Sun04212019

Last update10:02:19 am

Font Size

Profile

Menu Style

Cpanel
Back அரசியல்/சமூகம் பேராண்மை:முற்போக்கு மசாலா!

பேராண்மை:முற்போக்கு மசாலா!

  • PDF

தமிழ் சினிமாவிற்குள் அண்ணன்-தங்கை, பண்ணையார் மகள் காதல், தாய்-தனயன், தேசபக்தி, திருடன்-போலீசு முதலான ஒன்பது கதைகள் மட்டும் பல்வேறு தினுசுகளில் படமாய் எடுத்து வெளியிடப்படுகிறது என்று சினிமாக்காரர்கள் சொல்வார்கள். நீங்கள் எந்த கதையை எடுத்துக் கொண்டாலும் அது இந்த ஃபார்முலாவில் கண்டிப்பாய் அடங்கும்.

அந்த ஒன்பது ஃபார்முலாக்களில் ஒன்றான தேசபக்தியை எடுத்துக் கொண்ட இயக்குநர் தான் ஆசைப்பட்ட அத்தனை மெசேஜூகளையும் திணித்து வெளியிட்டிருக்கும் படம் – பேராண்மை.

‘அதிகாலையின் அமைதியில்’ எனும் ரசிய நாவல் மற்றும் திரைப்படத்தின் உணர்ச்சியில் மனதைப் பறிகொடுத்த வாசகர்கள், தோழர்கள் பலருமிருக்கலாம். ரசிய கலாச்சார மையத்தில் அந்த படத்தை தோழர்களுடன் பார்த்து ஒன்றிய அனுபவம் இன்னமும் மறக்கக்கூடியதல்ல. துருதுருப்பான நகர்ப்புறத்தைச் சேர்ந்த ஐந்து இளம் பெண் வீராங்கனைகளை தாய்ப்பாசத்துடன் வழிநடத்தும் எளிய கிராமத்து மனிதனான செம்படை அதிகாரி, அந்தப் பெண்களின் துணையுடன் நாஜிப் படையை எதிர்கொண்டு வெல்லும் போரின் ஊடாக, அவர்களுக்கு இடையே மலரும் தோழமையையும், அதன் பின் மரணம் தோற்றுவிக்கும் துயரையும் விளக்கும் அற்புதமான கதை.

பேராண்மைஜனநாதனும் அப்படி அந்தப் படத்தில் ஒன்றியிருக்கலாம். ஆனால் பேராண்மை அந்தப் படத்தின் அழகை கேலிசெய்வது போலவே அமைந்திருக்கிறது. நடுத்தர வர்க்க மாணவிகளை வைத்துக் கொண்டு துருவன் எனும் பழங்குடி இளைஞன் வெள்ளைக்காரத் தீவிரவாதிகளை அநேகமாக அவன் மட்டும் தன்னந்தனியே சுலபமாக எதிர்த்து வென்று இந்திய ராக்கெட்டை காப்பாற்றும் கதை. நியாயமாக இந்தக்கதை விஜயகாந்துக்கோ, அர்ஜூனுக்கோ சேரவேண்டியது. ஜனநாதன் எப்படி இந்த வலைக்குள் சிக்கினார் என்பது தெரியவில்லை. ஆனாலும் அந்த ஆக்சன் ஹீரோக்கள் செய்யாத சில வேலைகளை துருவனாக ஜெயம் ரவி செய்கிறார்.

என்.சி.சி வகுப்பில் சம்பந்தம் இல்லாமல் அரசியல் பொருளாதாரம், உபரி மதிப்பு குறித்து மார்க்சிய அடிப்படையில் விளக்குகிறார். காட்டில் தங்கும் இரவில் மூலதனத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு நூலை படிக்கிறார். அவரது உறவினர்கள் உழைக்கும் மக்களின் அதிகாரத்தை பேசுகிறார்கள். அதிவேகமான சண்டைக் காட்சிகளின் நடுவில் கண்ணிவெடிக்கு எதிராக பேசும் துருவன், கூடவே பொதுவுடமை அரசியலை படிக்குமாறு அந்த மாணவிகளிடம் கேட்டுக் கொள்கிறார். தனது பழங்குடி சிறுவர்களுக்கு பாடம் நடத்தும் போது பச்சைத் தேயிலையின் விலையை குறிப்பிடுகிறார்.

அவரை சாதிரீதியாக இழிவு படுத்தும் மேலதிகாரி பொன்வண்ணனிடம் வீரவசனம் பேசாமல் அப்படியே அடிபணிகிறார். ஆனால் வெள்ளைநிறத் தீவிரவாதிகள் வந்ததும் பொங்கி எழுகிறார். “யார் சாதி ரீதியாக, இட ஒதுக்கீடு மூலம் தகுதி திறமைக்குறைவானவர்கள் என்று இழிவு படுத்தப்படுகிறார்களோ அவர்கள்தான் நாட்டிற்கு ஆபத்து என்றதும் உயிரைப் பணயம் வைக்கிறார்கள்” என்று இயக்குநர் காட்ட முயற்சித்திருக்கிறார். விரோதியிடம் காட்டவேண்டிய வீரத்தை நண்பர்களிடம் காட்டக்கூடாது என்று தன் மவுனத்தை நியாயப்படுத்துகிறார். இன்னும் நாம் மறந்த பல மெசேஜூகள் இருக்கக்கூடும்.

நான்கைந்து மாநிலங்களில் பரவியிருக்கும் தண்டகாரன்யாவில் மாவோயிஸ்ட்டுகளின் மீதும் பழங்குடி மக்கள் மீதும் இந்திய அரசு போர்தொடுத்திருக்கும் வேளையில், ஆயிரக்கணக்கான பழங்குடி மக்களின் உயிர் கேள்விக்குள்ளாக்கப்படும் இவ்வேளையில் இந்த யதார்த்தத்திற்கு புறம்பான, மாறுபாடான இந்தப்படம் மிகுந்த எரிச்சலைத் தருகிறது. தரகு முதலாளிகளின் தொழில் சேவைக்காக பயன்படும் விண்வெளி ஆராய்ச்சி இயற்கை விவசாயத்திற்கு பயன்படப்போகிறது என்ற அபத்தத்தையும் பொறுக்க முடியவில்லை. பருத்தியில் வந்த மரபீனி மாற்றம் செய்யப்பட்ட விதைகள் வந்து பல விவசாயிகள் தற்கொலை செய்து இப்போது அது கத்திரிக்காய் வரை வந்துவிட்ட நிலையில் இந்திய விவசாயமே பன்னாட்டு நிறுவனங்களின் பகாசுரப்பிடியில் இருக்கும் சூழ்நிலையில் “எது எதார்த்தம்” என்ற புரிதல் கூட இயக்குநருக்கு இல்லை.

ஏதோ இந்திய ராக்கெட்டை தடுப்பதற்காக சர்வதேச சதி என்று புனைகிறது  இந்தக்கதை. குடிக்கும் நீர் முதல் கும்பிடு போடும் அரசியல்வாதிகள் வரையில் அனைவரும் இன்று அன்னிய நிறுவனங்களின் கையில். இந்தியாவை கூறுபோட்டு விற்பனை செய்யும் அதிகாரவர்க்கம் மற்றும் அரசியல்வாதிகள் என்ற உண்மையான வில்லன்கள் இந்தப்படத்தில் மறைந்து கொள்கிறார்கள். ஏதோ ஹாலிவுட் 8பேக் வயிற்றுடன் நவீன ஆயுதங்களுடன் வருகிறார்கள் வில்லன்கள். நாயகன் மட்டுமல்ல, வில்லன்களின் சித்தரிப்பும் செயற்கை.

அடுத்து இட ஒதுக்கீடு பெற்று அரசு வேலைகளில் செட்டிலானவர்கள் பலரும் தமது ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எதையும் பிடுங்குவது இல்லை. பண்பாட்டு ரீதியாக பார்ப்பனமயமாக்கத்திலும், சிந்தனை ரீதியாக ஆளும் வர்க்க அரசியலிலும் இவர்கள் உருமாறி, தம் மக்களுக்கே எதிரானவர்களாக நடந்து கொள்ளும் போது, அவர்களை தேசபக்தர்களாக காட்டுவது ஃபார்முலா கதையின் இன்னொரு வடிவம்.

கோடம்பாக்கத்துக்கு வரும் பலர் முற்போக்கு கருத்துக்களை இதயத்தில் வைத்து மக்களுக்கான படங்கள் எடுப்பேன் என இயக்குநர் ஆவதற்கு முன்பு வரை பேசுகின்றனர். பேசிவிட்டு பின்பு அந்த தொழிலின் ஜோதிக்குள் ஐக்யமாகின்றனர். பின்னர் ஃபார்முலாவின் தவிர்க்க இயலாமையை நியாயப்படுத்துகின்றனர்.

ஜனநாதனும் அப்படித்தான். தமிழ் மக்களின் வாழ்வை உள்ளது உள்ளபடி காட்டுவதற்கு கூட யாரும் தயாராக இல்லாத நிலையில் இத்தகைய முற்போக்கு படிமங்களே பலருக்கு பாலைவனச் சோலையாக தெரிகிறது. ஆனாலும் அந்த சோலையில் நீர் இல்லை. ஏனென்றால் ஃபார்முலா என்பது பிளாஸ்டிக் சோலை. அதில் ஊறுவது உண்மைத் தண்ணீராகவே இருந்தாலும் அது கானல் நீராகவே மாறும்.

இந்த படத்திற்கு தோழர்கள் மதிமாறனும், சுகுணா திவாகரும் பொருத்தமான விமரிசனங்களை எழுதியிருக்கிறார்கள் என்பதால் இங்கே வினவு வழக்கமாக எழுதும் விரிவான விமரிசனம் இல்லை. ஒருவேளை அந்த தோழர்கள் எழுதியிருக்கா விட்டாலும் இதற்குமேல் எழுதுவதற்கு ஒன்றுமில்லை.

இந்தியா என்றால் விவசாயிகளும் கிராமங்களும்தான் என்றெல்லாம் படத்தில் உரையாடல் வந்தாலும், இறுதியில் தீவிரவாதி, ராக்கெட், இராணுவம் என்று ஆளும் வர்க்கம் தூக்கிபிடிக்கும் இந்தியாதான் கதையமைப்பில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் விளைவாக உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தும் இந்திய தேசபக்தி போற்றிக் கொண்டாடப்படுகிறது.

அதிகாலையின் அமைதியில் திரைப்படத்தில் வரும் நகர்ப்புறத்து நடுத்தர வர்க்கப் பெண்கள், “பாமரனான” அந்தக் கம்யூனிஸ்டு இராணுவ அதிகாரியின் மீது மதிப்பே இல்லாதவர்கள். நாஜிப்படைக்கு எதிரான போரில் அவர் காட்டும் அர்ப்பணிப்பும், தன்னல மறுப்பும் அவர் பால் அந்தப் பெண்களின் இதயத்தில் தோற்றுவிக்கும் நேசம், அதன் ஊடாக அவர்களிடையே மலரும் உறவு, அந்தக் கூட்டுத்துவ உறவின் வலிமையில் வெளியில் தெரியாத இழையாக ஊடாடும் நாட்டுப்பற்று..! இதுதான் அந்தப் படத்தின் அழகு, வலிமை!

பேராண்மையின் நாட்டுப்பற்று போலியாக இருப்பதால், அது பாரதமாதாவுக்கு தீபாரதனையாகி விடுகிறது. இயக்குநர் ஜனநாதன் விசமக்காரர் அல்ல. ஃபார்முலாவை மீற முடியாது. இனிப்புக்குள் எப்படி மருந்தை வைப்பது என்பதுதான் பிரச்சினை என்று அவர் சிந்தித்திருக்கிறார். அரசியல் என்பது நோயாளிக்கே தெரியாமல் நோயாளியின் தொண்டைக்குள் இறக்கப்படும் மருந்து அல்ல. நோயாளி, அதாவது ரசிகர்கள் எதை சுவைக்கிறார்களோ அதுதான் அவர்களுக்குப் போய்ச்சேருகிறது. தணிக்கையில் வெட்டியது போக ரசிகனுக்கு போவது வரை இலாபம் என்ற கணக்கு மக்களுக்கு உண்மையைக் கொண்டு சேர்க்கப் பயன்படாது.

 

http://www.vinavu.com/2009/10/27/peranmai-masala/

Last Updated on Tuesday, 27 October 2009 07:15