Language Selection

புதிய ஜனநாயகம் 2010
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பிளாரன்ஸ் மேரி என்ற கன்னியாஸ்திரியை மிரட்டி கடந்த நான்காண்டுகளாகப் பாலியல் வன்முறையை ஏவி வந்த,  திருச்சி ஜோசப் கல்லூரி முதல்வராகவும் பாதிரியாராகவும் உள்ள ராஜரத்தினத்தின் பாலியல் அட்டூழியம் அண்மையில் வெளிவந்து தமிழகமெங்கும் நாறத் தொடங்கியுள்ளது.

பாதிரியின் இப்பாலியல் அட்டூழியம் பற்றி அறிந்ததும், திருச்சி நகர ம.க.இ.க. தோழர்கள், தோழமை அமைப்பான பெண்கள் விடுதலை முன்னணியுடன் நூற்றுக்கணக்கில் அணிதிரண்டு கடந்த 13.10.2010 அன்று காலை ஜோசப் கல்லூரி வாயிலை மூடி பூட்டுப் போடும் போராட்டத்தைத் திடீரென நடத்தினர். ம.க.இ.க. மாவட்டச் செயலர் தோழர் ராஜா தலைமையில் காமவெறியன் பாதிரி ராஜரத்தினத்தைக் கைது செய்து தண்டிக்கக் கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாதுகாப்பு அளிக்கக் கோரியும், சிறுபான்மை மத அடையாளத்துடன் காம வேட்டையாடும் இத்தகைய தனியார் பள்ளி – கல்லூரிகளை அரசே கையகப்படுத்த வேண்டும் என்றும் விண்ணதிரும் முழக்கங்களுடன் கல்லூரி வாயிலருகே ஆர்ப்பாட்டம் செய்த தோழர்கள், கல்லூரிக்குள் நுழைந்து அதன் வாயிலுக்குப் பூட்டுபோட முயன்றபோது கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.

“ஜோசப் கல்லூரி கல்விக்கூடமா, காமவெறியர் கூடாரமா?” என்ற தலைப்பிட்டு திருச்சி நகரமெங்கும் மேற்கொள்ளப்பட்ட சுவரொட்டிப் பிரச்சாரம் திருச்சபைகளின் யோக்கியதையைச் சந்தி சிரிக்க வைத்தது.

விடுதலை சிறுத்தைகள் போஸ்டர்இந்தத் திடீர் ஆர்ப்பாட்டத்துக்குப் பின்னர்தான் ராஜரத்தினத்தை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்திருக்கிறது. போலீசும் இப்பாதிரி மீது கொலைமிரட்டல், கற்பழிப்பு, கட்டாய கருக்கலைப்பு ஆகிய மூன்று வழக்குகளைப் போட்டுள்ளது. ராஜரத்தினமோ அதிகார வர்க்கத்தின் துணையுடன் தலைமறைவாக உள்ளார்.

பணபலமும் அதிகாரபலமும் ஆணாதிக்கத் திமிரும் கொண்டு பாலியல் வன்முறையை ஏவியுள்ள அயோக்கிய பாதிரி ராஜரத்தினம் தாழ்த்தப்பட்டவர் என்பதால்,  “இது நம்ம ஆளு!” என்று விடுதலைச் சிறுத்தைகள், பெரியார் தி.க. ஆகிய கட்சிகள் அவருக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளன. இப்பாதிரியார் தலித் என்ற ஒரே காரணத்துக்காக பழிவாங்கப்பட்டுள்ளார் என்றும், சேசுசபையிலுள்ள சாதிவெறியர்களின் தூண்டுதலின் காரணமாகவே வன்னியரான பிளாரன்ஸ் மேரி மூலம் இப்படியொரு கதை சோடிக்கப்பட்டுள்ளது என்றும்  இக்கட்சிகள் கூசாமல் புளுகுகின்றன.

ராஜரத்தினத்துக்கு ஆதரவாக நின்று பாதிக்கப்பட்ட பெண்ணை சேசுசபையிலிருந்தே விரட்டியுள்ள நிலையில், அந்தச் சபை ராஜரத்தினத்துக்கு எதிராக நிற்பதாகக் காட்டுவது யாரை ஏமாற்ற? ராஜரத்தினத்துக்கு ஆதரவாக செயல்பட்ட பாதிரி தேவதாஸ், பாதிரி சேவியர் வேதம் ஆகிய உயர் சாதியினரும் குற்றவாளி பட்டியலில் உள்ளபோது, எந்த சாதிவெறியர்களின் தூண்டுதலால் ராஜரத்தினம் மீது அவதூறு பரப்பப்பட்டுள்ளது – என எழுந்துள்ள  கேள்விகளால்  இக்கட்சிகள் மக்களிடம் மேலும் அம்பலப்பட்டுப் போயுள்ளன. மக்களிடம் உண்மையை விளக்கி பாதிரியின் பாலியல் அட்டூழியத்துக்கு எதிராக ம.க.இ.க. அடுத்த கட்டப் போராட்டத்துக்கு ஆயத்தமாகி வருகிறது.

________________________________

- புதிய ஜனநாயகம், நவம்பர், 2010