இலங்கையில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சம்பள ஒப்பந்த நிபந்தனைகளுக்கு முரணாக தோட்டக் கம்பனிகளால் வேலைவாங்கப்படுவதாகவும் உழைப்பு சுரண்டப்படுவதாகவும் தொடர்ந்தும் குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணமுள்ளன.
இந்த நிலையில், ஹட்டனில் ஷெனன் என்ற தோட்டத்தில் தொழிலாளர்கள் தமது சம்பளத் தொகையை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
ஒரு-நாள் சம்பளத்துக்காக பறிக்க வேண்டிய தேயிலைக் கொழுந்தின் நிறையை 17 கிலோவிலிருந்து 20 கிலோவாக அதிகரித்த தோட்ட நிர்வாகம், அந்த முடிவை தொழிலாளர்களின் சம்மதமின்றி தன்னிச்சையாக எடுத்திருந்ததாகவும் அந்த முடிவு தொழிலாளர்களைப் பாதிக்கும் என்றும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டின.
ஜதொகா செயலர் முரளி ரகுநாதன்
இந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதத்துக்கான சம்பளத் தொகையை வாங்க மறுத்த தொழிலாளர்கள், நியாயமற்ற விதத்தில் சம்பளம் கணிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
இன்று புதன்கிழமை தொழிலாளர்களால் பறிக்கப்பட்ட தேயிலைக் கொழுந்தை நிர்வாகம் ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் தேயிலைக் கொழுந்து வீணாக வீசப்பட்டதாகவும் உள்ளூர் தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் பிரச்சனை ஹட்டன் தொழில் நியாய சபைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலும் தொழிலாளர்களுக்கு இன்னும் தீர்வு கிடைக்கவில்லை என ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் செயலர் முரளி ரகுநாதன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
கடந்த ஆண்டில் தொழிற்சங்கங்களுக்கும் தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திற்குமிடையில் எட்டப்பட்ட சம்பள கூட்டொப்பந்த உடன்படிக்கைக்குப் பின்னர், மலையகத்தின் பல தோட்டங்களில் தொழிலாளர்களின் வேலைச்சுமை அதிகரிக்கப்படுவதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்ததாக ஹட்டனிலுள்ள மனித உரிமைகள் இல்லத்தைச் சேர்ந்த அதிகாரி பிபிசியிடம் தெரிவித்தார்.