கானகத்து மிச்சமாய்
கடந்த காலத்தின் எச்சமாய்
கல்லூரியின் கருத்த மூலையில்
கம்பீரமாக
நெருப்பின் மலர்களை வீசி
காற்றைக் கொளுத்தி
கதிரவனைக் கலங்கடிக்கும்
அந்த
மஞ்சள் கொன்றை,

இன்று மௌனமாக
தலை குனிந்து
தன் உடல் வழியே
வழிய விடுவதை
மழை நீர் என்கிறாய் நீ!

இல்லை நண்பா
இல்லை!

மண்ணைத் தொட்ட
நீரின் சிலுசிலுப்பில்
வேர் சிலிர்க்கும் முன்பே,

நீரூற்று பாறைகளின்
வேர்க்கால்களை துளைத்த
பெப்சியின் ஆழ்துளை பைப்புகள்,
வானத்தின் ஈரத்தை
களவாடும் ஈனத்தை
உணர்த்த – உனக்கு
உணர்த்த
கசிய விடுகிறது
தன் உயிரை
கிளை வழியே
இலை வழியே!

- விடிவெள்ளி

http://vidivellee.wordpress.com/

http://www.vinavu.com/2009/09/05/saturday-poems-3/