"தீப்பொறி"க் குழுவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் வெளியேறினேன்.
இலங்கைக் கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாக்குதலையடுத்து தென்னிலங்கையில் நிலைமைகள் மிகவும் மோசமடையத் தொடங்கியிருந்தன. அரசபடையினரும் பொலிசாரும் கொழும்பில் என்றுமில்லாதவாறு தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருந்தனர். ஒருவித பதட்ட நிலை கொழும்பில் நிலவிக்கொண்டிருந்தது.
கொழும்பில் அமைந்திருந்த சோவியத் கலாச்சார நிலையத்துக்கு சென்றிருந்த நான் நிலைமைகள் மேலும் மோசமடையலாம் என்பதால் நுகேகொட என்னுமிடத்தில் நான் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அறைக்குள் இருந்து கொண்டேன். சிறிது நேரத்துக்குள்ளாகவே எனது பெயரை அழைத்தவாறு வீட்டின் உரிமையாளர் அறைக்கதவைத் தட்டினார்.