Language Selection

ப.வி.ஸ்ரீரங்கன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இலங்கையின் இனமுரண்பாட்டை வெகுவாக உள்வாங்கும் ஒரு சராசரி குடிமக(ளு)னுக்கு அதன் முரண்பாடானது இன ஒடுக்குமுறையின் பலாத்தகார வன்முறையாகத்தாம் தெரிகிறது.நாம் எதற்காகப் போராடுவதற்கு வெளிக்கிட்டோம்?, ஈழக் கோசம் எதையொட்டி எழுந்தது?,போராடும் சூழ்நிலை எங்ஙனம் தோன்றியது?,இப்போது மீளவும் இலங்கையரசோடு பேசவேண்டிய தேவையும்,யுத்தம் மேற்கொண்டு நகர முடியாத சூழ்நிலையும் எப்படித் தோன்றியது?,எமது பிரச்சனை இலங்கை அரசுக்கும்,தமிழ் பேசும் மக்களுக்குமானதாகக் கற்பிக்கப்பட்டது சரிதாமா?


கூடவே, எங்கள் இனப் பிரச்சனையில் வெளி நாடுகளின் பங்கு எதை நோக்கித்தாம் நகர்ந்து கொண்டு செல்கிறது?

 

இவை கேள்விகள்தாம்!

 

ஆனால் பதில் எத்தகைய தளத்திலிருந்து மேலெழுகிறதென்பதும் ஒரு கேள்வியாகவே விரிகிறது.இது குறித்துச் சில உள்மறைவு நலன்களைப் பார்ப்போம்.இவை எமது மக்களின்-நாட்டின் நலனுக்கு எதிராகவே இருப்பதை நாம் கவனிக்கத் தவறும் ஒவ்வொரு கணமும், நமது மக்களின் "சுய நிர்ணயத்தின"; இருப்புப் பலவீனமானது.இந்த மக்கள் இதுவரை இலட்சம் மக்களை இழந்து நடுத்தெருவில் நிற்கும்போது, நாம் வாழாதிருக்க முடியாது.இன்றைய பாலஸ்தீன அரசியலையும்,காமாஸ்சின் வெற்றியையும் எண்ணி யாரும் மமதை கொள்ள வேண்டாம்.அது தற்காலிகமானது.அது போலவே புலிகளின் நிலையும் என்பதை விளங்க முற்படுவோம்.


தீர்மானம்:

 

உலகத்தில் ஏதோவொரு மூலையில் வதிகின்ற தமிழ் பேசும் மக்களின் தலைவிதியை, எவரெவரோ தீர்மானிக்கும் அரசியலாக முன்னெடுக்கப்படுவதில் எந்த நலன்கள் முட்டிமோதுகின்றன? இன்றைய தினம்வரை பேச்சு வார்த்தையைக் தீர்மானிப்பவர்கள் எம்மை ஏமாற்றி வருவதாகவும்,அது தமிழீழ விடுதலைப் புலிகளைப் படுகுழியில் தள்ளுவதற்கான பொறியைக்கொண்டிருப்பதாகவும் கடந்த மாவீரர் தினவுரையில் திரு. பாலசிங்கம் தெரிவித்திருந்தார்.வெளி நாடுகளில் இடம் பெறும் பேச்சு வார்த்தைகள் யாவும் தம்மை அரசியல் ரீதியாக் கட்டிப்போடும் இராஜ தந்திரத்தை-பொறியைக் கொண்டிருப்பதாகவும,; அவர் விசனம் தெரிவித்தார்.எனவே பேசிப் பயன் கிடைக்காதென்றும் அந்தவுரையில் திடமாக வலியுறுத்திய அவர், தமது அடுத்த கட்ட நகர்வு யுத்தத்தினூடாகத்தாம் விரியுமென்றும் ப+டகமாகக் கருத்திட்டார்.

 

எனினும், இப்போது பழைய பஞ்சாங்கப் பேச்சு வார்த்தை ஜெனிவாவில் ஆரம்பமாகிறது.கடந்த கால் நூற்றாண்டுகளில் இந்தப் பேச்சு வார்த்தைகள்பட்ட பாடுகள் யாவும் தாம் அறிந்ததே என்றும், அதில் நம்பிக்கையிழந்து போராடியதாக் கதைவிடும் புலிகளுக்கு அப்பப்ப தாம் கூறுவதையே "தாம்" மறந்து, புதுக்கதைவிடுவதும் இலகுவாகிறது.ஆனால் மக்களோ தங்கள் நலனை முதன்மைப்படுத்தாத தீர்மானங்கள் வெறும் இயக்க நலனே என்பதை நன்கு அறிவார்கள்.இந்தத் தீர்மானகரமான மக்களின் அபிலாசைகள், யுத்தம் தொலைந்த சமூக வாழ்வாக அவாவுற்றுக்கிடக்கப் புலிகளோ அடுத்த ரவுண்டுச் சொப்பிங் செய்யும்,உடல் இச்சையைத் தீர்க்கும்(பாலசிங்கத்தின் பார்வைதாம் இஃது) வெளிநாட்டுப் பயணத்துக்குத் தயாராகி வருகிறார்கள்.இதை அம்பலப்படுத்துபவர்களைப் புலிகள் மக்கள் விரோதிகளாகவும் முன் நிறுத்த முடியும்.ஏனெனில் மக்களைக்கண்டு அச்சமுறும் தமிழ்ப் பாசிசம் மக்களுக்கு உண்மைகள் போய்ச் சேரும் அனைத்து வடிவங்களையும் அழிப்பதற்குத் தயாராகிறார்கள்.


இப்போது இப்படிக் கேட்போம்:"புலிகள் என்ன தீர்மானத்தை மக்கள் முன் மொழிந்தார்கள்?"அவர்களது நலனை ஒரு தீர்மானகரமான வரைவுக்குள் உட்படுத்தி அதை அந்த மக்களுக்கு-அவர்களின் இசைவுக்கு,ஒப்புதலுக்கு வழங்கினார்களா?ஏனெனில் மக்கள்தாம் இழப்புகளைச் சந்தித்தவர்கள்,அவர்கள்தாம் தமது மழலைகளைப் போருக்குப் பிடித்துச் செல்ல மௌனமாக இருந்தவர்கள்.எனவே மக்களைவிட இயக்க நலன் முதன்மையாக இருக்க முடியாது.இங்கே இவற்றைக் கூறுவது புலிகள் மக்களின் நலனிலிருந்து வேறுபட்டவர்கள் என்பதைச் சுட்டவே.அவர்களுக்கும் மக்களுக்கும் எந்த வகை நலனிலும் பொருத்தப்பாடுகிடையாது.மக்களின் உரிமைகளைத் தமது இயக்க,வர்க்க நலனுக்குப் பயன்படுத்தும் ஆயுதம் தரித்த தமிழ் ஆளும் கும்பலிடம் எந்த மக்கள் நலன் சார்ந்த தீர்மானமும் இல்லை.மாறாகப் புலி நலனே-அரசியலே முதன்மையானது.இந்த நலன் அந்நியக் கூட்டோடு தமது இருப்பைக் காப்பதுதாம்-இது குழு நலன்,புதிய தமிழ்த் தரகு முதலாளியத்தின் வர்க்க நலன்!

 

பேச்சு வார்த்தை:

 

முதலில் பேச்சு வார்த்தை மூலமே நமது தீர்வை எட்ட முடியுமென்று ஒரு வரையறையை இதுவரை இருதரப்பும் செய்யவில்லை.அந்த வரையறையில் நின்று, நிதானமாகப் பேசுவதற்கான திட்ட வரைவு எதுவுமின்றி,ஒரு பேச்சு வார்த்தை நகர முடியாது.இங்கே இந்தச் சொற்ப நுணுக்கமும் பேரளவிலும் நோக்காக முன் மொழியப்படவில்லை.திட்ட வரைவானது தமிழ் பேசும் மக்களின் பார்வைக்கு -அவர்களது நலனை எந்தெந்த முறைமைகளில் சட்டவரைவாக முன் மொழியப்பட்டதென்பதை "அந்த மக்கள்"அறிவதற்கும் எந்த முயற்சியும் செய்யப்படவில்லை.மக்களுக்காக,மக்கள் பிரதி நிதிகள் பேசுவதானால்-அந்த மக்களின் நலன்களை அந்த மக்கள் நோக்கு நிலையிலிருந்து தீர்மானிக்கப்பட்ட வரைவு புலிகளிடமுண்டா?ஏனெனில் ஈழம்-தமிழீழம் கோவிந்தா,கோவிந்தா!

 

மக்களின் நோக்கு நிலையிலிருந்துஅவர்களின் நலன்களை முதன்மைப்படுத்திய அரசியல் சமூகப் பொருளாதார முன்னெடுப்புகளையும்,அவர்தம் இதுவரையான இழப்புகளையும்,ஈடு செய்வதற்கான எந்தத் திட்டமும் இதுவரை வெளிப் பார்வைக்கு முன் வைக்கப்பட்டிருக்கா?


இல்லை,எதுவுமே முன்வைக்கப்படவில்லை.இடைக்கால நிர்வாகக் கட்டமைப்பின் சட்டவரைவுகள் அது முன்வைக்கும் மொழிவுகள் தமிழ் பேசும் மக்களின் அரசியில் பொருளாதாரச் சமூகப் பொதுவாழ்வை மையப்படுத்தித் தீர்மானிக்கப்பட்டதாக எந்தப் பொது மனிதரும் கருத முடியாது. இதைப்போலவேதாம் இன்றைய நிலையில் பேச்சு வார்த்தையென்பது வெறும் தந்திரோபாய முறைமைகளுக்காக நடப்பதாக யாரும் குறிப்பிட முடியாது.இப் பேச்சு வார்த்தைகள்தாம் இனிவரும் காலத்தில் தமிழரின் சமூக வாழ்வைத் தீர்மானிப்பவை.அத்தகைய பேச்சு வார்த்தையானது புலிகள் இயக்க நலனை முதன்மைப் படுத்தும் நகர்வாக அமையுங்கால் அது மக்களின் தீர்வுக்கான அரசியலை முன்னெடுப்பதற்கான தகமையை இழந்துவிடுகிறது.


மக்கள் தமது சமூக சீவியத்தைப் பெரிதும் அழியவிட்டுத் தகர்ந்த சமூக வாழ்வை அரைகுறையாக மீட்டு வாழ்ந்து,உயிரைப் பிடித்திருக்கும் இந்தச் சூழலில,; அவர்களின் வாழ்வாதாரங்களைக் காப்பதற்கும்,அதை மீளக்கட்டியொழுப்பி அவர்களின் உயிர் வாழ்வை உறுதிப்படுத்தும் ஜனநாயகப் பண்புகளைக் கோரிக் கொள்ளவும்- குடிசார் மதிப்பீடுகளை நிறுவிக் கொள்ளும் குடியியல் முறைமைகளை நோக்கிய- இராணுவ,பொலிஸ் முகாம்கள் அகற்றப்பட்டு, வாழ்விடங்கள் மறுபடி மக்கள் வாழும் ஆதாரங்களாக நிறுவிக் கொள்ளும் முன் நிபந்தனைகளை இப்பேச்சு வார்த்தை மொழிவுகளாக்கிக்கொள்ள முடியாதிருப்பின், அது எதைப்பற்றித்தாம் பேச இலாய்க்கானது?தமிழ் மக்களின் தேசிய வலுவை,தேசிய அலகுகளைக்காத்துத் தேசிய முதலாளியத்தைக் காப்பதற்கான குறைந்தபட்ச பொருளாதாரத் திட்டம் உண்டா?தரகு முதலாளியத்தின் அடிவருடிகளாகக்கிடக்கும் அற்ப புலி இயக்க முதலீட்டாளர்களால் தமிழ் மக்களின் சுயநிர்ணயமென்பதை ஒரு போதும் காத்துவிட முடியாது.இது பேச்சு வார்த்தையில் எந்தத் தரப்பாலும் முன்வைக்கப்பட முடியாத மக்களின்,நாட்டின் ஆதாரப்பிரச்சனை.இதை வெறுத்தொதுக்கும் இயக்கத்தால,; பேச்சு வார்தையில் தமது இயக்க நலனைக்கூடக் காப்பது வெறும் பகற்கனவு.

 

தமிழ் ஈழம்:

 

தமிழீழம் என்றது பொய்க் கோசமானதென்பதை நாம் அன்றுதொட்டே நிரூபித்து வந்தோம்.இன்றும் கூறுகிறோம் இது புலிகளுக்கே இப்போது நகைப்புக்கிடமான கோசமாகியுள்ளது.ஈழம் என்பது சாத்தியமற்றதென்றும் அதற்கான உயிர்த் தியாகமானது முற்றிலும் தமிழ் மூலதனத்தைக் காப்பதற்கான முதிலீட்டுத் தமிழரின் நலனைக் காப்பதற்கான செயலென்றும் அன்றே கூறிக் கொண்டோம்.இன்றோ தமிழ் முதலீட்டாளர்கள் அன்றைய கென்பாம்,டொலர் பாம் நீதிராஜாக்களோ அல்லது மஸ்கன்,மகாராஜா,குணரெத்தினம்,சண்முகமோ இல்லை.மாறாகப் புலிகளே புதிய முதலீட்டாளர்களாக மாறியுள்ளார்கள்.அன்றையவர்களின் அரசியல் வெறும் சத்தியாக்கிரகம்,பாராளுமன்றக் கூச்சல்-வெளி நடப்பாக இருந்தது.ஆனால் இன்றைய முதலீட்டார்களிடம் விலைமதிக்க முடியாத எங்கள் இளைஞர்களின் மகத்தான தியாகம்,அற்பணிப்பு,உயிர்த்தியாகம்-ஆயுதமென்று இருக்கிறது.இவற்றைத் தமிழ் ஆளும் வர்க்கத்தின் ஒரு அற்ப ஆசைகளுக்காக-நலனுக்காக பயன்படுத்தும்போது மக்கள் வெறும் அழிவுக்கும்,அராஜகத்துக்கும் பலியாகிறார்கள்.இங்கே மக்களின் அனைத்து வழங்களையும் இராணுவ வலுவைக்கொண்டு கைப்பற்றிய தமிழ்த் தலைமைகள் மக்களை இன்னும் ஈழம்,இறுதிக்கட்டப் போரென்றபடி ஏமாற்றிப் புடுங்கிக் கொள்கிறார்கள்.இது புலம் பெயர் நாடுகளில்கூட தலைக்கு 2.000.யுரோ என்று புடுங்கப்படுகிறது.மறுக்க முடியாது மக்கள் இவைகளையும் கொடுப்பதற்குத் தயாராகிறார்கள்.காரணம் ஈழத்திலுள்ள தமது உடமைகளைப் புலியிடமிருந்து காப்பதற்கு இதைத் தவிர வேறு வழிகிடையாது, புலம் பெயர் தமிழருக்கு.


எனவே ஈழம் என்பது பொய்யான கோசம்.இது தமிழ் மக்களை இன,மொழி ரீதியாகக் கோடுகீறித் தமது நலனை முன் நிறுத்தும் தந்திராமாகத் தமிழ் முதலீட்டாளர்கள் இது வரை செய்வதை இனியும் உணராதிருந்தால் நாம் இழப்பது இன்னும் அதிகமாகும்.


சிங்களப் பாசிச அரசானது தமிழ் மக்களைப் புலிகளின் நலனைப் பாதுகாப்பதூடாகப் படுகுழியில் தள்ளுகிறது.இது உலக நாட்டின் ஒப்புதலோடு நகரும் செயலாக இதுவரை விரிந்து கிடக்கிறது.இதற்கு இன்றைய இலங்கைப் புதிய அரசானது மகிந்தாவின் தலைமையில் குறுக்கே நிற்கிறது.அதற்கான காரணமாகச் சீன-இந்திய நலன்கள் பின்னுந்துதலாக இருக்கிறது.இதன் தர்க்கவாதத் தன்மையால் புலிகளை மேற்குலகம் சற்று வளர்தெடுக்க முனையும்.அல்லது அதன் இருப்பைச் சற்று அதிகமாக்க விரும்பும்.எனவே மக்களின் இயல்நிலைக் குடிசார் வாழ்வு கானல் நீராகப் போகிறது.இது ஈழம் என்ற குருட்டுக் கோசத்தால் அனைத்தையும் சாதராணமாக்க முனையும்.

 

பேச்சு வார்த்தையென்பதைத் புலி இயக்கத்தின் நலனுக்கானதென்று மட்டும் நாம் எடுப்பதைவிட, அது உலக நாடுகளின் நலனை இலங்கையில் முன்னிறுத்துவது,செயற்படுத்துவது என்ற நோக்கு நிலையிருந்து அணுகவேண்டும்.

ஆசியக் கண்டப் பொருள் உற்பத்தி-வளர்ச்சி:

 

வளர்துவரும் சீன மூலதனமானது ஆசியாவில் பெரும் தொழில் வளர்ச்சியை எட்டுகிறது.இன்றைய நிலைவரப்படிச் சீனாவும்,இந்தியாவும் மாபெரும் பொருளாதார வளர்ச்சியையும்,நுகர்வாண்மையையுங் கொண்ட நாடுகளாக மாறி வருகின்றன.இருநாட்டின் குடிசனத் தொகையும், மிகப் பெரும் நுகர்வுச் சந்தையை உற்பத்தியாளர்களுக்குத் திறந்துவிடக் ;காத்திருக்கு.உலகில் கடந்தாண்டுவரை மேற்குலக நாடுகளே உற்பத்தியில் முன்னணி வகித்த நாடுகள்.அன்று உற்பத்தியில் 9ஆம் இடத்திலிருந்த சீனா இன்று 4ஆம் இடத்துக்கு வந்துள்ளது.இலண்டனைப் பின்தள்ளிவிட்ட சீனா, உலகின் இரண்டாவது இடத்தை ஜேர்மனியைப் பின் தள்ளிவிட்டு அடுத்தாண்டு நிச்சியம் அமெரிக்காவுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருக்கும்.அதன் இந்த வேகமானது 2010 இல் அமெரிக்காவைப் பின் தள்ளி முதலாமிடத்துக்கு வரும் அனுகூலம்தாம் உலகில் நிலவுகிறது.(இது ஜேர்மனியப் பொருளாதார வல்லுனர்களின் கருத்து.ஆய்வு: பைனான்ஸ்சியில் ரைம்ஸ் டிசம்பர்.2005)

 

இன்றைய முரண்பாடானது உற்பத்திக்கான வளத்திலிருந்து தொடங்குகிறது.சீனாவினதும் இந்தியாவினதும் அகோர எரிபொருள்,இரும்பு,மற்றும் அலுமனியப் பசிக்கு உலகில் அனைத்தும் மாற்றமுறுகிறது.கடும் வரிச் சுமை, மற்றும் விலை உயர்வுகள் உலகில் ஏற்படுகின்றன.இதன் தாக்கம் தொழிலாளர்களை வீட்டுக்கனுப்பும் நிலை மேற்குலக உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இங்கே அமெரிக்கா இன்னொரு புதிய தலிபான்களை இப்போது ஊட்டி வளர்க்கும் நிலை தோன்றுகிறது.அது தென் கிழக்காசியப் பொருள்வளர்ச்சியைக் குலைக்கும்,சீரழிக்கும்,மட்டுப்படுத்தும் விய+க்த்துக்கு அவசியமாகிறது.(W.D.Radio 5 ,Bericht vom 27.01.2006)இங்கே புதிய கூட்டுக்கள்,தாஜாக்கள்,கொடுப்பனவுகள்,கண்டிப்புகள், வெருட்டல்கள்,சலுகைகள் புலிகளுக்குக் காத்திருக்கிறது.அது ஜெனிவாவில் அரங்கேறும்போது புதிய பலமொன்று புலிகளுக்குள் புகும்.அங்கே பாரிய கோசமொன்று புதிய வடிவில் தோன்றும், அது மேற்குலப் பொருளாதார ஆர்வத்தைத் தென்கிழக்காசியாவில் தக்கவைக்கவொரு விய+கத்தைக் கொண்டியங்கும்.இது மக்களின் உரிமைகளை இன்னும் ஒடுக்கும்.இதற்கான ஒரு பேச்சு வாhத்தை மேற்குலக நாடொன்றில் நடப்பது இந்தப் புலிகளுக்குமட்டுமல்ல அமெரிக்க-ஐரோப்பியக் கழுகுகளுக்கும் அவசியம்.இதனால் தமிழ் பேசும் மக்களுக்கோ அல்லது அவர்களது அரசியல் அபிலாசைக்கோ எந்த வெற்றியுமில்லை.

 

ப.வி.ஸ்ரீரங்கன்
29.01.06