”மீண்டும் நோர்வே பற்றிய செய்திகள் ஊடகங்களில் அடிபடத் தொடங்கியுள்ளன.கடந்த செப்டெம்பர் மாத நடுப்பகுதியில், ஜ.நா.பொதுச்சபைக் கூட்டத்தில் பங்குபற்ற நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நோர்வே பிரதமர் ஜீன்ஸ் ஸ்ரோல்ரென்பேர்க் மற்றும் அந்த நாட்டு அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன் பின்னரே நோர்வே பற்றிய செய்திகள் இலங்கை ஊடகங்களில் இடம் பிடிக்கத் தொடங்கின.
இலங்கையுடனான உறவுகளைப் புதுப்பிக்கும் நோக்கில் எரிக் சொல்ஹெய்மை கொழும்புக்கு வருமாறும் இந்தச் சந்திப்பின் போது அழைப்பு விடுத்திருந்தார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. இதையடுத்து அடுத்த வருடம் ஜனவரி மாதம் கொழும்பு வருவதற்கு எரிக் சொல்ஹெய்ம் இணங்கியுள்ளார்.”
மேற்கண்ட செய்தி நறுக்கு தமிழ்மிரர் என்ற தளத்திலிருந்து எடுக்கப்பட்டது. இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளபடி எரிக் சூல்கெய்ம் அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் இலங்கைக்கு போகவிருப்பதாக அவர் தலைமை வகிக்கும் அமைச்சின் செய்தித்தொடர்பாளர் இந்த கட்டுரையை எழுதும் எனக்கு உறுதிப்படுத்தியுள்ளார். ஆனால் தமிழ்மிரர் எழுதுவது போல், தைமாதம் எரிக் சூல்கெய்ம் இலங்கை செல்வார் என்ற தகவலை பாதுகாப்புக்காரணங்களால் அவர் உறுதிப்படுத்த மறுத்தார். அத்துடன் எரிக் சூல்கெய்ம் இலங்கையில் மேற்கொள்ளவிருக்கும் பயணத்தின் நிகழ்ச்சிநிரலையும் பாதுகாப்புக் காரணங்களால் வெளியிட மறுத்தார்.