இயங்கியலற்ற மார்க்சிய சிந்தனைமுறையில் கொரோனா
கொரோனா (SARS-CoV-2) வைரஸ் தனக்கும், தன் வீட்டுக்குள்ளும் வாரது, மரணம் தன்னை சுற்றி நிகழாது என்ற சுய கற்பனையில் - சுய அறியாமையில் இருந்து கருத்துக்களை உருவாக்குகின்றவர்கள், தங்கள் கருத்துக்கு இடதுசாரிய முலாம் பூசுகின்றனர்.
ஒட்டுமொத்த சமூகத்தையும் மையப்படுத்தாத, அதில் இருந்து தன்னை விலக்கிக் கொண்டு அணுகுகின்ற பார்வை - முதலாளித்துவ சிந்தனைமுறை. உனக்கு வைரஸ் தொற்று வந்தால், உன்னைச் சுற்றி மரணம் நிகழ்ந்தால் இதை எப்படி நீ பார்ப்பாய்? முதலாளித்துவம் கொல்லும் தானே, என்று கூறுவாயா? இல்லையென்றால் மக்களுக்கு என்ன கூறுவாய்?
இடதுசாரியத்தின் பெயரில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு அணுகுகின்ற எல்லாப் பார்வையும், இயங்கியலற்ற வரட்டுத்தனமாகும். தன்னை மையப்படுத்தி, தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் தனியுடமைவாதக் கண்ணோட்டம். இதுதான் தனிமனிதர்களுக்குள் இயங்கும் முதலாளித்துவச் சிந்தனைமுறை.
இப்படிப்பட்ட சிந்தனைமுறைகள் வழி மார்க்சியத்தையும், முதலாளித்துவத்தையும் கிளிப்பிள்ளைகள் போல் உளறுவதை அறிவாக்க முனைகின்றனர். தமக்கு தெரிந்ததை வைத்து மீண்டும் அரைக்கின்றதைத் தாண்டி - இயங்கியல் முறையில் இயங்கிக்கொண்டு இருக்கும் சமகால விடையம் மீது இயங்கியலற்று புலம்பவது நடக்கின்றது. முதலாளித்துவம் அப்படித்தான் என்று வார்த்தை ஜாலங்கள் மூலம் முழங்க முடியும். மக்களை அறிவூட்ட முடியாது.
