புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் - பகுதி 48
தமிழீழ விடுதலைப் புலிகளின் தொடரும் சக ஈழ விடுதலைப் போராட்ட இயக்க அழிப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில்,
"நெருப்புத்தினம்" எனற பெயரில் மக்களை அணிதிரட்டி ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (EPRLF) போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக மறுப்புக்கும் பாசிசப் போக்குக்கும் எதிராக, அவ்வியக்கத்தின் இராணுவப் பொறுப்பாளர்களை குறிவைத்துக் கொன்றொழிக்கும் திட்டங்கள் போன்ற தவறான அரசியல் வழிமுறைக்கு மாறாக, மக்களை அணிதிரட்டி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போராடும் சரியான அரசியல் வழிமுறையைப் பின்பற்றியவர்களாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (EPRLF) காணப்பட்டிருந்தனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தவிர்ந்த ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் "யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் குழு" வின் கோரிக்கைகளை தாம் முழுமையாக ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்ததன் பேரில் கடத்திச் செல்லப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனை விடுதலை செய்யக் கோரியும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக மறுப்புக்கு எதிராகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் குறித்து எந்தவிதமான விசாரணைகளும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியுடனேயே நடைபெறும் என தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தவிர்ந்த ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் உறுதியளித்திருந்தன.
ஆனால் "யாழ்ப்பாணப்பல்கலைக்கழக மாணவர் குழு"வின் குறைந்தபட்ச ஜனநாயகக் கோரிக்கைகளைக் கூட ஆதரிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தயாராக இருக்கவில்லை என்பதுடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனைக் காணாமற் போனமைக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுப்புக் கூற வேண்டியவர்களாக இனங்காணப்பட்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக மறுப்புக்கு எதிராக அருணகிரிநாதன் விஜிதரன் தலைமையில் மலையக மற்றும் கிழக்கிலங்கை பல்கலைக்கழக மாணவர்களின் ஆதரவில் உருவாகிய போராட்டம் தமக்கு பெருத்த சரிவை ஏற்படுத்தும் என தமிழீழ விடுதலைப் புலிகள் அச்சம் கொண்டதாலேயே அருணகிரிநாதன் விஜிதரன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது சூழல். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரன் கடத்திச் செல்லப்பட்டிருந்தபோது அனைவரது சந்தேகங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) மேல் விழுந்திருந்தது தற்செயலானதொன்றல்ல.
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) என்ற இயக்கத்தின் தோற்றமும், அதன் வளர்ச்சியும், அவர்களது அரசியல் வழிமுறைகளுமானது ஜனநாயக மறுப்பையே அடித்தளமாகக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்தது. தமது கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துக் கொண்டவர்களை அழித்தொழிப்பது, ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்கத் தலைவர்களையும் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களையும் அழித்தொழிப்பது என தொடர்ச்சியான ஜனநாயக விரோத, மக்கள் விரோத செயற்பாடுகளையே தமது அரசியலாக வரித்துக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனை கடத்திச் சென்ற சூத்திரதாரிகள் என அனைவரும் சந்தேகம் கொண்டதில் வியப்பேதுமில்லை.
தமிழீழ தேசிய விடுதலை முன்னணிக்குள் (NLFT) தோன்றிவிட்டிருந்த நெருக்கடிநிலையை கருத்தில் கொண்டு விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன் (கல்லுவம்) உட்பட முன்னணி உறுப்பினர்கள் இந்தியாவிலிருந்து தளம் வந்திருந்ததனர். தமிழீழ தேசிய விடுதலை முன்னணிக்குள் (NLFT) ஏற்பட்ட கருத்து முரண்பாடுகளால் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன் தலைமையில் தமிழீழ மக்கள் விடுதலை முன்னணி (PLFT) உருவாகியிருந்தது. விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன் தளத்திலிருந்து மீண்டும் இந்தியா திரும்புகையில் எம்முடன் "தீப்பொறி" க் குழுவில் செயற்பட்டு பின் வெளியேறியிருந்த விசுவப்பாவுடனும் (நரேஸ் ஐயர்) வேறு சிலருடனும் குருநகரில் இருந்து நெடுந்தீவு வழியாக இந்தியா செல்ல முற்பட்டவேளை காணாமல் போயிருந்தனர்.
(விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன்)
விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவனும் ஏனையோரும் இந்தியா சென்றுகொண்டிருந்த படகின் மேல் இலங்கைக் கடற்படையினரே தாக்குதல் நடத்தியதால் அவர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவனினதும் ஏனையோரினதும் மரணம் குறித்த மர்மம் இன்னமும் துலங்க வேண்டியதொன்றாகவே உள்ளது.
தனது மாணவப் பருவம் முதலே இடதுசாரி அரசியலுடன் தன்னை இணைத்துக் கொண்ட விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன், நாகலிங்கம் சண்முகதாசன் (மானிப்பாய்) தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (சீன சார்பு) உறுப்பினராக இருந்து பல போராட்டங்களில் பங்குபற்றியிருந்தார். இலங்கை தேசிய இனப்பிரச்சனையில் நாகலிங்கம் சண்முகதாசன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி (சீன சார்பு) சரியானதொரு நிலைப்பாட்டைக் கொண்டிருக்கவில்லை என்பதை விமர்சித்து தமிழ் மக்கள் ஜனநாயக முன்னணியை உருவாக்குவதில் ஒருவராகத் திகழ்ந்திருந்தார். 1983ன் இறுதிப் பகுதியில் ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்கள் இந்தியாவின் இராணுவப் பயிற்சியைப் பெற்று, இந்தியாவின் ஆயுத வழங்கலுடன் வீக்கமடைந்தபோது ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களை விமர்சித்த விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவன் தலைமையிலான தமிழீழ தேசிய விடுதலை முன்னணியினர் (NLFT) சொந்த மக்கள் பலத்தில் அமைப்பை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தனர்.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் இடதுசாரி அரசியலை முன்னிறுத்தி போராடிய விஸ்வலிங்கம் விஸ்வானந்ததேவனும் அவரது அமைப்பினரும் "தீப்பொறி" க்குழுவாக நாம் செயற்பட ஆரம்பித்ததிலிருந்து எமது வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை தோழமையுடன் ஆற்றியிருந்தனர்.
தமிழீழ விடுதலை இயக்கத்தை(TELO) அழித்தொழித்ததன் பின்னான காலப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) கவனம் ஏனைய ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களையும் அதே வழியில் அழித்தொழிப்பதை நோக்கியதாக அமைந்திருந்தது. புளொட்டுக்குள் (PLOTE) ஏற்பட்டிருந்த முரண்பாடுகளும், மோதல்களும், பிளவுகளும் புளொட்டை (PLOTE) ஒரு பலவீனமான அமைப்பு என்ற நிலைக்கு கொண்டு சென்றுவிட்டிருந்தது.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்குள் (EPRLF)அதன் இராணுவப்பிரிவான மக்கள் வீடுதலைப் படைக்குத் (PLA) தலைமை வகித்த டக்ளஸ் தேவானந்தாவுக்கும் (கதிரவேலு தேவானந்தா) ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிக்குமிடையிலான (EPRLF) கருத்து முரண்பாடுகள் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) பிளவுபடுவதில் சென்று முடிந்தது.
புளொட்டுக்குள்ளும் (PLOTE), ஈழமக்கள் புரட்சிகர முன்னணிக்குள்ளும் (EPRLF) தோன்றிவிட்டிருந்த நெருக்கடிகளை தமக்குச் சாதகமாக பயன்படுத்த முன்வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) முதலில் புளொட்டின் (PLOTE)செயற்பாடுகளை நிறுத்துவதற்கு முன்வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) வேண்டுகோளின் பேரில் அதன் அரசியல் துறைக்குப் பொறுப்பாக இருந்த திலீபன் (பார்த்திபன் இராசையா-ஊரெழு) புளொட் (PLOTE) இராணுவப் பொறுப்பாளர் சின்னமென்டிஸை சந்தித்தார். புளொட்டின் (PLOTE)செயற்பாடுகளை நிறுத்திவிட்டு தம்முடன் இணைந்து இலங்கை அரசுக்கெதிராகப் போராடும்படி திலீபன் சின்னமென்டிஸை வேண்டினார். திலீபனின் வேண்டுகோளை ஏற்க மறுத்த சின்னமென்டிஸ் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (EPRLF) இராணுவப் பொறுப்பாளர்களில் ஒருவராக இருந்த கபூரிடம் ஆயத உதவியைக் கோரியிருந்தார். ஆனால் கபூர் சின்னமென்டிசுக்கு ஆயுத உதவி அளிக்க முன்வரவில்லை. மாறாக, புளொட் (PLOTE) உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனையெனில் தமது முகாம்களில் பாதுகாப்பளிக்க முடியும் என தெரிவித்திருந்தார். உமாமகேஸ்வரனும் புளொட்டினுடைய (PLOTE) தலைமையும் இந்தியாவில் பாதுகாப்பாக தங்கியிருந்த அதே வேளை தளத்திலோ தமிழீழ விடுதலைப் புலிகளின்(LTTE) மிரட்டல்களால் ஈழவிடுதலைப் போராட்டத்துக்கென புளொட்டுடன் (PLOTE) இணைந்திருந்த போராளிகள் வாழ்வுக்கும் சாவுக்குமிடையில் போராடிக் கொண்டிருந்தனர்.
எந்த நேரத்திலும் தமிழீழ விடுதலை இயக்கத்தினருக்கு (TELO) நடந்தது போல் தமக்கும் நடைபெறலாம் என்பதை உணர்ந்த சின்னமென்டிஸும் அவருடன் தளத்தில் செயற்பட்டுக் கொண்டிருந்தவர்களும் தளத்தில் தற்காலிகமாக புளொட்டின் (PLOTE) செயற்பாடுகளை நிறுத்திவைப்பதாக அறிவித்தனர். அத்துடன் புளொட் (PLOTE) உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தத்தமது பாதுகாப்பை தாமே உறுதிப்படுத்திக்கொள்ளும் படியும் சின்னமென்டிஸ் கேட்டுக்கொண்டிருந்தார். சிலர் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரிடம் (EPRLF) பாதுகாப்பு பெற்றனர். சிலர் இலங்கையை விட்டு வெளிநாடுகளுக்குச் செல்லத் தொடங்கினர். இதன் மூலமாக புளொட்டின் (PLOTE) செயற்பாடுகள் தளத்தில் முடிவுக்கு வந்தன.
தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) எதிர்பார்த்தது போலல்லாமல் எந்தவித எதிர்ப்புமின்றி புளொட் (PLOTE) இயக்கத்தை செயற்பாடற்றதாக்கியதானது ஏனைய இயக்கங்களையும் அதேவழியில் இல்லாதொழிக்க முடியும் என்ற நம்பிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) ஏற்படுத்திவிட்டிருந்தது.
இப்பொழுது ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (EPRLF) அழிக்கப்பட வேண்டியவர்களாக தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) இனம் காணப்பட்டனர். ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினரின் (EPRLF) முகாம்கள் ஆயுதமேந்திய தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) சுற்றிவளைக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை பெருமளவு எதிர்ப்பெதுவும் இல்லாமலே ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (EPRLF) முகாம்களிலிருந்து தமது போராளிகளை வெளியேற்றிவிட்டிருந்தனர்.
ஆனால் கிழக்கு மாகாணத்தில் ராசீக் தலைமையில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (EPRLF) தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) எதிர்கொண்டு மோதலில் ஈடுபட்டபோதிலும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினர் (EPRLF)காட்டுப்பகுதிக்குள் பின்வாங்கிச் சென்றதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) ஈழமக்கள் புரட்சிகர முன்னணியின் (EPRLF) செயற்பாடுகள் முடக்கப்பட்டன.
ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியினருடனான (EPRLF) மோதலின் போதும், அவர்களை தடைவிதித்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) கைது செய்யப்பட்ட பல ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணிப் போராளிகள் (EPRLF) நல்லூர் கோவில் வீதியில் அமைந்திருந்த கந்தன் கருணை என்ற வீட்டில் சிறைவைக்கப்பட்டனர்.
தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) மேற்கொள்ளப்பட்ட ஏனைய இயக்கங்கள் மீதான கொடூரத்தையும், அழித்தொழிப்பையும், தடையுத்தரவையும் கண்டுகொண்டிருந்த ஈரோஸ் (EROS) இயக்கத்தினர் தமது அமைப்பை தாமே செயலற்றதாக்கி விட்டிருந்தனர்.
தாமல்லாத அனைத்து ஈழவிடுதலை போராட்ட இயக்கங்களையும் அழித்தொழித்துவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) ஈழவிடுதலை போராட்டத்தின் ஒரே இயக்கமாக தம்மை நிறுவிக் கொண்டனர்.
ஏனைய விடுதலை இயக்கங்களை ஈழவிடுதலைப் போராட்டத்திற்கு எதிரான "துரோக"க் குழுக்கள் என்றும், அதன் அங்கத்தவர்கள் "துரோகிகள்" என்றும் முத்திரையிட்டனர். யாழ்ப்பாண மேயராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்பிரட் துரையப்பாவை சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் (SLFP) அங்கம் வகித்த ஒரே காரணத்துக்காக "துரோகி" என்ற பெயரில் கொன்றொழித்து ஆரம்பித்து வைக்கப்பட்ட ஜனநாயக மறுப்பு அரசியல் இப்பொழுது ஈழவிடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்த இயக்கங்களையும், ஈழவிடுதலைப் போராளிகளையும் கருவறுத்துக் கொண்டிருந்தது.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் "ஒரே இயக்கம்", "ஒரே தலைமை" என்ற தமிழீழ விடுதலைப் புலிகளினிதும் (LTTE) அதன் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனினதும் கருத்து அல்லது நிலைப்பாடு அதன் நடைமுறை வடிவத்தைப் பெறத் தொடங்கியது.
சக ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களை அழித்தொழித்து அவற்றின் மீது தடைவிதித்திருந்ததன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மக்களை பீதிக்குள்ளாக்கி விட்டிருந்ததோடு மக்களை தமது கருத்தின் ஆதிக்கத்திற்கும் ஆயுத அதிகாரத்துக்கும் உட்படுத்திக்கொண்டிருந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) வெல்லப்பட முடியாதவர்களென பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.
"தமிழீழ தாயகத்தை"யே ஒரே நோக்கமாகக் கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)தமிழ் மக்களின் நலன்களுக்காக செயற்படும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் கொண்ட- சக ஈழவிடுதலைப் போராளிகளை கொன்றொழித்து வீதிகளில் ரயர் போட்டெரிக்கும் ஒழுக்கமும், கட்டுப்பாடும் கொண்ட- ஒரே இயக்கம் என்றும் கற்பித்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) இத்தகைய கருத்துக்கள் நிலப்பிரபுத்துவத் தளைகளிலிருந்து முற்றுமுழுதாக விடுவித்துக் கொள்ளாத, ஜனநாயகம் குறித்தும், ஜனநாயக விழுமியங்கள் குறித்தும் ஒரு சரியான புரிதலைக் கொண்டிராத தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினரிடத்தில் செல்வாக்குச் செலுத்தத் தொடங்கியதில் ஆச்சரியமடைவதற்கு எதுவுமில்லை.
ஆனால் தமிழ்ச் சமூகத்தின் முற்போக்கு, ஜனநாயக சக்திகள், அவர்கள் சமூகத்தின் ஒரு கூறாக இருந்தபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக விரோத, பாசிசப் போக்குகளுக்கெதிராக பல்வேறு வடிவங்களில் போராடிக் கொண்டிருந்தனர்.
"தீப்பொறி" க் குழுவாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த நாம் எமது அடுத்தகட்ட செயற்பாடுகள் குறித்து முடிவெடுக்கவேண்டியவர்களாக இருந்தோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) அடுத்த இலக்கு எம் போன்ற சிறிய குழுக்களாகவே இருக்கும் என இனம்கண்ட நாம், எமது செயற்பாடுகளை முழுமையாக இரகசியமாக மேற்கொள்வதென்று முடிவெடுத்தோம்.
"தீப்பொறி" செயற்பாடுகளை நிறுத்திவிட்டதாக அனைவருக்கும் தெரிவித்துக் கொண்டிருந்த நாம், இரகசியமாக எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றோம். புளொட்டிலும் (PLOTE), "தீப்பொறி" க்குழுவிலும் செயற்பட்டு அனைவருக்கும் அறிமுகமாகியிருந்த நாம் யாழ்ப்பாணத்தில் இருந்தபடியே இரகசியமாகச் செயற்படுவதென்று எடுத்த முடிவானது தவறானதொன்றே ஆகும். இருந்தபோதும் எம்மால் எடுக்கப்பட்ட பெரும்பான்மை முடிவின் அடிப்படையில் எமது செயற்பாடுகள் அமைந்து கொண்டிருந்தன.
புளொட்டிலிருந்து (PLOTE) வந்து எம்முடன் இணைந்து செயற்பட முன்வந்தவர்களுக்கு எமது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்டுவிட்டதாக தெரிவித்திருந்தோம். இக்காலகட்டத்தில் எம்மில் பெரும்பாலானவர்கள் முழுநேரமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததால் எமது செயற்பாடுகளை, தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) நெருக்கடிகள் குறைந்த வவுனியா மாவட்டத்திற்கு நகர்த்துவதற்கு முயன்றோம். வவுனியாவில் எம்முடன் இணைந்து தீவிரமாக செயற்பட முன்வந்திருந்தவர்களான வவுனியா தம்பி, வண்ணன், கபிலன், தவராசா, யோகன், ராஜன், அந்து, சண்முகம், சோதி, வில்வராஜா போன்றவர்களுக்கூடாக வவுனியாவில் எமது செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டோம்.
நான் வவுனியாவிற்கு சென்று நிலைமைகளை அவதானித்து எமது செயற்பாடுகளை மேற்கொள்வதென செயற்குழுவில் முடிவானது. இலங்கை இராணுவ முகாம்கள் பிரதான வீதிகளில் நிலை கொண்டிருந்ததால் நாம் உழவு இயந்திரங்களும் சைக்கிள்களும் செல்லக்கூடிய காட்டுப்பாதை வழியாகவே வவுனியா செல்லவேண்டியிருந்தது. ஏற்கனவே வவுனியாவிலிருந்து காட்டுப்பாதைகள் வழியாக சைக்கிளில் யாழ்ப்பாணம் வந்து சென்று நன்கு அனுபவம் பெற்றிருந்த வவுனியா தம்பி மற்றும் கல்மடு ராஜன், வண்ணன் ஆகியோருடன் நான் வவுனியா சென்றேன்.
டாக்டர் சோமசுந்தரம் இராஜசுந்தரம் (இடதுபுறத்தில் இருப்பவர்)
வசந்தன்(தம்பிப்பிள்ளை சந்ததியார்)
வன்னேரிக்குளத்தில் தொடங்கி பாரதிபுரம் (வவுனியா), கந்தசாமி நகர் (செட்டிகுளம்) என டாக்டர் சோமசுந்தரம் இராஜசுந்தரம், டாக்டர் சாந்தி காராளசிங்கம், அருளானந்தம் டேவிட் (டேவிட்ஜயா), வசந்தன்(தம்பிப்பிள்ளை சந்ததியார்), சுந்தரம்(சதாசிவம் சிவசண்முகமூர்த்தி) ஆகியோரின் தலைமையின் கீழ் பல நூற்றுக்கணக்கான இளைஞர்களினதும் யுவதிகளினதும் கடின உழைப்பால் மேற்கொள்ளப்பட்ட காந்தீயக் குடியேற்றங்கள் வரலாற்றில் மறக்கப்படவோ, மறைக்கப்படவோ முடியாத அவர்களது பணியை எடுத்துக்காட்டி நின்றது.
வலைப்பின்னல் போல் அமைந்திருந்த முஸ்லீம், தமிழ் குடியிருப்புக்கள் அம் மக்களுக்கிடையிலான நெருக்கத்தையும் பிரிக்கப்படமுடியாத ஒற்றுமையையும் எடுத்துக்காட்டி நின்ற அதேவேளை சிங்களப் பேரினவாதத்தினதும், தமிழ் குறுந்தேசிய இனவாதத்தினதும் வெளிப்பாடாகவும் சாட்சியாகவும் மக்கள் வாழாத சூனியப் பிரதேசமாக காட்சியளிக்கும் பாவற்குளம் குடியிருப்புப் பகுதியையும் காணமுடிந்தது.
(தொடரும்)
16/03/2012
41.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 41
42.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 42
43.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 43
44.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 44
45.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 45
46.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 46
47.புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அனுபவப் பகிர்வுகள் – பகுதி 47