அமெரிக்க மேல்நிலை வல்லரசு, தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் ஆப்கானிலும், ஈராக்கிலும் கடந்த பத்து வருடங்களாகப் பேரழிவுப் போர்களை நடத்திவருகிறது. இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குக் காரணமான அல்கயிதா அமைப்பை ஒழிப்பதையும், அவர்களுக்கு ஆதரவு தரும் தலிபான்களை ஒடுக்குவதையும் காரணம் காட்டி முதலில் ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுத்தது. பின்னர், பேரழிவு ஆயுதங்களை மறைத்து வைத்திருக்கிறது எனப் பச்சையாகப் பொய் சொல்லி, ஈராக் மீது போர் தொடுத்தது.
முடிவின்றி நீண்டுகொண்டே செல்லும் இந்தப் போர்களில் அமெரிக்கக் கூட்டணிப் படையினர் பல மனித உரிமை மீறல்களையும், போர்க் குற்றங்களையும் செய்துள்ளனர். அபுகிரைப் சிறைச் சித்திரவதை துவங்கி, குவாண்டனாமோ சிறைச்சாலை வரை அமெரிக்காவின் பல போர்க்குற்றங்கள் தொடர்ந்து அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன. அத்தகைய குற்றச்சாட்டுகளை மறுப்பது, திசை திருப்புவது போன்ற வழிமுறைகளைக் கையாண்டு, அவற்றிலிருந்து தப்பி வந்திருக்கிறது அமெரிக்க அரசு. ஆனால், இதுவரை இல்லாத அளவிற்கு, மிகப்பெரிய அளவில் அமெரிக்காவின் போர்க்குற்றங்களை நிருபிக்கின்ற அந்நாட்டு இராணுவத்தின் இரகசிய ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சர்வதேச அளவில், பல்வேறு நாட்டு அரகளின் இரகசிய ஆவணங்களை அம்பலமாக்கும் 'விக்கிலீக்ஸ்' எனப்படும் இணையதளம், கடந்த ஜூலை மாதம் 'ஆப்கான் போர்க் குறிப்புகள்' என்ற பெயரில், அமெரிக்க இராணுவத்தின் நாற்பதாயிரம் இரகசிய ஆவணங்களை வெளியிட்டது. அதே இணையதளம் கடந்த அக்டோபர் இறுதியில், 'ஈராக் போர்க் குறிப்புகள்' என்ற பெயரில், 4 இலட்சம் ஆவணங்களை வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணங்கள் அனைத்தும் போர்க்களத்தில் அமெரிக்க இராணுவ வீரர்களால் பதிவு செய்யப்பட்டு, ஒன்றாகத் தொகுக்கப்பட்டுப் பாதுகாக்கப்படும் இரகசியக் குறிப்புகள். 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில், ஆப்கான் மற்றும் ஈராக்கில் அமெரிக்க இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களும், அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையும் இதில் பதிவாகியுள்ளன. மேலும் அமெரிக்கக் கூட்டணிப்படையினரின் நடவடிக்கைகள், தனியார் பாதுகாப்பு நிறுவனங்களின் குற்றங்கள் பலவும் இதில் பதிவாகியுள்ளன. தனது மேலாதிக்க நலன்களுக்காக அமெரிக்க அரசு எத்தகைய கொடிய இழிவான செயல்களிலும் ஈடுபடும் என்பதை இந்த ஆவணங்கள் ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்துகின்றன.
விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க இராணுவத்தின் கோப்புகள், ஆப்கானில் இருபதாயிரம் பொது மக்களும், ஈராக்கில் 66 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்களும் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன. சர்வதேச பொதுமன்னிப்பு சபை உள்ளிட்ட அமைப்புகள் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கையை இலட்சங்களில் கூறுகின்றன. அவற்றைக் காட்டிலும் தற்போது விக்கிலீக்ஸ் மூலம் வெளிவந்திருக்கும் அமெரிக்க இராணுவத்தின் கொலைக்கணக்கு மிகவும் குறைவுதான் என்றபோதிலும், தனது இராணுவத்தால் தொகுக்கப்பட்டிருக்கும் படுகொலைப் பட்டியலைக்கூட இருட்டடிப்பு செய்து, கொலைக்கணக்கை அமெரிக்க இராணுவம் மேலும் குறைத்துக் காட்டியிருப்பது விக்கி லீக்ஸ் மூலம் அம்பலமாகியிருக்கிறது.
இதுவரை உலகத்துக்குத் தெரிந்திராத பல படுகொலைகளையும் இந்த ஆவணங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. 2008ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆப்கானில், பிரான்ஸ் நாட்டு இராணுவத்தால் ஒரு பேருந்து நிறைய பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதற்கு இரண்டு மாதம் கழித்து அதே போன்றதொரு சம்பவத்தில் பலர் அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.
சர்வதேச செய்தி நிறுவனமான ராய்டர்சின் நிருபர்கள் இருவரை ஈராக்கில் அமெரிக்க ஹெலிகாப்டர் சுட்டு வீழ்த்தியதும், அந்த நிருபர்களுக்கு உதவ ஓடி வந்த ஒரு சிறுமி உட்பட அப்பாவி பொதுமக்கள் பலரையும் அமெரிக்கச் சிப்பாய்கள் சுட்டுக் கொன்றதும் வீடியோ ஆதாரங்களுடன் வெளியாகியுள்ளன. இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு அதே ஹெலிகாப்டர் வீரர்கள், கையை உயர்த்திச் சரணடைய வந்த பொதுமக்களைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
ஆப்கானில் அமெரிக்காவிற்கு எதிராகப் போரிடும் தலிபான் தலைவர்களைக் குறிவைத்துக் கொல்வதற்கென பிரத்யேகமாக ஒரு இராணுவக் குழுவையே அமெரிக்கா அமைத்துள்ளது. ""அதிரடிப்படை 373'' எனப்படும் இந்தக் குழு, தலிபான் தலைவர்களைக் கொல்வது என்ற பெயரில் அப்பாவி பொதுமக்களை கொன்றுவருவதையும் விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியிருக்கிறது. தலிபான் தலைவர்கள் ஏதாவதொரு நகரத்தில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்தால் உடனே அந்த நகரத்தை நோக்கி ஆளில்லா உளவு விமானங்களை அனுப்பி ஜம்பதாயிரம் அடி உயரத்திலிருந்து குண்டுகளைக் கொட்டி மொத்தப் பகுதியையும் உருத்தெரியாமல் அழித்துவிடுவது என்பதை ஒரு வழிமுறையாகவே அமெரிக்க இராணுவம் கடைப்பிடித்து வருகிறது. இத்தகைய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கில் அப்பாவி ஆப்கானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வெளிப்படையாக அப்பாவிகளைக் கொன்று குவித்தது மட்டுமல்லாமல், மக்களிடையே பிரிவினையைத் தூண்டி நிரந்தரமாக அவர்களை மோதவிடும் சதியையும் அமெரிக்கா செய்து வருகிறது. ஈராக்கில் சியா, சன்னி பிரிவினரிடையே பகைமையைத் தூண்டும் வகையில் சன்னி பிரிவினரின் மீது தாக்குதல்களைக் கட்டியமைத்துள்ளது. பாக்தாத் நகரின் சேரிகளிலிருந்து பொறுக்கியெடுக்கப்பட்ட சியா பிரிவு குண்டர்களைக் கொண்டு ""ஓநாய் படை'' என்ற கொலைகாரப் படையை உருவாக்கி, சன்னி பிரிவினரின் மீது தாக்குதல் தொடுத்து, கலவரங்களைத் தூண்டி வருகிறது. இலத்தின் அமெரிக்க நாடுகளில் செய்ததைப் போன்று இப்படையினருக்கும் சித்திரவதை செய்வதற்குத் தனியாகப் பயிற்சி கொடுத்து வளர்க்கிறது.
"ஓநாய் படையினரின்'' கையில் சிக்குவதைவிடச் செத்துவிடலாம் என நினைக்கும் வகையில் அப்படையினரின் சித்திரவதைகள் கொடூரமாக இருக்கின்றன. கண்களைத் நோண்டுவது, கைகால்களில் ஓட்டை போடுவது. விரல்களை ஒவ்வொன்றாக வெட்டுவது, உயிருடன் தோலை உரிப்பது எனக் காட்டுமிராண்டித்தனமான சித்தரவதைகளை, அமெரிக்கா அப்படையின் மூலம் செய்து வருகிறது. ஓநாய்ப் படையினரின் அட்டகாசத்தின் காரணமாக சியா பிரிவு மக்களுக்கு எதிராக சன்னி பிரிவினர் தாக்குதல் தொடுத்ததும், இதன் விளைவாக இரத்த ஆறு ஓடியதும் இராணுவ ஆவணங்களில் பதிவாகியுள்ளது.
ஈராக்கின் ஓநாய்ப் படையைப் போன்றே ஆப்கானின் பாதுகாப்புப் படையையும் அமெரிக்கா பயிற்றுவித்துள்ளது. அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக் கொல்வது முதல் போதைமருந்து கடத்தல், கோஷ்டி மோதல் வரை அமெரிக்கப் படைகளால் பயிற்றுவிக்கப்பட்ட ஆப்கான் பாதுகாப்புப் படையினர் நிகழ்த்திய பல அட்டூழியங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சித்திரவதை குறித்தும் மனித உரிமைகள் மீறப்படுவது குறித்தும் சர்வதேச அளவில் எழும் கண்டனங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே, இது போன்ற கூலிப்படையினரை அமெரிக்கா பயிற்றுவித்து வளர்க்கிறது என்ற உண்மையும் இந்த ஆவணங்கள் மூலம் ஆதாரபூர்வமாக அம்பலமாகியிருக்கிறது. மேலும், இவர்கள் குறித்து அமெரிக்க இராணுவத்திற்கு 20,000க்கும் அதிகமான புகார்கள் வந்தபோதும் அவற்றைப் பற்றி விசாரிக்காமல், சம்பந்தப்பட்ட படையினரிடமே அந்தப் புகார்களை அனுப்பிவிடும்படி அமெரிக்க அரசே இராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளது.
ஈராக் போரை நியாயப்படுத்த அமெரிக்கா கூறிய பொய்களில் ஒன்று, அல்கயிதாவிற்கு சதாம் உசேன் ஆதரவளித்தார் என்பதாகும். இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு அல்கயிதாவினர் ஈராக்கிலிருந்துதான் திட்டமிட்டனர் என்ற பொய்யை அமெரிக்கா பிரச்சாரம் செய்தது. ஆனால், உண்மையில் சதாம் ஆட்சி செய்தவரை ஈராக்கில் அல்கயிதா இயக்கமே இல்லை. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின்னர் தான் அங்கே அல்கயிதா இயக்கமே தோன்றியது. 'மெசபடோமியா அல்கயிதா' என்ற பெயரில் இயங்கிவரும் அந்த அமைப்பு, அமெரிக்காவிற்கு உதவும் சியா பிரிவு மக்களைக் கொல்வதையே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டுவருகிறது. சியா மற்றும் சன்னிப் பிரிவினர் தமக்குள் அடித்துக் கொண்டு சாவதை உத்திரவாதப்படுத்துவதற்காக அல்காய்தாவின் நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவம் மறைமுகமாக ஊக்குவித்திருக்கிறது என்பதையும் விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்துகிறது.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஜ.எஸ்.ஜ., ஆப்கானில் உள்ள தலிபான்களின் ஒரு பிரிவைக் கட்டுப்படுத்துகிறது என்பது அப்பட்டமாகத் தெரிந்த நிலையிலும் அமெரிக்கா அதனை அனுமதித்து வருகிறது என்பதும் இந்த ஆவணங்களில் பதிவாகியுள்ளது. தீவிர வாதத்திற்கு எதிரான போரில் ஈடுபடுவதற்காக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கொடுக்கும் நிதி உதவிகளை, ஜ.எஸ்.ஜ., தலிபான்களுக்கு மடைமாற்றிவிடுகிறது என்பதும்; பாகிஸ்தானின் இராணுவ ஜெனரல் கயானி, தலிபான்களுக்கு உதவும் ஜ.எஸ்.ஜ. பிரிவுக்குத் தலைமை தாங்குகிறார் என்பதும் தெளிவாகத் தெரிந்திருந்தும், ஒபாமாவின் அரசு அவரது பதவியை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க பாகிஸ்தானை நிர்பந்தப்படுத்தியது.
பாகிஸ்தானைப் பயன்படுத்தி, அமெரிக்க ஆதரவு "நல்ல தலிபான்களை' உருவாக்க அமெரிக்க எடுத்துவரும் முயற்சிகளும் ஆதாரபூர்வமாக அம்பலமாகியிருக்கின்றன. ஜப்பான் உள்ளிட்ட கூட்டணி நாடுகளின் உதவியோடு முப்பது கோடி டாலர் நிதியைத் திரட்டி, தலிபான்களின் இரண்டாம் கட்டத் தலைவர்களை வழிக்குக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளது. இம் முயற்சிக்குத் தடையாக இருக்கும் தலைவர்களைக் கொல்லவும், அமெரிக்காவை ஆதரிக்கும் இரண்டாம் மட்டத் தலைவர்களை மேலே கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது. தான் கொடுக்கின்ற நிதியுதவி மற்றும் ஆயுதங்களின் மூலம் தலிபான்கள் அமெரிக்கச் சிப்பாய்களைக் கொல்கின்றனர் என்பது தெரிந்தேதான் இந்த அழுகுணி ஆட்டத்தை அமெரிக்க அரசு ஆடிவருகிறது.
இரண்டாம் உலகப்போருக்குப் பின் நாஜிப்படையின் போர்க்குற்றங்களை நூரம்பர்க் விசாரணை ஆதாரங்களுடன் நிரூபித்து, குற்றவாளிகளைத் தண்டித்தது. இன்றோ,மற்றவர்கள் யாரும் ஆதாரம் தந்து நிரூபிக்கும் தேவையே இல்லாமல், எல்லாப் போர்க் குற்றங்களுக்கும் ஒப்புதல் வாக்குமூலம் தருகின்றன விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க இராணுவ ஆவணங்கள். இருப்பினும், பிற ஏகாதிபத்தியங்கள் அமெரிக்காவுடன் கூட்டுக் களவாணித்தனத்தில் ஈடுபட்டிருப்பதாலும், தட்டிக் கேட்பாரில்லாத தனிப்பெரும் ரவுடியாக அமெரிக்கா உலகை மேலாதிக்கம் செய்து வருவதாலும், இந்த போர்க் குற்றங்களுக்காக அமெரிக்காவை விசாரணைக் கூண்டில் ஏற்ற முடியாத நிலைமை உள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபரான ஜுனியர் புஷ், தனது பதவிக்கால நினைவுகளைத் தொகுத்து எழுதியுள்ள ""தீர்மானக் குறிப்புகள்'' என்ற நூலில், ""உலகளவில் தடை செய்யப்பட்டுள்ள சித்திரவதைகளை ஏவிவிட்டதன் மூலம்தான் வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் தூதரகங்கள், இலண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த இடங்களைப் பயங்கரவாதிகள் தாக்கத் திட்டமிட்டிருந்ததை அறிந்து கொள்ள முடிந்தது'' எனக் குறிப்பிட்டு, இத்தகைய போர்க் குற்றங்கள் அனைத்தையும் நியாயப்படுத்தியிருப்பதோடு, இதற்கு எதிராக எழும் கண்டனங்களை எள்ளி நகையாடியிருக்கிறார். தற்பொழுது அமெரிக்காவின் உள்துறை செயலராக இருக்கும் ஹிலாரி கிளிண்டன், ""இராணுவ இரகசியங்களை அம்பலப்படுத்துவது அமெரிக்கத் தேச நலனுக்கு எதிரானது'' எனக் குறிப்பிட்டு, விக்கிலீக்ஸ{க்கு எதிராக அமெரிக்கத் தேசிய வெறியைத் தூண்டிவிட முயலுகிறார். கருப்பின அதிபர் ஒபாமாவோ இந்தப் போர்க் குற்றங்களைப் பற்றியெல்லாம் அலட்டிக்கொள்ளாமல், ஆப்கான் மீதும், பாகிஸ்தானின் எல்லைப்பகுதிகள் மீதும் நடத்தப்படும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை முன்னைவிடத் தீவிரப்படுத்தி வருகிறார்.
விக்கி லீக்ஸ் ஆவணங்களை அமெரிக்க அரசு பொய்யென்று மறுக்கவுமில்லை; அதற்காக வெட்கித் தலைகுனியவுமில்லை மாறாக, இவ்வாறு உண்மைகளை வெளியிடுவதைக் குற்றம் எனத் திமிருடன் கூறி, இதனை வெளியிட்ட விக்கி லீக்ஸ் நிறுவனர் அசங்கி மீது பாலியல் வன்புணர்ச்சி வழக்கொன்றைப் புனைந்திருக்கிறது. மேலும், அவரைத் தேடிப் பிடிக்க சர்வதேசப் பிடியாணையையும் பிறப்பித்திருக்கிறது. குற்றத்தை அம்பலப்படுத்தியவர் ஓடி ஒளிந்துகொண்டிருக்க, குற்றவாளி அமெரிக்காவோ அவரைத் துரத்திக் கொண்டிருக்கிறது.
• அழகு ..