ஸ்டாலின் துற்றப்படுவது ஏன்? பகுதி 4
யூகோஸ்லாவிய பொருளாதாரத்தில் முதலாளித்துவ மீட்சி
யூகோஸ்லாவியாவில் உள்நாட்டு பொருளாதார உற்பத்தியில், முதலாளித்துவ மீட்சி பொருளாதார ரீதியாக எப்படி நிறைவேற்றப்பட்டது எனப்பார்ப்போம். 1951 இல் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட் கட்சியின் பெயரை, வெறும் கம்யூனிச கழகமாக மாற்றி அனைத்து மக்கள் கட்சியாக சிதைக்கப்பட்டது. அதற்குமுன்பே கட்சியின் அரைவாசி உறுப்பினர்களை கட்சியில் இருந்து வெளியேற்றியதுடன், சிறையிலும் தள்ளியது. பாட்டாளி வர்க்கத்தின் வர்க்ககட்சி என்பது மறுக்கப்பட்டது. “பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர சர்வாதிகாரம் என்ற கருவி, அதாவது சோசலிச அரசமைப்பு மேலும் மேலும் அவசியமற்றதாகிவிட்டது” என்று அறிவித்ததுடன் புதிய அரசியல் சட்டத்தை அழுல்படுத்தினர். மாறாக அனைத்து மக்களின் கட்சி என்ற பெயரில், ஜனநாயகம் என்ற சுரண்டும் உள்ளடகத்தை கம்யூனிச கழகமாக உட்புகுத்தியதன் மூலம், முதலாளித்துவ கட்சிக்கான வர்க்க முகத்தை மறைத்தனர்.
1950 இல் ‘அரசுக்கு சொந்தமான எல்லாத் தொழிற்சாலைகளையும், சுரங்கங்களையும் தகவல்துறை, போக்குவரத்து, காடுகள், வேளாண்மை பொதுஜன பயன்சார்ந்த அனைத்தையும் ‘தொழிலாளர்சுயநிர்வாகத்திடம்’ கொடுத்தது. (இந்த அரசியல் உள்ளடக்கம் டிராட்ஸ்கி 1920 களில் லெனுக்கு எதிராக கோஷ்டி அமைத்து பிளவு நடவடிக்கையில் ஈடுபட்டபோது வைக்கபட்டதாகும்) இதன்மூலம் தனியார் உற்பத்தி, தரகு முதலாளித்துவமாக மாறியது. ‘தொழிலாளர்கூட்டுக்கள்’ என்ற பெயரில் சுயட்சையாக இயங்கவும், வாங்கவும் விற்கவும், விலையை சொந்தமாக தீர்மானிக்கவும், கூலியை தீர்மானிக்கவும் லாபத்தை பகிரவும் அனுமதிக்கும் வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்தியது. இதை ‘உயர் வடிவிலான சோசலிச உடமை’ என்றனர். பாட்டாளி வர்க்க புரட்சியில் உற்பத்தியை அரசுடமையாக்குவதை இது மறுக்கின்றது. அதாவது உற்பத்தியை சமூகத்தின் சொத்தாக பேனுவதை அழித்து ஒழித்து, முதலாளித்துவ மீட்சிக்கான பாதையை செப்பனிட்டனர். ‘டூரிங்குக்கு மறுப்பு’ என்ற நூலில் மார்க்ஸ் எங்கெல்ஸ் “பாட்டாளி வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி உற்பத்திச் சாதனங்களை அரசுடமையாக மாற்றுகிறது” என்பதை டிட்டோ அப்பட்டமாக மறுத்தான். இதன்மூலம் இதைவலியுத்திய சர்வதேச கம்யூனிச நிலைப்பாட்டை ஒட்டிய ஸ்டாலின் நிலைப்பாட்டை மறுத்தான். இதையே டிராட்ஸ்கியம் “ஸ்டாலினை சோசலிச உலகின் மன்னராக முடிசூடிவிட விரும்பவில்லை” என்று கூறி நியாப்படுத்தினர். சோவியத் யூனியனில் ஆலைகளை உற்பத்தியாளர்களிடம் ஒப்படைத்து ‘உற்பத்தியை ஒழுங்கமைக்க’ கோரிய போது, லெனின் கடுமையாக விமர்சனம் செய்தார். அராஜாகவாத்தின் அடிப்படைக் கோட்பாடான இது, முதலாளித்துவ மீட்சிக்கு இது ஒரு வழிப்பாதையாகும். லெனின் இது தொடர்பாக விமர்சிக்கும் போது “நேரடியாகவோ, மறைமுகமாகவோ, தனித்தனி தொழிற்சாலைகள் அல்லது தனித்தனித் தொழில்முறைகளைச் சொந்த தொழிலாளர்கள் தமது உற்பத்தியைத் தமக்கே உடைமையாக்கிக் கொள்வதையும் அரசதிகாரத்தின் ஆணைகளைப் பலவீனப்படுத்தவும், அல்லது தடைப்படுத்தும் உரிமையையும் சட்டபூர்வமாக்குவதும் சோவியத் அதிகாரத்தின் ஆதாரக்கோட்பாடுகளைப் படுமோசமாகத்திரிப்பதும், சோசலிசத்தை அடியொடு கைகழுவி விடுவதுமாகும்” என்றார். ஸ்டாலினை மறுத்தன் உள்ளடக்கம் இங்குதான், இப்படித்தான் முதலாளித்துவ மீட்சியாக இருந்தது. ஸ்டாலினை மறுத்து அவதூற்றைப் பொழிந்தது என்பது, முதலாளித்துவ மீட்சியை நடைமுறை ரீதியாக இலகுபடுத்தவே. ஸ்டாலின் உயர்த்தி பிடித்த லெனினிய கோட்பாட்டை மறுக்க, ஸ்டாலினை அவதூறு செய்ய வேண்டியிருந்தது.
‘இரண்டாம் உலகயுத்தத்ததைத் தொடர்ந்து யூகோஸ்லாவியாவில் நிலச்சீர்திருத்தம் செய்யப்பட்டு, உழைப்பு கூட்டுறவு உருவாக்கப்பட்டது. ஆனால் பணக்கார விவசாய பொருளாதாரத்தின் மேல் கைவைக்கவில்லை’ ஸ்டாலினினும் சர்வதேச கம்யூனிச இயக்கமும் யூகோஸ்லாவியா கம்யூனிஸ்ட்டுகளும் மார்க்சிய நிலையை அமுல்படுத்தக் கோரினர். பணக்கார விவசாயிகளின் நிலத்தை கூட்டுமையாக்க கோரினர். ஆனால் டிட்டோ கும்பல் இதை மறுத்து முதலாளித்துவ மீட்சியை முன்னெடுத்த போதே, ஸ்டாலினின் பாட்டாளி வர்க்க நிலையை மறுத்து அவதூறு புரிய வேண்டியிருந்தது. இப்படி அவதூறு செய்தபடி 1950 ல் யூகோஸ்லாவியா அந்நிய வர்த்தகம் மீதான அரசின் எகபோகத்தைக் கைவிட்டதுடன், அதை தனியாருக்கு தரை வார்த்தனர். 1953 ல் டிட்டோ வெளியிட்ட அறிக்கை ஒன்றில் “குடிமக்கள் குழுக்களுக்கு தொழில் நிறுவனங்களை நிறுவவும் உழைப்பாளரைக் கூலிக்கமர்த்தவும் உரிமையுண்டு…. அரசுப் பொருளாதார நிறுவனங்களிடமிருந்து அசையாச் சொத்துகளை வாங்க தனியாருக்கு உரிமையுண்டு” என்று பிரகடனம் செய்தான். ‘1951 ல் விவசாயக் கூட்டுமையை கைவிடுவதாக அறிவித்’ததுடன், விவசாயிகளின் கூட்டுமையை கைவிடுவதாக பகிரங்கமாக அறிவித்து, அதை கலைக்கத் தொடங்கியது. 1950 ல் 6900க்கும் அதிகமாக இருந்தகூட்டுறவு அமைப்புகள், 1953 ல் 1200 ஆக குறைந்து. இது 1960 இல் 147 ஆகிப் போனது. முற்றாகவே அவை தனியார் மயமாகியது. கூட்டுடமை கைவிடப்பட்டு முதலாளித்துவ மீட்சி அரங்கேறிய போது ஸ்டாலின் மீதான தூற்றல் உயர்ந்த மட்டத்துக்கு தாவியது. இந்த மீட்சியை சோசலிசத்தின் முன்னேற்றம் என்றனர். டிராட்ஸ்கிகள் ஸ்டாலினிடம் இருந்து பாட்டாளி வர்க்க அதிகாரத்தை களைந்த, ‘ஜனநாயகபூர்வமான சோசலிசத்தை நோக்கிய முன்னேற்றம்’ என்று வர்ணித்தனர். இவருடன் குருச்சேவ் இணைந்ததுடன், முதலாளித்துவ மீட்சியை சோவியத் யூனியனிலும் தொடங்கினர்.
டிட்டோ, குருச்சேவ், டிராட்ஸ்கிய கும்பல் இணைந்து நடத்திய கச்சேரியில், ஸ்டாலின் பாட்டாளி வர்க்க அதிகாரத்தை ஒழித்துக்கட்டி நிறுவிய ‘முதலாளித்துவ மீட்சியை’ சோசலிசமாக காட்டினர். முதலாளித்துவ மீட்சி என்பதையே கோட்பாட்டு ரீதியாக மறுத்தனர். இவர்கள் மறுக்கும் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாக வருணித்து 1955 ல் டிட்டோ கூறும்போது, “யூகோஸ்லாவியாவில் சிறுபண்ணைகள் ஏதெனுமொரு விதத்தில் ஒன்றிணையும் நாள்வரும் என்ற எண்ணத்தை நாம் கைவிட்டு விடவில்லை. அமெரிக்காவில் இதை எற்கனவே செய்து விட்டனர். நாம் இந்த பிரச்சனைக்குத் தீர்வு கண்டாக வேண்டும்” இப்படி அமெரிக்காவின் தனியார் மூலதனக் குவிப்பையே கூட்டுடமையாக்கல் என பிரகடனம் செய்தான். எழை விவசாயிகளின் நிலத்தை சூறையாடிக் குவித்ததையே, சோசலிச கூட்டுடமையாக்கல் என டிட்டோ அறிவித்தான். இக்காலத்தில் தான் குருச்சேவ் டிட்டோவை ஆதாரித்து சொந்தநாட்டில் முதலாளித்துவ மீட்சியை தொடங்கி வைத்தான். டிராட்ஸ்கிகள் இதற்கு ஆரத்தி எடுத்து சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றனர்.
யூகோஸ்லாவியாவில் முதலாளித்துவ மீட்சியை ‘அமெரிக்க வகை’ கூட்டுடமையாக்கல் என்று கூறி, டிட்டோ அதை அப்பட்டமாக அமலுக்கு கொண்டு வந்தான். இதை டிட்டோ கொள்கை ரீதியாக விளக்கும்போது, “கூட்டடமையாக்கமும் உடமைப்பறிப்பும் ஒன்றே” என்றும் “இது கிராமப்புற பண்ணையடிமை முறையை பாதுகாத்து வறுமையை நீடிக்க வைக்கின்றது” என்றும் “பொருளாதார சக்திக்கிடையில் தடையில்லாத போட்டி வறுமையை ஒழிக்கும்” என்றும் பிரகடனம்செய்தான். முதலாளித்துவம் வறுமையை ஒளிக்கும் என்றான். இதை குருச்சேவ், டிராட்ஸ்கிய கும்பல் ஆதாரித்து நின்றனர். ஸ்டாலினிய பாட்டாளி வர்க்க சர்வாதிகார அதிகாரத்தை ஒழிப்பதன் மூலம் இதை நிறுவமுடியும் என்று ஒரேவிதமாக கச்சேரி வைத்தனர். இதன் அடிப்படையில் 1953 ல் உருவாக்கிய அரசு ஆணையில் “நிலம் வாங்கவும், நிலம் விற்கவும், கூலிக்கு ஆட்களை அமர்த்தவும், உற்பத்தியின் கொள்முதலை தனியாரிடம் வழங்கவும், குத்தகைக்கு நிலத்தைவிடவும்” அனுமதிக்கும் வகையில் சட்டத்தையே திருத்தினர். நிலம் அமெரிக்கவகை நிலக் குவிப்புக்கு இசைவாக சட்டம் தன்னை தகவமைத்துக் கொண்டது. தடையில்லாத வகையில் சொத்துக் குவிப்புக்கு, ஸ்டாலின் களப்பலியானர். இதன்மூலம் யூகோஸ்லாவியாவில் பணக்காரனுக்கும் எழைக்கும் உள்ள இடைவெளி அதிகாரித்துச் சென்றது. இதை விவசாயத் துறைக்கு பொறுப்பாக இருந்த அதிகாரியே 1959 ல் ஒப்புக்கொண்டர். அவர் தனது அறிக்கையில் “மொத்த தனியார் விவசாயிகளில் 5 ஹெக்டேருக்கு குறைந்தவர்கள் 70 சதவீதமாக இருந்தபோது, அவர்களிடம் மொத்த விவசாய நிலத்தில் 43 சதவீதமே சொந்தமாக இருந்தது. 10 ஹெக்டேருக்கு அதிகமாக வைத்திருந்த பணக்கார விவசாயிகள் 13 சதவீதமாகும். ஆனால் இவர்கள் 33 சதவீத நிலத்தை சொந்தமாக வைத்திருந்தனர். 10 சதவீதமான விவசாய குடும்பங்கள் நிலத்தை ஆண்டுதோறும் விற்கின்றனர் அல்லது வாங்குகின்றனர்” அமெரிக்கவகை சோசலிச கூட்டுடமையாக்கல் இப்படி விரைவுபட்டது. 1958 யூகோஸ்லாவிய போலி கம்யூனிச இதழ் ஒன்றில் வெளியான தகவல் ஒன்றில் “எட்டு ஹெக்டேருக்கு அதிகமாக நிலம் வைத்திருந்த குடும்பங்கள், 50 சதவீதமான விவசாய குடும்பங்களை 1956 ல் கூலிக்கு அமர்த்தியதை” வெளியிட்டு, அமெரிக்கவகை கூட்டுடமையாக்கல் விரைவுபடுவதை ஏற்றுக்கொண்டது. 1962 இல் ‘இரண்டு ஹெக்டேருக்கு குறைவான விவசாயக் குடும்பங்களின் வருமானத்தில் 70 சதவீதம் சொந்த உழைப்பை பணக்கார விவசாயிகளுக்கு விற்று கிடைக்கும்’ வருமானத்தில்தான், தம் வாழ்க்கையை ஒட்டினர். அமெரிக்கவகை கூட்டுடமையாக்கல் மேலும் விரைவுபடுத்தியதை இது நிறுவியது. 1963 ல் யூகோஸ்லாவியாவில் “நிலஉச்சவரம்பு 10 ஹெக்டேராக இருந்த போதும், அதைவிட அதிகமான நிலத்தை சொந்தமாக கொண்ட 1000க்கும் மேற்பட்ட பணக்கார விவசாயிகள் இருந்ததுடன், 30 ஹெட்டருக்கு அதிகமாக நிலத்தை கொண்டிருந்தனர்” அரசு புள்ளி விபரங்களே இப்படி இருந்தபோது இதை சோசலிசம் என்றனர். இதை குருச்சேவ்வும், டிராட்ஸ்கிகளும் வானளவு புகழ்ந்து அங்கீகரித்தனர்.
முதலாளித்துவ மீட்சி நிலத்துக்கு வெளியில் பல்துறைகளில் பல்கிப் பெருகியது. 1953ல் உருவாகிய சட்டம் ஒன்று அன்னிய ஏகபோக நிறுவனங்களுடன் தொழில் நிறுவனங்கள் உடன்பாடுகளை செய்ய வசதியளித்தது. 1956 ல் உள்ளாச்சி அமைப்புகள் வரிகளை வசூலித்து தனியார் முதலீட்டை உருவாக்க ஊக்குவித்தது. யூகோஸ்லாவியாவின் முதலீட்டு வங்கி தனது அறிக்கை ஒன்றில் 1952 க்கும் 1956 க்கும் இடையில் மொத்த மூதலீட்டில் 32.5 சதவீதம் வெளிநாட்டு பணம் என்பதை தெரிவித்தது. அமெரிக்க வெளிநாட்டு அமைச்சர் தீன்ரஸ்க், யூகோஸ்லாவிய மூலதனம் பெரும்பாலும் மேற்கத்தைய நாடுகளில் இருந்ததான் கிடைக்கிறது என்றார். ஸ்டாலின் ஏன் தூற்றப்பட்டார் என்பதும், பாட்டாளி வர்க்க சர்வாதிகார அதிகாரத்தை என் வெறுக்கின்றனர் என்பதற்கான எதார்த்த உள்நாட்டு கொள்கை நிர்வாணமாக்கி விடுகின்றது. ஆனால் டிராட்ஸ்கிகள் “ஸ்டாலினிச அதிகாரம் ஜார் ஆட்சியிலிருந்து சீதனமாய் பெறப்பட்ட பின்தங்கிய பொருளாதாரநிலை, அதிகார இயந்திரம், சர்வாதிகார கருத்தியல் தொடர்ச்சி இவைகளில் இருந்து தொடங்கியது” என்கின்றனர். ஸ்டாலினை இப்படித்தான் தூற்றினர். தூற்றியபடிதான் டிட்டோ நாட்டை ஏகாதிபத்திய மூலதனத்துக்கு விற்றான். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை, அதன் அதிகாரத்தை ஜார் ஆட்சியின் சீதனம் என்றனர். பின்தங்கிய பொரளாதாரத்தை சார்ந்து ஸ்டாலின் அதிகாரம் நிலவியதாக கூறி, நவீன உற்பத்திக்கும் அதன்வகை ஆட்சி அமைப்புக்கும் கதவை திறக்ககோரினர். டிராட்ஸ்கிகள் “புரட்சியை சூழவுள்ள நிலைமைகளை எதிரிடும் தத்துவப் பலமும் மனிதக் குணங்களும் ஸ்டாலினிடம் இருக்கவில்லை என்பதோடு புரட்சியை உருக்குலைக்கும் நடைமுறைகளும் தொடர்ந்து வளர்ந்தன” என்று கூறினர். நாட்டையும் பாட்டாளி வர்க்க சர்வாதிரத்தையும் சூழவுள்ள நிலைமைக்கு இசைவாக மாற்றவேண்டும் என்றனர். இதைச் செய்த குருச்சேவ், டிட்டோ கும்பலின் முதலாளித்துவ மீட்சியை சோசலிசமாக வருணித்து அதை ஆதாரிக்கும் இவர்கள், பாட்டாளி வாக்கத்தின் எதிரியாக தம்மை வெளிப்படுத்தி நிற்கின்றனர். இதை உருவாக்கும் தத்துவப்பலத்தை ஸ்டாலின் கொண்டிருக்கவில்லை என்பதே, டிராட்ஸ்க்சியத்தின் பலமான குற்றச்சாட்டு. இதை மூர்க்கமாக எதிர்த்த ஸ்டாலின் குணத்தை மனிதகுணமற்ற செயலாக டிராட்ஸ்கியம் வர்ணிக்கின்றது. குருச்சேவ், டிட்டோ வகைப்பட்ட மனிதகுண முதலாளித்துவ ஜனநாயகத்தைப் போற்றி, இதற்கு எதிரான ஸ்டாலின் நிலையை உருக்குலைக்கும் நடைமுறை என்று அவதூறை பொழிந்தனர். தொடர்ச்சியாக டிராட்ஸ்கியம் தன்னைத்தான் அம்பலப்படுத்தியபோது, தமது முந்தியநிலைக்கு சாயம் அடிப்பது அவசியமாகியது. ஸ்டாலினிசத்துடன் ஏற்பட்ட மோதல் டிட்டோவை பிற்காலத்தில் சோவியத் அணியும் அல்லாத முதலாளிய அணியும் அல்லாத அணிசேரா நாடுகளின் அணி என்ற கருத்துக்கு துரத்திவிட்டது. டிட்டோவின் சோசலிசப் போக்கை ஸ்டாலினிச அதிகாரத்தின் போக்குக்கு எதிரான சோசலிசப் பிரயத்தனமாகவே காணவேண்டும் என்றனர்.
இப்படித்தான் டிராட்ஸ்கிய கோட்பாடுகள் அலைபாய்ந்தன. சோசலிசமும் அல்லாத முதலாளித்துவமும் அல்லாத வர்க்கமற்ற நிலைக்கு பிற்காலத்தில் யூகோஸ்லாவியா சென்றதாக டிராட்ஸ்கியம் பிதற்றுகின்றது. மார்க்சியத்தின் அரிச்சுவடியையே மறுக்கின்றது. சோசலிசமும் அல்லாத முதலாளித்துவமும் அல்லாத சமுதாயம் கம்யூனிச சமுதாயத்தில் மட்டுமே சாத்தியம். அப்படியானல் யூகோஸ்லாவியா கம்யூனிச சமூகமாக மாறிவிட்டதா!? இதை டிராட்ஸ்கிய கோட்பாட்டின் உள்ளடகத்துக்கு விட்டுவிடுவோம். ஸ்டாலின் அவதூறுகளில் பிறக்கும் கள்ளக்குழந்தைகள், இப்படி அப்பன் பெயர் தெரியாத அனாதைக் குழந்தையாக பிறப்பது தவிர்க்க முடியாதது. ஆனால் டிராட்ஸ்கியம் ஸ்டாலினுக்கு எதிரான டிட்டோவின் முதலாளித்துவ மீட்சியை ‘சோசலிசப் பிரயத்தனமாகவே காணவேண்டும் என்று கூறத் தவறவில்லை. அதேநேரம் ஒன்றுக்கொன்று முரணாக இதை சோசலிசநாடு என்று சொன்னதை மேலே பார்த்தோம். பாட்டாளி வர்க்க ‘ஸ்டாலினிச அதிகாரத்தின் போக்குக்கு’ எதிரான சோசலிச முயற்சியாக இதை டிராட்ஸ்கிய கோட்பாடுகள் வரையறுத்தன. நான்காம் அகிலம் தன் விபச்சாரத்தை மூடிமறைக்க பிற்காலத்தில் நடந்தது என்று பூச்சூட்டி விடுகின்றனர். குருச்சேவ்வின் ஆட்சி இருந்த காலத்தை டிராட்ஸ்கியம் ‘தொழிலாளர் அரசு நடக்கும் நாடுகள்’ என்றே கூறுகின்றனர். மார்க்சியத்தின் அரிச்சுவடியை மறுக்கும் இவர்கள், அதன்மேல் தமது பொம்மை ஆட்சியை நிறுவவே விரும்பினர். முதலாளித்துவ மீட்சியை விரைவு படுத்தவே விரும்பினர். இதனால் அதை தொழிலாளர் அரசு நடக்கும் ஆட்சி என்கின்றனரே ஒழிய, பாட்டாளி வர்க்க ஆட்சி பற்றி இவர்கள் பேசுவதில்லை. பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம், வர்க்கப் போராட்டம் பற்றி விரிவான எல்லைக்குள் எதையும் மூச்சுவிடுவதில்லை.
குருச்சேவ்வுக்கு சாமரம் வீசியபடி, டிட்டோவின் முயற்சியை சோசலிச முனைப்பாகவும் முதலாளித்துவமற்ற போக்காகவும் காட்டியபடி டிராட்ஸ்கிய கோட்பாடுகள் வளர்ச்சி பெற்றன. அதை மெய்பிக்கும் வகையில் டிட்டோ அரசு செயல்பட்டது. தொழிலாளர் அரசாக, தொழிலாளார் மேற்பார்வையில் தனியார்மயமாக்கிய நிறுவனங்களில் நிலைமையை ஒட்டி 1958 களில் எழுதிய உள்சுற்று கடிதம் ஒன்றில் “சுயநிர்வாக தொழில்துறையில் தொழிலாருக்கும் உயர்அதிகாரிக்கும் இடையில் சம்பளவிகிதம் 40 மடங்கு அதிகமாக இருப்பதையும், சில தொழல்நிறுவனத்தலைவர்களின் போனஸ் உற்பத்தி மையத்தில் மொத்த தொழிலாளர்கள் பெறும் மொத்த கூலிக்குசமமாககூட இருந்தது” சோசலிச முனைப்பாக முதலாளித்துவம் அல்லாத தொழிலாளர் அரசு என்று கூறியபடி, முதலாளித்துவ மீட்சியை கொள்வதை காணவிடாது ஸ்டாலின் அவாதூறுகளால் தங்கள் கண்ணையே தோண்டியெடுத்தனர்.
ஆனால் முதலாளித்துவ மீட்சி நாலுகால் பாய்ச்சலில் முன்னெடுக்கப்பட்டது .1961 ல் “அந்நியச் செலாவாணியை வாங்கிட தனியாருக்கு உரிமையுண்டு” என்று டிட்டோ அறிவித்தான். 1963 ல் தனியார் மூலதனத்தை வளர்க்கும் கொள்கையை ஊக்கவிக்கப்பட்டது. 1963 இல் யூகோஸ்லாவியாவில் 1.15 லட்சத்துக்கு மேற்பட்ட தனியார் மூலதனங்கள் காணப்பட்டது. இது தொடர்ந்து பெருகிச் சென்றது. இது சட்டபடி 5 பேரை கூலிக்கு அமர்த்த அனுமதித்த போதும், 10 மடங்கு முதல் 500 க்கும் மேற்பட்டவரைக் கூட தனியார் உற்பத்தி கொண்டிருந்தது. அத்துடன் சில தனியார் விற்பனை 10 கோடி தினாராகவும் இருந்தது. டிராட்ஸ்கியம் வரையறுத்த முதலாளித்துவமும் அல்லாத சோசலிச முனைப்பில் மூலதனம் குதுகலத்தால் கலகலத்தது. ஸ்டாலின் அவாதூறுகள் மூலம் ஸ்டாலினிய கால சோசலிச உள்ளடங்கங்கள் அனைத்தும் அழிக்கப்பட்டன. 1961 ல் யூகோஸ்லாவியாவில் வெளியான செய்தி ஒன்றின்படி “சிலரது வருமானம் ஒரு மாதத்துக்கு 10 லட்சம் தினாராக இருந்தது. ஒரு முதலாளித்துவ நாட்டின் நிலைக்கு முதலாளித்துவ சர்வாதிகார அடக்கு முறைமூலம் உருவாக்கப்பட்டது. இதை எதிர்த்த கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ச்சியாக வேட்டையாடப்பட்டனர். சொத்துடைய வர்க்கத்தின் சுரண்டும் ஆட்சி யூகோஸ்லாவிய மக்களின் மேல் நிறுவப்பட்டது. யூகோஸ்லாவியாவில் “தனியார் வாணிபமும், தனியார் சேவை நிறுவனங்கள், தனியார் வீட்டுவசதி அமைப்பு, தனியார் போக்குவரத்து, தனியார் வங்கி” என்று 1960 களில் பெரும் எண்ணிக்கையில் தனியார்துறை பெருகிவந்தது. 1961 ல் பெல்கிரெட்டில் வெளியான ஒரு பத்திரிகையில் “1960 இல் 116 தொழில்நிறுவன உரிமையாளர்கள் ஒவ்வெருவரும் ஒருகோடி தினாருக்கு அதிகமான வருமானத்தை பெற்றனர். சிலர் 7 கோடி தினாரை பெற்றதாக செய்தி வெளியிட்டது. யூகோஸ்லாவியாவின் ஆட்சி மூலதனத்தின் ஆட்சியே ஒழிய வேறு ஒன்றும் அல்ல. ஸ்டாலின் சரியாக கூறியது போல், டிட்டோவால் நிறுவப்பட்ட சர்வாதிகாரம் முதலாளித்துவ சர்வாதிகாரமேயாகும்.
இந்நூலின் முந்தைய பகுதி
1. ஸ்டாலின்துற்றப்படுவதுஏன்? :பகுதி – 1