சும்மா சொல்லப்படாது, மகிந்தா மகிந்தாதான்..! மகிந்த சிந்தனை மகத்தான சிந்தனைதான்..! முழு உலகமும் சுற்றி நின்று எதிர்த்தாலும், சுழன்று சுழன்று எதிர்த்தாடுகின்றார். சனல் 4-ல் நான் சர்வதேசக்குற்றவாளி என்றால், என் சனல் 5-ஐயைப் பார். அதில் நான் குற்றவாளியென்ற குறிப்பேதுமுண்டோ..? என முறைக்கின்றார்..! முள்ளிவாய்க்காலில் சரணடைய வந்தவர்களை, நாமா சாகடித்தோம்..?
ஆ... கா... அப்படியானால் சரணடைய வந்த பிரபாகரனின் தாய் - தந்தையர், தமிழ்செல்வன் - சூசை ஆகியோரின் மனைவிமார் உட்பட பல்லாயிரக் கணக்கானோரை நாம் ஏன் சாகடிக்கவில்லை..!? போரொன்று வந்தால் போராளிகள் கொல்லப்பட மாட்டார்களோ..? இவர்களும் சரணடைந்த பட்டியலாளர்களா..? இப்போ சொல்லுங்கள், நான் சர்வதேசக் குற்றவாளியா..!? என் கேள்விக்கென்ன பதில்..? என கேள்வி கேட்போரிடம் திமிராக எதிர் (குதர்க்க) வாதம் புரிகின்றார், எம் மகிந்த மாமன்னன். திமிரான இவரும் இவரின் அரசும் குதர்க்கவாதத்துடன் நிற்கமாட்டாது. மாறாக மக்களுக்கு எதிரான மக்கள் விரோத தொடர் நடவடிக்கைகள் தொடரவே இருக்கின்றது. இதற்கு எடுத்துக்காட்டாக பலவற்றை பகிரலாம்...
நாளாந்த ஊடகங்களைப் பார்த்தால் ஐனநாயக விரோத - மனித உரிமை மீறல் சம்பவங்களையே காணமுடிகின்றது. சட்டம் ஒழுங்கை தங்கள் கையில் எடுக்கும் அரச அங்கிடுதத்திகளின் அனுசரணையுடனேயே பல கொலை - கொள்ளை - பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. அண்மையில் கிழக்கு மாகாணத்தில் சமூக சேவையாளரான பட்டானி ராசிக் என்பவர், அமைச்சர்கள் மட்டத்தில் செல்வாக்குமிக்க ஒருவரால் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். அந்த பட்டானி ராசிக்கின் உடலெச்சங்கள் கடந்த வாரம் காவத்தைமுனையில் இருக்கும் வீடொன்றில் தோண்டி எடுக்கப்பட்டு, மட்டக்களப்பு வைத்தியசாலையில் பிரேத மற்றும் மரபணு பரிசோதனைக்காக வைக்கப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இத்தனைக்கும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த - முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், எமது நாட்டின் நீதி மந்திரி..! அவரே இம்முஸ்லிம் சமூகசேவையாளரின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு, அவரின் ஆத்ம சாந்திக்காக ஆண்டவனைப் பிராத்திக்கின்றார். இந்த நீதி அமைச்சரால் கூட..! குறைந்தது தம்சமூகத்திற்காக, அதுவும் ஓர் சமூக சேவையாளனுக்காகக் கூட, சட்டம் - ஒழுங்கைப் பாதுகாத்து, சட்ட நடவடிக்கை கூட எடுக்க முடியாமல், மயானத்தில் ஆண்டவனிடம் கைநீட்டி அழுது மன்றாடுகின்றார்..! பாவம் இந்த மந்திரி. இவரென்ன, இந்நிலைக்குள் அகப்பட்ட எம்நாட்டின் நீதியும் - நியாயமும் - தர்மமும் தங்களை காப்பாற்றுங்களென, தேசிய - சர்வதேச சமூகத்திடம் மன்றாடுகின்றன.
தவிரவும், மகிந்த மக்கள் விரோதம் அண்மைக் காலமாக தனியார் துறையினருக்கான ஓய்வூதியச் சட்டம், பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ முகாம்களில் வழங்கப்படவுள்ள பயிற்சித் திட்டம், தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வில் பாராமுகமாக இருந்து வருவதுபோல், பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பள உயர்வை மறுத்து வருதல். கட்டுநாயக்க தொழிலாளர் போராட்டமும் பொலிசின் மிருகத்தனமான தாக்குதலும் ஆகிய சமகாலப் பிரச்சினைகளில் மகிந்த அரசு தனது அதிகார அராஜகப் போக்கையே கடைப்பிடித்து நிற்கின்றது.
தமிழ்மக்கள் மீதான இனவிரோதம்..!
கடந்த மாதம் தேர்தல் மூலம் தமிழ்மக்களை தோற்கடிக்க முனைந்த மகிந்தப் பேரினவாதத்தை, தமிழர் தாயகத்தில் தமிழ்மக்கள் முற்றாக தோற்கடித்துள்ளனர். பேரினவாத நோக்கில் நீதிமன்றச் செல்வாக்கின் மூலமும், டக்ளஸ் - கருணா - பிள்ளையான் போன்றோர்களின் அனுசரணையுடன் வட - கிழக்கை பிரித்து விட்டோமென உலகிற்கு காட்டியபொழுதிலும், அப்படியல்ல வடகிழக்கு என்றும் எப்பொழுதும் எம் தாயகமேயென தமிழ்மக்கள் இத்தேர்தல் மூலம் நிரூபித்துள்ளார்கள். இதனால் ஆத்திரமடைந்த அரசு எதேச்சதிகாரமாக வடமாநிலத்தில் ஐந்து தேர்தல் தொகுதிகளை இல்லாதாக்க முனைகின்றது. தொகுதி வாரியானதேர்தல் வாக்களிப்பு முறைமையை நீக்கியதன் ஊடாக, விகிதாசாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறையைப் புகுத்தியதன் மூலம் இதைச் செய்ய எத்தனிக்கின்றது. மேலும் தமிழ் மக்களுக்கு எதிரான தொடர் பேரினவாதம், தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு கூடுதலான அதிகாரங்களை வழங்குவது சாத்தியமில்லை எனவும், தற்போதுள்ள அரசியலமைப்புச் சட்டமே இலங்கை மக்கள் அனைவரும் ஒருமித்து வாழப் போதுமானது என்றும் கூறுகின்றது. எம்மிடம் அரசமைப்பு ஒன்று இருக்கின்றது எனவும், அதில் திருத்தங்கள் செய்யவேண்டி இருந்தால், நாமேதான் அதைச் செய்வோமென மிக எளிதாக சொல்கின்றது. இப்போது விடுதலைப் புலிகளும் இல்லை. மாற்றங்கள் செய்யவேண்டிய அவசியம்தான் என்ன..? இதற்கு மேலதிகமான அதிகாரங்கள் வழங்கவேண்டிய தேவை ஏனென அது வினவுகின்றது..!?
எம்நாட்டில் இதையும் இதுபோன்ற இன்னோரன்ன மக்கள் விரோத - சர்வாதிகார நடவடிக்கைகளையும் மிக இலேசாக இந்த அரசால் எப்படிச் செய்யமுடிகின்றது..? நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை, விகிதாசார பிதிநிதித்துவம் கொண்ட பாராளுமன்ற ஆட்சிமுறை, இதற்கூடான கடந்த ஒரு தசாப்தமான மகிந்த குடும்ப ஆட்சியின் கட்டமைப்பு போன்றனவே அவையாகும்.
இதை இல்லாதாக்குவதற்கான பலமான எதிரணி தற்போது எம்நாட்டில் இல்லை. பாராளுமன்ற சந்தர்ப்பவாத இடதுசாரிகள் அரசின் அடிமை குடிமையாகியுள்ளனர். எஞ்சியுள்ளவர்கள் மத்தியில், மக்களுக்கான காலத்தின் தேவை கருதி.., பலமான வெகுஜனப் போராட்ட மார்க்கத்தை முன்னெடுக்கும் மக்கள்சக்தி இல்லை. இதை முன்னெடுக்கும் நோக்கில் குறைந்தபட்ச வேலைத்திட்டமோ, ஐக்கியமோ இவர்களிடம் இருப்பதாகத் தெரியவில்லை..!?
மறு புறத்தில் தமிழ்த் தேசியம் என முழங்கப்படும் மக்கள் போராட்ட மார்க்கமற்ற தமிழ்க் குறுந்தேசியம் என்பது, பாராளுமன்ற மிதவாத பேரம் பேசலுக்கூடாக தன்னை அரசியல் செய்கின்றோம் என்கின்றது. மற்றொன்று இணக்க அரசியலின் அரச - அடிவருடியாகியுள்ளது. அத்துடன் நாடு கடந்ததென்பதுகள் எமது நாட்டின் யதார்த்தம் பற்றி புரியாமல், தனியீழமென சர்வதேசத்தில் தங்களுக்கு சாதகமான - சக்திகளுக்கூடாக காரியம் சாதிக்க (தென்சூடான் போன்று) முயல்கின்றன..!
இதனைவிட, ஈழத் தமிழ் மக்களுக்காகப் போராடுகின்றோம் என்கின்ற தொப்புட்கொடி உறவுகளின் தொல்லைகளோ..! தாங்கொணாத் தொல்லை..!
இன உணர்வாளர்களான,சீமான் (இவருக்கும் பிரபாகரனாக ஆசை) போன்ற சினிமாக்கோமாளிகளின் அர்த்தமற்ற அரசியல் அனர்த்த நடவடிக்கைகள், சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாத உணர்வை மென் மேலும் தூண்டவும், இலங்கை அரசு தொடர்ந்தும் தனது சர்வாதிகார ஆட்சியைத் தக்கவைக்கவும், மகிந்தாவிற்கு பேருதவியாகின்றது. இதை இந்தத் தொல்லையர்கள் உணர்வார்களா..? ஏன் எமது
நாட்டில் மக்கள் நலன் கருதி செய்யப்படவேண்டிய வேலைகளை, செய்யவேண்டியவர்கள் சரியாக உணர்ந்து செய்திருந்தால்..!? சுருங்கச் சொல்லின், உலக மயமாதலில் இன்றைய இலங்கைக்கான நிகழ்ச்சி நிரலாக இவைகளையே நாம் கொள்ளவேண்டும். மாற்றொன்று வரும்வரை இவை சமகாலத்தில் தவிர்க்க முடியாதவையாகவும், ஓர் நீண்டகால நோக்கில் நிரந்தரமற்றதுமாகவே பார்க்கவேண்டும்.
வரலாற்றில்.., திமிரான - மக்கள் விரோத - பாசிச சர்வாதிகார நடவடிக்கைகளை செய்துவிட்டு, இப்படி குதர்க்கவாதம் செய்யும் முதல் மனிதர் எமது நாட்டின் ஜனாதிபதியும் அவரின் அரசுமல்ல. அவரின் அரசிற்கு துணைபோகின்ற ரஸ்ய - சீனாவின் ஜார் மன்னன் - சியாங்கைஜேக் போன்றவர்களின் வழித் தோன்றல்களில் மகிந்தாவும் ஒருவர். அவர்களுக்கு எது நடந்ததோ.!!! இவருக்கும், இவர் அரசிற்கும் அதுவேதான் நியதி. இதற்கு சமகால மத்திய கிழக்கும் ஓர் பக்கச் சாட்சி.
-அகிலன். (முன்னணி இதழ் 3)