Language Selection

சீலன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

யாழ் மாவட்டத்தில்அண்மைக் காலமாக கலாச்சாரச் சீரழிவும், சமூகச் சீரழிவும் நடந்து வருவதாக யாழ் அரச அதிபர் பத்திகைகளுக்கு தெரிவித்துள்ளார். இச்சீரழிவில் பாதிப்படைபவர்கள் இளம் சமூகத்தினரே என்றும் குறிப்பிட்டு அதற்கான விபரங்களையும் வழங்கியுள்ளார். அவரின் தகவலின்படி 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும், 247 முறையற்ற கர்ப்பங்களும்,14 பேர் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

யாழ் மாவட்டத்தில் இந்த கலாச்சார, சமூக சீரழிவுக்கு யார் காரணம் என்பதை மட்டும் அவர் இங்கு குறிப்பிடவில்லை. மாறாக இளைய தலைமுறையினரை குற்றம் கூறுவதன் மூலம் உண்மையான கலாச்சார சீர்கேட்டுக்கு காரணமானவர்களை பாதுகாக்கின்றார்.

தற்போது யாழ் மாவட்டத்தையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள அரச அதிபர் இவ்வாறு குறிப்பிடுவது மிகவும் வெட்கப்படவேண்டிய ஒரு விடையமாகும். இந்த சீரழிவை அரசே செய்கின்றது என்ற உண்மையை மக்கள் விளங்கிக் கொள்ளாமல் இருப்தற்காகவே இந்த நாடகம். போதைப் பொருட்களை யாழ் மக்களிடையே விற்பனை செய்வதில் இலங்கை இராணுவத்திற்கு பெரும் பங்கு உண்டு. இதனை யாழ் அரச அதிபர் சுட்டிக் காட்டவேயில்லை.

உண்மையில் யாழ் மக்களின் கூற்றுக்களை பார்போமேயாயின்,  இன்று இளவயதினரை பெற்றோர்கள் கண்டிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் கண்டிக்கும் பட்சத்தில் இளம் சமூகத்தினர் இராணுவ உதவியை நாடுவதாகவும் அறியப்படுகின்றது.

மதுவிற்கும் நிலையங்கள், கோட்டல்கள் (நடனசாலை உள்ளடங்கிய) என்பன வெளிநாட்டு முதலீட்டாளர்களின் துணை கொண்டு கட்டி எழுப்பப்படு  வருகின்றன. இவற்றிற்கு அனுமதி வழங்கியது யாழ் மக்களா?. இல்லை இந்த அரச அதிபர் தானே! இவர் இவ்வாறு அரசிற்கு சேவகம் செய்த படி மக்கள் முன் இளையவர்கள் பாதிக்கப்படுகின்றனர் என்று நீலிக்கண்ணீர் விடுவது வேடிக்கையானதே.
கலச்சார சீரழிவு, சமூகச் சீரழிவு போன்றவற்றை அரசு திட்டமிட்டே செய்து வருகின்றது. அதுவும் இளம் சமூகத்தினரை மையப்படுத்தி செய்வதன் அடிப்படை நோக்கம், இந்த இளம் சமூகத்தின் போர்குணாம்சத்தை மழுங்கடிப்பதே ஆகும். இதை தமிழ் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். ஏற்கனவே யுத்தத்தில் பிரதான பாத்திரம் வகித்த இந்த இளம் சந்ததியினரை மீண்டும் சிந்திக்க விடாது தடுப்பதற்கான முயற்சியே. இது இன்று யாழில் மட்டும் இடம் பெறவில்லை மாறாக உலகம் எங்கும் இவ்வாறான நிகழ்வுகள் ஆளும் மக்கள் விரோத அரசுகளினால் நடந்தேறிவருகின்றன.

அரச அதிபரின் கூற்றில் 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்ககள் நடந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார். இதில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டவை எத்தனை என்பதை மறைத்து விட்டார். அத்தோடு 54 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் மட்டுமா இடம்பெற்றன. இதிலும் விட பன்மடங்கு அதிகம் இருக்கும் என்பதையும் அவர் அங்கு குறிப்பிடத் தவறியுள்ளார்.

247 முறையற்ற கர்ப்பங்கள் என இந்த அரச அதிபர் எதன் அடிப்படையில் குறிப்பிடுகின்றார் என்பது கேள்விக் குறியானதே? இதற்கு என்ன காரணம?.  இவை யாரால் நடந்தப்பட்டன என பல கேள்விகள் உண்டு. அவற்றிற்கான எந்த விபரங்களும் தராத அரசாங்க அதிபரின் தகவல் மறுபுறத்தில் இவற்றை இன்னமும் அதிகரிக்க செய்வதற்கான ஒரு செயற்பாடாகவே கருத முடிகின்றது.
இளம் சந்ததியனரை நோக்கிய திட்டமிட்ட செயற்பாடுகளில் கலாச்சார, சமூக சீர்கேடுகளை ஊக்குவிப்பது இன்று யாழில் மட்டுமல்ல இலங்கை முழுவதும் நடந்து கொண்டிருக்கின்றது.

மேலும் அரச அதிபரின் தகவலின் படி யுத்தம் காரணமாக 959 சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளனர், 03 பேர் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர். 264 பேர் உள ரீதியாகப் பாதிப்படைந்துள்ளனர். 288 பேர் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளனர் என்றும் மேலும் 227 பேருக்கு அவசர உதவிகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதில் வேடிக்கையான தகவல் 3 பேர் கடத்தப்பட்டுள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்பதே. அண்ணளவாக நாளுக்கு அல்லது கிழமைக்கு ஒருவர் என்ற வீதத்தில் பலர் காணாமல் போகின்றனர்.  பின்னர் பலர் பிணங்களாக மீட்கப்படுகின்றனர் என்ற தகவலை இங்கு அவர் குறிப்பிடவில்லை. இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் அல்லது கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரையும் யாழ் அரச அதிபர் குறிப்பிடத் தவறுவதன் மூலம் யாழில் கடத்தல், கொலை என்பன அரசின் செயற்பாடு தான் என மறைமுகமாக ஏற்றுக் கொள்கின்றார். யாழில் நடைபெறும் கொள்ளை, கொலை, ஆட்கடத்தல் என்பனவற்றை செய்வதே இந்த அரசு தான் என்பதை இவரின் தகவல் வெளியீட்டின் மூலம் எம்மால் புரிந்து கொள்ள முடிகின்றது.

"பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டுவார்கள்" என்ற முது மொழி இவரின் தகவல் பரிமாற்றத்திற்கு மிகவும் பொருந்தும்.  யாழ் மாவட்டத்தில் நடைபெறும் அனைத்து சம்பங்களுக்கும் பொறுப்பான அரசாங்க அதிபரே வெறுமனே தகவல்களை கூறி இளையவர்கள் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொண்டுள்ள முனைகின்றார்.

எமது இளம் சந்ததியினர் உட்பட அனைவரும் சிங்கள் பௌத்த இனவாத அரசின் சதிவலையில்  சிக்கிவிடாது, தம்மையும் எமது சமுதாயத்தையும் காலாச்சார சீரழிவுகளில் இருந்து பாதுகாப்பது இன்றைய காலத்தின் முக்கிய கடமையாக உள்ளது.

-சீலன் (4/2/2011)-