Language Selection

செங்கொடி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த ஏழு மாதங்களாக கூடங்குளம் அணு உலையை எதிர்த்து மக்கள் அமைதி வழியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது அனைவரும் அறிந்தது தான்.  இதில் அந்த பகுதிக்கு வெளியில் உள்ள மக்களில் மாற்றுக் கருத்து கொண்டவர்களும் இருக்கிறார்கள் என்பது வேறு விசயம்.

 

கூடங்குளம் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள மக்களில் ஆகப் பெரும்பான்மையினர் அணு உலை அமைவதை தீரத்துடன் எதிர்க்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து ஒன்றுமில்லை. 200 நாட்களுக்கும் மேலாக அவர்கள் தொடர் போராட்டங்களை நடத்திக் கொண்டிருப்பதே அதற்குச் சான்று. அவர்களின் தொடர் போராட்டங்களால் எரிச்சலுற்று காவி, காங்கிரஸ் காலிகள் ஆங்காங்கே போராடுபவர்கள் மீது போலீஸ் உதவியுடன் தாக்குதல் தொடுத்து வருகிறார்கள்.  தற்போது மைய அரசின் உதவியுடன் தமிழ்நாடே அவர்களுடன் போர் தொடுத்திருக்கிறது.  

கடந்த மூன்று நாட்களாக கூடங்குளம் தடத்தில் செல்லும் சாலை வழி போக்குவரத்தை ஒருபுறம் அஞ்சுகிராமத்துடனும் மறுபுறம் உவரியுடனும் நிறுத்தி யாரும் செல்ல முடியாதவாறு தடை செய்திருக்கிறது. கடல் வழியாக யாரும் கடந்து விடக் கூடாது என்பதற்காக கடற்படை கண்காணிப்பு படகை கூடங்குளம் கடற்பகுதியில் நிருத்தியிருக்கிறது. மட்டுமல்லாது, சிறியரக விமானம் ஒன்று வான் வழியாக கண்காணித்து வருகிறது. தமிழக, கேரள காவல் படையினர், மத்திய தொழிற்படைப் பிரிவு, துணை ராணுவப் படையினர், கலவரத் தடுப்புப் பிரிவு, ரிசர்வ் படை உள்ளிட்டு பல்லாயிரக் கணக்கான காவல் துறையினர் அந்தப் பகுதி முழுவதிலும் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.  ராதாபுரம் தாலுகா முழுவதிலும் கடந்த 19ம் தேதி முதல் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர், பால் முதலிய அத்தியாவசிய பொருட்கள் அந்த பகுதி முழுக்க தடை செய்யப்பட்டுள்ளது.  

இத்தனை மாதங்களாக அவர்கள் போராடிக் கொண்டிருந்தபோது அவர்களை மக்களாக மதித்து எதுவும் செய்யவில்லை இந்த அரசுகள். அலோபதி மருத்துவம் குறித்து ஹோமியோபதி மருத்துவர் சான்றிதழ் அளிப்பது போல் ஏரோநாட்டிகல் அரசவை கோமாளிகளைக் கொண்டு அணு உலை பாதுகாப்பானது என்று கொக்கலிக்க வைத்தார்கள். அணு உலையின் பாதுகாப்பு குறித்தா மக்கள் கேள்வி கேள்வி எழுப்பினார்கள்? அணு உலையை இழுத்து மூடு என்றல்லவா கோரினார்கள். மின்சாரம் என்று மினுக்குபவர்களும், முன்னேற்றம் என்று முழங்குபவர்களும் அணு உலையின் பின்னிருக்கும் அரசியல் குறித்தும் அடிமைத்தனம் குறித்தும் எறியப்பட்ட கணைகளுக்கு பதில் கூறும் திராணியற்று முடங்கியிருப்பது ஏன்? பசப்பு வார்த்தைகளால் பாதுகாப்பு என்பவர்கள், அணு விபத்து இழப்பீடு மசோதா ஏன் எனும் கேள்விக்கு விடையின்றி விக்கித்து நிற்பது ஏன்?  

அமைதியாய் போராடும் மக்கள் மீது பாசிச வெறித்தனத்துடன் பாய்ந்திருப்பது ஏன்? அப்படி என்ன நடந்து விட்டது அங்கு? ஏன் இப்படி அறிவிக்கப்படாத போரை தொடுத்திருக்கிறார்கள் அந்தப் பகுதி மீது? அரசின் ஒரு திட்டத்தை எதிர்ப்பதற்கு மக்களுக்கு உரிமையில்லையா? அமைதியாய் உண்ணாவிரதம் இருந்தால் அடக்குமுறை போர் தொடுப்பார்களா? இந்தியா ஜனநாயக நாடு என அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருப்பவர்கள் பதில் கூறலாம். கொஞ்சம் அறிமுகம் இருப்பவர்கள் வடகிழக்கு மாநிலங்களையும், தண்டகாரண்யாவையும் மீள்பார்வை செய்யலாம்.  

சாலைகளை சேதப்படுத்துவதும், முட்கள் கற்களால் தடை ஏற்படுத்துவதும் தான் அமைதிவழி போராட்டமா என்று ஒரு காவல் அதிகாரி நாளிதழ் ஒன்றில் கேட்டிருக்கிறார். கடந்த ஏழு மாதங்களாக அவர்கள் என்ன செய்தார்கள்? நீங்கள் அவர்கள் மீது போர் தொடுத்த பிறகு தானே அவர்கள் சாலைகளை மறித்தார்கள். முன்னணியாளர்களை கைதுசெய்தபிறகு தானே அவர்கள் எதிர்வினை புரிந்தார்கள். ஆயிரக்கணக்கான மக்கள் சூழ அமர்ந்திருக்கும் உதயகுமாரையும் போராட்டக் குழுவினரையும் தனிப்படுத்தி கைது செய்ய முடியாமல் அனைவரையும் கைது செய்யுங்கள் என மக்கள் முழுங்குவதால் ”உங்களை தனியாக எப்படி வெளியே கொண்டு வருவது என்று எங்களுக்குத் தெரியும்” என்று உதயகுமாரின் பள்ளியை இடிக்கிறார்கள். ’யாரோ அடையாளம் தெரியாத நபர்கள்’ என்று ஊடகங்கள் பின்பாட்டு பாடுகின்றன. மக்களோ தாங்கள் நேர்மையானவர்கள் என்பதை இப்போதும் அமைதியின் மூலம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

உண்மையில் சங்கரன் கோவில் இடைத்தேர்தல் முடிவதற்குத்தான் ஜெயா அரசு திட்டங்கள் தீட்டி வைத்து காத்துக் கொண்டிருந்தது. வாக்குப்பதிவு முடிந்த உடனேயே அணு உலை செயல்படத் தொடங்கும் எனும் அறிவிப்புடன் அதிரடியைத் தொடங்கியது. எந்த அறிவிப்பும் செய்யாமல், எந்த காரணமும் கூறாமல் திடீரென போராட்டக்குழு முன்னணியாளர்களை கைது செய்தது. எங்கு வைத்திருக்கிறார்கள் என்பதை யாருக்கும் தெரிவிக்காமல் மறைத்தது. மாணவர்கள் +2 பொதுத் தேர்வு எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும் அலட்சியம் செய்து போக்குவரத்தை நிறுத்தியது. கூட்டப்புளியில் இருந்து இடிந்தகரைக்கு சாலை வழியே செல்ல முயன்ற பெண்கள் சிறுவர்கள் உட்பட 178 பேரை கைது செய்தது. உதயகுமாரை தனிமைப்படுத்தி கைது செய்ய பேச்சுவார்த்தைக்கு அழைப்பது போல் மாவட்ட ஆட்சித் தலைவர் மூலம் அழைத்தார்கள். அரசின் புரட்டுத் தனங்களை உணர்ந்த போராட்டக் குழுவினரும் மக்களும் இடிந்தகரையில் குவியத் தொடங்கினார்கள். உதயகுமாரை கைது செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர எந்த எல்லைக்கும் செல்லத் தயாராய் இருக்கிறது காவல் துறை. அரசின் அடாவடிகளை முறியடித்து போராட்டத்தைக் காப்பாற்ற தங்களை இழக்கவும் தயாராக இருக்கிறார்கள் மக்கள்.  

நாற்புறங்களிலிருந்தும் முப்படைகளாலும் சூழப்பட்டிருக்கும் இந்த நிலை ஈராக் மீது அமெரிக்கா தொடுத்த போருக்கு சமமானது. பேரழிவு ஆயுதங்கள் எனும் அமெரிக்காவின் கழிவை ஆய்வுகளாக வெளியிட்ட ஊடகங்களைப் போலவே, மக்கள் காவல்துறைக்கு எதிராக வன்முறைக்கான தயாரிப்புடன் இருக்கிறார்கள் என்றும், வெடிகுண்டு தயாரிக்கிறார்கள் என்றும் ஊடகங்கள் செய்தி பரப்புகின்றன. பொருளாதாரத் தடை, எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை, மருந்துப் பொருட்களுக்குத் தடை என்று பல்வேறு தடைகளை விதித்து ஈராக்கை நிலை குலையச் செய்தது போல் தண்ணீர், மின்சாரம், பால் உள்ளிட்ட இன்றியமையாத பொருட்களைக் கூட மக்களுக்கு கிடைக்கவிடாமல் தடுத்து வருகிறது காவல் துறையின் முற்றுகை. அண்மையில் கிடைத்த செய்தியின்படி நிறைமாதமாக தாய்மையடைந்திருக்கும் பெண்ணைக் கூட வெளியில் கொண்டு செல்ல அனுமதி மறுத்திருக்கிறார்கள். இப்போது உள்ளே நுழையப் போகிறார்கள், இதோ நுழைந்து விட்டார்கள் என்று செய்திகளைப் பரப்பி போராடிக் கொண்டிருக்கும் மக்களை உளவியல் ரீதியாக சோர்வுக்கும் விரக்திக்கும் தள்ள முயன்று கொண்டிருக்கிறார்கள். குண்டு போட்டு கொன்று குவிக்க வேண்டியது மட்டும் தான் மிச்சம்.

ஒருவிதத்தில் இந்த பாசிச அரசுக்கு நாம் நன்றி கூற வேண்டும். புரட்சிகர இடதுசாரி இயக்கங்கள் பல மாதங்களாக தமிழகமெங்கும் பரப்புரை செய்தும்,  பொது நிகழ்ச்சிகள் நடத்தியும் மக்களுக்கு புரியவைக்க முயன்றன. ஆனாலும் மக்களில் ஒரு பகுதியினர், அது தம்மையும் உள்ளடக்கிய போராட்டம் என்பதை உணராமல், முன்னேற்றம், மின்சாரம் என்றெல்லாம் பதவுரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். பொட்டில் அடித்தாற்போல் அவர்களை யோசிக்க வைத்திருக்கிறது அரசின் இந்த அடாவடிகள்.  மறுபுறம் நேற்று வரை எப்படியேனும் அணு உலை திறக்கப்பட்டாக வேண்டும் என்று கூறிக் கொண்டிருந்த போலி கம்யூனிஸ்டுகள் உட்பட்ட அனைத்து ஓட்டுக் கட்சிகளும் இப்போது போலிசை விலக்க வேண்டும் என்று ஒப்புக்கு ஒப்பாரி வைக்கின்றன. ஆனால் புரட்சிகர இயக்கங்களோ தமிழகமெங்கும் இதை மக்களிடம் எடுத்துச் சென்று போராட ஆயத்தம் செய்து வருகின்றன.  

கூடங்குளம் அணு உலை மட்டுமல்ல, விவசாயம், நெசவு, சிறுவணிகம் என அனைத்து துறைகளிலும் மக்களைப் பற்றி கிஞ்சிற்றும் கவலைப்படாமல் அரசுகள் செய்யும் அடாவடிகள் அனைத்து மக்களின் வாழ்வாதாரங்கள் மீதும் தங்கள் கதிர்வீச்சை ஊடுருவச் செய்திருக்கின்றன. அவை மக்களின் முதுகை ஒடித்து அடிமைகளாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்தப் போராட்டம் கூடங்குளம் பகுதி மக்களுக்கான கதிர்வீச்சு பயம் மட்டுமல்ல, அது எல்லோருக்குமான சிதைவின் ஓர் அடையாளம். தமிழக மக்களே எழுங்கள். நியாயமான அந்தப் போராட்டம் நசுக்கப்பட்டுவிடாமல் காக்கும் கடமை நமக்கு இருக்கிறது.  போராடும் மக்களை நசுக்கினால் தமிழ்நாடே கூடங்குளமாய், இடிந்தகரையாய் மாறும் என்பதைக் காட்டுவோம்.


முதற்பதிவு: செங்கொடி