அறிவுக் களஞ்சியம்

"என் வீட்டு பச்சைக்கிளி, நான் வளர்த்த அன்னக்கிளி"

 

இந்தப் பதிவிற்குப் பொருத்தமாக என்ன நிகழ்வைச் சொல்லலாம் என எண்ணியபடியே இன்றைய வெள்ளிக்கிழமைப் பேப்பரைப் புரட்டிக் கொண்டிருந்தேன். 

இந்த நாட்டில் வெள்ளிக்கிழமை சினிமாப் பிரியர்களுக்குக் கொண்டாட்டமான ஒரு நாள்! 

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குறைந்தது ஐந்து அல்லது ஆறு புதுப்படங்கள் வெளியாகும். 

பத்திரிக்கைகளுக்கும் இதன் விமரிசனத்தை எழுத ஒரு 4, 5, பக்கங்களுக்குத் தீனி கிடைத்துவிடும்.

 

ஆம்! இங்கு படம் வந்த அன்றே அத்தனைக்கும் விமரிசனம் ஒவ்வொரு பத்திரிக்கையிலும் வெளியாகிவிடும். 

பார்க்க விரும்பவர்களுக்கு வசதியாக! 

அப்படி என் கண்ணில் பட்ட படக்கதைதான் இப்போது நான் சொல்லப் போவது! 

 

படத்தின் பெயர் 'ஃப்லிக்கா'.[FLICKA].

கதையின் மையக் கருத்து சுருக்கமாகச் சில வரிகளில்!

 

" கேட்[Kate] என்னும் பருவத்தால் குழப்பமடைந்த [ஹரிஹரன் சொல்லாக்கப்படி, "ஹார்மோன்களின் தாக்கத்தால் சுருதி குலைந்த ஹார்மோனியம்"!!] ஒரு பருவப்பெண், பெற்றோர்கள் சொல்படி நடப்பதா, இல்லை தன் எண்ணக்கனவுகளின் படி நடப்பதா என்று ஒரு முடிவுக்கு வர முடியாமல் தவிக்கிறார். 

தற்செயலாக ஒரு காட்டுக் குதிரை [Wild horse] பக்கத்துக் காடுகளில் இருந்து இவருக்குக் கிடைக்கிறது.

அதை தங்களது பண்ணைக்குக்[Ranch] கொண்டு வந்து, கண்டிப்புக்குப் பெயர் போன தன் தந்தையின் எதிப்புக்கிடையே ஒரு பழகிய குதிரையாக்க[Trained horse] முடிவு செய்கிறார். 

 

தந்தையோ ஒரு ஊர் பேர் தெரியாத, ஜாதிக்குதிரையில்லாத, காட்டுக் குதிரை ஒன்று தன் கொட்டடியில் உயர் சாதிக் குதிரைகளுக்கிடையே வளர்ந்து அவற்றோடு கலந்து விடுமே என அஞ்சி, தீர்மானமாக மறுக்கிறார்!!

மேலும், காட்டுக் குதிரைகளைப் பழக்குவதும் கடினமான வேலை. 

 

இதை விட நிகழ்கால நமது நிகழ்வுகளுக்கு ஒரு சிறந்த உதாரணம் கொடுக்க முடியாது!

 

ஆனால் கேட்டோ,[Kate] இந்தக் குதிரையிடம் மனதைப் பறிகொடுத்து விடுகிறார்!

[கேட்ட, அடிக்கடி பார்த்த கதை மாதிரி இல்லை?] 

 

படிப்பு சரியாக வராத கேட்[Kate]டுக்கு அப்பாவிற்குப் பிறகு தானே இந்தப் பண்ணையை பராமரிக்க வேண்டும் என்ற ஆசை.

'நல்ல படிப்பு படித்துப் பெரிய ஆளாகணும், இதையெல்லாம் விட்டு' என்ற வேறு கனவுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இவரது அண்ணனும் இதற்கு உடன்படுகிறார்............ 

இப்படிப் போகிறது கதை. 

குடும்பத்துடன் அனைவரும் சென்று காண வேன்டிய படம் என்று விமரிசகர் சிபாரிசு செய்கிறார்.

 

இதன் மையக் கருத்துதான் நமக்கு இங்கு வேண்டியது.

 

ஏழை, பணக்காரன், உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, படித்தவர், படிக்காதவர் என்று எத்தனை எத்தனை வகைகளிலோ இந்த வயதில் ஒரு ஆர்வம் இவர்களுக்குள் பிறக்கும். 

 

சிறு வயது முதலே ஒரு புரிதலுடன் வளர்க்கப் பட்ட குழந்தைகளும், பெற்றோர்களும் இதைச் சற்று இயல்பாகக் கையாளுவார்கள்.

ஒன்று,.... இது போன்ற நிகழ்வுகள் நடக்கவே வாய்ப்பில்லை; பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டிருந்தால், 

அல்லது, 

அதையும் மீறி இப்படி நடந்தாலும் இது அனேகமாக ஒப்புக் கொள்ளப் பட்டுவிடும். 

அதிக பிரச்சினைகள் வர வாய்ப்பில்லை. 

 

நான் முக்கியமாகச் சொல்ல விரும்புவது இப்படி இல்லாத வீடுகளைப் பற்றித்தான்!

 

இது பற்றி சில தகவல்களைப் போன பதிவில் பார்த்தோம். 

 

எவ்வளவோ கட்டுப்பாடு, கோபதாபம், கண்காணிப்பு, இவையெல்லாவற்றையும் மீறி, இவர்கள் உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது!

 

என்ன செய்ய வேண்டும் பெற்றோர்கள்? 

 

உடனே எரிந்து விழுந்து, கோப வசபட்டு, வாக்குவாதம் முற்றிச் சண்டையில் இறங்கி, அசிங்கப்பட்டுப் போவதே வழக்கமாக நம் காண்பது.

 

அதை விடுத்து, இப்படிச் செய்ய முற்பட்டால், சில நன்மைகள் விளையலாம்.

 

" நீ இது போன்று உன் உடலை மதிக்காமல், உணர்ச்சிக்கு அடிமைப் பட்டு, இப்படி ஒரு செயலில் இறங்கியது எங்களுக்கு மிகவும் வருத்தமா இருக்கு. உன் வயதுக்கோ, அல்லது இப்போதிருக்கும் உடல் வாகுக்கோ இது சரியென்று எனக்குப் படவில்லை. 

ஆனால், முடிவெடுக்கும் உரிமை உன்னுடையது மட்டுமே. 

இதனால் விளையப் போகும் எந்த ஒரு விளைவுக்கும் நீயே பொறுப்பேத்துக்கணும் என்பதையும் மனசுல வெச்சுக்க. 

அதைத் தெளிவாத் தெரிஞ்சிகிட்டு மேற்கொண்டு நீ எந்த முடிவை வேணும்னாலும் எடு. 

18 - 19 வயசெல்லாம் இதற்கான வயசே இல்லை என்பதை மட்டும் நல்லாப் புரிஞ்சுக்கணும் நீ. 

இதுலேர்ந்து வெளியே வர்றதுக்கு என்ன வித உதவின்னாலும் நாங்க செய்யக் காத்துகிட்டு இருக்கோம். 

 

அதையும் மீறி, நீ இதுல தொடரப் போறேன்னா, கர்ப்பத்தடை சாதனங்களைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்க நம்ம லேடி டாக்டரைப் பாக்கறதுக்கு நான் ஏற்பாடு செய்யறேன். 

 

ஆனா, அப்படி ஒரு முடிவு நீ எடுக்கப் போற பட்சத்துல, இங்கே வீட்டில உனக்கு சில சலுகைகள் கடுமையாக்கப் படும், குறைக்கப்படும் அப்படீங்கறதையும் நீ புரிஞ்சுக்கணும். 

டயத்துக்கு வீட்டுக்கு வர்றது, இன்னின்னாரோடதான் பழகணும், ஆம்பளைப் பசங்க வீட்டுக்கு வரக் கூடாது, அப்படீங்கற சில விஷயங்களை நீ ஏத்துக்கணும்."

 

என்பதைத் தீர்மானமாகச் சொல்லுதல் மிகவும் முக்கியம்.

 

இதையே ஒரு சில மாற்றங்களுடன் ஒரு ஆண் பிள்ளைக்கும் சொல்லணும்.

 

நம்ம ஊருல, ஆம்பளைன்னா எது வேணும்னாலும் செய்யலாம்னு ஒரு மனப்பான்மை இருக்கு. 

அது உங்க வீட்டுல வேண்டாமே! 

பெண்ணுக்கு என்ன நீதியோ, அதையே தயங்காமல் ஒரு ஆணுக்கும் செய்ய முற்படுங்கள்.

 

இதைப் பார்த்து ஆணுக்கு உங்களிடம் ஒரு பயம் வரும்.

அவன் தங்கைகளுக்கு ஒரு மரியாதை உங்கள் மேல் பிறக்கும்.

 

முறையற்ற உடலுறவினால், பலவித நோய்களும் வர வாய்ப்பிருக்கிறது என்பதை ஒரு மருத்துவர் மூலமாக இவர்களுக்குத் தெரியப் படுத்தல் மிக அவசியம்.

ஹெர்பிஸ்,[Herpes] கொனோரியா,[gonorrhea] பால் வினை நோய்,[Venereal Disease] HIV/AIDS போன்ற நோய்களுக்கு இதுவே[Sexual intercourse] அடிப்படை நுழைவாயில் [Gateway] என்பது, ஒரு விழிப்புணர்வை இவர்களிடம் ஏற்படுத்தும்.

 

இதைச் செய்வது உங்கள் கடமையும் கூட.

 

இத்துடன், சம்பந்தப்பட்ட பையன் அல்லது பெண்ணின் வீட்டாரோடு ஒரு தகவல் தொடர்பு, நேராகவோ அல்லது மிகவும் நம்பிக்கையான ஒரு நண்பர்/உறவினர் மூலமாகவோ ஏற்படுத்தி, இரு தரப்பையும் விழிப்புடன் இருக்கச் செய்வதும் ஒரு விதத்தில் நல்லதே!

 

ஆனால், இதில் பலவித சிக்கல்கள் இருக்கின்றன.

 

ஏதாவது ஒரு இடம் சற்று மோசமானவர்களாகவோ, அல்லது இந்த சமாதானத் தூதுவரே நாளை வில்லனாக மாறும் அபாயமோ இருக்கிறது!

 

நிலைமைக்கு, சூழ்நிலைக்குத் தக்கவாறு அனுசரித்து நடந்து கொள்ளவும்.

எல்லா இடங்களிலும் இது சரியாக வரும் என்று சொல்லிட முடியாது.

 

மனத்தில் இருத்திக் கொள்ளவேண்டிய ஒரு விஷயம் இது.

 

பதிவுக்குப் பதிவு சொல்லி வருவது போல, 

ஒரு நண்பனாய், 

தோழியாய், 

அக்கறை உள்ள ஆசானாய், 

அன்புள்ளம் கொண்ட தாய் - தந்தையாய் 

இருக்க வேண்டியது உங்கள் தலையாய பொறுப்பு.... நாளைய உலகில் இவர்கள் தலை நிமிர்ந்து வாழ.

 

 

சரி, உடலுறவு கர்ப்பத்தில் கொண்டு வந்து விட்டது!

 

இதை எப்படி எதிர் கொள்ளுவது ?? 

 

தீபாவளி எல்லாம் நல்லபடி முடித்து பட்டாஸெல்லாம் வெடித்துவிட்டு வாருங்கள் !

 

இந்தப் பட்டாஸை அப்புறம் கொளுத்தலாம்!

 

[அப்படியே இன்னொரு முக்கியமான விஷயம்! 

இது போல அனைவரும் மகிழ்ச்சியாகக் கூடியிருக்கும் நேரம் கூட, வாய்ப்பிருந்தால், உங்கள் வயதுக்கு வந்த பெண்ணோடு தனித்துப் பேச ஒரு சந்தர்ப்பம் உள்ள நேரம்தான்! 

முடிந்தால் கொஞ்சம் பேசிப் பாருங்களேன், ப்ளீஸ்!]

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html

"என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய் ?"

 

"பார்த்தீங்களா அவளை? அவ வர்றதும், டக்குன்னு மாடிக்கு போறதும், மணிக்கணக்கா செல் ஃபோன்ல பேசறதும், கண்ட கண்ட நேரத்துக்கு வீட்டுக்கு வர்றதும், .... எனக்கு ஒண்ணும் சரியாப் படலீங்க! கொஞ்சம் கண்டிச்சு வையுங்க அவளை, ஆமாம்!"

 

"ஏண்டி எங்கிட்ட வந்து இத்தெல்லாம் சொல்றே? ஒம் பொண்ணுதானே அவ? நீ பேச வேன்டியதுதானே? அவளைத் தப்பு சொல்றதே ஒனக்கு வழக்கமாப் போச்சு!"

 

"எனக்கென்ன வந்ததுன்னு இருக்க முடியாதுங்க! நீங்க செல்லம் குடுத்துதான் அவ இப்பல்லாம் என்னை மதிக்கறதே இல்லை. ஒங்ககிட்ட வந்து சொன்னேன் பாருங்க! என் புத்தியை செருப்பாலதான் அடிசுக்கணும். எப்படியோ போங்க!"

 

"சரி, இப்ப என்ன ஆச்சுன்னு இந்தக் குதி குதிக்கறே நீ? அவ வரட்டும். நான் பேசறேன்."

 

"இதோ வந்தாச்சு. ரொம்பத் திட்டாதீங்க அவளை. பக்குவமா கேளுங்க!!"

 

"சாந்தி, இங்கே வாம்மா! அப்பா ஒங்கிட்ட ஒரு விஷயம் பேசணும்."

 

"என்னப்பா? சொல்லுங்க. எனக்கு நாளைக்கு ஒரு பேப்பர் சப்மிட்[Paper submit] பண்ணனும். நிறைய நோட்ஸ்[notes] எடுக்கணும். சீக்கிரமா சொல்லுங்க."

 

"அது யாரு அந்த ராஜேஷ்? அவனோட அடிக்கடி சுத்தறேன்னு சொல்றாங்களே ."

 

"என்னப்பா இது? அவன் என்னோட பெஸ்டு ஃப்ரெண்டு. [Best Friend]அவந்தான் இந்த ப்ராஜெக்டுல[project] எனக்கு ஹெல்ப்[help] பண்றான். ரொம்ப நல்லவன்பா அவன். இப்படி கேக்கறீங்களே? சொல்றவன் ஆயிரம் சொல்வாம்ப்பா. நீங்க எதையும் நம்ப வேணாம். வேணும்னா அவன் செல்ஃபோன் நம்பர்[cell phone number] தரேன். நீங்களே அவன் கூட பேசுங்க.".............

 

இது போன்ற காட்சிகள் பலவித மாறுதல்களுடன் அன்றாடம் பல வீடுகளில் அரங்கேறிக் கொண்டுதான் இருக்கிறது.

 

சில சமயம் புரிதல், சில சமயம் வீம்பு, கோபம், தாபம், சந்தேகம், ஆத்திரம், சண்டை, எதிர்த்துப் பேசுதல், என்று மாறுபட்டு இவை நிகழலாம்.

 

ஆனால் அடிப்படைக் கருத்து ஒன்றுதான்.

 

இதுவரை நாம் பார்த்து, நம் பேசக் கேட்டு, நாம் சொல்லி வளர்ந்த பெண்ணோ, பையனோ, இப்போது நம்மிடமிருந்து விலகி, நம்மை அந்நியமாகப் பார்ப்பது போன்ற ஒரு உணர்வை நம்மிடம் ஏற்படுத்தி, நம் வாழ்க்கையே திசை திரும்பி விட்டது போன்ற ஒரு தோற்றம், பயம் நமக்குள் நிகழ்கிறது .

 

இது எதனால்?

 

நம் பார்வை மாறியதா?

இல்லை அவர்கள் மாறி விட்டார்களா?

 

இரண்டும் இல்லை.

 

அவர்கள் வளர்ந்ததை, வளரத் தொடங்கி விட்டதை, நம்மால் ஒப்புக் கொள்ள முடிய வில்லை என்பதே நிஜம்.

 

பாலியல் ரீதியாக மட்டும் இப்போது பார்ப்போம்.

 

வெட்கம், நாணம், திமிர், சுதந்திரப் போக்கு இவையெல்லாம் ஏற்படுகின்ற இக்காலகட்டத்தில், அவர்கள் ஒரு வித துணிந்து செயல் படும்[experimentation] நிலையில் இருக்கிறார்கள்.

 

இதுவரையிலும் அப்படித்தான் இருந்தோம் என்றாலும், திடீரென ஒரு அதிகப்படியான காக்கும் உணர்வு[Protective nature] நமக்குள் வருகிறது.

 

அவர்களுடன் நேரடியாக, நேர்மையாக, அமைதியாக, அவர் உணர்வு புரிந்து நடக்க வேண்டிய இந்த முக்கியமான சமயத்தில், நாம் 

பொறுமை இழப்பதும், 

ஆத்திரப் படுவதும், 

தனித்து இயங்க விடாமல் முட்டுக்கட்டை போடுவதும், 

எது பேசணுமோ அதை விட்டு மற்ற விஷயங்களைப் போட்டுக் குழப்பி பிரச்சினையை மோசமாக்குவதும், 

அவர்களைச் சரியாக நடத்தாதுமான நிகழ்வுகள்தான் நாம் செய்கிறோம்.

 

உதாரணத்துக்கு இந்த உடலுறவு விஷயத்தை எடுத்துக் கொள்வோம்.

 

நம் பெண் கெட்டுப் போய்விடக் கூடாதே, நம் பையன் தப்பா நடக்கக் கூடாதே என்னும் ஆதங்கத்தில், நாம் எத்தனை கட்டுப்பாடுகள் விதிக்கிறோம்?

 

அவையெல்லாம் தவறு என்று சொல்ல வரவில்லை நான்.

 

உடலுறவு என்றால் என்ன, 

எப்போது அது நிகழ வேண்டும், 

பருவம் மாறி நிகழ்வதால் ஏற்படக் கூடிய மாற்று விளைவுகள் என்னென்ன, ஏன் அவசரப் படக் கூடாது, 

அது செய்யாமலேயே அன்பை வெளிக்காட்டுவது எப்படி 

என்பதை அவர்கள் உங்களிடம் இருந்து தெரிந்து கொள்ளுவது நல்லதா அல்லது வேறு யார் மூலமாவதா?

 

இது பற்றிப் பேசுவது சற்று சங்கடமான விஷ்யம்தான் என்றாலும், நீங்கள் பேசுவதுதான் நல்லது.

 

இதை நன்றாகப் புரிந்து கொண்ட வீடுகளில் பிரச்சினைகள் அதிகம் வராது.

 

ஒரு புரிதல் நிகழ வேண்டும் இருவருக்குள்ளும்.

 

"இங்க பாருப்பா, ஒருத்தரோட அன்பா இருக்கறதுல தப்பே இல்லை. 

இப்ப செய்யலைன்னா வேற எப்போ செய்ய முடியும்?

ஆனா, அந்த அன்பை வெளிக்காட்டறதுக்கு, உடலுறவுதான் வழி, அப்போதான் அடுத்தவருக்கு நம்ம மேல ஆசைன்னு தப்புக் கணக்கு போட்டுறக் கூடாது. 

இது அதுக்கான வயசு இல்லை. 

உடலுறவு மூலமா, குழந்தை பிறக்கலாம். 

இல்லை நாங்க தடுப்பு சாதனங்களை உபயோகப் படுத்திப்போம்னு சொன்னா, அதைப் பத்தி நல்லா தெரிஞ்சுக்கணும் நீ. 

இதுதான் வாழ்க்கைன்னு முடிவு பண்ணியாச்சுன்னா, அதை சமாளிக்க வேண்டிய வழி வசதிகள் இருக்கான்னு தீவிரமா யோசிக்கணும்.

நம்ம காலுல நிக்கக் கூடிய சக்தி நமக்கு இருக்கான்னு முதல்ல தீர்மானம் பண்னிக்கணும். 

அது எல்லாத்தையும் விட மிக முக்கியமானது, நீ ஒரு பெரிய இழப்பை இந்த சுகத்துக்காக சம்பாரிச்சுக்கறேங்கறதைப் புரிஞ்சுக்கனும். 

அன்பை வெளிக்காட்டணும்னா, 

நெருங்கிப் பேசறது, 

ரெண்டு பேரும் சேர்ந்து கை கோத்தபடி நடந்துட்டு வர்றது,

பாட்டு, டான்ஸுன்னு போறது, 

ஒருத்தர் கையை ஒருத்தர் புடிச்சுக்கறது, 

இது போல இன்னும் எத்தனையோ இருக்கு. 

இது மூலமா நீங்க ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்க முடியும். 

அப்புறமா, இருக்கவே இருக்கு, கல்யாணம். 

அதுக்கப்புறம் நீங்க என்ன செஞ்சாலும் யார் கேக்கப் போறாங்க? "

 

இது போல வெளிப்படையாகப் பேசினால், அடுத்த முறை அவனோ அல்லது அவளோ மீண்டும் இதற்கு [sexual intercourse] நெருக்கும் போது, தானாக உங்களிடம் ஆலோசனைக்கு வருவார்கள். 

 

இது நிகழ்வது உங்கள் கையில் தான் இருக்கிறது.

 

அதையும் மீறி, உடலுறவில் ஈடுபட்டிருக்கிறார், உங்கள் மகன் அல்லது மகள் எனத் தெரிய வருகிறது.

 

இப்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html

"சட்டி சுட்டதடா! கை விட்டதடா!!"

 

சென்ற பதிவில் சொல்ல விட்டுப் போன ஒரு முக்கியமான நிகழ்வைப் பற்றி சொல்லியபின் மேலே செல்லலாம்.

 

9, 10 பதிவுகளில் "பாலியல் வன்புணர்வுக் கொடுமை"யைப் பற்றி எழுதியிருந்தேன். 

அதற்கு மிகவும் பலியாகுபவர்கள் இந்த 13 முதல் 17 வயது பிள்ளைகளே!

 

ஹார்மோன்களின் சுருதி இன்னும் சரியாக சேராத, உடல் என்னும் ஹார்மோனியத்தில் எழுகின்ற அபஸ்வரங்களால் உந்தப்பட்டோ,[ஹரிஹரனுக்கு நன்றி!] செய்வதின் தீவிரம் புரியாமலோ, அல்லது, அதிகாரம், ஆளுமைக்கு உட்படுத்தப் பட்டோ, இவ்வயதுப் பிள்ளைகள் இந்த வன்புணர்வுக்கு கட்டாயப்படுத்த்ப் படுகிறார்கள். 

எனவே, பெற்றோர் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டிய காலம் இது. அவர்கள் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்து வந்து, அந்த பதிவுகளில் சொல்லிய சில ஆலோசனைகளை மனதில் கொள்ளவும்.

 

மற்றொரு விஷயம்!

 

நண்பர் மா.சிவக்குமார் தனது இன்றையப் பதிவில் நான் பாலியல் பற்றி விவரித்துச் சொல்லாமல் "மிக அடக்கியே வாசிக்கிறேன்" என்ற ஒரு கருத்தினை வைத்திருக்கிறார்.

இந்தப் பதிவு ஒரு விழிப்புணர்வையும், ஆலோசனைகளையும் சொல்லும் நோக்கில் ஆரம்பிக்கப் பட்ட ஒன்று.

சொல்வதென்றால் ஒரு நூறு கதைகள் இருக்கின்றன.

இது போன்ற கதைகள் ஊடகமெங்கும் விரவிக் கிடக்கின்றன.

சராசரி தகப்பன் தாய் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களைப் பற்றி சொல்லவே எண்ணம்.

 

விழிப்புணர்வைத் தருகிறேன் என்று தொலைக்காட்சி தொடர்கள் போல அடுத்தவரை எப்படியெல்லாம் கெடுக்கலாம் என்பதை புதுப்புது வழிகளால் சொல்லித் தந்து இது பற்றி ஒரு தவறான கண்ணோட்டத்தை, எண்ணத்தை விதைக்கக் கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

முன்னரே சொல்லியவண்ணம், பதிவின் இறுதியில் ஒரு சில உபயோகமான சுட்டிகள் தர நினைத்திருக்கிறேன்.

உங்கள் கருத்தை எனக்குத் தெரியப்படுத்தினால் நன்றியுடையவனாக இருப்பேன்.

 

போதும் முன்னுரை! பதிவைத் தொடர்வோம்! [நன்றி கோவி.கண்ணன் மற்றும் சிறில்]

 

ஒவ்வொரு நாட்களும் குழந்தை வளர்ப்பில் ஒரு சவால்தான்!

புதுப்புது வண்ணங்களில் அவை நம்மை எதிர் கொள்ளும்!

 

அப்பாடா! இந்தக் கட்டத்தைத் தாண்டிவிட்டோம், இனிக் கவலையில்லை என ஓய்வெடுக்க முடியாத, ஆனால் ஒவ்வொரு கணமும் இன்பமும், துன்பமும் கலந்து வரும் ஒரு உணர்வுதான் குழந்தை வளர்ப்பென்பது!

 

இதுவரை நாம் பார்த்த 17 வயதுப் பிள்ளைகளை சமாளித்தது ஒரு வகையில் என்றால், இனி வருவதுதான் மிகவும் கடினமான ஒன்று.

ஏன் சொல்லுகிறேன் என்றால், 

இதுவரை அது உங்கள் பிள்ளை. 

ஒவ்வொரு வகுப்பாய் நீங்கள்{!!} வெற்றியடைந்து வந்த போது இருந்த மகிழ்வு, இப்போது வராது.

 

பாஸோ, ஃபெயிலோ, இத்துடன் அது உங்களை விட்டு விலகப் போகிறது.

தானும் இந்த பூவுலகில் ஒரு அங்கம், தனக்கென ஒரு நிலை இனி எனப் பிரியும் நேரம்!

 

இதற்குத்தான் இவ்வளவு பாடுபட்டோம்?, வளர்த்து ஒரு ஆளாக வேண்டும் நம் பிள்ளையும் என்று நீங்கள் உழைத்த உழைப்பெல்லாம் ,

"இதற்கா இவ்வளவு உழைத்தோம்? நம்மை விட்டுப் போவதற்கா?" என நீங்களே எண்ணப் போகும் நேரம்!

அந்த அளவிற்கு உங்களை தள்ளுவார்கள் [push] அவர்கள்!

 

இது பலவேறு முனைகளில் உங்களைத் தாக்குமென்றாலும்,

பாலியல் வழியாக நீங்கள் என்னவெல்லாம் சந்திக்க நேரிடும்; 

அதற்கு நீங்கள் எந்த அளவிற்குத் தயாராக இருக்க முயலலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.

 

இதற்குள், உங்கள் மூலமாகவோ, நண்பர்கள் மூலமோ, வகுப்பறையிலோ பாலியல் பற்றி இதற்குள் அவர்கள் அறிந்திருப்பார்கள். 

ஆனால், எல்லாமும் முழுதுமாகத் தெரிந்து கொண்டிருக்க மட்டார்கள்.

வடிகட்டிய,அல்லது பொறுக்கிய அறிவு [filtered or selective knowledge] என்ற வகையில் தேவைக்கு குறைவாகவோ, அல்லது, மீறியோ பல தகவல்கள் அவர்களுக்குச் சொல்லப் பட்டிருக்கும் இப்போது!

 

அதனை எல்லாம் சரிபடுத்தி, வகைப்படுத்திச் சொல்லிக் கொடுக்க வேண்டிய பொறுப்பு உங்களுடையது!

 

உடலுறவு ஒண்ணும் தப்பில்லடீ!

 

'கை அடிச்சா' 60 சொட்டு ரத்தம் வீணாகும்.

 

அப்பா அம்மால்லாம் பாய் ஃப்ரென்ட்ஸ் வெச்சுக்க எதிரிகள்.

 

காதல்னா நான் கேட்டதெல்லாம் அவ குடுக்கணும் எனக்கு. அப்பத்தான் அது உண்மையான காதல்.

 

இந்த வயசுல அந்த சுகம் அனுபவிச்சுப் பாக்கறதுல ஒண்ணும் தவறில்லை.

 

இது போல பல.

 

சரி, இதையெல்லாம் எப்படி நிவர்த்திப்பது நீங்கள்?

 

ஒரு நல்ல தருணம் வரட்டும்; அப்போது பேசிக்கலாம் என ஒத்திப் போட்டால்.... அந்தத் தருணம் வராமலேயே போயிடும்.

இதை ரொம்ப இயல்பா, நடைமுறை நிகழ்வுகள் மூலமாவே அவங்களுக்கு சொல்ல நாம முற்படணும்.

ஒரு விவாதத்திற்குரிய திரைப்படம்,[ உயிர், காதல், எம்[டன்] மகன் போன்ற திரைப்படங்கள்] ஒரு நல்ல ஆரம்பமாயிருக்கும். [அடிக்க வராதீங்க!]வரிசையா இது மாதிரிப் படங்களாவே பாருங்கன்னு சொல்ல வரலை.

ஆனால், இந்த விஷயம் பத்திப் பேச இது உதவும்னு சொல்றேன்.

இது எல்லாத்துலேயும் ஒரு கருத்து இருக்கு.

 

இதைப் பத்தி இதுக்குள்ளே கல்லூரியில் பேசியிருப்பாங்க இவங்க!

ஒரு சில ஆசீர்வதிக்கப்பட்ட வீடுகளில்,[Blessed homes] இது ஒரு இயல்பாக நிகழும்.

அப்படி நடந்துதான் நம்ம 'மதுரா' இப்படி ஒரு துணிச்சலான, வெளிப்படையான பொண்ணா வெளில வராங்கன்னு நினைக்கிறேன்! [நன்றி மதுரா!]

ஒரு திறந்த மனத்துடன் அணுக வேண்டிய நிகழ்வு [matter] இது.

 

இப்படி இல்லாத வீட்டில்.....,

இதைப்பத்தி பேசறதை கொஞ்சம் 'அடக்கியே வாசிங்க!' [மா. சிவகுமாருக்கு நன்றி!:)

வலிய இதைப் பத்தி பேச ஆரம்பிக்காதீங்க.

 

ஏதாவது ஒரு கேள்வி, ஒரு [கமெண்ட்]கருத்து, வந்ததுன்னா மட்டும் பேசுங்க.

இல்லை, ஒரு பொதுவான கருத்தைச் சொல்லி, அதற்கு ஏதாவது பாதிப்பு அல்லது எதிர்வினை [Reaction] இருக்கான்னு பாருங்க.

 

அப்படி ஏதாவது வந்தா, தனியா அது கிட்ட இதைப் பத்தி பேச்லாம்.

முதலில், அவர்கள் கருத்து என்னவெனப் புரிந்து கொண்டு, அதை ஒட்டி மட்டும் பேசுங்கள்.

 

காரில் போகும் போதோ, இரவில் சமையல் அறையைச் சுத்தம் செய்ய உதவ வரும் போதோ, இல்லை வாசப்படில ரெண்டு பேரும் தனியா உக்காந்து பேசும் போதோ, இது தொடங்கப் படலாம்.

 

அப்படிப் பேசறது ஒரு விவாதமா மாறிடாமப் பாத்துக்கோங்க!

அவங்க இதுல தீவிரமா உங்களை உசுப்பேத்துவாங்க!

நீங்கதான் நிதானமா இருக்கணும்!

"பருவமே புதிய பாடல் பாடு" [தொடர்ச்சி]

 

[பத்து கட்டளைகள்]

 

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம். 

 

மருத்துவன் என்ற முறையில், பல குடும்பங்களுக்கு ஒரு நண்பன், வேண்டியவன் என்று மதிக்கப் பட்டதால்,அவர்கள் குடும்ப நிகழ்வுகளில் நான் விரும்பியோ, விரும்பாமலோ ஈடுபட வேண்டிய அவசியம் பல முறை நிகழ்ந்திருக்கிறது.

 

மாமியார் கொடுமை முதல், குழந்தையின் காதுகுத்து வரை, சம்பந்தமே இல்லாமல், முக்கிய மனிதனாகக் கருதப்பட்டு, ஆலோசனைகளும், பஞ்சாயத்து செய்வதும் சற்றே பழகிப்போன விஷய்ங்கள்!

 

அந்த முறையில் என்னிடம் வந்த ஒரு நிகழ்வு இது.

 

சற்று வசதியான குடும்பம்.

பெண்ணை கான்வென்டில் சேர்த்துப் படிக்க வைத்திருந்தார்கள்.

ஒரு 13 - 14 வயது இருக்கும்.

சென்ற வருடம்தான் வயதுக்கு வந்த சிறுமி.

 

என் க்ளினிக்கிற்கு வந்த ஒரு மூன்றாம் நபர் என்னிடம் ஒரு தகவல் சொன்னார்.

அந்தப் பெண்ணும், இன்னொரு இளவயசுப் பையனும் அடிக்கடி சேர்ந்து சுற்றுவதாக.சொன்னவரிடம் யார் அந்தப் பையன் என்று விசாரித்து,உறுதி செய்து கொண்டு, அவருக்கு நன்றி சொல்லி விட்டு, இரவு வீட்டிற்குச் செல்லுகையில், அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.

 

பழகியவன் என்பதால், எப்போதும் போல் சாதாரணமாக வந்திருப்பதாய் நினைத்து வரவேற்று, ஒரு ஹார்லிக்ஸ் போட்டுக் கொடுத்துவிட்டு[அது வாடிக்கை அந்த வீட்டில் எனக்கு!]ஊர்க்கதை பேச ஆரம்பித்தார் அந்தத் தந்தை.அவரிடம், நான் உங்களிடம் ஒரு செய்தி சொல்லணும். இது போல, விஷயம் என மெதுவாகச் சொன்னேன்.

 

முகம் சிவந்து, பல்லை நற நறவெனக் கடித்து, மனைவியை நோக்கி உறும ஆரம்பித்தார் அவர். 

 

"எல்லாம் இவளால வந்த வினை டாக்டர். எனக்கும் கூட நேற்றுத்தான் இந்த விஷயம் தெரிய வந்தது. இவ கொடுக்கற செல்லத்துல தான் அவ இப்படி ஆடறா" எனப் பொரிந்து தள்ளினார்.

 

இது நான் ஓரளவு எதிர்பார்த்த வினைதான் என்றாலும், இந்த நேரத்திற்கு இது ஆகற கதை இல்லை என்பதால், அவரை மரித்து," இது நேரம் இல்லை பழியை யார் மேல போடறதுங்கறதுக்கு. இப்ப நீங்க என்ன செய்யப் போறீங்க என்று தெரிந்து கொள்ளவே நான் இங்கு வந்தது" என்றேன்.

 

"என்ன செய்யணும்ஙறீங்க? ஸ்கூலை மாத்த வேண்டியதுதான். அவ பின்னாடி கூடமாட போக வேண்டியதுதான் இனிமேல. வேர என்ன பண்னணும்னு சொல்லுங்க" என்றதும் எனக்கு வருத்தமாய் போய் விட்டது.

 

அடுத்தவர் மீது பழி போடலும், மகளைத் தண்டித்தலும் இரண்டுமே எனக்கு சரியாகப் படவில்லை.

 

அவரைப் பார்த்து,

"இது சரியானதாகத் தோன்றவில்லை. உங்க குடும்பத்துல ஒருத்தன் மாதிரி என்னை நடத்துவதால் நான் சொல்றதை நீங்க கேக்கணும். கோபப்படாம நிங்க உங்க பெண்ணொட பேசணும். என்னன்னு விசாரிக்கணும். அவங்க ரெண்டு பேரும் ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸாக் [Just friends]கூட இருக்கலாம். அப்படித்தான் அது சொல்லும். அதை நீங்க நம்பணும். அட் லீஸ்ட் [at least] நம்பற மாதிரியாவது நடிக்கணும். பிறகு, பொறுமையா, ஆத்திரப்படாம, அவ கிட்ட, இது எப்படியெல்லாம் அவளையும், நம்ம குடும்பத்தையும் பாதிக்கும், இதுல என்னவெல்லாம் கவனமா இருக்க வேண்டிய விஷயம் இருக்குங்கறதை தெளிவா புரியும்படி சொல்லணும். பருவ காலத்துல இது மாதிரியான சில விஷயங்கள் நடக்கரது சகஜம்தான். இதைப் பெரிசு படுத்தி, அது அவமானப் படற மாதிரியோ, இல்லை மனசு பாதிக்கற மாதிரியோ நடந்துகிட்டீங்கன்னா, அப்புறம் உங்க பொண்ணு எப்பவும் உங்களை மன்னிக்காது. எனக்கும் அந்தப் பையனோட வீட்டைத் தெரியும். நான் அவங்க கிட்ட பக்குவமா இதைப் பத்தி சொல்லி அங்கேயும் பேசச் சொல்றேன். ஆனா, நிதானமும் பொறுமையும் மிக மிக அவசியம் இதுல" என்றேன்.

 

அது போலவே நடந்து எல்லாம் சரியானது தனிக்கதை. 

இங்கு வேண்டாம்.

 

இதுதாங்க விஷயம்.

பருவம் ஆரம்பிக்கற நேரத்துல, ஒரு சில மாற்றங்கள் உடல் ரீதியாகவும், உணர்ச்சிகள் ரீதியாகவும் நடக்குது.

 

இதுல பெற்றோர்களின் பங்கு என்ன, எப்படி நடந்துக்கணும் அவங்க என்பதைப் பார்ப்போம்.

 

ரொம்ப பெருசா பதிவு இருந்தா, நிறையப் பேரு படிக்க மாட்டாங்கன்னு எனக்கு ஒரு சக பதிவர் எச்சரித்ததால் கொஞ்சம் சுருக்கமா சொல்றேன்.

 

பத்து கட்டளைகள்

 

1. இந்தப் பதிவைப் படிக்கறவங்களுக்கு பல்வேறு வயதுகளில் குழந்தைகள் இருக்கலாம்.அதனால, சில பேர் இப்பத்தான் இதைப் பத்தி தெரிஞ்சுக்கற நிலையிலும் இருக்கலாம்.அவங்க எல்லாருக்கும் ஒரு வார்த்தை.இதுதான் கடைசி நிலை.இப்ப விட்டீங்கன்னா, அவங்களை நீங்க பிடிக்கவே முடியாது. என் பெண், பையன் தப்பு பண்ண மாட்டான் என்கிற மனோபாவத்தைத் தூக்கி எறியுங்க. 

 

2. உடல் உறவு சம்பந்தமா உங்க குடும்ப வழக்கங்களைத் தெளிவாக பையன் பிள்ளைகளுக்கு, இதுவரை சொன்னது இல்லைன்னா, இப்பவாவது சொல்லியே ஆகணும். உடல் உறவு என்பது ஒரு இனிமையான அனுபவம்தான் என்றாலும், சற்று மன முதிர்ச்சி அடைந்த பின்னர் இதில் ஈடுபடுவதுதான் உடலுக்கும், உள்ளத்திற்கும் நல்லது என்பதை அழுத்தமாகப் பதிய வைக்க வேண்டும்.

 

3. நெருங்கிப் பழகவும், அன்பைக் காட்டவும், உடல் உறவைத் தவிர பல வழிகள் உண்டென்பதைச் சொல்லிக் கொடுக்கணும்.

 

4. வயது, இருவரின் உடன்பாடு,[consensus] தடுப்பு முறைகள்,[contraception] அன்பு, [love], காதல்,[love for a particular person], நெருக்கம் [intimcy] அதனால் ஏற்படும் விளைவுகள் இவை பற்றி எல்லாம் ஒரு தெளிவான புரிதலை அவர்களுக்குக் கொடுப்பது மிகவும் தேவையான ஒன்று.

 

5. 'வேண்டாம்'[NO] 'கூடாது' [DON'T] என்ற சொற்களின் முக்கியத்துவத்தை ஆழமாக்ப் பதிய வைக்க வேண்டும்.

 

6. இது உன் உடல், உள்ளம். உன் சம்மதமின்றி எவருக்கும் இதில் ஆளுகை புரிய அதிகாரமில்லை. இதற்கான முடிவெடுக்கும் திறமையும், அதிகாரமும், உனக்கு மட்டுமே உள்ளது என்பதையும் அந்த உறுதி வளரும் வரை, பெற்றவர் துணையை நாடி இருப்பதின் அவசியத்தையும் வேரூன்றச் செய்ய வேண்டும்.

 

7. எதையும் அடுத்தவரிடம் சொல்லுதற்குப் பதிலாக, பெற்றவரிடம் வந்து சொல்லலாம் என்ற நம்பிக்கையை அவர்கள் மனதில் பதிப்பதில் உங்களுக்குப் பெரிய பொறுப்பு இருக்கிறது. குடும்பச் சூழலை அப்படி அமைத்துக் கொள்வதில், அப்பா, அம்மா இருவருக்குமே சம பங்கு இருக்கிறது. குழந்தைகள் உங்களைப் பார்த்து பயப்படும்படி செய்வதில் இனிமேல் ஒரு பெருமையும் இல்லை. மாறாகக் கேடுகளே விளயும். ஒரு நண்பனாக, தோழியாக உங்களைக் கருதுமாறு, அதே சமயம் உங்கள் மரியாதை குறையா வண்னம் நடந்து கொள்வதில் தான் உங்கள் திறமை இருக்கிறது.

 

8. தவறுதலாகவோ, தெரியமலோ அப்படி ஏதாவது அசம்பாவிதமாக நடந்து விட்டாலும், அதை எப்படி எதிர் கொள்ள வேண்டும் என்பதில், உங்கள் குடும்ப மரபின் படி தீர்மானமாக இருப்பது நன்மை பயக்கும். கருத்தடையோ,[contraceptives], சிதைவோ[abortion], வளர்ப்போ,[parenting] தத்து கொடுத்தலோ,[adoption] இவையெல்லாம் கூட சற்று முன்கூட்டியே இருவரும் கலந்து பேசி ஒரு முடிவு செய்து வைத்துக் கொண்டால் கூட தவறில்லை. எதற்குச் சொல்கிறேன் என்றால், இதில் ஒரு தெளிவு இல்லையெனில், பிரச்சினை என்று வரும் பொது, இதன் மூலம் பலவித சங்கடமான விளைவுகள் வரலாம். இது நிகழும், நிகழ வேண்டும் என்ரு சொல்லவில்லை. ஆனால் ஒரு நிலைப்பாடு இருப்பது நல்லதல்லவா?

 

9. எப்படியெல்லம் ஒரு சிலரால் உடலுக்கும், மனதுக்கும் கேடு[abuse] விளவிக்க முடியும், அதற்கு எப்படி நாம் கவனமாக இருக்க வேண்டும் என்பதை TV பார்க்கும் போதோ, அல்லது இது போன்ற நிகழ்வு ஒன்று அக்கம்பக்கத்தில் நடந்தாலோ, அந்த சந்தர்ப்பங்களைப் பயன் படுத்திக் கொண்டு, ஒரு ஆரோக்கியமான விவாதம் நடப்பது இவர்களுக்குப் பெரிதும் உதவும் .

 

10. பருவம் என்றதுமே, உடனே அது உடல் உறவு, திருமணம் பிள்ளை பெற்றுக் கொள்ளல், குடும்பம் நடத்துதல் என்றுதான் இல்லாமல், இது தவிர ஒரு சிலர், தனித்தும் இருக்க , இதிலெல்லாம் ஆர்வம் இல்லாமல் இருக்கவும் கூட வாய்ப்புண்டு என்பதையும் சொல்லித் தர வேண்டும். இல்லையென்றால், நாம் ஏதோ சமூகத்தில் சேராத பிறவி என்ற தாழ்வு மனப்பான்மை வராமல் தடுக்க இது பயன்படும்.

 

அன்பும்,[love], பாசமும், [affection], குடும்ப நிலைகளும் [family values] காட்டி, பொறுமையுடனும், நிதானமாகவும் செய்தால் ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தையை நல்ல வழியில் கொண்டு செல்ல முடியும், ஒரு அளவு வரை..... அவர்கள் தாங்கள் யார், தனக்கு என்ன வேண்டும், தன்னால் என்ன முடியும் என்ற தன்னம்பிக்கை அவர்களுக்குள் வரும் வரை.

 

அதன் பிறகு.....?

 

அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்!

 

கவலைப் படாதீர்கள்.

உங்கள் கட்டுப்பாட்டை மீறிச் செல்லும் நிலை அடுத்தது!

 

பெற்றவர்கள் அஞ்சும் அந்தப் பதினெட்டு!

"பருவமே! புதிய பாடல் பாடு"

 

இதுவரை சிறு குழந்தையில் இருந்து 12 வயது வரையான குழந்தைகளின் நிலைகளில் பெற்றோர் செய்ய வேண்டியது என்ன என்று பார்த்தோம்.

 

இதிலேயே மலைத்துப் போய் பாதிப்பேர் காணாமல் போய்விட்டார்கள்!

 

எடுத்த காரியத்தை முடிக்காமல் விடக் கூடாது என்பதால் மிகுதியையும் சொல்லாமல் போகப்போவதில்லை நான்!

 

 

இதுவரை படித்ததே அதிகம் என நீங்கள் நினைத்தால்...... இனிமேல்தான் முக்கியமான சவாலே வருகிறது என்பதை உணர்ந்தால் என்ன செய்வீர்களோ?

 

ஆம்!

 

இதுவரை நம் பேச்சைக் கேட்டு, நமக்கு ஆசையான குழந்தையாய், நம் கனவுகளின் அஸ்திவாரமாய் இருந்த உங்கள் குழந்தை இப்போது தான் யார், தன்னால் என்ன செய்ய முடியும் என்று தானே உணரும் அந்த இனிய நிகழ்வு நடைபெறப்போகும் நல்ல நேரம் வருவதை உணரும், ஒரு மானுடமாய் மாறப்போகும் அதிசயத் தருணம் இப்போது நடக்கப் போகிறது!

 

மனித வளர்ச்சி என்பது படிப்படியாய் நிகழ்வதல்ல.அது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு.

 

ஆனால், அதிலும் ஒரு மூன்று நிலைகளை பொதுவாகப் பிரிக்கலாம்.

 

குழந்தை, 

வளர் சிதைப் பருவம், 

வயது வந்தவர் என.

 

இதுவரை நாம் முதல் இரண்டு நிலைகளைப் பார்த்தோம்.

 

இப்போதுதான் அந்த முக்கியமான தருணம், ........ நம் வாழ்வை நிர்ணயிக்கப் போகும், நமக்கு ஏற்படப்போகிற அத்துணை மாற்றங்களுக்கும் அடித்தளமாய் அமையப் போகிற அந்த 'பருவம் அடைதல்' என்னும் மாற்றம் இக்குழந்தைகளுக்கு நிகழ்கிறது.

 

இந்நிலைக்குப் பிறகு இவர்களுக்கு இரண்டே இரண்டு வழிகள்தான் இனிமேல்.

 

தன்னை உணர்ந்து, தன் நிலை அறிந்து, தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் மதித்து தரணியில் ஒரு நல்ல இடத்தை அடைவது ஒன்று.

 

தனக்கு நேர்ந்த இம்மாற்றத்தை தவறாகப் புரிந்து கொண்டு, தறுதலையாகி, தான், தன் சுகம் என தனக்கு ஒரு வழியமைத்து, அதற்கென தன்னையே பறிகொடுத்து, தறி கெட்டுப் போவது இன்னொன்று.

 

அதனால்தான் நம் முன்னோர்கள் மிக அழகாக, இதை'வயதுக்கு வருதல்' என்று சொல்லி வைத்தனர்.

 

இதுவரை வாழ்ந்த வருடங்கள் ஒரு வயதல்ல. 

இனிமேல் வாழப்போகும் வருடங்களும் ஒரு வயதல்ல.

இன்று, இது நிகழ்வதுதான் ஒரு திருப்புமுனை எனத் தெளிவாக சொல்லியிருக்கிறார்கள்.

 

இப்போது என்ன நிகழ்கிறது?

 

உடல் ரீதியாகவும், பழகுமுறை ரீதியாகவும், வளர்ச்சி ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்கின்றன இப்பருவத்தில்.

 

இவையெல்லாம் விரித்துக் கூறுதல் இப்பதிவின் நோக்கமில்லையெனினும், பாலியல் வழியில் இவை ஒவ்வொன்றும் எப்படி இவர்களை பாதிக்கின்றது அதற்கு பெற்றோர்கள் எந்த வகையில் தயாராக இருக்க வேண்டும் என்பதை மட்டும் இங்கு சொல்ல விரும்புகிறேன். 

 

இதுவரை பார்த்த உங்கள் மகனோ அல்லது மகளோ வேறு, இனிமேல் பார்க்கப்போகும் பிள்ளை வேறு என்பதை உணர முடியாத பெற்றோர்களே அதிக அள்வில் இந்நேரம் தொடங்கி அவதிப்படுகிறார்கள்.

 

"நான் பாத்து வளந்த புள்ளை; எனக்குத் தெரியாதா அதை பத்தி?" என்னும் மனோநிலையையே பெரும்பாலான பெற்றோர்கள் கைக்கொள்ளுகின்றனர்..... நடப்பதை அறியாமல்.

 

அப்படி என்னதான் ஆகிறது இந்தக் குழந்தைகளுக்கு?

 

உடல் ரீதியாக,

குழந்தைப் பருவம் கழிந்து மனித நிலையை அடைவதும்,

இதுவரை காணாத உடல் வளர்ச்சியைக் காணுவதும்,

 

வளர்ச்சி ரீதியாக,

தனித்து முடிவெடுக்கும், நல்லது, கெட்டது எனத் தானே ஒரு முடிவு எடுக்கும் திறமை தனக்கு வந்து விட்டதாக நினைக்கும் மன நிலையும்,

இதற்கு உதவி புரிய இதுவரை நம்பியிருந்த பெற்றோரைப் புறந்தள்ளி, நண்பரை நாடும் மன நிலையும்,

இதுகாறும் பெற்றோரை எதிர்பார்த்து செய்து வந்த சில செயல்களை, [உணவில் தொடங்கி உடை அலங்காரம் வரை,] தானே செய்து கொள்ள முடியும் என்ற மனத்திடமும்,

தன்னிச்சைப் போக்கும், நாட்டமும்,

 

உணர்வு பூர்வமாக,

நீடித்து நிற்கக்கூடிய நட்பு, உறவு இவைகளை தானே அமைத்துக் கொள்ளும் திறனும்,

தன் உணர்வை எந்த வகையிலேனும் தனித்து காட்டக் கூடிய மன உறுதியும்,

எப்படி தன்னை யார் எனக் காட்டிக் கொள்ள முடியும் என்ற வீராப்பும்,

 

ஒரு சில ஹார்மோன்கள் சுரக்க ஆரம்பிப்பதன் மூலம் தன்னை அறியாமலேயே இவர்களை வந்தடைகின்றன!

 

இவை அனைத்தும் வெளிப்படும் ஒரே நிலை பாலியல் மூலம் என்று நான் சொன்னால் நம்ப மாட்டீர்கள்; 

ஆனால் இதுதான் உண்மை என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்திச் சொல்லுகின்றனர்!

 

தனது அத்தனை மாற்றங்களையும் பாலியல் வழியாகவே நிலை நிறுத்தி, தன் தனித்துவத்தை பறை சாற்றிக் கொள்ளுகின்றனர் இவர்கள்.

 

இது புரிந்த பெற்றோர்கள் குறைவு!புரியாமல் குழம்பி, தன்னையும் வருத்தி, பிள்ளையையும் வருத்தி சங்கடப்படுபவர்களே மிக அதிகம்!

 

"அப்படி என்னதான் பாலியல் மூலம் வெளிப்படுத்துகிறார்கள், கொஞ்சம் சொல்லுங்களேன் பார்ப்போம்" என நீங்கள் சவால் விடுவது எனக்குக் கேட்கிறது.

 

மனதை திடப் படுத்திக் கொண்டு படியுங்கள். 

நான் சொல்லுவது அனைத்தும் உண்மை; உண்மையைத்தவிர வேறில்லை எனச் சொல்லி தொடங்குகிறேன்!

அடைப்புக் குறிகளில் பெரும்பாலான, [இதுவரை குழந்தைகளை சரியாக வளர்க்காத] பெற்றோர்களின் மன நிலையைச் சொல்லியிருக்கிறேன். 

இது பொதுவான ஒரு கருத்து தான்!

என் பிள்ளை அப்படி இல்லை என்பவர்களுக்கு என் வந்தனம்!

 

இவர்களுக்கு தன்னுடைய பாலியல் மாற்றத்தால், பருவ மறுதலால் தன்னுள் ஏற்பட்ட மாற்றம் என்ன என்பது நன்றாகத் தெரியும்!

 

[அது சின்னப் புள்ளைங்க! அதுக்கு ஒண்ணும் தெரியாது. பச்சைப் புள்ளைங்க அது!]

 

உடல் உறவு தவிர்த்து என்னென்ன வகையில் தன் பாலியல் மாற்றத்தை வெளிப்படுத்த முடியும் என்பது இவர்களுக்கு நன்றாகவே தெரியும்.

 

[வெகுளியா சிரிச்சுத்தாங்க அது பேசும். விகல்பம் இல்லாம எல்லோரோடேயும் சகஜமாப் பழகும்]

 

நல்ல உறவு எது, தீய உறவு எது என்பது தெரியும். 

தனக்குப் பிடித்த அம்சங்கள் இருப்பின் எந்த உறவும் அசைக்க முடியாத நல்ல உறவே!

 

[ஒண்ணும் தெரியாத புள்ளைங்க அது! வெளுத்ததெல்லாம் பாலுன்னு நம்பிடும்.]

 

கர்ப்பம் அடைய தன்னால் முடியும் எனத் தெரியும். அதைத் தடுக்க வழிகள் உண்டெனவும் தெரியும்.

 

[கள்ளம் கபடு இல்லாத பொண்ணுங்க அது. இப்படியெல்லாம் நடக்குமின்னு அதுக்கு தெரியாதுங்க. எந்த பாவி மகனோ கெடுத்துட்டான்]

 

[என் பையன் நான் கிழிச்ச கோட்டைத் தாண்ட மாட்டான். அவன் உண்டு அவன் படிப்பு உண்டுன்னு தான் இருப்பான். அவன் இப்ப்டி பண்ணினதுக்கு எந்த சிறுக்கி மகளோதான் காரணம். வலை விரிச்சு வசியம் பண்ணிட்டா!]

 

தனது பாலியல் கவர்ச்சியை எப்படி வெளிக்காட்டுவது எனத் தெரியும்.

 

[அந்த மேனாமினுக்கி அசைஞ்சு, ஒடிஞ்சு நடந்து வரும் போதே தெரியும். இப்படி ஏதாவது எம் புள்ளை மேல அபாண்டமா பழி போடுவான்னு!]

 

[கண்ணாடி முன்னாடி என்னடி அவ்வளவு நேரமா நின்னுண்டு இருக்கே! எவனுக்காக இந்த சிங்காரம்?]

 

"அவ/அவன் இல்லேன்னா நான் உயிரோட இருப்பேன்னு கனவு கூட காணாதே" என்று வீர வசனம் பேசத் தெரியும்.

 

[ஐயோ, ஐயோ எவளோ எம் புள்ளைக்கு மை வெச்சுட்டாளே! நான் என்ன பண்ணுவேன்!]

 

[ஏண்டி! நீ இப்படில்லாம் பேசறவ இல்லையேடி. யார்றீ சொல்லிக் கொடுத்தா இதெல்லாம்?]

 

என்ன? நினைவுலதான் இருக்கீங்கல்ல! இல்லை மயங்கி விழுந்துட்டீங்களா? 

 

நான் சொன்னது எதுலியாவது தப்பு இருந்தா சொல்லுங்க.

 

சரி, இது நிகழாமல் இருக்கணும்னா பெற்றோர்களாகிய நாம் என்ன பண்ணனும்?

 

அடுத்த பதிவில் பார்க்கலாம்!

 

http://kasadara.blogspot.com/2006_10_01_archive.html

மற்ற கட்டுரைகள் …

உட்பிரிவுகள்

Load More