10_2006.jpg

ஓசூருக்கு அருகிலுள்ள சானமாவு, பைரமங்கலம், குந்துமாரனப்பள்ளி, அஞ்செட்டிப்பள்ளி ஆகிய நான்கு ஊராட்சிகளில் 15க்கும் மேற்பட்ட கிராமங்களைக் கொண்ட பகுதியில் 3600 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கப்படவுள்ளது. மூன்றாண்டுகளுக்கு முன்பே முந்தைய அ.தி.மு.க. அரசு இதற்கான

அறிவிப்பை வெளியிட்டது. தற்போது தி.மு.க. கூட்டணி அரசு இதனை நடைமுறைக்குக் கொண்டுவரும் வேலையில் வேகமாக இறங்கியுள்ளது.

 

ஓசூர் வட்டாரத்திலுள்ள கிராமங்கள் செழிப்பானவை. இங்கு நிலவும் மிதமான வெப்பநிலை, செழிப்புத்தன்மை ஆகியவற்றைக் கண்டு வெள்ளைக்காரர்கள் இப்பகுதியை ""லிட்டில் இங்கிலாந்து'' என்று பெயரிட்டு அழைத்தனர். இங்கு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமையவுள்ள பகுதியில் 15க்கும் அதிகமான சிறிய ஏரிகள் உள்ளன. இங்கு தக்காளி, பீட்ரூட், காரட், முள்ளங்கி, முட்டைகோஸ் முதலான காய்கறிகள் பயிரிடப்பட்டு, தமிழகம் மட்டுமின்றி கேரளம் கர்நாடகத்துக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் இந்தக் கிராமங்கள் 20,000க்கும் அதிகமான கால்நடைகளைக் கொண்டு, கால்நடை வளர்ப்புத் தொழிலும் செழுமையாக உள்ளது. இவற்றையெல்லாம் நாசமாக்கி விவசாயிகளின் வாழ்வைச் சூறையாட ஆட்சியாளர்கள் கிளம்பி விட்டனர்.

 

ஓசூரில் தொழிற்பேட்டைகள் அமைப்பதற்கும் அதைத் தொடர்ந்து வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகள் அமைப்பதற்கும் ஏற்கெனவே 3000 ஏக்கர் விவசாய நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. அதன்பிறகு ரோஜாமலர் எஸ்டேட்டுகள், காய்கறி மூலிகைப் பண்ணைகள் நிறுவி ஏற்றுமதி செய்வது என்ற பெயரில் 1200 ஏக்கர் விவசாய நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டன. தற்போது, 3600 ஏக்கர் பரப்பளவில் சிறப்புப் பொருளாதார மண்டலம் நிறுவப்படுவதால், ஆயிரக்கணக்கான விவசாயிகள் விவசாயத்திலிருந்தே விரட்டியடிக்கப்படவுள்ளனர். சிறப்புப் பொருளõதார மண்டலம் வரப்போவதை முன்கூட்டியே அறிந்து கொண்ட ரியல் எஸ்டேட் முதலாளிகள், இப்பகுதி விவசாயிகளிடம் ஆசை காட்டி அற்ப விலைக்கு நிலங்களைப் பிடுங்கி வருகின்றனர்.

 

சிறப்புப் பொருளாதார மண்டலத்தாலும், காய்கறி மலர்ப் பண்ணைகளாலும், தொடரும் நில ஆக்கிரமிப்புகளாலும் விவசாயிகள் அடுத்தடுத்து நிலங்களைப் பறிகொடுத்து நாடோடிகளாக்கப்பட்டு வருகின்றனர். வேறு தொழில்கள் ஏதும் தெரியாமல் பஞ்சம் பிழைக்க அண்டை மாநிலங்களுக்கு ஓடுகின்றனர். ஓசூர் உழவர் சந்தையையே மூடிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலைமைகளை விளக்கி, சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் பெயரால் தமிழக அரசு விவசாய நிலங்களை ஆக்கிரமிப்பு செய்து வருவதைத் தடை செய்யக் கோரி இப்பகுதியில் இயங்கிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள், விவசாயிகளின் வாழ்வுரிமையைப் பறிக்கும் இம்மறுகாலனிய ஆக்கிரமிப்புக்கு எதிராக துண்டுப் பிரசுரங்கள் வெளியிட்டு விவசாயிகளிடம் விழிப்புணர்வூட்டி வருகின்றன. மறுகாலனிய தாக்குதலுக்கு எதிராக விவசாயிகளையும் தொழிலாளர்களையும் உழைக்கும் மக்களையும் அணிதிரட்டி வரும் இவ்வமைப்புகள், போராட்டத்துக்கான ஆயத்தப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

 

பு.ஜ. செய்தியாளர், ஓசூர்.