எல்லாரும் கொஞ்சம் சத்தம் போடாமை.., கொஞ்சம் அமைதியாய் இருங்கோ.., இப்ப வந்து பேசப்போறாங்கள். ஏதோ எங்களை நாகரீகம் தெரியாத பட்டிக்காட்டு சனங்கள் எண்டு நினைச்சுப் போடுவாங்கள். வெளிநாடென்று வந்து இன்னும் திருந்தேல்லை போலைக் கிடக்கு.., ஏதோ எங்கடை நல்ல காலத்துக்கு நிக்கிற டொக்ரரும் ஆரோ தமிழ்ப்பிள்ளை போல இருக்கு.., அவதான் பெரிய டொக்டர் போல தெரியுது.., என அங்கு நின்ற எல்லோரையும் சமாதானப்படுத்தி ஆறுதல்படுத்திக் கொண்டிருந்தார் சுவிஸ் மாமன்.
ஐயோ... என்ரை பிள்ளைக்கு ஒண்டும் நடக்கக்கூடா... கடவுளே கருணைகாட்டு... ஆற்ரை பாழாய்போன கண் பட்டதோ... கடவுளே கடவுளே எனத் தலையில் அடித்தபடி புலம்பிக் கொண்டிருக்கிறாள் தாய். அம்மா கொஞ்சம் பேசாமல் கிட பார்க்கிற சனங்கள் எல்லாம் பழிக்கப்போகுதுகள். எங்கை வந்து என்னமாதிரி நடக்க வேணுமெண்டு இன்னும் சரியாகத் தெரியாத ஆக்களாய் இருக்கிறியளே..., எனப் புறுபுறுத்துக் கொண்டிருந்தான் மூத்தமகன்.
கதவைத் திறந்தபடியே வெளியே வந்தாள் டொக்டர் சுகந்தினி. கையை உயத்தியபடியே, ஆரும் பயப்படும்படியா ஒண்டுமில்லை. பிள்ளை நல்லாக்களைச்சுப் போனா..., ம்... சரியான பலவீனமா இருக்கிறா... அதுதான் அவ மயங்கி விழுந்திருக்கிறா... என நினைக்கிறம். இப்ப உடனை ஒண்டும் சொல்ல முடியாது. இப்ப அவவுக்கு சரியான அமைதியும் றெஸ்ற்ரும் தேவை. நான் அவவுக்கு தேவையான சில மருந்துகளை ஊசி மூலமா ஏத்தியிருக்கிறன் தயவுசெய்து ஒருத்தரும் உள்ளை போய்ப் பிள்ளையைக் குழப்பவும் வேண்டாம், மற்றவரையும் ஒண்டும் இடைஞ்சல்ப் படுத்தவும் வேண்டாம்.
ஐயோ.. கடவுளே நீ யார் பெத்த பிள்ளையோ..? நான் கும்புடுற அம்மனே நேரிலை வந்து சொல்லுறது போல கிடக்கு. பிள்ளை, நீ எப்பவும் கடவுளேயெண்டு நல்லா இருப்பாய் பிள்ளை.
டொக்ரரின் இரு கரங்களையும் அள்ளி அணைத்து முத்தமிட்டு நன்றி தெரிவித்தாள் தாய். சுகந்தினியும் அந்தத் தாயினை அணைத்துத் தழுவிக் கொண்டபடியே.., நான் உங்களுடன் கொஞ்சம் கதைக்க வேணும். என்னோடை இப்பிடி வாருங்கோ.., என்றபடி அந்தத் தாயினை தன் அலுவலக அறையினுள் அழைத்துச் செல்ல, அங்கிருந்த அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாகக் கழரத் தொடங்கினர்.
அம்மா நீ இங்கயே நில்.., அங்கே போய் ஆக வேண்டிய மிச்ச அலுவல்களை முடிச்சுப்போட்டு உடனை வாறன்.., எனக் கூறியபடி மகனும் அவர்களோடு சேர்ந்து விலகிப் போனான்.
தனக்குப் பக்கத்திலே இருந்த கதிரையை இழுத்துவிட்டபடியே.., இல்லை.., இப்படிக் களைச்சு மயங்கி விழுற அளவுக்கு அப்படி இண்டைக்கு என்னதான் செய்தவ..? நடந்ததைச் சொன்னாத்தான் என்னவோ ஏதோவோ எண்டு பார்க்க முடியும் எங்களாலை.., என ஆவலோடு கேட்டாள் சுகந்தினி.
பிள்ளை அவதான் எங்கடை மூத்த பொம்பிளைப்பிள்ளை. இண்டைக்குத்தான் இவளுக்கு சாமத்திய வீட்டுக் கொண்டாட்டம் நடத்தினாங்கள். கிட்டத்தட்ட எல்லாம் முடிஞ்சு.., கடைசிச் சட்டையைப் போட்டும் ஒருக்கா ஊஞ்சலிலை எல்லாருமா சேந்து ஆட்டிற மாதிரி படமெடுத்து முடிச்சுப் போட்டு.., ராவுப் பார்ட்டியை தொடங்கலாமெண்டு ஆயத்தப்படுத்தேக்கை தான் இவள் இப்பிடி மயங்கி விழுந்து போட்டா..., பிள்ளை, என சிணுங்கிய மூக்கை பேப்பரினால் துடைத்தெடுத்தாள்.
ஆ.., அப்பிடியே.., அப்ப விழா இன்னும் முடியேல்லையே..! அப்ப எப்ப நீங்க விழாவைத் தொடங்கினீங்கள்..!? மிகுந்த வியப்போடும் ஆவலோடும் கேட்டாள் சுகந்தினி.
பிள்ளை..., ஐயர் நாள்ப்பாத்துச் சொன்னதாலையும், எங்கடை சொந்தக்காறரெண்டு வெளிநாடுகளிலையிருந்தும் நிறையப் பேர் வந்ததாலையும்.., மேக்கப்புக்காரப் பொட்டையும் தனக்கு வெளிக்கிடுத்த குறைஞ்சது மூண்டு நாலு மணித்தியாலம் தேவைப்படும் எண்டதாலையும்.., நாங்கள் ஐஞ்சு மணிக்கு தொடங்கினாத் தான் எல்லாத்தையும் ஒரு மாதிரி முடிக்கலாமெண்டதாலை.., நான் ஒரு நாலு மணிபோலையே பிள்ளையை நித்திரையாலை எழுப்பிப் போட்டன்.
அப்ப நான் எழுப்பேக்கை அவள் கொஞ்சம் கஸ்ற்ரப்பட்டவள்.. தான், மாமிமார் மச்சாள்மாரெண்டு நிறையப் பேர் நிண்டதாலை.., இரவிரவா ஒரே கதைதான். நித்திரை கித்திரை கொண்டிருக்க மாட்டாளெண்டு எனக்குத் தெரியும் பிள்ளை. ஆனா... நானொண்டும் செய்யேலாது தானே... பிள்ளை.
ம்..,
பிறகு பால் வைச்சு வெளியிலை எங்கடை தோட்டத்திலைதான் பெரிய பிளாஸ்ரிக் சுவிமிங்பூல் ஒண்டிலை வைச்சு குளிச்ச வாத்தனாங்கள். எங்கடை சொந்தக்காறரிலை நாப்பத்திரண்டுபேர் நிண்டதாலை..! ரட்டைத்தானம் வரக்கூடாதெண்டு போட்டோக்காரப் பொடியனையும் பிடிச்சு எல்லாமா நாப்பத்திமூண்டுபேர், பாலும் வைச்சு குளிக்கவும் வாத்தம்.
அப்பவும் ஏதோ செய்யிதெண்டு சொன்னவள் தான், இண்டைக்குத் தானே.., இது ராத்திரி நித்திரை காணாட்டி அப்படி இப்படித்தான் இருக்கும்...கொஞ்ஞம் பொறணையெண்டு ஒரு மாதிரி சமாளிச்சுப் போட்டேன்.
நாப்பத்திமூண்டு பேரும் பால்வைச்சு, அதுவும் வெளியிலை அதிகாலை ஐஞ்சு மணிக்குத் தலையிலே தண்ணி வாக்க குளிந்து.., பிள்ளை விறைச்சு... அவளுக்கு கஸ்ற்ரமா இருந்திருக்கும். அவள் குளிருதெண்டு தலையுக்கே ஏதோ செய்யுதெண்டும் சொன்னவள் தான், ஆனால் இதுகளையெல்லாம் பார்க்க முடியுமே.. செய்ய வேண்டுமெண்டு வெளிகிட்ட பிறகு குளிரெண்டால் என்ன.., வெயிலெண்டாலென்ன இதுகளைப் பார்த்தால் சாமத்திய வீடு செய்யேல்லாது தானே பிள்ளை. இதுவெல்லாம் எங்கடை எத்தனை வருசக் கனவுகளும் நினைவுகளுமல்லே.., அவளுக்கு எட்டுவயது தொடங்கேக்கையே நாங்கள் பிள்ளையின்ரை சாமத்தியத்தை எப்படிச் செய்ய வேணுமெண்டு பிளான் பண்ணிப்போட்டம். அதைவிட நாங்க சும்மா இருந்தாலும் ஊர்ச் சனங்கள் விட்டாத் தானே.
உங்கடை பிள்ளைக்கு எப்போ செய்யப்போறையள் எண்டும் எப்படிச் செய்யப் போறையள் எண்டும் நெடுக நச்சரிச்சபடி. அது மட்டுமே நாங்கள் அங்கே ஒரு சாமத்தியத்துக்குப் போனனான். அவை அப்படிச் செய்தவை, இவை இப்படிச் செய்தவை எண்டு எங்களையும் உருவேத்தினபடி தானே.
வைத்த கண் வாங்காமல் அப்படியே பார்த்துக் கொண்டிருந்தாள் சுகந்தினி..
பிறகு மேக்கப்புக்காரப் பிள்ளை ஒரு மூண்டு மணித்தியாலத்திலை எல்லாத்தையும் முடிச்சுப் போட்டா. ஆனால் கூறை கட்டத்தான் கொஞ்ச நேரமெடுத்தது. அது பிள்ளை இந்தியாவிலே ஒரு கடையிலே ஓடர் கொடுத்து கைவேலைப்பாடுகள் நிறையவுள்ளதா இருக்க வேணுமெண்டு சொல்லித்தான் நெய்வித்தனாங்கள். அது பிள்ளை கிட்டத்தட்ட பதின்மூண்டு பதினாலு கிலோ நிறைவரும். நிறைய கல்லு வேலைப்பாடுகளும் கைவேலைப்பாடுகளும் கொண்ட சேலை. எங்கடை பிள்ளையின்ரை உயரத்துக்கும் நிறைக்கும் கொஞ்சம் கூடிப்போச்சுத் தான். ஆனால் இங்கே ஒருத்தரும் கட்டாத மாதிரி இருக்க வேணுமெண்டதாலையும் இவள்தான் முதலிலை அப்படிக் கூறை கட்டினாள் எண்டு எல்லோரும் சொல்ல வேணும் எண்டு நினைச்சுத்தான் அதை எடுப்பிச்சனாங்கள். கட்டியும் காட்டினாங்கள்.
அந்தச் சீலைக் கலருக்கேற்ற நிறத்திலை தான் நல்ல பெரிய சடைநாகமும் செய்து போட்டனாங்கள். சடைநாகம் போட்டவுடனே கழுத்துக்குள்ளே நோகுது எண்டும் தலையை திரும்பக்கூட முடியேல்லையெண்டும் குனியக்கூட முடியேல்லை எண்டும் அப்ப பிள்ளை சொன்னவள், நான் தான் உந்த ஆராத்தியெல்லாம் முடிஞ்சவுடனை உதுகளைக் களட்டிப் போட்டு வேறே உடுப்புப் போடுறது தானே எண்டு பிறகும் சமாளிச்சப் போட்டன்.
இரண்டு கைகளையும் கன்னத்தில் வைத்தபடியே கதையை சுவாரஸ்யமாக கேட்டுக்கொண்டிருந்த சுகந்தி, கடவுளே எங்கடை சனங்கள் இன்னுமா இந்த மோகத்தில்..!? தனக்குள்ளேயே மனம் புளுங்கி வேதனையும் கொண்டவளாய் அவளது நினைவுகள் எங்கேயோ எங்கேயோ போகத் தொடங்கியது.
அவளின் நினைவலைகளைத் தடுத்தவளாய்.., என்ன பிள்ளை கேட்கிறையோ.. பிறகு வீடீயோக்காரத் தம்பியும் போட்டோக்காரப் பெடியனும் தங்களுக்கும் குறைஞ்சது ஒவ்வொரு மணித்தியாலமாவது தரவேணுமெண்டு கேட்டதாலே அவை இரண்டு பேருக்கும் ஒரு ஒண்டரை மணித்தியாலம் கொடுத்தனாங்கள். ரண்டுபேரும் சேந்து கனநேரம் வடிவாய்ச் சுழட்டிச் சுழட்டித்தான் எடுத்தவை.
அந்த வீடீயோக்காரப் பொடியன், பிள்ளையை மூண்டுதரம் சுழரச் சொன்னதாலையும் அந்த வீடீயோ வெளிச்சமும் கண்ணுக்கே குத்தியதாலையும்.., பிள்ளை தலை சுற்றுதெண்டும், என்னாலே இனி ஏலாதெண்டு சொல்லிப் போட்டாள்.
கடவுளே எனக்கு காலும் ஓடேலை... கையும் ஓடேல்லை... எல்லாத்தையும் இவள் குழப்பிப்போடுவளோ எண்டு பயந்து போனம். பிறகு ஒரு துண்டுப் பாணும், கொஞ்ச யூசும் கொடுத்து ஒருமாதிரி அவளை உசார்ப்படுத்திப் போட்டு.. இப்படி எடுத்தாத் தான் நயகரா நீர் வீழ்ச்சியிலை குளிக்கிறது மாதிரியும், தாஜ்மகாலுக்கு முன்னாலே நடப்பது போலையும் காட்டுவினம் எண்டு... உந்த வீடியோ ஒண்டுதானே உலகம் முழுக்க காட்ட உதவும் எண்டு சொல்லித் தான் அவளைச் சமாளிச்சனான்.
பிள்ளை சாமத்தியப்பட்ட அண்டே அக்கம் பக்கத்திலுள்ள எல்லாரையும் கூப்பிட்டு உடனை வாக்க வேண்டிய முதல் குப்பைத் தண்ணியை வாத்துப் போட்டம். பிறகு கொஞ்ச நாளாலை ஜயரைக் கூப்பிட்டு செய்ய வேண்டியதை எல்லாம் செய்து போட்டுத் தான் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பினாங்கள். ஆனால் இண்டைக்குச் செய்யிற கொண்டாட்டம் வீடியோவுக்கும் போட்டோவுக்குமாத்தான் எண்டு சொன்னதாலே அவளுக்கும் நல்லா விளங்கிப் போச்சு.
அடுத்த விசையம் என்னெண்டால்... பிள்ளைக்கு சேப்பிரஸாக இருக்கோணுமெண்டு ஒரு அமெரிக்க நீளக் காரொண்டிலை அழைச்சுக் கொண்டுபோறதுக்கு ஒழுங்கு செய்திருந்தனாங்கள். அதிலைபோக பிள்ளைக்கு விருப்பம் இருக்கெண்டு எங்களுக்குத் தெரியும். ஒஸ்க்கார் விழாவிலே வந்திறங்கிற நடிகைகள் மாதிரித்தான் எங்கடை பிள்ளையும் போய் இறங்கி வாசலிலை இருந்து சிவப்புக் கம்பளம் விரிச்சு அதிலை அவள் நடந்து வர ரண்டு பக்கமும் பிள்ளையள் நிண்டு பூத்தூவி அழைச்சுக் கொண்டு போக.., பிள்ளைக்கும் ஒரு மதிப்புத் தானே.. அவளோடை படிக்கிற வெள்ளைக்காரப் பிள்ளையளும் வந்தவை. ஒழுங்கா எல்லாம் பார்ப்பினம். பிறகு போய்க் கதைப்பினமல்லே...
இதிலை பகிடி என்னெண்டால் எங்கடை வீட்டிலையிருந்து விழா நடக்கிற இடத்துக்குப் போக ஒரு ஆறோ ஏழோ நிமிசம் காணும். ஆனால் ஆறுநிமிசம் எண்டாலென்ன ஒரு மணித்தியாலம் எண்டாலென்ன ஒரு மணித்தியாலத்துக்கு அதேகாசு தான் கட்ட வேணுமெண்டு அந்தக்கார்க் கொம்பனி சொல்லிப் போட்டுது எண்டதாலை, அப்ப ஒரு மணித்தியாலம் பிள்ளையைக் கொண்டுபோய் உந்தக் காடு கரம்பையெல்லாம் சுத்திக் கொண்டுவரச் சொல்லிப் போட்டுது மனுசன். சும்மா ஏன் விடுவான். சுத்திவரட்டும் எண்டு நானும் ஓமெண்டு சொல்லிப் போட்டேன். எப்படியும் கட்டிற காசு தானே.
கனடாவிலேயும் சுவிஸ் நாட்டிலையும் தங்கடை பிள்ளையளை கெலிஹொப்டரிலே
கொண்டு வந்து இறக்கினதா நாங்களும் கேள்விப்பட்டனாங்கள் தான். அதுக்கு இங்கை நாங்களும் பல முயற்சிகள் எடுத்தனாங்கள், ஆனால்பொலிஸ் அதற்கு அனுமதி தரமாட்டான் எண் டதா லை அதைக் கைவிட்டிட்டம் . இல்லாட்டி அதிலையும் ஒரு விளையாட்டுக் காட்டியிருக்கலாம்.
கார் ஓடினவன் வெள்ளைக்காரன். சரியா சொன்ன நேரத்துக்கு வந்து நிண்டான். அப்பவும் பிள்ளை இறங்கேக்கை வயித்துக்கை ஏதோ செய்யிற மாதிரிக் கிடக்கெண்டும் சொன்னவள். எனக்கு ஒரே பயம். இவள் வருத்தமெண்டு சொல்லி எல்லாத்தையும் குழப்பிப் போடுவாள் எண்டு, நான் பயந்துபோய் அதொண்டும் இருக்காது எண்டு, இந்தக் காரிலை போனால் கப்பலிலே போன மாதிரித்தான் இருக்குமெண்டு கதைக்கிறவங்கள் எண்டு கொப்பா அடிக்கடி சொல்லுறவர் எண்டு திரும்பவும் பிள்ளையை ஒரு மாதிரிச் சமாளிச்சப் போட்டன்.
பிறகு பிள்ளைக்கு முன்னாலே பூத்தட்டு அகல்விளக்கு, குத்துவிளக்கு ஆராத்தித் தட்டுகள் எண்டு எக்கச்சக்கமான ஆட்கள். வழமையா ஒரு ஒன்பது பேர்தான் குத்துவிளக்குக்கோ அல்லது ஆராத்திக்கு ஆக்களை வைக்கிறது வழக்கம் ஆனால் நாங்கள் ஆக்கள் கூடினதாலையும் ஒரு வித்தியாசமா இருக்கோணுமெண்டு நினைச்சதாலை பதின்மூன்றுப்படி ஆக்களை ஒழுங்கு செய்திருந்தனாங்கள்.
பூத்தட்டுப் பிள்ளையளுக்கெண்டு ஒரே நிறத்திலை பாவாடை சட்டையளும், அகல்விளக்குக்காறருக்கு இன்னுமொரு கலரிலே பாவாடை சட்டையளும் குத்துவிளக்குக் குமரியளுக்கு காவ்சாறியளும் ஆராத்திப் பெண்களுக்கெண்டு ஒரே நிறத்திலை சாறியள் எண்டு எல்லாருக்கும் எடுத்துக் கொடுத்தனாங்கள். பாக்கிறதுக்கு அந்தமாதிரி எல்லாற்ரை கண்ணைக்குத்துற மாதிரித்தான் அமைஞ்சிருந்தது. உண்மையிலை எல்லாரும் ஒழுங்கா வரிசையிலை வர, ஒரு கண்கொள்ளாக் காட்சியாத் தான் இருந்தது.
உண்மையிலே இந்த நாட்டிலே ஒருத்தரும் இப்படி இதுவரை செய்யேல்லைத்தான். அந்தப் பெருமையும் புகழும் எங்களைத் தான் சேரும். இனி- மேல் எங்களைப் பார்த்து எல்லாரும் இப்படித்தான் செய்யத் துவங்குவினம். இதைச் சொல்லும் போது சோர்ந்து துவண்டுபோயிருந்த அவளது முகத்தில் சந்தோசக்கோடுகள் லேசாகத் துளிர்விடத் தொடங்கியது. அந்தத் தாயில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு ஆச்சரியங் கொண்டாள் டொக்ரர் சுகந்தினி.
கடவுளே எங்கடை சனங்கள்..! இதுகளை..., சிரிப்பதா..! அழுவதா..!! அவள் தனது மனதுக்குள் புளுங்கிக்கொண்டாள். வாசலுக்கே உள்ளட ரண்டு பக்கமும் மண்டபக்கதவு உயரமளவிலை பிள்ளையின்ரை கட்டவுட்டுக்கள். ஒண்டு கும்பிட்டுக் கொண்டு நிக்கிற மாதிரியும் மற்றது விளக்குக் கொழுத்திற மாதிரியும். அதையும் இந்தியாவிலை இருந்துதான் செய்விச்சனாங்கள்.
அப்படி ஜெயலலிதா நிக்கிறமாதிரித் தான் அந்த மாதிரி அவங்களும் செய்திருந்தாங்கள். பிள்ளை கோலுக்குள்ளை நுழைஞ்சபோது நாதஸ்வரம் தவில்ச் சத்தத்தைக் கேட்டவுடனை அவள் பயந்தேபோயிட்டாள். அவள் முந்தி ஒருநாளும் இதை நேரடியாக் கேக்கவில்லைத் தான். என்னைக் கூப்பிட்டு பயமா இருக்கெண்டும் வெக்கமா இருக்கெண்டும் சொன்னவள். தன்னோடைபடிக்கிற பிள்ளையளும் வந்திருக்கினம்.., எனக்கு ஒருமாதிரியிருக்கு எண்டும் சொன்னவள். அதுக்கும் நான் விளக்கம் குடுத்து, அந்தக் கூட்டை பிரான்சிலையிருந்து கூப்பிட்டனாங்கள் எண்டும் அதுகும் ரண்டுசோடி மேளமல்லே.., என்ன சும்மாவே அதுக்கும் எவ்வளவோ காசு செலவழிச்சிருக்கிறம் எண்டு சொல்லி இன்னும் கொஞ்ச நேரத்திலை அது முடிஞ்சுபோம் எண்டும் சொல்லிப் போட்டன்.
எங்கேயோ இருந்து வந்துகொண்டிருந்த அம்புலன்ஸ் வாகனம் ஒன்றின் அலார இரைச்சல் மெல்ல மெல்லக் குறைந்து ஆஸ்பத்திரி வளவிற்குள் நுழைவது தெளிவாய்க் கேட்கின்றது.
பிறகெல்லாம்.., எல்லா ஆராத்தியையும் முடிச்சு ஆண்டாள் மாலைபோட கிட்டத்தட்ட மூண்டு மணியாச்சு. மாலையையும் அந்தமாதிரித்தான் செய்விச்சனான் பிள்ளை. ஏனெண்டால் என்ரை பிள்ளையின்ரை சாறிக் கலருக்கு ஏற்றமாதிரி பெரிய பூக்களை வைச்சு சொல்லித் தான் செய்விச்சனாங்கள். ஆனால் ஆண்டாள் மாலை போடும்போது ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டுப் போச்சு.., சிலபேர் சொல்லிச்சினம் தாய் தகப்பன் தான் மாலை போடவேணுமெண்டு.., சிலபேர் சொல்லிச்சினம் மாமன் மாமி தான் போடவேணுமெண்டு.., கொஞ்ச நேரம் எங்களைக் குழப்பிப் போட்டுதுகள்.
பிரச்சினையும் குழப்பமும் எண்டு ஒண்டுமில்லை. இது வேளைக்குத் தெரிஞ்சிருந்தால் ரண்டு குடும்பமும் போடுறமாதிரி இரண்டு மாலையைச் செய்திருக்கலாம். இவ்வளவு செலவழிச்சுப் போட்டம் இதுக்குப் பெரியகாசோ.., பிறகு தாய் தகப்பன் தான் போட வேணுமெண்டு எல்லாரும் சொன்னதாலே நாங்கள் தான் அதைப் போட்டம். அதிலையும் பிரச்சினை என்னெண்டால் இப்ப ஆண்டாள் மாலை போடுறதெண்டால் பக்கத்திலே இருந்து எடுத்தப் போடுற வழக்கமெல்லாம் போய் இப்ப மண்டப வாசலிலையிருந்து தாயும் தகப்பனும் அதைத் தூக்கிக் கொண்டுவர அதை ஒருக்கா விசேடமாக வீடியோ படம் பிடிக்கிறது தான் இப்போதையப் பாஸன் எண்டு போட்டோக்காரப் பொடியனும் வீடியோக்காரப் பொடியனும் சொன்னதாலை இதுக்கு ஒரு மறுப்புத் தெரிவிக்காமல் நாங்களும் சம்மதிச்சம்.
ஆண்டாள் மாலைபோட்டு பேந்து எங்கடை சொந்தக்காரரெல்லாம் படமெடுத்து முடிஞ்சு சனத்துக்கு சாப்பாடு குடுக்க கிட்டத்தட்ட நாலுமணிக்கு மேல் வந்திடுத்து. சில சனத்துக்கு கோபமும் போலே தெரிஞ்சுது. ஆனால் சனத்துக்குத் தெரியத்தானே வேணும். சாமத்தியவீடுகள் எண்டால் இப்படித்தான் நடக்கிறதெண்டு. கோவிச்சு என்ன செய்யிறது. ஒத்துப்போக வேண்டியது தானே.., எத்தனை நாளுக்கு முதல் நோட்டிஸ் குடுத்தனாங்கள்.
எல்லாரும் சாப்பிடும்போது பிள்ளைக்கும் கொஞ்சம் தீத்திவிட்டனான். அடுத்த உடுப்பு மாத்தி தலை ஸ்ரையில் மாத்த குறைஞ்சது ரண்டு மணித்தியாலம் தேவைப்படும் எண்டதாலையும் நேரம் மட்டுமட்டாய் இருந்ததாலையும் பிள்ளை வடிவாய்ச் சாப்பிட முடியாமல் போச்சு.
பிறகு பிள்ளை வந்து கேக்வெட்ட கிட்டத்தட்ட இருட்டிப்போச்சு. நாங்களும் உடுப்பு மாத்தி அவரும் கோட் சூட் மாத்தி வர கொஞ்ச நேரமாச்சுத்தான். அந்த மனுசன் தெரியாதே சந்தோசத்திலே தண்ணியைப் போட்டதாலை அந்த மனுசனுக்கு கண்ணும் தெரியலே காலும் தெரியலே.
என்ன.., கேக்கும் வெட்டினீங்களா..! நானும் சில இடங்களிலே பார்த்தனான்தான். எதுக்கு சாமத்திய வீட்டில் கேக் வெட்டிறது, இதற்கு ஏதாவது காரணங்கள் இருக்கா.., மிகுந்த ஆச்சரியத்தோடு கேட்டாள் சுகந்தினி.
என்ன பிள்ளை இப்படிக் கேக்கிறாய்.., உனக்கு எங்கடை ஆக்களின்ரை பழக்கவழக்கங்கள் சம்பிரதாயங்கள் தெரியாது போலே கிடக்கு. இது ஒரு பழைய சம்பிரதாயமாப் போச்சு. முந்தி ஊரிலே இருந்து வந்த வீடியோ கொப்பியளிலை கூட உந்தக் கேக் வெட்டிற நிகழ்வுகள் நடக்கிறது தானே. இது பிள்ளை இந்த வெளிநாடுகளில் யார் இதைக் கொண்டு வந்தினமோ எனக்குத் தெரியாது.
இப்ப இந்தச் சாமத்திய சடங்குகளுக்கு இந்த வெள்ளைக்காரரும் வந்து போகினம் தானே.., அவையளையும் சந்தோசப்படுத்த வேணும் எண்டதுக்காகத் தான் இந்த கேக் விசையத்தை கொண்டு வந்தவை. பிறகு இந்த வீடியோ கொப்பியள் எல்லாம் ஊருக்கப் போய் அவையளும் அதைப் பாத்துப்போட்டு அங்கையும் கேக் வெட்டத் தொடங்கிப் போட்டினம். அட இது கூடத் தெரியாமல் இந்தப் பிள்ளை இருக்குதெண்டு மனிசி தனக்குள்ளே நினைத்துக் கொண்டாள்.
பிறந்த நாளுக்கு கேக் வெட்டுவது தான் எனக்குத் தெரியும். ஆனால் சாமத்திய வீட்டுக்கும் கேக் வெட்டிறது.., இது என்ன சம்பிரதாயம்..? சுகந்தினி தனக்குள்ளேயே கேள்விகளைக் கேட்டுக் கேட்டு.., இவைபற்றிச் சிரிப்பதா அழுவதா என எண்ணிக் கொண்டாள்.
பிள்ளை.., பிறந்தநாளிலே கேக் வெட்ட, தாய் தகப்பனும் பிள்ளைக்குத் தீத்துவினம். ஆனால் சாமத்திய வீட்டிலை கேக்கை வெட்டி பிள்ளை தாய் தகப்பனுக்குத் தீத்துவினம். இதுதான் இப்போதைய வழக்கமுறை.
சுகந்தினி கொடுப்புக்குள் சிரித்தபடி பிறகு.., என்ன நடந்தது புருவங்களை உயர்த்தியபடி மிச்சக் கதையைத் தொடங்கு என்ற தோரணையில் கையசைக்க, அந்தத் தாயானவள் தன் கதையைத் தொடர்ந்தாள்.
கேக் வெட்டிமுடிய ஒரு கொஞ்சச் சனத்தை வைத்து குறூப் படங்கள் எடுத்தம். படமெடுத்துக் கொண்டு சனங்கள் போக வெறுங்கையுடன் விடாமல் அதுகளுக்கெண்டு ஒவ்வொரு பலகாரப் பையுடன் ஒவ்வொரு அன்பளிப்புப் பொருட்களும் கொடுத்து விட்டனாங்கள. பிறகு அடுத்த உடுப்பை மாத்தி கொஞ்சப் பேரை வைச்சுப் படமெடுக்க பொடியள் ஆடப்போறாங்கள் எண்டதாலே.., படமெடுக்கிறதை நிப்பாட்டிப் போட்டு கொஞ்ச நேரம் ஒரே ஆட்டம். பொடியள் பெட்டையள் எண்டும் பெரியாக்கள் எண்டும் எல்லாரும் நல்ல ஆட்டம்.
இந்த நேரத்திலே நானும் என்ரை உடுப்பையும் மாத்திக் கொண்டு பிள்ளையின் அடுத்த உடுப்பையும் மாத்திக் கொண்டு வரவும் பொடியளும் வெறிமுறிஞ்சு களைச்சுப் போய் நிற்க, பிறகு படமெடுக்கத் தொடங்க எல்லாம் சரியாப் போச்சு. இதுக்கிடையிலை போற சனங்கள் போக எங்கடை சொந்தக்காறர் எண்டும் எங்கடை நெருங்கின சினேதங்கள் எண்டும் நிற்க, கிட்டத்தட்ட ஒரு நூறு பேரளவிலை தான் ஆக்கள் மிஞ்ச, குசியினியிலை கொத்து றொட்டியும் போடத் தொடங்க அடுத்த பார்ட்டி தொடங்கி விட்டுது.
பிறகு அடுத்த சட்டைய மாத்தி எங்கடை சொந்தக்காறர் மாத்திரம் சேர்ந்து ஒரு குறூப்படமும் பிறகு இங்கேயிருக்கிற சினேகிதக்காறரோடை சேர்ந்து ஒரு குறூப்படமும் எடுத்து முடிச்சு அடுத்து தனிச்சு பொம்பிளையள் மாத்திரம் ஒரு குறூப்படம் எடுப்பமெண்டு வெளிக்கிடும் போதுதான் இவள் தலையைச் சுத்தி கீழே விழுந்தவள். பிறகு தெரியும் தானே பிள்ளை. அம்புலன்சுக்கு அடிச்சு இங்கை கொண்டு வந்தனாங்கள். நல்ல காலம். நாங்கள் செய்த புண்ணியமோ கடவுளாப் பார்த்து உங்களை இங்கே அனுப்பியிருக்கின்றார்.
சும்மா நிப்பாட்டுங்கோ., நீங்களும் உங்கடை சாமத்திய வீடுகளும். இவ்வளவு நடந்து முடிஞ்ச பிறகுமா இந்ந மனுசி அடுத்த சட்டை போடேல்லை என நினைச்சுக் கவலைப்படுறா.., வாற ஆத்திரத்துக்கும் கோபத்துக்கும் இந்த நாட்டுச் சட்டப்படி இந்த மனுசியையும் புரிசனையும் பிடிச்சு உள்ளே தள்ளிவிட முடியும்.., என மனதுக்குள் நினைத்துக் கோபப்பட்டாலும், பாவம் இவர்களின் அறியாமையை எண்ணி கவலை கொண்டாள்.
இவர்களைப் போல் எத்தனையோ அப்பா அம்மாக்களை உள்ளே போட முடியும். எத்தினை அப்பா அம்மாக்களைக் கோபித்துக் கொள்ள முடியும்.
அது சரியம்மா இந்தச் சின்ன ஒரு விசையத்துக்குப் போய் இப்படி ஒரு பாலகியை இப்படித் துன்புறுத்தி இருக்கின்றீர்களே.., பாவம் சின்னதுகள். தங்களுடைய ஆசைகளினாலும்அறியாமையினாலும் ஏதோ உங்களுடன் ஒத்துழைக்கின்றார்கள். எங்கடை கலாச்சாரம் என்ற போர்வையிலை இதுகளையெல்லாம் மெருகூட்டி அதைப் பெரிய களியாட்டங்களாக்கி எங்கடை பிள்ளையளை காட்சிப் பொருளாக்கி வித்தையள் காட்டிக் கொண்டிருக்கின்றோம். மனம் சலித்து வேதனை கலந்த வார்த்தைகளாக விழுங்கி விழுங்கி சொல்லிக் கொண்டிருந்தாள்.
அம்மா என்றழைத்த அந்த வார்த்தை தாயைக் கசியவைத்தது. என்ன பிள்ளை சொல்லுறாய்..! என்ன பிழை ஏதும் செய்து போட்டேனோ..!? ஒன்றுமே அறியாதவளாய் தயக்கத்துடன் சுகந்தினியின் கைகளை இறுகப் பற்றிக் கொண்டாள்.
மீண்டும் எங்கேயோ இருந்து வந்த அம்புலன்ஸ் வண்டியின் இரைச்சல் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து உள்ளே நுழையும் போது, இருவரும் ஒன்றும் பேசாது மௌனமானார்கள்.
இல்லையம்மா, ஒரு பெண் குழந்தை பருவமடையிறது அல்லது பக்குவப்படுகிறது எண்ட இந்த இயற்கை நிகழ்வை உலகமெல்லாம் பறைதட்டி திருவிழாக்கள் போலை கொண்டாடுறதை நினைக்க, உங்களைப் போன்ற பலபேர் இன்னும் பக்குவப்படாமல் இருப்பதையிட்டுத் தான் நான் வேதனைப்பட வேண்டியிருக்கு.
ஒரு பெண் பிள்ளை பருவமெய்யிறது எண்டது இயல்பானதும் இயற்கையானதும். அந்தக் காலத்தில் நீங்கள் ஊரில் வாழ்ந்த காலங்களில் அந்த நாட்டுச் சூழலுக்கேற்ற வகையில் இந்த விழாக்களைக் கொண்டாடி மகிழ்ந்ததிலை நியாயங்கள் இருக்கலாம். ஆனால் அதையே சாட்டாக வைச்சுக்கொண்டு இங்கையும் கொண்டாட்டங்கள் எண்ட போர்வையிலை எங்கடை ஆக்கள் செய்யிற இந்தக் கூத்துக்களும் கும்மாளங்களும் தான் இப்போது வேடிக்கையானது. எங்கடை நாட்டிலை தான் இது பற்றி பேசக் கூடாது கதைக்கக் கூடாது எண்டு பொத்திப் பூட்டி வைச்சிருந்தவை.
ஆனால் இங்கேயெல்லாம் அப்படியில்லை. சின்னப் பிள்ளையளில் இருந்தே இவைகள் பற்றியும் பாலியல் கல்வி பற்றியும் தெளிவாப் படிப்பிக்கினம். எங்கடை பிள்ளைளுக்கும் கூட இது பற்றித் தெளிவாவே தெரியும். ஆனால் இங்கே வந்த பின்னும் துடக்கெண்டும் கழிப்பெண்டும் சொல்ல.., வெட்கமாயில்லை..! சுகந்தினியின் குரல் உயர்ந்து சத்தமாய் வெடித்தது. தான் யார் என்பதையும் மறந்து, தான் எங்கே இருக்கின்றேன் என்பதையும் மறந்து, எம்மினம் மீதும் சமூகம் மீதும் இருந்த கோபத்தைக் கொட்டித் தீர்க்க வார்த்தைகள் கனலாய் வெடித்துச் சிதறியது. இவளின் இந்தச் சீறலை, இந்தத் தாய் சிறிதுகூட எதிர்பார்க்கவில்லை.
என்ன பிள்ளை இப்படிக் கதைக்கிறாய்..? அப்ப உன்ரை கொப்பா கொம்மா சாமத்திய வீடெண்டும் கொண்டாட்டம் எண்டும் ஒண்டுமுனக்குச் செய்யேல்லையே..? மிகுந்த தயக்கத்துடனும் தணிந்த குரலோடும் கேட்டாள்.
நான் பக்குவப்படுவதற்கு முன்னரே என்ரை அப்பா இதுபற்றி நிறையவே என்னிடம் கதைத்தவர். இந்தச் சாமத்தியக் கொண்டாட்டங்கள் அந்தக் காலத்திலை ஏன் கொண்டாடப்பட்டது எண்டும், ஆரார் இதைக் கொண்டாடினார்கள் எண்டும் தெளிவாகவும் விளக்கமாகவும் எனக்குத் சொல்லியிருக்கின்றார்.
அது பற்றிய கருத்துக்களில் எனக்கும் நிறையவே உடன்பாடு இருந்ததாலை எதுவிதப் பிரச்சினையளும் இருக்கேல்லை. நானும் காட்சிப் பொருளாக நிக்க விருப்பமில்லாத காரணத்தால் இந்த விடையம் பற்றி நாங்கள் ஒருத்தருக்கும் தெரியப்படுத்தவும் இல்லை.
ஆனாலும் அம்மாவால் இதை உடனடியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லைத் தான். இது துடக்கு என்றும் குற்றம் என்றும் வாதாடிப் பார்த்தா.., பிறகு என்ரை கல்யாணத்தைப் பார்க்க வாய்ப்புக் கிடைக்குமா.., எண்டு காரணங்கள் சொன்னா.., பிறகு குடுத்த கடனையாவது வாங்க வேண்டும் என அடம் பிடிச்சா.., கடைசியிலே... இது செய்யாட்டி மரியாதையில்லாமல் போயிடும் மற்றச் சனங்கள் மதிக்காது எண்டு வாதிட்டுப் பார்த்தா, அப்பாவோ நானோ கடைசிவரைக்கும் ஒத்துக் கொள்ளவேயில்லை.
அதுக்காக என்ரை அப்பா அம்மாவுக்குச் சுதந்திரம் கொடுக்காமல், அடிமைத்தனமா வைச்சிருக்கிறார் எண்டு மட்டும் நினைச்சுப் போட வேண்டாம். இது ஒரு பிழையான விசையம் என்றும் மூடத்தனமாக இருக்கிறதாலே இதுக்கு நாங்கள் உறுதுணையாக-
வோ உடந்தையாகவோ இருக்கக் கூடாது எண்டதலைதான் அப்பா அப்பிடி நடந்து கொண்டார்.
பெண் அடிமைத்தனங்களில் இது முக்கிய ஒன்றாய் இருக்கிது எண்ட அப்பாவின் கருத்தை அம்மா ஏற்றுக் கொண்டதாலை, அதன் பிறகு அம்மாவும் மிகுந்த தெளிவாத்தான் இருக்கிறார்.
இங்கே சாமத்திய வீடுகள் பற்றி அம்மா கதைக்கும் போது எங்கடை நாட்டிலை போர் நடந்த வேளையிலை இருக்க இடமில்லாமல் படுக்க வழியில்லாமல் ஓடோடித் திரிஞ்ச எங்கடை குமர்ப் பிள்ளையளையும், அந்த யுத்த சூழ் நிலையிலை எத்தனை குழந்தையள் பருவமெய்தியிருப்பார்கள் எண்டதையும், அவையள் என்னென்ன துன்பத்தையும் சோதனையளையும் சந்தித்திருப்பார்கள் எண்டும், உதைப்போலை எத்தினை பேருக்கு பிறந்த நாளெண்டு வந்திருக்கும்.
கற்பனை பண்ணிப் பாரெண்டும், அந்த நேரத்திலை அந்தப் பிள்ளையளுக்கு கத்தரிக்காய் பொரிச்சுக் குடுத்தது யார்..? நல்லெண்ணை பருக்கி களிக்கிண்டிக் கொடுத்து முதல் குப்பைத் தண்ணி வார்த்தது யார்..? எண்டு அப்பா கேட்கும் போது, அம்மா தன்னை மறந்து கண்கலங்கி விடுவா. சுகந்தினியின் வார்த்தைகளால் ஒன்றுமே பேசாது மௌனமாய் இருந்தாள் அம்மா. இங்கே இரவிரவாய் கண் முழித்து நித்திரையும் இல்லாமல் நிம்மதியும் இல்லாமல் கண்ட கண்ட வேலைகளையெல்லாம் செய்து, உழையுழை எண்டு உழைச்சு, கடைசிலை வருத்தக்காரர்களாய் மாறியிருக்கிற எங்கடையாக்கள் இப்படிக் களியாட்டங்கள் எண்டு சொல்லி இப்படிக் காசைக் கரியாக்கிறது எவ்வளவு மடைத்தனம் எண்டு உங்களுக்கத் தெரியேல்லையோ..?
அப்பா உழைச்ச காசெல்லாத்தையும் இப்பிடிக்கரியாக்காம இருந்ததாலை தான் நானும் படிக்கும் போது பொருளாதாரக் கஸ்ரம் ஒண்டுமில்லாமல் இலகுவாக, ஒரு டொக்ரராக அதுகும் ஒரு ஸ்பெசலிற்ராக வர வாய்ப்பு இருந்தது.
அம்மா இங்கை கொண்டாட்டங்கள் செய்வதற்ணெடு நல்ல சில நோக்கங்களும் இருக்கத் தான் செய்கின்றது. போரினாலையும், பிரச்சினைகளாலையும், அங்கொன்றும் இங்கொன்றுமா சிதறிச் சின்னா பின்னமாய் போயிருக்கும் எங்கடை குடும்பங்கள் ஒன்று சேர்வதற்கும், சந்திப்பதற்கும் வாய்ப்புக்கள் தான் இது. வேலையென்றும் வீடென்றும் முடங்கிப் போயிருக்கிற எங்களுக்கு நாலுபேரைக் கண்டு பலதைப் பத்தைக் கதைச்சுப் பேசுறது சந்தோசம் தான் இது. ஆனால் எங்களுடைய விழாக்களும் கொண்டாட்டங்களும் அந்த நோக்கத்திலேயா நடைபெறுகிது...?
விழாவை நடாத்துபவர்கள் தங்கடை சாதி, மதம், வர்க்கம், அந்தஸ்து கௌரவம் என்பதைக் காட்டுவதற்காகவும், விருந்தாளியாக வந்தவனும் வில்லண்டப்பட்டுக் கொண்டு பெற்ற கடனை எப்போ கொடுத்துட்டுப் போகலாம் என்று அடிபட்டுக் கொண்டு வரிசையிலே காத்துக் கொண்டு நிப்பதும் அசிங்கமாயில்லை.
ஒருவிழா என்ன நோக்கத்துக்காகச் செய்யப்படுகின்றதோ அவை எல்லாம் ஏதேதோ காரணங்களுக்காக எல்லாம் மழுங்கடிக்கப்பட்டு இன்று ஒரு வியாபாரத் தளமாக எங்கடை தமிழ் விழாக்கள் மாறிவிட்டது.
நீங்களும் எவ்வளவோ செலவழித்திருப்பீர்கள். இந்தக் காசையெல்லாம் பிள்ளையின்ரை படிப்புக்கென்று சேமிப்பிலே போட்டிருந்தால்..!
கைகள் இரண்டையும் விரித்தபடி தனது தலையை ஆட்டி சினந்து கொண்டாள் சுகந்தினி.
அம்மா நாங்கள் இஞ்சை வெளிநாடெண்டு வந்துங்கூட இன்னும் விடமுடியாமலும் விட்டுக் கொடுக்காமலும் எத்தினையோ விசையங்களை இப்பவும் கட்டிப்பிடிச்சு இறுக்கிக் கொண்டு தான் போகிறோம். இண்டைக்கு ஆபிரிக்க நாடுகளிலே நடக்கிற பெண் குழந்தைகளுக்கான 'விருத்த சேதனம்" என்கிற பாரம்பரிய மரபுக்கெதிராக அந்தந்த நாடுகளிலையே பெண்கள் போர்க்கொடி தூக்க வெளிக்கிட்டு விட்டார்கள். இதிலே நாங்களும் கவனமெடுக்கத் தவறுவமாக இருந்தால் எமக்கு அடுத்து வருகின்ற எங்கடை குழந்தைகளாவது போர்க்கொடி தூக்குவினம்.
ஐயோ, பிள்ளை சொல்லுறது சரிபோலக் கிடக்கு. மற்ற ஆக்களை போட்டியளுக்காகவும் வறட்டுக் கௌரவத்துக்காகவும் என்ரை பிள்ளையை அங்கை வைச்சு ஆட்டிப் போட்டு.., இப்ப இங்கை ஆஸ்ப்பத்திரிக்கு கொண்டு வந்திட்டிட்டனோ.., என்ரை மனுசன் இரவெண்டும்பாராமல் கண்முழிச்சு வேலை செய்து விடியவெள்ளணப் போய் பேப்பர் போட்டு, தின்னாமல் குடியாமல் காசைச் சேத்து கடைசியிலை இப்படியா கொண்டு வந்து காசைக் கரியாக்கி கரைச்சுத் தள்ளுறம்..!?
இந்தச் சாமத்திய வீடெண்டு வெளிக்கிட்டு அதுக்கு இதுக்கெண்டு எத்தனை லச்சம் செலவு. இருந்த அலைச்சல் எவ்வளவோ மனவுழைச்சல். இதாலை எத்தினையோ போட்டி பொறாமையள், இவ்வளவு நாளும் ஒரு அறியாமை இருளுக்க மூழ்கி இருந்து விட்டனோ..? என நினைத்துக் கண் கலங்கினாள்.
கதவைத் திறந்து உள்ளே நுழைந்த தாதி ஒருத்தி.., இன்னும் அந்தப் பிள்ளை கண் விழிக்கவேயில்லை என்ற தகவலைத் தெரிவித்துச் சென்றாள்.
என்ரை பிள்ளை காலமை நித்திரையாலை எழும்பினதிலை இருந்து, முடியும் வரை எத்தினை தரம் இயலாமைக் கிடக்கெண்டு சொல்லியும், நான் என்ரை சுயநலத்துக்க ஒண்டையும் பொருட்படுத்தாமல் இருந்து போட்டனே.., என விம்மத் தொடங்கினாள். மீண்டும் அம்புலன்ஸ் வாகனத்தின் அலாரச் சத்தம் இவர்கள் இருந்த எல்லைக்குள் வந்து தனது சத்தினைக் குறைந்துக்கொண்டது.
-நிலாதரன்.
முன்னணி (இதழ் -3)