Language Selection

நேசன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

குறுந் தமிழ் தேசியப் போராட்டம் தோல்வி பெற்றுள்ள நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை வரலாற்றிலிருந்து தெரிந்து கொள்வது அவசியம். நேசனின் கடந்தகால அனுபவம், எதிர்மறையான புதைந்துபோன உண்மைகளையும், படிப்பினைகளையும் கொண்டதாக இன்றைய வரலாற்றுச் சூழலுடன் வெளிவருவது வரலாற்றுக்கு அவசியமானதாக உள்ளது. இந்தப் போராட்டம் தன்னைத்தானே தோல்விக்கு இழுத்துச் சென்று தனக்குத்தானே புதைகுழி தோண்டி தானே தன்னைப் புதைகுழியில் புதைக்க முன், தான் தவிர்ந்த மற்றைய எதனையும் முதலில் அழித்துப் புதைத்தது.

இதில் தப்பிப் பிழைத்தவர்களில் நேசனும் ஒருவர். முதலில் ஈழ மாணவர் பொது மன்றம் என்ற (GUESS) அமைப்பிலும், பின்னர் புளொட் அமைப்பிலும் இணைந்து செயல்பட்டவர். இறுதியில் புளொட்டிலிருந்து பிரிந்து சென்ற தீப்பொறியிலும் அதன் மத்திய குழுவிலும் செயல்பட்டவர்.

 

இந்த வகையில் அவர் தமிழ் தேசியப் போராட்டத்தில் இணைந்து போராடிய போது, வர்க்க ரீதியாக இரண்டு வலது, இடது முகாம்களாக பிளவுற்ற எதிரெதிரான வழிப்பாதையில், மக்களை முன்னிலைப்படுத்திய பாதையின் அரசியலை உயர்த்திப் பிடித்தார்.

இன்று தன் சொந்த அனுபவத்தை தொகுக்கும் போதும், அதை வெளியிடும் போதும் கூட, அரசியல் ரீதியாக மக்களைச் சார்ந்து நிற்கின்ற வழியை முன்னிறுத்துகின்றார்.

1. கடந்தகாலத்தில் மக்களுக்கு எதிராக நிலைநின்ற பிற்போக்கு சக்திகள், மறுபடியும் தங்கள் வரலாறே சரியானது என்று மீளவும் நிலைநாட்ட முற்படுகின்ற காலத்தில் அதை அம்பலப்படுத்தி போராட முற்படுகின்றார்.

2. இதை முன்வைத்து போராடும் போது, கடந்தகால அரசியல் வழியை விமர்சனங்களுடன் உயர்த்தி நிற்கும் பாதைகளை இனம் கண்டு, அதன் மூலம் தன் அனுபவத்தை சொல்வதன் மூலம் பிற்போக்குக் கூறுகளையும் தவறுகளையும் அம்பலம் செய்ய முற்படுகின்றார்.

இந்த வகையில் குறுந்தேசியத்துக்கு எதிரான போராட்டத்தையும், அதன் அனுபவத்தையும் கற்றுக் கொள்ள, இந்த தொடர் எமக்கு உதவும்.

தமிழரங்கம்

புளொட்டிலிருந்து தீப்பொறி வரையான எனது அநுபவப் பகிர்வுகள் - நேசன் ( பகுதி 1 )

வரலாறு பல அத்தியாயங்களையும் பக்கங்களையும் கொண்டது. எனது பக்கங்களையும் பதிவு செய்யும் கால நிபந்தனையினதும் சமூகப் பிரக்ஞையினதும் நிமித்தம் புளொட், தீப்பொறி பற்றி நான் அறிந்த வரலாற்றை தொகுப்பதென்று முடிவு செய்தேன். நான் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டு அவற்றுடன் சம்பந்தப்பட்ட நண்பர்களுடன் உறுதிப்படுத்தியபின், பல்வேறு தயக்கங்களுக்கும் மத்தியில், உருப்பெற்றெழுந்தது தான் இந்தத் தொகுப்பு. இதில் தவறுகள் இருப்பின் சரியாகச் சுட்டிக்காட்டப்படுமிடத்து திருத்திக் கொள்ளப்படும்.

நான் புளொட்டில் மிகவும் குறுகியகாலமே செயற்பட்டவன். ஆனால், அந்தக் குறுகிய காலமே இலங்கையின் இனப்பிரச்சினை கூர்மையடைந்துவிட்டிருந்த காலமாகவும், இந்திய அரசு, இலங்கை இனப்பிரச்சனைக்குள் நேரடியாகச் செல்வாக்குச் செலுத்திய காலமாகவும், புளொட்டினுடைய அதீத வளர்ச்சிக் காலமாகவும், புளொட்டினுள் முரண்பாடுகள் கூர்மையடைந்து அதன் சிதைவுக்கான காலமாகவும் இருந்தது. எனவே, எனது இந்தத் தொகுப்பானது புளொட்டினுடைய வரலாற்றின் முழுமை அல்ல, அதன் ஒரு சிறிய பகுதி மட்டுமே. 1985 இல் தீப்பொறிக்குழு உருவானதிலிருந்து 1992 வரையான அதன் வரலாறு தொகுக்கப்பட்டுள்ளது.

 

மே 18 2009 இற்குப் பின்னரான இலங்கைத் தீவின் அரசியல்-குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழ், முஸ்லீம் மக்களின் அரசியல்- ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது என்பதில் எவருக்கும் கருத்து முரண்பாடு இருக்க முடியாது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமை முள்ளிவாய்க்காலில் தோல்வியைத் தழுவிய பின் - இதை ஒட்டுமொத்த தமிழ்மக்களின் தோல்வி எனக் கூறுவது தவறாகும். - இலங்கையிலும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியிலும், அதிலும் குறிப்பாக கடந்தகாலத்தில் அரசியலில் ஈடுபட்டோர் மத்தியில் புதிய, மாற்றுக் கருத்துக்களுக்கான முன்னெடுப்புகள் அல்லது புதிய அரசியல் தலைமைத்துவத்திற்கான முன்னெடுப்புகளை பெருமளவில் காணக்கூடியதாக உள்ளது. இதில் இரண்டு வகையானோர் அடங்குவர்.

முதலாவது வகையினர் தமிழீழ விடுதலைப் புலிகள் இருக்கும் போதே, அவர்களுடைய கொடூர அடக்குமுறை இருக்கும்போதே - இலங்கையிலும், ஏன் புலம்பெயர் நாடுகளிலும் கூட – அவர்களது தவறான அரசியல் போக்குகள் குறித்து அவர்களது போராட்டத்தினுள் பொதித்திருந்த பாசிச தன்மை குறித்து விமர்சித்து வந்தது மட்டுமல்லாது அதற்கெதிராக தமது சக்திக்குட்பட்டு பல்வேறு வடிவங்களில் போராடி வந்தோர், தற்போதும் கூட போராடி வருவோர்.

இரண்டாவது வகையினரோ புலிகளின் அழிவின் பின் அரங்குக்கு வந்து, தாம் "இருண்ட காலத்திலிருந்து வெளியே" வருவதாகக் கூறிக்கொண்டு மாற்றுக் கருத்துக்கள், புதிய தலைமை பற்றிப் பேசுவோராவர். இவர்களில் ஒரு சாரார் – ஒரு சாரார் மட்டுமே- புலிகள் பலமாக இருக்கும் பொழுது புலிகளின் தவறான அரசியல் போக்குகள் குறித்து விமர்சிக்காதது மட்டுமல்ல, அதற்கெதிராக போராடாதது மட்டுமல்ல, அவர்களுக்கு "தேசிய சக்திகள்"என்ற மகுடமும் இட்டு அவர்கள் இல்லாவிட்டால் தமிழ்மக்கள் நட்டாற்றில் விட்டுவிடப்படுவார்கள் என்றும் வாதாடியவர்கள். இன்று இவர்கள் கடந்தகாலம் பற்றிய எந்தவித சுயவிமர்சனமுமின்றி மாற்றுக் கருத்துக்கள், புதிய தலைமை பற்றிப் பேசுவது கவலையளிக்கும் விடயமாக உள்ளது. கடந்தகால தவறுகள் குறித்த இவர்களது கயவிமர்சனமற்ற எந்தவிதமான செயற்பாடும், அவை எவ்வளவு தான் உயர்ந்த நோக்கங்களைக் கொண்டிருந்தாலும் ஒரு ஆரோக்கியமான எதிர்காலத்துக்கு வழிகோலாது என்பதுதான் உண்மை.

முள்ளிவாய்க்கால் நிகழ்வு, ஆயிரக்கணக்கான அப்பாவிப் பொது மக்களின் அழிவு, கொடூரமானதும் துன்பகரமானதும் ஆகும். ஆனால் அது இன்று தவிர்க்க முடியாத வரலாறாகி விட்டது. தீமையில் விளைந்த சிறு நன்மை போல, இந்த முள்ளிவாய்க்காலின் பின்னணியில் தான் இன்றைய "ஜனநாயக" அல்லது "கருத்துச் சுதந்திர" (அதன் உண்மையான அர்த்தத்தில் இல்லை என்ற போதிலும்) சூழல் தமிழ், முஸ்லீம் மக்கள் மத்தியில் தோன்றியுள்ளது. ஆனால் இங்கு எழும் கேள்வி என்னவென்றால் நீண்ட நெடுநாட்களுக்குப் பின்பு தோன்றியுள்ள இத்தகையதொரு சாதகமான சூழலை தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொண்டதாகக் கூறும் மாற்றுக் கருத்தை முன்னெடுப்போர் அல்லது அவர்களுக்குத் தலைமை தாங்க முன்வருவோர் எப்படி சரியாக பயன்படுத்துகிறார்கள் என்பதாகும். இவர்களில் பெரும்பான்மையானோர் கடந்தகால அரசியல் மற்றும் போராட்ட இயக்கங்களின் பின்னணியை உடையவர்களாவர். இவர்கள் தங்களது, தான் சார்ந்த அமைப்பினது கடந்தகால தவறுகளை சுயவிமர்சனம் செய்து அதிலிருந்து மீண்டுவராமல் தம்மை "முன்னேறிய பிரிவினர்" என்று அழைத்துக் கொண்டு அரசியல் அரங்கினுள் மீண்டும் காலடி எடுத்து வைத்துள்ளனர்.

கடந்தகால – குறிப்பாக கடந்த 30 வருடகால – ஆயுதப்போராட்டமும் அதற்கு முன்னதான அகிம்சைப் போராட்டமும் நமக்கு கற்றுத்தந்த பாடங்கள் என்ன? கடந்தகால அகிம்சைப் போராட்டம் மட்டுமல்லாது, ஆயுதப் போராட்டமும் கூட தோல்வியைத் தழுவியது ஏன்? என்ற இந்தக் கேள்விகளுக்கான பதிலை உளச்சுத்தியுடனும் பக்கச்சார்பற்றும் தேடினால் மட்டுமே, அவற்றுக்கான விடை கண்டால் மட்டுமே எம்மால் அடுத்த கட்டத்துக்கு சரியான பாதையில் நகர முடியும். இவற்றைப் புறந்தள்ளி எடுக்கப்படும் எந்தச் செயற்பாடும் வெற்றியளிக்கப் போவதில்லை என்பது மட்டுமல்ல தமிழ் மக்களை மீண்டும் ஒரு பேரழிவுக்கு கொண்டு செல்லவே வழிவகுக்கும்.

கடந்தகால போராட்டத்தின் தோல்விக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டுமல்லாது ஒவ்வொரு போராட்ட அமைப்புக்களும் அரசியல் கட்சிகளும் பொறுப்பாளிகள் என்பதோடு- இதில் ஒவ்வொரு தமிழ்மகனுக்கும் கூட நேரடியாகவோ மறைமுகமாகவோ பொறுப்புள்ளது என்பது சுட்டிக்காட்ட வேண்டும். எனவே, இன்று எம்முன் உள்ள பணி நடந்து வந்த பாதையில் இழைத்த தவறுகளை இனங்காணுதல், அவற்றைச் சுட்டிக்காட்டுதல், அதிலிருந்து சரியான பாதையை தெரிவு செய்தல் என்பதாகவே இருக்க வேண்டும். எனவே கடந்தகால தனது தவறுகள் குறித்தும், தான் சார்ந்த அமைப்பினது தவறுகள் குறித்தும் சுயவிமர்சனக் கண்ணோட்டத்தில் அணுகுவது அவசியமானது. மாறாக, தவறுகள் குறித்து மவுனம் சாதித்தல், தவறுகளை மூடிமறைத்தல், அதற்கும் மேலே சென்று வரலாற்றை திரிவுபடுத்திக் கூறுதல் எந்தவகையிலும் ஆரோக்கியமான செயற்பாடாக அமையாது.

இவற்றைக் கருத்திற்கொண்டு கடந்தகால போராட்டத்தில் எனதும், நான் சார்ந்திருந்த அமைப்பினதும் - அமைப்புக்களினது என்று சொல்வது இன்னும் பொருத்தமாக இருக்கும். - பங்களிப்பை, பெருமளவுக்கு நேரடியாக நான் சம்பந்தப்பட்ட விடயங்களை சுயவிமர்சன, விமர்சனக் கண்ணோட்டத்தில் முன்வைக்கின்றேன். எனது இந்தச் சுயவிமர்சனமானது நான் சார்ந்திருந்த அமைப்புக்களின் மீதான விமர்சனமாகவும், போராட்டம் மீதான விமர்சனமாகவும் இருப்பது தவிர்க்க முடியாததாகும்.

 

நேசன்

 

21/04/2011

(தொடரும்)