ஸ்டாலினுக்கு எதிரான அந்த மேலைநாட்டு அவதூறுகளை அப்படியே இறக்குமதி செய்து இங்கே பரப்புவதற்கென்று, ஒரு பெருங்கூட்டம் அல்லும் பகலும் அலைகிறது. தமது சித்தாந்தச் சாய்வுகள் காரணமாக எதிரெதிர் முகாம்களில் நின்று கடுமையாக மோதிக் கொள்பவர்களைப் போலத் தோன்றும் இந்தக் கூட்டத்தினர் ஸ்டாலின் மற்றும் கம்யூனிச எதிர்ப்பில் மட்டும் ஒரு வானவில் கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளனர். "உன்னதமான கலைஇலக்கியம்சினிமா அரசியல்'', "மனித நேயமிகு தரமான படைப்புகள்'' என்கிற பெயரில் இவர்கள் பதிப்பிக்கும் எல்லா நூல்களிலும் இழையோடுவது ஸ்டாலின் எதிர்ப்புதான்!
இவர்கள் அனைவரும் தத்துவம், அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் மார்க்சிய லெனினிய உட்கிடக்கையை நீக்கிவிட்டு, பெயரில் மட்டுமே கம்யூனிசத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரத்தின் கீழ் புரட்சியைத் தொடர்வது, சோசலிசத்தை நிர்மாணிப்பது ஆகியவற்றை நிராகரித்துவிட்டார்கள். பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கீழ் சந்தை சோசலிச சமுதாயம் காண்பதுதான் அவர்களின் இலட்சியம். அதற்கேற்ப கம்யூனிசச் சித்தாந்தத்தையும் திரித்துக் கொண்டுள்ளனர். இதையே அவர்கள் மண்ணுக்கேற்ற மார்க்சியம் என்கிறார்கள். இதன் சாரம் குருச்சேவ், பிரஷ்நேவ், கோர்பச்சேவ் மற்றும் யூரோ கம்யூனிசம் போதித்தவைதான். இந்தப் போதனைகள் எல்லாம் ஸ்டாலின் மீதான அவதூறுகளை அடித்தளமாகக் கொண்டு எழுப்பப்பட்டவை. எனவே, ஸ்டாலின் மீதான அவதூறுகளைக் கேள்வி முறையின்றி ஏற்பதோடு, கம்யூனிசப் புரட்சியாளர்களை எதிர்ப்பதற்காக தாமே அவற்றைப் பிரச்சாரமும் செய்கின்றனர்.
இந்த வானவில் கூட்டணியின் இன்னொரு கடைக்கோடியில் நிற்பவர்கள் சுந்தர ராமசாமி, ஜெயமோகன், காலச்சுவடு கணையாழி கும்பல். ஆர்.எஸ்.எஸ். சார்பு பார்ப்பன சனாதன சித்தாந்தத்தை வரித்துக் கொண்டுள்ள இக்கும்பல் கலை இலக்கிய முகத்திரை போட்டுக் கொண்டு, மனிதநேயம், ஜனநாயகத்தின் பெயரால் ஸ்டாலின் மற்றும் கம்யூனிச எதிர்ப்பு அவதூறுகளைப் பரப்புகிறார்கள். சுந்தர ராமசாமியின் ஜே.ஜே. சில குறிப்புகளின் அடியொற்றி பின் தொடரும் நிழலின் குரலாக ஜெயமோகன் அத்தகு அவதூறு பரப்பும் வேலையைத் தொடர்ந்துள்ளார். தனது நாவலின் ஓரிடத்தில் ஒன்றரைக் கோடி விவசாயிகளைக் கொன்று, உக்ரைனில் பல பத்து இலட்சம் பேர் சாவுக்குக் காரணமான பஞ்சத்தை, ஸ்டாலினது சோவியத் ரசியா ஏற்படுத்தியதாக ஜெயமோகன் எழுதுகிறார். மேலும் ஸ்டாலினது அரசாங்கத்தினால் தேசத்து மக்களில் பாதிப்பேர் எந்தவித விசாரணையும் இல்லாமல் புழுப்பூச்சிகள் மாதிரி அழிக்கப்பட்டதாகவும் மீதிப் பேர் சொந்த வீடுகளில் சிறை வைக்கப்பட்டதாகவும் எழுதுகிறார்.
அடுக்கடுக்கான இந்த அவதூறுகளுக்கு என்ன ஆதாரம்? பிரிட்டிஷ் உளவுப் படையின் சம்பளப்பட்டியலில் இருந்த ஆர்தர் கீஸ்லர் எழுதிய "நடுப்பகலில் இருட்டு' என்ற நூல். அப்புறம் 50களில் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டு மார்த்தாண்டம் சந்தையில் அனாதையாக பிச்சைக்காரனாக இறந்த இளம் கவிஞனின் கதையை ஜெயமோகனின் அம்மா சொன்னாராம். அதை வைத்து ஜெயமோகன் பின்னியவை தாம் ஆதாரங்கள்! அந்த இளங்கவிஞனுக்கு ரசிய மக்கள் தொடர்பு அமைச்சகத் தகவல்களோடு ஒரு இரகசியக் கடிதம் வந்ததாம்; இலக்கியவாதிக்குரிய மனம் இருந்ததால் ஒரு ஆதாரமும் இல்லாமலேயே அது உண்மை என்று உறுதியாகத் தெரிந்ததாம்; மேற்கொண்டு தகவல்களை மேற்கத்திய மீடியா வழியே திரட்டி எழுதிவிட்டாராம்; அதைத் தெரிந்து கொண்ட கட்சி அவரை வெளியேற்றி விட்டதாம்; இவைதாம் ஜெயமோகனும் அவர் மூலமாக சுந்தர ராமசாமியும் தரும் தகவல்கள்.
ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுகளை மேற்கத்திய செய்தி (மீடியா) ஊடகம் எப்படித் திட்டமிட்டு உருவாக்கிப் பரப்பியது என்பதை முன்பக்கங்களில் உள்ள கட்டுரை நிரூபிக்கிறது; அதே மேற்கத்திய செய்தி ஊடகம்தான் ஜெயமோகன் போன்ற கம்யூனிச ஸ்டாலின் எதிரிகளுக்கான ஆதாரமாகவும் இருக்கிறது. ஆனால் ஜெயமோகன், சுந்தர ராமசாமிகளின் நோக்கம் ஸ்டாலின் எதிர்ப்பு மட்டுமல்ல. அதே அவதூறுகளைக் கொண்டு மாவோ, கமால் பாஷா, கரிபால்டி போன்ற புரட்சிகர, ஜனநாயகத் தலைவர்களைக் கூட இடிஅமீன், இட்லர் போன்ற பாசிச சர்வாதிகாரிகளோடு இணைத்து ஏசுகின்றனர். இட்லரைக் குருவாக ஏற்றுக் கொண்டவர் ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கர்; இட்லரின் ஆட்சிக்கு ஆசி வழங்கியவர் 12வது போப் பயஸ்; இருவரும் தத்தமது இந்துத்துவத்தையும், கிறித்துவத்தையும் காப்பதற்கு, நாஜிக்களின் யூதப்படுகொலைகளை மூடிமறைக்கவும், ஸ்டாலின் மீது அவதூறுகளைப் பரப்பினர்.
ஸ்டாலின் எதிர்ப்பு வானவில் கூட்டணியின் மேற்கண்ட இரு கோடிகளுக்கு இடையே நிற்பவர்கள் கோவை ஞானி எஸ்.என். நாகராசன் தலைமையிலான நிகழ் பரிமாணம் சிற்றேடுகளின் குழு, மற்றும் அ.மார்க்ஸ், ரவிக்குமார் தலைமையிலான நிறப்பிரிகை தலித் சிற்றேடுகளின் குழு. மற்ற ஸ்டாலின் எதிர்ப்பு உதிரிகள் எஸ்.வி. ராஜதுரை போன்ற தன்னார்வக் குழுக்களைச் சேர்ந்தவர்கள். ஞானிநாகராசனின் ஆன்மீகத் தேடல்களுக்கும், அ.மார்க்ஸ் ரவிக்குமாரின் பின்நவீனத்துவக் கழிசடைத் தத்துவத்துக்கும், தன்னார்வக் குழுக்களின் சீர்குலைவுப் பணிகளுக்கும் தேவையானது கம்யூனிச சித்தாந்தத்தை நிர்மூலமாக்குவது. அதற்கான கருவியாக ஸ்டாலின் மீதான அவதூறுகளை இவர்கள் பயன்படுத்துகின்றனர்.
·
மாணிக்கவாசகம்
மார்ச்மேஜூன் 2000
2.சுந்தர ராமசாமி: இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்