Language Selection

புதிய ஜனநாயகம்

தாராளமயத்தால் இந்தியா ஒளிர்வதாக ஆளும் வர்க்கங்களும் ஊடகங்களும் சித்தரித்துவரும் அதேவேளையில், அத்தாராளமயமாக்கம் இந்தியாவின் கிராமப்புறங்களில் அமைதியாக நரவேட்டையை நடத்திக் கொண்டிருக்கிறது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கடன் சுமையால் தற்கொலை செய்து கொள்ளும் கொடுமை இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இஸ்லாமிய பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட "இந்தியர்'களின் எண்ணிக்கையை விட, சந்தை பயங்கரவாதத்தால் கொல்லப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதைப் புள்ளிவிவரங்கள் நிரூபித்துக் காட்டுகின்றன.

எகிப்து, துனிசியா, பஹ்ரைன், ஏமன், ஜோர்டான், லிபியா உள்ளிட்ட பல்வேறு அரபு நாடுகளில் நடந்து வரும் போராட்டங்கள் பற்றி வெளிவரும் பெரும்பாலான செய்திகள், விமர்சனக் கட்டுரைகள் அந்நாடுகளில் நடந்துவரும் சர்வாதிகார ஆட்சி, போலீசு ஒடுக்குமுறை, வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய பிரச்சினைகளை அம்பலப்படுத்துவதற்கு அப்பால் செல்லுவதில்லை. குறிப்பாக, இப்போராட்டங்களுக்கும் அந்நாடுகளில் நிலவிவரும் பொருளாதாரக் கட்டமைப்பிற்கும் இடையேயுள்ள உறவு பற்றியோ, அந்நாடுகளில் நிலவிவரும் சர்வாதிகார அல்லது மன்னராட்சிக்கும் தனியார்மயம்  தாராளமயத்திற்கும் இடையேயான உறவு பற்றியேர் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள் இச்சர்வாதிகார அல்லது மன்னராட்சியைப் பயன்படுத்திக் கொண்டு அந்நாடுகளின் விவசாயம், தொழில் மற்றும் நிதித் துறைகளையும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட இயற்கை வளங்களையும் கைப்பற்றிக்கொண்டு கொழுத்த ஆதாயம் அடைந்துவருவது பற்றியேர் அமெரிக்கா இச்சர்வாதிகார அல்லது மன்னராட்சியைப் பாதுகாப்பதற்காகவே எகிப்திற்கும், துனிசியாவிற்கும், ஜோர்டானுக்கும் பொருளாதார, இராணுவ நிதியுதவிகளை அளித்துவருவது பற்றியோ முதலாளித்துவ அரசியல் விமர்சகர்கள் முழுமையாக எழுதுவதில்லை.

ஜப்பானில் கடந்த மார்ச் 11 அன்று ஏற்பட்ட பூகம்பம்  சுனாமியால், ஃபுகுஷிமா டாய்ச்சி அணு மின்நிலைய அணு உலைகள் பகுதியளவிற்கு உருகிப் போனதையடுத்து, உலகெங்குமே அணு உலைகளின் பாதுகாப்பு குறித்தும், அவை ஏற்படுத்தும் கதிர்வீச்சு அபாயம் குறித்தும் அச்சங்கள் எழுப்பப்பட்டு வருவதையும், அணு மின் உலைகளுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்து வருவதையும் எள்ளளவும் பொருட்படுத்தாது, மராட்டிய மாநிலம் ஜெய்தாப்பூரில் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட 6 அணு உலைகளுடன் கூடிய மிகப் பெரிய அணுமின்நிலைய வளாகத்தை அமைத்திட மையஅரசு தீவிரமாக முயன்று வருகிறது. இந்த அணு மின் நிலையவளாகத் திட்டத்தை எதிர்த்து அப்பகுதி மக்கள் நடத்தி வரும் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மாண்டுபோனார்.

காட்டு வேட்டையின் கொடுங்கரங்கள் கடந்த மார்ச் மாதம் சட்டிஸ்கர் மாநிலத்தின் மூன்று கிராமங்களை உருத்தெரியாமல் சிதைத்துவிட்டன. தேடுதல் வேட்டை என்ற பெயரில் துணை இராணுவமும், சட்டிஸ்கர் மாநில போலீசும் இணைந்து ஐந்து நாட்கள் நடத்திய இந்தத் தாக்குதலில் மூன்று அப்பாவிகள் கொல்லப்பட்டனர்; பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தப்பட்டனர்; முன்னூறுக்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன் நூற்றுக்கணக்கான அப்பாவிகள் கொடூரமாகத் தாக்கப்பட்டனர்; மேலும், தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிசெய்யச் சென்ற சுவாமி அக்னிவேஷ் உள்ளிட்ட சமூக சேவகர்களையும் மனித உரிமை அமைப்புகளைச் சேர்ந்த செயல்வீரர்களையும்கூட அரசுப் படைகள் தாக்கி விரட்டியடித்து, பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்கு எந்தவிதமான நிவாரண உதவியும் கிடைத்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருந்து செயல்பட்டன.

பத்திரிகைகளும், தனியார் தொலைக்காட்சி ஊடகங்களும் கடந்த ஏப்ரல் மாதத்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஆகியவற்றுக்கு இணையாக முக்கியத்துவம் அளித்து விளம்பரப்படுத்திய நிகழ்ச்சி அண்ணா ஹஸாரே தனது ஆதரவாளர்களுடன் டெல்லியில் நடத்திய உண்ணா விரதப் போராட்டமாகத்தான் இருக்கும். "ஊழல் தடுப்பு ஆணைய மக்கள் வரைவுச் சட்டத்தை உருவாக்குவதற்கான கமிட்டியை அமைத்து, அதில் குடிமைச் சமூக அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்க வேண்டும்; அக்கமிட்டி அரசு உருவாக்கியிருக்கும் ஊழல் தடுப்பு ஆணைய வரைவுச் சட்டத்தை மட்டுமின்றி, இது தொடர்பாக ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் உருவாக்கியிருக்கும் வரைவுச் சட்டத்தையும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்' எனக் குடிமைச் சமூக அமைப்புகள் முன்வைத்த கோரிக்கைகளை மைய அரசு ஏற்றுக்கொண்டதையடுத்து, அண்ணா ஹஸாரே தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.