அண்மையில் நீரிழிவு தொடர்பான மருத்துவர்களுக்கான ஒரு கருத்தரங்கிற்குச் சென்றிருந்தேன். அங்கு நீரிழிவு நோயாளிகளின் உணவுமுறைகள், அதுபற்றி மக்களிடம் பரவியிருக்கும் தவறான கருத்துக்கள் பற்றியெல்லாம் கலந்துரையாடப்பட்டது. அவற்றில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்வது பயனளிக்கும் என நம்புகிறேன்.

 

நாம் வழமையாக உட்கொள்ளும் உணவுகள் அனைத்தும் சமிபாடடைந்து இரத்தத்தில் குளுக்கோஸாக மாறுகின்றன. அவை குருதியில் எந்தளவிற்கு குளுக்கோஸ் அளவை அதிகரிக்கின்றன என்பதை கிளைசீமிக் இன்டெக்ஸ் (Glycemic Index) என்ற குறியீட்டில் அளவிடுகிறார்கள். அதன் அடிப்படையிலேயே நீரிழிவாளர்களுக்கான உணவு பற்றி அங்கு ஆராயப்பட்டது.
கிளைசீமிக் குறியீட்டு அளவில் நோக்கும்போது நாம் உட்கொள்ளும் அரிசிகள் பற்றிக் குறிப்பாகவும் ஆழமாகவும் ஆராயப்பட்டது. நீங்கள் குத்தரிசி, சம்பா, பச்சையரிசி என எந்த அரிசியை உட்கொண்டாலும் அவை ஒரே மாதிரியான மாற்றத்தையே குருதி சீனியின் அளவில் ஏற்படுத்துகின்றன. எனவே எந்த அரிசிச் சோறை உட்கொண்டாலும் பரவாயில்லை. ஆனால் சாப்படும் சோற்றின் அளவை அதிகரிக்கக் கூடாது, அளவோடு சாப்பிட வேண்டும் என்பதே முக்கியமாகும்.
அதே போல “சாதாரண பாண் கூடாது. தவிட்டுப் பாண்தான் நீரழிவு நோயாளர்களுக்கு நல்லது” என்ற கருத்தும் தவறானது. ஏனெனில் இரண்டினதும் கிளைசீமிக் இன்டெக்ஸ் ஏறத்தாளச் சமமானதே.
தவிட்டுப் பாண் சாதாரண பாணிலும் பாதகமானது என்ற கருத்தும் கருத்தரங்கில் சிலரால் முன்வைக்கப்படடது. தவிட்டுப் பாண் சுலபமாக செமிபாடு அடைவதற்காக சில நொதியங்களை பாண் தயாரிப்பின் பொது பேக்கரிகளில் சேர்க்கிறார்கள். இதனால் அது எளிதாக சமிபாடு அடைகிறது. ஆனால் அதே நேரத்தில் விரைவாக குடலிலிருந்து உறிஞ்சப்பட்டு கிளைசீமிக் இன்டெக்ஸ்சை உயர்த்துகிறது.
எனவே நீரிழிவு நோயாளர்கள் தவிட்டுப் பாணைத் தேடி ஓடுவது தவறானது. அவசியமற்றது.
ஆட்டாமா, குரக்கன் மா, அரிசிமா, ஓடியல் போன்ற எந்த மாவில் தயாரித்த தின்பண்டங்களையும் நீரிழிவுள்ளவர்கள் உண்ணலாம், எந்த அரிசிச் சோறானாலும் சாப்பிடலாம். ஆயினும் உண்ணும் உணவின் அளவு அதிகமாக இருக்கக் கூடாது.
அத்துடன் எதனுடன் உண்கிறீர்கள் என்பதும் முக்கியமானது. நார்ப்பொருள் செறிந்துள்ள காய்கறிவகைகளை சேர்த்து உண்டால் குருதியில் சீனியின் அளவு திடீரென அதிகரிக்காது. அதிலும் கரையக் கூடிய நார்ப்பொருள் (Soluble fibres) சேர்த்து உண்பது நல்லது. கடலை, பயறு, பருப்பு, சோயா, போஞ்சி போன்ற அவரை இன உணவுகளில் இது அதிகம் உண்டு. எனவே சொதி, சம்பல், பட்டர், மார்ஜரின் போன்றவற்றுடன் உண்பதைத் தவிர்த்து மேற் கூறியவாறு உண்பது உசிதமானது.
இனிப்பில்லாத கிறக்கர் பிஸ்கட் நல்லது என்பதும் தவறான கருத்தாகும். அதிலுள்ள மாப்பொருள் குருதியில் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கவே செய்யும்.
எனவே நீரிழிவு நோயாளர்கள் “பிரதான உணவு வேளைகளுக்கு இடையில் குறும் உணவாக எதைச் சாப்பிடுவது” எனக் கேட்பார்கள். நியாயமான கேள்வி. சிறிய வாழைப்பழம், அப்பிள், பப்பாளி போன்ற பழ வகைகளையோ, வெள்ளரி, கரட் போன்ற காய்கறிகளையோ சப்பிச் சாப்பிடலாம். களைப்பும் பசியும் நீங்கும். அதனால் சீனியின் அளவு அதிகரிக்காது.

பழங்களில், வாழைப்பழம் பற்றிப் பேசும் போது “கதலி நல்லது, கப்பல், ஆனைமாலு கூடாது” என்றே பலரும் கூறுவார்கள். இதுவும் மற்றொரு தவறான கருத்தே. கதலி, கப்பல், இரதை, ஆனைமாலு போன்ற எல்லாமே நல்லவைதான். ஏனெனில் இவை யாவற்றினதும் கிளைசீமிக் இன்டெக்ஸ் 10 லும் குறைவாகவே இருக்கின்றன. எனவே எல்லாமே பாதிப்பற்றவைதான். எந்த வாழைப் பழமானாலும் ஒவ்வொரு உணவுடனும் பாதியளவு சாப்பிடலாம்.
அன்னாசி, மாம்பழம் ஆகியவற்றைக் கூட உண்ணலாம். ஆனால் எவ்வளவு உண்பது என்பதே முக்கியமானது.
“மண்ணுக்கு கீழ் விளையும் எந்தக் கிழங்கு வகைகளையும் நான் தொடுவதே இல்லை” என பல நீரிழிவு நோயாளர்கள் சத்தியம் செய்வார்கள். இதுவும் தவறான கருத்தே. கிழங்கு வகைகள் அனைத்திலும் உள்ளது மாப்பொருள்தான். அரிசி, பாண், நூடில்ஸ் போன்றவற்றிலும் உள்ளது அதே மாப்பொருள்தான். எனவே அளவோடு உண்ணலாம்.
“வத்தளைக் கிழங்கு இனிப்புக் கூடியது. அது சாப்பிடக் கூடாதுதானே” எனக் கேட்டால் அதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்றைய கிழங்குகளிலும் கூடியதல்ல. எனவே நிச்சயம் சாப்பிடலாம். அத்துடன் வத்தாளையில் கரட்டீன் சத்தும் இருப்பதால் மற்றக் கிழங்குகளை விடச் சிறந்தது. மரவள்ளியும் சாப்பிடலாம் ஆனால் அதில் மாப்பொருளைவிட வேறு விட்டமின், கனிமங்கள் இல்லை என்பதால் சிறப்பான உணவாகக் கொள்ள முடியாது. ஆயினும் அளவோடு உண்பதில் தவறில்லை.
இதைப் படித்துவிட்டு குத்தரிசி, ஆட்டாமா, குரக்கன் போன்றவை பிரயோசனமற்ற உணவுகள் எனக் கருதுவது தவறு. அவற்றில் விட்மின், கனியங்கள், நார்ப்பொருள் ஆகியவை சற்று அதிகமாக இருப்பதால் அவை போஷாக்குள்ள உணவு வகைகளே.
ஆயினும் நீரிழிவு நோயாளர்கள் இவற்றை மட்டுமே உண்ண வேண்டும் என நிர்ப்பந்திப்பது தவறானது. அதற்கான எந்த வித விஞ்ஞானபூர்வமான ஆதாரமும் இல்லை. மாப்பொருள் உணவின் அளவும், எதனோடு உட்கொள்கிறீர்கள் என்பதும் முக்கியமானது என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
****************
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
குடும்ப வைத்தியர்
நன்றி:- வீரகேசரி 26.10.2008