Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 52

ரோகண விஜேவீரஇந்திய நலன் என்ற நோக்குநிலையிலிருந்து உருவாக்கப்பட்டு இந்திய அரசின் அழுத்தத்தினால் கைச்சாத்திடப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இலங்கை மீதான இந்திய மேலாதிக்கத்தின் வெளிப்பாடாக அமைந்திருந்தது.

இவ்வொப்பந்தம் இலங்கையின் இறையாண்மையை மீறியதொன்றாக ஜனதா விமுக்தி பெரமுன உட்பட சிங்கள அரசியல்வாதிகளாலும் சிங்கள மக்களாலும் இனம் காணப்பட்டிருந்தது. ஆயுத வழிமுறைகளில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்த, ஜனநாயக அரசியலில் நம்பிக்கையற்ற அல்லது ஜனநாயக அரசியலை வெறுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளிடமும் கூட "இந்திய-இலங்கை ஒப்பந்தம்" குறித்ததான அதிருப்தியைக் காணக் கூடியதாகவிருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளால் தடைசெய்யப்பட்ட பின் தம் பாதுகாப்புக்காக இந்தியாவில் தளமிட்டிருந்த ஈழவிடுதலைப் போராட்டக் குழுக்களின் வடக்குக்-கிழக்குப் பகுதிக்கான வருகையும் அவர்களின் செயற்பாடுகளும் இந்திய இலங்கை ஒப்பந்தத்தையடுத்து ஆரம்பமாகின.

இந்தியாவில் தளமிட்டிருந்த ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் வருகையும் அவர்களின் செயற்பாடுகளையும் தமிழ் மக்களின் ஒரே தலைமை என்ற கோட்பாட்டைக் கொண்டிருந்த, அதன் அடிப்படையில் ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களைத் தடைசெய்து அவ்வியக்க உறுப்பினர்கள் பலரைக் கொன்றொழித்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கவில்லை என்பதுடன் வடக்கு-கிழக்கு தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருந்த தமிழீழ வீடுதலைப் புலிகள் தமது தலைமை கேள்விக்குள்ளாக்கப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டனர்.

ரோகண விஜேவீர (பத்தபென்டி டொன் நந்தஸ்ரீ விஜேவீர) தலைமையிலான ஜனதா விமுக்திப் பெரமுன தென்னிலங்கையில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு எதிராகவும், இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் நிலைகொண்டிருப்பதற்கெதிராகவும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டதன் மூலம் இந்திய அமைதி காக்கும் படையை இலங்கையில் அனுமதித்த இலங்கை அரசுக்கெதிராகவும் மட்டுமின்றி சிறுபான்மை இனங்களின் உரிமைகள் வழங்கப்படுதலுக்கு எதிராகவும் தனது போராட்டத்தை குரூரமாகவும் முழுவீச்சுடனும் ஆரம்பித்திருந்தது.

1971 ம் ஆண்டு இலங்கை அரசுக்கெதிராக ஜனதா விமுக்திப் பெரமுனவால் மேற்கொள்ளப்பட்ட ஆயுதப் புரட்சி தோல்வியில் முடிவுற்றதன் பின் சிறைவைக்கப்பட்டிருந்த அதன் உறுப்பினர்கள் சிறையிலிருந்து விடுதலையானபின் ஆயுதவழிமுறையற்ற ஜனநாயக அரசியலுக்குள் பிரவேசித்திருந்த ஜனதா விமுக்திப் பெரமுனவும் அதன் தலைவர் ரோகண விஜேவீரவும் இந்திய -இலங்கை ஒப்பந்தத்தினால் தோன்றிவிட்டிருந்த புதிய அரசியல் சூழ்நிலையில் மீண்டும் தலைமறைவு இயக்கமாக மாறிவிட்டிருந்ததுடன் ஜனநாயக வழிமுறையிலான அரசியலிலிருந்து ஆயுதம் தாங்கிய அரசியல் வழிமுறைக்கு சென்றுவிட்டிருந்தனர்.

ஆனால் ஜனதா விமுக்தி பெரமுனவின் அரசியல் பார்வைகளும் ஆயுதம் தாங்கிய வழிமுறையும் தமது 1971 இல் தோல்வியில் முடிவடைந்த புரட்சியிலிருந்து பெற்றுக்கொண்ட அனுபவங்களிலிருந்தும், படிப்பினைகளிலிருந்தும் சரியானதொரு பாதையை நோக்கியதாக அல்லாமல் தமது கடந்தகால தவறான போக்குகளை தன்னகத்தே கொண்டிருந்ததுடன் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் நடவடிக்கைகளின் தாக்கத்துக்குட்பட்டவர்களாகவும், ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் பின்பற்றிய தவறான வழிமுறைகளைப் பின்பற்றியவர்களாகவும் காணப்பட்டனர்.

இந்திய -இலங்கை ஒப்பந்தத்தை ஆதரிப்பவர்கள், ஜனநாயகவாதிகள், தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக குரல் கொடுப்பவர்கள் என அனைவரும் ஜனதா விமுக்தி பெரமுனவினரால் ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்யப்பட்டனர். ஜனநாயகரீதியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் உட்பட தமது கருத்துக்கு மாற்றுக்கருத்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரையும் ஜனதா விமுக்தி பெரமுனவினர் தமது எதிரிகளாகவும் இனத்துரோகிகளாகவும் இனம் கண்டனர்.

ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் "துரோகி" ஒழிப்பு அரசியலின் பாதிப்புக்கு அல்லது தாக்கத்திற்கு ஜனதா விமுக்திப் பெரமுனவும் உட்பட்டிருந்தது. ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் ஆரம்பகாலங்களில் ஆரம்பித்துவைக்கப்பட்டு ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய "துரோகி" ஒழிப்பு என்ற புற்றுநோய் இப்பொழுது வடக்கு-கிழக்கு பகுதிகளிலிருந்து தென்னிலங்கைக்கும் பரவியிருந்தது.

இந்திய-இலங்கை ஒப்பந்தம் வடக்கு-கிழக்கில் யுத்தம் நிறுத்தப்பட்ட "அமைதிச்" சூழலை ஏற்படுத்திவிட்டிருந்த அதேவேளை தென்னிலங்கையில் அரசியல் கொந்தளிப்புடன் ஒன்றிணைந்த "துரோகி" ஒழிப்பு அரசியலை ஜனதா விமுக்திப் பெரமுனவினர் பரந்த அளவில் முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்தனர். "ஒரு தேசிய இனத்தை ஒடுக்கும் எந்தவொரு தேசிய இனமும் சுதந்திரமாக இருக்கமுடியாது" என்ற கூற்றானது இலங்கை இனப்பிரச்சனையிலும் தன்னை வெளிப்படுத்தி நிரூபித்து கொண்டிருந்தது.

இந்திய - இலங்கை ஒப்பந்தம் குறித்தும் அவ்வொப்பந்தத்தால் ஈழவிடுதலைப் போராட்ட அரங்கில் தோன்றிவிட்டிருந்த புதிய நிலைமைகள் குறித்தும் தென்னிலங்கையில் மாறிவிட்டிருந்த புதிய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் பேசுவதற்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "தீப்பொறி" செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவென வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் சென்றிருந்தேன்.

யாழ்ப்பாணத்தில் மக்களின் வாழ்வு பெருமளவுக்கு வழமைக்கு திரும்பிக் கொண்டிருந்தது. ஆனாலும் எம்மைப் பொறுத்தவரை தமிழீழ விடுதலைப் புலிகளிலிருந்து எம்மைப் பாதுகாக்க வேண்டி தலைமறைவு வாழ்க்கை தொடர்ந்து கொண்டிருந்தது. குறிப்பாக டொமினிக், ரகுமான் ஜான், போன்றோர் யாழ்ப்பாணத்திலேயே தலைமறைவாக இருந்தவாறு "தீப்பொறி" குழுச் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். வவுனியாவில் தலைமறைவாக இருந்து செயற்பட்டுக் கொண்டிருந்த நான் யாழ்ப்பாணம் வந்திருந்தபோதும் தலைமறைவாக இருக்கவேண்டிய சூழ்நிலையே நிலவியது.

"தீப்பொறி"ச் செயற்குழுக் கூட்டத்தில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை நாம் எப்படி நோக்குவது என்பது குறித்த விவாதம் ஆரம்பமானது. இலங்கை இனப்பிரச்சனையில் இத்தகையதொரு திருப்பம் ஏற்படும் என செயற்குழு உறுப்பினர்களாகிய நாம் எதிர்பார்த்திருக்கவில்லை என்ற போதிலும் மாறிவிட்ட சூழ்நிலையையும், அது இலங்கை இனப்பிரச்சனையிலும் முழு இலங்கையிலும் ஏற்படுத்திவிட்டிருந்த, ஏற்படுத்தப்போகும் மாற்றங்கள் குறித்தும் பேசவேண்டியிருந்தது. இந்திய-இலங்கை ஒப்பந்தம் குறித்து "தீப்பொறி" குழுவின் நிலைப்பாடு என்ன? "இந்திய அமைதி காப்புப் படை"யின் வருகை குறித்து எமது நிலைப்பாடு என்ன? என்பன குறித்தே விவாதத்தின் மையம் அமைந்திருந்தது.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது குறித்த விவாதத்தில், தேசிய இனப்பிரச்சனைக்கு குறைந்தபட்ட தீர்வினை இந்திய-இலங்கை ஒப்பந்தம் கொண்டிருந்த போதிலும், இந்தியாவின் மேலாதிக்க நலன்களை உள்ளடக்கிய, எம்மீது திணிக்கப்பட்டதொரு ஒப்பந்தத்தை நாம் ஆதரிக்க முடியாது என்றும் "இந்திய- அமைதி காக்கும் படை" யை ஒரு ஆக்கிரமிப்பு இராணுவமாகவே பார்க்க முடியும் என்றும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திய-இலங்கை ஒப்பந்தமானது இந்திய மேலாதிக்க நலன்களை அடிப்படையாகக் ஒரு ஒப்பந்தமேதான் என்பது வெளிப்படையானது. இவ்வொப்பந்தம் இந்தியாவால் எம்மீது திணிக்கப்பட்ட ஒப்பந்தம் என்பதிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால் இந்த ஒப்பந்தம் சிறுபான்மை இனங்களின் நலன்களை உள்ளடக்கியதொன்றாகவும், இலங்கையின் தேசிய இனப்பிரச்சனைக்கு குறைந்தபட்ச தீர்வை உள்ளடக்கியதொன்றாகவும் காணப்பட்டது என்றதொரு உண்மையையும் நாம் கண்டு கொள்ளவேண்டியிருந்தது.

இலங்கையின் தேசிய இனப்பிரச்சனையை முழுமையாக எடுத்து நோக்குவோமானால் இன ஒடுக்குமுறைக்கெதிராகப் போராடப் புறப்பட்ட ஈழவிடுதலை இயக்கங்கள் இந்திய அரசினால் வழங்கப்பட்ட இராணுவப் பயிற்சி, இந்திய அதிகாரிகளின் ஆலோசனைகள், இந்திய ஆயுத உதவி என்பனவற்றுடன் வளர்ச்சி பெற்றிருந்தன. ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள் காணப்பட்ட அரசியல் வறுமையும் அதிலிருந்து தோற்றம் பெற்ற அராஜகமும், படுகொலைகளும், பிளவுகளும் மட்டுமின்றி இவை அனைத்துக்கும் மகுடம் வைத்தாற் போல் தமிழீழ விடுதலைப் புலிகள் அனைத்து ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களையும் தடைசெய்து பாசிசப் போக்கில் வளர்ச்சியடைந்திருந்தனர். இலங்கை அரசினால் தொடர்ந்து கொண்டிருந்த இனவொடுக்குமுறையும் அதனால் ஆரம்பிக்கப்பட்ட "ஒப்பரேசன் லிபரேசன்" இராணுவ நடவடிக்கையும் மட்டுமின்றி, பொருளாதாரத் தடைகளும் பொதுமக்களையே பெரிதும் பாதிப்புக்கும் அழிவுக்கும் உள்ளாக்கிக் கொண்டிருந்தது. அனைத்து ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கும் தடைவிதித்து, ஜனநாயகத்திற்காக குரல் கொடுப்பவர்களை அழித்தொழித்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட "ஒப்பரேசன் லிபரேசன்" இராணுவ நடவடிக்கைக்கு முகம் கொடுக்கமுடியாதவர்களாய் பலத்த இழப்புகளுடன் பின்வாங்கிக் கொண்டிருந்தனர். இத்தகையதொரு சூழ்நிலையிலேயே இந்திய-இலங்கை ஒப்பந்தம் எம்மீது திணிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது கேள்வி என்னவெனில் நாம் மிகவும் பலவீனமான ஒரு நிலையில் இருக்கையில் எம்மீது திணிக்கப்பட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து, "இந்திய அமைதி காக்கும் படை" ஆக்கிரமிப்பு இராணுவமாகப் பிரகடனப்படுத்தி அவர்களை வெளியேற்றுவதற்கான ஒரு போர்ப் பிரகடனம் அவசியமானதா என்பதேயாகும்.

"தீப்பொறி" செயற்குழுவில் அங்கம் வகித்த அனைவரும் இந்திய -இலங்கை ஒப்பந்தம் எம்மீது திணிக்கப்பட்டதொன்று என்பதிலும் "இந்திய அமைதி காக்கும் படை" ஒரு ஆக்கிரமிப்பு இராணுவம் என்பதிலும் முழுமையான உடன்பாடு கொண்டவர்களாக இருந்தோம். ஆனால் அன்றைய ஸ்தூலமான நிலைமைகளில் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை - எம்மீது திணிக்கப்பட்டதும், மேலாதிக்கத்தன்மை கொண்டதும், இனப்பிரச்சனைக்கு குறைந்தபட்ச தீர்வைக் கொண்டதுமான ஒப்பந்தத்தை – பயன்படுத்தி அதிலிருந்து முன்னேறுவதா அல்லது இந்திய இலங்கை ஒப்பந்தத்தை நிராகரித்து இந்திய அமைதி காக்கும் படையை ஆக்கிரமிப்புப் படையாக பிரகடனம் செய்து அதற்கெதிராகப் போராடுவதா என்பதில் நாம் மாறுபட்ட கருத்துள்ளவர்களாகக் காணப்பட்டோம்.

இத்தகையதொரு நிலையில் உலகப் புரட்சிகரப் போராட்ட அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்ட படிப்பினைகளின் வெளிச்சத்தில் எமது சொந்தப் போராட்ட சூழ்நிலைகளுக்கேற்ப முடிவுகளை எடுக்கவேண்டியது அவசியமானதொன்றாகவிருந்தது. முதலாவது உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் ருசியாவில் வெற்றிபெற்ற 1917 அக்டோபர் சோவியத் புரட்சியின் போது லெனினினால் தலைமை தாங்கப்பட்ட போல்சிவிக் கட்சி ருசியாவுடன் போரில் ஈடுபட்ட ஜேர்மனியுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தமானது லெனின் தலைமையில் ஒரு புரட்சிகரக் கட்சி எப்படி மதிநுட்பத்துடன் செயற்பட்டது என்பதை எடுத்துக் காட்டியிருந்தது.

சோவியத் புரட்சியை அடுத்து லெனின் தலைமையிலான போல்சிவிக் கட்சி ருசியா போரில் இருந்து வெளியேறுவதாகவும் ஜேர்மனியுடன் சமாதான ஒப்பந்தத்தை கைச்சாத்திட விரும்புவதாகவும் அறிவித்திருந்தது. இந்நேரத்தில் ருசியாவின் மூன்றில் இரண்டு பகுதி நிலப்பரப்பு ஜெர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ருசிய நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதி ஜேர்மனியினால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தபோதும் கூட போல்சிவிக் கட்சி இத்தகையதொரு முடிவுக்கு வந்ததன் காரணத்தை லெனின் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தார். முதலாவதாக, போல்சிவிக் கட்சி தனது கிளர்ச்சியின் போது போரிலிருந்து வெளியேறுவதாக மக்களுக்கு உறுதியளித்திருந்தது. இரண்டாவதாக, வருடக் கணக்காக தொடர்ந்து கொண்டிருந்த போரினால் மக்கள் இனிமேலும் போராட முடியாதவாறு களைப்படைந்து விட்டிருந்ததுடன் சோவியத் இராணுவமும் கூட ஒரு பலம் குன்றிய இராணுவமாக இருந்தது. மூன்றாவதாக, ஜெர்மனியுடனான போரிலிருந்து வெளியேறாவிட்டால் புரட்சி மூலம் புதிதாகத் தோன்றிய தொழிலாளர்-விவசாயிகள் அரசான சோவியத் ஆட்சியை காப்பாற்ற முடியாமல் போய்விடும் என்பதாகும்.

ஆனால் ரொட்ஸ்கியும் அவர் தலைமையிலானவர்களும் ஜெர்மனியுடனான போல்சிவிக் கட்சியின் சமாதான ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்ததுடன் ருசியாவின் மூன்றில் இரண்டு பகுதி நிலப்பரப்பை ஆக்கிரமித்து வைத்திருக்கும் ஜெர்மனியுடன் சமாதான ஒப்பந்தம் செய்வதை விடுத்து சோவியத் அரசு ஜெர்மனியுடன் தொடர்ந்து யுத்தம் செய்ய வேண்டும் என்று வாதாடினர். ஆனால் போல்சிவிக் கட்சியின் முடிவிற்கமைய ஜெர்மனியுடன் சோவியத் அரசு போர்நிறுத்த ஒப்பந்தத்தை செய்ததன் மூலம் தொழிலாளர்-விவசாயிகள் தலைமையிலான சோவியத் அரசைக் காப்பாற்ற முடிந்ததுடன் பலமிக்க சோவியத் இராணுவத்தை கட்டியமைக்கவும் முடிந்தது.

முதலாவது உலகப் போரின் முடிவின் பின் ஜெர்மனியில் தோன்றிய ஜனநாயக ஆட்சி ஜெர்மனியால் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த ருசிய நிலப்பரப்பை ருசியாவிடம் கையளித்தது. ருசிய நிலப்பரப்பை ஆக்கிரமித்திருந்த ஜெர்மனியுடன் போரின்றியே ரத்தம் சிந்தாமலே தனது நிலப்பரப்புக்களை ருசியா மீளப் பெற்றுக் கொண்டது. ஒரு புரட்சிகரக் கட்சியும் அதன் தலைமையும் நெருக்கடியான காலகட்டத்தில் எப்படி விவேகத்துடனும் தொலைநோக்குடனும் செயற்பட்டது என்பதற்கு லெனினினால் தலைமை தாங்கப்பட்ட போல்சிவிக் கட்சியின் முடிவு ஒரு உதாரணம் மட்டுமே. முதலாவது உலகப் போரின் போதான இந்த நிலைமைகளும், சூழ்நிலைகளும், இந்திய-இலங்கை ஒப்பந்த காலகட்ட நிலைமைகளும் சூழ்நிலைகளும் மாறுபட்டவையாக இருந்தபோதும் கூட, ஒரு புரட்சிகரக் கட்சி பிரச்சனைகளை எப்படி தொலைநோக்குடன் மக்களின் நலன், புரட்சியின் நலன் என்ற நோக்கு நிலையில் இருந்து அணுக வேண்டும் என்பதற்கு சிறந்ததொரு உதாரணமாகக் கொள்ள முடியும்.

மக்களின் விடுதலைக்காகப் போராடும் புரட்சியாளர்கள் எனப்படுபவர்கள் உணர்ச்சிகளுக்கும், தனிமனித விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பால் செயற்படுபவர்களாகவும், யதார்த்த நிலைமைகளை மதிப்பீடு செய்து அதிலிருந்து முடிவுகளை வந்தடையக் கூடியவர்களாகவும் இருக்க வேண்டும். இலங்கை நிலவரத்தைப் பொறுத்த வரை, குறிப்பாக வடக்குக்-கிழக்கு பிரதேசத்தைப் பொறுத்தவரை முற்போக்குச் சக்திகள் பலம் குன்றியிருக்கும் ஒரு நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் பாசிசப் போக்கு சமூகத்தின் அனைத்துமட்டங்களிலும் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருக்கையில், வடக்குக்-கிழக்கு மக்கள் இந்திய அமைதி காப்பு படை குறித்த மாயையில் மூழ்கி இருக்கையில் இந்திய- இலங்கை ஒப்பந்தத்தை நிராகரித்து இந்திய அமைதிப்படைக்கெதிராக ஒரு யுத்தத்தை தொடங்குவது பற்றிப் பேசுவது முற்போக்குச் சக்திகளை முளையிலேயே கிள்ளியெறியும் ஒரு நடவடிக்கையாகவே அமைய முடியும்.

இந்திய-இலங்கை ஒப்பந்தத்தினால் கிடைக்கும் இடைவெளியையும், அனுகூலங்களையும் தற்காலிகமாகவேனும் எமக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதும் எம்மைத் தயார்ப்படுத்துவதும் அவசியம் என கருத்து முன் வைத்திருந்தேன். இந்திய- இலங்கை ஒப்பந்தம் குறித்த எமது நிலைப்பாடு என்ன என்பதில் முடிவுகள் எதுவும் இல்லாமலேயே செயற்குழுவுக்குள் விவாதம் தொடர்ந்து கொண்டிருந்தது.

(தொடரும்)

13/04/2012

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41

42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42

43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44

45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45

46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46

47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47

48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48

49.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 49

50.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 50

51.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 51