Language Selection

புதிய ஜனநாயகம் 2008
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

 கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைக்கான தேர்தல்களில் பாரதிய ஜனதா அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாமல் போனாலும், பா.ஜ.க., காங்கிரசின் போட்டி வேட்பாளர்களாக நின்று வெற்றிபெற்ற ஆறு உறுப்பினர்களின் ஆதரவோடு தென்மாநிலங்களில் முதல் முறையாக ஆட்சியைப் பிடித்து விட்டது. அதற்கு மிக முக்கியமான காரணம் பார்ப்பன இந்து மதவெறி, கன்னட இனவெறி, லிங்காயத் மற்றும் வொக்கலிகா ஆகிய ஆதிக்க சாதிவெறி அடிப்படையிலான வலுவான மத, இன மற்றும் சாதி அரசியல் அமைப்பை அக்கட்சி கட்டி வளர்த்திருப்பதுதான். இத்தகைய அரசியல் அமைப்பின் முதுகெலும்பாக விளங்குவது ஆர்.எஸ்.எஸ். மற்றும் பிற இந்து மதவெறி அமைப்புகளாகும்.

 பிற்பட்டவை என்று கூறிக் கொள்ளும் லிங்காயத் மற்றும் வொக்கலிகா சாதிகளும், கன்னட இன உணர்வும் ""எழுச்சியுற்ற போது'', அவை தம்மைப் பார்ப்பன இந்துத்துவத்தோடு அடையாளப்படுத்திக் கொண்டன. அதனால்தான் கர்நாடகாவில் அதன் அண்டை மாநிலங்களில் காணாத அளவு இசுலாமியர் எதிர்ப்பு மதவெறிப் படுகொலைகளை நடத்தி, ஆர்.எஸ்.எஸ்.  பா.ஜ.க. ஆகிய இந்து மதவெறி அமைப்புகள் தொடர்ந்து வளர்ந்து, இப்போது ஆட்சியைப் பிடிக்கவும் முடிந்துள்ளது.
 பார்ப்பன மற்றும் ஆதிக்க சாதிகளின் கூட்டு அடிப்படையிலான சாதிவெறி, அந்தந்த மாநிலத்துக்கேற்ப இனவெறி மற்றும் பாசிச இந்து மதவெறி ஆகியவற்றை சரியான விகிதத்தில் கலந்த அரசியல் போதைதான் மோடித்துவா என்றழைக்கப்படுகிறது. இதுதான் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. சித்தாந்தமாகிய இந்துத்துவா எடுத்துள்ள புதிய அவதாரம். மோடி தலைமையிலான முசுலீம் படுகொலை வெறியாட்டத்துக்கு எதிரான அரசியல் எதிர்ப்புகளையெல்லாம் குஜராத்தி மக்களை அவமானப்படுத்துவது என்று முத்திரை குத்தி இனவெறியைத் தூண்டி, அரசியல் ஆதாயம் அடைந்தார், மோடி. கர்நாடகாவில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிப்பதற்குக் கை கொடுத்தது இந்த மோடித்துவா சித்தாந்தம்தான். விலைவாசி உயர்வு எதிர்ப்பு, தகவல் தொழில்நுட்ப நகரமாகிய பெங்களூரு உட்பட நகர்ப்புறங்களில் கட்டுமான வசதிக் குறைவு, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பொதுப் பிரச்சாரங்களோடு, தேவே கவுடா  குமாரசாமி குடும்பம்  துரோகமிழைத்து எடியூரப்பா தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியைக் கலைத்ததைக் காட்டி நிலையான ஆட்சி முழக்கத்தை பா.ஜ.க. முன்வைத்தது. ஆனால், இவற்றை விட முக்கியமாக, சமீபத்தில் நடந்த ஹுப்ளி குண்டு வெடிப்பு, ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் மற்றும் பெல்காமில் ""முசுலீம் தீவிரவாதி'' என்பதாக ஒருவரைக் கைது செய்தது, மற்றும் கர்நாடகா பயங்கரவாதப் புகலிடமாக மாறிவிட்டது என்ற வதந்தி ஆகியவற்றைக் காட்டி பா.ஜ.க. மேற்கொண்ட இசுலாமிய, பயங்கரவாத எதிர்ப்பு பொய்ப்பிரச்சாரம்; காவிரி  ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்கு எதிராக எடியூரப்பாவே நேரில் சென்று கிளப்பிய கன்னட இனவெறி; லிங்காயத் சாதித் தலைவராகவும், கர்நாடகாவின் முதலமைச்சர் பதவிக்கான வேட்பாளராகவும் எடியூரப்பாவை முன்னிறுத்தி, அச்சாதியினர் பெரும்பான்மையாக வாழும் பகுதியைக் குறிவைத்து தேர்தல் பணியாற்றியது  இவையெல்லாம் கர்நாடகாவுக்குப் பொருத்தமான வகையில் மோடித்துவாவை அமலாக்கி பா.ஜ.க. வெற்றி அடைந்ததைக் குறிக்கின்றன.


 கர்நாடகாவில் தமது கட்சி அடைந்துள்ள வெற்றி பூகோள ரீதியிலும் சமூக ரீதியிலும் தமது ஆதரவு விரிவடைந்து வருவதைக் குறிப்பதாகவும்  அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் தமக்குச் சாதகமாக அமையும் என்பதைக் காட்டுவதாகவும் பா.ஜ.க. தலைவர்கள் குதூகலிக்கின்றனர். பா.ஜ.க. ஆதரவு செய்தி ஊடகங்களும் இதையே உறுதிப்படுத்துகின்றன. கடந்த சில ஆண்டுகளில் நடந்த மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்களில் பீகார், பஞ்சாப், குஜராத், இமாச்சலப் பிரதேசம் ஆகியவற்றில் பா.ஜ.க. மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலை தொடருமானால் அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பு அதிகமாகவே உள்ளது. இந்து மதவெறி பாசிசத்துக்கெதிரான உறுதியான போராட்டங்களைக் கட்டியெழுப்புவதற்கு மாறாக, அதனுடன் சமரசப் போக்கையும்; மக்கள் விரோத, தனியார்மயம்  தாராளமயம்  உலகமயமாக்கம் என்ற ஏகாதிபத்திய அடிமைத்தனத்தையும் காங்கிரசு மற்றும் இடது கூட்டணி ஆகிய போலி மதச்சார்பற்ற சக்திகள் கடைப்பிடிப்பதும் இந்து மதவெறி பாசிச ஆர்.எஸ்.எஸ்.பா.ஜ.க. கூட்டணி மீண்டும் தலைதூக்குவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது.