Language Selection

புதிய ஜனநாயகம் 2007
PJ_2007 _12.jpg

அமெரிக்க ஆக்கிரமிப்பாளர்களால் ஈராக்கில் இறக்கிவிடப்பட்டுள்ள தனியார் கூலிப்படைகள், ஈராக்கிய மக்களைக் கொலை செய்வதைப் பொழுதுபோக்காகக் கருதுகின்றன.

 

விர்ரென்று ஒலிப்பானை ஒலித்தவாறு ஒரு வாகனம் மக்கள் நெருக்கம் மிகுந்த அந்த வீதியினுள் நுழைகிறது. அது, ஈராக்கினை ஆக்கிரமித்திருக்கும் அமெரிக்கப் படையினருக்கும்,

 அங்கு நிறுவப்பட்டிருக்கும் பொம்மை ஆட்சியாளருக்கும் பாதுகாப்பளிக்க வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள "பிளாக் வாட்டர்ஸ்' என்ற அமெரிக்கக் கூலிப்படை நிறுவனத்தின் வாகனம்.

 

பாக்தாத்தை ஒட்டிய, நெரிசல் மிக்க மன்சூரில் உள்ள நிசௌர் சதுக்கத்தில், பொதுமக்கள் மட்டும் புழங்கக் கூடிய அவ்வீதியில், அந்த வாகனம் நுழைந்ததும் மக்கள் நடமாட்டத்தை நிறுத்தி வைக்க உள்ளூர் போலீசு அவசர அறிவிப்பு செய்கிறது. போலீசின் அறிவிப்பை அடுத்து ஏற்பட்ட களேபரத்தினூடே ஈராக்கியர்களை ஏற்றி வந்த ஒரு பேருந்து தடையைக் கவனிக்காமல் வழக்கமாக நகரத் தொடங்குகிறது. கண்ணிமைக்கும் நேரத்தில் அவ்வாகனம் மீது துப்பாக்கிக் குண்டுகள் சீறிப்பாய்ந்தன. 40 ரவுண்டுகளுக்கும் மேல் சுடப்பட்டன. கையெறி குண்டுகள் வீசப்பட்டன. 17 பேர் கொல்லப்பட்டனர். அந்த வாகனத்தில் வந்தவர்கள் யாரும் அல்கொய்தா தீவிரவாதிகள் அல்லர். ஈராக்கின் சாமானிய மக்கள். அவர்களில் பச்சிளம் குழந்தையும் இளம்பெண்களும் அடங்குவர்.

 

"பிளாக் வாட்டர்ஸ்' எனும் கூலிப்படை துப்பாக்கிச் சூட்டை ஆரம்பித்ததும் வாகனத்தின் கதவைத் திறந்து கொண்டு தரையில் ஊர்ந்தபடி உயிர்பிழைக்க முயன்ற குழந்தைகளும் பெண்களும் குறி வைத்துச் சுடப்பட்டனர். கடந்த செப்டம்பர் 16இல் நிசார் சதுக்கத்தை இரத்தச் சகதியில் மூழ்கடித்த "பிளாக் வாட்டர்ஸ்', இந்த ஆண்டில் மட்டும் 52 துப்பாக்கிச் சூடுகளை நடத்தியுள்ளது. கடந்த இரண்டாண்டுகளில் 195 முறை இது போன்ற மனிதப் படுகொலைகளை ஈராக்கில் நடத்தியுள்ளது.

 

நிசார் சதுக்கக் கொலைவெறியாட்டத்தில் ஈடுபட்ட பிளாக் வாட்டர்ஸ் ஒப்பந்த நிறுவனம் தனது எல்லைக்குள் முடங்கிக் கொள்ள வேண்டுமென்றும், இப்படுகொலைகளில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் ஈராக் அரசு அறிவித்தது. அடுத்த நாலே நாட்களில் அந்நிறுவனம் பழையபடி செயல்படத் தொடங்கி விட்டது. அமெரிக்க நிர்ப்பந்தத்தாலும், அமெரிக்கப் படையினருக்கும் நிகரான சட்டப்பாதுகாப்பு இக்கூலிப்படையினருக்கு இருப்பதாலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை ஏதும் இல்லை.

 

பாக்தாத்தின் இரத்த ஞாயிறு என வர்ணிக்கப்படும் இக்கோரப் படுகொலை நடந்ததையடுத்து நாடெங்கும் கொத்தளிப்பு மிகுந்தவுடன், நடப்பது அமெரிக்காவின் பொம்மை ஆட்சியாகவே இருப்பினும், கொல்லப்பட்ட ஒவ்வொரு நபருக்கும் தலா 32 கோடி ரூபாயை இழப்பீடாகத் தரவேண்டும் என்றும் ஆறு மாதங்களுக்குள் பிளாக் வாட்டர்ஸ் நிறுவனம் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும் என்றும் ஈராக் பிரதமர் நூரி அல் மால்கி நிபந்தனைகளை விதித்துள்ளார். அவரால் இதற்கு மேல் எதனையும் செய்ய முடியாது.

 

அமெரிக்கக் கூட்டுப் படையினருடன் அழைத்து வரப்படும் இதுபோன்ற கூலிப்படை ஒப்பந்த நிறுவனத்தினர் மீது கொலை வழக்கோ, கைதோ செய்ய முடியாதபடிக்கு "ஆணை எண் 17' என அழைக்கப்படும் சட்டம் ஈராக்கில் நடைமுறையில் உள்ளது. 2004இல் பொம்மை அரசை நிறுவ சில நாட்கள் இருந்த நிலையில், அமெரிக்கக் கூலிப்படையினருக்குச் சட்டப்பாதுகாப்பை வழங்குவதற்கென்றே முறைகேடான இந்த ஆணையை அமெரிக்கப் பிரதிநிதி பவுல் பிரீமெர் பிறப்பித்திருந்தார்.

 

சர்வதேச வளர்ச்சிக்கான அமெரிக்க முகமை (யு.எஸ்.எய்டு) எனும் தன்னார்வ நிறுவனத்திற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டுள்ள ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒப்பந்த நிறுவனம் ஒன்று, இப்படுகொலை நடந்த ஒரு மாதத்திற்குள் பொதுமக்கள் பயணம் செய்த கார் ஒன்றினைச் சுட்டு இரண்டு ஈராக்கியப் பெண்களைக் கொன்றுள்ளது.

 

அமெரிக்க பன்னாட்டுப் படையினர் செய்யத் தயங்கும் அபாயகரமான வேலைகளையும், மறுசீரமைப்புப் பணிகளையும் செய்வதற்காக வாடகைக்கு அமர்த்தப்பட்டிருக்கும் செக்யூரிட்டி நிறுவனங்களில் ஒன்றுதான் "பிளாக் வாட்டர்ஸ்'. அமெரிக்க அதிபர் புஷ்சின் குடியரசுக் கட்சிக்குத் தேர்தல் நிதியை அள்ளித் தந்ததற்குக் கைமாறாக, ஈராக்கில் பாதுகாப்பளிக்கும் சேவைக்கான ஒப்பந்தம், தீவிர எவாஞ்சலிகல் கிறிஸ்துவ வலதுசாரியான எரிக் பிரின்ஸ் என்பவருக்குச் சொந்தமான இந்நிறுவனத்திற்குக் கிடைத்தது. ஒசாமா பின்லேடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரி கோபர் பிளாக் இந்நிறுவனத்தின் மேலதிகாரியாக இருப்பதிலிருந்தே இந்நிறுவனத்திற்கு அமெரிக்க அதிகார வர்க்கத்துடனுள்ள நெருக்கத்தைப் புரிந்து கொள்ள முடியும்.

 

சென்ற ஆண்டு இதே பிளாக்வாட்டர்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு சிப்பாய், ஈராக்கின் துணை அதிபரின் பாதுகாவலரை கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின்போது சுட்டுக் கொன்றான். இக்கொலையாளி மீது கைதோ வழக்கோ வராமல் இருக்க கண்ணும் கண்ணும் வைத்தாற்போல அவனை அமெரிக்காவுக்கு பத்திரமாய் அனுப்பி வைத்தனர். கொலையாளி மீது எடுத்த நடவடிக்கை என்னவென்று கேட்டால் "அந்நபரை வேலையை விட்டு நீக்கிவிட்டோமே' என்று திமிராகக் கூறுகிறது, பிளாக் வாட்டர்ஸ். அந்நபர் மீது ஈராக்கிலோ அமெரிக்காவிலோ இன்றுவரை குற்றப் பதிவுகூடச் செய்யப்படவில்லை.

 

மற்றுமொரு சம்பவத்தில் தங்களது வாகனத்துக்கு அருகில் பயணித்த "மாபெரும்' குற்றத்திற்காக ஈராக்கிய கார் ஒட்டுநர் ஒருவரை சுட்டுக் கொன்றுள்ளனர். இவர்களின் கொலைப்பட்டியலோ நீண்ட நெடியது. கடந்த பிப்ரவரி 4ல் ஹனா அல் அமீதி எனும் ஈராக் செய்தியாளர், பிப்ரவரி 7இல் ஈராக் அரசு தொலைக்காட்சியாளர்கள் எனப் பல ஈராக்கியப் பொதுமக்கள் காரணம் ஏதுமின்றிக் கொல்லப்பட்டுள்ளனர்.

 

ஈராக் முழுக்க அமெரிக்கஇங்கிலாந்து ஆக்கிரமிப்புப் படையினருடன், சுமார் 180 ஒப்பந்த நிறுவனங்களின் கூலிப்படையாட்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

பொதுமக்கள் மீது நடத்தி வரும் இப்படுகொலைகளை, "ஒப்பந்த நிறுவனங்கள் தங்கள் கடமையைத்தான் செய்கின்றன' என்றும் "ஈராக்கில் இருக்கும் அசாதாரண சூழலில் ஆட்சியாளரையும், படையினரையும் காக்கும் பொறுப்பு இந்த நிறுவனங்களுக்கு உள்ளது' என்றும் அமெரிக்கா நியாயப்படுத்துகிறது.

 

கூலிப்படையினருக்கு சட்டப்பாதுகாப்பு வழங்கும் "ஆணை எண் 17'ஐ திரும்பப் பெறவேண்டும் என்று பொம்மை ஆட்சியாளர்கள் முதலில் நிபந்தனை விதித்தாலும், அமெரிக்க அரசின் நிர்ப்பந்தத்தால் தற்போது "அதே ஆணையில் உள்ள உட்பிரிவின்படி, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது அமெரிக்கா விரும்பினால் ஆணையை தளர்த்த முடியும். அதனை அமெரிக்கா செய்ய வேண்டும்' என இறைஞ்சும் நிலைக்கு வந்து விட்டது.

 

ஏற்கெனவே நாடு முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ள, 1,35,000 அமெரிக்க சிப்பாய்களை எதிர்த்துப் போரிடும் ஈராக் போராளிகளுக்கு, 1,80,000 பேரைக் கொண்ட கூலிப்படையையும் எதிர்த்து சுதந்திரப் போரை நடத்த வேண்டிய காலக் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

முதலாளித்துவப் பத்திரிக்கைகள் கூட "போரில் கூடத் தனியார்மயத்தை எல்லை மீறி அமெரிக்கா செயல்படுத்துவதாகக்' கண்டிக்கின்றன.

 

இதுவரை ஈராக் விடுதலைப் போரில் அமெரிக்கத் தரப்பில் 3,900 சிப்பாய்கள் கொல்லப்பட்டு, அமெரிக்கா இன்னொரு வியட்நாமை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கையில், ஒப்பந்த அடிப்படையில் போர்முனைக்குச் சென்றுள்ள கூலிப்படையினர்களிலும் 1000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். 12,000 பேருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

 

எத்தனை கூலிப்படைகளை இறக்கினாலும் ஈராக்கில் இருந்து அமெரிக்கா அடித்துத் துரத்தப்படுவது உறுதி. அமெரிக்காவின் நவீன இராணுவத்தை விடவும் கூலிப்படையினரை விடவும், தாய்நாட்டுக்காகப் போராடுபவர்களின் துணிவும் வீரமுமே வலிமையும் ஆற்றலுமிக்கது என்பதே உலகெங்கும் நிரூபிக்கப்பட்டுள்ள உண்மை.


· கவி