புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 53
பலமுனை நெருக்கடிக்குள்ளான இந்திய-இலங்கை ஒப்பந்தம்
இந்திய-இலங்கை ஒப்பந்தம் குறித்த விவாதம் "தீப்பொறி" செயற்குழுவுக்குள் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் தென்னிலங்கையிலும், வடக்கு-கிழக்குப் பகுதிகளிலும் நிலைமைகள் வேகமாக மாற்றமடைந்து கொண்டிருந்தன.
ராஜீவ் காந்தியினாலும் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவாலும் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த உறுதிபூண்டிருந்த இந்திய அரசு இந்திய அமைதிகாக்கும் படையின் எண்ணிக்கையை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியாக இந்திய இராணுவத்தினரை வடக்கு-கிழக்குப் பிரதேசங்களுக்கு அனுப்பி வைத்த வண்ணம் இருந்தது. பயங்கரவாதிகள் அல்லது பிரிவினைவாதிகள் என அவசரகாலச் சட்டத்தின் கீழ் பல வருடங்களாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கமைய பகுதி பகுதியாக விடுதலை செய்யப்பட்டுக் கொண்டிருந்தனர்
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து வடக்கு கிழக்கில் தோன்றியிருந்த இயல்பு வாழ்க்கையின் காரணமாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களான குமரப்பா (பாலசுந்தரம் இரத்தினபாலன் - வல்வெட்டித்துறை), புலேந்திரன் (குணநாயகம் தருமராசா - பாலையூற்று, திருகோணமலை) உட்பட தமிழீழ விடுதலைப் புலிகளைச் சேர்ந்த பலர் திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர்களான குமரப்பா, புலேந்திரன் ஆகியோரின் திருமண வைபவங்களுக்கு இந்திய அமைதி காப்புப் படை அதிகாரிகள் முக்கிய பிரமுகர்களாகப் பங்கேற்றிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தோற்றத்தின் ஆரம்ப நாட்களிலிருந்து அதன் உறுப்பினர்கள் திருமணம் செய்வது தடை செய்யப்பட்டதொன்றாகவும், மரண தண்டனைக்குரியதொன்றாகவும் இருந்துவந்தது. ஆனால் இந்நிலை 1984ல் இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வேளையில் ஆயுத முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட உண்ணாவிரதப் போராளிகளில் ஒருவரான ஏரம்பு மதிவதனி (புங்குடுதீவு) என்பவரை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் திருமணம் செய்த பின் மாற்றமடைந்து விட்டிருந்தது.
தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட பின் இந்தியாவில் தளமிட்டிருந்த ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் இந்திய-இந்திய ஒப்பந்தத்தையடுத்து வடக்கு-கிழக்குப் பகுதியில் மீண்டும் தமது செயற்பாடுகளை ஆரம்பித்ததை தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஏனைய ஈழவிடுதலைப் போராட்டக் குழுக்களுக்குமிடையிலான முரண்பாடுகளும் அதனையொட்டி தமிழீழ விடுதலைப் புலிகள் ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்க உறுப்பினர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளும் ஆரம்பித்திருந்தன.
ஏனைய விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களை குறிவைத்து தமது பங்குக்குக்கு தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்க உறுப்பினர்கள் மீதான அழித்தொழிப்பானது சில சமயங்களில் வெளிப்படையான படுகொலைகளாகவும், சிலசமயங்களில் நயவஞ்சகத் தன்மை கொண்டதுமானதாக காணப்பட்டிருந்தது.
புளொட்டின் படைத்துறைச் செயலர் கண்ணன், அரசியல் செயலர் வாசுதேவா ஆகியோரைச் மட்டக்களப்பில் சந்தித்துப் பேசுவதற்கென அழைப்பு விடுத்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், சந்திப்புக்குச் சென்று கொண்டிருந்த புளொட் உறுப்பினர்களின் வாகனம் மீது கிரான் சந்தியில் தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்றொழித்திருந்தனர்.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்று இந்தியாவிடம் தமிழ் மக்களின் பாதுகாப்பை ஒப்படைப்பதாக சுதுமலையில் நடைபெற்ற பகிரங்கக் கூட்டத்தில் தெரிவித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை இலங்கை அரசு மீறிச் செயல்படுகின்றதெனக் குற்றம் சாட்டிய வண்ணம் ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட உறுப்பினர்களை அழித்தொழிப்பதில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததன் மூலம் தம்மால் கைச்சாத்திடப்பட்ட, தம்மால் பகிரங்கமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறிச் செயற்பட்டுக் கொண்டிருந்தனர்.
மறுபுறத்தில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறிய செயற்பாடுகளை ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசு கிழக்கு மாகாணத்தில் மேற்கொண்டு வந்தது. இதனால் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிங்களக் குடியிருப்பாளர்களுக்குமிடையிலும் வன்முறை தோற்றம் பெற்று, போர்ச்சூழல் ஏற்பட்டிருந்த அதேவேளை இச்சூழ்நிலை இந்திய அமைதி காக்கும் படையால் தோன்றிவிட்டதொன்று என இருதரப்பும் குற்றம் சாட்டத் தொடங்கியிருந்தனர்.
இலங்கை அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் கிழக்கு மாகாணத்தில் நடப்பவை அனைத்துக்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தமும், இந்திய அமைதி காக்கும் படையும் தான் காரணமென தமது சுட்டுவிரலை இந்தியா மீது நீட்டத் தொடங்கியிருந்தனர். இந்திய-இலங்கை ஒப்பந்தமும் இந்திய அமைதி காக்கும் படையும் இலங்கை அரசாலும், தமிழீழ விடுதலைப் புலிகளாலும் கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளர் திலீபன் (இராசையா பார்த்திபன்- ஊரெழு) ஜந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து நல்லூர் கந்தசாமி கோவில் முன்றலில் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.
1983ல் இலங்கை அரசால் ஏவிவிடப்பட்ட இனஅழிப்பினாலும், இனவன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் 1984ல் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பித்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்குபற்றியவர்களை ஆயுதமுனையில் கடத்திச் சென்று அகிம்சைப் போராட்டத்தை அங்கீகரிக்க மறுத்த தமது செயற்பாட்டை தமிழீழ விடுதலைப் புலிகள் நியாயப்படுத்தியிருந்தனர்.
இதன் மூலம் இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களின் சுதந்திரமான போராட்டத்தையும், அவர்களின் போராடும் உரிமையையும் தமிழீழ விடுதலைப் புலிகள் மறுத்திருந்தனர்.
ஆனால், 1986 பிற்பகுதியில் இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தகவல் தொடர்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதையிட்டு சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன் தனது உண்ணாவிரதத்தை ஒருநாளில் முடிவுக்குக்குக் கொண்டுவந்ததன் பின்னரான சம்பவமாக திலீபனின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் அமைந்திருந்தது.
(சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தலைவர் பிரபாகரன்)
இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தை நிராகரித்திருந்த, அப்போராட்டத்தை அங்கீகரித்த மறுத்த தமிழீழ விடுதலைப் புலிகள் இப்பொழுது அதே போராட்ட வழிமுறையை பின்பற்றத் தொடங்கியிருந்தனர்.
திலீபனின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனும் பிரதித் தலைவர் மாத்தையாவும் (கோபாலசாமி மகேந்திரராஜா) பத்திரிகையாளர்களுடனான சந்திப்புக்களின் போது இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை விமர்சிக்கத் தொடங்கியிருந்தனர். இந்திய அரசுக்கு நெருக்கடியைக் கொடுக்குமுகமாக திலீபனுடைய உண்ணாவிரதப் போராட்டத்தை மையப்படுத்தி மக்களைக் கவர்ந்திழுக்க தம்மாலான அனைத்தையும் மேற்கொண்டனர். திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்தில் எழுச்சிப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டுக் கொண்டிருந்ததுடன் ஒலிபெருக்கிகள் மூலம் உண்ணாவிரதத்திற்கு ஆதரவாக மக்களை அணிதிரளுமாறு அழைப்பு விடுத்துக் கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாணம் குடாநாட்டுக்குள்ளிருந்து மட்டுமின்றி குடாநாட்டுக்கு வெளியிலிருந்தும் திலீபனின் உண்ணாவிரதத்தைப் பார்வையிட மக்கள் அணிதிரண்டதுடன் நவசம சமாசக் கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்காரவும் கூட சமூகமளித்திருந்தார்.
திலீபனின் உண்ணாவிரதப் போராட்டத்துடன் கூடவே இந்திய எதிர்ப்புப் பிரச்சாரமும் இணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்டது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கும், இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் நிலைகொண்டிருப்பதற்கு எதிராகவும் விடுக்கப்படும் ஒரு மிரட்டலாக அல்லது சவாலாக திலீபனது சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டமும் இந்திய எதிர்ப்புக் கோசங்களும் இந்திய அரசால் நோக்கப்பட்டது.
இதனால் இந்திய அதிகாரிகள் புதுடெல்லிக்கும் யாழ்ப்பாணத்துக்கும், கொழும்புக்குமிடையே இராஜதந்திர முயற்சியில் ஈடுபடத் தொடங்கினர். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த சென்னையைச் சேர்ந்த ஜோதின்ரா நாத் டிக்சித்தும், இந்திய அமைதி காப்புப்படை அதிகாரிகளும் யாழ்ப்பாணத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களான பிரபாகரன், மாத்தையா, பாலசிங்கம் (மார்க்கண்டு அன்ரன் ஸ்ரனிஸ்லஸ் பாலசிங்கம் - மட்டக்களப்பு) ஆகியோரை சந்தித்துப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் திலீபனின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் கைவிடும்படி கோரினர்.
இந்திய அரசு இலங்கையில் வடக்கு-கிழக்கு பகுதிகளில் இடைக்கால அரசு ஒன்றை உருவாக்குவதை நோக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதுடன் அதிகாரப் பரவலாக்கம் குறித்துக் கருத்தளவில் உடன்பாட்டையும் எட்டியிருந்தனர்.
வடக்கு-கிழக்குப் பகுதிகளில் இந்திய அமைதி காக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைந்து இந்திய அமைதிகாக்கும் படையினர் குறித்த குற்றச்சாட்டுக்கள் வலுவடைந்து கொண்டிருந்தன.
தென்னிலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன தலைமையிலான இலங்கை அரசுக்கும் ஜனதா விமுக்தி பெரமுனவுக்குமிடையிலான முரண்பாடுகள் கூர்மையடைந்திருந்ததுடன் ஜனதா விமுக்தி பெரமுனவினரின் "துரோகி" ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தனர். இந்திய-இலங்கை ஒப்பந்தத்தையும், இந்திய மேலாதிக்கத்தையும் ஜனதா விமுக்திப் பெரமுன எதிர்ப்பதன் மூலமாக சிங்கள தேசியவாதத்தை முன்னிறுத்தி தமது போராட்டத்தை முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தது.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வினைக் கண்டு சமாதானத்தை ஏற்படுத்துவதே ஒரே நோக்கமென இந்திய அரசால் கூறப்பட்டு இலங்கை மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தம் இலங்கையில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு மாறாக புதிய முரண்பாடுகளையும், மோதல்களையும், போராட்டங்களையும் தோற்றுவித்துவிட்டிருந்ததுடன் முழு இலங்கை மக்களையும் இருண்ட யுகத்தை நோக்கி நகர்த்திச் சென்றுகொண்டிருந்தது.
இந்திய-இலங்கை ஒப்பந்தத்திற்கமைய, தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கையளிப்பதை ஆரம்பித்துவிட்டிருந்த போதிலும், இந்திய அதிகாரிகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையிலான பல பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தும் கூட வடக்கு-கிழக்கு இடைக்கால நிர்வாகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் பெயர்ப் பட்டியல் குறித்த விடயத்தில் இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் இழுபறி நிலையே காணப்பட்டுக் கொண்டிருந்தது.
திலீபனின் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடும்படி இந்திய அதிகாரிகளால் விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்த தமிழீழ விடுதலைப் புலிகள், திலீபன் உண்ணாவிரதத்தில் இறக்க நேர்ந்தால் அதற்கான முழுப்பொறுப்பையும் இந்தியாவே ஏற்கவேண்டும் என கருத்து வெளியிட்டிருந்தனர்.
திலீபனின் உண்ணாவிரதத்தைக் காணவும் அதற்கு ஆதரவளிக்கவும் தினம் தினம் மக்கள் பெருமளவில் திரண்டு கொண்டிருந்தனர். ஆனால் நீர் கூட அருந்தாமல் தொடர்ந்து கொண்டிருந்த உண்ணாவிரதத்தால் திலீபனின் இறுதிநாட்கள் எண்ணப்பட்டுக் கொண்டிருந்தன. இந்திய அரசுக்கும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமைக்குமிடையில் நடைபெற்ற அரசியல் சதுரங்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்டிருந்த ஜந்து அம்சக் கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்த திலீபன் பலிக்கடாவாக்கப்பட்டார்.
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து 12வது நாளில் திலீபன் உயிரிழந்தார்.
திலீபனுடைய உயிரிழப்புக்கு இந்தியாவே காரணம் என தமிழீழ விடுதலைப் புலிகள் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேலும் முடுக்கி விட்டிருந்ததுடன் இந்திய எதிர்ப்புக் கருத்தை மக்கள் மத்தியில் கொண்டு சென்றனர். இதனால் இந்திய அமைதி காக்கும் படைக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் முறுகல் நிலை தோற்றம் பெற்றது.
இத்தகையதொரு நிலையில் பருத்தித்துறைக் கடற்பரப்பில் சென்று கொண்டிருந்த படகையும் அதில் சென்ற 17 தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.
இவர்களில் யாழ் மாவட்டப் பொறுப்பாளர் குமரப்பா, திருகோணமலை மாவட்டப் பொறுப்பாளர் புலேந்திரன் ஆகியோரும் அடங்கியிருந்தனர். இலங்கை அரசு இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை மீறி இந்தியாவிலிருந்து ஆயுதங்களைக் கடத்தி வந்ததாக 17 தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டியதுடன் அவர்கள் அனைவரையும் கொழும்புக்கு கொண்டு சென்று விசாரணை செய்வதற்கான முயற்சியில் இறங்கியது.
இலங்கை அரசின் இந்த முடிவை கடுமையாக எதிர்த்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இந்திய அதிகாரிகள் மூலமாக 17 பேரின் விடுதலையையும் வேண்டி நின்றனர். இலங்கை அரசோ தனது முடிவை மாற்றும் நிலையில் இருக்கவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை தமக்குத் தெரிந்த வழியில் பிரச்சனையை அணுகியது. பலாலி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 பேரையும் சந்திக்க இந்திய அதிகாரிகள் அனுமதி பெற்று அன்ரன் பாலசிங்கம் உட்பட சில புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சென்றிருந்த போது முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 17 பேருக்கும் இரகசியமாக சயனைட் கையளிக்கப்பட்டது.
17 பேரின் கைதையடுத்து இந்தியாவுடனும் இலங்கையுடனும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைக்கு இலகுவான தீர்வு காணப்பட்டிருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளால் வழங்கப்பட்டிருந்த சயனைட்டை உண்டு பலாலி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குமரப்பா, புலேந்திரன் உட்பட 12 தமிழீழ விடுதலைப் புலிகள் உயிர் துறந்தனர்.
(தொடரும்)
20/04/2012
41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41
42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42
43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43
44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44
45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45
46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46
47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47
48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48
49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49
50.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 50
51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 51
52.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 52