07252021ஞா
Last updateசெ, 20 ஜூலை 2021 1pm

பிளாஸ்டிக் எமன்

சுற்றுச்சூழல் மாசுபடுவதே பூமி வெப்பமடைய முக்கிய காரணம். மனித செயல்பாடுகளால் வெளியிடப்படும் கார்பன் டைஆக்சைடு, மீதேன் போன்ற வாயுக்களே சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. பூமி வெப்பமடைதவதால் மனிதகுலத்தின் வாழ்வுரிமை கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது. இதைத் தடுத்து சுற்றுச்சூழலை காக்க நாம் வாழும் இடத்தில் சிறிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும்.பூமியின் பாதுகாப்புக்கும் சுற்றுச்சூழலுக்கும் முக்கிய அச்சுறுத்தலாக இருப்பது பல்கிப் பெருகி வரும் குப்பைகளே. தெருவில் அனைவரது கண்களில் தென்படும் குப்பை பிளாஸ்டிக் கேரி பேக் மற்றும் பிளாஸ்டிக் கவர். எளிதாகவும், கையாளுவதற்கு வசதியாகவும் இருப்பதால் இன்றைய தலைமுறையினரது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே பிளாஸ்டிக் கேரி பேக் மாறிவிட்டது.

இப்படி பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளை நாம் முறையாக அப்புறப்படுத்துகிறோமா? இல்லை. மாறாக, பூமிக்கு கேடுவிளைவிக்கும் வகையில் தெருவில் வீசுகிறோம்.

பாலிதீன் எனப்படும் வேதிப்பொருளால் உருவாக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் குப்பைகளுடன் சேர்த்து எரிக்கப்படும்போது, பைகளில் உள்ள சாயத்தால் காற்று மண்டலம் மாசுபடுகிறது. பல்வேறு சுவாச நோய்களை தோற்றுவிக்கிறது.

பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வாங்கிச் செல்லும்போது, பிளாஸ்டிக் சூடாகி வேதியியல் மாற்றங்களால் ஹைட்ரோகார்பன் மற்றும் பியூரான் போன்ற நச்சு வாயுக்கள் உணவில் கலந்து விடுகின்றன. அந்த உணவை உண்பவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படுகிறது.

குப்பை கழிவுகளுடன் மண்ணில் பிளாஸ்டிக் பைகளை புதைப்பதால், அவை நெடுங்காலத்துக்கு மண்ணில் மக்கிப்போகாமல் தாவரங்களின் வேர்கள் ஊடுருவ முடியாமலும், மழைநீர் மண்ணுக்குள் செல்வதைத் தடுக்கவும் செய்வதால் நிலத்தடி நீர்மட்டம் குறைய காரணமாக அமைகின்றன.

பிளாஸ்டிக் பைகளில் உள்ள உணவுப் பொருட்களை கால்நடைகள் உட்கொள்ளும்போது, கால்நடைகளின் உணவுக்குழல் அடைபட்டு அவை இறந்து போகின்றன. சில உயிரினங்கள் பேப்பர் என்று நினைத்துக் கொண்டு தவறுதலாக பிளாஸ்டிக் பைகளை உண்டுவிடுகின்றன. யானைகள், மாடுகள் இப்படி இறந்து போகும் நிகழ்வுகள் நிறைய பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே பிளாஸ்டிக் பைகளின் பயன்பாட்டை தவிர்க்கப் பழகுவோம். மற்ற நண்பர்கள், உறவினர்களுக்கும் இச்செய்தியை எடுத்துச் சொல்வோம். அவசரத் தேவைக்கு ஒன்றிரண்டு முறை பிளாஸ்டிக் பையை பயன்படுத்தினால், அந்த பிளாஸ்டிக் பொருட்களை குப்பையோடு குப்பையாகப் போடாமல், சேமித்து மறுசுழற்சிக்கு அனுப்புவோம்.

துணிப்பைகள், சணல்பைகள், பழைய துணிகளால் தைக்கப்பட்ட பைகள், விழாக்களில் கொடுக்கப்படும் மஞ்சள் பைகளை பயன்படுத்துவோம்

http://poovulagu.blogspot.com/2008_11_01_archive.html


உயிருள்ள ஒரு மரத்தின் மதிப்பு ரூ.10 இலட்சம்

மரம் நமக்கு என்ன தருகிறது?
மலர்கள், காய், கனிகள் தருகிறது
நிழல், குளிர்ச்சி, மழை தருகிறது
காற்றை சுத்தப்படுத்துகிறது

நாம் வெளியிடும் கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொண்டு,நமக்குத் தேவையான ஆக்சிஜனை வெளியிடுகிறது.

கார்பன் டைஆக்சைடை கிரகித்துக் கொள்வதால் புவி வெப்பமடையும் விளைவை குறைக்கிறது.

மண்ணில் வேரோடி இருப்பதால், மண் அரிப்பைத் தடுக்கிறது. நிலச்சரிவுகளை தடுக்கிறது.

மரத்தைச் சுற்றி நீர் சேகரமாகவதால், நிலத்தடி நீர் அதிகரிக்கிறது.
காய்ந்த சருகு இலைகள் மண்ணுக்கு உரமாகின்றன.

ஒரு ஐம்பது ஆண்டு வளர்ந்த மரம் பல லட்சம் ரூபாய் சொத்துக்குச் சமமான நன்மைகளைத் தருகிறது.

ரூ. 5.30 லட்சம் மதிப்புள்ள ஆக்சிஜனை வெளியிடுகிறது.
ரூ. 6.40 லட்சம் மதிப்புள்ள மண் அரிப்பைத் தடுக்கிறது.
ரூ. 10.00 லட்சம் மதிப்புள்ள உணவைத் தருகிறது.
ரூ. 10.30 லட்சம் மதிப்புள்ள காற்று மாசுபாட்டைத் தடுக்கிறது.
ஒரு மரம் தன் வாழ்நாளில் கிரகித்துக் கொள்ளும் கார்பன் டைஆக்சைடின் அளவு 1000 கிலோ.
மரங்களை மனிதர்கள் பல்வேறு வகைகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அவற்றை அறிந்து கொள்ள நம்மைச் சுற்றிப் பார்த்தால் போதும். அந்த செயற்கை பயன்களின் பட்டியலை இந்த ஒரு பக்கத்துக்குள் அடக்க முடியாது.

ஒவ்வொரு மரமும் ஒரு வரம்
மரங்கள், காடுகள் நமக்குத் தரும் மேலும் சில நன்மைகள்:
மரங்கள் உணவைத் தருகின்றன. காய், கனி, கீரை வகைகள் போன்றவை மனிதனுக்கும், விலங்குகளுக்கும் கிடைக்கும் இயற்கைக் கொடை. மரங்கள் மட்டுமே உலகில் சுயமான உணவைத் தயாரிக்கும் திறனைப் பெற்றுள்ளன.
நச்சு வாயுவை உட்கொள்வதும், பிராண வாயுவை வெளிவிடுவதும் மரங்கள் செய்யும் அற்புதங்களில் ஒன்று. வேலை நேரம் தவிர நாம் பெரும்பாலான நேரம் வீட்டில்தான் கழிக்கிறோம். வீட்டிலும் வீட்டைச் சுற்றிலும் மரங்கள், செடிகொடிகளை வளர்த்தால் காற்று தூய்மையாகும்.

மரங்கள் இளைப்பாற நிழல் தருகின்றன. நகர்ப்புறங்களிலும், வசிப்பிடங்களிலும் வெப்பத்தை கட்டுப்படுத்தி இயற்கையான குளிர்சாதன வசதியைத் தருகின்றன.

மரங்கள் மழையைத் தருகின்றன. வானில் மழைமேகம் உருவாகும்போது மரங்கள் அதிகம் உள்ள பகுதியில் வீசும் குளிர்ந்த காற்றால் குளிர்விக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் மேகங்கள் மழையைப் பொழிகின்றன.

மரங்கள் மண்ணரிப்பைத் தடுக்கின்றன. வெட்ட வெளியில் மழை பெய்யும்போது மண் அரிக்கப்பட்டு ஆறு, குளம் போன்ற தாழ்ந்த பகுதிகளில் சேரும். இதனால் ஒருபுறம் வளமான மேல்மண் இழக்கப்படுவதும், மறுபுறம் ஆறுகள், குளங்கள் மேடாவதும் நடக்கிறது. மரம் உள்ள பகுதியில் மழை பெய்வதால், உடனடியாக மண் கரைந்து ஓடாமலும், வேர்கள் பிடித்திருப்பதால் அடிமண் அடித்துச் செல்லப்படாமலும் மண்ணரிப்பு தடுக்கப்படுகிறது.
கோடையில் அனல் காற்று வீசும்போது நிலம் வறண்டு போகிறது. காற்றில் மேல்மண் அடித்துச் செல்லப்படுகிறது. இதை மரங்கள் தடுத்து நிறுத்துகின்றன. இதன் மூலம் நிலம் பாலைவனமாகாமல் தடுக்கப்படுகிறது.

புயலின் வேகத்தை மரங்கள் கட்டுப்படுத்துகின்றன. கடலோரங்களில் காணப்படும் அலையாத்தி காடுகள் வேர்களில் மண்ணைச் சேகரித்து வைப்பதால் அலையின் வேகம் கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால்தான் அலையாத்தி காடுகள் என்ற பெயரும் வந்தது. பலமான வேர்களைக் கொண்டிருப்பதால் புயலின் வேகம் மட்டுப்படுத்தப்படுகிறது.

உயிரோடு இருக்கும்போது மட்டுமின்றி, இறந்த பின்பும் மரங்கள் நன்மையே தருகின்றன. ஏழை மக்களின் வீடுகளில் விறகாக-எரிபொருளாகப் பயன்படுகிறது.

மரமும், பலகைகளும் கதவு, ஜன்னல், வீடு கட்ட பயன்படுகின்றன. கட்டுமானப் பொருட்களில் இருந்து வீட்டுத் தேவைகள், அலங்காரப் பொருட்கள் வரை எண்ணற்ற பொருட்கள் மரங்களைக் கொண்டே தயாரிக்கப்படுகின்றன.
http://poovulagu.blogspot.com/2008/11/10.html

காற்றில் மாசுக்கட்டுப்படுத்தல்-6 (தமிழில் மென்பொருள்)

காற்றில் மாசு எப்படி பரவுகிறது (disperse) என்பதை கணக்கிடுவதுதான் Dispersion Model என்பதன் அடிப்படை ஆகும். இதைக் கணிக்க பல வகையான வழிகள் உள்ளன. இந்தியாவில் பயன்படுத்துவது ISC 3 (Industrial Source Complex என்பதன் சுருக்கமாகும்).
எல்லா வகையான வழிகளுமே, அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள வல்லுநர்களால் ஏற்படுத்தப்பட்டவை. அமெரிக்காவிலும் முன்னால் இந்த ISC3 மாடலை பயன்படுத்தினார்கள். தற்போது AERMOD என்ற் மாடலை அவர்கள் பயன்படுத்துகிறார்கள்.

ISC3 மாடல் வழி, ஒரு இடத்தில் மாசு வெளிவந்தால்,வேறு இடத்திற்கு பரவி எந்த அள்வில் செல்லும் என்பதை கணக்கிட தமிழில் ஒரு மென்பொருள் உருவாக்கி இருக்கிறேன். அதன் screenshot கீழே.

நீங்கள் இதை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். இதை பயன்படுத்த டாட் நெட் (.NET Framework version 2.0) என்ற மென்பொருள் தேவை. இது ஏற்கனவே உங்கள் கணினியில் இல்லாவிட்டால், மைக்ரோசாஃப்ட
தளத்திலிருந்து இலவசமாக தரவிறக்கம் (.NET Framework version 2.0)செய்யலாம். அதன் அளவு, சுமார் 22 MB ஆகும்.

இந்த மென்பொருளை பயன்படுத்தினால் எனக்கு (அ) இந்த மென்பொருளில் உள்ள தமிழ் எழுத்துக்கள் உங்கள் கணினியில் சரியாகத் தெரிகிறதா என்பதையும் (ஆ) இந்த மென்பொருளில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமா என்பதையும் தெரிவிக்கவும்.

இங்கு கவனிக்க வேண்டியவை சில.

 • இந்த மென்பொருளின் மூலம், ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாசு சேர்க்கும் பொழுது, வேறு இடத்தில் அது பரவும் விதத்தை கணிக்கலாம். இந்த மாசுக்கள் தொழிற்சாலையில் புகைபோக்கி வழியே வரும். இவை point source எனப்படும்.
 • வாகனங்கள் புகை கக்கிக்கொண்டே செல்லும்பொழுது , மாசு பல இடங்களில் சேர்க்கப்படுகிறது. இவை line source எனப்படும். இவற்றால் விளையும் பாதிப்பை இந்த குறிப்பிட்ட மென்பொருளில் கணக்கிட முடியாது. (நான் இன்னமும் அதை தமிழில் எழுதவில்லை)
 • ஒரு பெரிய பரப்பில் இருந்து வரும் புகையானது area source எனப்படும். அதுவும் இந்த மென்பொருளில் கணக்கிட முடியாதுஇதைப் பயன்படுத்தும் பொழுது நீங்கள் கொடுக்க வேண்டிய விவரங்கள்.

 1. புகைபோக்கியின் உயரம்: இது அதிகமானால், மாசு தரையில் வரும்பொழுது நன்கு பரவி விடும். அதனால், அதன் அளவு எந்த ஒரு இடத்திலும் குறைவாக இருக்கும்.
 2. புகைபோக்கியின் விட்டம்: இது காற்றின் போக்கை பாதிக்கும். (தரையில்) மாசின் அளவு இதனால் கொஞ்சம் பாதிக்கப்படும்
 3. புகையின் வெப்பனிலை: இது அதிகமானால், புகையின் ‘அடர்த்தி' (density)குறையும். அதனால், புகை மேலே செல்லும். அப்பொழுது, தரையில் அதன் அளவு குறையும்
 4. புகை வெளிவரும் வேகம்: புகை வேகமாக மேல்நோக்கி வந்தால் அதன் அளவு தரையில் குறையும்
 5. மாசு வெளிவரும் அளவு: இது தொழிற்சாலையிலிருந்து ஒரு நொடிக்கு எவ்வளவு கிராம் மாசு காற்றில் சேர்க்கப்படுகிறது என்ற அளவு.
 6. உங்கள் வீட்டிலிருந்து புகைபோக்கி இருக்கும் தொலைவு: X மற்றும் Y (மீட்டரில்). இதில் X என்பது கிழக்கு-மேற்கு. புகைபோக்கி மேற்கில் இருந்தால் -1000 மீ என்று நெகடிவ் எண் கொடுக்க வேண்டும். கிழக்கில் அரை கிலோ மீட்டரில் இருந்தால், 500 மீட்டர் என்று கொடுக்க வேண்டும். Y என்பது வடக்கு-தெற்கு.
 7. புகை போக்கி வடகிழக்கில் இருந்தால்? X = 1000, Y = 800 என்று தகுந்த அளவில் கொடுக்க வேண்டும்
 8. தட்ப வெப்பம்: காற்றின் வேகம் மற்றும் திசை. காற்று வடக்கிருந்து தெற்காக வந்தால் (வாடைக்காற்று) 0 டிகிரி. கிழக்கிருந்து மேற்காக சென்றால், 90 டிகிரி
 9. காற்றின் வேகம் அளக்கப்பட்ட உயரம். புகைபோக்கியானது 50 மீட்டர் உயரத்தில் இருக்கலாம். ஆனால் காற்றின் வேகம் 2 மீ. உயரத்தில் அளக்கப்பட்டு இருக்கலாம். இந்த விவரம் சொன்னால், மென்பொருளானது, ”புகைபோக்கியின் உயரத்தில் காற்றின் வேகம் என்ன” என்பதை கணித்து விடும்
 10. காற்றின் வெப்ப நிலை: இதை மாற்றினால்,தரையில் மாசின் அளவு, நிறைய மாறாது.
 11. கலக்கும் உயரம். ஆங்கிலத்தில் mixing height எனப்படும். இதைப்பற்றி தனிப்பதிவுதான் எழுத வேண்டும். இப்போதைக்கு 1 கி.மீ என்று வைத்துக் கொள்வது போதும். பெரும்பாலும் இது சரியாக இருக்கும்.
 12. பகல்/இரவு: பகலில் சூரிய வெளிச்சத்தின் அளவைப்பொறுத்தும் , இரவில் மேக மூட்டத்தைப் பொறுத்தும் தரையில் மாசின் அளவு நிறைய மாறுபடும். இதற்கு காரணம், மாசு பரவும் விதத்தையும், காற்றோட்டத்தையும் இவை மிகவும் மாற்றுகின்றன.
 13. மாசு decay coefficient: சில மாசுக்கள் காற்றில் சிதைந்து விடும். பெரும்பாலான் மாசுக்கள் அப்படியே இருக்கும்.
 14. உங்கள் வீட்டில் மாசின் அளவை கணிக்க, வீட்டின் உயரம் தேவை.
 15. சுற்று வட்டாரம்: கிராமமா அல்லது நகரமா என்பதைப் பொறுத்து தரையில் வரும் மாசு மிகவும் மாறுபடும். இதற்கு காரணம், காற்று செல்லும் விதம் இந்த இரண்டு இடங்களிலும் வேறுபடும்.

http://fuelcellintamil.blogspot.com/2008/06/5-air-pollution-control-dispersion.html

உலகை அச்சுறுத்தும் ‘க்ளோபல் வார்மிங்‘

உலகம் இன்று மிரண்டு போய் கொண்டிருப்பது அமெரிக்கா போன்ற நாடுகளின் அணு ஆயுதங்களுக்கோ, அரசுக்கும் மக்களுக்கும் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தீவிரவாதிகளுக்கோ அல்ல. அதைவிட மோசமான ஆபத்தை விளைவிக்க கூடிய உலகை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லும் குளோபல் வார்மிங் என்று கூறப்படும் உலகம் வெப்பமயமாதல் என்ற நிகழ்வு தான் உலக மக்களின் வயிற்றில் இன்று புளியைக் கரைத்துக் கொண்டிருக்கிறது.

 

உலக அளவில் நாளுக்கு நாள் அரசுகளின் புரிந்துணர்வு அடிப்படையில் திறப்பு விழா கொண்டாடும் தொழிற்சாலைகளாலும், அதிக அளவில் நகர்வலம் வரும் வாகனங்களாலும், உணவு தானியம் படைக்க, நிலத்திற்கு அதிக அளவில் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை படைப்பதாலும், 50 கிராம் எடை கொண்ட பொருளை சமைக்கக்கூடிய 5 கிலோ சுமக்கும் திறனுடைய பாலிதீன் பைகளைப் பயன்படுத்துவதாலும் புவி இன்று வெப்பம் கூடி எரிமலையாய் எரியத் தொடங்கியுள்ளது.

உலகம் வெப்ப மயமானால் என்ன பிரச்சனை? என நீங்கள் கேட்கலாம். உலகம் வெப்பமயமாதலால் சூரிய வெப்பம் உயர்வு, தண்ணீர் தட்டுப்பாடு, மின்சாரத்தட்டுபாடு, உணவுப் பொருள் உற்பத்தி பாதிப்பு, வறுமை, பருவம் மாறி மழை பெய்தல், வெயில் தாக்கம், பனிமலைகள் உருகுதல், கடல் மட்டம் உயருதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உலகம் வெப்பமயமாதல் என்பது அணுகுண்டை விட ஆபத்தானது.

புவி வெப்பம் அதிகரித்து வருவது கடந்த 100 ஆண்டுகளுக்கு மேல் நடந்து வருவதாக ஆய்வாளர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவிக்கின்றனர். 1975ம் ஆண்டிலிருந்து கடல் மட்டம் உயர்வு அதிக அளவில் உள்ளதாக கூறுகின்றனர்.

உலக சராசரி கடல் மட்டம் கடந்த 100 ஆண்டுகளில் ஆண்டொன்றுக்கு ஒன்று முதல் 2 மி.மீட்டர் வரை உயர்ந்து வருவதற்கான ஆதாரத்தை அள்ளி நீட்டுகின்றனர். இந்த நிலை நீடித்தால் 2100ம் ஆண்டு கடல் மட்டம் உயர்வு 18 முதல் 59 சென்டி மீட்டர் வரை இருக்குமென மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

இதற்கு இன்னொரு சான்றாக நிலப்பரப்பில் தற்போது அடிக்கடி அனல் காற்று வீசுவதையும், பனிப்பொழிவு அதிகமாவதையும், பனிபுயல், சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் அடிக்கடி நிகழ்வதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும் பெட்ரோலிய பொருட்களின் அதிகளவு பயன்பாடும், தொழில்துறை, வேளாண்துறை, நிலப் பயன்பாடு போன்றவற்றில் மனிதர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ள இயற்கைக்கு மாறான செயல்களே உலக வெப்பமயமாதலுக்கு முக்கியக் காரணமாகும்.

இந்தியாவை குறித்துப் பார்த்தால் புவி வெப்பம் அடைந்து வருவதால் பெரும்பாலான கடற்கரைப் பகுதிகள் கடலுக்குள் மூழ்கி விடும் அபாயம் உள்ளது. இதனால் 2100க்குள் இந்தியாவில் 16 முதல் 17 கோடி மக்கள் இடம் பெயர நேரிடும்.

மேற்கு வங்கத்தில் 1 கோடி மக்களும், மும்பை மற்றும் புறநகரில் 12 கோடி மக்களும், தமிழ்நாட்டில் 1 கோடி மக்களும், ஆந்திராவில் 60 லட்சம் மக்களும், குஜராத்தில் 55 லட்சம் மக்களும், ஒரிசாவில் 40 லட்சம் மக்களும், இராஜஸ்தான், கர்நாடகா, வடக்கு ஆந்திரா, தெற்கு பீகார், மராட்டியத்தின் உட்பகுதி என சுமார் 70 லட்சம் மக்களும் இடம் பெயர வேண்டியிருக்கும்.

அவ்வாறு இல்லையெனில் உலக நிலபரப்பில் 2.5 சதவீத அளவு மட்டுமே கொண்ட இந்தியா சுமார் 120 முதல் 130 கோடி மக்களை தண்ணீர், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளை வழங்கி காப்பாற்ற வேண்டியிருக்கும்.

தட்ப வெப்பநிலை மாற்றம் உலகின் சுற்றுச்சுழலுக்கு மிகப் பெரிய ஆபத்தாக மாறும் என்ற கருத்தை ஐக்கிய நாடுகள் அவையில் 1992ம் ஆண்டில் நடைபெற்ற தட்பவெப்பநிலை மாற்றத்தைத் தடுப்பதற்கான சட்ட அமைப்பை உருவாக்குவதற்கான கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

நிலக்கரி, பெட்ரோல் போன்ற எரிபொருட்களை உலகம் முழுவதுமுள்ள நுகர்வோர் பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டே வருவதாலும், பல்வேறு ஆதாரங்களிலிருந்து வெளிவரும் கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு போன்ற பசுமை இல்ல வாயுக்கள் அதிகம் உற்பத்தியாவதாலும் தட்ப வெப்ப நிலை செயற்கையாக அதிகரிக்கும் என்பதை ஐ.நா பன்னாட்டுக் குழுவின் ஆய்வை உணர்ந்த அறிவியலாளர்கள் 1996ம் ஆண்டு உறுதி செய்தனர்.

1997ம் ஆண்டு பசுமைக் குடில் வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க செல்வந்த நாடுகள் ஒப்புக் கொண்டன. ஆனால் கொடுத்த வாக்குறுதியை அவர்களால் காப்பாற்ற இயலவில்லை. இந்தியா போன்ற வளரும் நாடுகள் தங்களுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதத்தை பருவநிலை மாற்ற சூழ்நிலையை எதிர்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளுக்கு செலவிடுகின்றன. வளர்ச்சி அடைந்த நாடுகளே நியாயமாக பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைக்க வேண்டும்.

1997ம் ஆண்டு ஐ.நா. கோட்பாடுகளைத் தொடர்ந்து க்யோடோ உடன்பாடு காணப்பட்டது. இதன்படி இணைப்பு 1 நாடுகளான வளர்ந்த நாடுகள் தங்களுடைய பசுமை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 2012ம் ஆண்டில் சராசரியாக 5.2 சதவீதம் குறைந்து 1990ம் ஆண்டு நிலவி வந்த நிலைக்கும் குறைவாகக் கொண்டு வர இணங்கின. இந்த மொத்த குறியீடு ஒவ்வொரு நாட்டின் தேசிய இலக்காக மாற்றப்பட்டது.

புவி வெப்பமயமாதலால் என்ன பாதிப்பு?

புவி வெப்பமயமாதலால் பருவகால மாற்றங்கள் நிகழ்கின்றன. இதனால் வேளாண்மை மற்றும் நீர் வளங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

வேளாண்மை உற்பத்தி இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தற்போதைய பாதிப்பை விட மிகக் கடுமையானப் பாதிப்பிற்குள்ளாகும். அரிசி, பருப்பு, தானிய வகைகளின் விளைச்சல் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து, சில காலங்களில் அந்தப் பயிர் வகைகளே இல்லாமல் முழுமையாக அழிந்து போகும். இதனால் உலக உணவுப் பாதுகாப்பிற்கு மிகுந்த பின்னடைவு ஏற்படுவதுடன், பெரும்பாலான நாடுகளில் வறுமையும் பட்டினிசாவும் பெருகும்.

உலகின் பல்வேறு பாகங்களில் அதிகரித்து வருவது நீர்ப்பற்றாக்குறை. இந்தியாவில் ஓடும் பல நதிகளின் இருப்பிடமாக விளங்கும் இமயமலை, புவி வெப்பமயமாதலால் தொடர்ந்து உருகி வருவதால் ஆறுகள் அழிந்துவிடும் வாய்ப்புள்ளது.

இத்தகைய பாதிப்புகளை தவிர்த்திட நாம் என்ன செய்ய வேண்டும். நம் அன்றாட நடவடிக்கைகளையும், செயல்பாடுகளையும் மாற்றியமைத்தால் மட்டுமே புவி வெப்பமயமாதலை தடுக்க முடியும். இதுவரை நம் பல செயல்கள் இயற்கைக்கு எதிரானவையே. எனவே தான் இயற்கை நமக்கு எதிராக மாறியுள்ளது.

புவியை காக்க இதோ சில வழிகள்:

தொழிற்சாலை, வாகனங்கள் மூலம் வெளியிடப்படும் கார்பன் மாசுக்களைக் கட்டுபடுத்த மரங்கள் அவசியம். எனவே, உலக அளவில் காடுகள் வளத்தைப் பெருக்குவதோடு 'வீட்டுக்கு 2 மரம் வளர்ப்போம்' என்பதையும் நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் புங்கன், காட்டாமணக்கு, ஆமணக்கு போன்றவற்றின் மூலம் கிடைக்கும். பயோ டீசலை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும்.

நாம் அன்றாடம் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த பெட்ரோல், டீசல், எரிவாயு போன்றவற்றை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். அவற்றை குறைக்க சூரிய மின் ஆலையை நிறுவுவதோடு ஒவ்வொரு தனி நபரும் சூரிய ஒளியை பயன்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும். நம் வீட்டில் பயன்படுத்தும் டியூப் லைட், பல்ப் இனிமேல் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு சி.எஃப்.எல் விளக்குகளை பயன்படுத்த வேண்டும்.

 

வீடுகளிலும், ஆலைகளிலும் தேவைப்படும் எரிவாயுவிற்கு பதிலாக உயிரி எரிவாயுக்கனைப் பயன்படுத்த வேண்டும்.


இவைகளில் மிகவும் முக்கியமானது

நிலத்தடி நீர்வளத்தை காக்க வேண்டும். எனவே மழை நீர் சேகரிப்பு, கிணற்றின் ஊற்றுக் கண்களுக்கு போதிய நீர் வரும்படி செய்தல் போன்றவற்றால் எதிர்கால விவசாயத்தை காக்க முடியும் என்பதோடு எதிர்கால நீர்த் தேவையையும் சமாளிக்க முடியும்.

சிந்து சமவெளி நாகரிகத்தையும், இன்டஸ்பள்ளத்தாக்கு நாகரிகத்தையும் நாம் அறிய காரணம் அக்கால மனிதர்கள் விட்டு சென்ற அழகிய வேலைபாடுள்ள பானைகளும், ஆயுதங்களும் தான். ஆனால் நமக்கு பிறகு 3000 ஆண்டுகள் கழித்து யாராவது அகழ்வாராய்ச்சி மேற்கொண்டால் கிடைப்பது வெறும் பாலித்தீன் பைகளாகத் தான் இருக்கும்.

ஏனெனில் மிகப்பெரும் கலைகளை போல பாலித்தீன் பைகளும் காலத்தால் அழியாதவை. அதோடு மழை நீரையும் மண்ணுக்குள் போக விடாமல் தடுப்பவை. இவைகளால் நீர், நிலம், காற்று என்ற 3 அடிப்படை கூறுகளுமே மாசுபடுகிறது. எனவே பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை விடுத்து சணல், துணி, காகித பைகளின் பயன்பாட்டைப் பெருக்க வேண்டும்.

இவை எல்லாவற்றையும் விட வேளாண்மையை பாதுகாக்க போதுமான முன் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வேளாண்மையில் இன்று நாம் அதிகளவில் பயன்படுத்தி வரும் உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளை விட்டொழித்து இயற்கை உரங்களையும், மூலிகைச் சாறு பூச்சி விரட்டிகளையும் பயன்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை சேமிக்க வேண்டும். இதனால் நிலத்தின் வளம் பெருகுவதோடு எதிர்கால வேளாண்மையும் பிழைக்கும்.

அவ்வாறில்லாமல் ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் மண்ணில் உயிர் வாழும் பல லட்சம், கோடி நுண்ணுயிர்கள் மடிகின்றன. மண்ணும் உயிரிழக்கிறது. இதனால் மண் வேளாண்மைக்கு சிறப்பாக உதவி செய்ய முடிவதில்லை.


மேலும் வேளாண்மையில் உதவி செய்யும் புழு, பூச்சிகளின் ஆதிக்கமும், நோய்களின் ஆதிக்கமும் அதிகரிக்கிறது.

 

 

இதற்கு மேலும் மேலும் உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இதனால் வேளாண்மைச் செலவு அதிகரிப்பதோடு, விளைச்சலும் குறைகிறது. இதோடு நின்றுவிடாமல் விளைபொருட்களில் நச்சுக்கலந்தே இருக்கிறது. அதை உண்ணும் நாம் பல நோய்களுக்கு ஆளாகிறோம். தேவைதானா இது?

 

புவி வெப்பமடைந்து வருவதற்கு இது மட்டுமில்லாமல் இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொணடே போகலாம். ஆனால் இங்கே கூறியுள்ள அடிப்படைப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டாலே 90 சதவீதம் வரை புவி வெப்பமாதையும் கடல் மட்டம் உயருவதையும் தடுக்க முடியும்.

புவி வெப்பமயமாதலைத் தடுக்கும் பொறுப்பு அரசுகளுக்கு எந்தளவிற்கு உள்ளதோ அதே அளவு பொறுப்பும், கடமையும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உண்டு. நாம் ஒன்று கூடி புவியை காத்தால், புவி நம்மை காக்கும்.

பெரிய. பத்மநாபன்

http://tamilsigaram.com/Linkpages/special/disp.php?MessageId=1437

காற்றில் மாசு-7. பங்களிப்பை கணக்கிடுதல்

பலவிதமான இடங்களில் இருந்து வரும் மாசுக்கள் அனைத்தும் சேர்ந்து காற்றில் மாசின் அளவு கூடுகிறது. எடுத்துக்காட்டாக, கரி அடுப்பில் இருந்து வரும் தூசி, வாகனங்களில் இருந்து வரும் புகை, தொழிற்சாலைகளில் இருந்து வரும் புகை, வீட்டில் இருந்து வரும் தூசி இவை அனைத்தும் சேர்ந்துதான் மொத்த மாசு அதிகரிக்கிறது. இந்த வகை மாசு தோன்றுமிடம் (Pollution Source) ஒவ்வொன்றிலிருந்தும் எவ்வளவு மாசு ஓரிடத்தில் சேர்கிறது என்பதை நாம் கணிக்கலாம்.

அதைத்தவிர, நாம் எவ்வளவு மாசு இருக்கிறது என்பதை அளவிடலாம்(measure). இப்படி அளவிட்ட மாசை நன்கு ஆராய்ந்தால், அது எங்கிருந்து வந்திருக்கிறது என்பதையும் கண்டு பிடிக்கலாம். அதாவது, ”இந்த மாசில் சுமார் 25% வாகனங்களில் இருந்தும், 30% புழுதியில் இருந்தும், 20% தொழிற்சாலைகளில் இருந்தும் வருகின்றன. மீதி எங்கிருந்து என்று அறுதியிட்டு சொல்ல முடியவில்லை” என்ற அளவில் கண்டுபிடிக்கலாம். இது எப்படி என்பதை சில உதாரணங்களின் மூலம் பார்க்கலாம்.

எடுத்துக்காட்டு 1: ஒரு இடத்தில் தொழிற்சாலையில் இருந்து வரும் தூசியில் 25% சோடியமும், 50% இரும்பும் , மீதி 25% மற்ற பொருள்களும் இருக்கலாம். தெருவில் இருக்கும் புழுதியில் 25% அலுமினியமும், 10% இரும்பும் (சிலிக்கன் போல மற்றவை மீதி 65% என்றும்) இருக்கலாம்.

 

 

 

 

 

 

 

மாசு தோன்றுமிடம்

தனிமம்

அளவு

தொழிற்சாலை

சோடியம்

25%

 

இரும்பு

50%

 

இதர தனிமங்கள்

50%

புழுதி தூசி

அலுமினியம்

25%

 

இரும்பு

10%

 

இதர தனிமங்கள்

65%
இங்கு இதர தனிமங்கள் என்பதில் சோடியம், அலுமினியம், இரும்பு ஆகியவை இல்லாமல் மற்ற பொருள்கள் என்று புரிந்து கொள்வோம்.

இப்போது, நாம் அந்த பகுதியில் சென்று அங்குள்ள காற்றில் இருக்கும் தூசிகளை சேகரிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். ஒரு கிராம் தூசி சேர்ந்ததும் அதை ஆராய்ச்சிக்கு அனுப்பி, அதில் இருக்கும் சோடியம், அலுமினியம் மற்றும் இரும்பின் அளவை கண்டுபிடித்து விடுகிறோம். இதில்

 • ஒரு கிராமில், அலுமினியம் 0.25 கிராம், இரும்பு 0.1 கிராம், இதர பொருள்கள் 0.65 கிராம் என்று வந்தால், தூசி முழுவதும் புழுதிதான் என்று சொல்ல முடியும். ஒருவேளை தொழிற்சாலை அன்று வேலை செய்யாமல் இருக்கலாம். அல்லது தொழிற்சாலையில் இருந்து வெளிவரும் புகையில் தூசிகள் வடிகட்டப்பட்டு இருக்கலாம். மொத்தத்தில், தொழிற்சாலையால் காற்றில் தூசிகள் சேர்வதில்லை என்று சொல்ல முடியும்.
 • இன்னொரு நாள் ஒரு கிராம் தூசியில் ஆராய்ச்சி செய்தால், அதில் 0.5 கிராம் இரும்பு, 0.25 கிராம் சோடியம், இதர பொருள்கள் 0.25 கிராம் என்று வந்தால், அங்கு தூசி முழுவதும் தொழிற்சாலையில் இருந்துதான் என்று சொல்லலாம். ஒருவேளை போக்குவரத்து குறைவாக இருப்பதால், காற்று வேகமாக அடிக்காததால், புழுதியானது காற்றில் கலக்காமல் இருக்கலாம். மொத்தத்தில் தொழிற்சாலைதான் காற்றில் மாசு சேர்க்கிறது என்று சொல்லலாம்.
 • ஒரு பேச்சுக்கு, 0.4 கிராம் தொழிற்சாலை தூசியும், 0.6 கிராம் புழுதியும் சேர்ந்து நமது Sample வருவதாக வைத்துக்கொள்வோம்.

  • அப்பொழுது, சோடியத்தின் அளவு 0.4 * 0.25 = 0.1 கிராம் ஆகும்.
  • இரும்பின் அள்வு: தொழிற்சாலை தூசியில் இருந்து, 0.4 * 0.5 = 0.2 கிராம். புழுதியில் இருந்து, 0.6 * 0.1 = 0.06 கிராம். மொத்தத்தில், 0.2 + 0.06 = 0.26 கிராம்.
  • அலுமினியத்தின் அளவு: 0.6 * 0.25 = 0.15 கிராம்.
  • இதர பொருள்கள்: தொழிற்சாலையில் இருந்து, 0.4 * 0.25 = 0.2கிராம். புழுதியில் இருந்து, 0.6 * 0.65 = 0.39 கிராம், மொத்தம் 0.2 + 0.39 = 0.59 கிராம்.


  ஆக மொத்தம் தூசியில், 0.1 கிராம் சோடியம், 0. 26 கிராம் இரும்பு, 015 கிராம் அலுமினியம், இதர பொருள்கள் 0.59 கிராம் என்று இருக்கும். நமக்கு இந்த தூசியில் தொழிற்சாலையின் பங்களிப்பு எவ்வளவு, புழுதியின் பங்களிப்பு எவ்வளவு என்று கணிக்க முடியுமா?

  முடியும். உதாரணமாக, அலுமினியம் தொழிற்சாலை தூசியில் இருந்து வராது. எனவே, 0.15 கிராம் அலுமினியம், புழுதியில் இருந்துதான் வரும். ஒரு கிராம் புழுதியில் இருந்து 0.25 கிராம் அலுமினியம் வரும். எனவே, 0.15 கிராம் அலுமினியம் இருக்கிறது என்றால், 0.6 கிராம் புழுதியில் இருந்துதான் வந்திருக்க வேண்டும்.

  அதைப்போலவே, சோடியம் தொழிற்சாலை தூசியில் இருந்துதான் வரும். புழுதியில் இருந்து வர முடியாது. அதையும் கணக்கிட்டால், 0.4 கிராம் தொழிற்சாலை தூசியாக இருக்கும் என்று கணிக்கலாம்.

  இந்த எடுத்துக்காட்டில் சுலபமாக சொன்னாலும், பல விதமான தனிமங்களை ஆராய்வதன் மூலம், ஓரளவு சரியாக எந்த இடத்திலிருந்து தூசி எவ்வளவு வருகின்றது என்பதை கணிக்க முடியும்.

 • இன்னொருநாள் ஆராய்ச்சி செய்தால் ஒரு கிராம் தூசியில் சோடியம் 0.5 கிராம் வருகிறது. இரும்பு சுத்தமாக கிடையாது. அலுமினியமும் இல்லை. இப்பொழுது என்ன முடிவுக்கு வர முடியும்?

  ஒன்று நாம் செய்த ஆராய்ச்சி தவறு. சோடியம் இருக்கும் பொழுது இரும்பும் இருக்க வேண்டும். இரும்பு கணக்கிடும்பொழுது, ஆராய்ச்சியில் தவறு நடந்து இப்படி வந்திருக்கலாம். அல்லது சோடியம் கணக்கில் தவறு இருக்கலாம்.

  இரண்டாவது, நாம் நினைத்தது, இந்த பகுதியில் தொழிற்சாலை மற்றும் புழுதி மட்டுமே தூசிக்கு காரணம் என்று. ஆனால், வேறு வகை தூசிகளும் இந்த பகுதியில் சேர்ந்து இருக்கலாம். அந்த தூசிகளில் சோடியம் இருந்து, இரும்பு இல்லாவிட்டால், ஆராய்ச்சி சரியாக இருக்கிறது, நம் நினைப்புதான் தவறு, நாம் மறுபடி அந்த பகுதிக்கு சென்று, வேறு என்ன வகையில் தூசிகள் சேரலாம் என்று அறிய வேண்டும்.மேல்கண்ட கணக்கிற்கு Chemical Mass Balance அல்லது சுருக்கமாக சி.எம்.பி.(CMB)என்று பெயர். இது reverse calculation மூலம் ஒவ்வொரு மாசு மூலமும் (pollution source) எவ்வளவு பங்களிக்கிறது என கணக்கிட உதவும்.

காற்றில் மாசு பற்றி இதுவே கடைசி பதிவு. அடுத்து இயற்பியல் சம்பந்தப்பட்ட பதிவுகள் எழுத இருக்கிறேன்.

 

http://fuelcellintamil.blogspot.com/2008/06/7.html