எனக்கு உயர்ந்ததாகும். நான் எந்தக் கட்சியிலும் எந்தஓர் அமைப்பிலும் சேரவில்லை. காங்கிரஸ் அரசிலும் நான் யாரையும் சார்ந்திராமல் இருந்தேன்; என்னுடைய மக்களுக்கு நான் நேர்மையாக இருந்தேன்.

 

(27.10.1951 அன்று, ஜலந்தரில் ஆற்றிய உரை)

நன்றி:தலித்முரசு

மற்ற கட்டுரைகள் …

Load More