Language Selection

வினவு
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்து தேசியவெறியும்
இசுலாமியர் எதிர்ப்பு வெறியும்
பூத்துக்குலுங்கும் ‘ரோஜாவின்’
பார்ப்பன மணம் பரப்பி,

சிவசேனையின் செய்திப்படம்
மணிரத்தினத்தின் கரசேவை
பம்(பா)பொய்க்கு ஒத்து ஊதி,

இந்தியச் சுதந்திரத்தின் பொன்விழாவில்
வந்தே மாதிரத்தை
காந்தியின் கைராட்டை சுதியிலிருந்து
கழற்றி வீசி
சோனி இசைத்தட்டில் சுதேசி கீதம் முழக்கி,
ஒரு வழியாக இசைப்புயல்
அமொரிக்க கைப்பாவைக்குள் அடங்கிற்று.

மும்பைக் குடிசைகளின் இதய ஒலியை
ரகுமான் “ஜெய் ஹோ! ஜெய் ஹோ!” என பிய்த்து உதறிவிட்டார் என
தெருவில் வந்து கூத்தாடும் தேசமே!
பீகார் தொழிலாளிகளை ராஜ்தாக்ரே கும்பல்
பிய்த்து உரித்தபோது.. ” அய்யகோ..!” என்று அலறியபோது
எங்கே போனது இந்தியப் பாசம்?

அல்லா ரக்கா ரகுமானின்
ஆர்மோனிய சுரப்புகளை அலசி ஆராய்ந்து
உள்நுணுகி உருகி விவாதிக்கும் அன்பர்களே,
இசுலாமியர்களின்
ஹார்மோன் சுரப்பிகளையும் கருவறையிலேயே தாலாட்டுகளையும்
திரிசூலங்கள் குதறி எடுத்தபோது,
இந்த அளவு இறங்கி வந்து விவாதித்ததுண்டோ நீங்கள்?

இசையிலே கொண்டுவந்து ஏன்
அரசியலை நுழைக்கிறீர்கள் என்று ஆதங்கப்படுகிறீர்களோ!
ஏ.ஆர்.ரகுமான் இசைக்கும் பாடலுக்கு மட்டுமல்ல
அவர் மௌனம் காக்கும் அரசியலுக்கும் சேர்த்தே
ஆடுகிறது உங்கள் தலை.

மழலைச் சொல்லை தீய்த்த எறிகணை…
கருச்சிதைந்த பெண்ணோடு தெறித்த கரும்பனை..
இறந்த பின்னாலும் பெண்னை புணர்ந்திடும் இனவெறி…
ஈழத்தின் துயரத்தை இசைக்க முடியாமல்
காற்றும் மூர்ச்சையாகும்…. இந்தச் சூழலில்
ஒரு தமிழனென்ற முறையில் தமிழில் பேசிய இசைப்புயல்
ஈழமக்கள் எரியுமிந்த வேளையில்
விருது வேண்டாமென்று கூட அல்ல…
வருத்தத்தோடு வாங்கிக்கொள்கிறேன் என்றாவது
பேசியிருக்கலாம்தானே!

“எல்லா புகழும் இறைவனுக்கே” என்பவர்
ஆஸ்கார் புகழுக்காக அடக்கி வாசிக்காமல்
“வராக நதிக்கரையோரம்” உருகும் இசைப்புயல்
இசுரேல் இனவெறியால் மேற்கு கரையில்
உயிர் உருகி உருக்குலையும் பாலஸ்தீன மக்களுக்காக
அமெரிக்க மேலாதிக்கத்தால்
நரம்புகள் அறுக்கப்பட்ட இசைக்கருவிகளாய்
தமது மூச்சையும் இசைக்கமுடியாமல் பலியாகும்
ஈராக்கிய மக்களுக்காக….. ஒரு இசுலாமியன் எனுமடிப்படையில்
ஆஸ்கர் விருதை வேண்டாம் என்று கூட அல்ல…
ஆழ்ந்த சோகத்தோடு ஏற்கிறேன் என்றாவது
சொல்லலாம் தானே?

இந்த… சாதி, , இனம், அரசியலுக்கெல்லாம்
அப்பாற்பட்டது ரகுமானின் இசை அனுபவம் என்போரே!
சரிதான்!
இவை எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு
உலகமயத்தின் சரக்காக இசைப்புயல்…
சரக்கு சந்தையைப் பற்றியல்லாமல்
வேறு எதைப்பற்றியும் கவலைப்படுவதில்லை
உண்மைதான்!

- துரை சண்முகம் -