Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 49

கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதல்

வவுனியாவில் "தீப்பொறி" குழுவின் செயற்பாடுகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தன.

எம்முடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் குழுக்களாக உருவாக்கப்பட்டு அரசியல்ரீதியில் வளர்வதை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த வேளை வவுனியா தம்பி "தீப்பொறி" குழு செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொள்வதாகவும், ஆனால் தன்னாலான அனைத்து உதவிகளையும் ஆதரவையும் எமக்கு தொடர்ந்தும் வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தமது பிடியை இறுக்கமாக்கிவிட்டிருந்த போதும் வவுனியாவில் நிலைமைகள் சற்று மாறுபட்டதாகவே காணப்பட்டன. இதனால் எமது செயற்பாடுகளை வவுனியாவில் பலப்படுத்துவதை நோக்கியதாக அமைந்திருந்தன. தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் சிறீசபாரத்தினத்தினால் எமக்கு பாதுகாப்புக்கென வழங்கப்பட்ட ஆயுதங்கள் உட்பட, தமிழீழ விடுதலை இயக்க அழிப்பின் பின்நாட்களில் அவ் அமைப்பில் செயற்பட்டவர்களிடமிருந்து எம்மால் பணம் கொடுத்து வாங்கப்பட்ட ஆயுதங்களையும் வவுனியாவிற்கு எடுத்துச் செல்வதற்கு முடிவு செய்தோம். வண்ணன், கபிலன், சண்முகநாதன், தர்மலிங்கம் ஆகியோருடன் நானும் இணைந்து எம்மிடமிருந்த ஆயுதங்களை காட்டுப்பாதை வழியாக வவுனியாவுக்கு எடுத்துச் சென்றோம். அன்றைய காலகட்டத்தில் இலங்கை அரசபடைகளினதும் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் கண்களில் படாமல் காட்டுப்பாதைகள் வழியாக வவுனியா சென்று வருவது கூட மிகவும் கடினமானதொன்றாகவும், ஆபத்து நிறைந்ததொன்றாகவுமே இருந்து வந்தது.

யாழ்ப்பாணத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்த செயற்குழு உறுப்பினர்களுக்கு வவுனியாவில் எமது செயற்பாடுகள் குறித்து தெரிவிப்பதற்காக வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வந்திருந்த நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்றிருந்தேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்த போதும் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் ஜனநாயக மறுப்பும், ஈழவிடுதலைப் போராட்டத்தின் பேரால் மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் அராஜகமும், இவை அனைத்துக்கும் எதிராகப் போராடவேண்டும் என்ற வேட்கையும் முற்போக்கு, ஜனநாயகச் சிந்தனை கொண்ட மாணவர்கள் மத்தியில் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது.

பல்கலைக்கழகக் கல்வியைத் துறந்து ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களுடன் இணைந்து முழுநேரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்கள் பலர் மீண்டும் பல்கலைக்கழக வளாகத்துக்குள் தமது நிறைவேறாத கனவுகளுடனும் விடைபகர முடியாத கேள்விகளுடனும் காணப்பட்டனர். இன ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டத்துக்கென அணிதிரண்ட போராளிகளும், மக்களும் எந்த ஜனநாயக உரிமைகளுக்காக போராட முன்வந்தார்களோ, அந்த ஜனநாயக உரிமைகள் இப்பொழுது ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களால் மறுக்கப்பட்டு அராஜகமும், கொலைகளுமே ஈழவிடுதலைப் போராட்டம் என்ற பெயரில் எஞ்சியிருப்பதையும், ஈழவிடுதலைப் போராட்ட இயக்கத் தலைமைகள் தம்மை மட்டுமல்லாது ஈழவிடுதலைப் போராட்டத்தையே தமது குறுகிய நலன்களுக்காக பலியிட்டுவிட்டதையும் எண்ணியவர்களாக அடக்கிக் கொள்ள முடியாத உணர்வலைகளை வெளியிட்டுக் கொண்டிருந்தனர்.

புளொட்டின் மகளிர் அமைப்பில் செயற்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களான நந்தா, வனிதா(சாந்தி) ஆகியோரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் சந்திக்க நேர்ந்தது. நாம் புளொட்டிலிருந்து வெளியேறியதிலிருந்து நந்தா, வனிதா(சாந்தி) உட்பட புளொட்டில் முன்னணியில் செயற்பட்டுக் கொண்டிருந்த பலருடன் எமக்கு ஆரோக்கியமான உறவு இருந்திருக்கவில்லை. புளொட்டின் தலைமையால் மகளிர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலரும், மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சிலரும் எமது நடவடிக்கைகளைக் கண்காணிக்க அமர்த்தப்பட்டதும், நாம் புளொட்டிலிருந்து வெளியேறிய பின் எம்மை கொன்றொழிப்பதற்கு புளொட் அராஜகவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளை கேள்விக்குள்ளாக்காமையுமே எமக்கிடையில் ஆரோக்கியமான உறவு இல்லாமைக்கு காரணமாய் அமைந்திருந்தது.

ஆனால் நந்தாவும் வனிதாவும்(சாந்தி) இப்பொழுது என்னிடம் மனம்திறந்து பேசத் தொடங்கினர். புளொட்டிலிருந்து வெளியேறிய எம்மைப்பற்றி தவறான தகவல்களை வழங்கி புளொட்டின் தலைமையால் தாம் தவறாக வழிநடத்தப்பட்டுவிட்டதாக நந்தாவும், வனிதாவும் (சாந்தி) தெரிவித்தனர். புளொட்டின் தலைமையினால் வழங்கப்பட்ட தவறான தகவல்களால் தாம் இழைத்த தவறுகளுக்காக மனம் வருந்துவதாக தெரிவித்திருந்தனர். புளொட்டின் தளமாநாட்டின் பின்னான காலப்பகுதியில் புளொட்டில் அங்கம் வகித்த பலர் தமது தவறுகள் குறித்து பல்வேறு நியாயப்படுத்தல்களை முன்வைத்துக் கொண்டிருந்த வேளையில் நந்தாவும், வனிதாவும்(சாந்தி) தாம் இழைத்த தவறுகளை தவறுகளென்று வெளிப்படையாக எடுத்துக் கூறியிருந்ததுடன் அத்தவறுகளுக்காக வருத்தம் தெரிவித்திருந்ததன் மூலம் தமது அரசியல் நேர்மையை வெளிப்படுத்தியிருந்தனர். ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் செயற்பாடுகள் மீதான வெறுப்பும், விரக்தியும், அவநம்பிக்கையுமே அவர்களின் பேச்சின் சாரமாக அமைந்திருந்தது. நந்தா, வனிதா(சாந்தி) மட்டுமின்றி புளொட்டுடன் இணைந்து இனஒடுக்குமுறைக்கெதிராகவும், பெண்களின் உரிமைகளுககாகவும் போராடிய நூற்றுக்கணக்கான பெண்கள் இதே நிலையை வந்தடைந்திருந்ததுடன் செல்லும் திசை அறியாதவர்களாக நின்றனர்.

"தீப்பொறி" செயற்குழுவின் பெரும்பான்மை அங்கத்தவர்களின் முடிவின்படி தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளர் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீது யாழ்ப்பாண நகரில் வைத்து இரவுநேரத்தில் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது. இக் கைக்குண்டுத் தாக்குதல் கிட்டுவை கொலை செய்வதை நோக்கமாகக் கொண்டு நடத்தப்பட்டிருந்த போதிலும், குண்டுத் தாக்குதலில் கிட்டுவின் இரு மெய்ப்பாதுகாவலர்கள் உயிரிழந்த அதேவேளை கிட்டு தனது ஒரு காலை மட்டும் இழந்து உயிர் தப்பியிருந்தார்.

(யாழ்ப்பாண மாவட்டப் பொறுப்பாளர் கிட்டு -சதாசிவம் கிருஸ்ணகுமார்)

ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களை தொடர்ச்சியாக அழித்து, ஈழவிடுதலைப் போராளிகளை கோரத்தனமாகக் கொன்றொழித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவப் பொறுப்பாளர் கிட்டு மீதான கைக்குண்டுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருந்தது. "காற்றுக் கூடப் புகமுடியாத" இடங்களிலெல்லாம் உளவறிவதில் "வல்லமை" மிக்க தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவுத்துறைக்கு இத்தாக்குதலை யார் நடத்தினார்கள் என்பது தான் கேள்வியாக இருந்ததே தவிர அதற்கான பதில் அவர்களிடம் இருந்திருக்கவில்லை.

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் அழிப்பின் பின்னர் கிட்டு(சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் மீதே தமிழீழ விடுதலைப் புலிகள் சந்தேகம் கொண்டிருந்தனர். இதனால் கிட்டுவின்(சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் முகமாக தமிழீழ விடுதலைப் புலிகளால் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அழிப்பு நடவடிக்கையின் போது கைதுசெய்து நல்லூர் கோவில் வீதியில் அமைந்திருந்த "கந்தன் கருணை" என்ற வீட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 50க்கு மேற்பட்ட ஏதுமறியா அப்பாவி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட பலர் அன்றிரவே தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவரான அருணாவால் (செல்வசாமி செல்வகுமார்) சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

 

(இடது பக்கத்திலிருப்பவர் - அருணா - செல்வசாமி செல்வகுமார்)

இதன் தொடர்ச்சியாக அன்றிரவு யாழ் இந்து மகளீர் கல்லூரிக்கருகில் அமைந்திருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட பலரும், நாவலர் வீதியில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட பலரும், கொலைவெறியில் அலைந்து திரிந்த அருணாவின்(செல்வசாமி செல்வகுமார்) M16 துப்பாக்கிக்குப் பலியாகினர். மேலும் யாழ்ப்பாண குடாநாட்டில் பல இடங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி போராளிகள் உட்பட பலரும் கிட்டு(சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீது கைக்குண்டு எறிந்த சம்பவத்தினால் ஆத்திரமுற்ற தமிழீழ விடுதலைப் புலிகளால் பலியெடுக்கப்பட்டனர்.

ஜூலை 1983 தமிழீழ விடுதலைப் புலிகளால் இலங்கை இராணுவத்தினரைக் குறிவைத்து திருநெல்வேலியில் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடித் தாக்குதலில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டதையடுத்து இலங்கைத் தீவு முழுவதும் தமிழ்மக்கள் மீதும் இனஅழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதுடன் வெலிக்கடைச்சிறையில் அரசியற் கைதிகளாக இருந்த டாக்டர் சோமசுந்தரம் இராஜசுந்தரம், தங்கத்துரை(நடராஜா தங்கவேல்), குட்டிமணி(செல்வராஜா யோகச்சந்திரன்), ஜெகன்(ஜெகநாதன்), தேவன்(செல்லத்துரை சிவசுப்பிரமணியம்), அரபாத், கந்தையா ராஜேந்திரன் (றொபேர்ட்), சின்னராசா, நடேசுதாஸ், சிவபாதம், குமார், ஸ்ரீகுமார், மரியாம்பிள்ளை, குமரகுலசிங்கம் உட்பட 50க்கு மேற்பட்ட அரசியற் கைதிகள் ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசினால் கூலிக்கமர்த்தப்பட்ட கொனவெல சுனில் தலைமையிலான காடையர்களால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தனர்.

ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சி அரசின் சிறுபான்மை இனங்கள் மீதான அணுகுமுறையை இப்படுகொலைகள் உலகுக்குக் எடுத்துக் காட்டி நின்றதுடன் இரத்தக்கறை படிந்த "வெலிக்கடைப் படுகொலை" என வரலாற்றில் இடம் பெற்றிருந்தது மட்டுமல்லாமல் ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சி அரசின் கோரமுகத்தையும் வெளிக்காட்டியிருந்தது. ஆனால் இப்பொழுதோ கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதலுக்கு பழிவாங்கும் முகமாக ஜே. ஆர். ஜெயவர்த்தன தலைமையிலான பேரினவாத ஐக்கிய தேசியக் கட்சி அரசின் பாணியில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் அவர்களின் தடுப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஏதுமறியாத ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிப் போராளிகள் உட்பட பலர் கொன்றொழிக்கப்பட்டதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் வெலிக்கடைப் படுகொலையை ஒத்த "கந்தன் கருணைப் படுகொலை" என்றொரு இரத்தக்கறை படிந்த வரலாற்றை உருவாக்கி விட்டிருந்தனர்.

கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) மீதான கைக்குண்டுத் தாக்குதலையடுத்து தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மால் தடைசெய்யப்பட்ட அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் செயற்பட்ட உறுப்பினர்கள் மீதும் மற்றும் எம்மைப் போன்று செயற்பட்டுக் கொண்டிருந்த சிறிய ஈழ விடுதலைப் போராட்ட அரசியற் குழுக்கள் மீதும் தமது கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தியிருந்தனர்.

"தீப்பொறி" செயற்குழுவின் முடிவிற்கமைய தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜனநாயக விரோத, பாசிசப் போக்கைக் கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகளின் இத்தகைய போக்குகளுக்கெதிராக மக்களைப் போராடுமாறும் கோரும் துண்டுப்பிரசுரங்களை வெளிக்கொணர்வதற்கான செயற்பாடுகள் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. இதற்காக றோனியோ இயந்திரம் ஒன்றை வாங்கியிருந்த நாம் எம்மால் எழுதி றோனியோ செய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்களை தமிழீழ விடுதலைப் புலிகளின் கண்களில் நாம் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக இரவுவேளைகளில் எடுத்துச் சென்று யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், யாழ்ப்பாண நகரின் பிரதான இடங்களிலும் விட்டுச் சென்றதன் மூலம் மக்கள் மத்தியில் கிடைக்க வகை செய்தோம்.

யாழ்ப்பாணம் சென்றிருந்த நான் மீண்டும் வவுனியா சென்றிருந்த போது எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்த வண்ணனின் வீட்டில் சுனிமெல் என்ற தோழர் தங்க வைக்கப்பட்டிருந்தார். புளொட்டின் செயற்பாடுகளுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் தடை விதிக்கப்பட்டதன் பின்னரான காலப் பகுதியில் புளொட்டுடன் இணைந்திருந்த சிங்கள முற்போக்கு சக்திகள் (குறிப்பாக இளைஞர்கள்) சிலர் இந்தியா வழியாக மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றிருந்த அதேவேளை சிலர் இலங்கை அரசால் கைது செய்யப்பட நேரும் என்ற போதிலும் தென்னிலங்கைக்குச் சென்றிருந்தனர்.

ஆனால், பேராதனைப் பலகலைக்கழக பொறியியல் பீட மாணவனான சுனிமெல் தனக்கு ஏற்கனவே அறிமுகமாகியிருந்தவரும், வவுனியாவில் எம்முடன் செயற்பட்டுக் கொண்டிருந்தவருமான யோகன் என்பவரைத் தொடர்பு கொண்டு தென்னிலங்கைக்குச் செல்வதில் தனக்கு இருக்கும் பாதுகாப்புப் பிரச்னையை எடுத்துரைத்ததோடு எம்மால் தனக்குப் பாதுகாப்பு அளிக்க முடியுமா என்றும் கேட்டிருந்தார். இதனையடுத்து வண்ணன், கபிலன், தவராசா, யோகன் ஆகியோருடன் சுனிமெல்லின் சந்திப்பு இடம் பெற்றிருந்தது. இலங்கையின் இனவாத அரசுக்கெதிரான சிறுபான்மை இன மக்களின் நியாயமான போராட்டத்தை அங்கீகரித்து புளொட்டுடன் தன்னை இணைத்துக் கொண்டிருந்த சுனிமெல் போன்ற சிங்கள முற்போக்கு சக்திகளை பாதுகாக்க வேண்டியது எமது கடமைகளில் ஒன்று என்று எண்ணிய வண்ணன், கபிலன், தவராசா, யோகன் ஆகியோர் சுனிமெல்லுக்கு வண்ணனின் வீட்டில் பாதுகாப்பளிக்க முன்வந்திருந்தனர்.

இலங்கை அரச படைகளால் மட்டுமல்லாமல் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் கூட சுனிமெல்லுக்கு ஆபத்து நேரலாம் என்ற நிலை இருந்ததால் சுனிமெல்லுடைய வாழ்க்கை அறைகளுக்குள்ளேயான தலைமறைவு வாழ்க்கையாகவே அமைந்திருந்தது. சுனிமெல்லுடன் தொடர்ந்து சந்திப்புக்கள் மேற்கொள்ளப்பட்டன. தென்னிலங்கையில் ஜே.வி.பியினரின் செயற்பாடுகளும் இலங்கை அரசினது கெடுபிடிகளும் தீவிரம் அடையத் தொடங்கியதையடுத்து சுனிமெல் எம்முடன் இணைந்து செயற்படும் விருப்பத்தை தெரிவித்திருந்தார். சுனிமெல்லை எம்முடன் இணைத்துக் கொள்வது குறித்து வவுனியா மாவட்டக் குழுவில் அங்கம் வகித்த வண்ணன், கபிலன், தவராசா, யோகன் ஆகியோருடன் நானும் இணைந்து விவாத்தித்தோம்.

புளொட்டுடன் இணைந்து செயற்பட்டிருந்த, நம்பிக்கைக்குப் பாத்திரமான சுனிமெல்லை எம்முடன் இணைத்துக் கொள்வதில் வவுனியா மாவட்ட குழுவில் அங்கம் வகித்த அனைவரும் ஒருமித்த கருத்தைக் கொண்டிருந்தனர். ஆனால் சுனிமெல்லை எம்முடன் இணைத்துச் செயற்படுவது குறித்த முடிவை "தீப்பொறி" செயற்குழுவில் பேசியே, செயற்குழுவின் அனுமதியுடனேயே எடுக்க வேண்டியிருந்தது. சுனிமெல்லினுடைய கருத்தையும் வவனியா மாவட்டக் குழுவினரின் சுனிமெல்லை எம்முடன் இணைத்துச் செயற்படுவது குறித்த கருத்தையும் செயற்குழுவில் பேசுவதற்காக யாழ்ப்பாணம் சென்றேன். சுனிமெல் குறித்து பேசுவதற்காக "தீப்பொறி" செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட்டது.

எம்முடன் இணைந்து கொள்வது குறித்து சுனிமெல் முன்வைத்த கருத்தையும் வவுனியா மாவட்டக் குழுவில் செயற்படுபவர்களின் கருத்தையும் செயற்குழுவில் முன்வைத்தேன். இது குறித்து விவாதம் "தீப்பொறி" செயற்குழுவில் ஆரம்பமானது. சுனிமெல்லை "தீப்பொறி"க் குழுவுடன் இணைத்துக் கொள்ள முடியாது என்ற கருத்தை செயற்குழுவில் அங்கம் வகித்த காந்தன் (ரகுமான் ஜான்), டொமினிக் (கேசவன்), சண்முகநாதன், தர்மலிங்கம், தேவன் போன்றோர் முன்வைத்திருந்தனர். சுனிமெல்லை எம்முடன் இணைத்துக் கொள்ள முடியாது என்பதற்கான பிரதான காரணமாக சுனிமெல் ஒரு இனவாதியல்ல என்பதை சிங்கள மக்கள் மத்தியில் சென்று செயற்படுவதன் மூலம் எமக்கு நிரூபிக்க வேண்டும் என்று கருத்து முன்வைக்கப்பட்டது. சுனிமெல் சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு, தான் ஒரு இனவாதியல்ல என்று நிரூபிக்கும் பட்சத்தில் எம்முடன் இணைந்து செயற்பட முடியும் என்றும் கருத்து முன் வைக்கப்பட்டது.

தனிநபர் பயங்கரவாதத்தை கருத்தளவில் ஈவிரக்கமின்றி விமர்சித்த நாம் நடைமுறையில் தனிநபர் பயங்கரவாதத்தை பின்பற்றியவர்களாக காணப்பட்டது போல், இப்பொழுது சுனிமெல் என்ற சிங்களத் தோழரை - ஏற்கனவே புளொட்டில் அங்கம் வகித்திருந்த சிங்களத் தோழரை - இனவாதியாக கற்பனை செய்வதும், அவரை சிங்கள மக்கள் மத்தியில் செயற்பட்டு அவர் இனவாதியல்ல என நிரூபிக்கச் சொல்வதும், எம்மை இடதுசாரிகள் என அழைத்துக் கொண்டு சுனிமெல் குறித்து இத்தகையதொரு கருத்தைக் கொண்டிருப்பதும் நாம் சொல்லளவில் மட்டுமே இடதுசாரிகளாக இருக்கின்றோமே தவிர நடைமுறையில் ஒரு ஜனநாயகவாதியின் கண்ணோட்டத்தைக் கூட கொண்டிருக்கவில்லை என்பதையே எடுத்துக் காட்டியது.

நாம் புளொட்டில் செயற்பட்டபோது கூட சிங்கள மக்கள் குறித்த புளொட்டினுடைய கருத்துக்களில் முழுமையான உடன்பாடானவர்களாகவே இருந்தோம். புளொட்டினுடைய கருத்துக்களை நாம் என்றைக்கும் விமர்சனம் செய்தது கிடையாது. புளொட்டின் தவறான நடைமுறையைத்தான் நாம் விமர்சித்தோம்; அந்தத் தவறான நடைமுறைக்கெதிராகப் போராடினோம். ஆனால் இன்றோ குறைந்த பட்சம் நாம் புளொட்டில் செயற்பட்டபோது எம்மால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சரியான கருத்துக்களையே நாம் பின்பற்றத் தயாராக இருக்கவில்லை. சிங்கள மக்களை எமது போராட்டத்தில் வென்றெடுப்பதற்காக சிங்கள வானொலி சேவையை புளொட் நடாத்தியது மட்டுமல்லாமல் சிங்கள முற்போக்கு ஜனநாயக சக்திகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி செயற்பட்டதுடன் சிங்கள இளைஞர்களையும் கூட இணைத்து அவர்களுக்கு இராணுவப் பயிற்சியும் புளொட்டால் அளிக்கப்பட்டிருந்தது. 1983லேயே உடுவரகே ஹென்றி பெரேரா என்ற சிங்கள இடதுசாரி புளொட்டுடன் இணைந்து செயற்பட்டுக் கொண்டிருக்கும்போது இலங்கை அரச படைகளால் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டிருந்தார். சிங்கள மக்கள் குறித்தும், சிங்கள முற்போக்கு, ஜனநாயக சக்திகள் குறித்தும் புளொட்டினுடைய கண்ணோட்டம் அல்லது கருத்து இதுவாகத்தான் இருந்தது.

ஆனால் இன்று புளொட்டின் தவறான நடைமுறையை விமர்சித்து அதிலிருந்து வெளியேறிய நாம், புளொட்டில் அங்கம் வகித்த போது புளொட்டில் முன் வைத்த சரியான கருத்துக்களையே பின்பற்றுவதற்குத் தயாராக இல்லை என்பது தெளிவாகத் தெரிந்தது. சுனிமெல் குறித்த "தீப்பொறி"ச் செயற்குழு உறுப்பினர்களின் பார்வை இடதுசாரிகளின் பார்வையல்ல; இடதுசாரிகள் என்று தம்மைக் கூறிக் கொள்ளும் இனவாதிகளின் பார்வையேயாகும். செயற்குழு விவாதத்தின் முடிவில் சுனிமெல்லை தீப்பொறிக் குழுவுடன் இணைத்துக் கொள்வதில்லை என காந்தன் (ரகுமான் ஜான்), டொமினிக் (கேசவன்), சண்முகநாதன், தர்மலிங்கம், தேவன் ஆகியோர் அடங்கிய பெரும்பான்மையான உறுப்பினர்களால் முடிவெடுக்கப்பட்டது. "தீப்பொறி"ச் செயற்குழுவின் முடிவை வவுனியா சென்று சுனிமெல்லுக்கு தெரிவிக்குமாறு செயற்குழு என்னைப் பணித்தது.

ஆனால் இத்தகையதொரு முடிவை, இத்தகையதொரு இனவாதக் கருத்தை நான் சுனிமெல்லிடம் தெரிவிக்கப் போவதில்லை என வாதித்தேன். சுனிமெல் குறித்த விடயத்தில் செயற்குழுவின் பெரும்பான்மை முடிவுக்கு மதிப்பளிக்கவும், அதற்குக் கட்டுப்படவும் செய்தேன். ஆனால் அடிப்படையிலேயே ஒரு மோசமான இனவாதக் கருத்தை சுனிமெல்லுக்கு தெரிவிப்பதை நான் விரும்பியிருக்கவில்லை. "தீப்பொறி"ச் செயற்குழுவுக்குள் அங்கத்தவர்களின் தவறான கருத்துக்களுக்கும் தவறான போக்குகளுக்கும் எதிராக ஒரு போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பெரும்பான்மை முடிவுகளின் அடிப்படையில் அனைத்து செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன.

(தொடரும்)

23/03/2012

 

41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41

 

42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42

 

43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43

 

44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44

 

45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45

 

46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46

 

47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47

48.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 48