Language Selection

புதிய ஜனநாயகம் 2005
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

03_2005.jpgநிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனமான ஜல்லிக்கட்டு விளையாட்டை தமிழனின் வீர விளையாட்டாகச் சித்தரித்து பல வண்ணத்தில் அட்டை; ஒரே இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் மலர்க்குழுவில் அங்கம் வகிக்க, தாமே தயாரித்த பொங்கல் சிறப்பிதழுக்கு தமக்குத்தாமே நன்றியும் பாராட்டும் தெரிவித்துக் கொள்ளும் சுயதம்பட்டம்; சுனாமியால் பல லட்சம் தமிழர்கள் வாழ்விழந்து வேதனையில் பரிதவிக்கும் போது, எவன் செத்தாலென்ன? என்று கோலம் போட்டு பானையை அடுப்பிலேற்றி பொங்கல் வைத்துக் கொண்டாடச் சொல்லும் காசி ஆனந்தனின் வக்கிர உணர்ச்சிக் கவிதை; தமிழ் தேசியப் புரட்சிக்கு வழிகாட்ட ஒரு குறிப்பிட்ட தத்துவமோ, சித்தாந்தமோ, ஒரே கொள்கைக்கான அமைப்போ சாத்தியமில்லை, பல தரப்பட்ட சித்தாந்தங்களும் பலதரப்பட்ட அமைப்புகளும் கொண்ட பன்மைத்துவமாகவே தமிழ் தேசியம் இருக்கும் என்று நவீன

 அண்ணாயிசத்தைக் கடைவிரித்துள்ளார், பெ. மணியரசன் இப்படி தமிழினப் பிழைப்புவாதத்தின் இன்னுமொரு பன்மைத்துவ கலவையாக தமிழ்த் தேசியப் பொதுவுடைமைக் கட்சி தனது 'தமிழர் கண்ணோட்டம்" பொங்கல் மலரை முதன்முறையாக வெளியிட்டுள்ளது. தமிழ் மொழி காக்க, 'ஆங்கிலவழி கல்வி முறைக்கு எதிர்ப்பு" என்று சவடால் அடித்து வந்த இக்கட்சி, இப்பொங்கல் மலரில் ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளி விளம்பரத்தையும் வெளியிட்டுள்ளது. முன்னாளில் அக்கட்சியின் தலைமையிலான தமிழக மாணவர் முன்னணியில் செயல்பட்ட தோழர் கரிகாலன், த.தே.பொ.க. வின் செயலாளரும் பொங்கல் சிறப்பிதழ் மலர்க் குழு ஒருங்கிணைப்பாளருமான பெ.மணியரசனுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை பு.ஜ. இதழுக்கும் அனுப்பியுள்ளார். மணியரசன் குழுவின் சவடாலையும் சந்தர்ப்பவாதத்தையும் வாசகர்கள் புரிந்து கொள்ள உதவும் என்பதால், இக்கடிதத்தை வெளியிடுகிறோம்.

 

தமிழர் கண்ணோட்ட பொங்கல் சிறப்பிதழ் மலர்க் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அவர்களுக்கு, வணக்கம். சில ஆண்டுகளுக்கு முன்பு, தாங்கள் பொதுச்செயலாளராக இருக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, சென்னையில் நடத்திய தமிழ்நாட்டின் முதல் மெட்ரிகுலேசன் பள்ளி பத்மாசேசாத்திரியை இழுத்து மூடும் போராட்டத்தில் உங்களுடன் நானும் கலந்துகொண்டேன்.

 

தமிழ் மொழி காக்க நான் கலந்து கொண்ட இப்போராட்டம் எனக்கு மகிழ்ச்சி அளித்தது, அளிக்கிறது. ஆனால், இன்று தாங்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து வெளிவந்துள்ள தமிழர் கண்ணோட்டம் மலரில் ஒரு மெட்ரிகுலேசன் பள்ளி விளம்பரம், எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. நா புடைக்க தமிழ் மொழி குறித்து தமிழகம் எங்கும் பேசும் நீங்கள் ஒருங்கிணைப்பாளராக இருக்கும் மலரிலா அந்த விளம்பரம்!

 

உங்களுடன் அப்போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக வெட்கப்படுகிறேன். பகிர்வாக நண்பர்கள் கொடுத்த தொகை விளம்பரம் என்றீர், சரி. பகிர்வாகத்தானே நண்பர்கள் கொடுத்தார்கள் பின், ஏன்? ஆங்கில விளம்பரம் என்ற நிர்பந்தத்திற்கு உட்பட்டீர். தொகைமுன் உங்கள் கொள்கை, கை நீட்டி நின்றதோ, நா எழ மறுத்ததோ? தமிழ்மொழி விளம்பரத்திற்காக எழுச்சி உரை ஆற்றியிருக்கலாமே, தமிழின் சிறப்பு மறந்து போனதோ? த.தே.பொ.க. கருத்து வேறு; தமிழ்த் தேசிய முன்னணி கருத்து வேறு என்றீர், சரி. த.தே.பொ.க. கருத்து வேறு, தமிழர் கண்ணோட்டம் கருத்து வேறு என்றீர், சரி. த.க. கருத்து வேறு த.க. மலர் கருத்து வேறு என்கிறீரே, தமிழக சந்தர்ப்பவாதிகளின் குரு நீரே!

 

மேற்கூறிய கட்சி, முன்னணி, இதழ் அனைத்திலும் உங்கள் பதவிக்கு மேல் பதவியே இல்லை. வார்த்தைகள்தான் வேறு, வேறு. முன்னால் பார்த்தால் இராவுத்தர் குதிiர் பின்னால் பார்த்தால் செட்டியார் குதிரை என்ற உங்கள் பொன்மொழிதான் நினைவுக்கு வருகிறது. சரி. அது எல்லாம் கிடக்கட்டும் தோழரே, உங்கள் கருத்தை நான் தெரிந்து கொள்ள என்ன செய்ய வேண்டும்?


இவண், இ.கரிகாலன்,
புகழேந்தி தெரு, கிருஷ்ணாபுரம்,
மானோஜிபட்டி, தஞ்சாவூர். 613 004.