Language Selection

பி.இரயாகரன் -2011
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புலிக் குழுக்களுக்கான உள்ளார்ந்த அடிப்படை என்ன? ஏன் தமக்குள் மோதுகின்றன? இதற்கான பின்னணி என்ன? இவை எதில் இருந்து தோன்றுகின்றது? பகுத்தறிவுள்ள ஒவ்வொருவரும் கேட்ட வேண்டிய கேள்வி. இதைக் கேட்காதவன், விடை காணமுடியாதவன் பகுத்தறிவு அற்றவன். மந்தைத்தனத்தை, எடுபிடித்தனத்தையும் தாண்டிய சுயஅறிவுள்ள மனிதர்கள் அல்ல.

இந்த குழுக்களின் பின்னணி என்ன என்று பார்ப்போம். மக்களைச் சார்ந்து அரசியல் செல்வாக்கு பெற்ற தலைவர்களின் பின்னணியில், இந்தக் குழுக்கள் தோன்றவில்லை, அதைச் சார்ந்து அவர்கள் மோதவில்லை. இந்தக் குழுக்கள் முன்வைக்கும் அரசியல் செல்வாக்கு சார்ந்த மக்கள் பலத்துடன், இந்த குழுக்கள் தோன்றவில்லை, மோதலும் நடக்கவில்லை. ஆக இங்கு மக்கள் மந்தைகள். ஆக மோதலின் பின்புலம் என்ன? சட்டப்படியான புலிப் பினாமிச் சொத்துடமைகள் அங்குமிங்குமாக பிரிந்து கிடப்பதால், அதை கைப்பற்றவும் தற்காக்கவும் நடக்கும் தனிநபர்களுக்கு இடையேயான மோதல் தான், இன்று குழு வடிவம் பெற்று நிற்கின்றது. இதை மூடிமறைக்க, மக்களை ஏய்க்க அரசியல் வேஷம்.

இப்படி அரசியல் பேசி மக்களை ஏமாற்றி மேய்த்துப் பிழைக்கும் மாபியாக் கூட்டதுக்குள்ளான இன்றைய மோதல், வெளிப்படையாக "மாவீரர்" மீதான உரிமை கோரலுடன் உச்சத்துக்கு வந்துள்ளது. பகுத்தறிவற்று அவர்களுடன் சேர்ந்து மேய்ந்த மந்தைக் கூட்டத்துக்கு, இந்த மோதல் ஏன்? எதற்காக? என்று தெரியாது பகுத்தறிவற்று விழிபிதுங்கி நிற்கின்றது. யாருடன் தாம் செல்வது என்பது முதல் இவர்கள் யார் என்று தெரியாத சூக்குமத்தில், பெரும்பான்மை திகைத்து நிற்கின்றது. இதன் பின்னணியில் எத்தனை குழுக்கள், யார் எந்தப் பக்கம், என்று எதுவும் தெரியாத புதிர்கள் கொண்ட சூழல். இதன் பின்னணியில் அங்குமிங்குமாக எண்ணற்ற அவதூறுகள் முதல் பல போட்டி அறிக்கைகள். சுத்துமாத்து அறிக்கைகள். இங்கு என்னதான் நடக்கின்றது என்பதை புரிந்துகொள்வதாக இருந்தால், நாம் தலைகீழாக நடந்தாகவேண்டும். இதனால் தமிழ்மக்களுக்கு என்ன நன்மை என்று கேட்டால், எதுவுமில்லை. இவர்கள் பிரநிதித்துவப்படுத்தும் இயக்கத்தால் கடந்தகாலத்தில் தமிழ்மக்கள் என்ன நன்மை பெற்றார்கள் என்று கேட்டால், எதுவுமில்லை. இனத்தை அழித்து அவர்களை கொள்ளையிட்டு வாழ்ந்த மாபியாக் கூட்டம் உருவானதுடன், இன்று அவர்கள் மோதிக்கொள்வதும் தான் எஞ்சியது. இதைத்தான் தமிழ் மக்கள் கண்டது. இவர்களும் இல்லாமல் இருந்தால்தான், தமிழ் மக்களுக்கு நன்மையாகும். புலி மாபியாச் சொத்து இருக்கும் வரை, புலத்து தமிழ்மக்களை மந்தையாக மேய்க்கும் இந்த மாபியாக் கும்பல் அரசியலும் அடிதடியுடன் தொடரும். இதுதான் இன்றைய புலத்து எதார்த்தம்.

அரசு புலிக்கு இடையிலான இறுதி யுத்தம், புலியைப் பற்றி பரந்துபட்ட மக்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்ச மாயையையும் தகர்த்தது. வன்னி மக்கள் அரசின் கொடுமையான கொடூரமான படுகொலைகளை மட்டும் அனுபவிக்கவில்லை, மக்களுக்காக போராடுவதாக கூறிய புலிகள் மக்களை பலியிட்டும், பலியீட்டுக்கு உடன்படாதவர்கள் மேலான கொலைவெறித்தனத்தையும் வன்னி மக்கள் அனைவரும் தம் சொந்த வாழ்வாக அனுபவித்தவர்கள். இதற்கு வெளியில் வாழ்ந்த அவர்களின் உறவினர்களின் ஒரு பகுதியினர் என்ன நடந்தது என்பதை காது கொடுத்து கேட்டதன் மூலம், பகுத்தறிவு பெற்றனர். இப்படி வன்னிமக்கள் மூலம் பகுத்தறிவு பெற்று, தம் மந்தைத்தனத்தில் இருந்து தம்மைத்தாம் மீட்டனர்.

தமிழ் மக்களின் பெயரில் புலித் தலைமையோ தம்மை மட்டும் பாதுகாத்துக்கொள்ளும் வண்ணம் திட்டமிட்டு மக்களை பலிகொடுத்தவர்கள் தான், இறுதியில் தம் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள சரணடைந்தனர். இதன் மூலம் தங்கள் துரோகத்தை உலகறிய பறைசாற்றினர். தம்மை மட்டும் பாதுகாக்கும் இந்தச் சரணடைவு என்பது தங்களுக்கான புதைகுழி என்பதை அறியாத அவர்களின் சொந்த அரசியல் வக்கிரத்துடன்தான், இந்த பச்சைத் துரோகத்தை செய்தனர். வீரமரணம், எதிரியிடம் பிடிபடாத தங்கள் தற்கொலை அரசியல் என அனைத்துக்கும், பச்சையாகத் துரோகம் செய்ததன் மூலம்தான், அவர்கள் தங்கள் சரணடைவைத் தேர்ந்தெடுத்தனர்.

இந்த சரணடைவு மூலம் தம்மை பாதுகாக்கும் தேர்வுக்கு முன்போ, இவர்கள் பிண அரசியல் நடத்தினர். மக்களை பலிகொடுத்தவர்கள், அந்தப் பிணங்களை உலகுக்குக் காட்டி, அதன் மூலம் அன்னிய தலையீட்டை ஏற்படுத்தி, தாம் தப்பிப் பிழைத்து வாழமுடியும் என்று நம்பிய மனிதவிரோதிகள் தான் இந்தப் புலித்தலைமை.

இந்தத் துரோகிகளும், மனிதவிரோதிகளும் உள்ளடங்க அவர்கள் பெயரிலும் "மாவீரர்" தின கொண்டாட்டம். கொண்டாட்டம் மட்டுமல்ல, கொண்டாட்டக்காரருக்கு இடையிலான மோதலும் கூடத்தான் அரங்கேறுகின்றது.

மக்களைக் கொன்று தம்மை பாதுகாக்கும் பலியெடுப்பு அரசியல் முதல் தமது சரணடைவு மூலம் தம்மை மட்டும் பாதுகாக்கும் துரோகத்தை வழிநடத்திய புலத்து மாபியாக் கும்பல், இன்று தமக்குள் கன்ணைக் கட்டிக்கொண்டு மோதுகின்றது. புலிப் பினாமி சொத்துக்கள் மேலான ஆதிக்கம், அதன் மேல் உருவாகும் அதிகாரம் சார்ந்த மோதல்கள், குழு மோதலாக மாறி நிற்கின்றது.

மக்களை மாபியாக் கட்டமைப்பு மூலம் கட்டுப்படுத்தி வந்த, புலி என்ற பிரமை கலந்த பயத்துடன் கூடிய மந்தைத்தனத்தை, இவர்களுக்கு இடையிலான மோதல் கணிசமாக விடுவிக்கும். ஓன்றுக்குமேற்பட்ட போட்டி "மாவீரர்" தின கொண்டாட்டங்கள், மந்தைகளை பிரித்து விடுகின்றது. மக்களை மேய்த்த புலிகளின் பொதுக் கட்டமைப்புக்குள்ளான பிளவு, ஒரு பகுதி மக்களை இதில் இருந்து விடுவிக்கும்.

இன்னமும் புலிக்குள்ளான மோதல் ஏன், எதற்கு என்று புரிந்துகொள்ள முடியாத வெற்றிடத்தில் மக்கள் தொடர்ந்து நிறுத்தப்பட்டு இருக்கின்றனர். புலியின் பெயரில் மக்களின் பணத்தை யார் அனுபவிப்பது என்பதுதான், இந்த மோதலின் பின்னுள்ள எதார்த்தம். அதனை மூடிமறைக்கவே அரசியல் வேஷத்தையும் காரணங்களையும் தேடுகின்றனர்.

இதற்காக தம்மை "மாவீரர்களின்" வழித்தோன்றல்கள் என்று காட்டிக் கொள்ளத் துடிக்கின்றனர். போராட்டத்தில் தம்மைப் பாதுகாக்க மக்களை பலியிட்டவர்கள், மக்களைக் கொன்றவர்கள், தமிழ்மக்களின் உரிமைகளை பறித்தெடுத்தவர்கள் முதல் இதுதான் விடுதலைப்போராட்டம் என்று நம்பி தம்மைத்தாம் தியாகம் செய்தவர்கள், பலாத்காரமாக பிடித்துச் சென்று யுத்த முனையில் பலியானவர்கள் என்ற அனைவரையும் 'மாவீரர்கள்" என்று கூறுகின்ற மக்கள் விரோத மாபியா அரசியல் தான் தொடர்ந்து அரங்கேறுகின்றது. இதைச்சுற்றி அவர்களுக்கு இடையிலான மோதல்கள் அனைத்தும், புலிப்பினாமிச் சொத்தை கைப்பற்றவும் அதை தற்காக்கவும் நடக்கும் அரசியல் கூத்து கேலிக்குரியது. மக்களை பயன்படுத்தி பிழைக்கும் மாபியாக் கூட்டத்தின் நயவஞ்சகமான அரசியல் கூத்தாகும். இந்த புலிப் பினாமி சொத்துச் சண்டைதான், அரசியலாக பொதுத்தளத்தில் தொடர்ந்து அரங்கேறுகின்றது. இதில் இருந்து சமூகம் தன்னைத்தான் விடுவிக்காத வரை, இதற்கு எதிராக தமக்காக மக்கள் தாம் போராடாத வரை, மக்களுக்கு விடிவில்லை.

 

பி.இரயாகரன்

16.11.2011;