யாரெல்லாம் தனது உழைப்பிலான பணத்தைக் கொண்டும், தனது நேரத்தையும் கொண்டு மக்களுக்கான சமூக பணியில் ஈடுபடவில்லையோ, அவர்கள் உதவி செய்வதாகக் கூறுவதும் மோசடியானது. பணம் கொடுப்பவனையும் - பணம் வாங்குபவனையும் ஏமாற்றுவதற்கான பொது உள்ளடக்கமாகும். இந்த உதவி இடைத்தரகர்கள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்கும் முன்னுதாரணத்தைக் காணவும் - காட்டவும் முடியாதவர்கள், மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் கூட்டம்.
தங்கள் சமூகப் பொது நடத்தைகள் மூலம் மக்களுடன் வாழாதவர்களின் உதவிக் கோரிக்கை என்பது, வலிந்து உதவியைக் கோருவதற்கான புறச்சூழலை உருவாக்கி, அதைக் காட்சியாக்குவதே.
ஒடுக்கப்பட்ட மக்களை மய்யப்படுத்தி மக்களுக்கான சமூகப் பணியை முன்னெடுக்காத ஒருவன், மக்கள் பற்றியும் - உதவி பற்றியும் பேசுகின்றான் என்றால், அவன் மோசடிக்காரனே. இப்படி உதவி கோருகின்றவர்கள், தங்கள் சொந்த வாழ்வுக்காக உழைத்து வாழ தயாரற்ற தற்குறிகள்.
தங்கள் சுய திறமையை, சமூக அறிவை, ஒடுக்கப்பட்ட சமூக அறத்தை சமூக அக்கறையுடன் முன்வைத்து மக்களுடன் உரையாடாத யூ-ரியூப் சமூக வலைத்தளத்தின் பொது நோக்கம், எந்த வகையிலான குறுக்கு வழியிலும் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பது தான். பண அதிகாரம் மூலம் பாலியல் துஸ்பிரயோகம் செய்வது, தன்னை கதாநாயகனாகக் காட்டி சமூகத்தை சுரண்டுவது, இது தான் இதன் சாரமும், உண்மையுமாகும்.