Language Selection

சமூகவியலாளர்கள்

என்னுடைய பவுத்த சகோதரர்களே! நேற்றும் இன்று காலையும் மதமாற்ற (தீக்ஷா) நிகழ்வு நடைபெற்ற இடத்தின் முக்கியத்துவத்தை சிந்தனையாளர்கள் புரிந்து கொள்வது, சற்றுக் கடினமானதாக இருக்கலாம். நாம் இந்தப் பொறுப்பை ஏன் சுமக்க வேண்டும், அதன் தேவை என்ன, அதனுடைய விளைவு என்ன என்பது குறித்து கண்டிப்பாகத் தெரிந்து கொள்ள வேண்டும். இதைப் புரிந்து கொண்டால்தான் நாம் முன்னெடுத்துச் செல்லும் பணியின் அடிப்படையை பலப்படுத்த முடியும்.

Ambedkar இம்மதமாற்ற நிகழ்வுக்காக ஏன் நாக்பூரை தேர்ந்தெடுத்தீர்கள் என்று என்னிடம் பலரும் கேட்டார்கள். இந்நிகழ்வை ஏன் வேறு இடங்களில் நடத்தவில்லை? ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுவயம் சேவக் சங்) நாக்பூரில் மய்யம் கொண்டிருப்பதால், அவர்களை நெருக்கடிக்கு ஆட்படுத்தும் வகையில், இது இங்கு நடத்தப்பட்டதாக சிலர் கூறினர். இதில் துளியும் உண்மை இல்லை. நாம் எடுத்துக் கொண்ட பணி மிகப் பெரியது. நம் வாழ்வின் ஒவ்வொரு நிமிடம் இதற்குப் போதவில்லை. எனவே, மற்றவர்களை சீண்டிப் பார்க்க எனக்கு நேரம் இல்லை. இந்த இடத்தைத் தேர்வு செய்வதற்கு வேறொரு காரணம் உண்டு. இந்தியாவில் பவுத்தத்தைப் பரப்பியவர்கள் நாகர்களே என்பது, பவுத்த வரலாறு படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். ஆரியர்களைக் கடுமையாக எதிர்த்தவர்கள் நாகர்கள்.

 

ஆரியர்களுக்கும் ஆரியர் அல்லாதவர்களுக்கும் பல கடுமையான சண்டைகள் நடைபெற்றன. புராணங்களிலும் ஆரியர்கள் நாகர்களை எரித்துக் கொன்றதற்கு, எண்ணற்ற எடுத்துக்காட்டுகள் இருக்கின்றன…

 

பல்வேறு காரணங்களுக்காக நாம் அவர்களை (ஆர்.எஸ்.எஸ்.) எதிர்க்கலாம். ஆனால், இந்த இடத்தைத் தேர்வு செய்ததன் நோக்கம், எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக அல்ல. இம்மாபெரும் பணியை நான் மேற்கொண்டதற்காக, பல்வேறு மக்களும் பத்திரிகைகளும் என்னை விமர்சிக்கின்றனர். சில விமர்சனங்கள் மிகவும் கடுமையானதாக இருக்கிறது. நான் ஏழை தீண்டத்தகாத மக்களைத் தவறான பாதைக்கு அழைத்துச் செல்வதாக அவர்கள் கருதுகிறார்கள். மதமாற்றத்தால் அவர்களுடைய உரிமைகளை அவர்கள் இழக்க நேரிடும் என்று நம்முடைய சமூகத்தைச் சார்ந்த மக்களே தவறான பிரச்சாரங்களை செய்கிறார்கள். நம்மில் படிப்பறிவில்லாத மக்களை பழைய பழக்கவழக்கங்களையே பின்பற்றும்படி அவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

 

கடந்த காலங்களில் நாம் இறைச்சி சாப்பிடக் கூடாது என்பதற்காகவே ஓர் இயக்கம் இருந்தது. தீண்டத்தகுந்தவர்கள் எருமை மாட்டின் பாலை குடிப்பார்களாம். ஆனால், அந்த எருமை இறந்துவிட்டால் அதை நாம் சுமந்து சென்று அடக்கம் செய்ய வேண்டுமாம். இது, கேலிக்கூத்தாக இல்லையா? “கேசரி” என்ற பத்திரிகையில் முன்பொரு முறை, “சில கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் 50 மாடுகள் இறப்பதாகவும் அந்த மாட்டினுடைய கொம்பு, இறைச்சி, எலும்பு மற்றும் வால் பகுதியை விற்பதன் மூலம் தீண்டத்தகாத மக்கள் 500 ரூபாய் சம்பாதிக்க முடியும்’ என்றும் எழுதியிருந்தனர்.

 

ஒரு முறை நான் சங்கம்நேர் என்ற ஊருக்கு ஒரு கூட்டத்திற்குச் சென்றிருந்தேன். அப்பொழுது “கேசரி” பத்திரிகையின் செய்தியாளர் என்னிடம் ஒரு சீட்டைக் கொடுத்து கேட்டார் : “நீங்கள் உங்கள் மக்களை செத்த மிருகங்களை சுமக்க வேண்டாமென்று அறிவுறுத்துகிறீர்கள். அவர்கள் எவ்வளவு ஏழ்மையில் உழலுகிறார்கள்! அவர்களுடைய பெண்களுக்கு உடுத்த புடவையோ, அணிந்துகொள்ள “ஜாக்கெட்டோ’கூட இல்லை. அவர்களுக்கு உணவு இல்லை, நிலம் இல்லை. இவ்வளவு அவலமான நிலையில் வாழும் இம்மக்கள், செத்த மாட்டைத் தூக்கி அதன் மூலம் அய்நூறு ரூபாய் சம்பாதிப்பதை மறுக்கின்றீர்களே! இது உங்கள் மக்களுக்கு மாபெரும் இழப்பில்லையா?’

 

நான் அவரைக் கேட்டேன். உங்களுக்கு எத்தனைக் குழந்தைகள்? நீங்கள் மொத்தம் எவ்வளவு பேர்? “எனக்கு அய்ந்து குழந்தைகள்” என்றும், “என்னுடைய அண்ணனுக்கு ஏழு குழந்தைகள்” என்றும் அவர் பதிலளித்தார். நான் சொன்னேன்: அப்படி எனில் உங்கள் குடும்பம் மிகப் பெரியது. எனவே, நீங்களும் உங்கள் உறவினர்களும் இந்த கிராமத்தில் செத்துப் போகும் அனைத்து மிருகங்களையும் சுமந்து செல்வதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அய்நூறு ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். நானும் ஒரு அய்நூறு ரூபாய் உங்களுக்குத் தருகிறேன். என்னுடைய மக்கள் உணவுக்கும் உடைக்கும் என்ன செய்வார்கள் என்பதை நான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஏன் இதை செய்யக் கூடாது. நீங்கள் இதை செய்தால், அது உங்களுக்கு மிகுந்த பயனை அளிக்குமல்லவா? எனவே, செத்த மிருகங்களை இனி நீங்கள் தூக்குங்கள்.

 

ஒரு பார்ப்பன சிறுவன் நேற்று என்னிடம் வந்து கேட்டான். உங்களுக்கு நாடாளுமன்றத்திலும், சட்டப் பேரவைகளிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறதே, அதை ஏன் நீங்கள் கைவிடுகிறீர்கள்? நான் சொன்னேன், நீ “மகர்” ஆக மாறி நாடாளுமன்ற, சட்டப் பேரவைகளில் உள்ள இடங்களைக் கைப்பற்றிக் கொள். பார்ப்பனர்கள் இடஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, ஏன் “மகர்” களாக மாற மறுக்கிறார்கள்? நான் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்வி இதுதான் : எங்களுடைய இழப்பிற்காக நீங்கள் ஏன் கண்ணீர் சிந்துகின்றீர்கள்? உண்மையில் ஒரு மனிதனுக்கு சுயமரியாதைதான் தேவையே ஒழிய, பொருளாதாரப் பயன்கள் அல்ல.

 

-தொடரும்

15.10.1956 அன்று மாபெரும் மதமாற்ற நிகழ்வையொட்டி ஆற்றிய உரை

நன்றி:தலித்முரசு

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! நம் மக்களிடையே பேசுவதற்காக நான் லூதியானாவிற்கு தற்பொழுதுதான் முதல் முறையாக வந்திருக்கிறேன். நீங்கள் திரளாகக் கூடியிருப்பது கண்டு நான் பெரிதும் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் இரண்டு மூன்று மாதங்களில், நடைபெற இருக்கும் தேர்தலில் பல்வேறு கட்சிகள் பங்கேற்க விருக்கின்றன. இத்தேர்தலில் பட்டியல் சாதியினர் கூட்டமைப்பும் (scheduled castes federation) தமது வேட்பாளர்களை முன்னிறுத்துகிறது. சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட அனைத்து இடங்களில் மட்டுமல்லாது, நம்முடைய வாக்குகள் கணிசமாக உள்ள சில பொதுத் தொகுதிகளிலும் நமது உறுப்பினர்கள் போட்டியிடுவார்கள். நமது வேட்பாளர்கள் வெற்றி பெறுவார்கள் என்றே நான் நம்புகிறேன்.

 

நம்முடைய வேட்பாளர்களின் வெற்றி, நம் மக்களையே பெருமளவில் சார்ந்திருக்கிறது. நம்முடைய மக்கள் அனைவரும் நமது வேட்பாளர்களுக்கு வாக்களித்தால், வெற்றி உறுதியாகக் கிடைக்கும். எனவே, அனைத்து தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குமான ஒரே அமைப்பான “பட்டியலினக் கூட்டமைப்பு’ உறுப்பினர்களுக்கு, நீங்கள் வாக்களிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்…

 

பல்லாண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகுதான், நாம் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில முக்கிய அரசியல் உரிமைகளைப் பெற்றிருக்கிறோம். இருபது ஆண்டுகளாக நான் ‘மகாத்மா’ காந்திக்கு எதிராகப் போரிட்டேன். அவர், நமக்கு தனித்துவமான சிறப்பு உரிமைகளை வழங்கும் திட்டத்திற்கு எதிராக இருந்தார். தீண்டத்தகாத மக்களுக்கு சிறப்பு உரிமைகள் அளிக்கப்பட்டால், அவர்கள் ஒருபோதும் இந்து அமைப்புக்குள் வர மாட்டார்கள் என்று அவர் வாதிட்டார். அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இந்துக்களிடமிருந்து விலகி, தனித்தே நின்றுவிடுவார்கள் என்றார். வட்டமேசை மாநாட்டிலும்கூட, நம்டைய இரட்டை வாக்குரிமை கோரிக்கையை அவர் எதிர்த்தார். பல ஆண்டுகாலப் போராட்டத்திற்குப் பிறகு நாம் ஓரளவு அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளோம். தற்பொழுது, சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒதுக்கப்பட்ட தனித் தொகுதி இடங்களுக்கு, நாம் நமது பிரதிநிதிகளை அனுப்ப முடியும்.

 

இத்தகைய நம் உரிமைகளை எல்லாம், பல அரசியல் கட்சிகளும் பறித்துவிட முனைப்பாக இருக்கின்றன. அவர்கள் நம்முடைய வாக்குகளைப் பெற்றுக் கொண்டு, அவர்களுடைய ஆதரவாளர்களை, நமக்காக ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்புகின்றனர். அவர்களுடைய நோக்கங்களை நீங்கள் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். தாழ்த்தப்பட்ட மக்கள் தற்பொழுது இருக்கும் நிலையிலேயே நீடித்திருக்க வேண்டும்; அவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றிவிடக் கூடாது; நம் மக்கள் காலங்காலமாக செய்து வரும் இழிவான தொழில்களையே தொடர்ந்து செய்ய வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். எனவே, வரும் தேர்தலில் நீங்கள் வாக்களிப்பது குறித்து மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நம்டைய வாக்குகள் மூலம் உண்மையான பிரதிநிதிகளே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் சட்டத்தில் உங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் பாதுகாக்கப்படும்.

 

சட்டமன்றங்களுக்கும், நாடாளுமன்றத்திற்கும் நம்டைய பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படவில்லை எனில், நாம் சுதந்திரத்தை அனுபவிக்க முடியாது. சுதந்திரம் என்பது கேலிக்கூத்தாகவே இருக்கும். இது, ஆதிக்க சாதியினருக்கான சுதந்திரமாகவே இருக்கும்; நமக்கானதாக இருக்காது. ஆனால், நம்டைய உண்மையான பிரதிநிதிகள், சட்டமன்றங்களிலும், நாடாளுமன்றத்திலும் இருந்தால்தான், நம்முடைய பிரச்சினைகளும், கோரிக்கைகளும் தீர்க்கப்படும், அப்பொழுதுதான் நமது குழந்தைகள் போதிய கல்வியைப் பெற முடியும்; நம்முடைய வறுமை ஒழியும், அப்போதுதான் வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் நமக்கு சமமான பங்கு அளிக்கப்படும்.

 

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டிருப்பினும், பிற கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சி இதில் தேவையின்றி தலையிடுகிறது. அவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில், தங்களுடைய ஆதரவாளர்களையே நிறுத்துகின்றனர். காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர்கள், தங்களுடைய கட்சித் தலைவர்களின் நலன்களுக்கு எதிராக, நம்டைய நலன்களைப் பாதுகாப்பார்களா? அவர்கள் நமக்காக என்ன செய்வார்கள்?

 

காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படும் தாழ்த்தப்பட்ட உறுப்பினர்கள் பற்றி, நான் சில செய்திகளை சொல்ல விரும்புகிறேன். அந்த முப்பது உறுப்பினர்களும், கடந்த நான்கு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் இருக்கின்றனர். இவர்களில் ஒருவர்கூட, நாடாளுமன்றத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகள் பற்றி கேள்வி எழுப்பியதில்லை. அப்படியானதொரு கேள்வி எழுப்பப்பட்ட போதும், அவைத் தலைவர் இதற்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். அத்துடன் இப்பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.

 

- தொடரும்
28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை

http://ambedkarr.wordpress.com/category/%e0%ae%a8%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%af%88%e0%ae%af-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%88/

பார்ப்பனியம் உயிர்ப்புடன் இருக்கும் வரை, மக்கள் அதை விடாப்பிடியாகக் கொண்டிருக்கும் வரை - ஒரு பிரிவினருக்கு உரிமைகளையும், இன்னொரு பிரிவினருக்கு இடையூறுகளையும் அது விளைவிப்பதால் - பாதிப்புக்குள்ளாகக் கூடியவர்கள் அமைப்பு ரீதியாகத் திரள்வது அவசியம். அவர்கள் அப்படித் திரள்வதால் என்ன தீங்கு நேர்ந்துவிடப் போகிறது? இவ்வாறு பாதிக்கப்பட்ட தொழிலாளர் அமைப்புகள் உருவாவது, முதலாளிகளுடைய முயற்சியின் காரணமாக நேர்கிறது என்று வைத்துக் கொண்டால், அதைப் பற்றிப் புகார் சொல்வதை என்னால் புரிந்து கொள்ள முடியும்… ஆனால், நாம் இப்படி அமைப்பு ரீதியாகத் திரள்வதற்கு முதலாளிகள் பின்புலமாக அமைந்திருக்கிறார்கள் என்று யாராவது சொல்ல முடியுமா? அப்படிச் சொல்ல எந்த விமர்சகராவது இருக்கிறாரா என்று நான் சவால் விட்டுக் கேட்கிறேன்.

 

எனவே, இப்படி ஒரு மாநாட்டைக் கூட்டியதற்காக வெட்கப்படத் தேவையில்லை; அதற்காக மன்னிப்புக் கோர வேண்டிய அவசியமுமில்லை. மாநாடு கூட்டப்படுவதை நியாயப்படுத்துவதற்கு உரிய காரணங்களும், நோக்கங்களும் இருக்கின்றன. ஒடுக்கப்பட்ட வகுப்பினரைச் சேர்ந்த ஓரிருவர், இந்த மாநாட்டை ஏற்கவில்லை. அவர்கள் போக்கில் புதுமை எதையும் நான் காணவில்லை. அவர்களில் சிலர் மற்றவர்களின் கூலிப்படைகள். சிலர் தவறாக வழிகாட்டப்பட்டவர்கள். சங்கம் என்கிற வார்த்தையே அவர்களுக்கு கவர்ச்சிகரமாகத் தெரிகிறது. செல்வாக்கு மிக்க பிரச்சாரகர்கள் வாயிலிருந்து அந்த வார்த்தை வெளிவரும்போது அவர்கள் மயங்கி விடுகிறார்கள். அதனால் ஒருவருக்கொருவர் உணர்வுகளிலும், அணுகுமுறையிலும் முரண்பட்டுக் கிடக்கிறார்கள்.

 

ஒருவன் உரிமை கேட்கிறான். அவனுடைய நலனைப் பாதுகாத்துக் கொள்வதுதான் அதன் நோக்கம். இதுவே மற்றவர்களுடைய நலன்களுக்கு எதிராகத் தோன்றுகிறது என்கிறபோது, அவர்களிடையே உண்மையான சங்கம் எப்படி சாத்தியமாகும்? பலவீனமானோர், துன்புறுவோரைப் பொறுத்தவரை, இந்தச் சங்கம் ஒரு மோசடியே தவிர வேறு ஒன்றுமில்லை. இந்த மோசடியை தோலுரித்துக் காட்டும் நேர்மையான மனிதன், மோசடிப் பேர்வழிகளால் தூற்றப்படுவது இயற்கைதான். அவனைப் பிரிவினைவாதி என்று அவர்கள் ஏசுவதும் இயற்கைதான். அவன் செய்வது பிளவுபடுத்தும் வேலைதான். எங்கே உண்மையான வேறுபாடு இருக்கிறதோ - எங்கே முரண்பாடு இருக்கிறதோ, அதை அவன் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறான். இந்த முரண்பாடும் மோதலும் ஏன் தோன்றுகின்றன? தொழிலாளர்களில் ஒரு பிரிவினர் ஒடுக்கப்பட்ட வகுப்பினர். அவர்கள் மீது மற்ற பிரிவினர் ஆதிக்க உரிமைகளைக் கோருகின்றனர். அதனால் பிளவும் முரண்பாடுகளும் தோன்றுகின்றன. வேண்டுமென்றே யாரும் வேறுபாடுகளை உருவாக்கவில்லை. நம்மிடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்து கொள்ளுங்கள். இந்த வேறுபாடுகள் மூலம் நமக்கு அநீதி இழைத்து விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்றுதான் நான் சொல்லுகிறேன்.

 

உங்கள் குறைபாடுகளைக் களைய வேண்டுமானால், அவற்றிற்குத் தீர்வு காண வேண்டுமெனில், நீங்கள் அமைப்பு ரீதியாகத் திரண்டாக வேண்டும். அப்படித் திரளும்போது அந்த அமைப்பு எந்த நோக்கத்தோடு பணிபுரிய வேண்டும் என்பது அடுத்த கேள்வி. வணிக மேம்பாடு அதன் நோக்கங்களில் ஒன்றாக இருக்கும். சங்கம் ஒன்றில் சேருவதா அல்லது உங்களுக்கென்று தனியாக சங்கம் தொடங்குவதா என்பது இன்னொரு கேள்வி. உங்கள் திசை வழியைத் தீர்மானிப்பதற்கு முன்னால், இந்தக் கேள்வியைப் பற்றி நீங்கள் தெளிவாக சிந்திக்க வேண்டும்.

 

இந்தியாவில் தொழிற்சங்க இயக்கம் மிகவும் வருந்தத்தக்க நிலையில் இருக்கிறது. அதன் தலையாய நோக்கம் என்னவென்று யாருக்குமே தெரியவில்லை. உழைக்கும் வர்க்கத்தின் வாழ்க்கைத் தரம் சரிந்துவிடாமல் பாதுகாப்பதே அதன் தலையாய நோக்கம். அய்ரோப்பாவில் ஒரு சராசரி மனிதன் தன் பிறப்பு, பயிற்சி ஆகியவற்றிற்கு ஏற்ப வழக்கமான அதே வாழ்க்கை வசதிகளை அனுபவிக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறான். அதைக் குறைக்க முற்படும் எந்த முயற்சியையும் அவன் உறுதியாக எதிர்க்கிறான். இந்த உறுதி இந்தியத் தொழிலாளர்களிடம் இல்லை. இவர்களுக்கு நாட்களை ஓட்டினால் போதும், வேலையில் நீடித்தால் போதும். தரமுள்ள வாழ்வில் இவர்களுக்கு வேட்கையில்லை. இப்படித் தரம் தாழ்ந்து போவதை எதிர்க்கும் உறுதி இல்லை என்றால், அந்த நாட்டின் ஏழை எளிய மக்கள் மேலும் மேலும் கீழ்நிலைக்குதான் போவார்கள்.

 

என்னைப் பொறுத்தவரை, தொழிற்சங்க இயக்கம் என்பது வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவுக்கு மிக மிகத் தேவை. நான் முன்பே சொன்னபடி, இன்றைய இந்தியத் தொழிற்சங்க இயக்கம் தேங்கிப் போய் நாற்றம் வீசுகின்ற குட்டையாய்க் கிடக்கிறது. இதற்கான காரணம், இதன் தலைவர்கள் கோழைகள், சுயநலக்காரர்கள் என்பதும்; தவறாக வழிகாட்டப்பட்டவர்கள் என்பதுமாகும். இன்னும் சில தலைவர்கள் வெறும் சாய்வு நாற்காலித் தத்துவ ஆசிரியர்களாக அல்லது அரசியல்வாதிகளாகவே உள்ளனர். அவர்களுடைய கடமை, பத்திரிகைகளுக்கு அறிக்கை தருவதோடு நின்று விடுகிறது. தொழிலாளர்களைத் திரட்டுவது, அவர்களுக்கு கல்வி புகட்டுவது, அவர்கள் போராட உதவுவது போன்ற கடமைகள் அவர்களுக்கு இல்லை. தொழிலாளர்களுடைய பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு, அவர்களுக்காகப் பேச்சுவார்த்தை நடத்த அவர்கள் தயார். ஆனால், தொழிலாளர்களுடன் நேரடித் தொடர்பு வைத்துக் கொள்வதை அவர்கள் தவிர்க்கிறார்கள்.

 

-தொடரும்

(பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் ஆங்கில நூல் தொகுப்பு: 17(3), பக்கம்:181)

நன்றி:தலித்முரசு

சில நாட்களுக்கு முன்பு பண்டித நேரு இங்கு வந்திருந்தார். அவர் பேசுவதைக் கேட்க, ஏறக்குறைய மூன்று லட்சம் மக்கள் கூடியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. நான் நேற்று ஜலந்தர் சென்றிருந்தபோது, இரண்டு லட்சம் மக்கள் கூடியிருப்பார்கள். ஆனால், முப்பதாயிரம் மக்கள் மட்டுமே கூடியதாகப் பத்திரிகைகள் எழுதுகின்றன. காங்கிரஸ் மாநாட்டுக்கு குறைந்தளவே மக்கள் திரண்டிருந்தாலும், மாநாட்டுக்கு ஏராளமானோர் கலந்து கொண்டதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகும். அய்ந்து பேர் கூடினால் அய்ம்பது பேர் என்றும், அய்ம்பது பேர் கூடினால் அய்நூறு பேர் என்றும், அய்நூறு பேர் கூடினால் அய்ந்தாயிரம் பேர் என்றும், அய்ந்தாயிரம் பேர் கூடினால் அய்ந்து லட்சம் பேர் என்றும் செய்தி வெளியிடுவார்கள். பத்திகையாளர்களின் இத்தகைய விமர்சனங்களை நான் பொருட்படுத்துவதில்லை. மக்கள் அதிகளவில் கூட வேண்டும் என்று நான் எண்ணியதில்லை. நான் விரும்புவதெல்லாம் சாதி இந்துக்களின் வன்கொடுமைகளுக்கு எதிராக, நம்முடைய மக்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்றுதான் விரும்புகிறேன். நீங்கள் எவ்வளவு பேர் கூடுகிறீர்கள் என்பது முக்கியமல்ல; நான் சொல்வதை எத்தனை பேர் கேட்கின்றீர்கள் என்பதுதான் முக்கியம்.

 

Ambedkar ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று அவை உறுதிமொழி அளித்து வருகின்றன. “பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு’ம் ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியும் மிகப் பெரியதொரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ஆனால், இதை மக்கள் புரிந்து கொள்வது கடினம் என்று தெரிந்தவுடன், அதை மாற்றி சிறிய அளவில் வெளியிட்டுள்ளனர். அவர்களுடைய தேர்தல் அறிக்கை கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி, ஒருநாள் காங்கிரசுக்கென்று தேர்தல் அறிக்கையே இல்லாமல் போய்விடும். நான் அனைத்துக் கட்சிகளுக்கும் சவால்விட்டுச் சொல்கிறேன். நீங்கள் ஒரு குழுவை அமைத்து, எந்தத் தேர்தல் அறிக்கை மிகச் சிறப்பாக இருக்கிறது என்று ஆய்வு செய்யுங்கள். எங்கள் தேர்தல் அறிக்கையே மிகச் சிறந்த ஒன்றாக இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகம் இல்லை. அனைத்துக் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையில் மக்களுக்குப் பலவற்றைச் செய்வதாக உறுதி அளித்துள்ளன. உறுதிமொழி அளிப்பது எளிது. ஆனால், செய்வது கடினம். தேர்தல் அறிக்கைகள் வெறும் உறுதிமொழிகளாக மட்டுமே இருந்துவிடக் கூடாது. அது பிரச்சினைகளைப் பற்றிப் பேசுவதாக இருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை இத்தகைய தன்மையோடு இருக்கின்றதா?…

 

வரவிருக்கின்ற தேர்தலில், “பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு’ மூலம் நாம் வேட்பாளர்களை நிறுத்த இருக்கிறோம். பட்டியல் சாதியினர் கூட்டமைப்பு, அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களுக்கானதொரு அமைப்பாகும். ஒவ்வொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் பிரதிநிதித்துவம் அளிக்கப்படும். யாரும் இது குறித்து அச்சப்படத் தேவையில்லை. “சமார்’களும் “பாங்கி’களும் சமமானவர்களே. நாம் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்; நமக்கிடையே வேறுபாடுகள் பார்க்கக்கூடாது. அனைத்து ஆண்களும் பெண்களும் எல்லாவற்றையும் ஒருபுறம் வைத்துவிட்டு, தேர்தல் அன்று வாக்களிக்கச் செல்ல வேண்டும். ஏற்கனவே நம்முடைய வாக்குகள் போதிய அளவுக்கு இல்லை; நாம் போதிய அளவில் வாக்களிக்கவில்லை எனில், அது நமக்கு நல்லதல்ல. நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்த யாரும் இல்லாமல் போய்விடுவர். தேர்தல் நாள் பட்டியல் சாதியினருக்கு வாழ்வா, சாவா என்பதைத் தீர்மானிக்கும் நாளாகும்.

 

வரவிருக்கும் தேர்தலில், நமது கூட்டமைப்பின் சின்னம் யானை. நம் மக்களுக்கு எந்தக் குழப்பம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் நான் இதைத் தேர்ந்தெடுத்தேன்… பல்வேறு கட்சிகளும் கூட்டணிக்காக நம்மை அணுகியுள்ளன. ஆனால், இதுவரை எதுவும் முடிவாகவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடர்கின்றன. நாம் எந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு முறைக்குப் பலமுறை சிந்திக்க வேண்டியிருக்கிறது. ஆனால், கூட்டணி அமைத்தாக வேண்டிய சூழல் நிலவுகிறது.

 

இறுதியாக நான் உங்களுக்குச் சொல்ல விரும்புவது என்னவென்றால், ஆயிரக்கணக்கான மக்கள் டில்லி, பஞ்சாப், உத்திரப் பிரதேசம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து என்னிடம் தங்களின் குறைகளை முறையிடுகிறார்கள். சிலர் தாங்கள் பண்ணையார்களால் தாக்கப்படுவதாகவும், இது குறித்து அரசிடம் முறையிட்டால் அதிகாரத்தில் உள்ள சாதி இந்துக்கள், பாதிக்கப்பட்டவர்கள் மீதே நடவடிக்கை எடுப்பதாகவும் சொல்கிறார்கள். இதைப்போன்ற எண்ணற்ற குற்றப்பத்திகைகளைத் தனியொருவனாகத் தீர்க்க முடியாது. இதனால், மக்கள் அனைவரும் ஏமாற்றத்துடனேயே திரும்புகின்றனர்.

 

இத்தகைய பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் ஓர் அலுவலகத்தை டில்லியில் நிறுவ இருக்கிறேன். உங்களின் குறைகளைத் தீர்க்கவும், ஆலோசனை சொல்லவும் ஒருவரை அங்கு நியமிக்க இருக்கிறேன். இதற்கென புது டில்லியில் ஏற்கனவே ஓர் இடத்தை வாங்கிவிட்டேன். இந்த இடம் கூட்டமைப்பின் தலைமை அலுவலகமாகவும் செயல்படும். இவ்விடத்தில் கட்டடத்தை எழுப்ப போதிய பணவசதி இல்லை. எனவே, இந்த உயரிய நோக்கத்தை நிறைவேற்ற, நீங்கள் உங்களால் இயன்ற பணத்தை இம்மய்யத்திற்கு அளித்து உதவுங்கள். இதன் மூலம் நம்முடைய நோக்கம் நிறைவேறும்.

 

(28.10.1951 அன்று, லூதியானாவில் ஆற்றிய உரை)

நன்றி:தலித்முரசு

வறுமையிலும் வெறுமையிலும் அல்லலுறும் வர்க்கங்களுக்கு, இடையறாது உழைக்கும் வர்க்கங்களுக்கு, ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு நன்மை செய்ய நாடாளுமன்ற ஜனநாயகம் தவறிவிட்டது என்றால், அதற்கு இந்த வர்க்கங்களே முக்கியமான பொறுப்பாகும். முதலாவதாக, மனிதர்களின் வாழ்க்கையை உருவாக்குவதில் பொருளாதாரத்திற்குள்ள முக்கிய பங்கை, இந்த வர்க்கத்தினர் மிகப் பெருமளவுக்கு அலட்சியப்படுத்தி விட்டனர். பொருளாதார மனிதன் ஒரு போதும் பிறப்பதில்லை என்ற ஒரே காரணத்திற்காக, பொருளாதார மனிதனின் முடிவு பற்றி உண்மையில் நாம் எதுவும் பேச முடியாது.

 

“மனிதன் ரொட்டியைக் கொண்டு மட்டுமே வாழ்வதில்லை’ என்று மார்க்சுக்கு பொதுவாக அளிக்கப்படும் மறுப்புரையில், கெட்ட வாய்ப்பாக ஓர் உண்மை பொதிந்துள்ளது என்றே கூறவேண்டும். பன்றிகளைப் போன்று மனிதர்களைக் கொழுக்க வைப்பதே நாகரிகத்தின் குறிக்கோள் அல்ல என்று கார்லைல் கூறியிருப்பதில், எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால், இந்தக் கட்டத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். உழைக்கும் வர்க்கத்தினர் பன்றிகளைப் போல தின்று கொழுத்திருக்கவில்லை. மாறாக, அவர்கள் கவ்வும் குடலை இறுகப் பிடித்துக் கொண்டு, பசி பட்டினியால் வாடுகின்றனர். எனவே, முதலில் ரொட்டி மற்றவை எல்லாம் பிறகுதான் என்று அவர்கள் கூறுவதில் நியாயம் இல்லாமல் இல்லை.

 

உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக, அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். ரூசோவின் “சமூக ஒப்பந்தம்’, மார்க்சின் “கம்யூனிஸ்டு அறிக்கை’, தொழிலாளர்களின் நிலை குறித்த போப்பாண்டவர் பதின்மூன்றாம் லியோவின் சுற்றுக் கடிதம், சுதந்திரம் பற்றிய ஜான்ஸ்டூவர்ட் மில்லின் நூல் ஆகிய நான்கையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஆனால், உழைக்கும் வர்க்கங்கள், இந்த ஆவணங்கள் மீது உரிய கவனம் செலுத்தத் தவறிவிட்டன. இதற்கு மாறாக, பழங்கால மன்னர்களையும் ராணிகளையும் பற்றிய கற்பனைக் கதைகளைப் படிப்பதில் தொழிலாளர்கள் இன்பம் காணுகின்றனர்; இந்தக் கெட்டப் பழக்கத்திற்கு அவர்கள் அடிமைகளாகிவிட்டனர்.

 

மற்றொரு மாபெரும் குற்றத்தையும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே இழைத்துக் கொண்டுள்ளனர். அரசாங்கத்தைக் கைப்பற்றும் ஆர்வ விருப்பம் எதையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களது நலன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் ஒரு வழிமுறையாக, அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம் என்பதையும்கூட அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால், அரசாங்கம் குறித்து அவர்கள் எத்தகைய அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. மனித இனத்துக்கு நேர்ந்த எல்லா அவலங்களிலும் இதுதான் மிகப் பெரியதும், மிக மிக வருந்தத்தக்கதுமாகும். அவர்கள் எத்தகைய தொரு அமைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும், அது தொழிற்சங்க வடிவத்தையே கொண்டிருக்கிறது.

 

இதை வைத்து நான் தொழிற்சங்கங்களை எதிர்ப்பவன் என்று எண்ணிவிட வேண்டாம். அவை மிகவும் பயனுள்ள நோக்கத்தை நிறைவேற்றுகின்றன என்பதில் அய்யமில்லை. ஆனால், தொழிலாளர்களுக்கு நேர்ந்துள்ள எல்லாக் கேடுகளுக்கும் தொழிற்சங்கங்கள்தான் சர்வரோக நிவாரணி என்று நினைப்பது தவறு. தொழிற்சங்கங்கள் என்னதான் ஆற்றல் மிக்கவையாக இருந்தாலும், முதலாளித்துவத்தை நேர்மையான வழியில் இட்டுச் செல்லும்படி முதலாளிகளை நிர்பந்திக்கும் ஆற்றல், வலிமை அவற்றுக்கு இல்லை. அவை நம்பி இருக்கும்படியான ஒரு தொழிலாளர் அரசாங்கம் அவற்றுக்குப் பின்னால் இருந்தால், தொழிற்சங்கங்கள் கூடுதல் ஆற்றல் கொண்டவையாக இருக்க முடியும்…

 

உழைக்கும் வர்க்கங்களை ஆட்கொண்டிருக்கும் மூன்றாவது நோய் “தேசியம்’ என்ற முழக்கத்திற்கு அவர்கள் மிக எளிதில் மயங்கிவிடுவதாகும். தொழிலாளர் வர்க்கத்தினர் எல்லா வகைகளிலும் வறியர்களாக இருக்கின்றனர்; தங்களுடைய மிகக் குறைந்தபட்சத் தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, தேசியம் என்று கூறப்படும் லட்சியத்துக்காக தங்களிடமிருக்கும் எல்லாவற்றையும் பல நேரங்களில் தியாகம் செய்து விடுகின்றனர். தாங்கள் இவ்வளவு தியாகம் செய்யும் அந்தத் தேசியம் வெற்றி பெற்றுவிடும்போது, அது தங்களுக்கு சமூக சுதந்திரத்தையும், பொருளாதார சுதந்திரத்தையும் உறுதிப்படுத்துமா என்று அறிய அவர்கள் ஒருபோதும் அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. அது மட்டுமல்ல, தேசியம் வெற்றிவாகை சூடி அதிலிருந்து உதயமாகும் ஒரு சுதந்திர அரசு, இவர்களது எண்ணற்றத் தியாகங்களால் கருவாகி உருவான அரசு, இவர்களது முதலாளிகளின் ஆதிக்கத்துக்கு உள்ளாகி, இவர்களுக்கே பகையானதாக மாறிவிடுவதைப் பல நேரங்களில் பார்த்திருக்கிறோம். தொழிலாளர்கள் தங்களை இலக்காக்கிக் கொள்ளும் மிக மிகக் கொடிய சுரண்டல் வகையைச் சேர்ந்ததாகும் இது.

 

தொடரும்

அகில இந்தியத் தொழிற்சங்கத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டில்லியில் நடைபெற்ற கூட்டத்தில், இறுதி நாள் ஆற்றிய உரையிலிருந்து.

நன்றி:தலித்முரசு

மற்ற கட்டுரைகள் …

TPL_INFINITY_MORE_ARTICLE