Language Selection

பு.மா.இ.மு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times
லெனினுடைய கருத்துக்கள் புதிய வழி காட்டியது. அதை ஏற்றுக் கொண்டவர்களுக்கு இரவு வகுப்புகள் நடத்தப்பட்டன.

அந்த வகுப்புகளில் அரசியல், அறிவியல், வரலாறு முதலியவை விளக்கப்பட்டன. கம்யூனிச, மார்க்சிய தத்துவமும் போதிக்கப்பட்டது. இப்படி மெதுவாக கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்தது. 
தூரத்தில் ஜெர்மனியில் தலைமறைவாக இருந்தபடி லெனின் அனைவருக்கும் வழிகாட்டினார்..

1905-ஆம் ஆண்டு ஜாரின் ஒடுக்குமுறை உச்சகட்டத்தை அடைந்தது. முதலாளிகள் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்தனர். இனியும் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற நிலை வந்தபோது, தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். தங்கள் வறுமை நிலையை ஜாரிடம் சொல்ல மனு ஒன்றைத் தயாரித்தனர். அதை ஜாரிடம் கொடுக்க பேரணியாக சென்றனர். தொழிலாளர்கள் அமைதியாகத்தான் ஊர்வலம் நடத்தினர். ஆனால் ஜார் அவர்களைக் கண்டு பயந்தான். அவர்களைச் சுட்டுக் கொல்ல உத்தரவிட்டான். பீரங்கிகள் முழங்கின. எந்திரத் துப்பாக்கிகள் அதிர்ந்தன. பெத்ரோகிராடு வீதிகள் ரத்தத்தில் மிதந்தன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

கோழைத்தனமாகத் தங்களைத் தாக்கிய படைகளை எதிர்த்துப் போரிட தொழிலாளர்கள் துணிந்தனர். முதல் ரசியப் புரட்சி எழுந்தது. வெளிநாட்டில் இருந்த லெனின் புரட்சிக்குத் தலைமை ஏற்க பெத்ரோகிராடுக்கு விரைந்து வந்தார். இருந்ததும் முதல் ரசியப் புரட்சி தோல்வியில் முடிந்தது. ஆனால் லெனின் மனம் தளர வில்லை. தன்னுடைய தோழர்களையும் உற்சாகப்படுத்தினார். தோல்வியில் இருந்து பாடம் கற்போம். தவறுகளைத் திருத்துவோம். இறுதி வெற்றி நமதே என்றார்.

புரட்சியை ஒடுக்கிய ஜார், லெனினை எப்படியாவது கொன்றுவிடுமாறு தன் படைகளுக்கு உத்தரவிட்டான். அதனால் மீண்டும் ஒருமுறை லெனின் தன் நாட்டை விட்டுத் தலைமறைவாக வெளியேற வேண்டியிருந்தது. ஆனால் அது மிகவும் ஆபத்தான வேலை. எல்லைப்புறத்தில் காவல் அதிகமாக இருந்தது. லெனின் கடல் வழியாக பக்கத்து நாடான சுவீடனுக்குத் தப்பிச் செல்லத் திட்டமிட்டார். அது குளிர் காலமாதலால் கடலின் மேற்பரப்பு பனிக்கட்டி பாளமாக மாறியிருந்தது. கப்பலையோ, படகையோ அதில் செலுத்த முடியாது. இந்த நேரத்தில்தான் லெனின் துணிச்சலான ஒரு முடிவெடுத்தார். கடலின் மீது நடந்து செல்வதே அம்முடிவு.

அது மிகமிக அபாயகரமான திட்டம் பனிப்பாளம் பல இடங்களில் மிக மெல்லியதாக இருக்கும். கால் வைத்தவுடன் உடைந்துவிடும். உள்ளே நடுக்கடலில் விழுந்தால் மரணம் நிச்சயம். அது மட்டுமல்ல, அச்சுமூட்டும் பனிப்புயலும் வீசிக் கொண்டிருந்தது. எதையும் பொருட்படுத்தாது கடல் மீது நடக்கத் தொடங்கினார்.

அவருடன் மூன்று மீனவத் தோழர்களும் பயணம் செய்தனர். ஒரு இரும்புச் கம்பியினால் பனிப்பாளங்களைத் தட்டிப் பார்த்தபடி மெதுவாக பாதிதூரம் கடந்துவிட்டனர்.

அப்போதுதான் அந்த விபத்து நடந்தது. லெனின் கால் வைத்த இடத்தில் இருந்த பனிப்பாளம் உடைந்தது. அவர் தொப்பென கடலுக்குள் விழுந்தார். உள்ளே எலும்பை உறைய வைக்கும் குளிர். உடையின் பாரம் கீழ் நோக்கி இழுத்தது. லெனினுடைய உறுதியான உடல் போராடியது. இறுதியாக உடைந்த பனிப்பாளத்தின் விளிம்பை பிடித்தார். மேலே நின்று கொண்டிருந்த மூன்று தோழர்களும் கை கொடுத்து தூக்கி விட்டனர். லெனினுடைய மன உறுதிக்கு இது மேலும் ஒரு சான்று.