01242021ஞா
Last updateச, 16 ஜன 2021 11am

தந்தை பெரியார் கேட்கிறார்....

தன்னையும் திராவிடன் என்று கூறிக் கொண்டு ஒரு பார்ப்பான் முன் வருவானானால், உடனே, ‘நீ திராவிடனா? திராவிடனுக்கு ஏது பூணூல்? அதை முதலில் கத்தரித்துக் கொள்!’ என்போம். அதற்கும் துணிவானானால், ‘திராவிடரில் ஏது நாலு சாதி? நீ பிராமணன் அல்ல; இந்துவல்ல என்பதை ஒப்புக் கொள்’ என்று கூறுவோம். அதற்கு எந்தப் பார்ப்பானும் உடன்படமாட்டான். அதற்கும் உடன்பட்டு அவன் திராவிடனாக ஒப்புக் கொண்டால், பிறகு நமக்கு அவனைப் பற்றிக் கவலை ஏது? சாதி வேறுபாடுகள், உயர்வு தாழ்வுகள் ஒழிய வேண்டும் என்பது தானே நமது ஆசை. சாதியைக் கைவிட்டு, சாதி ஆசாரத்தைக் கைவிட்டு, ‘அனைவரும் ஒன்றே’ என்ற கொள்கையை ஏற்க முன்வரும் பார்ப்பானை - நாம் ஏன் ஒதுக்கப் போகிறோம். தமிழர் என்று கூறுபவர்கள் இவ்வித நிபந்தனையின் மீது பார்ப்பனர்களைத் தம் கழகத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறார்களா? இல்லையே! சில மாதங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற தமிழர் மாநாட்டிற்குத் தன்னை பிராமணன் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் தானே வரவேற்புக் கமிட்டித் தலைவர் மற்றும் இரண்டு மூன்று அய்யர்கள் தம் பூணூல் - பூச்சுகளுடனேயே தமிழர் கூட்டத்தில் ‘தாமும் தமிழர்கள்’ என்று கலந்து கொண்டார்களே? அப்படித் தானே நடக்கும்?... வேற்றுமையில்லாத மனித சமுதாயம் வேண்டுமென்பதுதான் நமது குறிக்கோளே ஒழிய, வேற்றுமை பாராட்டி யாரையேனும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதல்ல நமது குறிக்கோள். இதை நீங்கள் பெரிதும் மாணவ, மாணவிகளான நீங்கள் நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்.


(சிதம்பரத்தில், 29.09.1948-ல் சொற்பொழிவு ‘விடுதலை’ 05.10.1948)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_29.html


இறப்பும் - பிறப்பும் மனிதர் செயலா? கடவுள் செயலா?

உலகில் மனிதர் பிறப்பதும், சாவதும் "கடவுள் செயலா?'' மனிதர் செயலா?'' என்பதைப்பற்றி விளக்குவதுதான் இக்கட்டுரையின் தத்துவமாகும். மக்களுக்கு ஆராய்ச்சி அறிவின் தன்மை இல்லாததால் மனித இறப்பு பிறப்புப்பற்றிய விஷயத்தில் சிறிதும் அறிவில்லாமல் "எல்லாம் கடவுள் செயல்'' என்ற கருத்தில் உழன்று வருகிறார்கள். இன்றைக்கு ஆயிரம் - இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் காட்டுமிராண்டித்தனமான மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டவர்களாய் இருந்ததால் இறப்பு - பிறப்பு பற்றிய அறிவே இல்லாதவர்களாக, அதைப்பற்றிய கவலையற்றவர்களாக இருந்து வந்தார்கள்.

 

மேல்நாட்டாரின் சம்பந்தம் நமக்கு ஏற்பட்டதற்குப் பிறகே பிறப்புப்பற்றியும், சாவு பற்றியும் நம் மனிதர்கள் சிந்தித்து அது சம்பந்தமான அறிவு பெற வேண்டியவர்களானார்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், சுமார் 2000 - வருடங்களுக்கு முன்பு கிறிஸ்து பிறந்து அவர் செத்த காலத்தில் இந்த உலக ஜனத்தொகையே சுமார் 20 - கோடி மக்களைக் கொண்டதாகத்தான் இருந்தது. பிறகு, 1500 (ஆயிரத்து அய்நூறு) வருடம் கழித்து பிறகு உலக ஜனத்தொகை (கி.பி.1500-இல் 45 - (நாற்பத்து அய்ந்து) கோடி மக்களைத்தான் கொண்டிருந்தது. பிறகு, சுமார் 300 வருஷம் கழித்து கி.பி. 1800-இல் 70 (எழுபது) கோடி மக்களைக் கொண்டதாகத்தான் இருந்தது.பிறகு 115 - வருஷம் கழித்து 1915-இல் இந்த உலகம் 165 (நூற்று அறுபத்தைந்து) கோடி மக்களைக் கொண்டதாக இருந்தது. அன்று மக்களுடைய ஆயுள் சராசரி 25 - வருஷமாக இருந்தது.பிறகு கி.பி. 1954-ஆம் வருஷத்தில் உலக ஜனத்தொகை 326 - கோடி மக்களாக ஆகி அவர்களுடைய ஆயுளும் சராசரி 60-65 வருஷங்களாகவும், நம் நாட்டில் 37- வருஷங்களாகவும் ஆகி இருந்தது.

 

இன்று 1964-ஆம் வருஷத்தில் உலக ஜனத்தொகை சுமார் 350 - கோடி என்பது மாத்திரமல்லாமல் மக்களின் ஆயுள்காலம் சராசரி மற்ற நாடுகளில் 60-க்கு 70 - என்பதாகவும், நம் நாட்டில் சராசரி 50 - வருஷமென்றும் ஆகி இருக்கிறது. அது மாத்திரமல்லாமல் இறப்பும் - பிறப்பும் பெருமளவிற்கு குறைந்து இருக்கிறது.மனிதநூல் ஆதாரப்படி மக்களுக்கு ஆயுள் 100 - வருஷம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால், மக்கள் சராசரி ஆயுள் 20 - முதல் இன்று 50- வயது; மேல் நாடுகளில் 60-70 வயதாகவும் இருந்து வருகிறது. இதற்குக் காரணம் கடவுள் செயலா, மக்களின் அறிவு வளர்ச்சியும், வைத்திய வளர்ச்சியுமா என்பதை மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

 

இங்கிலாந்து நாட்டு சரித்திரத்தைப் பார்த்தால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தியர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்! காரணம் "கடவுளால் உண்டாக்கப்பட்ட நோயை மனிதன் கடவுளுக்கு விரோதமாக மருந்து கொடுத்து சவுக்கியம் செய்வதா?'' என்ற கடவுள் பக்தி காரணத்தால் கொல்லப்பட்டார்கள். நமது நாட்டிலும் காலராவுக்கும், அம்மைக்கும் 1900-ஆம் வருஷம் வரை மருந்தே இல்லாமலிருந்தது, அப்போது காலரா 100 - பேருக்கு வந்தால் 90 - பேர் செத்துக் கொண்டிருந்தார்கள். இப்போது 100-க்கு 10 பேர்களைக்கூட டாக்டர்கள் சாகவிடுவதில்லை.

 

அம்மைக்கு மேல் நாட்டார் அம்மை குத்தி அம்மை வராமல் தடுப்பது மாத்திரமல்லாமல், மேல் நாட்டில் வந்த பிறகு சவுக்கியம் செய்ய மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. அது மாத்திரமல்லாமல், மக்கள் அதிகமாக பிள்ளை பெறாமல் இருப்பதற்கு மருந்து, இரண சிகிச்சை முதலிய காரியங்கள், மக்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் யார் காரணமென்று. மற்றும் மீன் பண்ணை வைத்து மீன்களை உற்பத்தி செய்கிறான் மனிதன். கோழிப் பண்ணை வைத்து முட்டைகளைப் பெருக்கி கோழிகளை உற்பத்தி செய்கிறான் மனிதன். இவற்றை தினம் கோடிக் கணக்கில் கொன்று தின்கிறார்கள் மனிதர்கள். இந்த ஜீவன்கள் பிறப்புக்கும் இறப்புக்கும் யார் காரணம் என்பதைச் சிந்தியுங்கள். தோட்டம் வைத்து காய்கறி, உணவுப் பொருள் உற்பத்தியாக்கி அறுவடை செய்து உண்பதற்கும் இதற்கும் என்ன பேதம்? சிந்தியுங்கள்! எனவே, கடவுள் நம்பிக்கை எவ்வளவு முட்டாள்தனமானது, ஆபத்தானது, வளர்ச்சியைத் தடுப்பது என்பதை உணருங்கள். இறப்பும் - பிறப்பும் மனிதர் செயலா? கடவுள் செயலா?

 

(தந்தை பெரியார்- "விடுதலை"-21-05-1967)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_6544.html

நமது இயக்கமும், கம்யூனிசமும்!

*
நமது இயக்கம் எந்த வகையிலும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிர்ப்பான இயக்கம் அல்ல; கம்யூனிஸ்டுகளின் மூலக்கொள்கைக்கு விரோதமான இயக்கமுமல்ல. கம்யூனிஸ்டுகள், ‘பொருளாதார சமத்துவம் ஒன்றினால் மட்டுமே நாட்டு நலம் வளர்ந்தோங்கிவிடும், மக்களிடையே உள்ள பேதாபேதம் ஒழிந்துவிடும்’ என்று கருதி இருக்கிறார்கள். அதனால் நான் அவர்கள் கடவுள், மத, மூடநம்பிக்கை களைப் பற்றிப் பேசாமலே இருந்து வருகிறார்கள்.

பொருளாதார சமத்துவத்தால் சமுதாய பேதாபேதங்கள் அகன்றுவிடும் என்பது மேல் நாடுகளுக்குச் சற்றுப் பொருத்த மானதாயிருக்கலாம். மேல் நாட்டு மக்கள் எல்லாருமே ஒரே மதத்தை - அதாவது கிறிஸ்தவ மதத்தைத் தழுவியவர்கள் ஆவார்கள். எனவே, இயல்பிலேயே அங்குச் சமுதாயத்தில் பேதாபேதம் இல்லாமலிருந்து வருகிறது. நம் நாட்டு நிலை அப்படி இல்லை. இங்குப் பிறவியிலேயே பேதாபேதம் கற்பிக்கப்பட்டு, மக்கள் பல சாதிகளாகப் பிரிந்து கிடப்பதோடு, உயர்ந்த சாதி-தாழ்ந்த சாதி என்கின்ற பேதமும்; தாழ்ந்த சாதி மக்கள் உழைக்கக் கடமைப் பட்டவர்கள், உயர்ந்த சாதி மக்கள் அந்த உழைப்பின் பயனை அனுபவிக்கக் கடமைப்பட்டவர்கள் என்பதான கருத்தும்; இன்னும் பற்பல மூடநம்பிக்கைக் கருத்தும் ஆட்சிபுரிந்து வருகின்றன. இந்தப் பகுத்தறிவுக் காலத்திலும் இன்னும் கரும காரியங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எனவே, ஏழை மக்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் பணம் நாளடைவில் உயர்சாதிப் பார்ப்பான் கைக்கு எப்படியோ போய்ச் சேர்ந்து விடும்; மறுபடியும் மறுபடியும் பொருளாதார பேதாபேதம் ஏற்பட்டு விடும். ஆகவே, முதலில் நம் ஏழை மக்களுடைய உள்ளத்தில் மாற்றம் ஏற்படவேண்டும்; அவர்களுக்குப் பகுத்தறிவு உணர்ச்சி ஏற்பட வேண்டும். அதன் பிறகுதான் கம்யூனிசம் (பொருளாதார சமத்துவம்) அவர்களுக்கு முழுதும் பயன்படும்.

குளிர் நாட்டு உடை எப்படி உஷ்ண நாட்டிற்குப் பயன்படாதோ - அதேபோல், மேல் நாட்டுக்குப் பொருத்தமான பொருளாதார சமத்துவக் கொள்கை இந்நாட்டுக்கு இன்றைய நிலையில் பயன்படாது. நாமும் மேல் நாட்டினரைப் போல் பகுத்தறிவுள்ள மக்களாக ஆகிவிடுவோமானால், அப்புறம் கம்யூனிசம் நமக்கு முற்றிலும் பயன்படும். இதைக் கம்யூனிஸ்டுகள் உணர்ந்து மக்களுக்கு முதலில் அறிவு பெருகச் செய்ய வேண்டும்.

பணக்கார முதலாளி ஒழிவதற்கு முன்னால், புரோகிதப் பார்ப்பன முதலாளிகளும், கல் முதலாளிகளும், மட முதலாளிகளும் ஒழிய வேண்டும் என்பதை நம் கம்யூனிஸ்டுத் தோழர்கள் உணர்ந்து, முதலில் அவர்களை ஒழிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். கம்யூனிஸ்டுகளின் இன்றையக் கிளர்ச்சி நடைபெற்று வந்தாலும், நடைபெறாவிட்டாலும் இந்த நாட்டிற்கும் கம்யூனிசம் வரத்தான் செய்யும். ஏன்? கம்யூனிசம் ஒன்றுதான் உலக அமைதிக்கே, உலக மேம்பாட்டிற்கே உற்ற சாதனமாகும் என்ற அறிவு, - அதுவே சத்தியமானது, அதுவே உண்மையானது என்ற அறிவு எல்லா நாடுகளிலும் கொழுந்து விட்டெரிய ஆரம்பித்திருக்கிறது. அந்த சுவாலை இன்றில்லையானாலும் நாளை இந்நாட்டையும் கவ்வத் தான் போகிறது. ஆங்கிலேயரின் தந்திரமோ, அமெரிக்கரின் அணு குண்டோ கம்யூனிசத்தின் பரவலை இனியும் தடை செய்து கொண்டிருக்க முடியாது.

(பம்பாயில்- 12-02-1950-இல் சொற்பொழிவு, ‘விடுதலை’ - 22-02-1950)

கம்யூனிஸ்ட் கொள்கைகளுக்கும், திராவிடர் கழகக் கொள்கைகளுக்கும் அதிகமான பேதம் கிடையாது. அதாவது, இன்றைய தினம் ஒரு தற்குறியை அழைத்து அவனிடம் கட்சிகளைப்பற்றிக் கேட்டால், அவன்,‘கம்யூனிஸ்ட் கட்சி என்றால் பணக்காரர்களை ஒழிப்பது; நாட்டைத் தொழிலாளிகள் ஆதிக்கத்தில் ஆக்குவது’ என்றும்; ‘திராவிடர் கழகம் என்றால் பார்ப்பனீயத்தையும், பணக்காரனை - ஏழையை - பார்ப்பானை - பறையனை உண்டாக்கிய சாமியை யும் ஒழிப்பதும், கோவில்களிலே அடைபட்டுக் கிடக்கும் குழவிக் கற்களை உடைத்து எறிந்து அதன் சொத்துக்களைக் கல்விக்கும், தொழிலுக்கும் ஆஸ்பத்திரிக்கும் உபயோகப்படுத்த வேண்டும் என்றும் கூறுவது’ என்றுந்தான் கூறுவான்.

அப்படியே தான் இன்றையதினம் பொதுமக்களும்கூட நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, கம்யூனிஸ்ட் கட்சி பணக்காரர்களை ஒழிப்பதில் முதற்படியில் நிற்கிறது. திராவிடர் கழகம் பார்ப்பனீயத்தை ஒழிப்பதில் முதல்படியில் நிற்கிறது. என்றாலும், பணக்காரர்களை ஒழிப்பதில் திராவிடர் கழகத்திற்குக் கவலை இல்லை என்று சொல்ல முடியாது. பணக்காரர்களை ஒழிக்க வேண்டியது அவசியந்தான். ஆனால், பார்ப்பனீயத்தை, மூடநம் பிக்கையை ஒழிக்க வேண்டியது மிகமிக அவசியம் என்று திராவிடர் கழகம் கருதுகின்றது.

பணக்காரத்தன்மைக்கு பார்ப்பனீயமும், மேல் சாதி - கீழ் சாதித்தன்மையும், கடவுள் தன்மையும்தான் காரணம். இவற்றை ஒழிக்காமல் பணக்காரர்களை ஒழித்தால் மறுபடியும் பணக்காரர்கள் முளைத்துக்கொண்டே இருப்பார்கள். சாக்கடையையும், கொசுக்களையும் ஒழித்தால்தான் அழுக்குத் தண்ணீரையும், மலேரியாக் காய்ச்சலையும் ஒழிக்க முடியும். ஆகையால்தான், திராவிடர் கழகம், ‘பணக்காரத் தன்மையை ஒழிக்க அஸ்திவார வேலை’ என்று கருதி, இதைச் செய்கின்றது.

பணக்காரத் தன்மைக்கு எளிதில் எதிர்ப்புக் கிடைக்கும்; பார்ப்பனீயத்திற்கு எதிர்ப்புக் கிடையாது. இந்த நாட்டில் இது ஒரு பெரிய கஷ்டம். ஆதலால், முதலில் சுலபமானதைச் செய்து கொண்டு பிறகு கஷ்டமானதைச் செய்து கொள்ளலாம் என்று கருதுகிறார்கள். ஆகையால், நாம் இந்த கம்யூனிசத்தை ஏற்பதில் தவறு இல்லை. இதுதான் மக்களின் நல்வாழ்விற்கு வழி. என்றைக்காவது உலகம் அங்கு சென்றுதான் நிற்கும், அதுவும் சீக்கிரம் செய்து நிற்கும்.

(தந்தை பெரியார் சொற்பொழிவு, ‘விடுதலை’ - 04-10-1951)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_03.html

இந்து மதத்தை ஒழிப்பதற்காக இந்தியா படத்தை பொசுக்குங்கள்!

இந்து மதத்தை ஒழிப்பதற்காகவாவது யூனியன் ஆட்சியை (மய்ய அரசை) ஓழிக்க இந்தியா படத்தைப் பொசுக்குங்கள்! தோழர்களே! இந்நாட்டுக் குடிமக்களான நாம் (தமிழ்த் திராவிடர்) 100- க்கு 90 - பேர் இந்து மதம், இந்துமதக் கடவுள், புராண, இதிகாச சாஸ்திர அமைப்புகள் ஆகியவற்றின்படி, ‘சூத்திரர்கள்’. அதாவது மேல் சாதிக்காரர்களாகிய பார்ப்பனர்களின் வைப்பாட்டி மக்களாகும். இந்து மதத்தின் கடைசி வேர் இருக்கும்வரை, இந்த நாட்டு மக்களைப் பிடித்துள்ள சூத்திரப் பட்டம் ஒழியாது; நிச்சயம் ஒழியாது.

 

ஆனால், இன்று நடக்கும் இந்திய யூனியன் ஆட்சி என்கிற பச்சைப் பார்ப்பன - மநு தர்மவாதிகளின் ஆட்சியில், இந்து மதம் பாதுகாக்கப்படுகிறது; பரப்பப்படுகிறது. மற்ற நாடுகளில் உள்ளதைப் போல் ‘மதம் மனிதனது சொந்த விஷயம்’ என்ற பாவனையில் கூட அரசாங்கம் நடப்பதில்லை. இதற்குப் பிரத்யட்சயமாகப் பல எடுத்துக்காட்டுகள் சொல்லலாம்.

 

1. இந்திய அரசமைப்புச் சட்டம் என்கிற பார்ப்பன நவீன மநுதர்மச் சட்டம், எல்லோருக்கும் மதச் சுதந்திர உரிமை அளித்திருக்கிறது. அதன்படி இந்து மதக்காரன் சுதந்திரமாக இன்னொருவனைப் பார்த்து ‘நீ கீழ் சாதி, இழி சாதிக்காரன், சூத்திரன், பஞ்சமன்’ என்று கூறினால், மற்றவனும் ஆம் என்று தலையசைப்பதைத் தவிர வேறு என்ன கூற முடியும்? கூறுவதற்கு உரிமையும் இல்லை (‘இந்து லா’வே (சட்டமே) இதற்கு ஆதாரம்)

 

2. இந்திய அரசாங்கத்தைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளாத சிலர் இதை ஒரு ‘மதச்சார்பற்ற அரசாங்கம்' என்பதாகக் குறிப்பிடுவார்கள். அத்தகையோர்களைப் பார்த்து நான் வணக்கமாகக் கேட்டுக் கொள்வது எல்லாம், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் எந்த ஓர் இடத்திலாவது இது மதச்சார்பற்ற அரசாங்கம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறதா? சட்ட நிபுணர்களே ஆராய்ந்து பாருங்கள் (மதச்சார்பு ஆட்சி என்பதற்கு அரசமைப்புச் சட்டமே ஆதாரம்). மதப்பாதுகாப்பு என்றால் மநு தர்ம - வர்ணாசிரமப் பாதுகாப்பு அல்லாமல் வேறு என்ன?

 

3. இந்த ஆட்சியில் மதப் பண்டிகைகளுக்கு எல்லாம் அரசாங்க விடுமுறை.

 

4. கும்பமேளா போன்ற ஆபாச நிர்வாணப் பண்டிகைத் திருவிழாக்களில் ஜனாதிபதி, உப ஜனாதிபதி, பிரதம மந்திரி போன்ற ஆட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளத் தவறுவது இல்லை.

 

5. 50,000 - ரூபாய் செலவில் வருஷா வருஷம் ராவணனை எரிக்கும் ‘ராமலீலா’' பண்டிகையில் ஆட்சி பீடத் தலைவர்கள் கலந்து கொண்டு தங்களது மத உணர்ச்சியை நன்றாகப் புலப்படுத்திக் கொள்ளுகின்றனர்.

 

6. ஜனாதிபதி திரு. ராஜேந்திர பிரசாத் அவர்கள் காசிக்குப் போய்ப் பார்ப்பனர்களது காலைக் கழுவிவிட்டு வருவதும், கன்னியாகுமரிக்கு வந்தாலும் பார்ப்பனர்களிடம் மண்டி போட்டு உட்கார்ந்து தர்ப்பணம் பண்ணுதலும் உலகப் பிரசித்தி பெற்ற விசயங்களாகும்.

 

7. அணைக்கட்டுகள் திறப்பதானாலும் சரி, கப்பல் கட்டி அதைக் கடலில் மிதக்க விடுவதானாலும் சரி, இந்து மத முறைப்படி, நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தேங்காய் உடைத்து, மதச் சடங்குகள் முறையில் அர்ச்சனை செய்துதான் அரசாங்கக் காரியங்கள் நடைபெறுகின்றன.

 

8. சோமநாதபுரம் கோயிலைப் பல லட்சக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து - அரசாங்க ஆதரவுடன் புதுப்பித்திருக்கிறார்கள்.

 

9. இந்து மதத்திற்கே சலுகையெனப்படும் முறையில் கோயில்களைப் புனருத்தாரணம் செய்ய டெல்லி சர்க்கார் காட்டும் முயற்சி, ஆர்வம் அதிகம்.

 

10. வெளிநாட்டுப் பெருந்தலைவர்கள் - டிட்டோ, குருஷ்சேவ் போன்றவர்கள் வரும்போது, இந்துக் கோயில்களுக்கு அவர்களை அழைத்துச் சென்று பூரண கும்ப மரியாதை செலுத்தி, நடராசன், சிவன் போன்ற கடவுள்களின் சிலைகளை அவர்களுக்குப் பரிசளித்தல்.

 

11. தபால் (அஞ்சல்) முத்திரையில் மும்மூர்த்தி உருவம் போட்டு அச்சடிப்பது.

 

12. அரசாங்க அலுவலகங்களில் இந்து மதக் கடவுள்களின் படத்தை வைத்து, அதற்கு அடிக்கடி பூசை நடத்துதல்.

 

13. ‘இந்து லா'வின்படி பவுத்தர்களையும் இந்துக்களாக எண்ணி இந்து சட்டத்தையே விவகாரத்திற்குப் பயன்படுத்திய போதிலும், பல லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்கள் வட நாட்டில் புத்த மார்க்கத்தைத் தழுவினார்கள் என்றவுடன், அவர்களை அதற்காகப் பழிவாங்கும் தன்மையில் அவர்களுக்கு இந்திய அரசாங்கம் தந்து வந்த கல்வி, உத்தியோகச் சலுகைகள் இனி தரப்பட மாட்டாது என்று இந்திய யூனியன் (மய்ய ஆட்சி) மறுத்தது, இது இந்து மத சர்க்கார்தான் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இந்த நிலையில், இவற்றை எல்லாம் துணிந்து எடுத்துக் கூறி, இத்தகைய வர்ணாசிரம தர்மப் பாதுகாப்பு ஆட்சியினின்று விடுபட்டால்தான், இந்து மதப் பிடிப்பிலிருந்து விலக முடியும். இந்து மதப் பிடிப்பு ஒழிந்தால்தான் மூவாயிரம் ஆண்டு காலத்து இழிவான சூத்திரப்பட்டமும் ஒழியும்.

 

(தந்தை பெரியார் - 'விடுதலை' தலையங்கம் 27-05-1960)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/05/blog-post_31.html

பார்ப்பனீய சம்பாஷணை!

மணி : ஏன்டா சேஷா! நம்ம தலைவர்களான சிறீமான்கள் சீனிவாசய்யங்கார், சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார், சீனிவாச சாஸ்திரி, சிவகாமி அய்யர், இ.ட. அய்யர் மற்றுமுள்ள பிராமணத் தோமர்கள் எல்லாம் இந்த எலக்ஷனில் எவ்வளவோ பாடுபட்டு மடாதிபதிகள் மகந்துகள் பணத்தை லட்சக்கணக்காக செலவு செய்து ஜெயித்து விட்டோம், ஜெயித்து விட்டோம் என்று தப்பட்டை அடித்தார்களே, கடைசியில் பார்க்கிறபோது பழையபடி மூன்று சூத்திரர்கள் தானே மந்திரிகளாய் விட்டார்கள். இதில் என்ன நமக்கு லாபம். சிறீமான்கள் சத்தியமூர்த்தி, ரெங்கசாமி அய்யங்கார். ங.ஓ. ஆச்சாரியார், வெங்கிட்டரமணய்யங்கார் இவர்களெல்லாம் மந்திரிகளாய் வருவார்கள் என்றல்லவா நாம் எல்லோரும் எவ்வளவோ பாடு பட்டோம். கணக்கு, மணியக்காரர், காப்பிக்கடை, பஞ்சாங்கம், புரோகிதம், வக்கீல் குமாஸ்தா, வக்கீல், முனிசீப், ஜட்ஜ், நிர்வாக சபை எல்லாம் பாடுபட்டும் பழையபடி சூத்திர ராஜாங்கம்தானே ஆகிவிட்டது.

சேஷன் : மணி! நீ என்ன பெரிய முட்டாளாயிருக்கிறாயே. நமக்கு எவ்வளவு பெரிய வெற்றி தெரியுமா? இந்தப் பனகால் ராஜாவை ஒழிச்சமே அது ஒன்றே போதுமே.

மணி : பனகால் என்ன அவ்வளவு மோசமான ஆசாமியா?

சேஷன் : அட பயித்தியமே! நம்ம கூட்டத்திற்கே இந்த ஆள் பெரிய எமனாகவல்லவா 6 -வருஷமாய் வந்து உட்கார்ந்துக் கொண்டு பிராமணாள் வாயில் நிரந்தரமாய் மண்ணை போடத்தக்க மாதிரி எவ்வளவோ வேலை செய்து சூத்திரர்களை யெல்லாம் கை தூக்கி விட்டார். நீயே நன்றாய் கவனித்துப் பார். பனகால் மந்திரியான பிறகு, சூத்திரன்களில் எவனாவது பிராமணனைக் கண்டால் சுவாமி என்கிறானா? கும்பிடுகிறானா? பிராமணன் என்கிற மரியாதை வைத்துப் பேசுகிறானா? இதை நினைத்தால் வயிறு எரிகிறதே.

மணி : நீ சொல்வது தப்பு. இன்னமும் கிராமாந்திரங்களில் எவ்வளவு பெரிய மிராஸ்தாரானாலும் ஒரு சின்ன பிராமணப் பையனைக் கண்டால் எழுந்து நிற்கிறான். வாங்க, வாங்க சாமி என்று குனிந்து கும்பிடுகிறான். இந்தப் பையன் அடே போடா வாடா என்று பேசினாலும் அவர்கள் அதை இழிவாய்க் கருதுவதில்லை. கிராமாந்திரங்களில் தாசிகள் பிராமணாளிடத்தில் பணமே வாங்குவதில்லை. பிராமணன் என்றால் இன்னம் எவ்வளவோ காரியங்கள் நடக்கின்றது. சும்மா பனகால் மீதில் வீண் பழி சுமத்துகிறாயே.

சேஷன் : அட மண்டூகமே! நீ பட்டிக்காட்டான் ஆனதினால் கிராமத்து சங்கதியை கட்டிக் கொண்டு அழுகிறாய். பட்டண வாசல்களில் நடக்கும் அபாயம் உனக்கு என்ன தெரியும்? காப்பிக்கடையில் போய் பார். முன்னெல்லாம் சுவாமி சுவாமி ஒரு இட்டெலி கொண்டு வாருங்கள் என்று வணக்கமாய் கேட்பார்கள். இப்போது ஓய் ஐயரே இட்டிலி கொண்டு வா என்று அதிகாரம் பண்ணுகிறான். வக்கீல்களைக் கண்டால் நடுங்குகிறவர்கள் இப்போது குடியானவன் கூட வாய்யா போய்யா என்கிறான். தாசி வீட்டிற்குப் போனால் பிச்சை எடுக்கிற பார்ப்பானுக்கு தேவடியா ஒரு கேடா என்கிறாள். பெரிய பெரிய அதிகாரமுள்ள உத்தியோகத்தில் எல்லாம் சூத்திரன்களே வந்துவிட்டார்கள். தாலுக்கா, ஜில்லா போர்டு, முனிசிபாலிட்டி இதுகளில் சூத்திரன்களே நிறைந்து விட்டார்கள். ஒரு பிராமணன் அந்தஸ்துக்கு வரவேண்டுமானால் எவ்வளவோ திருப்தி செய்ய வேண்டியதாயிருக்கிறது. பனகாலினால் பிராமண னுக்கு எவ்வளவு கஷ்டம் தெரியுமோ? பட்டிக்காட்டான் நீ என்ன கண்டாய்!

மணி : நீ சொல்லுகிறபடி எனக்குத் தோன்றவில்லையே. எங்கு பார்த்தாலும் முனிசீப்புகள், ஜட்ஜூகள், அங்குள்ள குமாஸ்தாக்கள் எல்லாம் நம்ம பிராமணாளாகத்தானே இருக்கிறார்கள். நீ நன்றாய் கவனித்து பாரு.

சேஷன் : சரி! சரி!! அது ஒன்றுதான் நமது தலைவர்கள் எவ்வளவோ கஷ்டப்பட்டு சூத்திரன்கள் கைக்குப் போகாமல் வைத்திருக்கிறார்கள். அதுதான் உன் கண்ணுக்கு தெரிகிறதாக்கும். இதில் பனகாலுக்கு ஒரு அதிகாரமும் இல்லை தெரியுமா? அல்லாமலும் அந்த இலாக்கா சட்ட மெம்பர் என்கின்ற பேரால் நமது பிரம்மசிறீ சி.பி.ராமசாமி அய்யர்வாளண்டையில் இருக்கிறது. அல்லாமலும் அந்த அதிகாரமுள்ள ஐகோர்ட் ஜட்ஜிகளுக்கு எவ்வளவோ நல்ல பிள்ளையாய் நம்மவர்கள் நடந்து கொண்டிருப்பதால் அதில் நம்மிடவளே ரொம்பி இருக்கிறார்கள். இல்லாவிட்டால் எத்தனை சாயபு முனிசீப்பாய் விடுவார்? எத்தனை கிறிஸ்தவர் முனிசீப்பாய் விடுவார்? எத்தனை கவரை நாயுடு, முதலி, செட்டி, பிள்ளை முதலிய ஆள்கள் முனிசீப், ஜட்ஜிகளாக வந்து விடுவார்கள் தெரியுமா? ஒரு மலையாளி ஐகோர்ட்டுக்கு வந்ததில் எத்தனை ஜட்ஜி, முனிசீப்புகள் மலையாளிகளாக வந்து விட்டார்கள் பார். என்னமோ நம்முடைய நல்லவேளை சுயமரியாதை உள்ள சூத்திரன்கள் கோர்ட்டில் சரியானபடி இல்லாததால் நம்ம பாடு இவ்வளவிலாவது இருக்கிறது.

மணி : மற்ற இலாக்காக்களில் நம்மிடவாள் இல்லையென்றா சொல்லுகிறாய்.

சேஷன் : இருந்தென்ன பிரயோஜனம். நாமே ஏகபோகமாய் அனுபவித்து வந்தது போய் இப்போது அவர்களும் நமக்கு கிட்டக் கிட்ட சரியாய் வந்து விடுவார்களே. மெடிகல் இலாக்கா என்கிற வைத்திய இலாக்காவிலும் இந்த பனகால் வெள்ளைக்காரன்கள் தலையிலும் கையை வைத்து எல்லாம் சூத்திரன்களாகவே கொண்டு வந்தாய் விட்டது. அதனால்தான் வெள்ளைக்காரர்களுக்கும் பனகாலைக் கண்டால் பிடிக்கிறதில்லை.

மணி : வெள்ளைக்காரனை ஒழித்தது நல்லது தானே?

சேஷன் : நீ சுத்த அசடாயிருக்கிறாயே! நீ பிராமண விந்தே அல்ல போல் இருக்கிறது. வெள்ளைக்காரன் இல்லாவிட்டால் நம்ம பாடு ஆபத்துதானே. அது தெரியுமா? வெள்ளைக்காரனை எப்படியாவது சரிபடுத்திக் கொண்டு நாம் சுகமாக காலம் கழிக்கலாம். சூத்திரன்கள் வந்து விட்டால் நம்ம கதி அதோகதிதான். அவன் சூத்திரன்களையே தேடித் தேடி உத்தியோகத்திற்கு நியமிப்பான். வெள்ளைக்காரனைச் சரிபடுத்த நமக்குத் தெரிந்த தந்திரமும் நமக்குள்ள செளகரியமும் சூத்திரன்களுக்குக் கிடையாது. இருந்தாலும் செய்ய மாட்டார்கள். பிராமணாதிக்கம் வேண்டுமானால் வெள்ளைக்கார உத்தியோகமும் ஆதிக்கமும் இருப்பதே மேல்.

மணி : அப்படியானால் நம்ம பிராமணாள்தானே சுயராஜ்யம் வேணும், சுயராஜ்யம் வேணும் என்றும், இரட்டை ஆட்சி ஒழிய வேண்டும் என்றும், பூரா சுயராஜ்யம் அதாவது வெள்ளைக்கார ஆதிக்கமேகூடாது என்றும் சத்தம் போடுகிறார்கள். அப்படி இருக்க நீ வெள்ளைக்கார ஆதிக்கம்தான் பிராமணாளுக்கு நல்லது என்கிறாயே! அதன் இரகசியமென்ன?

சேஷன் : அட கேனமே! அதெல்லாம் சும்மா, சும்மா வெள்ளைக்காரருக்கும் நமக்கும் இரகசிய ஒப்பந்தம். "நான் நோகாமல் அடிக்கிறேன் நீ ஓயாமல் அழு" என்கிற மாதிரி சூத்திரன்களை ஏமாற்ற நம்மிட பெரியவாள் ஏற்பாடு செய்து வைத்த சுதந்திரம். உண்மையான சுயராஜ்யம் வந்தால் பிராமணாள் சங்கதி பெரிய ஆபத்தாயல்லவா முடியும். இவ்வளவு உத்தியோகமும், பணமும், அதிகாரமும், பதவியும் பிராமணர்களுக்குக் கிடைத்து விடுமா? எல்லாவற்றையும் சூத்திரன்கள் பிடுங்கிக் கொள்வார்கள். ஒரு சப்பட்டை மந்திரி உத்தியோகப் பனகாலால் எத்தனை சூத்திரன்களுக்கு உத்தியோகம் வந்து விட்டது. இரட்டை ஆட்சியை ஒழிப்பது என்பதன் இரகசியம் உனக்குத் தெரியாதா? எல்லா உத்தியோகமும் அதிகாரமும் வெள்ளைக்காரன் கையிலே இருக்க வேண்டும். எங்களுக்கு கொடுத்தது தப்பு. அது சூத்திரன்களுக்கே அநுகூலமாய் போய்விட்டது. இப்படி ஆகுமென்று தெரியாமல் கேட்டுவிட்டோம். ஆதலால் திரும்பவும் நீயே எடுத்துக் கொண்டு ஒத்தை ஆட்சி ஆக்கிக் கொள் என்பதுதான் அதன் தத்துவம்.

மணி : அது சரி, பூரா சுதந்திரம் என்பது என்ன?

சேஷன் : அது ரொம்ப இரகசியம். விளையாட்டுக்காவது அப்படிச் சொன்னால்தான் பாமர ஜனங்கள் நம்முடன் சேருவார்கள். தவிர, கதர், தீண்டாமை, மதுவிலக்கு இதெல்லாம் பனகால் எடுத்துக் கொண்டு வேலை செய்யப்போவதாக கேள்விப்பட்டதால் அதற்கும் மேலாக மிகவும் தீவிரமான கொள்கை நம்மிடம் இருப்பதாக ஜனங்கள் நினைக்கும்படி காட்டிக் கொள்ள வேண்டாமா? அதற்காகத்தான் இந்த தோது செய்தார்கள். தவிரவும் இப்படிச் சொன்னால்தான் வெள்ளைக்காரரும் நம்மையே நம்புவார்கள். ஏனென்றால் ஒரு சமயம் அம்மாதிரி கிளர்ச்சி ஏற்பட்டு விட்டால் என்ன செய்கிறது என்று பயந்து நம்மிடவாள் இடமே எல்லா பெரிய உத்தியோகத்தையும் நம்பிக் கொடுத்து வைப்பான். சூத்திரனிடம் கொடுத்தால் ஒரு சமயம் அவர்களை எதிர்த்தாலும் எதிர்த்து விடுவார்கள் என்கிற பயம் இப்போதும் வெள்ளைக்காரருக்கு உண்டு. உண்மையான முழுச் சுதந்திரம் கேட்பவர்கள் நடந்து கொள்வதைப் பார்த்தே நீ தெரிந்து கொள்ளக் கூடாதா? விடிந் தெழுந்தால் வெள்ளைக்காரர்களிட கச்சேரிக்கு போய் அவர்களைக் கெஞ்சி 10,20 ஆயிரம் வக்கீலிலும், ஜட்ஜிலும், முனிசீப்பிலும், கலெக்டர் முதலிய பல உத்தியோகத்திலும் சம்பாதிப்பவர்கள் வெள்ளைக்காரர்களை ஓட்டுவதாக சொல்ல முடியுமா?

மணி : சரி, அப்படியானால் பனகால் போனது பிராமணாளுக்கு நல்லதாச்சுது. சில சூத்திரன்களும் பனகால் போகணும் போகணும் என்று கத்தினான்களே அதென்ன?

சேஷன் : அதெல்லாம் நம் சீனிவாசய்யங்கார் மடாதிபதிகளிடம் வாங்கின பணத்தைக்கொண்டு சூத்திரன்களுக்கு கூலி கொடுத்து கத்தச் சொன்னதுதானே. நிஜமாலுமா அவன்கள் கத்தினான்கள்?

மணி : அது சரி, மறுபடியும் வந்திருக்கும் சூத்திர மந்திரிகள் பனகால் மாதிரி ஆகமாட்டார்களா?

சேஷன் : ஒருக்காலும் ஆகமாட்டார்கள்.

மணி : அதென்ன அவ்வளவு தைரியம்?

சேஷன் : இந்த மந்திரிகள் மூன்று பேரும் நம் தலைவர்களால் சாணியில் பிடித்த பிள்ளையார்கள் போல்தானே. நாம் சொல்லுகிறபடி கேட்டுக் கொண்டிருக்கிற வரையில் அவர்கள் பிள்ளையார்கள் (மந்திரிகள்) தான். கொஞ்சம் தவறினால் உடனே சாணிப் பிள்ளையாரை எருவாமுட்டை (நம்பிக்கை இல்லாத தீர்மானம்) தட்டி விட மாட்டார்களா? அந்த பயம் அவர்களுக்கும் உண்டு. இவ்வளவு பாடுபட்ட நம்மவாளுக்கு இது தெரியாமல் இருக்குமென்றா நினைத்தாய்? தவிரவும் சூத்திரன்களைக் கொண்டே சூத்திரன்கள் கண்ணைக் குத்துவது நல்லதே ஒழிய நாம் பிரவேசித்தால் பார்ப்பான் செய்து விட்டான் என்று கூப்பாடு போடுவான்கள். உதாரணமாக காஞ்சீபுரம் மகாநாட்டில் ஒருவன் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் கொண்டு வந்ததற்கு ஒரு சூத்திரன் பிரசிடெண்டாயிருந்ததினால்தான் நமது தலைவர்கள் வெகு சுலபத்தில் அத் தீர்மானத்தை மீட்டிங்குக் கூட கொண்டு வராமல் கொள்ளச் செய்ய சவுகரியமாயிருந்தது. பாமர ஜனங்களும் நம்பினார்கள். அப்படிக் கில்லாமல் ஒரு பிராமணன் அந்த ஸ்தானத்தில் இருந்திருந்தால் கட்டாயம் அத்தீர்மானம் நிறைவேறியேயிருக்கும். அல்லாமலும் அத்தீர்மானத்தை ஒரு பிராமணன் தள்ளியிருந்தால் பெரிய கூப்பாடு போட்டிருப்பான்கள். ஆதலால் இப்படி இருப்பதுதான் நல்லது.

மணி : சரி! சரி! எனக்கு இப்போதுதான் புரிந்தது. நானும் இம்முறைகளைக் கையாளுகிறேன்.


("குடிஅரசு" சித்திரபுத்திரன் என்ற புணைப் பெயரில் தந்தை பெரியார் எழுதியது - 19.12.1926)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/06/blog-post_05.html