சுமந்திரனின் "தமிழ் தேசியம்" குறித்து "ஆய்வாளர்" ஜோதிலிங்கத்தின் புலம்பல்
"தமிழ் தேசியத்தைக் கைவிட்டால் நாங்கள் பூச்சியம்" என்று கூறுவதே, யாழ் மையவாதச் சிந்தனை முறை. இப்படி "தமிழ் தேசியவாத ஆய்வாளராக" முன்னிறுத்தப்படும் ஜோதிலிங்கம் சுமந்திரனுக்கு எதிராக முன்வைக்கின்றார்.
சுமந்திரனுக்கு எதிரான "தமிழ்த் தேசியம்" இப்படித்தான், முனங்கி, முழங்குகின்றது. சுமந்திரனின் அரசியலென்பது "தமிழ் தேசியம்" நீக்கம் செய்யப்பட்ட, ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாட்டு அரசியல் அல்லது அதன் அங்கம். அது மேற்கு நாட்டு "லிபரல்" அரசியலாம். அதாவது யாழ் மைய்யவாத வெள்ளாளிய சிந்தனைக்கு பொருந்தாத ஜனநாயக - விடுதலை அரசியலாம்.
இப்படி மேற்கு ஏகாதிபத்தியத்தின் மடியில் படுத்துக் கிடந்து கனவு காண்கின்ற "தமிழ் தேசியமானது", ஐக்கிய தேசிய கட்சி ஊடாக மேற்கு ஏகாதிபத்தியத்தை சுமந்திரன் அணுகுவதை துரோகம் என்கின்றனர். எதிர்ப்பு அரசியல் - இணக்க அரசியல் என்று, ஓடுக்கும் தமிழ் தேசியத்தை முன்னிறுத்தி மோதுகின்ற பிழைப்புவாதம்.
1975 இல் "தந்தை" செல்வா முன்வைத்த "தமிழ் தேசியத்தை" சுமந்திரன் கைவிட்டுவிட்டார் என்று வரலாற்று ரீதியாக ஆய்ந்து கூறும் ஜோதிலிங்கம், தன் வரலாற்றில் தான் கைவிட்டு – காட்டிக் கொடுத்த வரலாற்று திரிபுகள் மீதேறி புலம்புகின்றார்.
1985 - 1986 இல் யாழ் பல்கலைக்கழகத்தில் நாங்கள் முன்னின்று எடுத்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய நீங்கள், வரலாற்றுக்கு முரணாக புலம்பவது எந்த அடிப்படையில்? யாருடைய நலனுக்காக?
1985 இல் புலிகள் யாழ் பல்கலைக்கழக மாணவர்களைத் தாக்கி – மாணவர் சமூகத்தையே ஒடுக்கிய போது - அதை எதிர்த்து நின்றவர்களில் நீங்களும் ஓருவர். மறந்து விட்டீர்களா!? மாணவர்களை ஓடுக்கிய புலிகளுக்கு எதிராக யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்த மாணவர் சங்கம் போராட மறுத்து, புலிப் பினாமியாக இயங்கிய சூழலில், மாணவர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கிய மாணவர் அமைப்பின் தலைவராக உங்களை நாங்கள் தெரிவு செய்தோம். நினைவு இருக்கின்றதா? ஆம், அன்று புலிக்கு எதிராக, புலி அரசியலை எதிர்த்து தலைமை ஏற்றீர்கள். அப்படித்தானே.