புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயற்பாட்டாளராகச் செயற்பட்ட கேபி எனப்படும் குமரன் பத்மநாதன் அரசியலுக்கு வந்தால், அதனை ஏற்றுக் கொள்ள தாங்கள் தயார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். ஆயிரம் மலர்கள் மலரட்டும் என்பதே எங்களுடைய சித்தாந்தம். அந்த வகையில் ஆயுதப் போராட்டத்தை விட்டு ஜனநாயக நீரோட்டத்திற்கு வந்த கருணாவை கூட நாங்களே முன்னின்று வரவேற்றோம். எனினும் அவர்களுடைய அரசியல் இருப்பை உறுதி செய்வது மக்கள் கைகளிலேயே உள்ளது." என்றார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.
ஆயிரம் திருடர்கள் அரசியலுக்கு வந்தால்....
ஏற்கனவே இருக்கிற திருடர்கள் போதாதென்ற இன்னும் ஆயிரம் திருடர்களை அரசியலுக்கு வரவேற்க தயாராக இருக்கிறார் டக்ளஸ் தேவானந்தா. ஒரிரு திருடர்கள் இருந்தால் மக்கள் இலகுவாக அடையாளம் கண்டு கொள்வார்கள் என்பதாலை இன்னும் பல திருடர்களை இணைத்துக் கொள்ள டக்ளஸ் விரும்புகிறார் போலும். இந்த கொள்கை அடிப்படையில் தானே மகிந்தாவும் பல திருடர்களை எல்லாம் தன்னுடன் அரசியலில் சேர்த்துக் கொள்கிறார் என்று நினைக்கிறேன். நாட்டை கொள்ளையடிக்க இது நல்ல இலகுவான வழி தான்.
கேபியும் மக்களுக்கு நல்ல அறிவுரை கூறியுள்ளார். திருடர்களிடம் இருந்து தப்பித்துக் கொள்ள நகைகளை வங்கியில் வைக்க சொல்லியுள்ளார். அப்போது தான் ஒவ்வொன்றாய் களவு போற நகைகளை மொத்தமாக சுருட்டிக் கொள்ளலாம்.
மக்கள் நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே எங்களோடு உள்ள திருடர்கள் போதும். இவர்களை விரட்டியடித்து நாட்டையும் சமூகத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு எங்களுக்கு உண்டு. இன்னும் ஆயிரம் திருடர்கள் அரசியலுக்கு வந்தால் வருங்கால எங்கள் சந்ததியினர் துண்டு துணி இல்லாமல் தான் திரிய வேண்டும். நாங்கள் திருடன் எங்கள் மேல் ஏறிப் போவது தெரியாது நித்திரை கொண்டால் திருடன் இலகுவாக திருடிக் கொள்வான். இனியாவது விழித்துக் கொள்வோம்.
-தேவன்.
(07/02/201)