. பெரியார்
12052020
Last updateஞா, 29 நவ 2020 7pm

தேசம்!

தோழர்களே!

கடவுள், மதம், ஜாதீயம், தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக, தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்பட வேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும், அந்நியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.


தேசியம் என்பதும் முற் கூறியவற்றைப் போன்று ஒரு போலி உணர்ச்சிதான். ஏனென்றால், தேசிய உணர்ச்சி என்பதானது இன்று உலகப் பொதுமக்கள் அதாவது உலகில் எங்கும் பெரும்பான்மையான மக்கள் பாமரராயும், தொழில் இன்றியும், தொழில் செய்தாலும் ஜீவனத்திற்க்கும் வாழ்விற்க்கும் போதிய வசதிகள் இன்றியும் கஷ்டப்படும் மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுடைய நிலைமைக்குப் பரிகாரம் தேடுவதைத் தடைப்படுத்தவும், ஆங்காங்குள்ள செல்வந்தர்களாலும், அதிகாரப்பிரியர்களாலும் சோம்பேறி வாழக்கைச் சுபாவிகளாலும் கற்பிக்கப்பட்ட சூழ்ச்சியாகும். தேசியம் என்பதும் மனிதனுக்கு ஒரு மயக்கமும் வெறியும் உண்டாக்கும் வார்த்தையாக ஆகிவிட்டது.


தேசம் என்றால் எது? உலகப்பரப்பு அய்ந்து கண்டங்களாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. ஒவ்வொரு கண்டத்திற்கும் பல தேசங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசத்துக்கும் பல மாகாணங்கள் இருக்கின்றன ஒவ்வொரு மாகாணத்திற்கும் பல ஜில்லாக்களும், மற்றும் பல உட்பிரிவுகளும் இருக்கின்றன.தேசம் என்பவற்றில் சில கண்டத்தை விட பெரிதாகவும், பல மதங்களாகவும் பல பிறவிகளாகவும், பல மொழி, பல நாகரிகம், பல கலை ஆகவும் இருக்கின்றன. இவை தவிர ஒவ்வொரு கண்டத்திலும், தேசத்திலும், மாகாணத்திலும் பலமாதிரியான பிறவிகளும், பல ஜாதிகளும், பல பாஷைகளும், பல மதங்களும், பல உட்ப்பிரிவுகளும், பல பழக்கவழக்கங்களும் இருக்கின்றன. இவை அவரவர்களுக்கு தெய்வகட்டளை என்றும் மதக் கட்டளை என்றும் தேசியக் கொள்கை என்றும், தங்கள் வாழ்நாளில் எப்பொழுதும் மாற்ற முடியாதது என்றும் இவற்றில் எதையும் காப்பாற்ற உயிர்விட்டாவது முயற்சிக்கவேண்டுமென்றும் கருதிக் கொண்டிருப்பவையாகும்.


இவற்றின் பயனாய் மக்கள் ஒருவருக்கொருவர் வேற்றுமை உணர்ச்சி கொண்டிருப்பதை நன்றாய்ப் பார்க்கிறோம். அன்றியும் உலகத்தில் உள்ள தேசம் முழுவதிலும் உயர்ந்தஜாதி - தாழ்ந்த ஜாதி, ஏழை - பணக்காரன், கீழ்நிலை - மேல்நிலை, கஷ்டப்படுகிறவன் - கஷ்டப்படுத்துகிறவன், முதலிய கொடுமைகள் இருந்தும் வருகின்றன. இவற்றுள் என்ன கொள்கைமீது எப்படிப்பட்ட மக்கள் எவ்வளவு விஸ்தீரணத்தைப் பிரித்தக்கொண்டு தங்களுக்கெனத் தனித்த தேசம், தேசியம் என்று ஒன்றைச் சொல்லிக் கொள்வது என்பது எனக்குப் புரியவில்லை, நமது தேசம் என்ற விஸ்தீரணத்தையும் தன்மையையும் தனிப்படுத்திக் கொண்டு பேசினாலும், அதிலுள்ள தன்மைகள் என்னென்னவோ, அதுதான் மற்ற எந்தக் கண்டம் என்பதிலும் நாடு என்பதிலும் இருந்து வருகிறது. நாம் குறிப்பிடும் தேசத்தில் உள்ள பெரும்பான்மையான மக்கள் எவ்வளவு கஷ்டப்படுகின்றவர்களாகவும் தாழ்மைப் படுத்தப்பட்டவர்களாகவும் இருந்து வருகிறார்களோ அவ்வளவு நிலையில்தான் மற்ற தேசத்தார் என்கிற மக்களும் இருந்து வருகின்றார்கள்.

 

நம்முடைய தேசம் என்பதிலுள்ள எந்தவிதமான மக்களின் துயரம் நீக்கப் பாடுபடுகின்றோம் என்கிறோமோ, அவ்விதமான துயரம் கொண்ட மக்கள் அந்நிய தேசம் என்பதிலும் இருந்துதான் வருகிறார்கள். நம்முடைய தேசம் என்பதிலேயே எந்தவிதமான மக்கள் சோம்பேறிகளாகவும் சூழ்ச்சிக்காரர்களாகவும், செல்வவான்களாகவும், அரசாங்க ஆதிக்கக்காரர்களாகவும், குருமார்களாகவும் இருந்து பெரும்பான்மையான பொதுஜனங்களைப் பல சூழ்ச்சிகளால் அடக்கி ஆண்டு அடிமைகளாக்கிப் பட்டினிபோட்டு வதைத்து தாங்கள் பெருஞ்செல்வம் சேர்த்து சுகபோகம் அனுபவித்து வருகின்றார்களோ, அது போலதான் அந்நிய தேசமென்பதிலும் சிலர் இருந்து அந்நாட்டுப் பெரும்பான்மையான மக்களைக் கொடுமைப்படுத்தி வருகின்றார்கள். ஆனால், அப்படிப்பட்டவர்கள் நம் நாட்டில் ஒரு பிரிவார் பிறவியின் பேரால் இருக்கிறார்கள். இந்த நிலைமையில் என்ன கொள்கைகளைக் கொண்டு, எந்த இலட்சியத்தைக் கொண்டு உலகப்பரபில் ஒரு அளவை மாத்திரம் பிரித்துத் தேசாபிமானம் காட்டுவது என்று கேட்கின்றேன்.


துருக்கி தேசத்துக்கும், இந்திய தேசத்துக்கும் சண்டை வந்தால் இந்திய இஸ்லாமியர்களுக்குத் தேசாபிமானம் இந்தியாவுக்கா? துருக்கிக்கா? ஹைதராபாத்துக்கும், மைசூருக்கும் யுத்தம் தொடங்கினால், ஹைதராபாத் இந்தியர்கள் தேசாபிமானம் மைசூருக்கா? ஹைதராபாத்துக்கா? ஆகவே, ‘தேசம்’ ‘தேசாபிமானம்’ என்கின்ற வார்த்தைகளும் கடவுள், மதம் என்பது போன்ற ஒரு வகுப்பாருடைய சுயநலத்திற்க்கு ஏற்ற ஒரு சூழ்ச்சிவார்த்தை என்ற சொல்ல வேண்டி இருப்பதைத்தவிர வேறு ஒன்றும் சொல்லமுடியவில்லை. முடிவாகக் கூறும் பட்சத்தில் தேசாபிமானம் என்பது ஒவ்வொரு தேச முதலாளியும் மற்றத் தேச முதலாளிகளுடன் சண்டைபோட்டுத் தங்கள் தங்கள் முதலைப் பெருக்கிக்கொள்ள ஏழைமக்களை - பாமரர்களைப் பலிகொடுப்பதற்காகக் கற்ப்பித்துக் கொண்ட தந்திர வார்த்தையாகும்.

 

உதாரணமாக, இங்கிலாந்து தேச முதலாளிகள் அமெரிக்கா தேசமுதலாளிகளுடன் சண்டை போட்டு வெற்றி பெற்றுத் தங்கள் செல்வத்தை மேலும் மேலும் பெருக்கிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டால் அல்லது அமெரிக்க முதலாளிகள் வேறு தந்திரத்தின் மூலம் இங்கிலாந்து தேச முதலாளிகளின் செல்வத்தை கொள்ளை கொள்ள முயற்சிப்பதாயிருந்தால், இங்கிலாந்து தேச முதலாளிகள் இங்கிலாந்து தேச ஏழை மக்களையும் பாமரமக்களையும் பார்த்து, “ஓ இங்கிலாந்து தேசிய வீரர்களே, தேசாபிமானிகளே, தேசத்துக்கு நெருக்கடி வந்துவிட்டது; இங்கிலாந்து மாதா உங்கள் கடமைகளைச் செய்ய அழைக்கிறாள்; ஓடி வாருங்கள்! ஓடி வாருங்கள்!” என்று கூப்பாடு போடுவார்கள். கூலிகளை அமர்த்தியும், வயிற்றுப்பிழைப்புப் பத்திரிகைக்காரர்களுக்கு எலும்பு போட்டும் பிரச்சாரம் செய்விப்பார்கள்.

 

இதுபோலவே அமெரிக்க முதலாளியும் தன் தேசம் நெருக்கடியில் நிலையில் இருப்பதாகவும் அமெரிக்க மாதா அங்குள்ள பாமரர்களையும், வேலையில்லாமல் வயிற்றுக் கஞ்சிக்கு வகையில்லாமல் பட்டினி கிடக்கும் ஏழை மக்களையும் தங்கள் கடமையைச் செய்ய அழைப்பதாகவும் கூவிக்கொண்டு கூலிகொடுத்துப் பிரச்சாரம் செய்வார்கள். இரண்டு தேச ஏழைகளும் மற்றும் சாப்பாட்டிற்க்கு அறவே வேறு வழியில்லாத மக்களும் கிளர்ச்சியில் சேர்ந்தும் பட்டாளத்தில் சேர்ந்தும் துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு சண்டைக்குப் போய் ஒருவரையொருவர் சுட்டுக் கொன்று கொள்ளுவார்கள். சிறைப் பிடிப்பதன் மூலம் இரு தேசச் சிறைகளையும் நிரப்பி விடுவார்கள். கணக்குப் பார்த்தால், இரு கட்சிகளிலும் பல லட்சக்கணக்கான மக்கள் உயிர் விட்டிருப்பார்கள். பிறகு இருவரும் இராஜியாகப் போயோ யாராவது ஒருவர் ஜெயித்தோ இருப்பார்கள்.


ஜெயம் பெற்றவர்களுக்கு முதலோடு முதல் சேரும் அல்லது தங்கள் முதல் என்றும் குறையாத மாதிரியில் பத்திரமேற்பட்டிருக்கும். ஆனால் சுட்டுக் கொண்டு செத்தவர்களுக்குச் சுடுகாடும், அவர்கள் பெண்ஜாதிகளுக்குச் சிறு பிச்சையும் அல்லாமல் மற்ற ஏழை மக்களுக்கு என்ன பயன் என்பதை யோசிதததுப் பாருங்கள். அமெரிக்கா குடி அரசு நடாத்துவதற்க்கும் அந்நிய ஆட்சியைத் துரத்துவதற்க்கும் அமெரிக்க ஏழைமக்கள், தொழிலாளி மக்கள் எவ்வளவு பாடுபட்டிருப்பார்கள், எவ்வளவு உயிர்ப்பலி கொடுத்திருப்பார்கள் என்று அமெரிக்க விடுதலைச் சரித்திரத்தைப் புரட்டிப்பாருங்கள். இன்று அதன் பயனாக உலகில் அமெரிக்காவிலேயே அதிகமான செல்வவான்களும், வியாபாரிகளும், விவசாயப் பெருக்கும் இருந்து வருகின்றன. ஆனால் ஏழைகள் படும் கஷ்டமும் வேலையில்லாத பட்டினியும் தொழிலாளிகள் அனுபவிக்கும் கொடுமையும் அமெரிக்காவில் இன்றைய தினம் இருந்து வருவது வேறு எந்த நாட்டிற்க்கும் குறைந்ததல்ல.


அது போலவே இந்தியத் தேசியத்தை எடுத்துக் கொள்ளுங்கள். பல ஏழைப் பாமர மக்களை தூண்டிவிட்டு அடிபடச் செய்து சிறையை நிரப்பி உரிமையும் பதவியும் அதிகாரமும் பெற்ற முதலாளிகள் பணத்தையும் சோம்பேறி வாழ்க்கைப் பிறவிகள் உத்தியோகங்களையும் பெற்றுத் தங்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைப் பெருக்கிக் கொண்டதைத் தவிர இந்த இந்தியத் தேசியத்தால் ஏழை மக்கள், பாமரமக்கள் அடைந்த - அடையப்போகும் நன்மை என்னவென்பதைப் பாருங்கள்.


தோழர்களே ! அமெரிக்கத் தேசாபிமானத்தின் தன்மையும் அதன் பயனையும் சிந்தித்துப் பாருங்கள். அமெரிக்க அந்நியப் பயனையும் சிந்தித்துப்பாருங்கள். அமெரிக்கா அந்நிய ஆட்சியை ஒழித்தாலும், ஓர் அரசனையே விரட்டிவிட்டுக் “குடிகளின் ஆட்சி” ஏற்படுத்திக் கொண்டதாலும், ஏழைமக்களுக்கு என்ன பயன் ஏற்ப்பட்டது என்பதை மற்றொருதரம் யோசித்துப் பாருங்கள்.


இந்த இலங்கையில் இருந்துகொண்டு இந்தியத் தேசாபிமானம் பேசும் தேசிய வீரர்களைப்பற்றிச் சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அவர்கள் ஏறக்குறைய அத்தனை பேரும் 100 -க்கு 90-பேர் இந்தியா முதலிய தேசத்தில் இருந்து வந்து இலங்கை தேசத்தைச் சுரண்டிக்கொண்டு போக இருக்கிறவர்களும் அவர்களுக்கு உதவியாளர்களாய் - அடிமைகளுமாய் இருப்பவர்களுமாவர்.


இலேவாதேவிக்காரர்கள் பெரிதும் மாதம் 100-க்கு 12-வரை வட்டிவாங்கி ஏழைமக்களையும் இலங்கை வாசிகளையும் பாப்பாராக்கிக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், விவசாயக்காரர் பெரிதும் இலங்கைப் பூமிகளை ஏராளாமாய்க் கைப்பற்றி விவசாயம் செய்து கூலிகள் வயிற்றில் அடித்துப் பொருள் சேர்த்துக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்து இலங்கைச் செல்வத்தைக் கொள்ளை கொண்டுபோக வந்தவர்களும், உத்தியோகஸ்தர்கள் இலங்கை ஆட்சியில் வந்து புகுந்து இலங்கையர்களின் அனுபவத்தில் மண்ணைப் போட்டுப் பணம் சுரண்டிக்கொண்டிருக்கும் படித்த கூட்டத்தாரும் ஆணவம்பிடித்த வன்னெஞ்சப் பார்ப்பானார்களுமாகக் கூடிக்கொண்டு இந்தியத் தேசாபிமானக் கூப்பாடு போடுகின்றார்கள்.


வெள்ளைக்காரனான அந்நியன் 100-க்கு வருஷம் 6-வட்டிக்கு கொடுத்தால், கருப்பனான அந்நியன் 100-க்கு மாதம் 6-வட்டிக்கு கொடுக்கிறான். வெள்ளையன் பணக்காரர்களிடம் வட்டி வாங்கினால், கருப்பன் ஏழைகளிடம்-கூலிகளிடம் வட்டிவாங்கிக் கொடுமைப்படுத்துகிறான்.


இந்தப்படி மக்களைச் சந்தித்துக் கொள்ளை அடிபவர்களே (வெள்ளையரிலும், கருப்பர்களிலும்) எங்கும் கடவுளபிமானம், மதாபிமானம், தேச அபிமானம் பேசுகிறார்கள்.


ஆகவே, இவ்விஷயங்களை அதாவது கடவுள், மதம், தேசம் என்கின்ற விஷயங்களை இனி அறவே மறந்துவிடுங்கள். அவை ஒரு நாளும் க ஷ்டப்படும் மக்களுக்குப் பயனளிக்கா. மற்றபடி அவை உலகில் ஏழை, பணக்காரன் என்று இரண்டு வகுப்புகள் இருக்கவும் ஏழைகளை தொழிலாளிகளைப் பணக்காரரும் சோம்பேறிகளும் வஞ்சித்து நிரந்தரமாய் வாழவும்தான் பயன்படும்.


தோழர்களே! முடிவாக ஒன்று கூறுகிறேன். சரீரத்தினால் நெற்றி வியர்வை சொட்ட கஷ்டப்படும் மக்களைப் பாருங்கள். அவர்களுக்கு கல்வி, மனிதத்தன்மை மானம் இல்லாமல், செத்திருப்பதையும் பாருங்கள். வேலையில்லாமல் திண்டாடும் மக்களையும் அவர்களது பெண்டு பிள்ளைகளின் பட்டினியையும், கொடுமையையும் பாருங்கள். வீடுவாசல் இல்லாமல் மூட்டை முடிச்சுகளைத் தலையில் சுமந்து கொண்டு கஞ்சிக்கு ஊர் ஊராய்த் திரியும் கூலி மக்களைப் பாருங்கள். இவ்வித மக்கள் உலகில் எங்கெங்கு யார் யாரால் கஷ்டப்படுத்தப் படுகிறார்கள் என்பதையும் பாருங்கள் உயர்ந்தவன் - தாழ்ந்தவன், பார்ப்பான் - பறையன், முதலாளி - தொழிலாளி, குரு - சிஸ்யன், மகாத்மா - சாதாரண ஆத்மா, அரசன் - குடிகள், அதிகாரி - பிரஜை என்பவை முதலாகிய பாகுபாடுகளை இடித்துத் தள்ளித் தரைமட்டமாக்குங்கள்.அதன்மீது தேசம், மதம், ஜாதி என்கின்ற பாகுபாடு இல்லாததாகிய மனித சமூகம் சமஉரிமை -சமநிலை என்கிற கட்டடத்தைக் கட்டுங்கள். இதைச் செய்ய நீங்கள் உலகத்திலுள்ள கஷ்டப்படும் எல்லா மக்களுடனும் ஜாதி, மதம், தேசம் என்கிற வித்தியாசம் இல்லாமல் பிரிவினைக்கு ஆளாகாமல் ஒன்று சேருங்கள். அப்போது நீங்கள் கண்டிப்பாய் வெற்றி அடைவீர்கள்.


(1932 - ஒக்ரோபர் பயணத்தில் இலங்கையில் தந்தை பெரியார் ஆற்றிய உரை)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_26.html


வகுப்புத் துவேஷிகள் யார்?

பார்ப்பன பிரசாரத்தின் தன்மை மகா மகாகனம் பொருந்திய சிறீமான் சாஸ்திரியார் அவர்கள் தென் ஆப்பிரிக்கா ரவுண்ட் டேபிள் கான்பரன்சுக்கு சர்க்காரால் நியமிக்கப்பட்டு போவதை ஒட்டி 'இந்து' பத்திரிகை பிரமாதமாய் எழுதி இருப்பதோடு, அவரது படத்தையும் தனது பத்திரிகையில் போட்டு அவரை விளம்பரப்படுத்தியிருக்கிறது.

 

சிறீமான் சாஸ்திரிகள் இந்து பத்திரிகையின் கோஷ்டிக்கும் அதன் கொள்கையான சுயராஜ்யக் கட்சிக்கும் விரோதமானவர். அப்படியிருந்தும் அதாவது தங்களது கோஷ்டிக்கும் தங்களது கொள்கைக்கும் விரோதமாயிருந்தும் சிறீமான் சாஸ்திரியார் பார்ப்பனர் என்கிற காரணத்துக்காக அவரை விளம்பரப்படுத்தி தூக்கி விடுகிறது. அதுபோலவே சிறீமான் சர்.சி.பி. ராமசாமி ஐயர் அவர்களும் சர்க்கார் உத்தியோகஸ்தராயிருந்தும், சுயராஜ்யக் கட்சிக்கு விரோதமாய் பேசிக்கொண்டிருந்தும் சர்க்கார் மனுஷனாக மேல்நாட்டுக்குப் போயிருந்தும்கூட அவரது பிரயாணத் தையும், வருகை வரவேற்பு, உபசாரம் முதலியதுகளையும், சென்றிருந்த இடத்தில் நடந்த விஷேசங்களையும் பேட்டி கண்டு பேசியதுகளையும் பார்ப்பனர் என்கிற காரணத்திற்காக படம் போட்டுத் தனது பத்திரிகையில் விளம்பரப்படுத்தியிருக்கிறது.

 

சிறீமான் சிறீவிஜய ராகவாச்சாரியார் என்கிறவரும், ஒரு பார்ப்பனரும் சர்க்கார் ஊழியர் என்கிற முறையில் மேல்நாட்டுக்குப் போயும் சுயராஜ்யத்திற்கு இந்துக்கள் இன்னும் பக்குவம் இல்லை என்றுகூடச் சொல்லியும் சுயராஜ்யக் கட்சி துவேஷத்திற்கு விரோதமாய்ப் பேசியும், பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு ஏற்பட்டது இந்தியாவின் பாக்கியம் என்றும், கடவுள் அருள் என்றும் பேசியும், பிரிட்டிஷாரின் பெயரை இந்தியர்கள் பெறும் குழந்தைகளுக்கு வைக்கவேண்டிய மாதிரிக்கும், தான் நிர்வாக சபை மெம்பர் வேலை பெறத்தக்க அளவுக்கும் ராஜபக்தி காட்டியுமிருக்கிறார். அப்படிப்பட்டவர் ஒரு பார்ப்பனர் என்கிற காரணத்துக்காக அவரது பிரயாணத்தையும் வரவையும் அங்கு போய் செய்ததையும் பேட்டி கண்டு பேசியதையும் படம் போட்டு விளம்பரப்படுத்தியிருக்கிறது.

 

கோயமுத்தூர் சிறீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்கள் பார்ப்பனரல்லாத கட்சியிலிருந்து விலகி பார்ப்பனர் கட்சியான சுயராஜ்யக் கட்சியினராயும், அக்கட்சியில் முக்கிய கொரடாவாயுமிருந்தும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி காரியதரிசியாயிருந்தும் பார்ப்பனர் சொல்லுகிற பக்கங்களிலும் கூட்டங்களிலும் அவர்களுக்குக் கிடைக்கும் அவமரியாதைகளையெல்லாம் தான் முன்னிருந்து காப்பாற்றியும் பார்ப்பனர் "தங்கள் கட்சியிலும் ஒரு யோக்கியதையுள்ள பார்ப்பனரல்லாதார் இருக்கிறார்" என்று சொல்லிக் கொள்ளுவதற்கு உடைத்ததாயிருந்திருப்பதுமல்லாமல் ஆஸ்ட்ரேலியா பார்லிமெண்ட் கான்பரன்ஸ் என்கிற ஒரு முக்கிய கூட்டத்திற்கு இந்தியாவின் பொது மக்கள் சார்பாய் பொதுமக்கள் பிரதிநிதிகளால் தெரிந்தெடுக்கப்பட்டும் போயிருக்கிறார்.

 

இப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி அவர் பார்ப்பன ரல்லாதார் என்கிற காரணத்தினாலேயே பிரயாணமும் இல்லை, உபசரிப்பும் இல்லை, அவரது படமும் இல்லை அங்குபோய் சேர்ந்தாரா? இல்லையா? அது விபரமும் இல்லை. அவர் ஆஸ்ட்ரேலியாவில் என்ன செய்கிறார் என்ற தகவலும் இல்லை. ஒன்றும் இல்லாமல் ஏதோ ஒரு அநாமதேயம் போல் கொஞ்சம் கூட கணக்கிலேயே சேர்க்காமல் வேண்டுமென்றே அடக்கி வைத்து அலட்சியப்படுத்தி இருக்கிறார்கள். தங்கள் சுயநலத்திற்காக "சுயராஜ்யக் கட்சிக்கு மற்றொரு மெம்பர் போட்டியில்லாமல் தெரிந்தெடுக்கப்பட்டார்" என்று சொல்லிக்கொள்ள மாத்திரம் அவரது பெயரை உபயோகித்துக் கொள்ளுகிறார்கள். மற்றபடி வெகு ஜாக்கிரதையாய் விலகிக்கொண்டு வருகிறார்கள்.

 

இந்தப்படி இவர் நடந்து கொண்டு மற்றவர்களை மாத்திரம் வகுப்புத் துவேஷம் வகுப்புத் துவேஷம் என்று சொல்லிக் கொள்ளுகிற இந்தப் பார்ப்பனர்கள் தங்களது நடவடிக்கைகளையும் தங்களிடம் இருக்கும் வகுப்புத் துவேஷத்தையும் பிறத்தியார் அறிய மாட்டார்கள் என்று பார்ப்பனரல்லாதார்கள் எல்லாம் முட்டாள்கள், இந்த சூழ்ச்சியை அறிய சக்தியற்றவர்கள் பார்ப்பனரல்லாப் பத்திரிகைகளும் எல்லாம் சுத்தப் பயங்கொள்ளிகள் தங்கள் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பவர்கள் என்று நினைத்துக் கொண்டு தாராளமாய் தங்கள் வகுப்புப் பிரசாரம் செய்கிறார்கள். இதிலிருந்தாவது வகுப்புத் துவேஷக்காரர்கள் பார்ப்பனர்களும் அவர்களுடைய பத்திரிகைகளுமா? அல்லது பார்ப்பனரல்லாதாரும் அவர்களுடைய பத்திரிகைகளுமா? என்று பொது ஜனங்கள் யோசித்துப் பார்க்கும்படி கேட்டுக் கொள்ளுகிறோம். அதோடு வரப்போகும் தேர்தலிலும் இப்பார்ப்பனர்களுக்கு தக்க பாடம் கற்பிக்க வேண்டுகிறோம்.

 

(குடிஅரசு 24.10.1926)

 

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_27.html

வர்ணாசிரமத்தைக்காக்கவே சுயராஜ்யம் கேட்பதாகக் கூறினவர் காந்தியாரே!

பேரன்புமிக்க நாயுடுகாரு அவர்களே! பெரியோர்களே! தாய்மார்களே!

இன்றைய தினம் என்னுடைய பிறந்தநாள் பாராட்டுதல் என்ற பெயராலும், உயர்திரு. காந்தியார் பிறந்தநாள் பாராட்டுதல் என்ற பெயராலும் இந்த விழாவை நாயுடு அவர்கள் ஏற்படுத்தியுள்ளார். நாயுடு அவர்கள் மிக முக்கியமான காரியங்களில் விளையாட்டாக நடந்து கொள்வார். என்னையும் நடத்துவார். நான் நாயுடுகாருக்கு எப்போதும் கட்டுப்பட்டவன். அவர் என்னிடத்தில் மிக்க அன்பு கொண்டவர். நாயுடு அவர்கள் தன் உரையில் எனக்கும், காந்தியாருக்கும் பிறந்தநாள் விழா என்று கூறினார். காந்தியாருக்கும் எனக்கும் கருத்து வேற்றுமை வட துருவமும், தென் துருவமும் போன்றது.

 

நான் காந்தியாருக்கு முக்கிய சீடனாக அன்பிற்குப் பாத்திரமானவனாகவும் இருந்து வந்தவன். அவர் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் உன்னைப் போல் 3-4 பேர்கள் இருந்தால் நாடு எவ்வளவோ முன்னுக்கு வந்து விடுதலை அடைந்துவிடும் என்று எழுதி இருக்கிறார். மற்றும் ஒரு சமயம் சட்ட மறுப்பு இயக்கத்தை நிறுத்தும்படி சமாதான மாநாடு கூட்டி, சங்கர நாயர் காந்தியாரிடம் சட்ட மறுப்புப் போரை நிறுத்திவிட்ட பிறகு சமாதானம் பேசலாம் என்று கேட்டபோது காந்தியார் சொன்னார், "சட்ட மறுப்புப் போரை நிறுத்துவது என் கையில் இல்லை ஆனால் அது தமிழ்நாட்டிலே ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் மனைவி, தங்கை ஆகியோர் கையில் உள்ளது" என்று கூறினார். அந்த அளவுக்கு நானும், எங்கள் குடும்பமும் காந்தியாரின் லட்சியங்களுக்காகச் சிறை சென்றவர்கள். பிறகு காந்தியார் மிகவும் பிற்போக்குவாதி என்பதையும், காங்கிரஸ் நம் மக்களுக்குக் கேடுபக்கக்கூடிய ஸ்தாபனம் என்பதையும் உணர்ந்து வெளியே வந்தவன் ஆவேன்.

 

"காந்தியார் சுயராஜ்யம் கேட்பது வர்ணாசிரம தருமத்தைக் காப்பாற்றவே" என்று கூறியவர் ஆவார். இன்றைக்கு அரசியல் ஒழுக்கம், நாணயம் கெட்டு ரொம்ப காலித்தனத்தில் இறங்கி இருக்கின்றது என்றால், இதற்கு வாத்தியார் காந்தியார் தான். அவர் ஆரம்பித்தது தான் வெடிகுண்டு. அவர் ஏற்படுத்தியது தான் சத்தியாக்கிரகம், சண்டித்தம், ரகளை முதலியவை எல்லாம். எனவே எனக்குக் காந்தியார் மீது மிகவும் வெறுப்பு ஏற்பட்டுக் கொண்டே வந்துவிட்டது. என்னுடைய தீவிர பிரச்சாரம் கண்டு ஒரு சமயம் என்னைப் பெங்களுருக்கு அழைத்து சமாதானம் பேசினார். நீ என்னமோ இப்படி மதத்தை முன்னோர் நடப்பை எல்லாம் கண்டித்துப் பேசிக் கொண்டு வருகின்றாயாமே? ஏன் என்று கேட்டார். நமது இழிநிலைக்கும், மடமைக்குக் காரணம் நமது கடவுள்களும், இந்து மதமும் தானே? இவைகளை வைத்துக் கொண்டு நாம் எப்படி முன்னேற முடியும்? என்று கேட்டேன். அதற்கு அவர் என்னை முதுகில் தட்டிக் கொடுத்துக் கூறினார். நீ வேறு மதம் மாறி இந்து மதத்தைப் பற்றி பேசினால் உனக்கு ஆதரவு இருக்காது. உன்னைப் பொறுத்துக் கொள்ளவும்மாட்டார்கள். இந்துமதத்தில் இருந்து கொண்டு எவ்வளவு கண்டித்துப் பேசினாலும் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று கூறினார்.

 

காந்தியார் கடைசிக் காலத்தில் நானே திருப்தி அடையும் அளவுக்கு மாறினார். அவர் கடைசியிலே காங்கிரசை ஒழிக்க வேண்டும் என்று அவர் வாயினாலேயே சொல்லிப் போட்டார். நாம் எந்தக் காரியத்திற்காக காங்கிரஸ் ஏற்படுத்தினோமோ அந்த சுதந்திரம் வந்துவிட்டது. இனி காங்கிரஸ் தேவையில்லை என்று கூறினார். பிறகு கோயில்கள் எல்லாம் விபச்சார விடுதி என்று கூறினார். விஜயராகவாச்சாரி போன்றவர்கள் எல்லாம் அவரைக் கண்டித்தார்கள். அது மட்டும் அல்ல. அரசியலில் மதம் கூடாது அரசாங்கக் காரியங்களில் மதத்தைக் கலக்கக்கூடாது என்று துணிந்து கூறினார்.இப்படி அவர் கூறி 53 - ஆம் நாளிலேயே அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். நான் மிக விசனப்பட்டேன். அவருக்கு நல்ல புத்திவந்த காலத்திலா அவருக்கு இந்த கதி என்று கூறி வருந்தினேன். இன்றைக்கு காங்கிரஸ்காரர்கள் காந்தியைப் பின்பற்ற வேண்டும் என்ற கருத்தில் காந்தியைப் பாராட்டவில்லை. அவர் பேரைச் சொன்னால் பாமர மக்கள் ஏமாறுவார்கள் என்ற கருத்தில் அல்லாமல் வேறு இல்லை.

 

தோழர்களே! நாயுடுகாரு அவர்கள் என்னைப் பற்றி ஏதேதோ கூறினார். எறத்தாழ அவ்வளவும் உண்மையாகக்கூட இருக்கக்கூடும். என்னைக் கஞ்சன் என்று பலர் கூறுவது உண்டு. நமது நாட்டில் அநேகர் ஏதோ செலவு செய்ய வேண்டும் என்று செலவு செய்கின்றார்களே ஒழிய அவசியம் கருதிச் செய்வதில்லை. எனது தொண்டு மனித சமூதாயத் தொண்டு ஆகும். மனித சமூதாயத் தொண்டு செய்கின்றவனுக்கு எந்தவிதமான பற்றுதலும் இருக்கக்கூடாது. கடவுளிலோ, மதத்திலோ, சாதியிலோ, மொழியிலோ, நாட்டிலோ பற்று வைப்பவர்களால் எந்தவிதமான சமூதாயத் தொண்டும் செய்ய முடியாது. இப்படிப்பாடுபட்டால் வேகமாகப் பலன் கிட்டாவிட்டாலும் ஏதோ சிறிதளவாவது ஏற்பட்டே தீரும். என் கொள்கையில் இருக்கின்ற பெரிய வெற்றி என்ன என்றால் கடவுளை, மதத்தை, சாஸ்திரத்தை, சாதியைக் கண்டிக்கக் கூடிய எனக்கு இப்படி பெரிய மரியாதை ஏற்பட்டு இருக்கின்றது என்றால் அதுவே எனது கொள்கைக்குப் பெரிய வெற்றி என்று நானே திருப்தி அடைகின்றேன்.

 

எனது தொண்டு எப்படிப்பட்ட பிடிவாதக்காரர்களையும் ஓரளவுக்கு மாற்றித்தான் இருக்கின்றது. வெள்ளைக்காரன் இன்னும் 25 - ஆண்டுகள் இருந்து இருப்பானேயானால் இன்னும் எவ்வளவோ மறுதல்கள் எல்லாம் அடைந்து இருப்போம். உலகமே இன்றைக்கு விஞ்ஞான அதிசய அற்புதங்களால் எவ்வளவோ முன்னுக்கு வருகின்றது. ஆனால், மேனாட்டானின் விஞ்ஞானச் சாதனங்களை இந்த நாட்டுக்காரன் அனுபவிக்கிறானேயொழிய இவனாக ஒன்றும் கண்டுபிடிக்கவே இல்லையே. இந்த நாட்டில் தோன்றிய மகான் மகாத்மாக்கள், ஆனந்தாக்கள் எவனும் இந்த நாட்டின் சாதி இழிவின ஒழிக்கவே இல்லையே. நான் ஆரம்பத்தில் கூறிய பற்றுகள் அனைத்னைத்தையும் ஒழித்தவனால் தான் முடியும். தோழர்களே! இந்த நாட்டில் பணக்காரனுக்கு வீடு வந்தால் போதுமா? குச்சு வீட்டில் இருக்கின்றவர் கதி என்ன என்று எந்த அரசியல்வாதி சிந்திக்கின்றான். எனவே அடிதளத்தில் உள் மக்களின் கஷ்டங்களுக்குப் பரிகாரம் தேட முற்பட வேண்டும்.

 

(02-10-1968 அன்று கோவையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு விடுதலை 28-10-1968) (பெரியார் களஞ்சியம் தொகுதி 18)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post.html

தமிழனுக்குக் கடவுளே இல்லை!

இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்குள் தோன்றியதுதான் இந்தக் கடவுள் சங்கதி. அதுவும் இந்தக் கடவுளை நமது ஆள் உண்டாக்கவில்லை. வெள்ளைக்காரன்தான் இந்தக் கடவுளையே உண்டாக்கியவன். அதைப் பார்ப்பான் ஒன்றுக்குப் பத்தாகப் பெருக்கி விட்டான். ஒரு கடவுள் பெயர் கூடத் தமிழ்ப் பெயரே கிடையாது. இங்கு இருக்கிற கடவுள்களின் பெயர்கள் எல்லாம் வடமொழிச் சொற்கள்தான். கடவுள் என்ற சொல்லே தமிழில் கிடையாது. தமிழனுக்குக் கடவுளே இல்லை. இன்றைக்கும் தமிழ்ச் சொல்லில் உள்ள ஒரு கடவுளும் கிடையாது.

 

வெள்ளைக்காரனும் காட்டுமிராண்டியாக இருந்த காலத்தில்தான் கடவுளைக் கற்பித்தான். அந்தக் கடவுளுக்கு நிறம் மஞ்சள் வர்ணம் என்றும் சொன்னான். அந்தக் கடவுளைக் காட்டு மனிதன் சிங்காரித்தான். அதற்கு உடை என்னடா என்றால் புலித்தோல் என்றான். தலை எல்லாம் சடை. காது எல்லாம் பெரிய ஓட்டை. நகைகள் எல்லாம் பாம்புகள். குடி இருக்கிற இடமோ சுடுகாடு. கையில் இருக்கிற கருவிகளோ மண்டை ஓடுகள். இவை எல்லாம் மனிதனுக்கு இருக்கக் கூடிய யோக்கியதையா? இவை எல்லாம் காட்டுமிராண்டித்தனமான சின்னங்கள் அல்லவா? வெள்ளைக்காரனைப் பார்த்துதான் பார்ப்பான் இங்குக் கடவுளை உண்டு பண்ணினான்.

 

வெள்ளைக்காரன் கடவுள் ஜுபிடர்; பார்ப்பான் அதற்கு கொடுத்த பெயர் இந்திரன். வெள்ளைக்காரன் - மைனாஸ்; பார்ப்பான் வைத்த பெயர் எமன். வெள்ளைக்காரன் - நெப்டியூன்; பார்ப்பான் - வருணன். வெள்ளைக்காரன் - லூனஸ்; பார்ப்பான் - சந்திரன். வெள்ளைக்காரன் - சைனேஸ்; பார்ப்பான் - வாயு. வெள்ளைக்காரன் - அப்பல்லோ; பார்ப்பான் - கிருஷ்ணன். வெள்ளைக்காரன் - மெர்குரி; பார்ப்பான் - நாரதன். வெள்ளைக் காரன் - மார்ஸ்; பார்ப்பான் - கந்தன்.

 

இப்படியாக வெள்ளைக்காரனைப் பார்த்து காப்பி அடித்தவன்தான் இந்தப் பார்ப்பான். அப்படிக் காப்பி அடித்த கடவுள்களுக்கும் கதைகள் எழுதி, புராணங்கள் எழுதி, பார்ப்பான் வயிறு வளர்க்க ஆரம்பித்து விட்டான். அதை அப்படியே தமிழன் நம்பி ஏற்றுக் கொண்டு விட்டான்.அப்படி ஏற்றுக் கொண்ட கடவுள்களில் ஒன்றுதான் இந்த விநாயகன். விநாயகன் என்ற சொல்லே தமிழ் கிடையாது.

 

கடவுளுக்கு நாட்டில் என்ன பொதுவாக இலக்கணம் சொல்கிறார்கள். கண்ணுக்குத் தெரியாது - கைக்குச் சிக்காது புத்திக்கும் எட்டாது என்கிறான். அப்படியானால் எப்படிக் கடவுளை நம்புவது என்று கேட்டால், நம்பு என்கிறான். நம்பு என்பதில்தான் கடவுளை வைத்து இருக்கிறான். கிறித்துவனும், துலுக்கனும் அதைத்தான் சொல்கிறான். கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கு எப்படி உருவத்தை உண்டாக்கினான்?

 

கருணையே வடிவானவர் என்கிறான். அவன் கையில் ஏன் சூலாயுதம்? வேலாயுதம்? அரிவாள், மண்வெட்டி, கோடாரிகள் எல்லாம்? இவை எல்லாம் கருணையின் சின்னங்களா? கொலைகாரப் பசங்களுக்கு இருக்க வேண்டிய கருவிகள் எல்லாம் கடவுளுக்கு எதற்கு? கடவுளுக்கு ஒழுக்கத்தையாவது நல்ல முறையில் கற்பித்து இருக்கிறானா? எந்தக் கடவுள் இன்னொருத்தனுடைய மனைவியை கெடுக்காமல் இருந்திருக்கிறான்? விபச்சாரம் செய்யாத கடவுள் ஒன்றாவது உண்டா? இருந்தால் சொல்லட்டுமே, ஏற்றுக் கொள்கிறேன்.

 

கடவுள் பிறப்பைப் பற்றி தான் எழுதி வைத்து இருக்கிறானே கொஞ்சமாவது யோக்கியம் வேண்டாமா? விநாயகன் பிறப்பு எவ்வளவு ஆபாசமானது!இன்றைக்கு நாம் சூத்திரர்களாக இருக்கிறோம் என்றால், அது பார்ப்பானால் மட்டுமல்ல - நாமே அதை ஒத்துக் கொண்டு இருக்கிறோம். பார்ப்பான் நம்மைச் சூத்திரன் என்று சொல்லப் பயந்து விட்டான். ஆனால், நாமே நாம் இந்து என்று ஒப்புக் கொண்டு, கோயில்களுக்குச் செல்வதன் மூலமாகவும், நெற்றியில் சாம்பலைப் பூசிக் கொள்வதன் மூலமாகவும் சூத்திரன் என்பதை ஏற்றுக் கொண்டு இருக்கிறோம்.

 

இன்றைக்கு இருக்கிற அரசாங்கம் நமது அரசாங்கம் என்று பேர். என்னத்துக்காக இந்தப் பண்டிகைகளுக்கு எல்லாம் லீவு விட வேண்டும்? நம்மை இழி மகன் என்று முத்திரைக் குத்திக் கொள்ளவா? துணிச்சலாக இந்த லீவுகளை எல்லாம் கேன்சல் செய்ய வேண்டும். இந்த அரசாங்கங்கூட, இந்த இடிந்து போன கோயில்களை எல்லாம் பழுது பார்த்துப் புதுப்பித்துக் கொண்டு இருக்கிறது. என்ன அர்த்தம்? நம்மை என்றென்றும் இழிமக்களாக்கச் செய்யும் முயற்சிதானே இது? வெட்கப்பட வேண்டாமா?

 

எங்களுடைய இயக்கம் இந்த நாட்டில் தோன்றிப் பாடுபடவில்லை என்றால், இந்தக் கடவுளைச் செருப்பாலடித்து, சாத்திரங்களைக் கொளுத்தி எரிக்கவில்லை என்றால், நமக்குப் படிப்பு ஏது? உத்தியோகம் ஏது? இன்றைக்கு நூற்றுக்கு நூறு தமிழனாக இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்களே! இது எப்படி வந்தது? நம்முடைய முயற்சியால் அல்லவா?

 

(29.08.1973 அன்று சிதம்பரத்தில் விநாயக சதுர்த்தி கண்டனப் பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/07/blog-post_28.html

பெண்களுக்கு உரிமை கொடுக்கலாமா?

தோழர்களே!

இதுவரை பல தோழர்கள் பெண்ணுரிமைப்பற்றி சாதகமாகவும், பாதகமாகவும் பேசியவைகளைக் கேட்டீர்கள். நான் தலைமை வகித்ததற்கு ஆக முடிவில் இதைப்பற்றி ஏதாவது இரண்டொரு வார்த்தை சொல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பீர்கள். நான் சொல்லுவது உங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறாய் இருந்தாலும் இருக்கலாம். அதனால் பாதகமில்லை. இந்தக் கூட்டம் வாக்குவாதக் கூட்டமானதால் பலவித அபிப்பிராயங்களையும் தெரிய வேண்டிப் பேசுவதே ஒழியவேறில்லை. யார் எதைச் சொன்னாலும் பொறுமையோடு கேட்டு சுருதி, யுக்தி, அனுபவம், என்கின்ற மூன்று தன்மையிலும் ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

 

தோழர்களே! இன்று பெண்ணுரிமையைப் பற்றி பேசும் நாம் எந்த நிலையில் இருந்து கொண்டு பேசுகிறோம்? இதைப் பற்றிப் பேச நமக்கு யோக்கியதையோ, உரிமையோ உண்டா? நாம் ஆஸ்திகர்களா? நாஸ்திகர்களா? இது விஷயத்தில் நம்முடைய ஆராய்ச்சியோ, முடிவோ நமக்கு ஆதாரமா?அல்லது இது விஷயத்தில் ஏற்கனவே ஏற்பட்டிருக்கும் முடிவே நமக்கு ஆதாரமா? என்பவனற்றை முதலில் நாம் யோசித்துப் பார்த்த பிறகே விஷயத்தைப் பற்றி பேசவேண்டும்.

 

ஏனென்றால் பெண்கள் விஷயத்தில் இன்று உலகில் உள்ள மதங்கள் எல்லாம் ஏற்கனவே ஒரு முடிவுகட்டி விட்டது. அம்முடிவுகள் வேதமுடிவு கடவுள் வேதத்தின் மூலமாய்ச் சொன்ன முடிவு என்று சொல்லப்படுகிறது. கிறிஸ்தவர்களுடைய வேதத்திலும், முகமதியர்களுடைய வேதத்திலும், இந்துக்கள் வேதத்திலும் பெண்களுக்குச் சம உரிமை இல்லை. சில உரிமைகள் இருந்தாலும் அவை வரையறுக்கப்பட்டு அதற்கு மேல் ஒன்றும் செய்யக் கூடாது என்ற தீர்ப்பில் இருக்கிறோம். ஆகவே இப்போது நமது ஆராய்ச்சியின் பயனாய் ஒரு முடிவு வருவோமானால் அம்முடிவு நமது மதவேத கட்டளையை மீறி நாஸ்திகமாவதா? அல்லது ஆஸ்திகத்துக்கு பயந்து நமது முடிவுகளைக் கைவிட்டு விடுவதா? என்பதை முதல் தீர்மானித்துக் கொண்டு பிறகு இந்த வேலையில் இறங்க வேண்டும். இல்லாவிட்டால் நமது வேலைகள் எல்லாம் வீண் வேலையாகப் போய் விடாதா?

 

முன் பேசிய சிலர் பெண்கள் சுதந்திர விஷயம் முன்னமேயே முடிவு கட்டப்பட்டது என்று சொன்னார்கள். மற்றொருவர் நம் பெரியோர்கள் நன்றாய் யோசித்துச் செய்திருக்கிறதாகச் சொன்னார். ஆகையால் இம்மாதிரியான பெரியதொரு சீர்திருத்தவாதிகள் உண்மை சீர்திருத்தவாதிகளால் மேற்கண்ட பிரச்சனையை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். நிற்க,ஆணும் பெண்ணும் மனிதர்கள் தான். உருவபேதம் மனிதத்தன்மையைப் பாதிக்கக் கூடியதல்ல. மனிதவர்க்கத்தில் புத்திக்குறைவு, பலக்குறைவு என்பது இயற்கையில் ஆண்கள் பெண்கள் ஆகிய இருவருக்கும் ஓன்றுபோலவே தான் இருக்கிறது. அப்பியாசத்தால் இருபாலரும் ஒன்று போலவே தான் அடைகிறார்கள். ஆண்களில் எவ்வளவு முட்டாள்கள் இருக்கிறார்களோ? எவ்வளவு பலவீனமானவர்கள் இருக்கிறார்களோ? எவ்வளவு கெட்ட குணமுடையவர்கள் இருக்கிறார்களோ? அதுபோல் தான் பெண்களிலும் இருக்கலாம்.

 

மேல்கொண்டு ஏதாவது இருந்தால் அது செயற்கையால் அதாவது ஆண்களாகிய நாம் அவர்களைக் குழந்தைப்பிராய முதல் அடிமைப்படுத்தி கல்வியில்லாமல் உலக ஞானம் அறிய இடம் இல்லாமல் அடக்கி வைத்து விட்டதால் ஏற்பட்டதே ஒழியவேறில்லை. தாசிகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவர்கள் வியாபாரத்தில் எவ்வளவு கெட்டிக்காரர்களாய் இருந்து எவ்வளவு ஆண்களை ஏமாற்றி எவ்வளவு பணம் சம்பாதித்து எப்படி நிர்வகித்து வருகிறார்கள் பாருங்கள். ஆண்களில் எழுத்து வாசனை அற்றவர்களுடையவும் சமத்துவமில்லாமல் அடக்கி வைத்திருக்கும் மிருகங்களுக்கு ஒப்பான சில தாழ்த்தப்பட்ட மக்களுடைய அறிவு வீரம் பராக்கிரமம் எல்லாம் எப்படி இருக்கிறது?

 

வியாபாரம் செய்யும் பெண்களும் உத்தியோகம் பார்க்கும் பெண்களும் இன்று அவரவர்கள் தொழில்களைச் சரியாய் செய்யவில்லையா? உபாத்தியார் பெண்கள் தங்கள் உத்தியோகத்தை சரியாய் செய்யவில்லையா? எந்த விதத்தில் அவர்கள் தகுதி அற்றவர்கள் ஆவார்கள்? ஜெயிலில் இருக்கும் கைதிகள் ஆண்களாக இருந்தும் ஜெயிலரையும் ஜெயில் சூப்ரண்டையும் கண்டால் நடுங்குகிறார்களே அவர்களுக்கு ஆண்மை, வீரம், பராக்கிரமம், சுயபுத்தி எல்லாம் எங்கு போய்விட்டது?

 

இந்தியாவில் கிருஸ்தவப் பெண்கள் முக்காடிட்டு வைக்கப்பட்டிருக்கிறார்கள். முஸ்லீம் பெண்கள் உறைபோட்டு மூடிவைத்திருக்கிறார்கள். இந்துப் பெண்கள் கல்வி இல்லாமல் சொத்து இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுக்கு இன்று சுதந்திரம் கொடுத்தால் அதை வகிக்க அருகதை அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டிவரும். அதுபோலவே இன்று எல்லா ஆண்களுக்கும் நிர்வாக சபை மெம்பர் பதவி கொடுத்தால் ஆண்கள் அருகதை அற்றவர்கள் என்று தான் சொல்ல வேண்டிவரும். எல்லோருக்கும் படிப்பு கொடுக்க வேண்டும். உலக விஷயங்களைக் கற்க தாளாரமாய் வசதி அளிக்க வேண்டும். 18-வயது 20-வயது ஆன பிறகே கல்யாணம் செய்து வாழ்க்கையில் ஈடுபடச் செய்ய வேண்டும்.

 

ஒவ்வொரு பெண்ணும் தான் சுகமாய் வாழத்தகுந்த ஒரு தொழில் அல்லது ஒரு மார்க்கத்துக்குத் தயார் செய்யப்பட வேண்டும். தன் புருஷனை வயது வந்த பிறகு தானே தெரிந்தெடுத்துக் கொள்ளச் செய்ய வேண்டும். இவை செய்து விட்டால் நீங்கள் எந்தப் பெண்ணையும் தேடிப் போய் சுதந்திரம் கொடுக்க அலைய வேண்டாம். பெண்களுக்குச் சுதந்திரம் கொடுக்கலாமா? வேண்டாமா? என்று இம்மாதிரி கூட்டம் போட்டு வாக்குவாதம் செய்ய வேண்டாம். தானாகவே பெற்று விடுவார்கள். பெண்களுக்குச் சுதந்திரம் கொடுத்தால் வீட்டு வேலை யார் பார்ப்பது என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை.

 

இன்றைய வீட்டு வேலைகள் என்பது மக்களின் முட்டாள் தனத்தால் ஏற்பட்டதே ஒழிய அவை எல்லாம் இயற்கையாய் உள்ள வேலை அல்ல. இன்றைய வீட்டு வேலை இனி 20- வருஷத்துக்குள் முக்கால்வாசி குறைந்து போகும். உலக முற்போக்கு வீட்டு வேலைகளைக் குறைத்து வருகிறது. நம்முடைய அர்த்தமற்ற பேராசை சுயநலங்களே நமக்கு இவ்வளவு வீட்டு வேலைகளை ஏற்படுத்திக் கொண்டது. கற்பு கெட்டுப் போகும் என்கின்ற கவலை எவரும் அடைய வேண்டியதில்லை. பெண்கள் கற்பு பெண்களுக்கே சேர்ந்ததே ஒழிய, ஆண்களுக்கு அடமானம் வைக்கப்பட்டதல்ல. கற்பு என்பது எதுவானாலும் அது தனிப்பட்ட நபரைச் சேர்ந்ததாகும். கற்பு கெடுவதால் ஏற்பட்ட தெய்வத் தண்டனையை அவர்கள் அடைவார்கள். அதற்காக மற்றொருவர் அடையப்போவதில்லை. இது தானே மதவாதிகள் ஆஸ்திகர்கள் சித்தாந்தம். ஆதலால் பெண் பாவத்துக்குப் போகிறாளே என்று ஆண் பரிதாபப்பட வேண்டாம்.

 

பெண் அடிமையல்ல, அவளுக்கு நாம் எஜமானல்ல கார்டியன் அல்ல என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.பெண் தன்னைப் பற்றியும் தனது கற்பைப்பற்றியும் காத்துக் கொள்ள தகுதி பெற்றுக் கொள்ள விட்டு விட வேண்டுமே ஒழிய ஆண்காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும். கற்பு கெடுதலால் நோய் வரும் என்றால் இருவருக்கும் தான். ஒருவருக்கு மாத்திரம் வராது. ஆதலால் பெண்களைப் படிக்க வைத்து விட்டால் தங்கள் கற்பு மாத்திரம் அல்லாமல் ஆண்கள் கற்பையும் காப்பாற்றக் கூடிய தன்மை வந்து விடும். ஆகவே தோழர்களான நீங்கள் நன்றாய் ஆலோசித்து ஒரு முடிவுக்கு வந்து அந்தப்படி உங்கள் தங்கை, குழந்தை ஆகியவர்கள் விஷயத்தில் நடவுங்கள்.

 

(18.10.1935 - அன்று ஈரோடு லண்டன் மிஷன் கம்யூனிட்டி டிரெய்னிங் பள்ளிக்கூட மாணவர் சங்க கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை, குடிஅரசு - 03.11.1935 )

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/08/blog-post_02.html