PJ_11_2007.jpg

நீதிபதிகளை மிரட்டுவதையும், விலைக்கு வாங்குவதையும் வடிக்கையாகக் கொண்ட ஜெயா, நீதிமன்ற அவமதிப்பு பற்றிப் பேசுவது வேஎக்கையானது.

சேது சமுத்திரத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றக் கோரி, தி.மு.க.வும், அதன் தோழமைக் கட்சிகளும் அக்.1 அன்று தமிழகம் தழுவிய அளவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தின. இந்த உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்படாத, ""பந்த்'' ஆக நடந்து முடிந்தது.

 

பொழுது விடிந்து பொழுது போனால், ""தி.மு.க. அரசைக் கலைக்க வேண்டும்'' என அறிக்கை விட்டு, வெறும் வாயை மென்று கொண்டிருந்த ஜெயாவிற்கு இந்த உண்ணாவிரதப் போராட்டம் அவலாக மாறியது. ""தி.மு.க. நடத்தத் திட்டமிட்டிருந்த பந்த் மட்டுமல்ல, இந்த உண்ணாவிரதப் போராட்டமும் நீதிமன்ற அவமதிப்புதான்'' என அறிக்கைவிட்டு, தி.மு.க. அரசிற்கு எதிராக உச்சநீதி மன்ற நீதிபதிகளுக்குக் கொம்பு சீவிவிட்டார், ஜெயா.


நீதிமன்ற அவமதிப்பு தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக மனு செய்யுமாறு அ.தி.மு.க.விற்கு ஆலோசனை வழங்கிய உச்சநீதி மன்ற நீதிபதிகள் அகர்வாலும், நவலேகரும் ""தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமலுக்குக் கொண்டு வருமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டியிருக்கும்'' என அ.தி.மு.க.வின் கொள்கைப்பரப்புச் செயலாளர்களாக மாறிக் கருத்துத் தெரிவித்தனர்.


நீதிமன்ற உத்தரவை மீறியதற்காக தி.மு.க. அரசைக் கலைக்கலாம் என்றால், நீதிபதிகளையும், நீதிமன்ற நடைமுறைகளையும், அதனின் தீர்ப்புகளையும் தனது வீட்டு நாயைவிடக் கேவலமாக நடத்தி வருவதற்காக ஜெயாவைச் சிரச் சேதமே செய்யலாம். ஜெயா, சமயத்திற்கு ஏற்றபடி, மாண்புமிகு நீதிபதிகளை மிரட்டவும் செய்திருக்கிறார்; அவர்களுக்கு பிஸ்கெட்டும் போட்டிருக்கிறார் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. இவையாவும், ராமன் பாலம் போல பதினெழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் நடந்த புனைவு அல்ல; கடந்த பதினைந்து ஆண்டுகளாக நம் கண்முன் நடந்துவரும் உண்மை.
···
ஜெயாவின் முதல் தவணை ஆட்சியின் பொழுது (199196) தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்ததில், 100 கோடி ரூபாய்க்கு மேல் ஜெயா சசி கும்பல் இலஞ்சம் வாங்கியது, ஜெயா பதவியில் இருந்தபொழுதே அம்பலமாகியது. மறைந்த தமிழ்நாடு காங்கிரசுக் கட்சியின் தலைவர் வாழப்பாடி இராமமூர்த்தி இந்த ஊழலை விசாரிக்க தொடுத்த வழக்கில், உயர்நீதி மன்ற நீதிபதி இலட்சுமணன், நிலக்கரியை இறக்குமதி செய்யக்கூடாது என இடைக்காலத் தடை விதித்தார்.


ஜெயா, இந்த இடைக்காலத் தடையை சட்டத்தின் பொந்துகளில் புகுந்து உடனடியாக உடைத்துவிட்டாலும், தனக்கு எதிரான இந்த ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு விடும் என பீதியடைந்து போயிருந்தார்; நீதிபதி இலட்சுமணன் வேறு சில வழக்குகளில் அரசுக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கியிருந்ததால், அவரை மிரட்டிப் பணிய வைப்பது அல்லது வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றுவது அதன் மூலம் வழக்கை இழுத்தடிப்பது என்ற சூழ்ச்சியை மேற்கொண்டது, ஜெயாசசி கும்பல்.


இச்சதியின்படி, நீதிபதி இலட்சுமணனின் மருமகன் மீது கஞ்சா கள்ளச்சாராயம் வியாபாரத்தில் ஈடுபட்டதாக பொய் வழக்கு சோடிக்கப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இது, பொய் வழக்கு என்பது விரைவிலேயே அம்பலமாகி, அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு விட்டாலும், ஜெயா கும்பலின் நோக்கம் நிறைவேறியது. ""நீதிமன்றத்துக்கு வெளியே நடக்கும் சில சம்பவங்கள் தன்னைப் பாதிப்பதாக''க் கூறி, நிலக்கரி இறக்குமதி ஊழல் வழக்கை விசாரிப்பதில் இருந்து நீதிபதி இலட்சுமணன் விலகிக் கொண்டார்.


· 1996இல் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வைத் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றிய தி.மு.க.; ஜெயா மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்களை அமைத்தது. இச்சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டதை எதிர்த்து ஜெயா தொடர்ந்த வழக்கில், அப்பொழுது சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த லிபரான், ""சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது சட்டப்படி செல்லும்'' எனத் தீர்ப்பளித்தார். இதனால் ஆத்திரமடைந்திருந்த ஜெயா, தனது ஆதரவோடு நடந்துவந்த பா.ஜ.க. கூட்டணி அரசில் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி, லிபரானை சென்னை உயர்நீதி மன்றத்தில் இருந்து வேறு மாநிலத்திற்குத் தூக்கியடித்து பழி தீர்த்துக் கொண்டார். ஜெயாவின் பொருளாதாரக் குற்றங்களை விசாரித்து வந்த மற்றொரு நீதிபதி, ஜெயாவின் நிர்பந்தங்களுக்குப் பணிய மறுத்ததால், அசாமுக்கு மாற்றப்பட்டார்.


சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தது செல்லும் என்ற உயர்நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் ஜெயா போட்ட வழக்கில் தீர்ப்புச் சொல்லப்படும் நேரத்தில், ஜெயாவின் ஆதரவோடு நடந்துவந்த ""உத்தமர்'' வாஜ்பாயின் ஆட்சி, ""சிறப்பு நீதிமன்றங்களைக் கலைத்துவிட்டு, ஜெயாவின் வழக்குகளை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மாற்றும்'' உத்திரவைப் போட்டு, ""நீதி''யைப் பலியிட்டு, ஜெயாவைக் காப்பாற்றியது. ஜெயாவின் ஊழல் வழக்குகளை விசாரணை மட்டத்திலேயே நீர்த்துப் போகச் செய்வதற்காக, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில், அ.தி.மு.க.வின் தம்பிதுரை சட்ட மந்திரியாக நியமிக்கப்பட்டிருந்தார்.


· கொடைக்கானல் ""ப்ளஸண்ட் ஸ்டே'' விடுதி ஊழல் வழக்கில், ஜெயாவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்காக கோவை வேளாண் பல்கலைக்கழக மாணவிகளான ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி ஆகிய மூவரும் அ.தி.மு.க. காலிகளால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். 2000ஆம் ஆண்டு நடந்த இந்தக் கொலை குற்றத்திற்கான தீர்ப்பு, ஏழு ஆண்டுகள் கழித்துதான் கிடைத்தது. இந்தத் தாமதத்திற்குக் காரணமே, சட்டத்தையும், நீதியையும் மயிரளவிற்குக் கூட மதிக்காத ஜெயாவின் பாசிசத் திமிர்தான்.


2001இல் நடந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க. வெற்றி பெற்ற பின்பு இந்த வழக்கின் போக்கே தலைகீழாக மாறியது. அ.தி.மு.க. குண்டர்களின் மிரட்டலுக்குப் பயந்து, 22 அரசு சாட்சிகளும், குற்றவாளிகளுக்குச் சாதகமாகப் பல்டியடித்தனர். அ.தி.மு.க. ஆட்சியில் இந்த வழக்கை நடத்த நியமிக்கப்பட்ட கூடுதல் மாவட்ட போலீசு கண்காணிப்பாளரும், சிறப்பு அரசு வழக்குரைஞரும் சாட்சிகள் மிரட்டப்பட்டதற்குத் துணை நின்றனர்.


இதனால் கொல்லப்பட்ட கோகிலவாணியின் தந்தை வீராச்சாமி, இந்த வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார். 2001 இறுதியில் எடுத்துக் கொள்ளப்பட்ட இந்த வழக்கின் விசாரணை, அ.தி.மு.க. அரசின் இழுத்தடிப்புகளால் ஒன்றரை ஆண்டுகள் நடந்தது. ""இவ்வழக்கை சேலத்திற்கு மாற்றியும், சீனிவாசன் என்ற குற்றவியல் வழக்குரைஞரை அரசு வழக்குரைஞராக நியமித்தும்'' சென்னை உயர்நீதி மன்றம் 22.08.03 அன்று தீர்ப்பளித்தது.


எனினும், வழக்குரைஞர் சீனிவாசனுக்கு பணி நியமன உத்தரவு வழங்காமல் இழுத்தடித்ததன் மூலம், சேலம் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணை நடைபெற முடியாமல் முடக்கி வைத்தது, அ.தி.மு.க. அரசு. உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பு வெளியாகி 14 மாதங்கள் ஆன பிறகும் கூட வழக்குரைஞர் சீனிவாசனுக்குப் பணி நியமன உத்தரவு வழங்கப்படாததை எதிர்த்து, கோகிலவாணியின் தந்தை மீண்டும் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.


இந்த வழக்கு விசாரணையின் பொழுது, மூன்று மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட மூல வழக்கைக் குழி தோண்டிப் புதைத்துவிடும் நோக்கத்தோடு, ""மூல வழக்கின் கேஸ் கட்டு காணாமல் போய்விட்டது; அதனை டிச. 2003இலிருந்து தேடிக் கொண்டிருக்கிறோம். புதிதாகக் கேஸ் கட்டுத் தயாரிக்கக் கால அவகாசம் வேண்டும்'' எனக் குண்டைத் தூக்கிப் போட்டது தமிழக அரசு.


இப்படி அ.தி.மு.க.வால் அரசு அதிகாரத்தோடு உருவாக்கப்பட்ட எல்லாத் தடைகளையும் மீறி, அக்கட்சியைச் சேர்ந்த 28 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்ட பிறகும் கூட, ஜெயா ""நீதி''க்குத் தலை வணங்கவில்லை. தண்டிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பங்களுக்குப் பல இலட்ச ரூபாய் கருணைத் தொகை ஏற்பாடு செய்து கொடுத்ததன் மூலம், நீதிமன்றத் தீர்ப்பை எள்ளி நகையாடி விட்டார்.


· தமிழக முதல்வர் என்ற பதவியைப் பயன்படுத்தித் தான் அடித்த கொள்ளையைப் பகிரங்கமாகக் காட்டிக் கொள்ளும்விதமாக, தனது வளர்ப்புப் ""பிராணி'' சுதாகரனின் திருமணத்தை 1995ஆம் ஆண்டின் இறுதியில் நடத்தினார் ஜெயா. அந்தத் திருமணம் தொடர்பாக நடந்து வந்த அதிகார முறைகேடுகளைத் தடுத்து நிறுத்தும்படி கோரி, பல வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். இவ்வழக்கு விசாரணையின்பொழுது, ""வழக்குத் தொடுத்தவர்களுக்கு மட்டுமல்ல, தனக்கே என்ன பாதுகாப்பு?'' என நீதிபதி புலம்பியதில் இருந்தே, நீதிபதிகள் நீதிமன்றங்கள் மீதான ஜெயாவின் "பாசத்தை'ப் புரிந்து கொள்ள முடியும். ""அதிகார முறைகேடுகள் நடந்திருந்தாலும், அவற்றுக்கு முதல்வர் ஜெயா பொறுப்பல்ல'' எனத் தீர்ப்பெழுதி, தனது தோலைப் பாதுகாத்துக் கொண்டார், நீதிபதி.


· டான்சி, நில பேர ஊழல் வழக்கு விசாரணையில் ஜெயாவுக்கு சாதகமாக உயர்உச்சநீதி மன்றங்கள் நடந்து கொண்டதை வைத்துத் தனி ஊழல் புராணமே எழுதலாம். டான்சி நில பேர ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தபொழுது, அவ்வழக்கையே ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார், ஜெயா.


""சந்தை விலையைக் காட்டிலும் நிலத்தின் விலை திட்டமிட்டே குறைக்கப்பட்டது நிரூபிக்கப்பட்டிருந்த போதிலும்; டான்சி நிலத்தை விற்பதற்காக நடத்தப்பட்ட பொது ஏலம் பித்தலாட்டமானது எனத் தெளிவாக்கப்பட்டிருந்த போதிலும்; அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்கள் அவர்கள் பதவியில் இருக்கும் காலத்தில் அரசு சொத்துக்களை வாங்கக் கூடாது என்ற விதிமுறை இருந்த போதிலும், சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி தங்கராசு, ஜெயாவைக் குற்றமற்றவர் எனக் கூறி விடுதலை செய்தார்.


""டான்சி நிலத்தை வாங்கியதில் ஜெயா எவ்வித மோசடியிலும் ஈடுபடவில்லை; மாறாக, வழக்குதான் மோசடியானது'' என்பதுதான் நீதிபதி தங்கராசு அளித்த தீர்ப்பின் சாரம். நீதிபதி தங்கராசு, அ.தி.மு.க.வின் மந்திரி ஒருவரின் சிபாரிசின் பின்னணியில்தான் நீதிபதி பதவியைப் பெற்றார் என்பதும்; டான்சி நிலபேர வழக்கில் தீர்ப்புக் கொடுக்கும் முன் உல்லாசச் சுற்றுலாவாக சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என்பதும் பின்னர் அம்பலமாகியது.


நீதிபதி தங்கராசின் தீர்ப்பை எதிர்த்த வழக்கு உச்சநீதி மன்றத்திற்கு வந்தபொழுது ""தனி நீதிமன்றத்தில் 80 சதவீத அளவு விசாரணை முடிவடைந்துவிட்ட நிலையில், அதில் உயர்நீதி மன்றம் தலையிட்டிருக்க வேண்டாம் என்று நாங்கள் கருதுகிறோம். இது எங்கள் தீர்ப்பு அல்ல; கருத்துதான். உங்கள் கட்சிக்காரர் (ஜெயா) மீண்டும் சிறப்பு நீதிமன்ற விசாரணையைச் சந்திக்க விரும்புகிறாரா?'' எனக் குற்றவாளியிடமே தீர்ப்பைச் சொல்லும் உரிமையை வழங்கினார்கள் நீதிபதிகள்.


டான்சி நில பேர ஊழல் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் தண்டிக்கப் பெற்ற ஜெயா, அத்தண்டனையை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி தினகர், ""டான்சி நிலம், அரசு சொத்தே அல்ல; அரசு ஊழியர், அரசு சொத்தை வாங்கக் கூடாது என்பது நன்னடத்தைக் குறித்த விதிமுறை தானே தவிர, சட்டமல்ல'' எனச் சட்டத்தையே வளைத்து, புதிய விளக்கம் கொடுத்து, ஜெயாவை வழக்கில் இருந்தும், தண்டனையில் இருந்தும் விடுதலை செய்தார். நீதிபதி தங்கராசு தீர்ப்புக்கு முன் சிங்கப்பூர் சென்று வந்தார்; நீதிபதி தினகர் தீர்ப்புக்குப் பின் ஒரு மாத ஓய்வில் போனார்.


நீதிபதி தினகரின் தீர்ப்பை எதிர்த்த வழக்கில், உச்சநீதி மன்றத்தில் நடந்த விசாரணையும், அதனின் தீர்ப்பும் மிகவும் விநோதமாக அமைந்தன. சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் அழைப்பு விடுத்திருந்த ""பந்த்''ஐத் தடை செய்து, ஞாயிற்றுகிழமை கூடி தீர்ப்பு அளித்த உச்சநீதி மன்றம், டான்சி நில பேர வழக்கில் விசாரணை முடிந்த பிறகும், தீர்ப்பு வழங்காமல் 14 மாதங்கள் இழுத்தடித்தது. அதன் பின் வந்த தீர்ப்போ, ஜெயாவின் விடுதலையை உறுதி செய்ததோடு அவரின் மனசாட்சியிடம் மண்டியிட்டது.


""முதல் குற்றவாளியான ஜெயலலிதா குற்றமிழைத்திருக்கிறாரா இல்லையா என்கிற உண்மைக்கு அப்பாற்பட்டு, அவர் தமது மனசாட்சிக்குப் பதில் அளிக்கும் வகையில் பரிகாரம் தேடிக் கொள்ள வேண்டும். எவ்வித நிபந்தனையும் இன்றி டான்சி நிலத்தைத் திருப்பிக் கொடுப்பதே பரிகாரமாக அமையும்'' — இப்படிப்பட்ட தீர்ப்பை எழுதிய வெங்கடராம ரெட்டி, ராஜேந்திரபாபு என்ற இரு நீதிபதிகளுக்கு ஜெயாவிடமிருந்து என்ன பரிகாரம் கிடைத்ததோ, அது அந்த ""ராமனுக்கு''த்தான் தெரியும்!


""டான்சி வழக்கு ஜெயாவைப் பழி வாங்குவதற்காகப் போடப்பட்ட வழக்கு அல்ல;'' ""டான்சி வழக்கில் குற்றம் நடந்திருப்பதற்கான பூர்வாங்க ஆதாரம் (கணூடிட்ச் ஊச்ஞிடிஞு) உள்ளது'' என உயர்உச்சநீதி மன்றங்களே தீர்ப்பளித்துள்ளன. அப்படியிருந்தும், அதே உயர்உச்சநீதி மன்றங்கள், டான்சி நில பேர ஊழல் வழக்கில் இருந்து ஜெயாவை நிரபராதியாக விடுதலை செய்திருப்பதை ""நீதி தேவதையின் மயக்கம்'' எனச் சொல்லலாமா? இல்லை, பார்ப்பன பாசம் எனக் குற்றஞ் சுமத்தலாமா?


· ஜெயாசசிதினகரன் கும்பல் மீது வருமானத்தை மீறி சொத்துக் குவித்துள்ள வழக்கும்; அக்கும்பல் இங்கிலாந்து நாட்டின் தலைநகர் இலண்டன் நகரில் விடுதி வாங்கிய வழக்கும், பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன. இவ்வழக்குகள் தமிழ்நாட்டில் நடந்தால், ஜெயா கும்பல் வழக்கு விசாரணையைச் சீர்குலைத்து விடும் என்ற காரணத்தினால்தான், அண்டை மாநிலத்தில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு நான்கைந்து ஆண்டுகள் ஆகிவிட்டாலும் கூட, ஜெயா கும்பல் சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து கொண்டு, இவ்வழக்ககளை, விசாரணைக் கட்டத்தைத் தாண்டவிடாமல் தில்லுமுல்லுகளில் ஈடுபட்டு வருகின்றது. நீதிமன்றமும், இக்கும்பல் இழுத்த இழுப்புக்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே செல்கிறது.


· ஜெயாவின் அன்புச் சகோதரி சசிகலா மீது 1996ஆம் ஆண்டு தொடுக்கப்பட்ட அந்நியச் செலாவணி மோசடி வழக்கிலும் கூட, கடந்த 11 ஆண்டுகளாக ""விசாரணை''தான் நடந்து வருகிறது. ""சசிகலா, திட்டமிட்டே வழக்கு விசாரணையை தாமதப்படுத்தி வருவதாக'' மைய அரசு உயர் நீதிமன்றத்தில் குறிப்பிட்ட பிறகும், சசிகலாவைக் கண்டிக்கக் கூட நீதிமன்றம் தயாராக இல்லை. மாறாக, சென்னை உயர்நீதி மன்றம், ""இந்த தாமதத்தைக் காரணமாகக் காட்டி, அதன் அடிப்படையில் தன்னை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும்'' என சசிகலா போட்டுள்ள மனுவை விசாரித்து வருகிறது.
மேலும்,


· ஜெயாசசிக்கு வெளிநாட்டில் இருந்து வந்த 2 லட்சம் டாலர் வழக்கு;


·ஜெயா வருமானவரி தாக்கல் செய்யத் தவறிய வழக்கு;


· ஜெ.ஜெ. டி.வி. அந்நியச் செலாவணி மோசடி வழக்கு உள்ளிட்ட பல்வேறு ஊழல் வழக்குகளும், கடந்த 10 ஆண்டுகளாக ""விசாரணை'' என்ற ஊறுகாய் பானைக்குள்ளே சட்டப்பூர்வமாகவே முடக்கி வைக்கப்பட்டுள்ளன. ஜெயாவிற்கும், நீதித்துறைக்கும் இடையேயான உறவை விளங்கிக் கொள்ள இந்த நீதிமன்ற இழுத்தடிப்புகளும், அதிரடி தீர்ப்புகளும் வாசகர்களுக்கு நிச்சயம் உதவும்.


அக்.1 அன்று தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் ""பந்த்'' நடத்தியதாகக் குற்றஞ்சுமத்தி அ.தி.மு.க.வால் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டுள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும், நீதிபதி அகர்வால்தான் விசாரிக்க வேண்டும் என ஜெயா ஒற்றைக் காலில் நின்றுள்ளார். ஜெயாவின் இந்தப் பிடிவாதத்துக்குப் பின்னுள்ள காரணம், ""தமிழக அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தடை செய்து, ஜெயா கொண்டு வந்த டெஸ்மா சட்டத்தை ஆதரித்தும்; ஜெயா மீது தொடரப்பட்ட வருமான வரி வழக்கில் அவருக்குச் சாதகமாகவும் தீர்ப்பளித்தவர் நீதிபதி அகர்வால் (ஆதாரம்: நக்கீரன்: அக்.6, பக்: 56) என்பதுதான்.


ஜெயாவைப் போலவே நீதிபதி அகர்வால் சிந்திக்கிறார் என நீங்கள் கருதினால், உங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பாயக் கூடும்.


இவை எல்லாவற்றுக்கும் மேலாக ""பந்த்''தைத் தடை செய்து நீதிபதிகள் அகர்வாலும், நவலேõகரும் தீர்ப்பு அளித்தவுடனேயே, ""இனி எந்த மாநில அரசும் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்க முடியாது. இந்தத் தீர்ப்பு மூலம் அ.தி.மு.க. புதிய வரலாறு படைத்துள்ளது'' எனப் பெருமையோடு குறிப்பிட்டுள்ளார், ஜெயா. அவர் ஊழல்கிரிமினல் மேர்வழி மட்டுமல்ல; ஜனநாயக விரோத பாசிசக் கும்பலைச் சேர்ந்தவர் என்பதற்கு இதைவிட வேறு ஆதாரமா வேண்டும்?
· ரஹீம்

""உச்சநீதி மன்றமா,
உச்சிக் குடுமி மன்றமா?''


— மனித உரிமை பாதுகாப்பு
மையத்தின் (HRPC) ஆர்ப்பாட்டங்கள்
தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் அறிவித்திருந்த பொது வேலை நிறுத்தத்திற்கு உச்சநீதி மன்றம் விதித்த தடையானது, அதன் அதிகார வரம்பை மீறிய செயலாகும். மேலும், "இராமன் பாலம்' என்ற கட்டுக் கதைக்கு ஆதாரமாக சுப்பிரமணியசாமி காட்டிய வால்மீகி ராமாயணத்தை அடிப்படையாக வைத்து சேது சமுத்திர திட்டத்தை முடக்கிய உச்சநீதி மன்றத்தின் உத்தரவானது, அதன் பார்ப்பன மதவெறி பாசிசத் திமிரையே காட்டுகிறது. பா.ஜ.க.அ.தி.மு.க. ஆகிய கட்சிகள் இராமன் பாலம் பிரச்சினையைக் கிளறி, மதவெறியைத் தூண்டி அரசியல் ஆதாயமடையத் துடிக்கும் முயற்சிக்கு உச்சநீதி மன்ற பார்ப்பன நீதிபதிகள் வெளிப்படையாகவே ஆதரவாக நிற்கின்றனர்.


— இந்த உண்மைகளை விளக்கியும், மக்களின் பெயரைச் சொல்லி போராட்ட உரிமையைத் தடை செய்யும் அதிகாரமும் அருகதையும் உச்சநீதி மன்றத்துக்கு இல்லை என்பதை உணர்த்தியும், உச்சநீதி மன்றத்தின் பார்ப்பனபாசிசத் திமிரை எதிர்த்தும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக் கிளை உச்சநீதி மன்றத்தின் பார்ப்பனபாசிச உத்தரவுகளை அம்பலப்படுத்தி விரிவாக சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டு, அதன் தொடர்ச்சியாக 1.10.07 அன்று காலை 10.30 மணியளவில் மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. விண்ணதிரும் முழக்கங்களுடன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், திராவிடர் கழக சட்டத்துறை மாநில அமைப்பாளரான வழக்குரைஞர் கி.மகேந்திரன், தமிழ்நாடு வழக்கறிஞர் தமிழ்ச் சங்க செயலாளரான மனோகரன், தி.மு.க. வழக்குரைஞர் மோகன்தாஸ், சி.பி.எம். வழக்குரைஞர் பாஸ்கரன் மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் வழக்குரைஞர் கண்டன உரையாற்றினர்.


மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் கடலூர் மாவட்டக் கிளை சார்பில், உச்சநீதி மன்றத்தின் பார்ப்பனபாசிச உத்தரவுகளை அம்பலப்படுத்தி துண்டுப் பிரசுரம் வெளியிட்டு பிரச்சாரம் செய்த இவ்வமைப்பினர், அதன் தொடர்ச்சியாக 6.10.07 அன்று மாலை விருத்தாசலம் பாலக்கரையில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பந்த்க்கு எதிரான உச்சநீதி மன்றத் தடையும் அதற்கான நீதிபதிகளின் கருத்தும் நீதித்துறை சர்வாதிகாரமே என்று முழங்கிய இந்த ஆர்ப்பாட்டத்தில் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரான வழக்குரைஞர் சி.ராஜு, வழக்குரைஞர்கள் வே.அம்பேத்கர், பட்டி சு.முருகன், திருமார்பன் மற்றும் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் திரு.செழியன், சிவனடியார் திரு.ஆறுமுகசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.


ஜனநாயக உரிமைகளையும் மதச்சார்பின்மையையும் பாதுகாக்கவும், பார்ப்பனபாசிசத்தை வீழ்த்தவும் அறைகூவிய இந்த ஆர்ப்பாட்டங்கள், உழைக்கும் மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தின.


பு.ஜ. செய்தியாளர்கள்