புலிகள் சாதி மறுப்பு இயக்கமாம்! உயிர்மையில் யமுனா ராஜேந்திரன் புலம்பல் 3

புலி தனக்குள் சாதியைக் கடைபிடிக்கவில்லை என்றால், அது "முற்போக்கு" இயக்கமாம். பொது விடுதிகளில் அல்லது பொது இடங்களில் சாதி பார்க்காமல் பழகினால், அவர்கள் முற்போக்கானவர்கள். பிரதமராக இருந்த வாஜ்பேயும், ஜனாதிபதியாக இருந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த கே.ஆர்.நாராயணனும்; ஒன்றாக கூடி இந்துத்துவ சாதிய ஆட்சியை தாழ்த்தப்பட்ட மக்கள் மேல் ஏவிய போது கூட, அவர்கள் தமக்குள் என்றும் சாதி பார்க்கவில்லை.

ஊர் சொத்தை கொள்ளையடித்து ஒன்றாக விருந்துண்டு கூட மகிழ்ந்தனர். தமக்குள் அவர்கள் சாதி பார்க்காமல் ஆட்சியை கடைப்பிடித்தால், அவர்கள் முற்போக்கானவர்கள். இதைத்தான் யமுனாவின் புலி "மார்க்சியம்" புதிதாக இன்று கண்டுபிடித்துள்ளது.

  

இப்படித்தான் யமுனா, வரலாற்றுக் கதை சொல்ல முனைகின்றார். புலிகள் தேசியத்துக்காக போராடியதாக யமுனா ராஜேந்திரன் திரிப்பதன் மூலம், தேசியமல்லாத புலி பாசிச மாபியாவின் வரலாற்றை தனக்கேற்ப திரிக்கின்றார். இதற்கமைய புலிகள் கட்டமைப்பு மற்றும் அதன் சட்டங்கள் திட்டங்களை துணைக்கு அழைக்கின்றார்.

 

புலிகள் தேசியத்தை முன்னெடுத்து நிலப்பிரபுத்துவத்துக்கு எதிராகப் போராடி இருந்தால், இயல்பாகவே சாதியத்தை ஒழித்துக் கட்டப் போராடியிருப்பார்கள். சாதிய இந்து மதத்தை கருவறுக்க போராடியிருப்பார்கள். புலிகளின் திட்டம்; கூறியது போல் "சகலவிதமான சமூக ஒடுக்குமுறைகளையும் ஒழித்துக்கட்டி" இருப்பார்கள். மாறாக புலிகள் தேசியத்தை முன்னனெடுக்காமல், அதை கருவறுத்தனர். அதேநேரம் சிங்கள பேரினவாத தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சியை, தம் தலைமையில் பிரித்துத் தரக் கோரினர். அதாவது தமிழ் குறுந்தேசிய தரகுமுதலாளித்துவ நிலப்பிரபுத்துவ ஆட்சியை தம்மிடம் தரக்கோரினர். இதற்கு ஏற்ப உருவாக்கிய சட்டத்தை யமுனா முற்போக்கானதாக எமக்கு காட்ட முனைகின்றார்.

 

இலங்கையில் இருந்த சட்டதிட்டங்கள் எப்படி சாதியத்தை ஒட்டிய ஒரு சட்டநெறிகளை கொண்டு இருந்ததோ, அதை ஓத்த ஒரு சட்டநெறியை தான் புலிகள் மறுபிரகடனம்  செய்தனர். எந்த சமூக மாற்றத்தையும், தங்கள் நடைமுறையில் இருந்து முன்வைத்து, இதற்கமைய புதிய சட்டநெறியை உருவாக்கவில்லை. இலங்கை சட்ட திட்டத்தில், சாதியம் பற்றிய சட்ட நெறிகள் சாதிக்கு எதிராக உண்டு. அதையே புலிகள் தங்கள் சாதிய சட்ட நெறிகளாக, மறுபடியும் பயன்படுத்தினர்.

 

யாழ்குடாவில் 1960 முதல் 1970 வரை நடைபெற்ற சாதியப் போராட்டத்தில், புரட்சிகர மார்க்சியவாதிகள் ஏற்படுத்திய தாக்கம் சமூக ரீதியானது. இதை முறியடிக்க போலி இடதுசாரிகளின் இலங்கை பாராளுமன்றம் மூலம், பல புதிய சாதிய சட்டநெறிகளை உருவாக்கினர். இந்த வகையில் 1970 களில் ஏற்படுத்திய சாதிய சட்ட மாற்றங்கள், புலிகளின் சட்ட நெறிகளை விட முன்னேறியதாகவும் முற்போக்கானதாகவும் இருந்தது.

 

புலிகளின் சாதிய சட்டதிட்டம் என்ன? தேசியம் மூலமான சாதி ஒழிப்பை அது முற்றாக மறுத்தது. சாதிய ஒழிப்பைக் கோருவதை குற்றமாக்கியது. சாதி ஒழிப்பிற்கான இடதுசாரிய போராட்டத்தை, தங்கள் சாதிய பாசிச சட்டங்கள் மூலம் மறுத்தனர். இவர்கள் தங்கள் சட்டத்துக்கு வெளியில், சாதிய போராட்டங்களை முன்னெத்தவர்களை சட்டத்துக்கு புறம்பாகவே படுகொலை செய்தனர்.

 

சாதியத்துக்கு எதிரான இடதுசாரிய போராட்டத்தின் தொடர்ச்சியை மறுத்துடன், தேசியத்தின் உட்கூறான சாதிய ஒழிப்பையும் மறுத்தனர். அவர்கள் செய்தது, இலங்கை மற்றும் இந்தியா  அரசு செய்ததைத்தான். அதாவது சாதியத்தையும், அதன் பொது சமூக சாதிய ஒடுக்குமுறையையும் இயல்பான ஒரு சமூக ஒழுங்காக பேணக்கோரினர். அதை குழப்புவதை மறுத்;தனர். புலிகள் தங்கள் பாசிசத்துக்கு ஏற்ப, இதை மீளக்கட்டமைத்தனர்.

 

1960 களில் எழுந்த சாதிப் போராட்டம் சில வெற்றிகள் மூலம் 1970 களில் ஒய்வுக்கு வந்த போது, அதை 30 வருடத்துக்கு மீள எழுந்துவிடாத வண்ணம் தடுத்தனர். 1980 களில் தேசியத்துடன் மீள எழுந்த சாதியப் போராட்டங்களை, தங்கள் துப்பாக்கிகள் மூலம் ஒடுக்கினர். நூற்றுக்கணக்கில் சாதிய போராட்டத்தை முன்னெடுத்த முன்னணியாளர்களை குறிவைத்துக் கொன்றனர்.

 

இதன் மூலம் சாதிய சமூக ஒழுங்கில் சாதியத்தை தொடர்ந்து பேணுவதை மறுப்பது, புலி பாசிசச் சட்டத்தின்முன் குற்றமாகியது. தன் சாதிய ஒடுக்குமுறையை மூடிமறைக்க, சாதிய போராட்டம் தேசியத்தை குழப்புவதாக காட்டி திரித்தது. உதாரணமாக சாதியத்தின் வாழ்வை மறுப்பதை, இந்தியாவில் பொது அமைதிக்கும், சட்டத்தின் ஆட்சிக்கும், கேடுவிளைவிப்பதாக கூறி இந்திய அரசு அதை ஒடுக்குகின்றது. இப்படி சாதியத்தை பொது சமூக ஒழுங்கில் பேண மறுப்பதை, நாசுக்காகவே தண்டிக்கின்றது.

 

இந்தியாவில் இயல்பான சாதிய ஒழுங்கை நிலைநாட்ட மாமா வேலை பார்க்கும் அரசு இயந்திரமும் பொலிசும், எதை எப்படிச் செய்கின்றதோ அதைத்தான் இலங்கையில் அரசும் புலிகளும் செய்தனர். இங்கு புலிக்கு யமுனா மாமாவாகி, அதற்கு முற்போக்கு தேசியத்தை ஓட்டி விடுகின்றார். இப்படி ஒடுக்கி போராடுவதுதான் தேசியம் என்று, இதன் மூலம் கூறிவிடுகின்றார். தேசியத்தில் சாதி ஒழிப்பு கிடையாது என்று , புலிக்கேற்ற அவரின் "மார்க்சிய" அளவுகோல் மூலம் அறைந்து சொல்லிவிடுகின்றார்.

 

பி.இரயாகரன்
14.08.2009

தொடரும்

 

Last Updated on Saturday, 15 August 2009 10:25