Language Selection

புதிய ஜனநாயகம் 2006
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

03_2006.jpg

கோக்கின் தலைமையிடமான அமெரிக்காவில் பல்கலைக்கழக மாணவர்கள் கோக்கிற்கு கொடுத்த அடியும், நெல்லையில் கங்கைகொண்டான் கிராமசபைக் கூட்டத்தில் கோக்கின் அதிகாரத் திமிருக்கு விழுந்த செருப்படியும் அமெரிக்க எதிர்ப்புணர்வுக்குப் புதுரத்தம் பாய்ச்சுகின்றன. விவசாயிகளை மேலும் போண்டியாக்கி நடுத்தெருவுக்குத் தள்ளும் ஒப்பந்த விவசாயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கையின் கோரத்தை பஞ்சாபின் படிப்பினை எடுப்பாக உணர்த்துகிறது.

புரட்சித்தூயன், தருமபுரி.

 

அட்டைப்படம் நெஞ்சை உலுக்கியது. நாட்டைப் பட்டினிச்சாவு எனும் பேரபாயம் சூழ்ந்துள்ளதை அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரங்களுடன் அட்டைப்படக் கட்டுரை எடுப்பாக விளக்கியது. பு.ஜ. இதழைப் படிக்கும்போது நாமும் போராட வேண்டும் என்ற உணர்வுதான் எப்போதும் பொங்குகிறது.

பழனிசாமி, சேலம்.

பா.ஜ.க. தலைவர்களும் முன்னணியாளர்களும் இலஞ்ச ஊழலிலும் விபச்சாரக் களிவெறியாட்டத்திலும் ஈடுபடுவதற்கான அடிப்படை அக்கட்சியின் பாசிச சித்தாந்த பாரம்பரியத்திலேயே இருக்கிறது என்பதை ஆழமாக விளக்கிய கட்டுரை சிறப்பு. இந்தியாவின் அவலத்தை உணர்த்திய அட்டைப்படமும் இதர கட்டுரைகளும் போராட்ட உணர்வூட்டுகின்றன.

வாசகர்கள், திருப்பூர்.

""அடிமை + அடியாள் ஸ்ரீ வல்லரசு'' சொரணையற்ற அமெரிக்க அடிமையும் வட்டார அடியாளுமான இந்திய அரசின் தன்மையை விளக்கும் மிகப் பொருத்தமான கணக்கு சூத்திரம். அமெரிக்க மாணவர்களின் கோக் புறக்கணிப்பு இயக்கம், கொலைகார கோக் மட்டுமின்றி அனைத்து பன்னாட்டு நிறுவனங்களையும் குழிதோண்டிப் புதைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது.

ஜியே நேசன், குள்ளம்பட்டி.

என்னைப் போன்ற பலருக்கு சங்கப் பரிவாரங்களின் தோற்றம், செயல்பாடுகள் பற்றிப் போதிய தெளிவில்லாமல் இருந்தது. ஆர்.எஸ்.எஸ். பற்றிய கட்டுரை இந்துவெறியர்களைப் பற்றிய முழுமையான பார்வையைக் கொடுத்தது. இதேபோன்று பிற அரசியல் கட்சிகள் அமைப்புகளைப் பற்றித் தொடர்ந்து வெளியிடுவது பயனுள்ளதாக அமையும்.

யாழினி, சென்னை.

உலக வங்கி உத்தரவால் மானியக் குறைப்பு உருவாக்கியுள்ள பேரழிவை புதிய வாசகரும் உணரும் வகையில் அட்டைப்படக் கட்டுரை அமைந்துள்ளது. எளிய நடையில் இதுபோன்ற கட்டுரைகளுடன் இதழ் வெளிவர வேண்டும்.

ஜீவா, சென்னை.

 

""பரவிவரும் பட்டினிச் சாவுகள்'' கட்டுரையில், "".... பஞ்சைப் பராரிகள் திரண்டு....'' என்று கையாளாமல் ""பஞ்சைப் பராரிகளாக ஆக்கப்பட்டவர்கள் திரண்டு'' என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும். சுருக்கமாகவும், அதேநேரத்தில் செறிவாகவும் அமைந்த தலையங்கம், "இந்திய நாட்டின் தலைநகர் இனி வாஷிங்டன்தான்!' என்பதை எடுத்துக் காட்டுகிறது.

மணிகோ. பன்னீர் செல்வம், நாகம்பட்டி.

 

நாட்டைச் சூறையாடி மக்களை மரணப்படுகுழியில் தள்ளி வரும் மறுகாலனியாக்கம், இந்தியாவைக் குப்பைத் தொட்டியாக மாற்றி வருவதை பிரெஞ்சு நச்சுக் கழிவுக் கப்பல் பற்றிய கட்டுரை உணர்த்துகிறது. ஏழைகளை நகரங்களிலிருந்து விரட்டியடிக்கும் சதியின் ஓர் அங்கம்தான் நகர்ப்புற புத்தாக்கத் திட்டம் என்பதை பு.ஜ. மூலம் தெரிந்து கொண்டோம். அட்டைப்படம் பட்டினிச் சாவின் அவலத்தையும் பேரபாயத்தையும் நெஞ்சிலே நிறுத்துகிறது.

தமிழ்ச்செல்வி மற்றும் வாசகர்கள், பாடலூர்.

 

""ஏழை நாடுகளின் சுற்றுச்சூழலை அழிப்பது யார்?'' என்ற கட்டுரை மூலம் ஏகாதிபத்திய சதிகளை அறிந்து அதிர்ச்சியடைந்தேன். நாடு சுடுகாடாக ஆக்கப்படுவதை எண்ணி வேதனையடைந்தேன். இதுபோன்ற உண்மைச் செய்திகளோடு, பெண் விடுதலை பற்றிய கட்டுரைகளையும் எதிர்பார்க்கிறேன்.

வெண்மணி, திருச்சி.