காட்டுவேட்டை : அம்பலமானது இந்திய அரசின் பித்தலாட்டம்!

ஆனால், இரத்தமும் சதையும் உயிருமாகக் கைக் குழந்தையோடு ஐந்து மாதங்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர்கள், மனித உரிமைப் போராளிகள் முன்னிலையில் டெல்லிக்கு வந்து வாக்குமூலம் அளித்த மாத்வி ஹுரேவின் புகைப்படத்தை வெளியிட்டு, இந்திய அரசின் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது, "டெகல்கா" ஏடு.

2009 அக்டோபர் இரண்டாவது வாரம். விவசாய வேலைகளை முடித்துக் கொண்டு தனது குடிசைக்குத் திரும்பிக் கொண்டிருந்த மாத்வி தேவாவை சுட்டுக் கொன்றனர், மத்திய ரிசர்வ் போலீசுப் படையினர். சற்றுத் தொலைவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டு, பார்க்கப் போன அவர் மனைவி மாத்வி ஹுரே அதிர்ச்சியில் உறைந்து போனார். போலீசார் மாத்வி தேவாவின் மிதிவண்டியை நொறுக்கிப் போட்டதையும், உடலைத் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததையும் சிங்கன் மடு கிராமவாசிகள் நேரில் கண்டிருக்கிறார்கள்.

"என் கணவர் ஒரு விவசாயி, நக்சல் அல்ல. அவரை ஏன் அவர்கள் கொன்றார்கள்? கொலையாளிகளைத் தண்டித்தே ஆகவேண்டும்" என்று ஆத்திரம் பொங்கக் கதறுகிறார், அந்த ஆதிவாசிப் பெண். அவரைப் போலவே 16 பேர் நீதி கோரி உச்சநீதி மன்றத்தின் படியேறியுள்ளனர்.

அவர்கள் "காட்டுவேட்டை" நடவடிக்கையின் கொடூரத்திலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள், அதனால் பாதிக்கப்பட்டவர்கள், அதற்குப் பலியானவர்களின் உறவினர்கள், அக்கொடூரங்களுக்குச் சாட்சியமானவர்கள், கத்தியால் குத்தப்பட்ட பார்வையற்றவரின் ஒரு குடும்பம், மார்புகள் வெட்டி வீசப்பட்ட ஊனமுற்ற எழுபது வயதான ஒரு மூதாட்டி - இப்படிப்பட்டவர்கள் உச்சநீதி மன்றத்தை அணுகினர். அவர்கள் அனைவரையும் உச்சநீதி மன்றத்திற்குக் கொண்டு வரவேண்டும் என்று அரசுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், அவர்களை எங்கேயும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று பின்னர் அரசு கைவிரித்து விட்டது. "சட்டிஸ்கரில் என்ன நடக்கிறது? நாங்கள் அதிர்ச்சி அடைகிறோம்" என்று ஆத்திரம் பொங்கக் கூறினார், நீதிபதி சுதர்சன் ரெட்டி.

சட்டிஸ்கரில் இத்தகைய கொடூர பயங்கரவாத அட்டூழியங்கள் புரிந்து வருவது மத்திய ரிசர்வ் போலீசுப் படையின் ராஜநாக (கோப்ரா) பிரிவு. இப்படையின் 76 பேரை கொன்றொழித்ததன் மூலம் உச்சநீதி மன்றம் வழங்காத நியாயமான தீர்ப்பையும் தண்டனையையும் அண்மையில் மாவோயிஸ்டுகள் வழங்கியுள்ளனர். இப்போது சோல்லுங்கள், 'தேசபக்தர்களே', எது நியாயம்?